இலங்கையின் புதிய நிதியமைச்சராக பசில் ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்

இலங்கையின் புதிய நிதியமைச்சராக பசில் ராஜபக்ஷ சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இன்று(08) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பசில் ராஜபக்ஷ பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டத்தை செயற்படுத்தும் அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம்(07) தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தினால் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைக்கமைய இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

பிரிட்டன் தூதுவரை சந்தித்த கூட்டமைப்பின் உறுப்பினர்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று இலங்கைக்கான பிரிட்டன் உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டனைச் சந்தித்தனர்.

கொழும்பில் உள்ள பிரிட்டன் உயர்ஸ்தானிகர் ஆலயத்தில் இந்தச் சந்திப்பு இன்று இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களைச் சந்திக்கக் கிடைத்ததை மகிழ்ச்சியாகக் கருதுவதாக உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவித்தார்.

இலங்கையின் வடக்கு, கிழக்கில் கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகள், அதிகாரப் பகிர்வு, மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலின் அவசியம் போன்ற விடயங்கள் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக சாரா ஹல்டன் மேலும் கூறினார்.

இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மஹிந்த ராஜபக்ஷ: “சீனாவே எமது உண்மையான நண்பன்; ஆசியாவின் எழுச்சியை சீனாவே வழி நடத்தும்”

சீனாவே தமது உண்மை நண்பன் என்றும் இனி ஆசியாவின் எழுச்சியையும் சீனாவே வழிநடத்தும் என்பதுதான் யதார்த்தம் எனவும், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டு விழாவில் இணைய வழியாக நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு பொதுச் செயலாளரும், சீன ஜனாதிபதியுமான ஷி ஜின்பிங்கை தனது உரையில் விழித்துப் பேசிய மஹிந்த ராஜபக்ஷ, இரண்டு முகாம்களாகப் பிரித்ததன் காரணமாக சிரமங்களை எதிர்கொண்டிருந்த உலகுக்கு சீனாவே உதவியது என்றும் குறிப்பிட்டார்.

“சீனா எமது வரலாற்று நட்பு நாடாகும். அந்த நீண்ட வரலாற்றில் சீனா எம்முடன் செயற்பட்டுள்ள விதத்துக்கு அமைய, சீனா எமக்குள்ள உண்மையான நண்பர் என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்” எனவும் தனது உரையில் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையிலும், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால ராஜதந்திர உறவை அங்கீகரிக்கும் பொருட்டும், ஒரு நினைவு நாணயத்தை தாம் வெளியிட்டுள்ளதாகவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், “நாம் 1957ஆம் ஆண்டிலேயே சீன அரசாங்கத்துடன் ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தினோம். சீனாவை ‘சுதந்திர சீனா’வாக மாற்றிய சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் எமது நாடு ஏற்கனவே இடதுசாரி வணிக உறவுகளைப் பேணி வருகிறது” என்று தெரிவித்தார்.

“சீன கம்யூனிஸ்ட் கட்சியே தற்போது உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாகும். அந்த அரசியல் கட்சியின் வெளிநாட்டு உறவுகள் குறித்த கொள்கைக்கு அமைய, 70 ஆண்டுகளாக உலகுக்கு மிக முக்கியமான ஒரு செய்தியை அது வழங்கியுள்ளது என்பதனை நான் கூற வேண்டும்”

ஆசியாவின் எழுச்சியை சீனா வழி நடத்தும்

“சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெளியுறவுக் கொள்கை நிலைப்பாடுதான் சீனாவை உலக அரங்குக்கு உயர்த்தியது என்பது எனக்குத் தெரியும்” என்று தனது உரையில் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

“சீனா தனது அரசியல் கருத்துக்களை உலகின் மத்தியில் திணிக்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை. பிற நாடுகளின் விவகாரங்களை தாம் ஒழுங்குறுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்ற உணர்வை சீனா ஒருபோதும் கொண்டிருக்கவில்லை. சீனா தனது சொந்த அடிப்படையில் பிற நாடுகளுக்கு உதவியது.

ஒரு நாட்டின் சுதந்திரத்துக்கும் இறையாண்மைக்கும் இது மிகவும் முக்கியமானது. அந்த நாடுகளுக்கு தங்கள் சுதந்திரத்தை பேணி செயற்பட அனுமதித்ததனால் உலக நாடுகள் சீனாவுடன் வர்த்தகம் செய்ய தயங்கவில்லை. இலங்கையும் அதே போன்றுதான்.

அதனால்தான் உலகின் பல கதவுகள் சீனாவுக்கு திறக்கப்பட்டன. சர்வதேச அளவில் சீனாவின் முன்னேற்றத்துக்கு அந்தக் கொள்கை மிகவும் முக்கியமானதாகும்” என்றார் ராஜபக்ஷ

“அடுத்த நூற்றாண்டில் ஆசியாவின் எழுச்சியை சீனா வழிநடத்தும் என்பது தற்போது யதார்த்தமாகிவிட்டது.

உலகை இரண்டு முகாம்களாகப் பிரிப்பது இனி முக்கியமல்ல. இந்த நெருக்கடியிலிருந்து ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளை மீட்பதில் சீனா முக்கிய பங்கு வகித்தது. இரண்டு முகாம்களாகப் பிரித்ததன் காரணமாக சிரமங்களை எதிர்கொண்டிருந்த உலகிற்கு சீனாவே உதவியது.

பட்டுப் பாதையின் மூலம் ஆசியாவின் பொருளாதார பலத்தை சீனா பெற்றுக் கொடுக்கும் சீனாவின் பட்டுப் பாதை (Silk Road) ஒன்றும் எமக்கு விசித்திரமானதல்ல.

ஏனெனில், பண்டைய காலத்திலேயே, சீனாவை இணைக்கும் பட்டுப் பாதையின் ஒரு புள்ளியிலேயே இலங்கை இருந்தது. திறந்த பொருளாதாரத்தின் உலக யதார்த்தத்தை தமக்கு ஏற்ற வகையில் சீனா ஏற்றுக்கொண்டது.

எனவே, நாட்டில் வர்க்கப் பிளவுகளை ஏற்படுத்தும், நாட்டை பலவீனப்படுத்தும் ஒன்றாக அன்றி – திறந்த பொருளாதாரத்தை சீனா ஏற்றுக்கொண்டது. தனது திறந்த பொருளாதாரக் கொள்கையின் கீழ், தனது நாட்டில் தொண்ணூறு கோடி மக்களின் வறுமையை சீனா ஒழித்துள்ளது.

திறந்த பொருளாதாரத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் சீன கம்யூனிஸ்ட் கட்சி உலகுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக உள்ளது.

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆசியாவுக்கு இருந்த பொருளாதார பலத்தை, இந்த பட்டுப் பாதையின் மூலம் மீண்டும் ஆசியாவுக்கு சீனா பெற்றுக்கொடுக்கும் என்று நான் நம்புகிறேன்.

2060ஆம் ஆண்டளவில் சீனாவை, கரியமில வாயு சமநிலையை பேணும் Carbon Neutral நாடாக மாற்றுவதற்கு சீனா உறுதியளித்துள்ளது. அதனால் சீனாவின் முதலீடுகளை கொண்டு பயன்பெறும் பட்டுப் பாதையின் நாடுகளும் இதுபோன்ற கொள்கைகளுடன் செயற்படுவது அவசியமாகும்.

Carbon Neutral நாடாக மாற்றுவது மாத்திரமன்றி இந்து சமுத்திரத்தை மாசற்ற இடமாக மாற்றுவது இன்று அதன் இரு புறமுள்ள அனைத்து நாடுகளினதும் பொறுப்பாகும்.

சினோஃபார்ம் தடுப்பூசியை உருவாக்கி உலகுக்கு தாராளமாக நன்கொடை அளித்தமைக்காக சீனாவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதனை உலகத்துடன் பகிர்ந்து கொண்டு கம்யூனிஸ்ட் கட்சி உலகுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகின்றது என்று நான் கூற வேண்டும். சீனா ஆய்வு செய்துள்ள தடுப்பூசியை எங்களைப் போன்ற நாடுகள் தயாரிப்பதற்கு தேவையான அனுமதியையும் அளித்துள்ளது.

இது போன்ற உலகளாவிய தொற்றுநோய் சூழலில், சீன கம்யூனிஸ்ட் கட்சி எடுக்கும் முடிவுகள் அனைத்துமே, மனிதர்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவுகளே ஆகும்” என்றார் ராஜபக்ஷ.

சீனாவுக்கு மிகவும் நெருக்கமாக இலங்கை சென்று கொண்டிருக்கிறது என்ற பரவலான கருத்து எழுந்திருக்கும் நிலையில் ராஜபக்ஷவின் பேச்சு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

தோல்வியடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையை முதலிடம் பிடிக்கச் செய்வதே அரசாங்கத்தின் நோக்கம்:ரெலோ வினோ நோகராதலிங்கம்

இலங்கையில் ஏற்றுமதி செயற்பாட்டில் சீனர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் இலங்கையின் அரசியலிலும் சீனா ஆக்கிரமிப்பும் ஆதிக்கமும் செலுத்துவதை உங்களால் தடுக்க முடியாது. அதேவேளை இலங்கை அரசு தோல்வியடைந்த நாடுகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கவும் இலங்கை கிரிக்கெட் அணி தோல்வியடையும் அணிகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கவும் போட்டியிடுகின்றனதென தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இந்த நாடு அனைத்து துறைகளிலும் வரலாற்றில் என்றுமில்லாதவாறு தோல்விகளையும் பின்னடைவுகளையும் சந்தித்துள்ளது. ஏற்றுமதிகளும் இறக்குமதிகளும் பல தடைகளையும் சவால்களையும் சந்தித்து வரும் துர்ப்பாக்கியம் இந்த நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. தோல்வியடைந்து கொண்டிருக்கும் அரசினால் ஒரு நாட்டினை வெற்றியடைய செய்ய முடியாது. பொருளாதார, அரசியல் ரீதியாக இந்த அரசு முழுமையாக தோல்வியடைந்து விட்டது. ஆனால் அதற்காக இந்த நாட்டை தோல்வியடைந்த நாடாக மாற்றிக்கொள்ள மக்கள் யாரும் அனுமதிக்கப்பபோவதில்லை.

ஆட்சிபீடமேறிய மிக குறுகிய காலத்தில் இந்த அரசு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறிய மிக மோசமான மக்களினால் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை நீடித்தால் காத்திருக்கும் பேராபத்துக்களிலிருந்து இலங்கையை காப்பாற்ற முடியாது.

இறைமை, இறைமையென மூச்சுக்கொருதடைவை முழங்கிக்கொண்டிருக்கும் இந்த அரசு நாட்டின் சுவாசமே அடங்கிப்போவதைக் கண்டு கொள்ளாமல் அலட்சியமாகவுள்ளது. அரசியல் தீர்வுக்காகவும் மனித உரிமை விடயங்களுக்காகவும் பொருளாதார மீட்சிக்காவும் நிரந்தர சமாதானத்துக்காகவும் உண்பதற்காக, உறங்குவதற்காக மக்கள் இன்று வீதிகளில் இறங்கி போராடிக்கொண்டிருக்கின்றனர்.

இலங்கை சுதந்திரமடைந்த காலப்பகுதியில் தமிழ், முஸ்லி ம் மக்களும் தலைவர்களும் சிங்கள மக்கள், தலைவர்களுடன் இணைந்து போராடியது போன்று இலங்கையின் இரண்டாவது சுதந்திர போராட்டத்துக்கு தமிழ், முஸ்லிம் மக்களை மீண்டும் இணையுமாறு பிக்குகள் அழைக்கின்றனர். மூவின மக்களும் இணைந்து போராடினால் தான் சுதந்திரம் பெற முடி யுமென்பதனை பௌத்த தலைவர்கள் உணர்ந்திருப்பது நல்ல அறிகுறி.

Posted in Uncategorized

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு 372 பில்லியன் ரூபாய் நட்டம்

ஸ்ரீலங்கன் விமான சேவை 372 பில்லியன் ரூபாய் நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக பொது முயற்சியாண்மை எனப்படும் கோப் குழுவில் தெரிய வந்துள்ளது.

நேற்று (06) ஸ்ரீலங்கன் விமான சேவை அதிகாரிகள் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் இதன் போது கோப் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சரித்த ஹேரத் இதனை தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் அசோக் பத்திரண கோப் குழுவில் கருத்து தெரிவித்ததுடன் அதற்கு போது கோப் குழுவின் தலைவரும் பதிலளித்துள்ளார்.

Posted in Uncategorized

இலங்கை செல்லும் தனது நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

இலங்கையில் கொவிட் பரவல் தீவிரமடைந்து வருவதன் காரணமாக இலங்கைக்கு பயணங்கள் மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்க பிரஜைகள் மீள் பரிசீலனை செய்யுமாறு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் கடந்த மே 24 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்த, 3 ஆம் மட்ட எச்சரிக்கையானது பயணம் செய்வது குறித்து மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பது 4 ஆம் மட்ட எச்சரிக்கையாக பயணம் செய்ய வேண்டாம் என்று மாற்றப்பட்டிருந்தது.

தற்போது குறித்த 4 ஆம் மட்ட எச்சரிக்கை மட்டம் தற்போது மீண்டும், 3 ஆம் மட்ட எச்சரிக்கையாக மாற்றப்பட்டிருக்கிறது.

அதன் அடிப்படையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நேற்று (06) வெளியிட்ட புதிய பயண அறிவுறுத்தலுக்கமைய, கொவிட் பரவல் அதிகரித்திருப்பதன் காரணமாக இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வது தொடர்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

அதேவேளை இலங்கையில் பயங்கரவாத செயற்பாடுகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளும் அதிகரித்துள்ளன என்றும் அந்த எச்சரிக்கை மட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேருந்து நிலையம், விமான நிலையம், சுற்றுலா விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்ட இடங்களை இலக்கு வைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என இந்த புதுப்பிக்கப்பட்ட அறிவித்தல் ஊடாக சுற்றுலா பயணிகளுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் கொவிட் பரவல் மிகவும் அதிகரித்திருப்பதை காட்டும் வகையில் அமெரிக்காவின் தொற்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம், இலங்கை தொடர்பில் 3 ஆம் மட்ட சுகாதார எச்சரிக்கை அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க பிரஜைகள் கொவிட் வைரஸுக்கு எதிராக முழுமையாகத் தடுப்பூசியைப் செலுத்தியிருப்பின், அவர்களுக்கு கொவிட் தொற்று ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகும்.

எவ்வாறிருப்பினும் இலங்கைக்கான விஜயம் தொடர்பில் மீள் பரிசீலனை செய்வதும் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அறிந்து வைத்திருப்பதற்கும் அமெரிக்கத் தூதரகத்தின் கொவிட் – 19 குறித்த இணையப் பக்கத்தைப் பார்வையிடுவதும் சிறந்தது என அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்ஸவை பாராளுமன்ற உறுப்பினராக பெயரிட்டு வர்த்தமானி வௌியீடு

பசில் ராஜபக்ஸவை பாராளுமன்ற உறுப்பினராக பெயரிட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட தனது பதவியை இராஜினாமா செய்தமையால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பசில் ராஜபக்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்.

Posted in Uncategorized

தமிழ் முற்போக்கு கூட்டணி இந்திய தரப்புடன் பேச்சுவார்த்தை

13 ஆம் திருத்தம், 16 ஆம் திருத்தம், தோட்ட வீடமைப்பு, தொழிலாளர் சம்பளம், சீனா ஆகிய விவகாரங்கள் பற்றி தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு, இந்திய தூதுவருடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையில் பிரதி தலைவர் ராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார், பொது செயலாளர்சந்திரா சாப்டர் ஆகியோர் இந்திய தூதுவர் கோபால் பாக்லே, துணை தூதுவர் வினோத் ஜேகப், அரசியல் செயலாளர் பானு பிரகாஷ் உள்ளிட்ட இந்திய தரப்பை இன்று இந்தியா இல்லத்தில் சந்தித்தனர்.

இது தொடர்பில் கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளதாவது, இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் குழந்தைகள்தான் 13ம் திருத்தம், 16ம் திருத்தம் என்பவை ஆகும். இன்று இந்த இரண்டையும் இலங்கை அரசு கைவிட்டு விட்டது. 13ம் திருத்தம் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபை தேர்தல்களை இலங்கை அரசு ஒத்தி வைத்து விட்டது. அதேவேளை மாகாணசபைகளுக்கு உரிய பாடசாலைகளையும், வைத்தியசாலைகளையும் மத்திய அரசின் நிர்வாகத்துக்கு உள்ளே சட்ட விரோதமாக சுவீகரித்து கொண்டுள்ளது.

16ம் திருத்தம் மூலமாகத்தான் தமிழ் மொழிக்கு நிர்வாக மொழி, கல்வி மொழி, மக்கள் சபை மொழி, சட்டவாக்க மொழி, நீதிமன்ற மொழி என்ற சட்ட அந்தஸ்துகள் கிடைத்தன. இவற்றுக்கும் இந்தியாத்தான் காரணமாக அமைந்தது.

ஆகவே 13ஐ பற்றி பேசும் போது, இந்திய அரசு 16 பற்றும் இலங்கை அரசுடன் பேச வேண்டும். ஏனெனில் அதிகார பரவலாக்களை மட்டுமல்ல, இன்று மொழி உரிமையையும் இந்த அரசு பறித்துக்கொண்டு கொண்டு வருகிறது. நான் அமைச்சராக இருந்த போது ஆரம்பித்த இரண்டாம் மொழி பயிற்றுனரகளுக்கு பயிற்சி அளித்து உருவாக்கும் திட்டத்தையும் இந்த அரசு நிறுத்தி விட்டது.

அதேபோல் இந்திய பிரதமர் எமது அழைப்பை ஏற்று மலையகம் வந்து வழங்கிய பத்தாயிரம் வீட்டு திட்டமும் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. இலங்கை அரசு இதை தாமதம் செய்கிறது. இதுவும் இந்திய அரசுக்கும், புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுக்கும் நமது ஆட்சியில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும்.

ஆகவே இலங்கை அரசு, இந்திய அரசுடன் உடன்பட்ட இந்த திட்டங்களை வலியுறுத்த இந்த அரசுக்கு முழுமையான உரிமைகள் உள்ளன. இதை இந்தியா செய்ய வேண்டும்.

அதேபோல் தோட்ட தொழிலாளர்களின் நாட்சமபலம் இழுபறியில் இருக்கிறது. அரசு முழு முழுக்க தொழிலாளர்களை கம்பனிகளின் கைகளில் ஒப்படைத்து விட்டு அமைதி காக்கிறது. இதுவே ஏனைய துறை சார்ந்த பெரும்பான்மை இனத்தை சார்ந்த தொழிலாளர்கள் என்றால் அரசு அக்கறை காட்டாமல் இருக்குமா? நாட் சம்பளம் ஆயிரம் ரூபா என கூறிவிட்டு, வேலை செய்யும் நாட்களை தந்திரமாக கம்பனிகள் குறைத்து விட்டன. இதை அரசு கண்டு கொள்வது இல்லை. அப்படியானால், இந்த மக்கள் வேறு நட்டு பிரஜைகளா என கேட்கிறோம்? இந்த இந்திய வம்சாவளி தொழிலாள மக்கள் தொடர்பில் இந்திய அரசு கட்டாயமாக குரல் எழுப்ப வேண்டும்.

இந்த பிரச்சினைகள் தொடர்பான மேலதிக பேச்சுகளை நடத்த, தமிழ் முற்போக்கு கூட்டணி, பாரதம் சென்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியிரை சந்திக்க விரும்புகிறது, இவற்றுக்கு கொரோனா நிலைமை சீரானதுடன் ஏற்பாடுகள் செய்து தர வேண்டும்.

சீனா இலங்கையில் வந்து நிலை கொண்டிருப்பது, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு பிரச்சினை என்பது மட்டுமல்ல. சீனா இலங்கையின் பல்மொழி, பன்மத, பல்லின அடிப்படையை ஏற்றுக்கொள்ள மறுப்பதாக நாம் சந்தேகம் கொள்கிறோம். ஆகவே தமிழர்களை சீனா இலங்கையர்களாக ஏற்க மறுக்கின்றதா என நாம் கேட்கிறோம். ஆகவேதான், இலங்கையில் சீனா நிலைப்பெறலை தமிழர் நாம் சந்தகமாக பார்க்கிறோம் என்பதையும் இந்தியா புரிந்துக்கொள்ள வேண்டும்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு இலங்கையில் நாணயம் வெளியீடு

இலங்கை அரசாங்கத்துக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு நிறைவு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு, வெளியிடப்பட்ட புதிய 1,000 ரூபாய் நாணயம், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ. டி. லக்ஷ்மனனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வு, இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த நினைவு நாணயமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் பரஸ்பர உறவுகளுக்கான விசேட கௌரவமாக வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

நாணயத்தின் ஒரு பக்கத்தில் இலங்கை மற்றும் சீனாவின் தேசிய கொடிகளுடன், தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கின் முன் பக்கத் தோற்றமானது, நாணயத்தின் மத்தியில் காட்சியளிக்கிறது. கலையரங்குக்குக் கீழே பெரிய இலக்கத்தில் 2022 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் “இலங்கை – சீனா 65 ஆண்டுகள்” என்றும் நாணயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாணயத்தின் மறுபக்கத்தில் 1,000 ரூபாய் மற்றும் “சீன கம்யூனிஸ்ட் கட்சி” என மும்மொழிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

500 தங்க நாணயங்களும் 2000 வெள்ளி நாணயங்களும் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Posted in Uncategorized

வடக்கு கிழக்கை தமிழரின் பூமியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் தீர்மானத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது

வடக்கு கிழக்கை தமிழர்களின் பூர்வீக பூமியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற அமெரிக்க காங்கிரஸில் தீர்மானத்தை அரசாங்கம் சாதாரண விடயமாக எடுத்துவிடக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இஸ்ரேல் எனும் நாடு எவ்வாறு உருவான விதத்தை நினைவில் கொண்டு இந்த விடயத்தில் அரசாங்கம் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின்போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு கூறினார்.

மேலும் 20 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக அனைத்து அதிகாரத்தையும் ஜனாதிபதியிடம் வழங்கிவிட்டு, நீதிமன்றம் உள்ளிட்டவற்றின் சுயாதீனம் குறித்து இங்கு விவாதித்து எந்தவொரு பலனும் கிடையாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

19 ஆவது திருத்தச்சட்டத்தின் இல்லாது செய்தமையால் இன்று சர்வதேசத்தின் பகையை சம்பாதித்துள்ளதாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.