திருகோணமலையில் 24 மணித்தியாலத்தில் 7 கொரோனா மரணங்கள் பதிவு

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கொரோனாவால் ஏழு மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் இன்று (26)வரை 69 பேர் உயிரிழந்துள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தினால் இன்று (26) காலை வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவரும், தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவரும், உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், கந்தளாய், குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா ஒருவர் வீதம் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் உயிரிழந்துள்ளதாகவும், இன்றுவரை மொத்தமாக 69 பேர் திருகோணமலை மாவட்டத்தில் கோவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் திருகோணமலை மாவட்டத்தில் 63 பேர் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் கடந்த மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் இன்றுவரை 1403 பேரும், 2020 டிசம்பர் மாதம் முதல் இன்று வரை 2 ஆயிரத்து 844 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிக அளவில் மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 19 பேரும், குச்சவெளியில் 9 பேரும், குறிஞ்சாங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 9 பேரும் கந்தளாயில் ஏழு பேரும்,கிண்ணியாவில் 6 பேரும், மூதூர் மற்றும் உப்புவெளியில் தலா 4 பேர் வீதமும், தம்பலகாமம் மற்றும் கோமரங்கடவல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தலா இருவர் வீதமும், சேறுவில பகுதியில் ஒருவரும் கோவிட்-19 தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

ஜூன் முதலாம் திகதி முதல் வௌிநாட்டு பயணிகள் நாட்டிற்கு வருவதற்கான தடை நீக்கம்

எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் பயணிகள் விமான சேவை மீள ஆரம்பமாகவுள்ளது.

எனினும், ஒரு விமானத்தில் இலங்கைக்கு அழைத்து வரக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை 75 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 14 நாட்கள் இந்தியாவில் தங்கியிருக்கும் பயணிகளுக்கு தொடர்ந்தும் பயணத்தடை அமுல்படுத்தப்படுவதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை கடவுச் சீட்டினை கொண்டுள்ளவர்களும் இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்களும் தாயகம் திரும்புவதற்கு அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என சிவில் விமான சேவைகள் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கைக்கு வருகை தரும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள், சுற்றுலா அதிகார சபைக்கு அறிவிக்க வேண்டும் என அதிகார சபை கூறியுள்ளது.

இலங்கையில் தீவிரவாத தாக்குதல் இடம்பெறலாம் – அமெரிக்கா திடீர் எச்சரிக்கை

கொரோனா தொற்று தீவிரமாகப் பரவுவதால் கடும் நெருக்கடியை சந்தித்திருக்கின்ற இலங்கையில் எதிர்வரும் நாட்களில் தீவிரவாதத் தாக்குதல்கள் இடம்பெறக்கூடிய அபாயம் இருப்பதாக அமெரிக்கா கடுமையான எச்சரிக்கை ஒன்றை நேற்று விடுத்துள்ளது.

இலங்கைக்குச் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கப் பிரஜைகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் நேற்றைய தினம் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த அறிவித்தலிலேயே இந்த எச்சரிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துள்ள நிலையில், தமது நாட்டுப் பிரஜைகளுக்கு இலங்கைக்குச் செல்வதைத் தற்காலிகமாகத் தவிர்த்துக் கொள்ளும்படி அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை நேற்று இலங்கைக்கான புதிய பயண ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது.

அதில் நாட்டில் தொடரும் கொரோனா தீரவ நிலைமைகள் காரணமாக இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு தமது குடிமக்களை அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் கொரோனா காரணமாக அமெரிக்காவில் உள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், இலங்கைக்கான நான்காம் நிலை பயண சுகாதார அறிவிப்பை தமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிட்டிருக்கின்றது.

இதேவேளை, அமெரிக்காவினால் வெளியிடப்பட்டிருக்கும் இந்த எச்சரிக்கை அறிவித்தலில், இலங்கையில் கொரோனா நெருக்கடியிடையே தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படக்கூடிய அபாயமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஹோட்டல்கள், போக்குவரத்து நிலையங்கள், சுற்றுலாப் பயணிகள் ஒன்றுதிரளும் இடங்கள், பல்பொருள் சந்தைகள், விமான நிலையங்கள், கலாசார உற்வச நிகழ்வுகள், கல்வி நிலையங்கள், வைத்தியசாலைகள் மற்றும் பொது இடங்களை இலக்குவைத்து தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் அந்த எச்சரிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் தூர இடங்களில் உள்ள அமெரிக்கப் பிரஜைகள், பிரச்சினைகள் அல்லது அசௌகரியங்கள் ஏற்படும் பட்சத்தில் தூதரகத்துடன் தொடர்பு கொள்ளும்படியும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.

அதேவேளை, கலிபோர்னியாவில் உள்ள விகாரையொன்றின் விகாராதிபதி சாந்த சோபன தேரர் அமெரிக்காவினால் விடுக்கப்பட்டுள்ள இந்த முன்கூட்டிய எச்சரிக்கை தொடர்பில் காணொளித் தகவல் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள இலங்கையில் தீவிரவாத தாக்குதலொன்று நடத்தப்படக்கூடிய அபாயம் இருப்பதாக அமெரிக்கா தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் பௌத்த மக்களின் வெஷாக் பண்டிகை இன்றும், நாளையும் நடைபெறவுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் என ஒன்றுகூடுகின்ற இடங்களில் மக்கள் அவதானமாக இருக்கும்படியும் சாந்த சோபன தேரர் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதிய சட்ட மா அதிபராக சஞ்சய் ராஜரத்னம் பதவியேற்றார்

சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா அப்பதவியிலிருந்து ஓய்வுபெற்ற நிலையில், புதிய சட்ட மா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்னம் இன்று (26.05.2021) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி செயலகம், சஞ்ஜய் ராஜரத்னத்தின் பெயரை, பாராளுமன்ற பேரவைக்கு புதிய சட்ட மா அதிபராக பரிந்துரைத்து அனுப்பி வைத்த நிலையில், பாராளுமன்ற பேரவை அதனை அங்கீகரித்தது.

இதனையடுத்தே அவர் இன்று 48 ஆவது சட்ட மா அதிபராக பதவிபேற்றார்.

Posted in Uncategorized

வடக்குக்கு 4 இலட்சம் கொரோனாத் தடுப்பூசிகள் தேவை;சுகாதார சேவைகள் திணைக்களம் கோரிக்கை!

வடக்கு மாகாணத்தில் 4 இலட்சம் பேருக்குக் கொரோனாத் தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் வழங்கப்பட்டால் அவை இரண்டு வாரங்களுக்குள் வடக்கு மக்களுக்குச் செலுத்தி முடிக்கக் கூடியதாக இருக்கும் என்றும் சுகாதார சேவைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சுகாதார முன்களப் பணியாளர்களுக்கு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் முதலாவது டோஸ் கடந்த ஜனவரி மாத இறுதியில் ஏற்றப்பட்டது. அவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி தற்போது ஏற்றப்பட்டு வருகின்றது. வடக்கு மாகாணத்தில் முதலாவது டோஸைப் பெற்ற 500 பேர் வரையில் இரண்டாவது டோஸைப் பெறவில்லை. அவர்களில் பலர் தமக்கு தடுப்பூசி தேவையில்லை என்று தெரிவித்து வருவதால், அவர்களிடம் விளக்கம் கோருவதற்கும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது எனத் தெரியவருகின்றது.

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி எதிர்வரும் 14ஆம் திகதியுடன் காலாவதியாவதால் அதனைத் திருப்பி கொழும்புக்கு அனுப்ப வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. அதன் காரணமாகவே முதலாவது டோஸ் பெற்று இரண்டாவது டோஸை இதுவரை பெறாதவர்கள் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.

Posted in Uncategorized

இலங்கையில் மேலும் 1,808 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இலங்கையில் மேலும் 1,808 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 168,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 139,947 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இவர்களில் 1,243 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடும் சூறாவளியாக தீவிரமடையும் ‘யாஸ்’ சூறாவளி!

வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியில் உருவாகியுள்ள ´யாஸ்´ என்ற சூறாவளி அடுத்த சில மணி நேரங்களில் கடும் சூறாவளியாக தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாட்டில் பலத்த காற்று வீச ஆரம்பித்திருப்பதாகவும் நாட்டின் தென் மேற்கு பகுதியில் மழை பெய்யும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது

விசேடமாக மேற்கு, சப்ரகமுவ ,மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்று தொடக்கம் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் மழையுடனான காலநிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் காற்றின் வேகம் 50 தொடக்கம் 60 கிலோ மீட்டர் வரை அதிகரிப்பதுடன் விசேடமாக மத்திய மேற்கு மலை சாரல், வட மத்திய, வட மேற்கு மாகாணங்களிலும், கேகாலை, வவுனியா முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காற்றின் வேகம் 70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கும்.

இதே போன்று, மேல் மாகாண கரையோரப் பகுதியிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காற்று 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.

Posted in Uncategorized

இன்றிரவு 11 மணி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை மீண்டும் பயணக் கட்டுப்பாடு

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடு இன்று அதிகாலை 4 மணி முதல் 19 மணித்தியாலங்களுக்கு தளர்த்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்றிரவு 11 மணி தொடக்கம் எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும் பயணக் கட்டுப்பாடு அன்றிரவு 11 மணி தொடக்கம் ஜூன் மாதம் 04 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

எதிர்வரும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி இரவு 11 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும் பயணக் கட்டுப்பாடு ஜூன் மாதம் 7 ஆம் திகதி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

மக்களின் தேவை கருதியே பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுவதாகவும் பயணக் கட்டுப்பாடு நீக்கப்படவில்லை எனவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறினார்.

மக்கள் தங்களின் வீடுகளுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மாத்திரமே ஒரு சில நாட்களுக்கு பயணக் கட்டுப்பாட்டை தளர்த்த தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் நாட்களில் வீடுகளில் இருந்து ஒருவர் மாத்திரம் வௌியில் சென்று, அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்யுமாறு இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்தார்.

பிரதேச செயலாளர்களினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் மருந்தகங்களில் தங்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

வாகனங்களில் பயணிக்காது, நடந்து செல்லக்கூடிய தூரத்திலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு மாத்திரமே செல்ல வேண்டும் என அவர் தெரிவித்தார்.

பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியில் வங்கிச் சேவை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் குறைந்தபட்ச ஆளணியைக் கொண்டு வங்கிச் சேவையை முன்னெடுக்க வேண்டும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவுறுத்தினார்.

இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியிலும் தங்களின் கிராமத்தை விட்டு வௌியில் செல்ல முடியாது என இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

இதேவேளை, பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியில் ஆடை விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட ஆடம்பர தேவைகளுக்கான வர்த்தக நிலையங்கள் திறக்கப்படக் கூடாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

மரக்கறி, மீன் கடை, இறைச்சிக் கடை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு மாத்திரமே பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் காலப்பகுதியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே, பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும் காலப்பகுதியில் விவசாய நடவடிக்கைகளை எவ்வித இடையூறுகளுமின்றி முன்னெடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய உற்பத்திகளை விற்பனை செய்வதற்கு நடமாடும் வர்த்தக சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

நடமாடும் வர்த்தக சேவைக்கு பிரதேச செயலகத்தால் வழங்கப்படும் அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்தல் போதுமானது என துறைசார் அமைச்சு அறிவித்துள்ளது.

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 97 பேருக்கு கொரோனா !

இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் 97 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்தார்.
களுவாஞ்சிகுடி -8
மட்டக்களப்பு -2
வாழைச்சேனை -4
காத்தான்குடி – 13
ஓட்டமாவடி – 1
கோறளைப்பற்று மத்தி -11
ஏறாவூர் – 09
வவுனதீவு – 11
பட்டிப்பளை -01
வெல்லாவெளி -02
ஆரையம்பதி -15
செங்கலடி -02
கிராண் -08
பொலிஸ் -05
மட்டக்களப்பு சிறைச்சாலை – 05

மேலும் கடந்த 24 மணித்தியாலத்தில் கிழக்கு மாகாணத்தில் 172 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது .

கொரோனா மூன்றாவது அலையில் இதுவரை கிழக்கு மாகாணத்தில் 99 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது

Posted in Uncategorized

யாழ் இராணுவ கட்டளைத் தளபதி யாழ் மக்களிடம் வேண்டுகோள்!

பயண கட்டுப்பாடு அமுலில் உள்ள போது யாழ் மாவட்ட மக்களை தங்கள் வீடுகளிலேயே இருக்குமாறு யாழ் இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

யாழ்ப்பாண மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணியின் இணைப்பாளர் என்ற ரீதியில் யாழில் தற்போதுள்ள கொரோனா நிலைமை தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசிய நிலை காணப்படுகின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா தொற்று நிலைமையானது ஏனைய இடங்களோடு ஒப்பிடும் போது கட்டுப்பாட்டில் உள்ளது.

யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த வருடம் கொரோனா 1வது அலையில் 17 தொற்றாளர்களும் இரண்டாவது அலையில் 890 தொற்றாளர்களும் தற்போதுள்ள மூன்றாவது அலையில் 1,398 நபர்கள் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளார்கள்.

எனினும் யாழ் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் இணைப்பாளர் என்ற அடிப்படையிலும் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி என்ற அடிப்படையிலும் யாழில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு பட்ட செயற்பாட்டினை இராணுவத்தினரின் மூலம் முன்னெடுகின்றோம் எனினும் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமான ஒன்றாக காணப்படுகின்றது.

அத்தோடு அரசாங்கத்தினால் தற்பொழுது கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக பயண கட்டுப்பாட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. யாழ் மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணியின் இணைப்பாளர் என்ற ரீதியில் தொற்றினை தடுக்க பல்வேறுபட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம் எனினும் பொதுமக்களின் ஒத்துழைப்பு போதாமையாகவுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட மக்கள் பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் தேவையற்று வீதிகளில் நடமாடாது வீடுகளில் இருங்கள் அத்தோடு உங்களுக்கு ஏதாவது கொரோனா நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறுங்கள் அவ்வாறு செயற்படுவதன் மூலம் உங்களையும் உங்கள் சமூகத்தையும் பாதுகாத்துக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.