கொவிட் பாதிப்புக்கு அரசின் பயணக்கட்டுப்பாடு எனும் நகைகச்சுவை நாடகமே காரணம்- பா.உ.ஜனா

இந்த அரசின் பயணக் கட்டுப்பாடு என்று ஒரு நகைச்சுவையான நாடகமே மூன்றாவது அலையில் நாட்டின் நிலைமை மோசமடைவதற்குக் காரணம். கொவிட் தொற்றினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களை மீண்டும் மீண்டும் சுமைகளைக் கொடுத்து இந்த அரசு துன்பப்படுத்துகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொவிட் தொற்றினால் இந்த நாட்டின் நிலைமை வரவர இன்னும் மோசமாகிக் கொண்டு செல்கின்றது. கொவிட் தொற்று ஒழிப்புக்கான அமைச்சர் ஒரு கருத்தையும், கொவிட் ஒழிப்பு செயலணிக்குப் பொறுப்பான இராணுவத் தளபதி வேறொரு விதமான அறிக்கையும், சுகாதார அமைச்சர் இன்னுமொரு விதமான அறிக்கையையும் விடுகின்றனர். நாட்டு மக்கள் தற்போது மிகவும் குழப்பமான நிலையிலே இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

கொவிட் முதலாவது, இரண்டாவது அலை இலங்கையிலே ஏற்பட்ட போது அரசாங்கம் கன்னியமாக நடந்து ஊரடங்குகளை அழுல்ப்படுத்தி கொவிட் பரவலை ஓரவிற்குக் கட்டுப்படுத்தியது. ஆனால் இந்த மூன்றாவது அலையிலே பயணக் கட்டுப்பாடு என்று ஒரு நகைச்சுவையான நாடகமே இடம்பெற்றது. பயணக் கட்டுப்பாடு பெயரளவிலேயே இருக்கின்றதே தவிர மக்களது நடமாட்டம், வாகனப் போக்குவரத்து போன்றன சர்வசாதாரணமாகவே இருந்தது.

உண்மையிலேயே ஆடைத் தொழிற்சாலைகள் கிராமப்புற பொருளாதாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், இந்த மூன்றாவது அலையில் கொவிட் தொற்றினை கிராமப் புறங்களுக்குக் கொண்டு சென்ற பெருமை இந்த ஆடைத் தொழிற்சாலைகளுக்குத் தான் கிடைத்திருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திலே வாகரைப் பிரதேசம் கொவிட் தொற்றினால் அதிகம் பாதிக்கப்படவில்லை. ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன் அதிகமான தொற்றாளர்கள் அங்கு இனங்காணப்பட்டார்கள். அதற்குக் காரணம் பார்த்தால் அந்தப் பிரதேசத்தில் இருந்து தம்பலகாமம், கந்தளாய் போன்ற ஆடைத் தொழிற்சாலைக்குச் சென்று வருவபவர்களினால் தான் அங்கு தொற்று கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

இந்த அரசு கொவிட் தொற்றை ஒழிப்பதற்கான முக்கிய காரணியான தடுப்பூசி வழங்கும் திட்டத்தினை துரிதப்படுத்தி இதனை ஒழிக்க வேண்டும். தற்போது ஐரோப்பிய, அரேபிய நாடுகள் கூட இலங்கையை கொவிட் சிவப்பு வலயத்திற்குள் உட்படுத்தியிருக்கின்றார்கள். அதனால் தங்களது மேற்படிப்புகள், தெழில்வாய்ப்புகளைத் தேடிச் செல்பவர்கள், விடுமுறையில் இலங்கைக்கு வந்தவர்கள் மீண்டும் அந்த நாடுகளுக்குச் செல்ல முடியாத நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள். எனவே அரசு தன் நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்தி மக்களை இந்தத் தொற்றில் இருந்து காப்பாற்ற வேண்டும்.

இதற்கும் மேலாக இந்தத் தொற்றில் அதிகம் பாதிப்புக்குள்ளான கிராமப்புற மக்கள், விவசாயிகள், மீன்பிடியாளர்கள், சிறு வியாபாரிகள் அரசின் எரிபொருள் விலையேற்றத்தினால் மேலும் அதிகமாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

பசில் ராஜபக்ஷ அவர்கள் அமெரிக்காவில் இருந்த நேரம்தான் இங்கு எரிபொருள் விலையேற்றப்பட்டதாகவும், அவர் நாட்டில் இருந்திருந்தால் எரிபொருள் விலையேற்றம் நடைபெற்றிருககாது என்றும் அமைச்சரவையில் உள்ள சில அமைச்சர்களே கூறிக்கொள்வதை நாங்கள் அவதானிக்கின்றோம். அப்படியானால் இந்த நாடடின் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை, ஆளுங்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு அப்பால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை உருவாக்கிய பசில் ராஜபக்ஷ அவர்களா இப்படியான முடிவுகளை எடுப்பவர் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வெகு விரைவில் வரவிருப்பதாகவும், அதன் பின் எரிபொருட்கள் விலை குறையும் எனவும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

அந்த வகையில் தற்போது நாட்டு மக்கள் கொவிட் தொற்றினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் போது மீண்டும் மீண்டும் இந்த அரசு மக்களைத் துன்பப்படுத்தக் கூடாது. எரிபொருள் விலையேறத்திற்கு மேலாக எரிவாயு விலையேற்றம் வரவிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.

எனவே இவ்வாறான செயற்பாடுகளில் இருந்து அரசாங்கம் விலகிக் கொள்ள வேண்டும். மக்களைத் தற்போதைய நிலையில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் யாழ் விஜயம்

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் முகமது சாத் கட்டாக் இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.

மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்த உயர்ஸ்தானிகர் முதலில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் அலுவலகத்தில், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
பின்னர் யாழ் மாவட்டத்தின் தற்போதைய அபிவிருத்தி, சமகால நிலைமைகள் தொடர்பில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கு காணொளி முறையில் விளக்கமளிக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அங்கஜன் இராமநாதன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன்,மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.முரளிதரன், மாவட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்,
தற்போதைய கொரோனா காலகட்டத்தில் விவசாயம் கல்வி கடற்றொழில் போன்ற விடயங்களை எவ்வாறு மேற்கொள்வது என்றும் அதில் உள்ள சவால்கள் தொடர்பிலும் பாகிஸ்தான் தூதருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

குறித்த சந்திப்புகளில் இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார வர்த்தக ரீதியாக எவ்வாறு உறவுகளை வலுப்படுத்தலாம் என்பது தொடர்பிலும் பாகிஸ்தானில் கல்விகற்க விரும்பும் மாணவர்களுக்கு இலவசமாக புலமைப்பரிசில் வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

Posted in Uncategorized

‘ஈழ அகதிகளுக்கு குடியுரிமை அளிக்க சட்டப்பூர்வ தீர்வு’அமைச்சர் கே.எஸ். மஸ்தான்

தமிழகத்தில் வசிக்கும் அகதிகளுக்கு குடியுரிமை அளிப்பதற்கு சட்டப் பூர்வ தீர்வு காணப்படும் என்றார் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ். மஸ்தான்.

திருச்சி வாழவந்தான் கோட்டை மற்றும் கொட்டப்பட்டிலுள்ள ஈழத் தமிழர் அகதிகள் முகாம்களை செவ்வாய்க்கிழமை பார்வையிட்ட அவர், அங்குள்ள குடியிருப்புகள், கழிப்பறைகள், சமுதாயக்கூடம் உள்ளிட்ட அனைத்து கட்டடங்களின் வசதிகள், அடிப்படை வசதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து குறைகளைக் கேட்டறிந்தார்.

தமிழகத்தில் 108 ஈழத் தமிழர் அகதிகள் முகாம்கள் உள்ளன. இங்கு 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதுமட்டுமின்றி காவல்துறையில் பதிவு செய்துவிட்டு, முகாம்களைவிட்டு வெளியே வசிக்கும் நிலையில் 13,553 குடும்பங்கள் உள்ளன.

Posted in Uncategorized

துமிந்தவின் விடுதலைக்காகத்தான் ஏனைய கைதிகளின் விடுதலைகள் இடம்பெற்றதா? ரெலோ பிரதி தலைவர் பிரசன்னா

பேரினவாத சிந்தனையில் செயற்படும் அரசாங்கம் உள்ள இந்த நாட்டிற்கு எவ்விதத்திலும் பொருந்தாத பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக இல்லாமலாக்கப்பட்டு, அனைத்து தமிழ் அரசியற் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும். துமிந்தவின் விடுதலையை நோக்காகக் கொண்டே ஏனைய கைதிகளின் விடுதலைகள் மேற்கொள்ளப்பட்டனவா? என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதித் தவிசாளரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவருமான பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

அரசியற் கைதிகளின் விடுதலை விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு என்னும் அடிப்படையில் பதினாறு தமிழ் அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்பட்ட விடயம் உண்மையில் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் ஏனைய அரசியற் கைதிகளையும் விரைவில் விடுவிப்பதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட அரசு முன்வர வேண்டும்.

அரசியற் கைதிகளின் விடுதலை மற்றும் சாதாரண கைதிகளின் விடுதலையுடன் சேர்த்து கொலைக் குற்றவாளியாகக் கருதப்படும் துமிந்த சில்வா அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பதானது துமிந்தவின் விடுதலையை நோக்காகக் கொண்டே ஏனைய கைதிகளின் விடுதலைகள் மேற்கொள்ளப்பட்டனவா என எண்ணத் தோணுகின்றது. துமிந்தவின் விடுதலை தொடர்பில் தமிழர் தரப்பில் இருந்து கேள்விகள் வந்து விடக் கூடாது என்பதற்காக எமது அரசியற் கைதிகளின் விடுதலை இடம்பெற்றதா? என்கின்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுகின்றது.

என்ன நடக்கின்றது இந்த நாட்டில் ஒரே நாடு ஒரே சட்டம் என்று வார்த்தையில் மாத்திரம் சொல்லிக் கொண்டு பேரினவாதத்திற்கு ஒரு சட்டமும் ஏனைய சமூகத்திற்கு ஒரு சட்டமும் என்ற விதத்தில் சட்டப் பிரயோகங்கள் இடம்பெறுகின்றன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரை சுட்டுக்கொலை செய்த குற்றத்திற்காக உயர்நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வா வெறும் ஐந்தே ஆண்டுகளில் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளார். குழந்தைகள் உட்பட எட்டு தமிழர்களை படுகொலை செய்தமைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி சுனில் ரத்னாயக்க பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டார். தண்டனைக் கைதியாக இருந்த ஞானசார தேரரும் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டார். அதே போல ஒரு இளம்பெண் கொலை வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்த ஜுட் ஷரமந்த ஜெயமஹா என்கிற இளைஞனும் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டார்.

ஆனால் இதே நாட்டில் தான் ரகுபதி சர்மா எனப்படும் சைவ மதகுரு ஒருவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டு இன்றைக்கும் தண்டனைக் கைதியாக சிறையில் இருக்கின்றார். அதே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பலவந்த படுத்தி குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தாய் இல்லாத இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆனந்த சுதாகரன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றார். அத்தோடுஇ இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபன தமிழ்ப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான கனகசபை தேவதாசன் அவர்களும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றார். இவர்களை போல இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் எவ்வித அடிப்படை காரணங்களும் இன்றி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு சிறையில் இன்னும் வாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

அத்துடன்இ சமூக வளைதளங்களில் பதிவுகள் இட்டதன் அடிப்படையில் மட்டும் இளைஞர்கள் உட்பட 80 இற்கும் அதிகமானவர்கள் அண்மையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றார்கள். இதுபோதாதென்று ஆயிரக்கணக்கான இளையவர்கள் கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டும் இருக்கிறார்கள்.

ஆகவே அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்த பின்னரும் காரணங்கள் இன்றி தடுத்து வைத்து இருப்பது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் சகலரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

இந்த நாட்டில் மாறி மாறி வரும் அரசாங்கங்கள் தமிழ் மக்களை ஏமாற்றியும் அடிமைப்படுத்தியும் வைத்திருப்பதற்கே திட்டங்களை வகுக்கின்றன. மதகுரு என்ற ரீதியில் ஞானசாரதேரருக்கு சட்டம் வளைய முடியுமாக இருந்தால் ஏன் ரகுபதி சர்மாவிற்கும் இதே அடிப்படையில் சட்டம் பிரயோகிக்கப்பட முடியாது? ஆளாளுக்கு ஒவ்வொரு விதமதாகச் சட்டத்தினைப் பிரயோகிப்பதையே ஒரே நாடு ஒரே சட்டம் என்ற வரையறைக்குள் ஜனாதிபதி உட்படுத்துகின்றாரா?

எனவே பேரினவாத சிந்தனையில் செயற்படும் அரசாங்கம் உள்ள இந்த நாட்டிற்கு எவ்விதத்திலும் பொருந்தாதஇ பயங்கரவாத சட்டம் முழுமையாக இல்லாமலாக்கப்பட்டு அனைத்து தமிழ் அரசியற் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

“இராணுவச் சீருடை அணியவேண்டாம்” சீனத்தூதரகத்திடம் பாதுகாப்புச் செயலர் கோரிக்கை!

திஸ்ஸ மஹாராம குளத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சீன பணியாளர்கள், இராணுவ சீருடை அணிந்திருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்நிலையில் எதிர்காலத்தில் அவ்வாறான இராணுவச் சீருடையை அணிய வேண்டாம் என்று குறித்த பணியாளர்களுக்கு அறிவுறுத்தும்படி, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன சீன தூதரகத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சு இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சீன நாட்டின் இராணுவச் சீருடையுடன் அவர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளமை தொடர்பாக, எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

இந்நிலையில் பாதுகாப்பு செயலாளர் சீனத் தூதரகத்திடம் நேற்று விளக்கம் கோரியிருந்தார்.

இதன்படி குறித்த பணியாளர்கள், சீன நாட்டின் மக்கள் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று சீனத்தூதரகம் விளக்கமளித்துள்ளது.

எனினும் அந்த சீருடை, சீனாவின் ஒரு நிறுவனத்துக்கு உரியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்காலத்தில் அவ்வாறான இராணுவச் சீருடையை அணிய வேண்டாம் என்று குறித்த பணியாளர்களுக்கு அறிவுறுத்தும்படி, பாதுகாப்பு செயலாளர் சீனத்தூதரகத்திடம் கோரியுள்ளார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

பலில் மர்ஜான் தனது ஆசனத்தை பசிலுக்கு அர்ப்பணிக்கிறார்!

முன்னாள் அமைச்சரும் சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ,நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்காக தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மது பலீல் மர்ஜான் தனது ஆசனத்தை பசிலுக்காக அர்ப்பணிக்கவுள்ளதாக உள்ளூர் அரச வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான முகம்மது பலீல் மர்ஜான் பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க ஒப்புக் கொண்டதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தி லீடரிடம் தெரிவித்தார்.

பிரபல தொழிலதிபரான முகம்மது பலீல் மர்ஜான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பராவார், அதனால் அவருக்கு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டது.

பசில் ராஜபக்ஷவுக்கு நீண்ட காலமாக நாடாளுமன்றத்திற்கு வர உதவிய முஸ்லிம் நபர் ராஜினாமா செய்வதை பிரதமர் ஆரம்பத்தில் மறுத்த போதிலும், நாடாளுமன்ற செயல்முறைக்கு அவர் அளித்த பங்களிப்பு மிகக் குறைவு என்பதை விளக்கி அவர் அவ்வாறு செய்ய ஒப்புக் கொண்டதை ஏற்றுக்கொண்டார்,

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஜூலை 08 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார், அதே நாளில் பொருளாதார விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சராகவும் பதவியேற்பார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் சமல் ராஜபக்ஷ ஆகியோரின் கீழ் பல பாடங்களும் நிறுவனங்களும் பசில் ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட வுள்ளதாக உள்நாட்டு அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சுப் பதவியை பசில் ராஜபக்ஷ பொறுப்பேற்ற 24 மணி நேரத்திற்குள் எரிபொருள் விலையை மீண்டும் குறைப்பதாக சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

மாகாணசபையையாவது காப்பாற்ற எம்மவர்கள் ஒன்றிணையவேண்டும்! இன்றேல் அநாதையாவோம் என்கிறார் ரெலோ செயலாளர் ஜனா எம்.பி.

1983ம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரத்தின் பின்னர் போராட்ட இயக்கங்கள் அமோகமாக வளர்ந்திருந்தன. போராட்ட குணாம்சங்கள் உள்ள இளைஞர்கள் வடகிழக்கில் நிரம்பியிருந்தார்கள்.

ஆனால் இன்று அந்த நிலை மாறி 1983க்கு முன்பு இருந்த நிலையை விட மோசமான நிலையில் தமிழ் மக்கள் இருக்கின்றார்கள்.

இந்த கட்டத்தில் உண்மையிலேயே தமிழ் மக்களை தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்றவர்களாக இருந்தால் எங்களது சுயகௌரவத்தை,கட்சியின் வளர்ச்சியை, சுயநல தனி மனித எண்ணங்களை விடுத்து ஒன்றாக இணைந்து தற்போதைய நிலைமையில் எங்களது பிரதேசத்தையும், மக்களையும்,1 மாகாணசபை முறைமையையும் காப்பாற்ற முன்வர வேண்டும்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

மாகாணசபையை அரசியல் தீர்வு என முழுமையாக ஏற்காவிட்டாலும் அரசியல் தீர்வின் ஆரம்பப் புள்ளியாகக் கருதுகின்றோம். அந்த ஆரம்பப் புள்ளியாக இருக்கின்ற மாகாணசபை முறைமையைப் பாதுகாத்துக் கொள்ள உண்மையிலேயே தமிழ் மக்களை, தமிழ் தேசியத்தை நேசிக்கின்றவர்களாக இருந்தால் ஒன்றிணைய வேண்டும்.

அப்போதைய மூன்று போராட்ட இயக்கங்கள் ஆரம்பத்தில் ஈ.என்.எல்.எப் ஐ உருவாக்கி இருந்தாலும், அதன் இறுதிக் கட்டத்திலே தமிழீழ விடுதலைப் புலிகளும் அதில் சேர்ந்திருந்தார்கள்.

அந்த நான்கு இயக்கங்களும் மிகக் குறுகிய காலம் நன்றாகப் பயணித்தாலும் போராட்ட இயக்கங்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாகப் பிளவுற்று பல உயிர்களையும், மிகத் திறமையான போராட்ட வீரர்களையும், போராட்டத் தலைவர்களை இழந்தோம்.
இறுதியில் தமிழ் மக்கள் இந்த இக்கட்டான நிலைக்குள் தள்ளப்பட்டு மிகவும் மோசமான நிலையிலே இருக்கின்றார்கள்.

தற்போது போராட்டம் வடக்கு கிழக்கிலே இல்லாவிட்டாலும் அந்தக் காலத்தில் போராட்ட இயக்கங்களாக இருந்தவர்கள் அரசியற் கட்சிகளாக மாறியிருக்கின்றார்கள்.
தேர்தல்கள் பலவற்றில் போட்டியிட்டு அங்கத்தவர்களாகவும் இருக்கின்றார்கள். அதே போன்று மிதவாதக் கட்சிகளும் வடக்கு கிழக்கிலே தேசியத்தைக் கருத்தாகக் கொண்டு செயற்படுகின்றார்கள்.

ஆனால் தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் அடக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, அவர்களது உடைமைகள் கபளீகரம் செய்யப்பட்டு, கலாச்சாரங்கள் மழுங்கடிக்கப்பட்டு மிகவும் மோசமாக இருக்கும் இந்தக் காலகட்டத்திலே தமிழ்த் தேசியத்தை விரும்பும் தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டிய ஒரு தேவை எமக்குள்ளது.

1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் கூட மத்திய அரசாங்கத்தினால் கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் எதிர்காலத்தில் மாகாணசபை முறைமை இருக்குமோ என்ற சந்தேகம் கூட எழுகின்றது. இந்த மாகாணசபையைத் தமிழ் மக்கள் தங்களது அரசியற் தீர்வு என முழுமையாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அரசியற் தீர்வின் ஆரம்பப் புள்ளியாகக் கருதுகின்றார்கள்.

அந்த வகையில் அந்த ஆரம்பப் புள்ளியாக இருக்கின்ற மாகாணசபை முறைமையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாக இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

அந்நிய செலாவணிப் பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட தீர்மானம்

கொவிட் தொற்று நிலைமையால் நாட்டின் வெளிநாட்டு நாணய இருப்பு மற்றும் அந்நிய செலாவணிச் சந்தைக்கு ஏற்படக்கூடிய எதிர்மறையான பாதிப்புக்களைக் கருத்தில் கொண்டு ஒரு சில பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய வெளியகப் பரிவர்த்தனைகளை நிறுத்துவதற்காக 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க அந்நிய செலாவணிச் சட்டத்தின் 22 ஆம் உறுப்புரையின் கீழ் கட்டளை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டளைகள் செல்லுபடியாகும் காலம் 2021 யூலை மாதம் 01 ஆம் திகதி நிறைவு பெறவுள்ளதால், அந்நிய செலாவணிச் சந்தையில் ஏற்படக்கூடிய ஆபத்து நேர்வைக் குறைப்பதற்கும் நிதிப்பிரிவின் நிலைபேற்றுத்தன்மையைப் பேணவும் குறித்த கட்டளைகளை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென இலங்கை மத்திய வங்கி கருத்துத் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, அந்நிய செலாவணி வெளியகப் பரிமாற்றலின் அடிப்படையில் ஒரு சில மட்டுப்பாடுகள்/தடைகள் விதிக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க அந்நிய செலாவணிச் சட்டத்தின் 22 ஆம் உறுப்புரையின் கீழ் விதிக்கப்பட்டுள்ள கட்டளைகளை தொடர்ந்தும் 2022 ஜூலை மாதம் 02 ஆம் திகதி தொடக்கம் 06 மாத காலத்திற்கு நீடிப்பதற்காக நிதி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Posted in Uncategorized

மோசமான பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு HRW வலியுறுத்து!

சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரம் பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என இலங்கை அரசை சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) இன்று வலியுறுத்தியுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருந்த 16 கைதிகளுக்கு இலங்கை ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றபோதும், கடுமையான இந்தச் சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கான கடப்பாட்டை இலங்கை நிறைவேற்றவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கான தனது உறுதிமொழியை இலங்கை அரசு நிறைவேற்றாவிட்டால் அந்நாட்டுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்பி. பிளஸ் வரிச் சலுகையை இரத்துச் செய்யவுள்ளதாக அண்மையில் ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.

இவ்வாறான நிலையில் வெசாக் பூரணை தினமாக ஜூன் -24 ஆம் திகதி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 16 பேர் உட்பட 94 பேர் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டனர்.

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டம் பெரும்பாலும் தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராகவே பயன்படுத்தப்படுகிறது. சித்திரவதை மூலம் பலவந்தமாகக் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களின் அடிப்படையில் இவர்கள் பலர் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறான பாதிக்கப்பட்டவர்களை விடுதலை செய்ததுடன், சக அரசியல்வாதியைக் சுட்டுப் படுகொலை செய்த குற்றத்துக்காக நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட தனது அரசியல் கூட்டாளியான துமிந்த சில்வாவுக்கும் இலங்கை ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுவித்தார்.

நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட தனது அரசியல் கூட்டாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பளித்தமையானது இலங்கையின் சட்டத்தின் ஆட்சியைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. அத்துடன், பொதுமன்னிப்பளிக்கும் அதிகாரம் தனிப்பட்ட விறுப்பு-வெறுப்புக்களின்பால் பயன்படுத்தப்படுகிறது என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி கூறினார்.

2019 -இல் பதவியேற்றதிலிருந்து ராஜபக்ச அரசு தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் சிறுபான்மை குழுக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாகுபாட்டைத் தூண்டுவோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாஃப் ஜஸீம் ஆகியோர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்குப் பதிலாக அதை இன்னும் மோசமானதாக்குவதற்கான நடவடிக்கைகளை கோட்டாபய ராஜபக்ச எடுத்துவருகிறார்.

மார்ச் மாதத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. இது இன, மத மற்றும் வகுப்புவாத ரீதியாக செயற்பட்டு தேசிய ஒற்றுமையை சீர்குலைப்பதாக குற்றஞ்சாட்டப்படும் எவரையும் இரண்டு ஆண்டுகள் வரை விசாரணையின்றி சிறையில் அடைக்க வழி செய்கிறது.

அத்துடன், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோரை கொழும்பில் ஒரு மோசமான சித்திரவதை தளத்தில் தடுத்து வைத்து விசாரிக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கைது செய்யப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என இப்பகுதி வழக்கறிஞா் ஒருவர் தெரிவித்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கு மற்றும் கிழக்கில் ராஜபக்ச அரச நிர்வாகத்தின் கீழுள்ள பாதுகாப்புப் படைகளால் ஏராளமான சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறான துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என சா்வதேசத்தில் இருந்தும் உள்நாட்டில் இருந்து தொடா்ச்சியான அழைப்புக்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இடம்பெறும் மோசமான துஷ்பிரயோகங்களை ஐக்கிய நாடுகள் சபை வல்லுநர்கள், மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் மனித உரிமைகள் குழுக்கள் விரிவாக ஆவணப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை இலங்கை நீக்காவிட்டால் ஜி.எஸ்.பி + சலுகையை இரத்துச் செய்யும் தனது அறிவிப்புக்கு குறித்த ஐரோப்பிய ஒன்றியம் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கோரியுள்ளது.

அனுமதியின்றி சீனர்கள் நாட்டுக்குள் நுழையும் சூழலை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது – சரத் பொன்சேகா

அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் சீனர்கள் இலங்கைக்குள் அனுமதியின்றி நுழையும் நிலை ஏற்பட்டுள்ளது. புலனாய்வு பிரிவு உட்பட பாதுகாப்பு கட்டமைப்புக்களின் பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தியதால் தேசிய பாதுகாப்பு உறுதி பெறாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

புலனாய்வுப்பிரிவு உள்ளிட்டவை வலுப்படுத்தப்பட்டு தேசிய பாதுகாப்பு ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்தது பொய்யாகும். அவ்வாறு எந்தவொரு மாற்றமும் புலனாய்வு பிரிவில் ஏற்படுத்தப்படவில்லை. ஒரு பதவிகளில் நியமனங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதற்காக தேசிய பாதுகாப்பு வலுவடைந்துவிட்டதாகக் கூற முடியாது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தில் கைது செய்தவர்களே தற்போதைய அரசாங்கத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர். சஹ்ரானுக்கு அப்பால் இதனுடன் தொடர்புடையவர்களை கைது செய்யாதவரை நாட்டில் அடிப்படைவாத , பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்ந்தும் காணப்படும்.

பாதாள உலகக் குழுக்கள் ஒழிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறுகின்றார். அவ்வாறெனில் அண்மையில் ஹங்வெல்ல பிரதேசத்தில் நபரொருவரை கடத்திச் சென்று சுட்டுகொலை செய்து களனி கங்கையில் வீசியவர்கள் யார் ? தற்போது குற்றப்புலனாய்வு பிரிவினர் கூட பாதாள உலகக்குழுவினரைப் போலவே செயற்படுகின்றனர்.

அதனால் தான் பிரபாகரனை அழைத்துச் செல்வதைப் போன்று 20 குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கூட்டாக சென்று அசேல சம்பத்தை இழுத்துச் சென்றனர். இவ்வாறு செயற்படும் அதிகாரிகள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நாம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் இந்த அதிகாரிகளுக்கு எதிராக நிச்சயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவர்களுக்கு மாத்திரமல்ல. இலங்கைக்குள் பிரவேசித்து எமது நிலம் உள்ளிட்ட சொத்துக்களை கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் வெளிநாட்டவருக்கு எதிராகவும் நிச்சயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அத்தோடு அவர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ள தேசிய சொத்துக்களும் மீள பெறப்படும்.

இலங்கைக்குள் பொருளாதாரம் உள்ளிட்ட ஏனைய துறைகளில் சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ள அளவுக்கதிக இடம் பாரிய ஆபத்தாகும். இவ்வாறு இடமளிக்கப்பட்டுள்ளமை சீனர்கள் அனுமதியின்றி இலங்கைக்குள் நுழையும் ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகளே இதற்கு காரணமாகும் என்றார்.