தமிழர்களுக்கான பரிகார நீதியை இந்தியாவே பெற்றுக் கொடுக்க வேண்டும் -ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

தமிழர்களுக்கான பரிகார நீதியை இந்தியாவே பெற்றுக் கொடுக்க வேண்டும் என ரெலோ இளைஞர் அணி தலைவரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான சபா குகதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஈழத் தமிழ் மக்களுக்கு நடந்த போர்க்குற்றங்கள் மனிதப்படுகொலைகள் இனப்படுகொலைகள் போன்றவற்றுக்கான பரிகார நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டிய தார்மீக கடமை இந்திய மத்திய அரசிடமே உள்ளது. காரணம் முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் நடைபெற்ற காலத்தில் இன்றைய இலங்கைப் பிரதமர் மகிந்த ராஐபக்ச அன்றைய ஐனாதிபதியாக இருந்தார். அவர் அன்று இந்திய அரசிடம் கூறிய விடையம் விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு எங்களுக்கு உதவி புரியுங்கள் நான் அவர்களை அழித்த பின்னர் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வினை வழங்குவேன். இதனை மகிந்த கூறி 12 ஆண்டுகள் கடந்து விட்டது. புலிகள் அழிக்கப்பட்டுவிட்டார்கள். இலட்சக்கணக்கான தமிழ் மக்களும் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இந்தியா உதவி செய்தமைக்கு இலங்கை அரசாங்கம் குறிப்பாக மகிந்த ,கோட்டாபய போன்றோர் பாராட்டுக்களையும் நன்றியையும் பல தடவைகள் தெரிவித்து விட்டனர். ஆனால் ஈழத் தமிழர்களுக்கு தீர்வுக்கான எந்த முயற்சிகளும் இன்றி மேலும் அடக்குமுறைகளுக்கும் இன ஒடுக்குதல்களுக்கும் உள்ளாகி பரிகார நீதியும் காலம் தாழ்த்தப்பட்டு நீர்த்துச் செல்கின்றது.

பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பு தொடர்ச்சியாக இந்தியா தங்களை காப்பாற்றும் தங்களுக்கான நீதியைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையை கொண்டிருக்கும் போது ஐ நா மனித உரிமைப் பேரவையில் 46/1 தீர்மானத்தில் நடுநிலை வகித்தமையை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழர்களுக்கு இந்தியா மீது அதிர்ச்சி ஏற்பட்டமைக்கு காரணம் என்றும் இல்லாத வகையில் இம்முறை வந்த மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தில் இந்தியாவால் இலங்கை அரசியலமைப்பில் 1987 கொண்டுவரப்பட்ட 13 திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுழ்ப்படுத்தவும், மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடாத்தப்படவேண்டும், மாகாணங்களுக்கான அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் உள்ளிட்ட விடையங்கள் கொண்டுவரப்பட்டன. இதே விடையத்தை பாரதப் பிரதமர் நரேந்திரமோதி இலங்கை அரச பிரதிநிதிகளை சந்திக்கும் போது அண்மைக்காலங்களில் வலியுறுத்தி வந்துள்ளார்.

ஆனால் ஐ நா தீர்மானத்தில் இந்தியா வலியுறுத்தும் விடையம் தீர்மானமாக இருந்தும் அதனை ஆதரிக்காது நடுநிலை வகித்தமை தான். இதுவே ஈழத் தமிழர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு நீதி கிடைக்கும் அதனை இந்தியா பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையுடன் இலங்கை அரசு போன்று வேறு தரப்புக்களை நாடாது பாரத தேசத்தையே நம்பினார்கள் தமிழ்த் தலைமைகளும் பாரிய நம்பிக்கையை மக்களுக்கு கொடுத்தார்கள் ஆனால் ஐெனிவாவில் இந்தியாவின் முடிவுகள் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.

இலங்கையின் வடகிழக்கு மாகாணங்கள் இந்தியாவின் தென்பகுதியின் பாதுகாப்பிற்கு என்றுமே புவியியல் ரீதியாக முக்கியமானவை அவற்றை வேறு சக்திகள் காலணித்துவத்திற்கு உட்படுத்தாமல் ஈழத் தமிழர்களின் ஆளுகையில் இருப்பதை உறுதி செய்வது இந்தியாவின் இராஐதந்திரப் பொறுப்பு.

மறுக்கப்பட்ட உரிமைக்காக போராடிய ஈழத்தமிழர்களுக்கு பரிகார நீதியை பெற்றுக் கொடுப்பதுடன் நிலையான தீர்வினையும் சமாதானத்தினையும் காலம் தாழ்த்தாது இலங்கை அரசிற்கும் தமிழர் தரப்புக்கும் இடையிலான மத்தியஸ்தத்துடன் இந்திய மத்திய அரசு பெற்றுக் கொடுக்க வேண்டும். இதனையே ஈழத் தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்” என்றார்.

பெதுச்சபையில் நிதி ஒதுக்கீட்டை முறியடிக்க சிறீலங்கா திட்டம்?

இந்த வாரம் ஜெனீவாவில் சிறீலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்த விவாதம் ஐ.நாவின் 76 ஆவது பொதுச்சபையில் இடம்பெறும் போது அதனை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் சிறீலங்கா அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

சிறீலங்காவின் நடவடிக்கைகளை கண்காணிக்க மற்றும் சாட்சியங்களை சேகரித்து பாதுகாப்பதற்கு என ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு 2.8 மில்லியன் டொலர்கள் நிதி உதவியை கோரவுள்ளது.

இந்த விவகாரத்தை எவ்வாறு தொழில்நுட்ப ரீதியாக அணுகுவது என்பது குறித்து சிறீலங்கா அரசு சிந்தித்து வருகின்றது.

ஐ.நா பெருமளவு நிதியை கோரவுள்ளதானது அது நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதை காட்டுவதாக ஐ.நாவுக்கான பாகிஸ்தான் பிரதிநிதி கலீல் ஹசீமி தெரிவித்திருந்தார்.

இதனிடையே, சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள் குறித்து சேகரிக்கப்படும் ஆதாரங்களில் செய்மதி புகைப்படங்களின் ஆதாரங்களையும் ஆய்வு செய்வதற்கு ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

தமிழ் மக்கள் மற்றும் அமைப்புக்கள் தம்மீது இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களை உரிய முறைப்படி ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் அல்லது அது சார்ந்த மனித உரிமை அமைப்புக்களின் ஊடாக சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ஜெனிவா பிரேரணையை நிராகரிக்கிறோம் : உள்ளகப் பொறிமுறையின் ஊடாக விசாரணைகள் – தினேஷ் குணவர்தன

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள புதிய தீர்மானமானது இலங்கையின் இறைமைக்கும்,சுயாதீனத்திற்கும் எதிரானதுடன், நாட்டில் ஸ்திரமற்ற அரசியல் நிலைமை ஒன்றை உருவாக்கி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு நெருக்கடியை கொடுக்கும் நோக்கத்திலேயே பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன சபையில் தெரிவித்தார்.

மனித உரிமைகள் பேரவையில் பிரேரணையை முழுமையாக நிராகரிப்பதுடன் உள்ளகப் பொறிமுறையின் ஊடாக விசாரணைகளை மேற்கொள்வோமெனவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, நடைபெற்று முடிந்துள்ள ஜெனிவா கூட்டத்தொடரின் இலங்கை தொடர்பிலான பிரேரணை குறித்து வெளிவிவகார அமைச்சின் விசேட அறிவிப்பை அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று சபையில் விடுத்தார்.

இதன்போது அவர் கூறுகையில்,

உலகின் மிகவும் மோசமான பயங்கரவாத அமைப்பை தோற்கடிக்க பல்வேறு அரசாங்கங்கள் முயற்சித்தாலும், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மூலமாக விடுதலைப்புலிகள் பயங்கரவாதத்தை முழுமையாக தோற்கடித்து இந்த நாட்டு மக்களின் உயிர்வாழும் உரிமையை பெற்றுக்கொடுத்தோம்.

மனித உரிமைகள் பற்றி இன்று பேசும் நபர்கள் அப்போதைய காலகட்டத்தில் மக்களின் உரிமைகள் பறிபோய், வாழ முடியாத பயங்கரமான சூழல் நிலவிய நிலையில் அதனை மறைத்து,விடுதலைப்புலிகளின் நிருவாக முறையொன்றை உருவாக்கிக்கொள்ள முடியும் என்ற நோக்கத்தில் ஒற்றையாட்சி முறையை நிராகரித்து தனி ஈழ இராச்சியத்தை உருவாக்கிக்கொள்ளும் நோக்கத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒத்துழைப்பு வழங்கிய நபர்கள் இன்றும் வேறு வழிகளில் முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

மனித உரிமைகள் குறித்து பேசும் நபர்கள் இந்த நாட்டில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதை விரும்பவில்லை என்பதும் வெளிப்பட்டுள்ளது. அதன் வெளிப்பாடே 2012,2013,2014 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு எதிரான பிரேரணைகளை கொண்டுவர காரணமாக அமைந்தது. எனினும் எமது இராணுவம் மனிதாபிமான ரீதியில் செயற்பட்டனர்.

மூன்று இலட்சம் பொதுமக்களை பிரபாகரனிடம் இருந்து காப்பற்றி அமைதியான சூழலில் அவர்களை வாழ வைத்தோம். எமது தாய்நாட்டை பாதுகாக்க இராணுவத்தின் மூலமான சேவையை எவரும் மறந்துவிடக்கூடாது. அதுமட்டுமல்ல கைதுசெய்யப்பட்ட மற்றும் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு வழங்கி 12 ஆயிரம் பேரை சமூகத்தில் மக்களுடன் வாழ அனுமதித்தோம். இன்று வடக்கு மக்களின் வாழ்க்கை சாதாரண நிலைக்கு வந்துள்ளது.

விடுதலைப்புலிகள் இந்த நாட்டில் மிகவும் மோசமான பயங்கரவாத அமைப்பாக மாற்றம் பெற்றது, அதன் பின்னர் எமது நாட்டின் ஜனாதிபதியை கொலை செய்தனர், இலங்கைக்கு அப்பால் சென்று இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தனர்.

இந்த நாட்டில் ஜனநாயக ரீதியில் செயற்பட்ட அரசியல்வாதிகள் பலரை கொலை செய்தனர். எம்முடன் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர்கள் சகலரையும் கொலை செய்தனர். இவ்வாறான அராஜக இயக்கத்தை தோற்கடிக்க முடிந்த காரணத்தினால் தான் இன்று நாடாக பிளவு படாது ஜனநாயகத்தை வென்றெடுத்து ஒன்றிணைந்து பயணிக்க முடியுமாக உள்ளது.

எனினும் வெவ்வேறு நாடுகளில் உள்ள சிறுசிறு அமைப்புகள் தமது அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுத்து இலங்கைக்கு எதிராக செயற்பட கூறுகின்றனர். எனினும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் அமைப்புகளுடன் நீண்டகால உறவை இலங்கை கையாண்டு வருகின்றது.

எமது அரசாங்கத்திற்கு கிடைத்த ஆணைக்கு அமைய நாம் 2015 இணை அனுசரணையுடன் கொண்டுவரப்பட்ட ஜெனிவா பிரேரணையில் இருந்து விலகிக்கொள்வதாக நாம் அறிவித்தோம். ஏனெனில் இந்த பிரேரணை நாட்டின் இறையாண்மை, நல்லிணக்கம், அரசியல் அமைப்பிற்கு முரணானது.

பல்வேறு நாடுகளிடம் இருந்து எம்மை துருவப்படுத்தும் செயற்பாடாகும், அத்துடன் நாட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் இராணுவத்திற்கு எதிரான நகர்வை இது முன்னெடுக்கும் எனவும் நாம் கருத்தில் கொண்டு பிரேரணையை நிராகரிக்க நடவடிக்கை எடுத்தோம். எந்தவொரு வெளிநாட்டு நீதிப்பொறிமுறையும் எமது சுயாதீன நீதி சேவையில் தலையிட இடமளிக்க முடியாது. ஆனால் இணை அனுசரணை பிரேரணை இவை அனைத்தையும் செய்கின்றது.

அதுமட்டுமல்ல ஒரு சில நாடுகளின் தேவைக்காக மாத்திரமே இந்த பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது, உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பில் மனிதவுரிமைகள் பேரவையில் காரணிகளை முன்வைக்க முடியாது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசை சிக்கலுக்கு உள்ளாக்கும் நோக்கிலும் நாட்டில் ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலைகளை உருவாக்குவதும் தீர்மானத்தின் நோக்கமாகும்.

புவியியல் ரீதியாக தமது அரசியல் நோக்கங்களை அடைந்துக்கொள்வதற்கான சில நாடுகள் பலவீனமான நாடுகளை மனிதவுரிமை விவகாரங்களின் ஊடாக நசுக்குவதற்கு முற்படுவதே மனிதவுரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள். இலங்கைக்குச் சார்ப்பாக வாக்களித்த நாடுகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இலங்கையின் உண்மையான நட்பு நாடுகள் தீர்மானத்தின் வாக்கெடுப்பில் பங்கேற்காமலும் இருந்தன.

யுத்த காலகட்டத்தில் ஏதேனும் தவறுகள் ஏற்பட்டிருப்பின் பாதிக்கப்பட்டவர்கள் சகலரும் முறைப்பாடுகளை செய்து விசாரணைகளை முன்னெடுத்து தீர்வு வழங்கும் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதையும் நாம் பேரவையில் தெரிவித்தோம். விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தில் எவரும் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றால் அவர்கள் அது குறித்து ஆராயப்படும், அதேபோல் எவரேனும் காணாமல் போயிருந்தால் அவர்கள் பிரித்தானியாவில் பிரஜாவுரிமையை பெற்றுக்கொள்ளவில்லை என்றால் அவர்கள் குறித்து ஆராய முடியும். ஏனென்றால் பிரித்தானியாவில் பிரஜாவுரிமை பெற்ற நபர்களின் பட்டியலை இன்னமும் பிரித்தானியா எமக்கு வழங்கவில்லை. எனவே குற்றச்சாட்டுக்கள் இருப்பின் ஆதாரங்களுடன் எமக்கு முன்வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாகாணசபை தேர்தலை நடத்தவில்லை, அதேபோல் இலங்கை கொவிட் -19 நிலைமைகளை கையாள தெரியாத நாடாகவும் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஆனால் உலகில் கொவிட் -19 நிலைமைகளை சரியாக கையாண்ட நாடுகளில் நாம் உயரிய இடத்தில் உள்ளோம். மாகாணசபை தேர்தலை நடத்தாது இருக்கவும் இதுவே காரணமாகும். இலங்கையின் நிலைமைகளை முறையாக தெரிந்துகொள்ளாது,தரவுகளை சேகரிக்காது அர்த்தமற்ற அறிக்கைகளை ஆணையாளர் வெளியிட்டு வருகின்றார்.

எவ்வாறு இருப்பினும் இம்முறை வாக்கெடுப்பில் 47 நாடுகள் பங்குபற்றிய நிலையில் 22 நாடுகள் பிரேரணைக்கு ஆதரவாகவும், 11 நாடுகள் எதிராகவும் வாக்களித்தனர். 14 நாடுகள் நடுநிலையாக செயற்பட்டனர். எனவே ஒட்டுமொத்தமாக இந்த பிரேரணைக்கு பெரும்பான்மை ஆதரவு இல்லை. எவ்வாறு இருப்பினும் இந்த பிரேரணையை முழுமையாக நிராகரிப்பதாக அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.

ஏனெனில் இது பக்கசார்பானதும் இந்த பிரேரணைக்கு பின்னால் அரசியல் நகர்வுகள் உள்ளதாகவும் கருதுகின்றோம். அத்துடன் ஒருதலைப்பட்சமான தீர்மானமாக கொண்டுவரப்பட்டதும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கட்டளைகளை மீறிய வகையிலும், பொய்யான ஆதாரங்களை கொண்டும் உருவாக்கப்பட்ட இந்த பிரேரணையை முழுமையாக நாம் நிராகரிக்கின்றோம். எனவே எமது இறையாண்மை, பாதுகாப்பை உறுதிப்படுத்த எமக்குள்ள ஒரே வழிமுறை இந்த பிரேரணையை நிராகரிப்பது மட்டுமேயாகும்.

இந்த அறிக்கையை இரண்டாக பிரித்து பார்க்க முடியும். ஒன்று விடுதலைப்புலிகளுடன் இடம்பெற்ற மோதலில் அவர்கள் தோற்கடிக்கப்பட்ட காலகட்டத்தில் ஏற்பட்டதாக கூறப்படும் இன அழிவுகள் குறித்த விசாரணை நடவடிக்கைகள், இரண்டாவதாக இலங்கையில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக்கொண்டு முன்னைய அரசாங்கத்தை தோற்கடித்து.

இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவாகி எமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பாதுகாத்துள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் ஆட்சி முறைமை குறித்த விமர்சனங்களாகும். இந்த விடயங்கள் நாட்டின் உள்ளக செயற்பாடுகளில் மனித உரிமைகள் பேரவைக்கு காரணிகளை கூறவும் அல்லது அறிக்கையிடும் முறைமை இதுவல்ல. ஒரு சிலர் இங்கிருந்து கூறிய காரணிகள் அறிக்கையில் பார்க்க முடிகின்றது. ஆகவே இது நாட்டினையும் ஜனாதிபதியையும் பலவீனப்படுத்த எவ்வாறு இணைந்து செயற்பட்டுள்ளனர் என்பதை அவதானிக்க முடிகின்றது.

அதேபோல் அதிகளவிலான பணத்தை செலவழித்து இந்த பிரேரணையை நிறைவேற்றிக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த பணத்தை யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு கொடுத்து, அவர்களுக்கான வீடுகளை அமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுத்திருந்தால் ஆரோக்கியமானதாக இருந்திருக்கும். எனவே தவறான தரவுகளும், பொய்யான சாட்சியங்களையும் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு சில நாடுகளின் தேவைக்காக கையாளப்படும் இந்த பிரேரணையை நாம் முழுமையாக நிராகரிக்கின்றோம்.

இன்று உலகில் நூறுக்கும் அதிகமான நாடுகள் கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒரு தடுப்பூசியை கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். இந்த காலகட்டத்தில் மனிதாபிமானமாக செயற்படும் அவசியம் உள்ள நிலையில் ஒரு நாட்டின் இறையாண்மையை பலவீனப்படுத்தும் வேலைகளை மனித உரிமைகள் பேரவை முன்னெடுத்து வருகின்றது.

அதேபோல் எமக்கு ஆதரவாக வாக்களித்த எம்மை ஆதரித்த எமது உண்மையான நட்பு நாடுகள் அனைவருக்கும் நாம் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும் இலங்கை உள்ளக பொறிமுறையை கையாண்டு நாட்டின் நல்லிணக்கத்தையும் அமைதியையும் உருவாக்கி நாட்டினை ஒன்றிணைக்கும் நடவடிக்கையை கையாள்வோம்.

நிலையான அபிவிருத்தி இலக்கை நோக்கிய எமது பயணத்தையும் நாம் முன்னெடுப்போம். 47 ஆம் கூட்டத்தொடரில் அறிக்கை தொடர்பிலான காரணிகளும், எழுத்து மூலமான அறிக்கை 59 ஆம் கூட்டத்தொடரிலும் முன்வைக்கப்படும். எனவே நீண்ட பயணம் ஒன்றினை முன்னெடுக்க வேண்டியுள்ளது என்றார்.

Posted in Uncategorized

நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறல் ரெலோ தவிசாளர் நிரோஷ்தலையீட்டில் தடுத்து நிறுத்தப்பட்டது.

நிலாவரை கிணற்றடியில் இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து மேற்கொள்ள முயற்சித்த அகழ்வுப்பணியை தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஷ்,பொருளாளர் விந்தன் உள்ளிட்டவர்கள் தலையிட்டு தடுத்து நிறுத்தினர்.

இன்று வெள்ளிக்கிழமை (26) காலை நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் நளின் வீரரத்தின தலைமையிலான குழுவினர் நிலாவரையில் துப்புரவு செய்வதாக தெரிவ்த்து வருகை தந்தனர். சந்தேகத்தில் தவிசாளர் உள்ளிட்டவர்களும் குறித்த முயற்சியினை அவதானித்து கொண்டு நின்றனர். இதனை புலனாய்வாளர்களும் புகைப்படம் எடுத்தவண்ணமிருந்தனர்.

தொல்லியல் திணைக்களத்தினர் அத்தபாரம் போன்று நிலத்தினை வெட்டுவதற்கு ஆரம்பித்தவுடன் தவிசாளர் வளாகத்தினுள் சென்று என்ன நடக்கின்றது என தொல்லியல் திணைக்கள அதிகாரியினை கேட்க முயற்சித்தபோதுஇ கஜபா ரெஜிமண்ட் இராணுவ டீசேட் அணித்த ஒருவர் தவிசாளரை விசாரிக்க முற்பட்டார். தவிசாளர் இராணுவம் உமக்கு என்ன வேலை இங்கு என குறித்த இராணுவ அதிகாரியைக் கேட்க தாம் மேலிடத்திற்கு தகவல் அனுப்ப வேண்டும் என்றார். இராணுவ வழிகாட்டலுடன் இங்கு என்ன நடக்கின்றது என உரத்த தொனியில் தவிசாளர் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளைக்கேட்டபோது அவர்கள் இது அரச காரியம் நடக்கின்றது. அரசியல் செய்யாதீர்கள் எனப்பதிலளித்து தாம் பிரதேச செயலகத்தில் அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

பிரதேச செயலகத்திடம் வினவப்பட்டபோது அங்கு எவ்வித அனுமதிகளும் பெறப்பட்டிருக்கவில்லை. எனவே உடனடியாக வேலைகளை நிறுத்துமாறும் தவிசாளர் தெரிவித்தார். அவர் ஏற்கனவே தொல்லியல் திணைக்களம் நல்லிணக்கத்திற்கும் இனமுரண்பாடுகளுக்கும் அடித்தளமிடுவதனால் மக்களின் நம்பிக்கையையும் இழந்துள்ளமையால் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் அனுமதி பெற்று வெளிப்படைத்தன்மை உடையதாக வேலைகளை ஆரம்பிக்க வேண்டும் என தான் கடந்த குழுக்கூட்டத்தில் கோரிக்கை முன்வைத்திருக்கின்றேன். அதற்கு முரணாக நீங்கள் செயற்பட முடியாது என்றார் தவிசாளர்.

அதற்கு தாம் உங்களுக்கு எல்லாம் பொறுப்புச்சொல்ல வேண்டியதில்லை என தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் பதிலளித்த நிலையில்இ பெருமளவு இளைஞர்களும் பொதுமக்களும் குறித்த வளாகத்திற்குள் நுழைந்தனர். தவிசாளர் இங்கு ஏற்படும் அமைதியின்மைக்கு தொல்லியல்திணைக்களத்தினதும் இராணுவத்தினதும் செயற்பாடுகளே காரணம் எனத்தெரிவித்து வாக்குவாதம் ஏற்பட்டது. அவ்விடத்திற்கு வருகை தந்த அச்சுவேலி பொலிஸார் தவிசாளரிடம் இளைஞர்களை வெளியே போகக்கூறுமாறு கேட்ட போது வேலைகள் நிறுத்தப்பட்டு உபகரணங்களுடன் தொல்லியல் திணைக்களத்திளனர் வெளியேறினால் மக்கள் உடன் வெளியேறுவர். இழுபறிகளுக்குப் பின் தவிசாளரையும் தொல்லியல் திணைக்களப் பணிப்பாளரையும் பொலிஸ் நிலையம் வருமாறு தெரிவிக்கப்பட்டது. வேலைகள் நிறுத்தப்படும் என்ற உத்தரவாதத்துடன் தவிசாளர் பொலிஸ் நிலையம் வருவதற்கு உடன்பட்டார்.

இதன் பின்னரும் தொல்லியல் திணைக்களத்தினர் தாம் வெளியே போகும் போது தமக்குப் பாதுகாப்பில்லை என்றனர். தவிசாளர் பொலிசார் ஆயுதத்துடன் நிற்கையில் உங்களை பாதுகாக்க முடியாதா? நான் பாதுகாப்பாக உங்களை பிரதேச சபைக்குக் கொண்டு செல்கின்றேன். நீங்கள் வெளியேறாவிட்டால் எம்மால் போகமுடியாது என்றார். தொடர்ந்து வாகன வசதி உடன் இல்லை என்றபோது தவிசாளர் தனது பிக்கப்பில் நீங்கள் பாதுகாப்பாக போய்ச்சேர ஏற்படு செய்வதாகத் தெரிவித்து தவிசாளரின் பிக்கப்பில் தொல்லியல் திணைக்களத்தின் உபரணங்கள் ஏற்றப்பட்டு அவர்களின் கோரிக்கைக்கு அமைய கோட்டையில் விடப்பட்டனர்.

இந்நிலையில் பொலிஸ் முறைப்பாட்டினை அணுவதற்காக அனைவரையும் வெளியேற்றிவிட்டு நிலாவரை கிணற்று வளாகக் கதவை மூடிவிட்டு தவிசாளர் வெளியேறினார்.

ஆகஸ்ட் மாதம் மாகாண சபைத் தேர்தல்? – விரைவில் அமைச்சரவைப்பத்திரம்

மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவதற்குத் தேவையான சட்டத்திருத்தம் அடங்கிய பிரேரணை இன்னும் இரு வாரங்களில் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது என அரச உயர்மட்ட வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னர், அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கும் உரிய வகையில் நிறைவேறிய பின்னர் ஆகஸ்ட் மாதமளவில் தேர்தலை நடத்துவதே அரசின் எதிர்ப்பார்ப்பாக இருக்கின்றது.

சுமார் 3 ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஏற்கனவே பணிப்புரைகளை விடுத்துள்ளனர்.

இதன்படி விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் பூர்வாங்க பணிகளை முன்னெடுத்துள்ளார்.

கட்சி தலைவர்களுடனும் இது சம்பந்தமாக அவர் விரைவில் பேச்சு நடத்தவுள்ளார்.வடக்கு, கிழக்கு உட்பட 9 மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கை அமைச்சரவை முடிவை வரவேற்றுள்ள சீன நிறுவனம்!

கொழும்பு போர்ட் சிட்டி திட்டத்தை முன்னெடுக்கும் சீன நிறுவனம், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு வரைபை வர்த்தமானியில் வெளியிடுவதற்கான இலங்கையின் அமைச்சரவை முடிவை வரவேற்றுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த இந்த திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொழும்பு துறைமுக நகர சிறப்பு பொருளாதார மண்டலத்தை நிறுவுவதற்கான திட்டத்திற்கு ஏற்கனவே ஜனவரி மாதம் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதன்படி கொழும்பு துறைமுக நகரம் சிறப்பு உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய சர்வதேச வணிக மற்றும் சேவை மையமாக மாற்றியமைக்கப்படும்.

இந்தநிலையில் குறித்த யோசனையை வர்த்தமானியில் வெளியிட்டு விரைவில் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த திட்டத்திற்கு இந்த வாரம் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

அரசாங்கத்தின் நடவடிக்கையை வரவேற்கத்தக்கது. அத்துடன் இந்த முயற்சி இலங்கைக்கு அதிக நேரடியான வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வரும் என்று தாம் எதிர்பார்ப்பதாக போர்ட் சிட்டி முதலீட்டாளர் நிறுவனமான ஊர்நுஊ போர்ட் சிட்டி கொழும்பு (பிரைவேட்) லிமிடெட் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

சீனாவின் பொறிக்குள் சிக்கி வரும் இலங்கை

நீருக்காக தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளை பணயக் கைதிகளாக சீனா வைத்துள்ளதாக Harvard சர்வதேச கல்வி நிறுவனம் தமது இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளது.

போராசிரியர் பெட்ரிக் மென்டிஸ் மற்றும் கலாநிதி அன்டோனியா லுஷிகிவிக்ஸ் ஆகியோரினால் இந்த ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

திபெத்திய பள்ளத்தாக்கிலிருந்து தொடங்கி பிரம்மபுத்ரா, இரவாடி மற்றும் மீகோம் நதிகளுக்கு குறுக்கே அணைகளைக் கட்டுவதன் மூலம் சீனா ஏற்கனவே தண்ணீரை சேகரித்து வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்கள் விரும்பும் அளவுக்கு நீரை சேகரித்து, தேவைப்படும் போது நீரை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு விடுவிக்க முடியும் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீனாவின் இந்த திட்டத்தினால் குறித்த கங்கைகளின் கீழ் பகுதியில் உள்ள மக்களுக்கு நீர் இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு நீர் தேவைப்பட்டால் அதனை சீனாவில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த செயற்பாட்டினால் உலக சனத்தொகையில் அரைவாசி மக்கள் வாழும் தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் மக்கள் சீனாவின் பிடிக்குள் சிக்கியுள்ளதாக Harvard சர்வதேச கல்வி நிறுவனம் வௌியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செயன்முறை சீனாவின் ‘அச்சுறுத்தி நீரைப் பறிக்கும் பொறிமுறை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கம்போடியா, வியட்னாம், லாவோஸ், மியன்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் தற்போதும் இந்த நிலைக்கு ஆளாகியுள்ளதுடன், இந்தியாவும் படிப்படியாக அந்தப் பொறிக்குள் சிக்கி வருகிறது.

இலங்கையும் படிப்படியாக சீனாவின் பொறிக்குள் சிக்கி வருகிறதா?

சிங்கராஜ வனம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் சுத்தமான நீர் நிலைகள் காணப்படுகின்மை அனைவருக்கும் தெரிந்த விடயம்.

சிங்கராஜ வனத்திலிருந்து ஊற்றெடுக்கும் பிரதான மூன்று கங்கைகளை மறித்து இரண்டு நீர்த்தேக்கங்களை அமைப்பதன் மூலம் சீனா சுத்தமான குடிநீரை தமது காட்டுப்பாட்டிற்குள் வைத்தருக்க முயற்சிக்கின்றதா எனும் சந்தேகம் எழுகின்றது.

சிங்கராஜ வனத்தின் நீரேந்து பகுதி எமக்கு இல்லாமல் போனால், அதன் மூலம் அந்தப் பகுதியில் மாத்திரம் அல்ல, முழு நாட்டடிலும் நீர் மூலங்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

நாம் தற்போது சீனாவின் மின்சாரப் பொறிக்கும் சிக்கியுள்ளோம்.

நாட்டில் மின்சார விநியோகத்தில் அதிகளவிலான பங்கை வகிக்கும் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தை சீனாவின் நிறுவனம் ஒன்றே அமைத்தது.

இன்றும் அதன் திருத்தப் பணிகள் மற்றும் செயற்படுத்தும் நடவடிக்கைகளை சீனாவே மேற்கொண்டு வருகின்றது.

பல சந்தர்ப்பங்களில் இந்த மின் உற்பத்தி நிலையத்தின் மின் விநியோகம் தடைப்பட்டதுடன், நிலக்கரி மூலம் சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்புகளும் அதிகமாகும்.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு விடுக்கும் அழுத்தம் தற்போது எம்மால் தடுக்க முடியாத நிலைமைக்கு வலுவடைந்துள்ளது

நீர் தொடர்பிலும் இந்த நிலை ஏற்படப் போகிறது.

நாட்டின் தேசிய அபிலாஷைகளை அடிப்படையாக வைத்தே நியூஸ்ஃபெஸ்ட் செய்தி அறிக்கையிடுகிறது.

சர்வதேச உறவுகள் தேவையென்ற போதிலும், அமெரிக்கா, சீனா, இந்தியா அல்லது வேறு நாடுகளிடமிருந்து இத்தகைய அழுத்தங்கள் வரும்போது, எமது நாட்டின் நலனை அடிப்படையாக வைத்து அறிக்கையிட நாம் எவ்வேளையிலும் கடமைப்பட்டுள்ளோம்!

Posted in Uncategorized

யாழ். மாநகரின் மத்திய பகுதி முடங்குகிறது- விசேட கலந்துரையாடலில் தீர்மானம்!

யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியை முடக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் இதுகுறித்த அவசர கலந்துரையாடல் இன்று (வியாழக்கிழமை) மாலை யாழ். அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, யாழ். மத்திய பேருந்து நிலையம் கோட்டைப் பகுதிக்கு தற்காலிகமாக மாற்றப்படுகிறது.

அத்துடன், யாழ்ப்பாணம் மாநகரின் வேம்படிச் சந்தியில் இருந்து மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதியும், மின்சார நிலைய வீதியில் கே.கே.எஸ்.வீதியிலிருந்து வைத்தியசாலை வரையும் மூடப்படவுள்ளது.

மேலும், கே.கே.எஸ். வீதி சத்திரச் சந்தியிலிருந்து முட்டாஸ் கடைச் சந்தி வரையும் மூடப்படவுள்ளதுடன் குறித்த பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களும் மூடப்படுகின்றன.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாநகரில் பாடசாலைகளில் தொற்று அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் பயிலும் வகுப்புகள் மாத்திரம் 10 நாட்களுக்கு இடைநிறுத்தப்படுகின்றன.

மேலும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மண்டபங்களில் திருமண நிகழ்வுகள், ஏனைய நிகழ்வுகள், கூட்டங்கள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுவதுடன் சுகாதார மருத்துவ அதிகாரியின் அனுமதியுடன் வீடுகளில் நிகழ்வுகளை நடத்த அனுமதிக்கப்படுகிறது.

அத்துடன், உயிரிழந்தோரின் இறுதிக் கிரியைகளுக்கு 25 பேர் மாத்திரம் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

ஐ.நா தீர்மானம் நிறைவேற்றத்தால் இலங்கையில் நிலைமை மாறுமா?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், உண்மையிலேயே அந்த நடவடிக்கை அந்நாட்டில் மனித உரிமைகள் பாதுகாப்புக்கு உதவுமா என பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அந்த தீர்மானத்தால் இலங்கை எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதனிடம் பிபிசி தமிழ் பேசியது.

“ஐ.நா தீர்மானமானது, இலங்கையில் மனித உரிமை பாதுகாப்பை மேலும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கான யோசனையாகவே பார்க்கிறேன். இது இலங்கைக்கு எதிரான தீர்மானம் கிடையாது. அதற்கான வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

“அந்த தீர்மானத்தில், உள்நாட்டு பொறுப்புக்கூறல் வழிமுறைகள் இல்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு ஆதாரங்களை சேகரித்து மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான பொறுப்பை இந்த தீர்மானம், ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் தலைமை அதிகாரிக்கு வழங்கியுள்ளது,” என்றும் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஆதாரங்களை சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல், பாதுகாத்தல், எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கான உத்திகளை முன்வைத்தல் மற்றும் உறுப்பு நாடுகள் முன்னெடுக்கும் நீதி சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தல் ஆகியவற்றை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ராணுவமயமாக்கல், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களை ஒதுக்குதல், ஊடக சுதந்திரத்தை முடக்குதல் மற்றும் சிவில் சமூக அச்சுறுத்தல் ஆகியவை நடப்பதாக சுட்டிக்காட்டும் அந்த தீர்மானம், இலங்கையில் மனித உரிமை நிலவரம் மோசமடைந்து வருவதாக மேற்கோள்காட்டியிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்கும், மனித உரிமை ஆணைக்குழு உள்ளிட்ட அமைப்புகளின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறும் ஐ.நா தீர்மானம் கோருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், பயங்கரவாத தடுப்பு சட்டத்தை மறு பரிசீலனை செய்யவும் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச மற்றும் தேசிய மனித உரிமைகள் கடமைகளுக்கு இணங்கச் செய்யும் வகையில் சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் அந்த தீர்மானம் கோருகிறது என்று அம்பிகா சற்குணநாதன் கூறினார்.

எதிர்காலத்தில் மாற்றம் நிகழுமா?

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் ஊடாக, எதிர்காலத்தில் என்ன நேரும் என அம்பிகா சற்குணநாதனிடம் கேட்டோம்.

அதற்கு அவர், “இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதால், குறுகிய காலத்திற்கு இலங்கையை, மனித உரிமைகள் கவுன்சிலின் நிகழ்ச்சி நிரலில் வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 6 மாதங்களில் (செப்டம்பர் 2021) சபைக்கு வாய் மூலமான அறிக்கையை உயர்ஸ்தானிகர் முன்வைப்பார் எனவும், அதன் பின்னரான 3 மாதங்களில் எழுத்துப்பூர்வ அறிக்கையை அவர் முன்வைப்பார்,” என்றும் கூறினார்.

இலங்கையில் மனித உரிமைகள் பராமரிப்பு நிலையை அவதானித்து, வரும் செப்டம்பர் மாதம் முழு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என கூறப்படுகிறது. இதனூடாக இலங்கையின் மனித உரிமைகளின் நிலவரம், ஒரு சர்வதேச அமைப்பில் பகிரங்கப்படுத்தப்படும் நிலை ஏற்படும் என்று அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.

மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை சேகரித்து, ஆவணப்படுத்துதல் பணியை தொடங்க மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பிரிவு இலங்கையில் நிறுவப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், பொறுப்புக்கூறலை தொடரக்கூடிய வழி முறைகளை உயர்ஸ்தானிகரின் அலுவலகம் முன்மொழியும். இதன் பிறகு, எதிர்காலத்தில் இந்த விடயம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பரிந்துரைகள் அல்லது சிறப்பு நீதிமன்றத்தில் ஏனைய பொறுப்புக்கூறல் வழிமுறைகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையின்படி, தனது உலகளாவிய அதிகாரத்தை பயன்படுத்தி, உறுப்பு நாடுகள், குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுள்ள நபர்களுக்கு எதிராக தமது நாட்டிலேயே சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது ஒருவேளை நடந்தால், குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர்கள், அந்தந்த உறுப்பு நாடுகளுக்கு செல்லும் போது கைது செய்யப்படுவதற்கான சாத்தியம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்தகைய நபர்களுக்கு எதிராக தனி நபர் பயணத் தடைகள் மற்றும் சொத்து முடக்கங்கள் போன்ற நடவடிக்கைகளை உறுப்பு நாடுகள் மேற்கொள்ளவும் இந்த தொடர்ச்சியான செயல்முறைகள் வழிவகுக்கலாம் என்று அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.

இதற்கான சட்ட நடவடிக்கைகளுக்கு உதவி வழங்க உறுப்பு நாடுகள், இந்த தீர்மானத்தின் ஊடாக கேட்டுக் கொள்ளப்படும். இதேவேளை, ஐ,நாவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற முயற்சிக்குமா? என அவரிடம் கேட்டதறகு, இலங்கையின் தற்போதைய நடவடிக்கைகளின் அடிப்படையில் பார்த்தால், தீர்மானத்தில் முன்மொழியப்பட்ட பரிந்துரைகளை இலங்கை செயல்படுத்த முயற்சிக்காது என்றே தோன்றுகிறது என அவர் பதிலளித்துள்ளார்.

அவ்வாறு முயற்சிக்காத பட்சத்தில், எதிர்காலத்தில் எவ்வாறான பிரச்னைகளை இலங்கை எதிர்நோக்கும் என அம்பிகாவிடம் கேட்டோம்.

அதற்கு அவர், மனித உரிமை மீறல்களால் குற்றம்சாட்டப்பட்ட தனி நபர்கள் மீது தனிப்பட்ட நாடுகள் நடவடிக்கை எடுக்க இந்த தீர்மானத்தின் ஊடாக முடியும். என்று அவர் பதிலளித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காமல் தவிர்த்தது பற்றி கேட்டதற்கும் அம்பிகா சற்குணநாதன் பதில் அளித்தார்.

’இந்தியா விலகுவது ஆச்சரியமான விஷயமல்ல’

சர்வதேச மனித உரிமை பொறிமுறை மற்றும் தேசிய மனித உரிமை பிரச்னைகள் தொடர்பில் ஐ.நாவின் தலையீடு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என கருதி இந்தியா வாக்களிப்பதில் இருந்து விலகியிருக்கலாம் என்று அவர் கூறினார்.

இந்தியா விலகுவது ஆச்சரியமான விடயமல்ல என கூறிய அவர், தீர்மானத்திற்கு இந்தியா வாக்களித்திருந்தால் மாத்திரமே அது ஆச்சரியமளித்திருக்கும் என்று குறிப்பிட்டார்.

இந்தியா வாக்களிக்காமல் தவிர்த்தது, இலங்கை அரசாங்கத்தின் மீது அதன் அதிருப்தியின் வெளிப்பாடாக இருக்கலாம். மேலும், தமிழக தேர்தல்கள் மற்றும் சீன சார்பு விடயங்கள் காரணமாகவும் இது இருக்கலாம் என அம்பிகா கருத்து தெரிவித்தார்.

தீர்மானத்திற்கு எதிராக சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் எதிர்த்து வாக்களித்தது குறித்துப் பேசிய அவர், “இலங்கை மட்டுமின்றி பல நாடுகளில் நடக்கும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான தீர்மானங்கள் மீதும் சீனா தொடர்ந்து எதிராகவே வாக்களித்து வருகிறது. பாகிஸ்தானின் வாக்குகள், சீனாவின் செயலால் ஏற்பட்ட தாக்கமாகக் கூட இருக்கலாம்” என்று தெரிவித்தார்.

இலங்கையில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் மீறல்களை கண்டு கொள்ளாமல், ஐ.நாவில் முன்வைக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் பாகிஸ்தான் வாக்களித்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலக அளவில் நாடுகள் தற்போது எதிர்கொள்ளும் சூழ்நிலை, புவிசார் அரசியல் காரணங்கள் போன்றவற்றால் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகள் அல்லது பிற கட்டுப்பாடுகள் உடனடியாக வராது என்றும் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.

பிபிசி தமிழ்

இலங்கை மீதான தீர்மானம் நிறைவேற்றம் குறித்து பிரிட்டன், கனடா மற்றும் ஜேர்மனி தெரிவித்துள்ளது என்ன ?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட 46/1 பிரேரணை நேற்று முன்தினம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இது போரின் பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் என்பவற்றை வலுப்படுத்துவதற்கு சர்வதேச சமூகம் வழங்கிவரும் தொடர்ச்சியான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது என்று பிரிட்டன், கனடா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.

கனடா

அந்தவகையில் இதுகுறித்து கனடாவின் வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை வரவேற்கும் அதேவேளை, அவற்றை உறுதிசெய்வதில் சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஆதரவை வெளிப்படுத்துவதாக இது அமைந்துள்ளது. கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுத்தல் மற்றும் எதிர்காலத்தில் மீறல்கள் இடம்பெறுவதைத் தடுத்தல் ஆகியவை தொடர்பில் செயலாற்றுவதில் மனித உரிமைகள் பேரவை முக்கிய பங்கை வகிக்கின்றது.

அதேவேளை இந்தத் தீர்மானம் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்களையும் ஆதாரங்களையும் சேகரிக்கும் ஆணையை மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் ஆணையாளர் அலுவலகத்திற்கு வழங்கியிருக்கிறது. இது இலங்கையில் பொறுப்புக்கூறல் பொறிமுறையை மேலும் வலுப்படுத்துவதாக அமையும். அத்தோடு இது எதிர்கால பொறுப்புக்கூறல் செயன்முறையிலும் முக்கியமானதாக அமையும். இந்நிலையில் மனித உரிமைகளைப் பாதுகாக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதுடன் ஏற்கனவே இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு ஆக்கபூர்வமான செயன்முறையொன்றை முன்னெடுக்கவேண்டும் என்றும் கோருகின்றோம். இலங்கையில் வருங்காலத்தில் பாதுகாப்பையும் சமாதானத்தையும் வலுப்படுத்துவதை நோக்கிய முக்கிய படிக்கல்லாக இந்தத் தீர்மானத்தைக் கருதுகின்றோம். அதேவேளை அந்த இலக்கை அடைந்துகொள்வதற்குரிய செயன்முறைக்கு முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருக்கின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜேர்மனி

அடுத்ததாக இதுகுறித்து இலங்கைக்கான ஜேர்மனிய தூதுவர் ஹொல்கர் சோபேர்ட் அவரது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டிருக்கிறார்:

போரின் பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் என்பவற்றை வலுப்படுத்துவதற்கு சர்வதேச சமூகம் வழங்கிவரும் தொடர்ச்சியான ஆதரவையே மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய தீர்மானம் வெளிக்காட்டியுள்ளது. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித்திருப்பதுடன் 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

பிரிட்டன்

மேலும் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் பிரிட்டனின் பொதுநலவாய நாடுகளுக்கான வெளிவிவகார அமைச்சர் தாரிக் அஹமட் அவரது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டிருக்கிறார்:

இலங்கை தொடர்பில் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளினால் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தத் தீர்மானம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுத்தல், மனித உரிமைகளை மேம்படுத்தல், நிலைபேறான அமைதியை உறுதிசெய்தல் ஆகியவற்றை முன்னெடுப்பதற்கு வாய்ப்பை வழங்கும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.