எக்ஸ் – பிரஸ் பேர்ல் கப்பல் தீயை கட்டுப்படுத்த இந்தியா உதவிக்கரம்

எம்.வி. எக்ஸ் – பிரஸ் பேர்ல் கப்பலில் பரவியுள்ள தீயை கட்டுப்படுத்த இந்திய கரையோரப்பாதுகாப்பு கப்பல்கள் மற்றும் விமானம் என்பன அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஐசிஜி வைபாவ், டக் வோடர் லில்லி ஆகிய இரு கப்பல்கள் மற்றும் ஐசிஜி டொர்னியர் என்ற விமானம் இவ்வாறு எம்.வி. எக்ஸ்- பிரஸ் பேர்ல் என்ற கப்பலின் தீயை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.

மேலும் விமானப்படையின் பெல் 212 ரக ஹெலிக்கொப்டர் உள்ளிட்ட இலங்கை கடற்படையின் கப்பல்களும் தீயணைக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றன.

இதனிடையே, சமுத்திர சூழலை பாதுகாப்பதற்காக தீ பரவியுள்ள எம்.வி. எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பலை 50 கடல் மைல் தொலைவிற்கு ஆழ்கடலுக்கு நகர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடல் மாசுறுதல் தடுப்பு அதிகார சபை தெரிவித்திருந்தது.

கப்பலிலுள்ள கொள்கலனொன்று வெடித்தமையே தீப்பரவல் தீவிரமடைய காரணமாகியுள்ளது. மேலும் கப்பலிலிருந்த கொள்கலன்களில் 8 கொள்கலன்கள் கடலில் வீழ்ந்துள்ளதாக கடல் மாசுறுதல் தடுப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

Posted in Uncategorized

நாளை (25) காலை முதல் தனிமைப்படுத்தப்படும் பகுதிகள்

நான்கு மாவட்டங்களில் உள்ள சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் நாளை (25) அதிகாலை 4 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தின் டயகம பொலிஸ் பிரிவிலுள்ள சந்திரிகாமம் தோட்டம், சந்திரிகாமம் NLDB பண்ணை ஆகிய பகுதிகள் நாளை அதிகாலை 04 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி கூறினார்.

இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவும் தெல்கமுவ நகரின் ஒரு பகுதியும் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

கம்பஹா மாவட்டத்தின் கிரிபத்கொட பொலிஸ் பிரிவிலுள்ள இரியவிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவும் நாளை காலை 04 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை – உரவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவும் நாளை காலை 04 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

இன்று 2,283 கொரோனா நோயாளர்கள் பதிவு

இன்று (24) மேலும் 2,283 கொரோனா நோயாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1,66,484 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, 1296 கொரோனா தொற்றாளர்கள் இன்று குணமடைந்தனர். 1,39,947 பேர் நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து இதுவரை குணமடைந்துள்ளனர்.

23,044 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்றைய தினம் COVID மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை.

நாட்டில் பதிவான மொத்த COVID மரணங்களின் எண்ணிக்கை 1,210 அக அதிகரித்துள்ளது.

Posted in Uncategorized

நாளை குடும்பத்திலிருந்து ஒருவர் மட்டுமே வெளியே செல்லலாம்! வாகனங்களுக்கு அனுமதி கிடையாது: பொலிஸ் பேச்சாளர்

பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகையில் ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் மட்டுமே நடை தூரத்திலுள்ள கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்கவென வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

ஜூன் 7 வரை பயணக் கட்டுப்பாடுகள் தொடரும் என்று அவர் கூறினார். இதற்கிடையில், அத்தியாவசிய பொருட்களை வாங்க நாளை, மே 31 மற்றும் ஜூன் 4 ஆகிய திகதிகளில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளது.

வீதிகளில் அல்லது பொருட் கொள்வனவுக்காக வாகனங்கள் அனுமதிக்கப்படாது என்றும் அவர் கூறினார்.

கட்டுப்பாடுகளை மீறுவோரைக் கண்காணிக்க பொலிஸார் நிறுத்தப்படவுள்ளதாகவும் எனினும் மருத்துவமனைகளுக்கு செல்வோருக்கு இக்கட்டுப்பாடுகள் பொருந்தாது என்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இதனிடையே பயணத் தடைகளை தளர்த்தும்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் வெளியே வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பயணக்கட்டுப்பாடு மீண்டும் நீடிப்பு

தற்போது அமுலில் இருக்கும் பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 7 ஆம் திகதி( ஜீன் மதாம் 07ஆம் திகதி) வரை நீடிக்கப்படவுள்ளது.

பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும் நிலையில், நாளையும் எதிர்வரும் 31 மற்றும் 04 ஆம் திகதிகளில் அருகில் இருக்கும் வர்த்தக நிலையங்களில் மாத்திரம் அத்தியாவசிய பொருள் கொள்வனவில் ஈடுபடுவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்டும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.

அதற்கமைய நாளை காலை 04 மணியிலிருந்து இரவு 11 மணி வரை பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு மீண்டும் நாளை இரவு 11 மணி தொடக்கம் எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை பயணக்கட்டுப்பாடு அமுல் படுத்தப்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

31 ஆம் திகதி இரவு 11 மணி தொடக்கம் மீண்டும் அமுல்படுத்தப்படும் பணயக்கட்டுப்பாடு ஜூன் மாதம் 04 ஆம் திகதி காலை 04 மணி வரை தொடர்ந்தும் பயணக்கட்டுப்பாடு அமுலில் காணப்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ கூறினார்.

நான்காம் திகதி இரவு 11 மணி தொடக்கம் ஜூன் மாதம் 07 ஆம் திகதி காலை 04 மணி வரை தொடர்ந்தும் பயணக்கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

பயணக்கட்டுப்பாடு தொடர்பில் தௌிவுப்படுத்துவதற்காக அரசாங்கத தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இந்த விடயங்களை தௌிவுப்படுத்தினார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில், துறைசார் அமைச்சர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் இன்று நடாத்தப்பட்ட கலந்துரையாடலின் போது, பயணக்கட்டுப்பாட்டை நீடிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

மக்கள் தங்களின் வீடுகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மாத்திரமே ஒரு சில நாட்களுக்கு பயணக்கட்டுப்பாட்டை தளர்த்த தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் நாட்களில் வீடுகளில் இருந்து ஒருவர் மாத்திரம் வௌியில் சென்று அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யுமாறும் இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதேச செயலாளர்களினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் மருந்தகங்களில் தங்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

வாகனங்களில் பயணிக்காது, நடந்துச் செல்லக்கூடிய தூரத்திலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு மாத்திரமே செல்ல வேண்டும் என அவர் தெரிவித்தார்.

பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் வங்கிச் சேவை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், குறைந்தபட்ட ஆளணியை கொண்டு வங்கிச் சேவையை முன்னெடுக்க வேண்டும் என இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் காலப்பகுதியில் ஆடை விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட ஆடம்பர தேவைகளுக்கான வர்த்தக நிலையங்கள் திறக்கப்படாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

மரக்கறி, மீன்கடை, இறைச்சிக்கடை மற்றும் அதியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு மாத்திரமே பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் காலப்பகுதியில் அனுமதி வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவைக்கான அடையாள அட்டைகளை பயன்படுத்தி சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும், அவ்வாறானவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

Posted in Uncategorized

அம்பாறையில் றிசாட் பதியுதீனுக்கு ஆதரவாக சுவரொட்டிகள்!

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டு இன்றுடன் 1 மாதம் நிறைவுபெற்றதை தொடர்ந்து அவருக்கு ஆதரவாக அம்பாறை மாவட்டத்தின் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இச்சுவரொட்டியில் அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் விரைவான விடுதலை கிடைக்க ஆவணம் செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இச்சுவரொட்டியானது பிரதான வீதிகள் உள்ளக வீதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் மருதமுனை, நற்பிட்டிமுனை, கல்முனைகுடி ,இஸ்லாமபாத், சாய்ந்தமருது, மாளிகைக்காடு , நிந்தவூர் ,அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று ,சம்மாந்துறை, மாவடிப்பள்ளி, சவளக்கடை, மத்தியமுகாம், பொத்துவில், பகுதிகளில் இவ்வாறு ஒட்டப்பட்டுள்ளன.

மேலும் கடந்த புனித ரமழான் மாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுத்தீன் சபாநாயகரின் அனுமதியோ, நீதிமன்ற உத்தரவோ பெறப்படாமல் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்திக் கைது செய்யப்பட்டிருந்ததுடன் அவருக்கு ஆதரவாகவும் விடுதலையை வலியுறுத்தியும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும் செய்தியாளர் சந்திப்புகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் பொது மக்களின் அபிப்பிராயங்கள்

தேர்தல், வாக்களிப்பு முறைமை மற்றும் தேர்தல் சட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய மறுசீரமைப்புப் பற்றி ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழு பொதுமக்களின் அபிப்பிராயத்தைப் பெறுவதற்கு தீர்மானித்திருக்கின்றமை முக்கிய விடயமென ஃபெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்று நெருக்கடிக்கு மத்தியிலும் தேர்தல் முறைமையில் மறுசீரமைப்பின் முக்கியத்துவத்தை கருத்திற்கொண்டு, இந்த விடயத்தில் கவனம் செலுத்துவது வரவேற்கத்தக்கது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இடம்பெற வேண்டிய மறுசீரமைப்பு பற்றி ஜூன் மாதம் 19ஆம் திகதி வரை பொதுமக்கள் தங்களின் அபிப்பிராயங்களை முன்வைக்க முடியும். இந்த விடயத்தில் மக்கள் மிகுந்த கவனம் செலுத்துமாறும் பெப்ரல் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சீன வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் இரத்து..!

சீன வெளிவிவகார அமைச்சர் வோங் ஹீயின் இலங்கை விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜுன் மாதம் முதல் வாரத்தில் எதிர்பார்க்கப்பட்ட குறித்த விஜயமானது தற்போது இரத்து செய்யப்பட்டுள்ளதை பிராந்திய ஒத்துழைப்புகளுக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உறுதிப்படுத்தினார். தொடர்ந்தும் சீன உயர்மட்டத்தினரின் கொழும்பை நோக்கிய வியஜங்களானது அனைத்துலக பார்வைக்குட்பட்டிருந்த நிலையில் சீன பாதுகாப்பு அமைச்சர் வீஃபெங் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன் போது இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து சீன வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் திட்டமிடப்பட்டிருந்தது. குறிப்பாக துறைமுக நகர் திட்டத்தை மையப்படுத்தியதாகவே இந்த விஜயம் அமையவிருந்ததாகவும் அவரது விஜயத்திற்கு முன்னதாக இலங்கை தரப்பில் துறைமுக நகர் நிர்வாக கட்டமைப்பிற்கு தேவையான சட்ட அனுமதிகள் பூர்த்திப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதாகவே கொழும்பை தளமாக கொண்டு செயற்படும் பன்னாட்டு இராஜதந்திரிகளினதும் கணிப்பாகியிருந்தது.

ஆனால் தற்போது உயர்நீதிமன்றின் தீர்ப்புடன் திருத்தங்களுக்குட்பட்ட நிலையில் துறைமுக நகர் நிர்வாக ஆணைக்குழு சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்ட துறைமுக நகர் நிர்வாக ஆணைக்குழு சட்டம் குறித்து சீன தூதரகம் எவ்விதமான கருத்துக்களையும் கூறவில்லை. எனவே இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்குட்பட்டு துறைமுக நிர்வாக கட்டமைப்பு அமைய வேண்டும் என்பதில் சீனா எவ்வாறானதொரு நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்பது வெளிப்பட வில்லை.

இவ்வாறானதொரு நிலையில் சீன வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளது. இவரது விஜயத்தில் இரு முக்கிய விடயங்கள் எதிர்பார்க்கப்பட்டது. முதலாவது துறைமுக நகர் ஆணைக்குழு சட்டம் மற்றும் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதியில் இடம்பெறவுள்ள சீன கமியூனிஸ்ட் கட்சியின் 100 ஆவது ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்விற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ வை சிறப்பு அதிதியாக அழைப்பதாகும். ஏற்கனவே இரு முறை திட்டமிடப்பட்டிருந்த சீன விஜயம் கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக இரத்துச்செய்யப்பட்டது. இவ்வாறானதொரு நிலையிலேயே சீன வெளிவிவகார அமைச்சர் வோங் ஹீயின் இலங்கை விஜயம் இரத்தாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

25 ஆம் திகதி வீடுகளிலே இருக்குமாறு அறிவுறுத்தல்

எதிர்வரும் 25 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதன் பின்னரும் வீடுகளிலேயே தங்கியிருக்கமாறு கொவிட் ஒழிப்பு தொடர்பிலான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

மிக அருகிலுள்ள விற்பனை நிலையங்களில் பொருட்கொள்வனவில் ஈடுபடுவதற்கு மாத்திரம் சந்தர்ப்பம் வழங்கப்படும் என
செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பயணத் தடை தளர்த்தப்படுவது உணவுப்பொருட்கள் மற்றும் ஔடதங்கள் போன்ற அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பளிப்பதற்காக மாத்திரமே என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (21) இரவு 11 மணியிலிருந்து நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட பயணத் தடை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (25) அதிகாலை 04 மணிக்கு தளர்த்தப்பட்டு அதேநாள், இரவு 11 மணிக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.

பயணத் தடை தளர்த்தப்படுமே அன்றி நீக்கப்படமாட்டாது என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

பயணத் தடை தளர்த்தப்படுகின்ற காலப்பகுதிக்குள் உணவுப்பொருட்கள் மற்றும் மருந்தகங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் போன்ற அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குகின்ற நிறுவனங்களை மாத்திரமே திறந்து வைப்பதற்கு
வாய்ப்பளிக்கப்படவுள்ளது.

அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வீட்டிலிருந்து ஒருவர் மட்டுமே வெளியில் செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

குடிதண்ணீர் பிரச்சனை ஏற்படுமாயின் உடனடியாக தொடர்புகொள்ளுங்கள்-ரெலோ விஜிந்தன் கரைதுறைப்பற்று பிரதேச சபை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்கள் முடக்கப்படுகின்ற போது அல்லது குடும்பங்கள் தனிமை படுத்தப்படுகின்ற போதோ குடி நீர் பிரச்சினை ஏற்படுமாயின், தீர்த்து வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) மத்திய குழு உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளருமான க.விஜிந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்;போது பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் குடிதண்ணீரை பெற்றுக்கொள்வதாக இருந்தால் வட்டார உறுப்பினர்கள் அல்லது உப பிரதேச சபை பொறுப்பதிகாரிகளுடன் குறித்த கிராம அலுவலர்கள் தொடர்புகொள்ளும் வேளையில் இலவசமாக குடி நீரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மூன்று பொலீஸ் பிரிவுகளை உள்ளடக்கிய கரைதுறைப்பற்று பிரதேசம் காணப்படுகின்றது 46 கிராம சேவை பிரிவுகளை கொண்ட பிரதேசத்தில் 13ஆயிரத்தி 280 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.ஆடைத்தொழில்சாலையுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்கள் என (21.05.21 வரை) 88 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.