சீனாவுடனான தொடர்பு : இலங்கை இழைத்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளோம் – பங்களாதேஷ்

சீனாவுடனான தொடர்புகளைப் பேணும்போது இலங்கை இழைத்த தவறுகளிலிருந்து தமது நாடு பாடம் கற்றுக்கொண்டுள்ளதாக பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் வெளிவிவகார ஆலோசகர் கௌஹர் ரிஸ்வி தெரிவித்துள்ளார்.

அதுமாத்திமன்றி சீனாவுடனான தொடர்புகளின் போது மிகவும் சீரானதும் சரிவர அளவீடு செய்யப்பட்டதுமான முதலீட்டுக்கொள்கையையே தாம் பின்பற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனா தனது ‘கடன்பொறி’ மூலோபாயத்தைப் பயன்படுத்தி அபிவிருத்தியடைந்துவருகின்ற மற்றும் அபிவிருத்தியடையாத நாடுகளைக் கவர்ந்திழுக்கும் வேளையில், இவ்வாறானதொரு கருத்து வெளியாகியிருப்பதாக சர்வதேச ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை மற்றும் கிழக்கு ஆபிரிக்க நாடான ஜிபோட்ரி போன்ற நாடுகள் சீனாவிடம் பெற்ற கடனை மீளச்செலுத்துவதற்கான ஆற்றலை இழந்துள்ளமையால் அவற்றின் சொத்துக்கள் மீதான கட்டுப்பாட்டை சீனாவிற்கு வழங்குவதற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளமையில் இருந்து தமது நாடு பாடம் கற்றுக்கொண்டுள்ளதாக ரிஸ்வி தெரிவித்துள்ளார்.

சீனாவிடம் ஜிபோட்ரி பெற்ற கடனின் பெறுமதி, அந்நாட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 70 சதவீதமானவற்றையும் விட அதிகமாகும் என்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

மேலும் ‘எமது நாட்டின் இறையாண்மையை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதை நாம் நன்கு அறிந்துள்ளோம்.

விடுதலையை இலக்காகக்கொண்ட போராட்டத்தின் ஊடாக நாம் தற்போது சுதந்திர நாடாக மாற்றமைந்துள்ளோம்.

ஆகவே எமது பெறுவனவுகளைச் சரிவரக் கண்காணிக்கும் அதேவேளை, வெளிநாடுகளிடமிருந்து பெறும் கடன்களை மீளச்செலுத்தக்கூடிய எமது ஆற்றல் தொடர்பிலும் மிகுந்த அவதானத்துடன் இருக்கின்றோம்’ என்றும் பங்களாதேஷ் பிரதமரின் வெளிவிவகார ஆலோசகர் ரிஸ்வி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜெனீவா தீர்மானத்தை அச்சமின்றி எதிர்கொள்வோம்

நாட்டின் இறையாண்மையை பாதுகாத்துக் கொண்டு ஜெனீவா மனித உரிமை பேரவையின் தீர்மானங்களுக்கு அச்சமின்றி முகங்கொடுக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பங்கேற்கும் கிராமத்துடன் கலந்துரையாடலின் 16ஆவது நிகழ்ச்சித் திட்டம் மாத்தறை மாவட்டத்தின் பிட்டபத்த பிரதேச செயலக பிரிவிலுள்ள கிரிவெல்கெல வடக்கு மூன்றாம் பியவர கிராம உத்தியோகத்தர் பிரிவில் இன்று (27) நடைபெற்றது.

இதன்போது உரையாற்றி ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார்.

´உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும், தேசிய பாதுகாப்பு குறித்து கடந்த அரசாங்கம் அக்கறை காட்டாததால் தான் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் பேரில் இராணுவ வீரர்கள் சிறையில் அடைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டன. அந்த வழக்குகளில் இருந்து அவர்களை வெளியேற்றுவதில் இப்போது எனக்கு ஒரு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. சர்வதேசத்திற்கு சென்று ஜெனீவாவில் தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கி எமது இறையாண்மையை எமது சுதந்திரத்தை முழுமையாக அழித்து விட்டார்கள்.

அந்த இணை அனுசரணையில் இருந்து நாம் விலகியுள்ளோம். அவர்கள் எங்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள்.அது ஒரு பொருட்டல்ல. நாம் அதை எதிர்கொள்ள முடியும்.நாங்கள் ஒரு சுதந்திர நாடு. நாம் எங்கள் வேலையைச் செய்யலாம்.நாம் அவர்களை அச்சமின்றி எதிர்கொள்கிறோம். அதுதான் தேவை. இந்தியப் பெருங்கடலில் இருக்கும் சக்திகளின் அதிகார போராட்டதில் நாம் தலையிடத் தேவையில்லை. அதிகாரப் பகிர்வு என்ற பெயரில் பிரிவினைவாதத்தை மீண்டும் கொண்டுவருவதற்கும் அவர்களின் புவிசார் அரசியல் நலன்களை நிறைவேற்ற நமது இறையாண்மையைக் காட்டிக் கொடுப்பதற்கும் நாங்கள் தயாராக இல்லை´ என்றார்.

Posted in Uncategorized

முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பே தொடர் தாக்குதல்களை தடுக்க காரணம் – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு எதிராக முஸ்லிம் மக்கள் நின்றதனால் தான் இந்த தொடர் தாக்குதலை முறியடிக்க முடிந்தது எனத் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வருகின்ற மாதம் 4ம் திகதி மீண்டும் உயிர்த்த ஞாயிறு வரவிருக்கின்றது. அந்த சமயம் இந்த தேவாலயங்களில் படுகொலை செய்யப்பட்டவர்களுடைய குடும்பங்களுக்கு ஒரு சோகநாளாக அமையவிருக்கிறது.

அன்றைய தினம் புத்தாடையணித்து இறைவனைப் பிரார்த்திப்பதற்காகச் சென்ற மக்கள், என்ன நடக்கப்போகிறது எனத் தெரியாத ஒரு சூழ்நிலையிலேயே அந்த தாக்குதல் இடம்பெற்றது. தேவாலயங்கள் அந்த தாக்குதலுக்குத் தெரிவு செய்யப்பட்டதற்கு என்ன காரணம் என்று இன்றுவரை கண்டுபிடிக்கமுடியவில்லை.

அதேபோல உல்லாச விடுதிகள் தாக்கப்பட்டது, வெளிநாட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டது கூட இந்த நாட்டுக்கு வெளிநாட்டவர்கள் வரக்கூடாது என்பதா அல்லது வேறு திட்டங்களை வைத்துச் செய்தார்களா என்பது தொடர்பில் எந்த செய்தியும் வெளிவரவில்லை.

ஆனால் முஸ்லிம் மக்கள் இந்த தாக்குதலுக்கு எதிராக நின்றதனால் தான் இந்த தொடர் தாக்குதலை முறியடிக்க முடிந்தது, தாக்குதல்தாரர்களை கைது செய்ய முஸ்லிம் மக்கள் ஒத்துழைத்தமையால் தொடர் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

 

ஜேர்மன்: தமிழ் அகதிகளை நாடு கடத்த முயற்சி- தமிழ் அமைப்புக்கள் போராட்டத்திற்கு அழைப்பு

ஜேர்மனியில் தஞ்சம்கோரித் தங்கியிருந்த தமிழ் அகதிகள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஜேர்மனியின் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா (North Rhine-Westphalia) பகுதியில் 30இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கடந்த சில நாட்களில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள், பெரனில் உள்ள நாடு கடத்தல் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வரும் மார்ச் 30ஆம் திகதி அவர்கள், டுசெல்டோர்ஃப் (Düsseldorf Airport) விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு கூட்டு விமானத்தில் நாடு கடத்தப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு தமிழ் அமைப்புகள் நாளை ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

Posted in Uncategorized

சகல முயற்சிகளுக்கும் இலங்கைக்கு ஆதரவளிக்கத் தயார் – ஐ.நா.விற்கான பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர்

இலங்கையில் அர்த்தமுள்ள வகையிலான நீதிப்பொறிமுறையை வலுப்படுத்துவதற்கும் பொறுப்புக்கூறலையும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதற்கும் முன்னெடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவு வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக பொதுநலவாய நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கான பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் தாரிக் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :

‘இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய பிரேரணையை வரவேற்கின்றேன்.

இது இலங்கையில் போரின் பின்னரான காலப்பகுதியில் நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துவதில் சர்வதேச சமூகம் தொடர்ந்தும் அக்கறை கொண்டிருப்பதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

அதுமாத்திரமன்றி இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறுவதற்கான அச்சம் இருப்பதாகக் குறிப்பிட்டு மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரதிபலிப்பாகவும் இந்தப் புதிய பிரேரணை அமைந்துள்ளது.

அதேவேளை பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்காக எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவிருக்கும் நடவடிக்கைகளுக்கு அவசியமான ஆதாரங்களைத் திரட்டுவதையும் கண்காணிப்புக்களை மேற்கொள்வதையும் ஐக்கிய நாடுகள் சபை தொடரவேண்டும்.

Posted in Uncategorized

பௌத்தத்திற்கே அதிக முன்னுரிமை – புதிய அரசியலமைப்பிற்கு சுதந்திர கட்சி பரிந்துரை

புதிய அரசியலமைப்பில் பௌத்தத்திற்கு அதிக முன்னுரிமை வழங்கும் யோசனையினை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ளது.

புதிய அரசியலமைப்பின் வரைபு தொடர்பான நிபுணர் குழுவிடம் நேற்று மாலை கட்சியின் யோசனைகளை முன்வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அக்கட்சியின் பிரதித் தலைவர் நிமல் சிரிபால டி சில்வா இவ்வாறு கூறினார்.

மேலும் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பது குறித்த சரத்துக்களை வலுப்படுத்தும் திட்டத்தையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விலங்கு பாதுகாப்பு குறித்த பரிந்துரைகளையும் முன்வைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

கிராமப்புறங்களில் உள்ளவர்கள் மனுக்களை தாக்கல் செய்யவும், அவர்கள் தங்கள் குறைகளை முன்வைக்கும் விதமாக உயர் நீதிமன்றத்திடம் இருந்த அதிகாரத்தை மாவட்ட மேல் நீதிமன்றங்களுக்கு வழங்குவது குறித்தும் பரிந்துரைத்ததாக நிமல் சிரிபால டி சில்வா கூறினார்.

அத்தோடு மாகாண சபை முறையை வலுப்படுத்துவது குறித்தும் முன்னுரிமை வாக்களிப்பு முறையை இரத்து செய்யவும் தேர்தல்களில் 25% பெண் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளதாக நிமல் சிரிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

புதுக் கலவையுடன் மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டம்!

விகிதாசார பிரதிநிதித்துவம் மற்றும் கடந்த தேர்தல் முறை ஆகிய ஆகியவற்றின் கலவையுடன் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான அங்கீரத்தை அமைச்சரவை கோரியுள்ளது.

எவ்வாறாயினும், எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அதை ஆராய்ந்து பரிந்துரைகளைக் சமர்ப்பிக்க அதிக நேரம் கோரியதைத் தொடர்ந்து, உத்தேச சட்டத்திற்கான அமைச்சரவை அனுமதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆகவே சட்டரீதியான தடைகளைத் தீர்த்த பின்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை தாமதமாக நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த அரசாங்கம் மாகாண சபைகளின் தேர்தல் சட்டத்தில் திருத்தம் வடிவில் ஒரு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியது.

குறித்த பரிந்துரையின்படி, விகிதாசார பிரதிநிதித்துவத்தின் கீழ் 50 சதவீத உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க கலப்பு முறையின் கீழும் மீதமுள்ளவை கடந்த முறையின் கீழும் இடம்பெறும்.

இருப்பினும், டிலிமிட்டேஷன் செயல்முறை ஒரு சட்டபூர்வமான சிக்கலை கொண்டுவந்துள்ள நிலையில் தற்போதைய சட்டத்தின் அடிப்படையில் வாக்கெடுப்பை நடத்துவது சாத்தியமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம் குறித்த விடயத்தை திருத்துவதற்கும் புதிய சட்டத்தை கொண்டுவரவும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் கடந்த வாரம் ஒரு புதிய அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தார்.

குறித்த அமைச்சரவை பத்திரத்தின் பிரகாரம், 70 சதவீத உறுப்பினர்கள் கடந்த கால தேர்தல் முறையின் கீழும் தபால் மூல வாக்களிப்பு உட்பட மிகுதி நடவடிக்கையை விகிதாசார முறைப்படியும் நடத்த பரிந்துரைக்கப்பட்டது.

மாகாண சபைகளை அமைத்து அதன் மூலம் உள்ளூராட்சி நிர்வாகத்தை வலுப்படுத்த வேண்டும் என இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள ஐ.நா. தீர்மானம் கோரும் அதேவேளை அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை அமுல்படுத்த இந்தியாவும் வலியுறுத்துகிறது.

இருப்பினும், சில ஆளும் கட்சி உறுப்பினர்கள் 13 வது திருத்தம் ஊடாக அதிகார பகிர்வினை வழங்க கூடாது என கருத்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

யாழ். நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் விசமிகள் சிலர் கழிவு ஓயிலை ஊற்றியுள்ளமை இந்துக்கள் மத்தியில் கவலையை தோற்றுவித்துள்ளது

யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் விசமிகள் சிலர் கழிவு ஓயிலை ஊற்றியுள்ளமை இந்துக்கள் மத்தியில் பெரும் கவலையை தோற்றுவித்துள்ளது.

கடந்த 25 ஆம் திகதி நல்லூரில் முத்தியடைந்த யோகர் சுவாமியின் குருபூசை தினத்தன்று இந்த செயலை அவர்கள் செய்துள்ளனர்.

அதன்படி நல்லூரானின் தேரடியிலும் , நல்லூரான் வாசலில் பக்தர்கள் அமரும் இடங்களிலும் இவ்வாறு கழிவு ஓயிலை விசமிகள் ஊற்றி வைத்துள்ளனர்.

இந்துக்கள் மிகவும் புனிதமாக போற்றும் நல்லூரான் ஆலயத்தில் விசமிகளின் இந்த செயலுக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் நல்லூர் ஆலயத்தின் புனிதத்தன்மையை கெடுப்பதற்காக இவ்வாறு கழிவு ஓயிலை ஊற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விபரம் கோரிய இராணுவத்தை எச்சரிக்கை செய்து அனுப்பிய ரெலோ தவிசாளர் நிரோஷ்

நிலாவரையில் வைத்து தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஷின் விபரங்களைக்கோரிய இராணுவத்தினை அவர் எச்சரிக்கை செய்து அனுப்பினார்.

இன்று வெள்ளிக்கிழமை நிலாவரை பகுதியில் இராணுவத்தினரும் தொல்லியல் திணைக்களத்தினரும் இணைந்து அகழ்வுப் பணியில் ஈடுபட்ட முயற்சித்தனர். இந் நிலையில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் இளைஞர்களுடன் சென்று, என்ன நடக்கின்றது என தொல்லியல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளரிடம் கேள்வி எழுப்பினார். அதன்போது குறுக்கிட்ட இராணுவ சிப்பாய் ஒருவர் தவிசாளரிடம் நீங்கள் யார்? உங்களது பெயர் என்ன என வினவியதுடன் குறிப்புப் புத்தகத்தில் எழுதுவதற்காக தன்னை தயார்ப்படுத்திக்கொண்டார்.

இதனையடுத்து தவிசாளர் தியாகராஜா நிரோஷ், நீங்கள் யார்… எதற்காக விபரம் சேகரிக்கின்றீர்கள? உமக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது இந்த இடத்தில் என்ற போது, தான் கஜபா ரெஜிமண்ட்டைச் சேர்ந்த இராணுவ வீரார் என ஏற்றுக்கொண்டதுடன் தாம் மேலுடத்திற்கு தகவல் அனுப்ப வேண்டும் என்றார்.

தவிசாளர் உமக்கு எதாவது இங்கே தேவைப்படுகின்றதா? எதாவது அலுவல் இருக்கின்றதா? ஊங்கட வேலையை நீங்கள் பாருங்கள் என கடுந்தொனியில் எச்சரித்தபோது அவ் இராணுவத்தினர் உடனடியாக நிலாவரை கிணற்று வளாகத்தில் நீர் வளச் சபையினால் அமைக்கப்பட்டுள்ள பின்பக்கமாகவுள்ள நுழைவாயில் வழியாக ஒருவாறு அப் பிரதேசத்தில் இருந்து நழுவினார். பின் பிரதேசத்தில் மூலிகைத்தோட்டத்தில் உள்ள இராணுவ முகாமிற்குச் சென்றனர். குறித்த இராணுவத்தினர் இராணுவ ரீசேட் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தவிசாளர் தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரிகளிடத்திலும் தங்கள் திணைக்களம் இராணுவ மேற்பார்வையுடனா நடைபெறுகின்றது எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு தொல்லியல் திணைக்களத்தினர் மௌனம் காத்தனர்.

மூதூர் அம்மன் நகர் வித்தியாலய முன்பள்ளி பாலர் பாடசாலைக்கு நிதி உதவி -ரெலோ திருகோணமலை மாவட்டம்

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசம் கட்டைப்பறிச்சான் அம்மன் நகரில்
அம்மன் நகர் வித்தியாலயத்தின் முன்பள்ளி பாலர் பாடசாலை திருகோணமலை மாவட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்க ( ரெலோ) அமைப்பால் மீள் புனரமைக்கப்பட்டு வர்ண ஓவியங்கள் வரையப்பட்டு முன்பள்ளிக்குத் தேவையான கற்றல் உபகரணங்களும் பிள்ளைகளுக்குரிய பாதணிகளும் பாடசாலை முன் அலங்கரிப்புக்காக பூச்சாடிகளும் ரூபா. 50 000 பெறுமதியில் வழங்கப்பட்டது. இதற்கான நிதி உதவியை ரெலோவின் மூத்த உறுப்பினரும் பிரித்தானியாவில் வசிப்பவருமான புவனேஸ் [ உப்புவெளி ] வழங்கியிருந்தார்.

இன்று பிற்பகல் 3 மணிக்கு என்னுடன் திருமலை மாவட்ட ரெலோ அமைப்பாளர் விஜயகுமார் ( சார்ல்ஸ்) , திருமலை மாவட்ட வெளிநாட்டுக் கிளைத் தொடர்பாளர் சிதம்பரநாதன் ( மணி) , கட்சி முக்கியஸ்தர் கமலேஸ், சஞ்சீவன் ஆகியோர் கலந்து கொண்டு மீள் திறப்பு விழாவைச் செய்திருந்தோம்.

மதிப்பிற்குரிய அதிபர் இராசதுரை அவர்கள் இந்நிகழ்வை நடத்தி இருந்தார். ரெலோவின் ஆரம்பகால உறுப்பினர்கள் அதிகமாக வசித்த இடம் அம்மன் நகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized