7 ஆம் திகதிக்கு பின்னரும் பயணக் கட்டுப்பாடுகள் தொடருமா? இராணுவ தளபதி

நாட்டில் தற்சமயம் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளை எதிர்வரும் 07 ஆம் திகதிக்கு பின்னர் நீடிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

கொரோனா நிலைமையினை கருத்திற்கொண்டு சுகாதார அதிகாரிகள் உள்ளிட்டோருடனான கலந்துரையாடலை அடுத்து அது தொடர்பான இறுதி முடிவு எட்டப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், தற்போது அமுலில் உள்ள பயணத்தடை எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி வரை நீடிக்கப்படும் என வெளியாகிவரும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்றும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

அவ்வாறானதொரு முடிவு எட்டப்பட்டால் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து அறிவிப்போம் என்றும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ள தாதியர்கள்

கொவிட் சிகிச்சைகளில் ஈடுபட்டுவரும் தாதியர்களுக்கு உள்ள பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு வழங்காததன் காரணமான இன்று (31) காலை முதல் வேலைநிறுதத்தில் ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

தமது பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவித்த போதிலும் அதற்காக தீர்வை தராதமையினால் இந்த தீர்மானத்தை எடுத்ததாக குறித்த சங்கத்தின் தலைவர் எச்.எம்.எஸ். பி மெதிவத்த தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இன்று காலை முதல் நாளை (01) காலை வரையில் சுகயீன விடுமுறை பெற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

சீனா இலங்கைக்கு அதிக விலைக்கு தடுப்பூசியை வழங்குகின்றதா?

15 மில்லியன் Sinopharm தடுப்பூசியை கொள்வனவு செய்வதற்காக 150 மில்லியன் டொலர் ஒதுக்கீட்டிற்கு தமது நாட்டின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக, பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனாவின் விசேட உதவியாளர் ஷாஹ் அலி ஃபர்ஹத் கடந்த 27 ஆம் திகதி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

பங்களாதேஷுக்கு 10 டொலர்களுக்கு வழங்கும் தடுப்பூசியை இலங்கைக்கு 15 டொலர்களுக்கு வழங்கும் சீனாவின் செயற்பாடு வியப்பளிப்பதாக பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களைப் பகிர்ந்திருந்தனர்.

இந்நிலையில், பங்களாதேஷை விட கூடுதல் விலைக்கு Sinopharm தடுப்பூசி இலங்கைக்கு வழங்கப்படுவதாக வெளியான தகவல் தொடர்பில் இலங்கைக்கான சீன தூதரகம் நேற்று பிற்பகல் ட்விட்டரில் பதிவொன்றை இட்டது.

பங்களாதேஷ் மற்றும் Sinopharm குழுமத்திற்கு இடையிலான பெறுகை உடன்படிக்கை இன்னமும் இறுதியாகவில்லை என அதில் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இத்தகைய பொய் பிரசாரங்கள் விலை தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு தடையாக அமையலாம் எனவும் அந்த பதிவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதற்கு இலங்கை பிரஜை ஒருவர், சீனா ஒ​ரே தடுப்பூசியை வெவ்வேறு நாடுகளுக்கு மாறுபட்ட விலையில் விற்பனை செய்வதற்கான காரணம் என்னவென வினவியுள்ளார்.

இது அனைத்து ஔடத உற்பத்தி நிறுவனத்திற்கும் பொதுவான காரணியாகும் என சீன தூதரகம், இலங்கை பிரஜைக்கு பதிலளித்துள்ளது.

Posted in Uncategorized

தோட்ட தொழிலார்களுக்கு உடன் தடுப்பூசியை வழங்குங்கள்

அந்நிய செலவாணியை பெற்றுத் தருகின்ற பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கும் உடனடியாக தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுங்கள் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், தற்பொழுது நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவிவருகின்றது. குறிப்பாக பெருந்தோட்ட பகுதிகளிலும் ஆடைத் தொழிற்சாலைகளிலுமே தொற்றாளர்கள் அதிகமாக இனம் காணப்படுகின்றார்கள்.

தொற்றாளர்கள் பலர் தங்களுடைய வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதற்கு காரணம் தொற்றாளர்களை அனுமதிப்பதற்கான வசதிகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றது.

இவ்வாறான ஒரு நிலையில் ஆடைத் தொழிற்சாலைகளை மூட வேண்டிய ஒரு நிலைக்கு சுகாதார அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். பல பெருந்தோட்ட பகுதிகள் முழுமையான முடக்கத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தோட்ட தொழிலாளர்களும் ஆடைத் தொழிற்சாலைகளில் தொழில் புரிகின்ற தொழிலார்களும் தங்களுடைய வேலை வாய்ப்பை இழந்துள்ளதுடன் தங்களுடைய வருமானத்தையும் முழுமையாக இழந்துள்ளனர்.

தற்பொழுது எமது நாட்டில் பாரிய அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் தோட்ட தொழிலாளர்களும் ஆடைத் தொழிற்சாலையில் தொழில் புரிகின்றவர்களும் தொடர்ந்து தங்களுடைய கடமைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

எனவே இவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது. ஏனெனில் இவர்கள் தொடர்ச்சியாக தொழில் செய்வதன் மூலமே அவர்களுடைய பொருளாதாரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாக்க முடியும்.

ஆங்கிலேயரின் கண்டி ஒப்பந்தத்தை விட மிக மோசமானதொரு ஒப்பந்தமே துறைமுக நகர ஒப்பந்தம்!-ரெலோ செயலாளர் நாயகம் கருணாகரம்

அன்று ஆங்கிலேயருடன் கண்டியில் போடப்பட்ட ஒப்பந்தத்தை விட மிகவும் மோசமானதொரு ஒப்பந்தமே துறைமுக நகர ஒப்பந்தம் என்ற பெயரில் இலங்கை அரசினால் சீனாவுடன் செய்யப்பட்டிருக்கின்றது.

இந்தத் துறைமுக நகரம் எதிர்காலத்தில் சீனாவின் ஆதிக்கத்தில் இருக்கும் ஒரு குட்டித் தீவாக மிளிரப் போகின்றது. தமிழர்கள் தமது உரிமைக்காக எவ்வாறு போராடுகின்றோமோ அதே போன்று எதிர்காலத்தில் சிங்கள மக்களும் சீன ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடும் நிலை உருவாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் தெரிவித்தார்.

துறைமுக நகர சட்டமூல விடயம் தொடர்பில் நேற்றைய தினம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசு தனக்கு நட்பு நாடாக சீனா மட்டும் போதும் என்ற நிலையில் இருப்பதாகவே தெரிகின்றது. இந்தியா இந்த நாட்டின் அயல்நாடு கடந்த காலத்தில் பல வழிகளிலே இலங்கைக்கு உதவி செய்திருக்கின்றது. குறிப்பாக 1971ம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியால் ஏற்படுத்தப்பட்ட ஆயுதக் கிளர்ச்சியை அடக்குவதற்கும். அதே நேரத்தில் 2009 ம் ஆண்டு எங்களது ஆயுதப் போராட்டத்தை மௌனிக்கச் செய்வதற்கும் என பலவாறான உதவிகளை இந்தியா செய்திருக்கின்றது. இவற்றையெல்லாம் மறந்து இலங்கை அரசு செயற்படுகின்றது. நாட்டிற்குப் பணம் தேவைதான் பணம் ஒன்றை முக்கிய கருதுகோளாகக் கருதி இந்தியா உட்பட ஏனைய நாடுகளைத் தூரத்தில் வைத்திருப்பதென்பது நல்ல விடயமாக இல்லை.

ஏனெனில் இந்த அரசாங்கத்தின் கடந்த ஆட்சியின் போது அம்பாந்தோட்டை துறைமுகத்தினை சீனாவிற்கு 99 வருட குத்தகைக்குக் கொடுத்திருக்கின்றது. 99 வருடம் என்பது மூன்று சந்ததிகளின் காலம். அதேபோன்று வடக்கில் இந்தியாவிற்கு மிக அண்மையில் இருக்கும் மூன்று தீவுகளை சீனாவின் நிறுவனங்களுக்குக் கொடுத்திருக்கின்றார்கள். தற்போது இலங்கையில் ஒரு தீவை உருவாக்கி அந்தத் தீவுக்குள்ளே சீனாவினால் எதுவும் செய்யலாம் என்கின்ற அடிப்படையில் கொழும்புத் துறைமுக நககரத்தைத் தாரைவார்த்திருக்கின்றார்கள். ஆனால் இந்தியாவிற்குத் ஆதரவதாக ஒப்பந்தம் செய்த கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைய ஒப்பந்தத்தை இல்லாமல் செய்து. இந்தியாவை வெறுப்பெற்றியிருக்கின்றது.

தூரத்துத் தண்ணீர் ஆபத்திற்குதவாது என்கின்ற முதுமொழிக்கேற்ப எமக்கு அண்டையில் இருக்கும் நாடுதான் ஆபத்திற்கு எமக்கு உதவ வரும் என்பதை கொழும்பு கடற்பரப்பில் தற்போது எரிந்துகொண்டிருக்கும் கப்பலின் தீயை அணைப்பதற்கு இந்தியா மேற்கொள்ளும் உதவியில் இருந்து இலங்கை உணர்ந்து கொள்ள வேண்டும். எதிர்காலத்திலாவது இலங்கைக அரசு இவற்றை உணர்ந்து செயற்பட வேண்டும்.

சீனாவைப் பொருத்தவரையில் தனது ஆதிக்கத்தை இந்த நாட்டிற்குள் கொண்டு வர வேண்டும். இந்தியாவிற்கு மிக அண்மையில் இருக்கும் எமது நாட்டில் தனது காலைப் பதித்து இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக இருக்க வேண்டும் என்பதற்கும் மேலாக தங்களது கலை, கலாச்சாரங்களை இங்கு கொண்டு வருவதில் உன்னிப்பாக இருக்கின்றார்கள். இலங்கைக்கு சீனாவால் முதன் முதலாக அன்பளிப்பு செய்யப்பட்ட பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சீன மொழி பொறிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இன்று கொழும்பு மற்றும் நாட்டின் பல பிரதேசங்களிலே அவர்களால் மேற்கொள்ளப்படும் பல செயற்பாடுகளில் சீன மொழியில் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

இந்த நாட்டில் தமிழ் மக்கள் கடந்த காலங்களிலே அடக்கி ஒடுக்கப்படடு அவர்களது கலை, கலாசாரம் மழுங்கடிக்கப்பட்டது என்பதற்காக தனி நாடு கேட்டு தமிழர்கள் நாங்கள் போராடினோம். இந்த ஒரு நிலை எதிர்காலத்தில் சிங்கள மக்களினால் சீன ஆதிக்கத்திற்கு எதிராகப் பேராடக் கூடிய ஒரு சூழ்நிலை உருவாகும் என்பதையே எமது அனுபவம் சொல்லுகின்றது. ஒரு காலத்தில் ஆங்கிலேயரின் வருகையும் இவ்வாறுதான் இருந்தது. அதன் பின்னர் அவர்களின் ஆதிக்கம் அதிகரித்த பின் நாங்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடினோம்.

அன்று ஆங்கிலேயருடன் கண்டியில் போடப்பட்ட ஒப்பந்தத்தை விட மிகவும் மோசமானதொரு ஒப்பந்தமே துறைமுக நகர ஒப்பந்தம் என்ற பெயரில் இலங்கை அரசினால் சீனாவுடன் செய்யப்பட்டிருக்கின்றது. இந்தத் துறைமுக நகரம் எதிர்காலத்தில் சீனாவின் ஆதிக்கத்தில் இருக்கும் ஒரு குட்டித் தீவாக மிளிரப் போகின்றது. அங்கிருந்து சீனா இந்த நாட்டைத் தனது காலணித்துவ நாடாக மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளும். அந்த நேரம் இந்த நாட்டின் பெரும்பான்மை இன மக்கள் அதற்கெதிராகக் கிளர்ந்தெழுந்து போராடுவார்கள் என்பதே திண்ணம் என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

இலங்கை பாதுகாப்பானது அல்ல – பிரித்தானிய நீதி மன்றம்

இலங்கையில் கைது செய்யப்படுவது மற்றும் துன்புறுத்தப்படுவது தொடர்வதாகவும், அது பாதுகாப்பானது அல்ல எனவும் பிரித்தானியாவின் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் புகலிடத் தஞ்சம் கோரிய இரு தமிழ் மக்களை இலங்கைக்கு மீண்டும் அனுப்பினால் அவர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள் என பிரித்தானியாவின் உள்த்துறை அமைச்சு தெரிவித்த கருத்துக்கு எதிராக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.

இலங்கையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலும் 178 பேர் இலங்கை அரச படையினரால் துன்புறுத்தப்பட்டதாக உண்மைக்கும், நீதிக்குமான அனைத்துலக செயல் திட்ட அமைப்பு ஆவணங்களை பதிவு செய்துள்ளது. இது தவிர 22 பேர் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு விசாரணைப் பிரிவில் தாம் துன்புறுத்தப்பட்டதான முறைப்பாடுகளை டேற்கொண்டுள்ளனர்.

கோத்தபாயா ராஜபக்ச அரச தலைவராக பதவியேற்ற பின்னர் 5 வழங்குகள் பதவாகியுள்ளதாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

யாழில் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் இன்றுமுதல் ஆரம்பம்

யாழ் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாடு நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றைய தினம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பமாகியது.

காலை 8 மணிக்கு தொடக்கம் யாழ்ப்பாண மாவட்டத்தில் 12 இடங்களில் குறித்த தடுப்பு ஊசி ஏற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 61 கிராம சேவகர் பிரிவுகளில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடானது முதற்கட்டமாக முன்னெடுக்கப்படுகிறது.

அதாவது, யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பகுதியில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் குறித்த தடுப்பூசி வழங்குவதற்கு வடக்கு மாகாண சுகாதார திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இன்று காலையில் இருந்து அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் முன்வந்து தமக்குரிய தடுப்பூசியினை பெற்றுக் கொள்கின்றார்கள்.

கொவிட் – 19 தடுப்பூசி மருந்து வழங்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு முதற் கட்டமாக 50 ஆயிரம் சீனத் தயாரிப்பான சைனோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கிராம அலுவலகர் பிரிவு ரீதியாக இனங்காணப்பட்ட கொவிட் – 19 நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் சனத்தொகையின் அடிப்படையில் கணிப்பிடப்பட்டு 11 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை சேர்ந்த 61 கிராம அலுவலகர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

தெரிவு செய்யப்பட்ட மேற்படி கிராம அலுவலகர் பிரிவுகளில் இன்று காலை முதல் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி வழங்கப்படும் நிலையங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.

மேற்படி கிராம அலுவலகர் பிரிவுகளில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார் தவிர்ந்த அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது .

Posted in Uncategorized

யாழில் தடுப்பூசி வழங்கும் நிலையங்களை அதிகரியுங்கள் – நாமல் ராஜபக்ச

யாழ் மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச பொதுமக்களுக்கான COVID -19 தடுப்பூசி வழங்கப்படும் நிலையங்களுக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.

அந்த வகையில் யாழ் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கோவிட் -19 தடுப்பூசி செலுத்தும் நிலையமான அரியாலை பிரப்பன்குளம் மகாமாரியம்மன் திருமண மண்டபத்திற்கும், கைதடி ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தில் தடுப்பூசி வழங்கும் நிலையத்திற்கும் கோப்பாய் ஆதார வைத்தியசாலை தடுப்பூசி வழங்கும் நிலையம், பருத்தித்துறை கரவெட்டி பகுதிகளில் தடுப்பூசி நிலையங்களுக்கும் விஜயத்தினை மேற்கொண்டு தடுப்பூசி வழங்கல் தொடர்பில் சுகாதார பிரிவினருடன் கலந்துரையாடினார்.

தடுப்பூசி நிலையங்களை பார்வையிட்ட பின் சுகாதார அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது யாழ்ப்பாணம் மட்டுமல்ல கிளிநொச்சி வவுனியா முல்லைத்தீவு ஆகிய இடங்களிலும் மேற்படி தடுப்பூசி அடுத்த கட்டம் வழங்கப்படவுள்ள தன் காரணமாக முதல் கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசினால் வழங்கப்பட்ட இந்தத் தடுப்பூசிகளைப் விரைவாக மக்களுக்கு விநியோகிக்கும் செயற்பாட்டினை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்

அத்தோடு இந்த முதல்கட்ட தடுப்பூசியினை விரைவாக வழங்காத விடத்து அடுத்த இரண்டாம் கட்ட தடுப்பூசியினை பெற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்படும் எனவே உடனடியாக தடுப்பூசி வழங்கும் நிலையங்களினை அதிகரித்து மிகக் குறைந்த நாட்களில் இந்த 50,000 தடுப்பூசியினை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்

பொலீஸ் ராணுவத்தினரின் உதவியுடன் மேலும் பல தடுப்பூசி வழங்கும் நிலையங்களை விஸ்தரித்து விரைவில் அரசினால் வழங்கப்பட்டுள்ள முதல்கட்ட 50,000 தடுப்பூசிகளை மக்களுக்கு விநியோகிக்க மாறு சுகாதார பிரிவினருக்கு அறிவுறுத்தினார்

அமைச்சரின் விஜயத்தின் போது வடமாகாண ஆளுநர் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மற்றும் சுகாதார உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Posted in Uncategorized

தமிழ் மக்கள் அரசாங்கத்திடம் கையேந்தாத வகையில் உதவுவதற்கு புலம்பெயர் உறவுகள் முன்வர வேண்டும்- ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்

கோவிட்டால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் அரசாங்கத்திடம் கையேந்தாத வகையில் உதவுவதற்குப் புலம்பெயர் உறவுகள் முன்வர வேண்டும் எனத் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள ரெலோ அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் சரியான திட்டமிடல் இன்மையால் நாடு மோசமான நிலையை அடைந்துள்ளது. வடக்கு – கிழக்கு பகுதியில் எமது மக்களுக்குத் தடுப்பு மருந்து என்பது இன்னும் ஏற்றப்படவில்லை. கோவிட் தொற்றை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றால் மக்களை நடமாடாமல் செய்வது மட்டுமல்ல.

கோவிட்டை கட்டுப்படுத்தக் கூடிய தடுப்பு மருந்தைச் செலுத்தி உலக நாடுகள் வெற்றி கண்டுள்ளது.ஆனால் இலங்கையில் சரியாகத் திட்டமிடப்படவில்லை. யாராவது இலவசமாகத் தடுப்பு மருந்தைக் கொடுத்தால் அரசாங்கம் வாங்குகிறது. இந்தியா, சீனா, ரஸ்யா கொடுத்தால் வாங்குகிறார்கள்.

இலங்கை அரசாங்கம் கோவிட் தடுப்பு மருந்தை வாங்கப் போவதாகச் சொல்கிறது. ஆனால் வாங்குவதற்கான திட்டத்தை, நிதி ஒதுக்கீட்டை இதுவரை செய்யவில்லை. அரசாங்கம் மிகவும் கவலையீனமாக இருப்பதைக் காண முடிகிறது. சும்மா கொடுத்தால் வாங்குகின்ற நிலைமையில் இருக்கிறது.

இது இந்த நாட்டு மக்களைக் காக்கும் திட்டமா என்பது எனது கேள்வி? சீனா கொடுத்த தடுப்பு மருந்தைத் தென்பகுதியில் வழங்குகிறார்கள். வடக்கில் வழங்கவில்லை. வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் என்பவற்றிலும் தொற்றுக்கள் அதிகரித்துள்ளது. ஏன் தமிழ் பகுதிகளில் இதனை வழங்கவில்லை.

இதை நான் அரசியலாக்க விரும்பவில்லை. ஆனால் தமிழ், சிங்களம் என்பதை விடுத்து ஒட்டுமொத்த மக்கள் மீதும் இந்த அரசாங்கத்திற்கு அக்கறையில்லை. தற்போது 50 ஆயிரம் தடுப்பூசிகள் யாழ்ப்பாணம் வருவதாகக் கூறுகிறார்கள். அது போதுமா என்பது தான் எனது கேள்வி? இந்தியா 6 இலட்சம் தடுப்பூசிகளை வழங்கினார்கள்.

அது திட்டமிடப்படாத வகையில் 6 இலட்சம் ஊசிகளையும் போட்டு முடித்து விட்டார்கள். முதல் எந்த ஊசியைப் போடுகிறார்களோ இரண்டாவதும் அதையே போட வேண்டும். இரண்டாவது ஊசி இந்தியா கொடுக்கும் மட்டும் 6 இலட்சம் ஊசி போட்டவர்கள் பார்த்துக் கொண்டு இருப்பதா? ஆகவே இந்த நாட்டு மக்களின் இறப்பைக் குறைக்க வேண்டும் என இந்த அரசாங்கம் நினைக்கவில்லையா?

கோவிட்டை கட்டுப்படுத்த பயணத்தடையை போடுகின்ற அரசு, பாடசாலைகளை மூடுகின்ற அரசு, வர்த்தக நிலையங்களை மூடுகின்ற அரசு, வீடுகளுக்குள்ளேயே இருங்கள் என்று கூறுகின்ற அரசு உலக நாடுகள் வெற்றி கண்ட தடுப்பு மருந்தைப் போட ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இலவசமாகக் கொடுக்கும் போது வாங்கும் மெத்தனப் போக்கைக் கடைப்பிடிக்கிறது.

இது எமது மக்களின் உயிர்கள் மேல் பந்தயம் வைக்கும் செயற்பாடாகவே தெரிகிறது. இது கண்டிக்கப்பட வேண்டியது. ஆடைத் தொழிற்சாலைகள் தொடர்பாகப் பல பிரச்சனைகள் எழுந்துள்ளன. பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது. வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. கூட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

ஆடைத் தொழிற்சாலையில் வேலையை நிறுத்தினால் அந்த குடும்பங்கள் கஸ்ரப்படும் என்பது உண்மை. இருந்தாலும் ஆடைத் தொழிற்சாலையில் ஏற்படும் பரவல் அந்த குடும்பங்களையும் பதிக்கிறது. எனவே இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். ஆடைத் தொழிற்சாலைகள் நடுவண் அரசின் கீழ் உள்ளது. இந்த விடயத்தில் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.

கொழும்பில் வாசுதேவ நாணயக்கார அவர்கள் செய்தியாளர் மாநாட்டில் சிங்களம், ஆங்கிலம், சைனிஸ் மொழி இருப்பதாகவும், சைனிஸ் மொழியை எல்லோரும் கற்க வேண்டும் என்னும் நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகப் பேசுகிறார். அவர் தமிழ் மொழியைப் பற்றிக் கதைக்கவில்லை. அது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும்.

இலங்கையில் தமிழ் மொழி ஒழிக்கப்படுகின்ற திட்டம் நடைபெறுகிறது. தமிழ் மக்களின் ஒட்டுமொத்த வாழ்வுரிமையையும் சிதைக்கும் நிகழ்வை அரசாங்கம் உருவாக்கி வருகிறது. நில அபகரிப்பு, மகாவலி எல் வலயம், பறவைகள் சரணாலயம் எனத் தமிழர்களின் வரலாற்றையும் பூர்வீகத்தையும் சிதைக்கும் செயற்பாட்டை இந்த நிலையிலும் செய்வது கண்டனத்திற்குரியது.

சீனாவிற்குக் கொடுக்கும் கௌரவம் தமிழ் இனம், மலைக மக்கள், முஸ்லிம் மக்கள் ஆகியோருக்கு வழங்கப்படவில்லை. அவர்களது அடையாளத்தை அழிக்கும் மோசமான செயற்பாட்டைச் செய்கிறது. சிங்கள மக்களைத் திருப்திப்படுத்துவதற்காக மீள் உருவாக்கம் என்னும் பெயரில் பத்திரிகையாளர் உட்படப் பலரைப் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் திட்டமிட்டு கைது செய்து வருகின்றார்கள்.

வடக்கு – கிழக்கில் மூன்று தேசிய இனங்களையும் அடக்கி ஒடுக்குவது அரசின் திட்டமாக உள்ளது. இலங்கையில் வாழும் அனைத்து இனங்களையும் சரி சமனாக நடத்த வேண்டும் என்பது எனது கோரிக்கை. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உடனடி தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

புலம்பெயர் தேசங்களில் வாழும் எமக்கு ஒத்தாசை வழங்குகின்ற உறவுகள் வடக்கு – கிழக்கு மக்கள் கோவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசாங்கத்திடம் கையேந்தாத வகையில், அவர்கள் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களுக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனங்களை விடுத்து பி.சி.ஆர் உபகரணங்களை கொள்வனவு செய்யுங்கள் – ரெலோ செயலாளர் நாயகம்கோவிந்தன் கருணாகரம்

தற்போதைய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனம் என்பது முக்கிய தேவையல்ல. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வசதிகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மாறாக அதற்குச் செலவு செய்யும் பணத்தினை இந்த கோவிட் தொற்றை இல்லாமல் ஒழிப்பதற்கான உபகரணங்களைக் கொள்வனவு செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன கொள்வனவு சம்மந்தமாக வெளியாகிய செய்திகள் தொடர்பில் இன்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்சொன்னவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மிகவும் கவலைக்கிடமானதும், துரதிஸ்டவசமானதுமான நிலையில் இலங்கை மாறிக் கொண்டு வருகின்றது. கோவிட்டின் வேகம் நகர்ப்புறங்களிலிருந்து கிராமங்கள் வரை இன்று பரவியிருக்கின்றது. இந்த நிலையில் கோவிட்டை தடுப்பதற்காகவும், நிறுத்துவதற்காக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மக்களுக்கோ, மக்கள் பிரதிநிதிகளுக்கோ விரும்பத்தக்கதோ அல்லது ஒரு தீர்வை கொடுக்கக் கூடியதாகவோ இல்லை என்றே கூறவேண்டும்.

ஆரம்பத்திலிருந்தே இந்தக் கோவிட்டிற்கான தடுப்பூசிகள் உலகம் முழுவதும் பாவிக்கப்பட்டிருக்கும் போது இலங்கையில் கடந்த ஜனவரி 09ம் திகதிதான் முதலாவது தடுப்பூசியைக் கொடுக்கத் தொடங்கியிருந்தார்கள். அப்போதுகூட இந்திய அரசு இலங்கைக்கு அன்பளிப்பாக ஆறு இலட்சம் மக்களுக்குக் கொடுக்கக்கூடிய கோவிட் சீல்ட் மருந்துவகைகள் பன்னிரண்டு இலட்சத்தினை வழங்கியிருந்தார்கள்.

ஆனால் இந்த அரசு முன்னெச்சரிக்கை இல்லாமல் முதலாவது தடுப்பூசியை ஒன்பது இலட்சம் பேருக்குக் கொடுத்ததன் காரணமாக இரண்டாவது தடுப்பூசி கொடுப்பதற்கு அரசாங்கம் திண்டாடியதையே பார்க்கக்கூடியதாக இருந்தது. அதனைத் தொடர்ந்து திண்டாட்டத்தினைச் சமாளிப்பதற்காகத் தடுப்பூசி பாவிக்கப்படாத நாடுகளிலிருந்து தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுவதாக உரிய அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றார்கள்.

அதற்கும் அப்பால் வேறு வகை தடுப்பூசிகளை வழங்கலாம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றார்கள். ஆனால் சில மருத்துவ அதிகாரிகள் வெவ்வேறு வகையான தடுப்பூசிகளை வழங்க முடியாது என்று தெரிவிக்கின்றார்கள். இந்த அடிப்படையில் முதலாவது தடுப்பூசி பெற்றவர்கள் நிர்க்கதியான நிலையில் இருப்பதனைக் காணமுடிகின்றது.

இவ்வாறான செயற்பாடுகள் இந்த அரசாங்கத்தின் முன்னெச்சரிக்கை இல்லாத தான்தோன்றித்தனமான நடவடிக்கையாகவே இருக்கின்றது. அதற்கு மேலாக தற்போது நாட்டில் பல மாவட்டங்களைப் பொருத்தமட்டில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொருத்தமட்டில் கோவிட் தொற்று என்பது கிராமங்கள் வரை சென்றிருக்கின்றது.

இதற்கு முக்கிய காரணம் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தொற்ற இனங்காணப்பட்டால் அந்தப் பிரதேசத்தின் அனைத்து மக்களையும் பரிசோதிக்கக் கூடிய வசதிகள் இங்கு குறைவாக இருக்கின்றது. பி.சி.ஆர் இயந்திரம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மாத்திரமே இருக்கின்றது. அதுவும் போதாமல் இருக்கிறது.

ஆனாலும் மாவட்டத்திலுள்ள தனவந்தர்களும், வர்த்தகர்களும் முன்வந்து இதற்கான உதவிகளைச் செய்து வருவதற்கு மிகவும் பாராட்டத்தக்க விடயம். மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நானும் மக்கள் சார்பில் அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இருப்பினும் அரசும் இந்த விடயங்களில் கூடிய அக்கறை செலுத்த வேண்டும். ஆனால் அரசாங்கமானது தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் இறக்குமதி செய்வது சம்மந்தமாகவும் மேலும் பல வாகனங்களை வேறு தேவைகளுக்காக இறக்குமதி செய்வது தொடர்பிலும் அமைச்சரவையூடாக முடிவெடுத்திருப்பதாகவும், அதன் பின் முடிவு வாபஸ் பெற்றிருப்பதாகவும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

தற்போதைய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனம் என்பது முக்கிய தேவையானது அல்ல. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வசதிகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மாறாக அதற்குச் செலவு செய்யும் பணத்தினை இந்தக் கோவிட் தொற்றை இல்லாமல் ஒழிப்பதற்கான உபகரணங்களைக் கொள்வனவு செய்து அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகித்து அந்தந்த மாவட்ட மக்கள் பயன்பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாக இருக்கின்றது.

எமது மட்டக்களப்பு மாவட்டத்திலே தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. பொலிஸார் மற்றும் பொதுமக்கள் என ஒரு நாளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டு வருகின்றார்கள்.

அதேபோன்று கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களில் இயங்கி வரும் ஆடைத் தொழிற்சாலைகளிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். ஆடைத்தொழிற்சாலை என்பது எமது பிரதேசங்களுக்கு மிகத் தேவையானவை. அந்த அந்த மாவட்டங்களிலே வாழும் பல ஏழைக் குடும்பங்கள் அந்த ஆடைத் தொழிற்சாலைகளை நம்பித்தான் வாழுகின்றார்கள்.

இருப்பினும் தொற்றாளர்கள் அதனூடாக வரும் போது மேலும் பல கிராமங்கள் தொற்றுள்ள கிராமங்களாக மாறக் கூடிய சூழல் நிலவுகின்றது. இது தொடர்பில் மிகவும் அவதானத்துடன் ஆடைத்தொழிற்சாலை நிருவாகமும், அரசாங்கமும், சுகாதாரப் பிரிவினரும் இணைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.