ஒருமித்த நிலைப்பாடு உள்ளக அரசியலில் தமிழ் மக்களுக்கு பலமாகும் ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன்

ஒருமித்த நிலைப்பாடு உள்ளக அரசியலில் தமிழ் மக்களுக்கு பலமாகும் இவ்வாறு இலக்கு இலத்திரனியல் இதழுக்கு வழங்கிய செவ்வியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார்.

கேள்வி – தமிழ் மக்களது அரசியல் விவகாரங்களில் தமிழ்க் கட்சிகளிடையே பொது நிலைப்பாட்டைக் கொண்டு வருவதற்கான உங்களது முயற்சி தொடர்பாக விபரம் தருவீர்களா?

பதில் – தமிழ்த்தேசிய பரப்பிலே செயற்படுகின்ற தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளின் தலைமைகளுக்கு, இன்று அரசாங்கம் முன்னெடுத்து வரும் திட்டமிட்ட நடவடிக்கைகளால் தமிழினம் முகம் கொடுக்கக்கூடிய சிக்கல்களுக்கு எப்படியாக ஒருமித்த நிலைப்பாட்டில் நாங்கள் செயற்படுவது என்ற ஆரம்ப கட்ட கலந்துரையாடலை நடத்துவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை 5ஆம் திகதி நாங்கள் ஒரு கோரிக்கையை ஞாயிற்றுக்கிழமை 7ம் திகதி மாலை 5 மணிக்கு அந்த கூட்டத்தை மெய்நிகர் இணையவழியினுடாக நடத்துவதற்கான அனுமதியை கோரியிருந்தோம். குறிப்பாக இன்று அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற காணி அபகரிப்பு, மாகாணசபை அதிகாரங்களை பறிக்கின்ற நடவடிக்கைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களில் மத்திய அரசாங்கத்தினுடைய தலையீடுகள் என்ற பல விடயங்களை நடைபெறுகின்றன. மேலும் அரசாங்கம் தற்போது தொல்லியல், வனவளத்துறை, சுற்றாடல், உல்லாசத்துறை, மகாவலி அபிவிருத்தி என்று பல கோணங்களில் காணிகளை அபகரித்து வருகிறது. இந்த விடயம் மாகாணசபை செயலில் இல்லாமல் இருக்கின்ற பொழுது மிகத் துரிதமாக மத்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த விடயங்கள் என்னென்ன காரணங்களை அரசாங்கம் கூறினாலும், இறுதியில் குடியேற்றத்தை நோக்கியதாகவும் எங்களுடைய குடிப் பரம்பலை சிதைப்பதாகவும், எங்களுடைய வடக்கு கிழக்கு பூமியை துண்டாடும் நடவடிக்கையாகவும் தான் அமைந்திருக்கிறது. ஆகவே இதை நாங்கள் விரைவிலேயே தடுத்து நிறுத்த வேண்டிய அவசியம் இருப்பதனாலே தமிழ் தேசிய கட்சிகள் ஆரம்ப கட்டமாக, எந்தெந்த விடங்களில் நாங்கள் ஒருமித்துப் போக வேண்டும் என்பதை ஆராய்ந்து, அந்த விடயங்களில் ஒருமித்து பயணிப்பதற்காக ஒரு கலந்துரையாடலுக்காகத் தான் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பிரகாரம் இந்த வாரம் நாங்கள் அந்த சந்திப்பை மேற்கொள்ளலாம் என்று தீர்மானித்திருக்கிறோம். அதற்கான நடவடிக்கைகளும், பேச்சுக்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

கேள்வி – முள்ளிவாய்க்கால் பேரவலம் நேர்ந்து 12 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் கூட, இந்தப் பொது இணக்கப்பாட்டைக் காண்பதில் எத்தகைய சவால்கள் உள்ளன?

பதில் – முள்ளிவாய்க்காலில் நிறைவடைந்த ஆயுதப் போராட்டத்தின் மௌனிப்பிற்குப் பின்னர் ஒருமித்த குரலில் மிகப் பலமான ஒரு சக்தியாக திகழ்ந்து கொண்டிருந்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. அதிலே தேர்தல் காரணங்களைக் காட்டியும், அதேபோன்று அதிக ஆசனங்களைக் கொண்ட கட்சியினுடைய ஆதிக்கம் அதிகமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருப்பதாக காரணம் காட்டியும் மெதுவாக பிரிவினைகள் தோன்றியது. அதிலிருந்து ஒரு கட்சி வெளியேறியது. அதற்காக அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சியால் அங்கத்துவக் கட்சிகளுக்கு உரிய கௌரவங்கள் வழங்கப்படவில்லை அல்லது அவர்களோடு பல விடயங்கள் கலந்துரையாடப்படுவதில்லை, தன்னிச்சையான செயற்பாடு, தன்னிச்சையாக முடிவு எடுப்பது என்ற விடயங்கள் கருத்து வேறுபாடுகளை தோற்றுவித்திருந்தன. அதற்குப் பின்னரும் சில அங்கத்துவ கட்சிகளினுடைய உறுப்பினர்களை உள்வாங்குவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. குறிப்பாக இப்படியான கருத்து வேறுபாடுகளோடு ஈபிஆர்எல்எப் கட்சி வெளியேறியது. அதுபோன்று மற்றக் கட்சிகளுக்கும் அந்தப் பிரச்சினை இருந்தாலும்கூட தமிழ்த் தேசியம் இன்று முகம் கொடுத்திருக்கக்கூடிய பிரச்சினைகளில் நாங்கள் ஒற்றுமையாக இருப்பது தான் பலமாக இருக்கும் என்ற படியினாலே சகிப்புத்தன்மையோடும் விட்டுக்கொடுப்போடும் பயணிக்கின்ற ஒரு சூழ்நிலையில் கூட்டமைப்பு தொடர்ந்தும் ஒரு பலமான அமைப்பாக இருக்கிறது. இந்த கட்சிகளுக்கு இடையே இருக்கக்கூடிய விட்டுக்கொடுப்பு இன்மை, ஆதிக்க நிலைப்பாடு, தேர்தல் தழுவிய அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கம், உதாசீனப் படுத்துவது போன்ற காரணங்கள்தான் இந்த கட்சிகளுக்கு இடையே பிளவு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணங்களாக பிரிந்து சென்ற கட்சிகளால் கூறப்பட்டிருந்தது. அவற்றை நாங்கள் திருத்திக் கொண்டு ஒரு ஒருமித்த குரலில் ஒன்றிணைந்த நிலைப்பாட்டிலே பயணிப்பது காலத்தின் தேவை.

கேள்வி – சிறீலங்கா அரசாங்கம் பல வகையிலும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்ற இன்றைய சூழமைவில் இந்தப் பொது இணக்கப்பாட்டின் அவசியத்தை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில் – சிறீலங்கா அரசாங்கத்திற்கு இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையில் இருந்து அவர்கள் வெளியேறியமை, மிகப்பெரிய ஒரு சிக்கலை அவர்களுக்கு உருவாக்கியிருக்கிறது. மனித உரிமை பேரவையை தாண்டி அதனுடைய அங்கத்துவ நாடுகள், மனித உரிமை விடயங்களுக்கு இலங்கை அரசாங்கம் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே உன்னிப்பாக செயலாற்றுகிறார்கள். உதாரணமாக ஜிஎஸ்பி சலுகை அதேபோன்று அமெரிக்காவில் கொண்டுவரப்பட்டு இருக்கின்ற ஒரு பிரேரணை மற்றும் குறிப்பாக 13ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தின் பிரகாரம் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற இந்தியாவின் அழுத்தம் என பல விடயங்களை குறிப்பிடலாம். சர்வதேசம் ஒருமித்த நிலையிலே இந்தவிடயங்களை கையாளுகின்ற பொழுது களத்தில் இருக்கக்கூடிய நாங்கள் பிரிந்து நிற்பதால் அந்த விடயங்கள் நீர்த்துப்போக அல்லது இலங்கை அரசாங்கம் அவற்றை சாதுரியமாக கையாள்வதற்கான வழிவகை ஏற்படுத்திவிடும். ஆகவே எங்களுடைய தேர்தல் நோக்கங்கள், அல்லது அரசியல் தீர்வு சம்பந்தமான நிலைப்பாடுகளிலே வித்தியாசம் இருந்தாலும், என்ன என்ன விடயங்களில் நாங்கள் பொது நிலைப்பாட்டை எடுத்துக் கொள்ள முடியும்? என்பதை ஆராய்ந்து, அந்த விடயத்திலாவது ஒருமித்து இருப்பது, இந்த நேரத்திலே இலங்கை அரசாங்கத்திடம் பல விடயங்களை பேரம் பேசக்கூடிய ஒரு சூழலை உள்ளக அரசியலிலே தோற்றுவிக்கும்.

கேள்வி – எந்த முயற்சியை யார் எடுத்தாலும் அந்த முயற்சியின் அவசியத்தையும் காலத்தேவையையும் கருத்தில் கொண்டு தேவையான கவனங்களோடு செயலாற்ற வேண்டியதின் அவசியத்தை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில் – சரியான நேரத்தில் சரியான நிலைப்பாடுகளை எடுத்து, எமக்கு வருகின்ற சந்தர்ப்பங்களை கையாளுகின்ற விதத்தில் தான் நாங்கள் எமது இனத்தினுடைய கோரிக்கைகளையும், அபிலாசைகளை வென்றெடுக்க முடியும். ஒரேயடியாக வென்றெடுக்க முடியாவிட்டாலும் கூட கட்டங்கட்டமாக நாங்கள் வென்றெடுக்க முடியும். இன்று ஏற்படுகின்ற ஒரு சாதகமான சூழல் சர்வதேச நாடுகளுடைய அல்லது இதில் அக்கறை கொண்டிருக்கின்ற நாடுகளினுடைய பூகோள நலன் சார்ந்த விடயம் என சிலர் குற்றம் சுமத்திஇருந்தாலும்கூட, அது எங்களுடைய தேசிய இனத்தினுடைய விடயங்களை அவர்கள் கையில் எடுத்திருப்பதை நாங்கள் சாதுரியமாக கையாள வேண்டும். அதுதான் ஒரு அரசியல் தலைமையினுடைய கடமையாக இருக்கும். பூகோளம் சார்ந்த விடயங்களில் குறிப்பாக த சீன தேசத்தின் சார்பாக இலங்கை அரசாங்கம் சாய்கிறது என்ற நிலைப்பாட்டிலே சர்வதேச நாடுகள் அக்கறை கொண்டிருக்கிறார்கள். இந்தியா எங்களுடைய அரசியல் தீர்வு சம்பந்தமாக அழுத்தத்தைப் பிரயோகிக்கின்றது. 13 இன் அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று. அது எங்கள் தீர்வு இல்லா விட்டாலும், இருக்கக்கூடிய தற்போதைய நெருக்கடியில் இருந்து எங்களுடைய மக்களை காப்பாற்றுவதற்கு உதவியாக இருக்கும். அதே போன்று மனித உரிமை, நீதிப் பொறிமுறை, பரிகார நீதி என்ற விடயங்களை கவனத்தில் கொண்டு பொருளாதார நெருக்கடிகளை இலங்கை அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தற்போது பியோகிக்க முற்பட்டுள்ளனர். . சர்வதேச நாடுகளும் எமக்கு சார்பாக செயல்படுகின்ற பொழுது ப நாங்கள் ஒருமித்த நிலைப்பாட்டிலே இருப்பதன் மூலம்தான் ஒரு பலமான சக்தியாக உள்ளக அரசியலில் செயற்படமுடியும்., இதை சரியான முறையில் பயன்படுத்தாமல் விட்டால், பாரியதொரு வரலாற்றுத் தவறினை எங்கள் இனத்திற்கு இழைத்தவர்களாகி விடுவோம்.

கேள்வி – இந்த இணக்கப்பாடு தமிழ்த் தேசிய நலனில் அக்கறை கொண்டுள்ள அரசியல் கட்சிகளைக் கடந்தும் ஏற்படுத்தப்படுமா? அதன் அவசியத்தை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

இந்த கலந்துரையாடலில் முதலாவதாக இந்த அரசியல் தலைமைகள் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வர வேண்டும் என்பது முக்கிய தேவை. இது தேர்தலுக்கான கூட்டாகவோ அரசியல் நலன் சார்ந்த விடயமாகவோ அல்லது பதவி நோக்கங்களோடு செயற்படுத்தப்படவில்லை.

அதையும் தாண்டி தமிழ் மக்கள் நலனில் அக்கறை கொண்ட சமூக அமைப்புக்கள், மதத் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எங்களுடைய புலம்பெயர் உறவுகள், நேச சக்திகள் ஆகியோரையும் ஒருமித்து செயற்படுவதும் முக்கியம். குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அரசியல் தலைமைகளையும் ஆதரவு சக்திகளையும் எப்படி அரவணைத்து ஒருமித்த குரலாக செயற்படுவதற்கான வேலைத் திட்டங்களும் அவசியம். ஆரம்பகட்ட கலந்துரையாடல் நிச்சயமாக முன்னேற்றம் கண்டு, அதை தாண்டிய வெளி சக்திகளையும் இணைத்துக் கொண்டு பயணிக்க கூடிய ஒரு சூழல். உருவாக வேண்டும் என்பதுதான் ஒருமித்த நிலைப்பாட்டிற்கான கோரிக்கையின் பிரதான நோக்கமாக அமைந்திருக்கிறது.

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர் -ரெலோ
தமிழ் தேசியக் கூட்டமைப்பு

Posted in Uncategorized

கூட்டணிக்குள் உள்ள முரண்பாடுகளுக்கு பிரதமர் விரைவில் தீர்வு காணவேண்டும்: வாசு

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும், கூட்டணியின் பங்காளி கட்சிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விரைவில் தீர்வு காண வேண்டும். பங்காளி கட்சி உறுப்பினர்களின் கருத்துக்கள் அரசாங்கத்திற்குள் காணப்படும் முரண்பாட்டை பகிரங்கப்படுத்தியுள்ளது என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், சிறந்த நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியமைத்து தேர்தலில் போட்டியிட்டோம். அனைத்து தரப்பினரது ஒன்றிணைவை கருத்திற் கொண்டே நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலிலும் கூட்டணியின் பலத்தை கருதியே மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை வழங்கினார்கள்.

பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் பங்காளி கட்சி தலைவர்களும், உறுப்பினர்களும் தொடர்ச்சியாக புறக்கணக்கப்படுகிறார்கள். கடந்த காலங்களில் அரசாங்கம் கொள்கைக்கு முரணான செயற்பட்ட போது அதனை பங்காளி கட்சி தலைவர்கள் சுட்டிக்காட்டினோம். கூட்டணியமைத்துள்ளோம் என்ற காரணத்தினால் தவறுகளை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும், ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜனபெரமுன கூட்டணிக்கும் இடையிலான முரண்பாட்டுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விரையில் தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம். தீர்மானம் எடுப்பது காலதாமதமாகுவது கூட்டணியை மேலும் பலவீனப்படுத்தும்.

பங்காளி கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டணி குறித்து குறிப்பிடும் கருத்துக்கள் அரசாங்கத்தில் காணப்படும் பிரச்சினைகளை பகிரங்கப்படுத்தியுள்ளது. இவ்வாறான கருத்துக்கள் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்கும். கூட்டணியின் முரண்பாடுகள் தீவிரமடைந்தால் அது அரசாங்கத்தை முழுமையாக பாதிக்கும் என்றார்.

எமிரேட்ஸ் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணிகளை அழைத்து செல்வதை இடைநிறுத்த எமிரேட்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

ஜூலை மாதம் 15 ஆம் திகதி வரையில் இவ்வாறு பயணிகளை அழைத்து செல்வதை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு ஜூலை மாதம் 19 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

புதிய சுகாதார வழிகாட்டலுக்கு அமைய பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களில் 50 வீதமானோர் மாத்திரமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேல் மாகாணத்தில் பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களில் 30 வீதமானோர் மாத்திரமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதுடன் 10 பேரின் பங்கேற்புடன் பதிவுத் திருமணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஒருவர் மரணித்தால் சடலத்தை பொறுப்பேற்று 24 மணிநேரத்தில் இறுதிச்சடங்கை முன்னெடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மரணச்சடங்களில் 15 பேர் மாத்திரம் கலந்துகொள்ள முடியும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

தமிழ் கட்சிகளுக்கு இடையில் ஒற்றுமையை வலுப்படுத்த இன்று யாழில் பங்காளி கட்சிகளின் தலைவர்களுடன் தலைவர் செல்வம் சந்திப்பு

தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைமைகளுக்கு எந்தெந்த விடயங்களில் ஒருமித்த நிலைப்பாட்டில் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகித்து மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அதிகாரங்களை அரசாங்கம் கையகப் படுத்தி வருகின்ற சூழலை தடுத்து நிறுத்தவும் இருக்கக் கூடிய அதிகாரங்களை பாதுகாக்க வேண்டி ஆரம்பகட்ட மெய்நிகர் இணையவழி ஊடான கலந்துரையாடலுக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் விடுத்த வேண்டுகோள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

தமிழ் கட்சிகளுக்கு இடையில் ஒற்றுமையை வலுப்படுத்த புதிய முயற்சிகளை மேற்கொள்வதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள் மூன்றும் கூட்டாக தீர்மானம் எடுத்துள்ளன.

இன்று காலை யாழ்ப்பாணத்தில் கூடிய மூன்று கட்சிகளின் தலைவர்களும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இன்று காலை மார்ட்டின் வீதியிலுள்ள இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் சந்தித்துள்ளனர்.

சுமார் ஒரு மணித்தியாலயம் இந்த சந்திப்பு நடந்த நிலையில் 6 தமிழ் கட்சிகளிற்கிடையிலான சந்திப்பிற்கு தமிழீழ விடுதலை இயக்கம் விடுத்த அறிவிப்பு தொடர்பில் இதில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஏற்கனவே 9 கட்சிகளின் கூட்டு பேச்சு பாதி வழியில் நிற்கும் போது, ரெலோ திடீரென விடுத்த இந்த முயற்சி ஏற்படுத்திய சிக்கல்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

ஏற்கனவே 9 கட்சிகள் கூட்டு பேச்சு நடந்திருப்பதால், அந்த கட்சிகளையும் இணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய ஒற்றுமை முயற்சியை மேற்கொள்வதென தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் நாளைய தினம் சந்திப்பிற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் இதில் சீ.வி.விக்னேஸ்வரன் தரப்பு ஒரு பிரதிநிதியை அனுப்புவதாக கூறியுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளாது என தெரியவருகிறது. எனினும் தமிழ் மக்கள் கூட்டணியின் பிரதிநிதி வருவதால், நாளைய சந்திப்பை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கூட்டமைப்பாக புதிய கூட்டு முயற்சியை முன்னெடுப்பதென தீர்மானம் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

நயினாதீவுக்கு வருவதனை தவிர்க்குமாறு பக்தர்களுக்கு கோரிக்கை!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு வருகை தருவதனை பக்தர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென ஆலய அறங்காவலர் சபையினர் கோரியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக ஆலய அறங்காவலர் சபையினர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ‘நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் நித்திய பூஜைகள் நடைபெறுகின்றன.

எனினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அபிசேகங்கள், அடியவர்களின் நேர்த்திகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. அவை மீள ஆரம்பிப்பது தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும்.

ஆகவே பக்தர்கள் அனைவரும் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு ஆலயத்திற்கு வருகை தருவதனை தவிர்த்து, உங்கள் வீடுகளில் இருந்தவாறு அம்பாளை வேண்டிக்கொள்ளுங்கள்’ என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கிழக்கு மாகணத்திற்கு விஜயம் : பாடசாலை மாணவர்கள் உட்பட பலருக்கும் உதவிகள் வழங்கி வைப்பு !

கிழக்கு மாகணத்திற்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரின் விஜயத்தை முன்னிட்டு பொத்துவில் பிரதேச மக்களுக்கு உலருணவுகள் வழங்குதல், பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்குதல், விளையாட்டு கழக வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் போன்ற நிகழ்வுகள் பாகிஸ்தான்-இலங்கை நட்புறவின் அடையாளமாக 02-07-21 பொத்துவில் தனியார் விடுதியில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷாரப் முதுநபினின் தலைமையில் நடைபெற்றது.

இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் முஹம்மத் சாட் ஹட்டக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்த பொருட்களை வழங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலாளர் சந்தருவன் அனுராத, பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எச். அப்துல் றஹீம், சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்ற தலைவர் ஏ.எம். ஜஹ்பர், உட்பட பல முக்கிய பிரமுகர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மேலும் கொரோணா தொற்றிலிருந்து நாடு விடுபடவும், கொரோணா தொற்றாளர்கள் விரைவில் குணமாகவும் வேண்டி பொத்துவில் சிங்கபுர சமுத்ரகிரி விகாராதிபதி இந்திரி உபனந்த, சாளம்படிப்பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ க. கான்டிபன் சர்மா, மேதடிஸ் தேவாலய போதகர் அருட்தந்தை பிலிப்குமார் , மௌலவி சுபைர் அகில் முகம்மட் (சித்திக்கி) ஆகியோர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

Posted in Uncategorized

வருட இறுதியில் அல்லது ஜனவரியில் மாகாண சபை தேர்தல்?

இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருடம் ஜனவரி மாதத்திர் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக அரச மட்டத்திலிருந்து தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பெரும்பாலும் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படலாம் என்றும், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலும் நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாக மற்றுமொரு தகவலும் கூறுகின்றது.

மாகாண சபைகளுக்கான தேர்தல் கடந்த பல வருடங்களாக ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. முறைப்படி வருகின்ற ஜனவரி மாதத்திலேயே மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் கொரோனா தொற்று பரவலை 75 சதவீதம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, மக்களுக்கு நிவாரணங்களை அறிவித்து, அதனூடாக மக்களின் மனங்களை வென்றெடுக்கவும், வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மேலும் பல நிவாரணங்களை அறிவிக்கவும் அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகின்றது.

அதனூடாக தேர்தல் வெற்றியைப் பதிவுசெய்ய வாய்ப்பிருப்பதாக அரச உயர்மட்டத்திற்கு ஆலோசனையும் கூறப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது,

பஷில் ராஜபக்ஷவை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதன் ஊடாக இந்த இலக்குகளை அடைந்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் ஜனாதிபதியும், பிரதமரும் இருப்பதாக கூறப்படுகின்றது.

கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் பின்னடைவுக்கு இராணுவத்தினரே காரணம்- ரெலோ செயலாளர் ஜனா எம்.பிசாடல் !

கொரோனா கட்டுப்பாட்டுச் செயற்றிட்டத்தில் இராணுவத்தினரை இணைந்தமையானது, கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் பின்னடைவையே ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் கோவிந்தன் கருணாகரம் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்ட நாள் முதல் சுகாதார பிரிவினர், அர்ப்பணிப்புடன் மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர். இது பாராட்டத்தக்கதோர் விடயமாகும்.

இதேவேளை முதலாவது, இரண்டாவது அலையினை கட்டுப்படுத்துவதில் காட்டிய தீவிரத்தினை மூன்றாவது அலையினை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் காட்டவில்லை.

மேலும் இத்தகைய கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையில் சுகாதார அதிகாரிகள், சுகாதார வைத்திய அதிகாரிகள் தாங்கள் நினைத்ததை செய்யமுடியாத வகையில் அவர்களின் கைகள் கூட இராணுவத்தினரால் கட்டப்படுவதை நாங்கள் அறிவோம்.

மத்திய அரசாங்கத்தில் கூட துறைக்கு பொறுப்பான அமைச்சர்கள், கொரோனாவை கட்டுப்படுத்தும் விவகாரங்களில் தன்னிச்சையான முடிவுகளை எடுக்கமுடியாத நிலையில் உள்ளனர்.

கொவிட் செயலணிக்கு பொறுப்பாக இராணுவத் தளபதியை நியமித்தது மாத்திரமன்றி ஒவ்வொரு மாவட்டத்தினையும் கண்காணிப்பதற்கு இராணுவ அதிகாரிகளை நியமித்தன் ஊடாக சுகாதார பிரிவினருக்கு கொவிட்டை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் சில தடைகளும் ஏற்பட்டுள்ளன” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized

நாயாற்றில் கொவிட் கொத்தணி உருவாகும் அபாயம்-சுகாதார துறைக்கு பாரிய அச்சுறுத்தல்-ரெலோ விஜிந்தன்!

நாயாற்று பகுதியில் பருவகால கடற்தொழிலுக்காக வந்த மீனவர்கள் சுகாதார துறைக்கு பாரிய அச்சுறுத்தலையும் சவாலினையும் ஏற்படுத்தியுள்ளதுடன் முல்லைத்தீவில் கொவிட் கொத்தணி உருவாகும் அபாயநிலையினையும் தோற்றிவித்துள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) மத்திய குழு உறுப்பினரும் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளருமான க.விஜிந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று 02.07.21 முல்லைத்தீவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார் மேலும் அவர்தெரிவிக்கையில்

சபையின் எல்லைக்கு உட்பட்ட நாயாற்று பகுதியில் பருவகால மீன்பிடி தொழிலை மேற்கொள்ளுவதற்காக வெளிமாவட்டங்களில் இருந்து வருவது வளமையாக மாறிவிட்டது.
இவர்களில் 5பேருக்கு கொரோன தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து கொவிட் 19 இன் உச்சம் எங்கள் பிரதேசங்களை பாதிப்படைய வைக்கின்ற நேரங்களில் நாங்கள் பயணங்களை மேற்கொண்டுள்ளோம் ஆயிரம் வரையான சிறுவர்கள் தொடக்கம் பெண்கள் முதியவர்கள் வரை எந்தவிதமான பதிவுகளும் இல்லாமல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இவர்களிடம் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையின் போது 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்ட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார திணைக்களத்துடன் சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் அங்கு சென்றோம் ஆனால் சுகாதார துறைக்கு அச்சுறுத்தலான நிலமையாகவே காணப்படுகின்றது.
அங்கு உள்ளவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துளைக்கின்ற நிலையும் காணப்படவில்லை சமூக இடைவெளியும் காணப்படவில்லை அங்கு பல்வேறு பட்ட மாவட்டங்களில் இருந்து மாகாணங்களில் இருந்தும் வந்து செல்வதை காணக்கூடியதாக உள்ளது.

சுகாதார துறையினரால் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்னிலையில் குறித்த பகுதிக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது இது முல்லைத்தீவில் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு அச்சுறுத்தலாக காண்படுகின்றது.

இதனை தடுப்பதற்கு அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை சட்டவிரோதமான மீன்பிடி நடைபெற்று வருகின்றது அங்கு எந்த பாதுகாப்பும் அற்றநிலையில் நெருக்கமாக வாடிகள் அமைத்து வாழ்ந்து வருகின்றார்கள்.

இங்கு வந்திருப்பவர்கள் தொடர்பில் எந்த அமைப்புக்களிடமும் பதிவுகள் எதுவும் இல்லை சுகாதாரதுறைக்கு மிகவும் அச்சுறுத்தலாகத்தான் காணப்படுகின்றது.

இதனை உடனடியாக அரச அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு மீண்டும் ஒரு கொரோனா கொத்தணி ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.