”அரசாங்கத்தை ஆதரிக்கப் போவதில்லை”: ஜனாதிபதிக்கு சஜித் கடிதம்!

ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் அமைச்சரவையில் அங்கம் வகிக்க மாட்டார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அறிவித்துள்ளார்.

நேற்று (12) ஜனாதிபதி அனுப்பியிருந்த கடித்திற்கு பதில் வழங்கும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் கூறியுள்ளார்.

மே மாதம் 12 ஆம் திகதி ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உடன்பட்டு ஸ்தாபிக்கப்படும் அரசாங்கத்தில் பிரதமராக மக்களுக்கு பணியாற்ற அர்ப்பணிப்பு செய்வதாக குறிப்பிட்டிருந்தார்.

பிரதமர் பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுத்தபோது, அதனை ஏற்றுக்கொள்ள  விருப்பமில்லையென்று கூறவில்லையென்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதிக்கு நினைவுபடுத்தியுள்ளார்.

மக்களின் விருப்பத்திற்கு மாறாக, ஜனாதிபதி தொடர்ந்தும் பதவியில் இருப்பதற்கு மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மக்களின் இறையாண்மை மீது மேற்கொள்ளப்படும் தாக்குல் என்பது ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு எனவும் சஜித் பிரேமதாச  ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

அமைச்சரவைக்கு வாருங்கள்: அழைத்தார் புதிய பிரதமர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலைமைத்துவத்தில்  அமைக்கும் புதிய அமைச்சரவையில் அமைச்சுப்பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையில் இருந்து மீட்டெடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளுக்கும் தனித்தனியே அழைப்பு விடுத்துள்ளார்.

புதிய பிரதமராக பதவியேற்ற ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நேற்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் விமல்,உதய, வாசு தலைமையிலான அணியினர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட ஏனைய மலையகக் கட்சிகளுக்கு தனித்தனியே அழைப்பு விடுத்துள்ளார்.

ஒரு சிலருடன் நேரடியாக தொலைபேசியிலும் உரையாடியுள்ளார்.  எனினும் ரணிலின் அழைப்பை பிரதான கட்சிகள் நிராகரித்துள்ளதுடன் ஒரு சிலர் மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

Posted in Uncategorized

கூட்டணியின் முடிவை பகிரங்கமாக கூறினார் மனோ கணேசன்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி பங்கேற்காது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

மேலும், அந்த அரசை உடனடியாக காலில் இழுத்து வீழ்த்தும் எந்தவொரு முயற்சிக்கும் ஆதரவளிக்கவும் மாட்டோம் எனவும் குறிப்பிட்டார்.

பொது மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு குறைந்தபட்ச தீர்வுகளை காண புதிய அரசுக்கு அவகாசம் தேவை என்பதை நாம் ஏற்கிறோம்.

தமது அரசில் பங்கேற்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க எமக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்புக்கு நன்றி கூறி, கொள்கை அடிப்படையில் அதை நாம் நாகரீகமாக மறுத்து விட்டோம்.

ஆனால் அதற்காக நாம் கட்சி அரசியல் செய்து கூச்சல், குழப்பம் விளைவிக்க விரும்பவில்லை. வாழ்வாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்க அவரால் இயன்றதை பிரதமர் செய்யட்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கூட்டணியின் முடிவை அறிவித்தார்.

ரணில் விக்ரமசிங்க, எமது முன்னாள் பிரதமர். அவரது பலமும், பலவீனமும் எமக்கு நன்கு தெரியும். பலவீனம் பற்றி இப்போது பேசி ஜனரஞ்சக அரசியல் செய்ய தமிழ் முற்போக்கு கூட்டணியில் எவரும் விரும்பவில்லை.

சர்வதேச தொடர்பாடல் தொடர்பான, ரணிலின் பலம் மூலம் நாட்டுக்கு நன்மை நடக்குமாயின் அதை நான் முழு மனதுடன் வரவேற்கிறோம்.

இன்று நாட்டில் உணவு இல்லை. மருந்து இல்லை. எரிவாயு இல்லை. எரிநெய் இல்லை. உரம் இல்லை. மின்சாரம் இல்லை.

இவற்றுக்கு குறைந்தபட்ச தீர்வுகளையாவது அவர் தரவேண்டும். பிரதமர் அதை செய்யட்டும். அதற்கு பொறுப்புள்ள கட்சியாக நாம் இடம் கொடுப்போம்.

ஆகவே இன்றைய சூழலில், பாராளுமன்றத்தில் அவரது அரசின் காலை இழுத்து விடும் எந்தவொரு முயற்சியையும் நாம் ஆதரிக்க மாட்டோம்.

நாட்டில் பொருளாதார பிரச்சினைகள் உள்ளன. நமது நாடு வாங்கியுள்ள கடன்களை உரிய காலத்தில் திருப்பி செலுத்த முடியாதுள்ளது. ஆகவே கடன் தந்தோரிடம் பேசி கடன் திருப்பி செலுத்துவதை மறு அட்டவணை படுத்த வேண்டும்.

அத்தியாவசிய தேவைகளை பெற அமெரிக்க டொலர் இல்லாமல் உள்ளது. இதற்காக நட்பு நாடுகளிடம் கடன்வழி உதவிகளை, நாணய மாற்று உதவிகளை பெற வேண்டும். இந்தியா இவற்றை ஏற்கனவே வழங்கி வருகிறது.

இவை இன்னமும் அதிகரிக்க வேண்டும். ஏற்கனவே உதவி தரும் நட்பு நாட்டு குழுமம் (Consortium) ஒன்றை ஏற்படுத்த பிரதமர் முயற்சி செய்கிறார். இது நல்லது. வரிகொள்கை சீரமைக்கப்பட வேண்டும்.

அரசியலமைப்புரீதியாக, குறைந்தபட்சம், 20 ஐ வாபஸ் வாங்கி, மீண்டும் 19 ஐ கொண்டு வர வேண்டும். நாட்டின் குரலுக்கு மதிப்பளித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக ஒரு கால அட்டவணை தயாராக வேண்டும். இனிமேல் ராஜபக்சர்களுக்கு இந்நாட்டு அரசியலில் இடம் தர மக்கள் தயாரில்லை. இதை பிரதமர் புரிந்துக்கொண்டுள்ளார் என நம்புகிறோம்.

அடக்கிய முறையும் தவறு, ரணில் வந்ததும் தவறு – வீ.ஆனந்த சங்கரி

கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற ஜனநாயகப் போராட்டத்தை அடக்கிய முறை தவறு என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்தார்.

நேற்றைய தினம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே   இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

இன மத பேதமின்றி அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் காலிமுகத்திடலில் நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்தது.

கடந்த திங்கட்கிழமை குறித்த ஜனநாயகப் போராட்டத்தின் மீது விரோத சக்திகளின் செயற்பாட்டின் மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை யாவரும் அறிந்ததே.

எனது 70 வருட அரசியல் வாழ்க்கையில் பல போராட்டங்களை பார்த்துள்ளேன் பல போராட்டங்களில் பங்குபற்றியுள்ளேன்.

ஆனால் இலங்கையில் இடம்பெற்ற பாரிய போராட்டங்களில் இன மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து நடத்திய போராட்டம் தற்போதைய காலிமுகத்திடலில் போராட்டமாக பார்க்கிறேன்.

ரணில் விக்ரமசிங்க என்னுடைய நண்பராக இருந்தாலும் அவர் தற்போது பிரதமராக பதவியேற்றுக் கொண்டமை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராகியபோது ஆட்சியை அப்போதைய சந்திரிகா அம்மையார் கலைத்தார்.

அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 22 ஆசனங்களை பாராளுமன்றத்தில் பெற்ற போது என்னை திட்டமிட்டு தோற்கடித்தார்கள் இவை இரண்டைப் பற்றியும் நான் இப்போது கதைக்க விரும்பவில்லை.

இளைஞர்கள் ஒன்றுகூடி ஜனாதிபதியை வெளியேறுமாறும் பாராளுமன்றத்தை கலைத்துப்  புதிய தேர்தலை நடத்த வேண்டும் என போராட்டம் நடத்தும் நிலையில் மக்களால் தெரிவு செய்யப்படாத ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவி ஏற்றமையை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

ரணில் விடயத்தில் தீர்மானமில்லை : மாவை, செல்வம், சித்தார்த்தன் தெரிவிப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணை தலைவர்களான மாவை.சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோர் தத்தமது கட்சிகளும், கூட்டமைப்பும் பிரதமராக ரணில் நியமிக்கப்பட்டமை தொடர்பில் தாம் எவ்விதமான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.

தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா, குறிப்பிடுகையில்,

தமிழரசுக்கட்சியின் அரசியல் பீடத்திலும், அதன் பின்னர் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுவிலும் இவ்விடயம் ஆராயப்படும் என்று கூறினார்.

அதேவேளை, ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமது கட்சியின் தலைமைக்குழு இவ்விடயம் தொடர்பில் கரிசனையைக் கொண்டுள்ளதாகவும் விரைவில் கூடித் தீர்மானம் எடுக்கப்பட்டதன் பின்னர் கூட்டமைப்பாக தீர்மானம் அறிவிக்கப்படும் என்றார்.

மேலும், புளொட் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர், தத்தமது அரசியல் மற்றும் தலைமைக் குழுக்கள் இவ்விடயம் தொடர்பில் எவ்விதமான தீர்மானத்தினை எடுப்பது என்பது குறித்து கூடி ஆராயவுள்ளதோடு, கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் கூட்டத்திற்குப் பின்னர் நிலைப்பாடு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Posted in Uncategorized

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன ரணிலுக்கு ஆதரவில்லையாம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் புதிய பிரதமர் ரணிலுக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் ‘சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவுக்கே ஆதரவளிப்பதென்று தீர்மானித்துள்ளோம். அதனை அவரிடத்தில் வெளிப்படுத்தியும் உள்ளோம்’ என்றார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமை தொடர்பு கொள்வதற்கு எடுத்த முயற்சி பலனளிக்காத நிலையில் அக்கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஷாம் காரியப்பர் தமது கட்சியின் நிலைப்பாட்டினை வெளிப்படுத்தினார்.

அவர், ‘ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக்கட்சியாகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளநிலையில் அதே நிலைப்பாட்டுடன் பயணிக்கும். அத்துடன் ஜனநாயக விரோத நிலைப்பாடுகளை எமது கட்சி என்றும் எடுக்காது’ என்றும் குறிப்பிட்டார்.

மஹிந்தவுக்கு ஏற்பட்ட கதியே ரணிலுக்கும் – “கோட்டா கோ கம” ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கைகளை முன்வைத்து எச்சரிக்கை !

காலி முகத்திடல் ‘கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் முதன் முறையாக தங்களின் கோரிக்கைகளை பகிரங்கப்படுத்தியுள்ளனர்.

காலி முகத்திடல் தாய்நாடு பிரஜைகளின் வலியுறுத்தல் யோசனை என சமூக நீதிக்கான இளைஞர் அமைப்பு குறித்த கோரிக்கைக்கு பெயரிட்டுள்ளனர்.

பல்வேறு காரணிகளை அடிப்படையாகக்கொண்டு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றுள்ளார்.

இவரது அரசியல் வரலாற்றை நன்கு அறிவோம். முன்வைத்துள்ள கோரிக்கைகளை விரைவாக செயற்படுத்த வேண்டும் அதனை விடுத்து கடந்த காலங்களில் செயற்பட்டதை போன்று செயற்பட்டால் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஏற்பட்ட கதியே ஏற்படும் எனவும் குறிப்பிட்டனர்.

காலி முகத்திடல் ‘கோட்டா கோ கம’ போராட்டக்களத்தில் நேற்று ஊடகசந்திப்பை நடத்தி தங்களின் கோரிக்கைகளை பகிரங்கப்படுத்தினர்.

குறித்த கோரிக்கையில் பல பிரதான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என்பது குறித்த கோரிக்கையில் பிரதானமாக உள்ளது.

வரையறுக்கப்பட்ட காலத்திற்கு இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபித்தலுடன் அமைச்சரவையின் எண்ணிக்கையை குறைந்தப்பட்சம் 15 ஆக மட்டுப்படுத்தல் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்களை மீளாய்வு செய்தல் இரண்டாவது கோரிக்கையாகும்.

அரசியலமைப்பில் தேவையான திருத்தங்களை விரைவாக முன்னெடுத்தல், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை முழுமையாக இரத்து செய்து அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தை இரண்டு மாத காலத்திற்குள் அமுல்படுத்தல், 06 மாத காலத்திற்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்தல் முக்கியமானதாகும்.

பொருளாதார நெருக்கடியை விரைவாக முகாமைத்துவம் செய்தல், சொத்து விசாரணை மற்றும் வெளிப்படுத்தல் ,ராஜபக்ஷர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளினதும், அவர்களின் உறவினர்களின் சொத்து விபரங்கள் பகிரங்கப்படுத்தல்,வெளிநாடுகளில் உள்ள சொத்துக்கள் தொடர்பான விபரங்களை பகிரங்கப்படுத்தல்,

சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தல்,வாழும் உரிமையை அடிப்படை உரிமையாக அரசியலமைப்பிற்குள் உள்ளடக்குதல் மற்றும் இடைக்கால அரசாங்கத்தை தொடர்ந்து இடம்பெறும் சகல தேர்தல்களும் சுதந்திரமாகவும், நீதியானதாகவும் நடத்தும் சட்ட திருத்தங்களை மேற்கொள்ளல் அவசியமாகும்.

Posted in Uncategorized

பொதுஜன பெரமுனவினர் ரணிலுக்கு ஆதரவு ? : மஹிந்தவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி ?

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க கட்சியின் உயர் பீடம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கும் யோசனையை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் சமர்ப்பிக்க பொதுஜன பெரமுனவின் ஒரு தரப்பினர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்க பொதுஜன பெரமுன கட்சி மட்டத்தில் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

10 கட்சிகள் தொடர்ந்தும் சுயாதீனமாக செயற்படும்

கடந்த அரசாங்கத்திற்கு ஆதரவளித்த 10 கட்சிகளும் விசேட கலந்துரையாடல் ஒன்றை இன்று (13) நடத்தியிருந்தன.

ஆட்சி அமைப்பது தொடர்பாகவும் புதிய பிரதமருக்கு ஆதரவளிப்பது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் எதிர்க்கட்சியில் தொடர்ந்தும் இருந்து சுயாதீனமாக செயற்படுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அமையப்போகும் அரசாங்கத்தை சீர்குலைக்கும் எண்ணம் இல்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ரணிலின் அரசாங்கத்தில் பங்குதாரராக தயாரில்லை: சுதந்திரக் கட்சி அறிவிப்பு

ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிக்கும் அரசாங்கத்தின் பங்குதாரராக தாம் தயாரில்லை என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அரசாங்கத்தின் அமைச்சுப் பதவியோ அல்லது வேறு எந்த பதவியை பெற்றுக்கொள்ளும் எண்ணமில்லை என கட்சியின் தவிசாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.

புதிய அமைச்சுகளுடன் இணைந்து, அரசாங்கத்திற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கமாறு கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடமிருந்தும் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமிருந்தும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில் தமக்கு அழைப்பு கிடைத்ததாகவும் அது தொடர்பில் கட்சியினருடன் கலந்துரையாடி குறித்த தீர்மானத்திற்கு வந்ததாகவும் மைத்திரிபால சிறிசேன மேலும் கூறினார்.

ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றுள்ள தற்போதைய அரசாங்கத்தில் எவ்வகையிலும் பங்குதாரர் ஆவதில்லை கலந்துரையாடலின் போது தீர்மானித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

11 கட்சி உறுப்பினர்களும் இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து தமது நிலைபாட்டை தெளிவுபடுத்தினர்.

இதன்போது கருத்து வௌயிட்ட தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச,

ரணில் விக்ரமசிங்கவிற்கு இந்த திடீர் பதவி கிடைத்தமைக்கு எதிர்க்கட்சிகளும் பொறுப்புக்கூற வேண்டும். ஆனால், ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படுவதன் மூலம் நாட்டின் தற்போதைய நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என்ற முட்டாள்தனமான நம்பிக்கை எமக்கில்லை. பசில் ராஜபக்ஸ என்பவர் சால்வை அணியும் ரணில் விக்ரமசிங்க, ரணில் விக்ரமசிங்க என்பவர் Tie-Coat அணியும் பசில் ராஜபக்ஸ என்பதே எனது நிலைப்பாடு

என தெரிவித்தார்.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட பிரதி தலைவர் டொக்டர் ராஜித சேனாரத்ன கூறினார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

ஜனாதிபதியை பதவி விலகுமாறு மக்கள் கோரி வரும் நிலையில், மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவரை பிரதமராக நியமித்தமை நாட்டிற்கு பாதகமானது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.