சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு மிகவிரைவில் இலங்கைக்கு கிடைக்கும் – அமெரிக்கா உறுதி

அனைத்து சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு மிகவிரைவில் இலங்கைக்கு கிடைக்குமென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவுடனான சந்திப்பில் அமெரிக்கத் தூதுவர் இதனைத் தெரிவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் ஏனைய நாடுகளின் நம்பகத்தன்மை மேலும் உறுதிப்படுத்தப்பட்டு வருவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் நிதி ஸ்திரத்தன்மையை அடைவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் கடினமான சீர்திருத்தங்கள் தொடர்பில் கருத்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்  ஒரு நாடாக செயற்படுவது பாராட்டப்பட வேண்டிய விடயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, சர்வதேச கடன் வழங்குவோரின் நம்பிக்கையான தீர்மானங்களுக்கு முகங்கொடுக்கும் வகையில்,

இலங்கை மிக விரைவில் ஸ்திரமான பொருளாதாரத்தை அடையும் என்றும், அதற்குத் தேவையான அனைத்து ஆதரவையும் அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என்றும் தூதுவர் குறிப்பிட்டிருந்ததாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வசந்த முதலிகேவின் விடுதலை குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை மகிழ்ச்சி

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை அந்த வழக்கிலிருந்து விடுவிப்பதாக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வசந்த முதலிகேவின் விடுதலை குறித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குவதன் ஊடாக அதன்கீழ் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை முடிவிற்குக்கொண்டுவருமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவை விடுவிக்குமாறு நேற்று செவ்வாய்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்குக் காரணமானவர்கள் பொறுப்புக்கூறவேண்டுமென வலியுறுத்தி கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புப் போராட்டத்தின் போது கைதுசெய்யப்பட்டு, பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச்சபை உள்ளிட்ட சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்த நிலையில், நீதிமன்றத்தின் இவ்வுத்தரவு தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

அதுமாத்திரமன்றி நீண்டகாலமாக சிறுபான்மையின மக்களையும் விமர்சனங்களை முன்வைப்பவர்களையும் அமைதிப்படுத்துவதற்கான ஆயுதமாகப் பயங்கரவாதத் தடைச்சட்டம் பயன்படுத்தப் பட்டுவந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள மன்னிப்புச்சபை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குவதன் மூலம் இந்த மனித உரிமை மீறலை உடனடியாக முடிவிற்குக் கொண்டு வருமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த கனடாவிடம் தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை

இலங்கை அதிகாரிகள் மீது கனடாவின் பொருளாதாரத் தடைகளை பாராட்டியுள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள், இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நியூரம்பெர்க் போன்ற புதிய நீதிமன்றத்தின் மூலம் வழக்குத் தொடரவும் அழைப்பு விடுப்பதாக உலகத் தமிழ் அமைப்புகளின் சம்மேளனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் வேல் வேலாயுதபிள்ளை அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு உயர்மட்ட அதிகாரிகள் மீது கனடா இந்த மாத தொடக்கத்தில் தடைகளை அறிவித்திருந்தது.

சர்வதேச நீதிமன்றத்தின் முன் இலங்கையை கனடா நிறுத்த வேண்டும் என சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னர் வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலியிடம் தமது தரப்பு இந்தக் கோரிக்கையை விடுத்ததாக வேலாயுதபிள்ளை கூறியுள்ளார்.

இலங்கையின் மூத்த அதிகாரிகளுக்கு அமெரிக்கா முன்னர் அனுமதி அளித்துள்ளது, ஆனால் ராஜபக்ஷ சகோதரர்களை தடை பட்டியலிட்ட ஒரே நாடு கனடா என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை சீருடை தேவையில் 70% சீனாவால் பூர்த்தி

2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடை தேவையில் 70% சீனா பூர்த்தி செய்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று (31) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், இந்த நன்கொடையின் முதலாவது தொகுதி வந்துள்ளது என கூறியுள்ளார்.

பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன் கல்வியின் தரமும் மேம்பட வேண்டும் என அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதற்கான நடைமுறை திட்டங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களிடம் ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளை புகுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மைத்திரி மன்னிப்பு கோரியதை ஏற்க மறுத்தது கத்தோலிக்க திருச்சபை

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு கோரியதை கத்தோலிக்க திருச்சபை ஏற்றுக்கொள்ளாது என அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த தெரிவித்துள்ளார்.

தனது ஆட்சிக்காலத்தில் இடம் பெற்ற ஈஸ்டர் தாக்குதல் ஒரு துயரச் சம்பவம் எனவும் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் செய்யும் குற்றங்களுக்கு ஜனாதிபதியே பொறுப்பு எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தியாவால் திணிக்கப்பட்ட 13ஐ முழுமையாக அமுல்படுத்தாதீர்கள்; ஜனாதிபதி, பிரதமர், எம்.பிக்களுக்கு பெளத்த தேரர்கள் கடிதம்

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டாம் என கோரி எல்லே குணவன்ச தேரர் மற்றும் பெங்கமுவே நாலக தேரர் ஆகியோர் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.

பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் உள்ளிட்ட சில அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படுமாயின் அது நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவால் திணிக்கப்பட்ட 13வது திருத்தம் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மூலோபாயத் திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கையின் நாடாளுமன்றத்தில் வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே 13 ஆவது திருத்தத்தை சர்வஜன வாக்கெடுப்பின்றி முழுமையாக அமுல்படுத்த வேண்டாம் எனவும் உள்நாட்டு வளங்கள் மற்றும் சொத்துக்கள் வெளிநாட்டினருக்கு விற்பனை செய்வதை உடனடியாக தடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு மூலம் நாட்டுக்கு இழந்த செல்வம் மற்றும் வளங்களை மீட்டெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைப் போக்குவதற்கு ஏற்றுமதியை அதிகரிப்பது, அரச செலவீனங்களைக் குறைப்பது அவசியம் என்றும் உள்ளூர் உற்பத்தியாளர்களை வலுப்படுத்த எந்தவொரு மூலோபாயத் திட்டங்களை முன்வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளனர்.

மரண அச்சுறுத்தல் விவகாரம் : ஜனாதிபதியின் தொலைபேசியை பரிசோதிக்க வேண்டும் – அனுர

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைபேசியை பரிசோதிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதியின் தொலைபேசியை பரிசோதிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அச்சுறுத்தல் விடுப்பதற்காக பயன்படுத்தப்பட்ட தொலைபேசி யாருடையது என்பது குறித்தும் ஆராய வேண்டும் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் மைத்திரி; ஈஸ்டர் தாக்குதலுக்கும் மன்னிப்பு கோரினார்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில்எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

தனது ஆட்சிக்காலத்தில் இடம் பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் துயரச் சம்பவம் என்றும் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் செய்யும் குற்றங்களுக்கு ஜனாதிபதி பொறுப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க களமிறங்குவர் என அக்கட்சி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக மாணவர்களின் கறுப்பு சுதந்திர தின பேரணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூரண ஆதரவு

எதிர்வரும் 4ஆம் திகதி பல்கலைக் கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள, சுதந்திர தினம் தமிழ் மக்களுக்கு கறுப்பு தினம் என்ற பிரகடன போராட்டம் மற்றும் பேரணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூரண ஆதரவு வழங்குவதோடு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அனைவரும் சுதந்திர தினத்திற்கெதிராகக் கிளர்ந்தெழ வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

இன்றைய தினம் (31) மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் 75வது சுதந்திரதினம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் கொண்டாடப்படவுள்ளது. வருடா வருடம் இதனை அரசு கொண்டாடிக் கொண்டு வருகிறது. ஆனால் இந்தச் சுதந்திம் அடைந்த நாளில் இருந்து இன்று வரைக்கும் தமிழ மக்கள் அடக்கியொடுக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.

இந்த நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்திருந்தாலும் தமிழ் மக்களைப் பொருத்தமட்டில் இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை. இந்த நாட்டில் தமிழ் மக்கள் சுதந்திரம் அடைந்த காலம் தொட்டே அடக்கியொடுக்கப்பட்டு வருகின்றதுடன், தமிழர்களின் நிலங்ககள், பிரதேசங்கள் கூட ஒடுக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது. இலங்கையின் முதலாது பிரதமர் டி.எஸ் சேனநாயக்கா அவர்கள் கிழக்கு மாகாணத்தைத் தமிழ் மக்களின் மாகாணம் என்ற நிலையில் இருந்து மாற்றுவதற்காக 1949ம் ஆண்டே கல்லோயக் குடியேற்றத் திட்டத்தைக் கொண்டு ஆரம்பித்திருந்தார்.

அன்று தொடக்கம் மாறி மாறி இந்த நாட்டை ஆண்ட அரசாங்கங்கள் பல இனக்கலவரங்களை உஐவாக்கி தமிழ் மக்களைக் கொன்றொழித்தது மாத்திரமல்லாமல் தமிழர்களின் சொத்துக்கள் கூட சூரையாடப்பட்டிருந்தது. 1983ம் ஆண்டு நடைபெற்ற பாரியதொரு இனக்கலவரம் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை வீறு கொண்டு எழ வைத்தது. அன்று தொடக்கம் தமிழர்களின் சுயாட்சிக்காக இந்த நாட்டில் சேர்ந்து வாழ முடியாது என்ற ரீதியில் தனிநாடு கோரி போராடியிருந்தார்கள். 2009 மே 18 அந்தப் போராட்டம் மௌனிக்கப்பட்டது.

ஆனாலும் இன்றவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமது மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கு ஜனநாயக ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் போராடிக் கொண்டு வருகின்றது.

இந்த வேளையிலே எதிர்வரும் 4ம் திகதி 75வது ஆண்டு சுதந்திர தினத்திற்கு முன்னர் இலங்கையில் புறையேடிப் போயுள்ள இனப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரமான தீர்வைத் தருவேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பாராளுமன்றத்திலும் வெளியிலும் தெரிவித்து சர்வகட்சி மாநாடுகளை நடத்தி தமிழ்க் கட்சிகளுடனும் அவ்வப்போது பேசிக் கொண்டு வருகின்றார்.

1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபைத் தேர்தல் கூட கிழக்கில் ஐந்து வருடங்களாகவும் வடக்கில் நான்கு வருடங்களாகவும் நடைபெறாமல் இருக்கின்றது. தற்போதைய அரசியற், பொருளாதாரச் சூழ்நிலையில் இலங்கை அரசிற்கு ஏற்பட்டிருக்கும் அழுத்தங்கள் 13வது திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக அமுல்ப்படுத்தி அச்சட்டத்தில் உள்ளடங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் அனைத்தும் முறையாகப் பகிரப்பட்டு மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பாக இந்தியா முழுமையான அழுத்தம் கொடுத்து வருகின்றது. அண்மையில் இலங்கை வந்த வெளிவிவகார அமைச்சரும் அதனை வலியுறுத்தியிருக்கின்றார்.

இன்று சிங்களப் பேரினவாத சில சக்திகள் குறிப்பாக விமல் வீரவன்ச, சரத் வீரசேகர போன்ற முன்னாள் அமைச்சர்கள் 13வது திருத்தச் சட்டத்தை அமுல்ப்படுத்தினால் நாடு பிழவுபடும் என்கிற ரீதியில் கருத்துக்களைக் கூறுகின்றார்கள்.

1994ம் ஆண்டு முதல் 10 வருடங்கள் ஆட்சி செய்த சந்திரிக்கா அம்மையார் தலைமையிலான அரசாங்கத்தின் காலத்தில் பிராந்தியங்களின் ஒன்றியம் என ஜி.எல்.பீரிஸ், நீலன் திருச்செல்வம் ஆகியோரால் உருவாக்கப்பட்ட சட்ட மூலத்தை எதிர்க்காதவர்கள் இன்று 13வது திருத்தச் சட்டத்தை எதிர்க்கின்றார்கள். ஆக மொத்தத்தில் இந்த நாடு பொருளாதாரப் பிரச்சினையிலே பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது இலங்கையில் புறையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரமான தீர்வை இவர்கள் தராவிட்டால் இந்த நாடு உருப்படுவதற்கான எவ்வித சந்தர்ப்பமும் கிடையாது.

எனவே எதிர்வரும் சுதந்திர தினம் இந்த நாட்டில் கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில் சுதந்திரம் இல்லாத நாட்டிலே தமிழர்களாகிய எமக்கு கிடைக்காத சுதந்திர தினத்தைக் கொண்டாட வேண்டிய தேவை இல்லை. அந்த வகையில் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்வரும் 4ம் திகதி வடக்கிலிருந்து கிழக்கிற்கு யாழ்ப்பாணத்தில இருந்து மட்டக்களப்பிற்கு ஒரு கண்டனப் பேரணியை நடாத்துவதற்குள்ளார்கள்.

அந்தவகையில் தமிழ்ஈழ விடுதலை இயக்கம், தமிழ்ஈழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகிய நாங்கள் அந்தப் பேரணிக்கு முழு ஆதரவையும் கொடுப்பது மாத்திரமல்லாமல், அவர்களுக்குப் பக்க துணையாக இருந்து இந்தச் சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக அனுஸ்டிப்பதுடன், வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் இந்தச் சுதந்தர தினத்திற்கு எதராகக் கிளர்ந்தெழ வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம் என்று தெரிவித்தார்.

13வது திருத்தத்தை அமுல்படுத்த முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்துங்கள் – ஜி.எல்.பீரிஸ்

13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட அறிவிப்பு குறித்து பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

அனைத்து மாகாண சபைகளும் செயலிழந்துள்ள பின்னணியில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் சாடியுள்ளார்.

இவ்வாறு அர்த்தமற்ற அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்துமாறு அவர் அரசாங்கத்திடம் சவால் விடுத்துள்ளார்.

அதிகரித்துவரும் நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் கவனத்தை திசை திருப்ப அரசாங்கம் முயற்சிப்பதாக ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நிதிப் பற்றாக்குறை என கூறி உள்ளூராட்சித் தேர்தலை தள்ளிப்போடுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கும் அவர் கண்டனம் தெரிவித்தார்.