ஐரோப்பிய ஒன்றியத்தின் சீனா மீதான தடையும் கொழும்பு போட்சிற்றிச் சட்டமும்

2004 ஆம் ஆண்டு பாக்கிஸ்தான் நாட்டை கூட்டாளி நாடென காங்கிரஸில் அறிவித்த அமெரிக்கா, இன்று பாக்கிஸ்தான் நாட்டோடு இருந்த அந்தக் கூட்டாணி உறவை முறித்துக் கொண்டது. இதுவரை அமெரிக்கக் காங்கிரஸில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. அதற்கும் காரணம் உண்டு. இந்தோ- பசுபிக் பாதுகாப்பு விவகாரம் மற்றும் பொருளாதாச் செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்களில் இந்தியாவோடு மேலும் சில இணக்கப்பாடுகளை ஏற்படுத்த வேண்டியதொரு தேவையுள்ளது.

பாக்கிஸ்தான் சீனாவோடு அதிகளவில் உறவாடுவதே அந்த நாட்டுடனான கூட்டாளி உறவை முறித்துக்கொள்ள அமெரிக்கா முற்பட்டதெனக் கூறினாலும், இந்தியாவைத் தம்வசப்படுத்தும் நோக்கிலும் அந்தக் கூட்டாளி உறவை முறித்துக்கொண்டதெனலாம்.

ஆனாலும் பாக்கிஸ்தான் அமெரிக்காவோடு கூட்டாளி உறவை வைத்திருந்த நாட்களைவிடவும் சீனாவுடன் உறவை மேற்படுத்தியதால் உள்நாட்டு அபிவிருத்தி மற்றும் பொருளாதார நலன்களில் அதிகளவு நன்மை பெற்றதாகவே பாக்கிஸ்தான் உணருகின்றது. ஆனால் இந்திய ஊடகங்கள் பாக்கிஸ்தான் சீனா வழங்கிய கடனில் மூழ்கியுள்ளதாகக் கிண்டலாகக் கூறுகின்றன.

பங்களாதேஸ், மாலைதீவு போன்ற அயல் நாடுகளும் சீனா வழங்கிய கடனில் மூழ்கியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் விமர்சிக்கின்றன. ஆனால் மாலைதீவின் புதிய ஜனாதிபதி இப்ராகீம் இந்திய அரடன் கூடுதல் உறவைப் பேணி வருகின்றார் என்பது வேறு கதை.

இவ்வாறனதொரு நிலையிலேதான் தைவான் நாட்டைச் சீன இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. அத்துடன் சீனாவின் பிரதான துறைமுகங்களான டியான்ஜின், சென்ஜென், லியாயுன்காங், ஜியான்ஜாங் ஆகிய நான்கு துறைமுகங்களை, நேபாளம் அரசின் பாவனைக்குச் சீன அரசு கடந்த மாதம் முதல் அதிகாரபூர்வமதாகத் திறந்துவிட்டுள்ளது.

சர்வதேச வர்த்தகத்துக்கு, இந்தியாவின் துறைமுகங்களையே நேபாள அரசு தங்கியிருந்தவொரு நிலையிலேதான், கடந்த ஆண்டு தனது துறைமுகங்களைச் சீனா வழங்கத் தீர்மானித்துக் கடந்த மாதம் அனுமதி வழங்கியுள்ளது. அதுமாத்திரமல்ல, நேபாள உயர் கல்லூரிகளில் சீன மொழியை கற்பிக்கும் ஆசிரியர்களுக்குச் சம்பளம் வழங்குவதாகவும், சீனா அறிவித்துள்ளது.

ஆகவே அயல்நாடுகளின் பிடியில் இருந்து இந்தியாவை ஒதுக்குவதற்கே சீனா இத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது என்று கூறலாம். 2009 ஆம் ஆண்டு மே மாதம் ஈழப்போர் இல்லாதொழிக்கப்பட்ட நிலையில், இலங்கையை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த சீனா, தற்போது இந்தியாவின் அயல்நாடுகளான பாக்கிஸ்தான், நேபாளம், பங்களாதேஸ் ஆகிய நாடுகளிலும் பொருளாதார அபிவித்தி மற்றும் கடன் உதவிகளை வழங்கி இலங்கைக்குச் சமாந்தரமான ஆதிக்கத்தை நிலை நிறுத்தி வருகின்றது.

இதன் மூலம் இந்துமா சமூத்திரத்தில் தன்னையும் ஒரு உறுப்பு நாடாகச் செயற்கையாக வடிவமைத்துள்ள சீனா, ஈழப்போரின் பின்னரானதொரு சூழலிலேயே இலங்கையைத் தளமாகக் கொண்டு இந்த அணுகுமுறையை இலகுவாகக் கையாளுகின்றது.

இலங்கைக்கு அடுத்தபடியாக நேபாள அரசைச் சீனா தனக்குரிய தளமாக மாற்றி வருகின்றதெனலாம். குறிப்பாக இந்த நிதியாண்டுக்கான முதல் காலாண்டில், நேபாளத்துக்கு வந்த நேரடி அன்னிய முதலீட்டில், 90 சதவீதம் சீனாவுடையது. திபெத் எல்லைப்பகுதியான கீரங்கிலிருந்து, நேபாள தலைநகர் காத்மாண்டுக்கு ரயில் பாலம் அமைக்கும் திட்டம் உட்பட பல திட்டங்களில் சீனா முதலீடு செய்துள்ளது. உள்கட்டமைப்பு பணிகளை நிறைவேற்ற, நேபாளத்துக்கு சீனா, தேவையானளவு கடன் வழங்கியுள்ளது.

இதனால் இந்தியாவின் பிடியில் இருந்தும் நேபாளம் மெல்ல மெல்ல விலகும் ஆபத்துள்ளது. இலங்கையில் கொழும்பு போட் சிற்றி எனப்படும் கொழும்பு சர்வதேச வர்த்தக நிதி நகரத்தின் நிர்ணமானப் பணிகள் 55 சதவீதம் பூர்த்தியடைந்த நிலையில், இந்தியாவின் பிடியில் இருந்த நேபாளத்தில் தனது வர்த்தகச் செயற்பாடுகளை சீனா ஆரம்பித்துள்ளதெனலாம்.

சீனாவின் இந்த நகர்வுகளோடு கொழும்பு போட் சிற்றித் திட்டமும் நிறைவேறி வரும் நிலையில், கடந்த மாதம் ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் கனடா, பிரித்தானிய ஆகிய நாடுககள் சீனாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. சுமார் 25.9 மில்லியன் மக்கள் வாழும் சீனாவின் சிகின்ஜான்ங் (Xinjiang) மாநிலத்தில் முஸ்லிம்கள் மற்றும் பிற மதத்தவர்களுக்கு எதிராக சீனா மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்தே தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.

சிகின்ஜான்ங் மாநிலத்தின் தலைநகரான யுனெகவுர் (Uyghur) பிரதேசத்தில் மாத்திரம் முஸ்லிம்கள் உள்ளிட்ட 3.5 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். அங்குதான் சீனாவின் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன. இதனைக் காரணம் காண்பித்துத் தடை விதிக்கப்பட்டாலும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா ஆகிய நாடுகளைக் கடந்து சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக சீன அரசு பதலடியாக அறிவித்துள்ளது.

சீனாவுடன் ஐரோப்பாவுக்கு வலுவான நிலையான தொடர்பு தேவை என்று ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் மாஸ் உள்ளிட்ட சில இராஜதந்திரிகளும் வலியுறுத்தியுள்ளனர். சீனா, ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டாளர், போட்டியாளர் மற்றும் அமைப்பு ரீதியான போட்டியாளரும்கூட என அமைச்சர் மாஸ் விவரித்துள்ளார்.

ஆகவே இது சீனாவுக்கு ஆதரவைக் கொடுத்திருக்கிறது. பிரித்தானியா அமெரிக்pகாவுடன் சேர்ந்து தடையை விதித்திருந்தாலும்கூட, இந்த நிதியாண்டில் பிரித்தானியாவின் மிகப் பெரிய இறக்குமதியாளராக சீனா மாறியுள்ளது.

2018 ஆம் ஆண்டில் இருந்து இந்த ஆண்டின்; முதல் காலாண்டு வரை சீனாவில் இருந்து மேற்கொள்ளப்பட்ட இறக்குமதி 66 வீதத்தால் உயர்வடைந்து 16. 9 பில்லியன் பவுண்ஸ்சாகப் பதிவாகியுள்ளதாகப் பிரித்தானிய முதலீட்டுச் சபை கூறுகின்றது.

இந்தவொரு நிலையில் அமெரிக்காவுடன் சேர்ந்து சீனாவுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்தமையினால் பிரித்தானிய மேலும் சிக்கல்களையே எதிர்நோக்கும் நிலை உருவாகலாம். கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் சீனாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்காதா அமெரிக்கா. பிரித்தானியா கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம். சீனாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் மனித உரிமை மீறல்களைக் காரணம்கூறி ஏன் தடை விதித்தது என்ற கேள்விகள் இந்த இடத்தில் எழாமலில்லை.

சீனாவை மையப்படுத்தி 15 நாடுகளை உள்ளடக்கிய பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக் கட்டமைப்பு ஒப்பந்தம் (Regional Comprehensive Economic Partnership- RCEP) கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கைச்சாத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தம் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. அமெரிக்க நட்பு நாடுகளான அவுஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 15 நாடுகளும் சேர்ந்து இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் சர்வதேச வர்த்தகச் செயற்பாடுகளில் ஈடுபட்டால், உலகப் பொருளாதார வருமானத்தில் மூன்றில் இரண்டு பங்கு வருமானத்தை இந்த நாடுகள் பெறும் நன்மை உருவாகும்.

இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட அமெரிக்க நட்பு நாடுகள் கொழும்பு போட் சிற்றியில் முதலீடுகளைச் செய்யக்கூடிய ஏற்பாடுகளும் உண்டு. குறிப்பாக இந்தோ- பசுபிக் பிராந்திய பாதுகாப்புக்காக அமெரிக்காவினால் இந்தியாவைத் தலைமையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட “குவாட்“ அமைப்பில் அங்கம் வகிக்கும் அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கொழும்பு போட் சிற்றியில் முதலீடுகளைச் செய்யக்கூடிய வாய்ப்புகளும் இந்த நாடுகளோடு பிரித்தானியாவும் இணையக்கூடிய சந்தர்ப்பங்களும் இருக்கலாம்.

2012 ஆம் ஆண்டு ஆசிய பசுபிக் கூட்டாண்மை ஒப்பந்தம் (Trans Pacific Partnership-TPP) கைச்சாத்திடப்பட்டு 2017ஆம் ஆண்டு செயலிழந்தால், அவுஸ்திரேலியா மீது ஆத்திரமடைந்த சீனா, அவுஸ்திரேலியக் கப்பல்களுக்குத் தடைவித்தது. மறைமுகமாக பொருளாதாரத் தடைகளையும் ஏற்படுத்தியது. இந்தவொரு நிலையிலேயே சீனாவை மையப்படுத்திய, RCEP எனப்படும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள அவுஸ்திரேலியா, எந்தளவு தூரம் குவாட் கடற்படைப் படைப் பயிற்சியிலும் அதன் பின்னரான இந்தோ- பசுபிக் பாதுகாப்புச் செயற்பாடுகளிலும் அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் என்ற சந்தேகங்களும் உண்டு.

இதேபோன்று சீனாவிடம் இருந்து அதிகளவு பொருட்களைக் கொள்வனவு செய்யும் பிரித்தானிய, அமெரிக்காவுடன் சேர்ந்து சீனாவுக்குத் தடை வித்திருந்தாலும், சீனாவோடு மீண்டும் கூட்டுச் சேரும் நிலையும் வரலாம். ஏனெனில் அந்தளவுக்கு சர்வதேசச் சந்தைகளில் சீன அதிகக்கம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையும் மற்றும் நேபாளம் உள்ளிட்ட இந்தியாவின் அயல் நாடுகளும் தற்போது சீனாவின் நேரடிக்கட்டுப்பாட்டில் வர ஆரம்பித்துள்ளமையும் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, கனடா, பிரித்தானியா ஆகிய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகள் இல்லையெனலாம்.

கொழும்பு போட் சிற்றிக்கான தனி ஆதி்க்கத்துக்கான பொருளாதார ஆணைக்குழுச் சட்டமூலம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேறுவது உறுதி என்பதை அறிந்தே இந்தத் தடை விதிக்கப்பட்டது என்ற முடிவுக்கும் வரலாம்.

ஏனெனில் சீனாவில் முஸ்லிம்கள் மற்றும் பிற சமயத்தவர்களுக்கு எதிராக நடத்தப்படுகின்ற மனித உரிமை மீறல்கள் என்பது கடந்த முப்பது ஆண்டுகளாக நடைபெறுகின்றது. உண்மையில் தடைக்காண காரணம் அதுவாகவே இருந்தால், ஈழத்தமிழர்கள் கோருகின்ற இன அழிப்பை ஏற்று அல்லது குறைந்தபட்சம் போர்க்குற்றத்துக்கான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி இந்த நாடுகள் ஏன் இலங்கைக்குத் தடைகள் விதிக்கக்கூடிய எச்சரிக்கை விடுக்வில்லை என்ற கேள்விகளும் எழாமலில்லை.

ஏனெனில் இன்று இலங்கைதான் ஆசியப்பிராந்தியத்தில் சீனாவின் முக்கிய புள்ளியாக மாறிவருகின்றது. ஆகவே சீனாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட இந்தத் தடை என்பது RCEP எனப்படும் ஒப்பந்தத்தை மையமாகக் கொண்டு கொழும்பு போட் சிற்றியில் ஐரோப்பிய நாடுகளையும் கூட்டிணைக்கின்றதொரு பொருளாதார நகர்வுகளைக் குறைந்தபட்சம் தடுக்கும் நோக்கமாகவும் இருக்கலாம். குறித்த சட்டமூலத்தின் பிரகாரம் ஆணைக்குழுவில் அங்கம் வகுக்கவுள்ள எட்டு உறுப்பினர்களும் சீனர்கள்;.

இலங்கையர்கள் எவரும் அதில் உறுப்பினராக இருக்கவும் முடியாது. ஆகவே ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கைக்கு மாறாக இலங்கையின் இறைமை காக்கப்பட வேண்டுமென உரக்கச் சத்தமிட்டுச் சிங்கள ஆட்சியாளர்களை நியாப்படுத்தி வரும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள், இலங்கையின் இறைமை சீனாவிடம் பங்கிடப்படுவதற்குக் காரணமாக இருந்த அந்தச் சட்டமூலம் தொடர்பாக இதுவரை அதிகாரபூர்வமதாக வாய்திறக்கவேயில்லை.

சீனாவில் முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அதிகளவு அக்கறையை வெளிப்படுத்தியது போன்று. சீனாவின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருக்கின்ற இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை மறுக்கப்படுகின்றமை ஏன் இந்த நாடுகளுக்குத் தெரியாமல் போனது? உண்மைப் பின்னணிதான் என்ன?

அ.நிக்ஸன்-

Posted in Uncategorized

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 80 ஆயிரத்தை கடந்தது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 80 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்நிலையில், இன்று (29.05.2020) மேலும் 2,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,80,593 உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில், 30,839 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2,029 பேர் குணமடைந்ததையடுத்து மொத்த எண்ணிக்கை 1,48,391 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை,கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,363 ஆக உயர்வடைந்துள்ளது.

யாழ். மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை

கொரோனா தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டின் அடுத்த கட்டம் யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

இரத்தினபுரி மாவட்டத்தில் நாளை (30) தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குருநாகல், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் SINOPHARM தடுப்பூசி ஏற்றும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.

இதனிடையே மேல் மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாக 05 இலட்சம் தடுப்பூசிகள் கிடைத்துள்ளதுடன், ரஷ்யாவின் 50,000 ஸ்புட்னிக் தடுப்பூசிகளும் கிடைத்துள்ளன.

Posted in Uncategorized

திருகோணமலையில் கொரோனாவால் மேலும் 5 பேர் உயிரிழப்பு

திருகோணமலையில் கொரோனாவினால் கடந்த 24 மணித்தியாலயத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இரண்டு பேரும். மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர் உட்பட 5 பேர் கடந்த 24 மணித்தியாலயத்தில் உயிரிழந்ததையடுத்து மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் 76 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகளுனக்கு கீழ் உள்ள பிரதேச சுகாதார அதிகாரிகள் பிரிவுகளான கிண்ணியா, மூதூர், உப்புவெளி, திருகோணமலை, குச்சவெளி, குறிஞ்சாக்கேணி, மூதூர் ஆகிய வைத்திய சுகாதார அதிகாரி பிரிவுகளில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 73 தொற்றானர்கள் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைமூலம் கண்டறியப்பட்டதையடுத்து மாவட்டத்தில் இதுவரை 3,270 ஆக அதிகரித்துள்ளது.

எனவே பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் அதேவேளை சுகாதார வழிமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றி அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகர் செயற்றிட்டம்: இந்தியா அவதானம்

கொழும்புத் துறைமுக நகர் செயற்றிட்டம் மற்றும் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் அவதானத்துடன் செயற்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.

புது டெல்லியிலுள்ள அதிகாரிகளை மேற்கோள் காட்டி “தி ஹிந்து” பத்திரிகை மேற்கண்டவாறு செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்புத் துறைமுக நகர் தொடர்பில் சட்ட விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ள அரசாங்கம் இது முழுமையாக இலங்கையினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடு எனவும் அறிவித்துள்ளது.

இதற்கமைய முதலீடுகளை மேற்கொள்ள முன்வருமாறு சர்வதேச முதலீட்டாளர்களிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் வர்த்தக செயற்றிட்டமாக மாத்திரம் காணப்பட்டால் அது இலங்கையின் தெரிவு என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கொழும்புத் துறைமுக நகரமானது இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சர்வதேச இணக்கப்பாடுகளுக்கு மதிப்பளித்துச் செயற்பட வேண்டும் எனப் பெயர் குறிப்பிட விரும்பாத புதுடெல்லி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

நல்லூரில் அரசடிப் பகுதி முடக்கப்பட்டது!

யாழ்ப்பாணம் நல்லூரில் அரசடிப் பகுதி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை முதல் முடக்கப்பட்டுள்ளது.

நல்லூர் அரசடிப் பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 22 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், அந்தப் பகுதி மக்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.

நல்லூர் ஜே/103 கிராம அலுவலகர் பிரிவில் உள்ள ஒரு பகுதியான குறித்த அரசடியைத் தனிமைப்படுத்துவதற்கு, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்டச் செயலாளர் ஊடாக கொவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் செயலணிக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியினால் இந்தக் கோரிக்கை இன்று காலை முன்வைக்கப்பட்டது.

இதன்படி, குறித்த பகுதியை மாலை ஆறு மணி முதல் தனிமைப்படுத்துவதற்கு சுகாதார மருத்துவ அதிகாரிக்கு அனுமதியளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

கொரோனா உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,363 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் மேலும் 608 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.

இதற்கமைய இன்று இதுவரையில் 2,845 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை 177,712 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,363 ஆக அதிகரித்துள்ளது.

Port City சீனாவிற்க்கு முட்டை இடும் தங்க வாத்து

இலங்கை முகாமிற்குள் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் மூலம் தலையை நுழைத்த சீன ஒட்டகம் இப்போது துறைமுக நகரத்தில் நிரந்தரப் படுக்கை அமைத்துவிட்டது. ராஜபக்சக்களுக்கும், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வாழ்த்துக்கள். இதை இவ்வளவு இலகுவில் சாத்தியமாக்கிய 69,000 சிங்கள மக்கள், சிங்கள, தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், முப்படைகள், இந்தியா, மேற்கு நாடுகள் அத்தனை பேருக்கும் அனுதாபம்.

இந்நாளுக்கான திட்டம் பல வருடங்களுக்கு முன்னரே, இலங்கைக்கு வெளியே தீட்டப்பட்டது என்பதில் சந்தேகப்பட இடமில்லை. உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பின் பின்னால், ராஜபக்சக்கள் மட்டும்தான் இருக்கிறார்கள் என நம்பத் தேவையில்லை. நன்றாகத் திட்டமிட்டு, செவ்வனே முடிக்கப்பட்ட இத் திட்டத்திற்கான ஒட்டுமொத்தமான ‘ஸ்கிறிப்டும்’ இலங்கையில் எழுதப்படவில்லை. இதை நடைமுறைச் சாத்தியமாக்கியது மட்டுமே இலங்கை.

ராஜபக்சக்களின் மீளமர்த்தலுக்கு அப்பால் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வு, 20 வது திருத்தம். இப்படியொரு அரசியலமைப்பு திருத்தத்தை, அதுவும் சில நாட்களுக்குள் உருவாக்க, தற்போதுள்ள ராஜபக்ச முகாமில் எவருமில்லை. அது யாரால் உருவாக்கப்பட்டது என்பதை நீதியமைச்சர் அலி சப்றி பாராளுமன்றத்தில் கூற மறுத்துவிட்டிருந்தார். தற்போது வரையப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ள துறைமுகநகரச் சட்ட வரைவு வெளிநாட்டு நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்டது என்கிறார்கள். இச் சட்டமூலத்தில் சுமார் இருபத்தைந்து அரசியலமைப்பு முரண்பாடுகள் இருக்கிறது என்பதைக்கூட, உலகப் புகழ் பெற்ற சட்டப் பேராசிரியர் ஜி.எல்.பீரீஸ் கூட பார்க்கவில்லை என்றால் – do as you are told- கட்டளை அவ்வளவு பலமாக இருந்திருக்க வேண்டும் அல்லது முதுகெலும்புகள் அதி பலவீனமாக இருந்திருக்க வேண்டும்.

நிறைவேறி விட்டது. சீனாவில் பட்டாசுகள் வெடித்துக்கொண்டிருக்கும். விரைவில் துறைமுக நகரத்தில் சீனக் கொடி பட்டொளி வீசிப் பறக்கப் போகிறது. சீனம், சிங்களம், ஆங்கில மொழிகளில் வீதிப் பதாகைகள் பிரமாண்டமாக எழுப்பப்படப் போகின்றன. மதத் தலைவர்களைச் சமாதானமாக்க துறைமுகத்திலேயே அதி உயரமான புத்த விகாரையும், ஆயிரம் கால் புத்த கலாச்சார மண்டபமும் கண் விழித்து மூடுவதற்குள் நிர்மாணிக்கப்பட்டுவிடும்.

துறைமுக நகரத்தால் தமிழருக்கு நேரடியாக எந்தவித இலாப நட்டமுமில்லை. சிங்களவர்களைப் போலவே அவர்களும் அங்கு வெளிநாட்டுக்காரர் தான். 99 வருடங்களுக்குள் சீனர் இலங்கையின் இரண்டாவது பெரும்பான்மை இனமாக வந்துவிடுவர். அதி முக்கிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சொர்க்கம் அவர்களுக்கு தங்கத் தட்டில் வைத்துப் பரிசளிக்கப்பட்டிருக்கிறது. அதன் பிரதியுபககாரமாக ராஜபக்ச பரம்பரையினருக்கு துறைமுக நகரத்தில் மாட மாளிகைகள் பரிசாகக் கிடைக்கலாம். ஒரு காலத்தில் (உயிரோடு இருந்தால்) ராஜபக்சக்கள் மக்களின் கல்லெறிகளிலிருந்து தப்பி வாழ அது அடைக்கலத்தையும் வழங்கலாம். ராஜபக்சக்களின் எடுபிடிகளுக்கு ஓரமாக நின்று தெரு வியாபாரம் செய்ய சீனா இடமொதுக்கிக் கொடுக்கலாம். அங்கு முக்கிய தெருவியாபாரிகள் சீனராகவே இருப்பர்.

கடந்த சில மாதங்களாக, குறிப்பாக 20 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி தனது சர்வ வல்லமையை மீளப்பெற்ற பின்னர், இராணுவத் தளபதிகளின் அமைதி ஒரு விடயத்தைச் சொல்கிறது. சிங்கள கடுந்தேசியவாதிகளின் இரைச்சல் பெரும்பாலும் இல்லையென்றாகிவிட்டது. மதத் தலைவர்கள் தாங்கள் விட்ட மகா தவறை நினைத்து மண்டையில் குத்திக்கொள்கிறார்கள்.

சிங்கராஜா வன அழிப்பை நேரில் சென்று பார்த்த பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்தின சொன்ன விடயம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது. அரசாங்கத்தின் சூழல் கட்டுப்பாடுகளையும் மீறி வன அழிப்பை ஏவி விடுவது அரசியல்வாதிகள் தான், என அவர் தனது இயலாமையை வெளிக்காட்டியிருந்தார். அதன் பிறகு அவரது வழமையான ‘தேசிய பாதுகாப்பு’ கர்ச்சிப்புகள் குறைந்துவிட்டன. காரணம் அக் குறிப்பிட்ட வன அழிப்பு, அம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சீன தொழிற்பேட்டைக்கு நீர், மின் வழங்கலுக்காக இரண்டு பாரிய நீர்த் தேக்கங்களை அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது அவருக்குத் தெரிந்துவிட்டது. அவர் சிங்களத் தேசியவாதி, சீனத் தேசியவாதி அல்ல.

இதர விடயங்களில் போல, சீனா எவ்விடயத்தையும் கால தாமதப்படுத்துவதில்லை. அவர்களது தேவைகளை ராஜப்கசக்கள் துரிதமாகச் செய்துகொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். துறைமுக நகரத்தில் இராணுவத்துக்கு எந்தவித அக்கறையுமில்லை; அதனால் இலாபமுமில்லை. மியன்மாரில் போல அதிகாரத்தைக் கைப்பற்றும் முனைப்புகள் அவர்களிடமில்லை. துறைமுக நகரம், அம்பாந்தோட்டை என சீன இராணுவம் குடிவந்த பின்னர் தான் அவர்கள் விழித்துக்கொள்வார்கள்.

துறைமுக நகரத்தை ஒரு துபாய், சிங்கப்பூர் எனப் படம் காட்டி ராஜபக்ச தரப்பு விற்றிருக்கிறது. இதில் கொள்ளை கொள்ளையாகப் பணம் சம்பாதிக்கப் போகிறவர்கள் ராஜபக்ச குடும்பத்தினர். அவர்கள் தமது இலக்கிலிருந்து மாறவில்லை. சேசெல்ஸ் போன்ற நாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளின் பணத்தையும், நாட்டை விற்றதற்காக சீனா கொடுத்த ‘கமிசன்’ பணத்தையும் பக்கத்தில் கொண்டுவந்து வைத்திர்ப்பதே அவர்களது திட்டம். அதில் அவர்கள் குடும்பமாக, சகோதரர்களாக வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

துறைமுக நகரம், மகாபாரதத்தில் வரும் ஒரு அரக்கு மாளிகை மட்டும்தான். அது தனவந்தரின் விளையாட்டுத் தளமாகவே இருக்கும். அது சகல தரப்பினரும் வந்து குடித்து, கூத்தியாடி, சூதாடிச் செல்ல களமமைத்துக் கொடுக்கும் சொர்க்கம். லொஸ் ஏஞ்சலிஸ் எப்படி அமைதியாக அரேபிய முடிக்குரியவர்களை அழைத்து அவர்களின் பணத்தைப் பிடுங்குகிறதோ அப்படியான ஒன்றாகவே இதுவும் இருக்குமென நம்பலாம். அங்குள்ள கண்ணாடி மாளிகைகளின் குடியிர்ப்பாளர்களில் பலர் கவர்ச்சியான சீன, கொரிய பெண்களாக இருக்கலாம். இங்கு கிடைக்கும் இலாபம் ராஜபக்சக்கள் சொல்வதைப் போலவோ அல்லது கூசா தூக்கும் கப்ரால், பீரிஸ் போன்றோர் சொல்வதைப் போலவோ இலங்கையின் பொருளாதாரத்துக்கு அள்ளிக் கொட்டும் என எதிர்பார்க்கத் தேவையில்லை.

துறைமுக நகரத்தின் நாணயம் சீனாவின் யுவானாக இருக்குமென ஆரம்பத்தில் கூறப்பட்டது. பின்னர் அது ‘டொலராக’ மாற்றப்பட்டது என்கிறார்கள். திருவாளர் ‘ஹிட்லர்’ அமுனுகம கூறியதைப் போல பசில் ராஜபக்ச ‘நாட்டின் நன்மைக்காகவே திடீரென அமெரிக்கா செல்ல வேண்டி வந்தது’ என்பது துறைமுக நகரத்தால் ‘பயப்பட எதுவுமில்லை’ என அமெரிக்காவைத் தாஜா பண்ணுவதற்காகவாக இருக்கலாம். எனவே அமெரிக்காவைக் குஷிப் படுத்த ஏதாவது விட்டுக்கொடுப்புகளுடன் அவர் நாடு திரும்பலாம்.

துறைமுக நகரத்தை ஒரு front ஆக மட்டுமே சீனா பாவிக்கும். அதன் நிர்வாகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் அங்கு முதலீட்டாளர்களைக் கொண்டு வருவதற்கு அதை ஒரு ‘சிங்கப்பூராகக்’ காட்டியே ஆக வேண்டும். ஹொங்க் கொங் போல இறுக்கமாக அங்கு இருக்க முடியாது. கொழும்பு துறைமுக நகரம் சீனாவின் பொன் முட்டை தரும் வாத்து. அதை எப்படி வளர்த்துப் பெருக்குவதென்று சீனாவுக்குத் தெரியும். இவ் விடயத்தில் இந்தியாவின் வழமையான நெளிவுகளை (சுளிவுகள் அல்ல!!) அது தனக்குச் சாதகமாகப் பாவிக்கும். அதே வேளை சீனாவின் military-industrial complex அம்பாந்தோட்டை தான். அங்கு நீண்டகாலக் குடியிருப்பிற்கு சீனா தயாராகிவிட்டது. அதுதான் சீனாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கோட்டை. அவுஸ்திரேலியாவில் இருக்கும் அமெரிக்காவின் இரகசிய பிரதேசமான அலிஸ் ஸ்பிறிங்ஸ் போலவே சீனாவுக்கு அம்பாந்தோட்டை என்பது மட்டும் இப்போதைக்குப் போதுமானது.

இந்தியா பல தடவைகளில் பல அணில்களை ஏறவிட்டுப் அண்ணாந்து பார்த்து வீணி வடித்திருக்கிறது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும்படி இலங்கை முதலில் இந்தியாவிடம் தான் கேட்டிருந்தது. இந்தியா அதற்கு இணக்கம் தெரிவிக்காமல், கிழக்கு கொள்கலன் முனையத்தில் மட்டும் தன் கண்களை வைத்திருந்து இறுதியில் அந்த அணிலும் ஏமாற்றிவிட்டது. இப்போது துறைமுக நகரத்தில் இவ்வளவும் நடக்கிறது ஆனால் அது கும்பமேளாவில் cowமியக் கோஷ்டிகளுக்குக் களமமைத்துக்கொடுத்துக் கொண்டிருக்கிறது. வாரணாசி உறுப்பினராகிவிட்ட மோடி வெண்தாடியுடன் தன்னை ஒரு சிவனாகவே நினைத்துப் பரவச நிலைக்குச் சென்றுவிட்டார். இலங்கை நிரந்தரமாகவே இந்தியாவின் கைகளிலிருந்து விடுபட்டுப் போய்க்கொண்டிருக்கிறது.

மேற்கு நாடுகளைப் பொறுத்த வரையில், பைடன் நிர்வாகம் பலத்த ஏமாற்றத்தைத் தருகிறது. உலகத்தில் அமெரிக்கா என்றொரு நாட்டை இறைவன் படைத்தது இஸ்ரேலைக் காப்பாற்றுவதற்காக மட்டுமே என அவர் தீர்க்கமாக நம்புகிறார். பாலஸ்தீனத்தில் எண்ணற்ற குழந்தைகள் கொல்லப்பட்ட்போது இரங்கமுடியாத இப் பிறவிக்கு விமோசனமில்லை. கைவிட்ட கேஸ். ஒபாமா காலத்தில் கோதாபயவுடன் ‘டீல்’ போட்டு தமிழர்களைக் கொன்றொழித்ததில் அவர் கைகளிலும் இரத்தக் கறையுண்டு. எனவே துறைமுக நகரத்தில் வானத்தைத் தொடும் ஒரு அழகான கண்ணாடி மாளிகையில் அமெரிக்காவின் கொடியொன்றையும் சீனா பறக்க விடும். அதோடு அவர் மனக்குளிர்ந்து விடுவார்.

இவையெல்லாவற்றுக்கும் மாறாக, எனக்கும் கனவு காண உரிமையுண்டு என்ற வகையில் – இந்தியாவிலும், அமெரிக்காவிலும் கொஞ்சம் முதுகெலும்புள்ள தலைமைகள் வந்தால், அவர்கள் துறைமுக நகரத்தின்மீது பொருளாதாரத் தடை விதித்தால் (economic sanctions) – அங்கு வணிகம் செய்பவர்களும், முதலீடு செய்பவர்களும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடிவிடுவார்கள். இதனால் அங்கு சீனாவும், சீனாவின் நண்பர்களும் மட்டுமே வியாபாரம் செய்யலாம். சீனா உலகின் தொழிற்சாலையாக மட்டுமே இருக்க முடியுமே தவிர நுகர்வோராகவும் இருக்க முடியாது. உலக வர்த்தகம் இன்றி அதனால் சீவிக்க முடியாது. எனவே துறைமுக நகரம் அதன் சுடுகாடாக அமைய வாய்ப்புண்டு.

போர்களை விட உலகில் அதிக அழிவுகளைக் கொண்டுவருவது பொருளாதாரத்தடை. ஈரான், ஈராக், வெனிசுவேலா என்று எண்ணற்ற நாடுகள் சமகாலத்தில் மண்டியிட்டமைக்கு வானத்திலிருந்து பொழிந்த குண்டுகள் காரணமல்ல, வயிறுகள் வெந்தமையே காரணம். மக்கள்தான் இத் துன்பங்களை அனுபவிக்கப் போகிறவர்கள். துறைமுக நகரத்தின் மக்கள் சாதாரண மக்களல்ல என்ற வகையில் – who cares?.

எனவே எனது எதிர்ப்பார்ப்பு? ஜே.வி.பி. தலைமையிலான மூன்றாவது புரட்சி – அரிவாளையும் சுத்தியலையும் எறிந்துவிட்டு, யதார்த்தமான உண்மையான, கற்பனைகளுடன் கூடாத அணுகுமுறைகளுடன் கூடிய மூன்றாவது எழுச்சி, மக்கள் சக்தியாக உருவெடுக்கும். இலங்கையில் ஜனநாயகம் தப்பிப் பிழைக்குமானால், புத்த மகாசங்கங்களின் அனுசரணையுடன், ஆச்சரியப்படத்தக்க வகையில் இராணுவத்தின் அனுசரணையுடன், மக்கள் சக்தி ஆட்சியமைக்கும். புலிகளை வென்ற கதையும், தமிழர்களை வென்ற கதையும் இன்னும் சில தசாப்தங்களுக்கு எடுபடவும் முடியாது; எடுக்கப்படவும் கூடாது.

தமிழர்களைப் பொறுத்தவரையிலும், தீவிர தமிழ்த் தேசியம் தற்காலிகமாகவேனும் கிடப்பில் போடப்பட்டு உள்ளூர் உற்பத்தியான ஒரு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றுக்குத் தயாராக இருக்க வேண்டும். அனுரகுமார திசநாயக்கா அமரவன்ச அல்ல. அவரது தலைமையில் ஜே.வி.பி. பல நிதர்சனங்களை உணர்ந்திருக்கிறது. அவரோடு கற்றவர்களும், பண்புள்ளவர்களும் நிற்கிறார்கள். சஜித் பிரேமதாசவுக்கும், சரத் பொன்சேகாவுக்கும் வாக்களித்த தமிழ் மக்கள் ஒரு முறை அநுரகுமாரவிலும் காசைக் கட்டிப் பார்க்கலாம். குதிரை வெல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

வெளிநாடுகள் மூலம் தமிழருக்குத் தீர்வு? பைடனோடு அந்த நம்பிக்கை அறவே இல்லாமற் போய்விட்டது. ஐ.நா. நல்லதொரு தடிதான் ஆனால் அதை யார் வைத்திருப்பது என்பதைப் பொறுத்தே பலன் அமையும். நமக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை.

தலைப்பு ‘தி ஐலண்ட்’ பத்திரிகையில் லூசியன் ராஜகருணாநாயக்கவின் கட்டுரையிலிருந்து : Courtesy: The Island / Lucien Rajakarunanaya

அறிவுகெட்ட இனவாத முட்டாள்களின் கையில் இலங்கை; எங்களிடம் நாட்டைத் தந்தால் முன்னேற்றிக் காட்டுவோம்! – மனோ

இலங்கையில் சிங்கள – பெளத்தர் அல்லாத எமக்கு ஜனாதிபதி, பிரதமர், முன்னரங்க அமைச்சர் ஆக முடியாது. இது உங்கள் எழுதப்படாத சட்டம். இன, மத, மொழி, சிறுபான்மை பேதங்களை, பத்து வருடங்களுக்கு இடைநிறுத்தி, நாட்டை எம்மிடம் கொடுத்துப் பாருங்கள். பதினொன்றாம் வருடம் தென்னாசியாவின் முன்னணி நாடாகத் திருப்பித் தருகின்றோம்.”

என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் சிங்கள பெரும்பான்மை அரசியல்வாதிகளை விளித்து கூறியுள்ளார்.

தனது ருவிட்டர் தளத்தில் மூன்று மொழிகளிலும் கருத்து வெளியிட்டுள்ள மனோ இது பற்றி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

“உங்கள் நண்பர் லக்ஸ்மன் கதிர்காமருக்குக் கூட நீங்கள் பிரதமர் பதவியைத் தர மறுத்தீர்கள். ஜே.வி.பி. மட்டுமே அவருக்குப் பிரதமர் பதவி தர வேண்டுமென்று சொன்னது.

இலங்கை, இயற்கை வளமில்லாத வள – ஏழை நாடு அல்ல. இங்கே என்ன இல்லை? இந்த நாட்டை ஆளுவோரிடம் நேர்மை, தூரப்பார்வை, அர்ப்பணிப்பு, அரசியல் திடம், துணிச்சல் ஆகியவை இல்லை. குறிப்பாக, தாம் மட்டுமே இந்த நாட்டின் ஏக உரிமையாளர் என எண்ணும் பெரும்பான்மை அரசியல்வாதிகளிடம் தலைமைத்துவப் பண்புகள் இல்லை. இதுதான் கசப்பான ‘இல்லை‘களின் உண்மை.

கடந்த காலங்களில் தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எமது நாட்டின் சுதந்திரம் முதல் வளர்ச்சி வரை பெரும் பங்களிப்புகளை வழங்கினார்கள். அது ஒரு பொற்காலம்.

இப்போது இந்த நாடு – இலங்கைத் தீவு, உங்களுக்கு மட்டுமே ஏகபோக சொந்தமானது எனத் தவறாக, இனவாத கண்ணோட்டத்தில் நீங்கள் நினைகின்றீர்கள். இந்த எண்ணம் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டிலும் உள்ளது. எல்லா பெரும்பான்மை கட்சிகளிலும் உள்ளது. இதை நான் அனுபவப்பூர்வமாக கண்டு அனுபவித்துள்ளேன்.

இன்று இந்த நாடு ஒரு தோல்வியடைந்து வரும் நாடு. இதன் காரணம் என்ன என்பதை யோசியுங்கள். சுதந்திரம் பெற்ற 1950களில், இந்த நாட்டின் வெளிநாட்டுச் செலவாணி கையிருப்பு, ஜப்பானுக்கு அடுத்து அதிகம் இருந்தது. கடன் கொடுக்கக் கூடிய நாடாக நாம் இருந்தோம். இன்று நாம் எங்கே இருக்கின்றோம்? இவை எல்லாவற்றுக்கும் காரணம், அறிவுகெட்ட இனவாத முட்டாள்களின் கையில் நாடு இருக்கின்றமைதான்.

தெற்காசியாவை விடுங்கள். முன்னேறிய தென்கிழக்கு ஆசியாவை எடுங்கள். சிசு மரணம், கல்வி வளர்ச்சி, ஆயுள், மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றில் நாம் கூடக்குறைய சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, இந்தோனேசியா, கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளை விட முன்னேறி இருந்தோம்.

நான் மதிக்கும் சிங்கப்பூரின் ஸ்தாபகர் லீ குவான் யூவும், மலேசிய ஸ்தாபகர் மஹதிர் முகமதும், தமது நாடு இலங்கையை எட்டிப் பிடிக்க வேண்டும் என்பதே தமது இலக்கு என அன்று பகிரங்கமாகக் கூறினார்கள். இன்று அவர்கள் எங்கே? நாங்கள் எங்கே?

இப்போது தென்னாசியாவைப் பாருங்கள். இந்தியா பெரிய நாடு. அதனுடன் எம்மை ஒப்பிட முடியாது. ஆனால், 1972இல் பிறந்த பங்களாதேஷ்கூட, இன்று மதசார்பற்ற நாடாக எங்களை முந்திப் போகின்றது. இது உங்களுக்குத் தெரியுமா?

இன முரண்பாடுகள், போர், அரச மற்றும் அரசு அற்ற பயங்கரவாதங்கள், பொருளாதார வீழ்ச்சி, வெளிநாட்டுச் செலவாணிப் பிரச்சினை, அகோர தேசிய கடன் தொகை, கடன் தருகின்றேன் என்று சொல்லி உலக சக்திகள் உள்நாட்டுக்குள் வருகை, ஆகியவற்றின் பின்னுள்ள பிரதான காரணம், பெளத்தம் முதன்மை (புத்திசம் பர்ஸ்ட்), சிங்களம் மட்டும் (சின்ஹல ஒன்லி) என்ற முகத்துடன் வந்த உங்களது போலித் தேசியவாதம்தான் என்பதை உணருங்கள். முட்டாள்களுக்கு இதுவும் புரியாவிட்டால் இந்த நாட்டை இனி கடவுளாலும் காப்பாற்ற முடியாது” – என்றுள்ளது.

Posted in Uncategorized

ஜூன் 7 வரை நீடிக்கப்பட்டது பயணக்கட்டுப்பாடு – உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியானது!

நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதிவரை தொடர்ந்தும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு தேசிய செயலணி தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், கொரோனா தடுப்பு தேசிய செயலணி உறுப்பினர்களும் இடையில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் மே 31 மற்றும் ஜூன் 4 ஆம்திகதிகளில் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படாமல், தொடர்ந்தும் ஜூன் 7 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.