ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை வெளியேற்றுமாறு நீதி மன்று உத்தரவு

அலரி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து வெளியேற்றுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

போராட்டம் காரணமாக அலரி மாளிகைக்கு முன்பாக உள்ள வீதி மற்றும் நடைபாதையை தடை செய்யப்படுவதாக காவல்துறையினர் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நடைபாதையைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் வீதியை பயன்படுத்துப வர்களுக்கு எவ்வித அசௌகரியமும் ஏற்படாத வகையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு இந்த உத்தரவு தடையாக இருக்காது என கோட்டை நீதவான் மஞ்சுளா ரத்நாயக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குறித்த உத்தரவு தொடர்பில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு காவல்துறையினர் அறிக்கையொன்றை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதே நேரம் ,நாளையும் நாளை மறுதினமும் பாராளுமன்றத்திற்கு அருகாமையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதைத் தடுக்குமாறு காவல்துறையினர் விடுத்த கோரிக்கையை கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

”பிரதமர் மகிந்த பதவி விலக மாட்டார்”

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ பதவி விலகுவதற்கு இதுவரையில் தீர்மானிக்கவில்லை.

இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் இதனை தெரிவித்துள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

தான் பதவி விலகத் தீர்மானிக்கவில்லை என்று பிரதமர் தெரிவித்துள்ளதாக தினேஸ் குணவர்தன ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் நாட்களில் பிரதமர் பாராளுமன்றத்தில் தற்போதைய நாட்டு நிலவரம் தொடர்பில் உரையாற்றுவார் என்றும் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிதி நெருக்கடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கும் நிதி அமைச்சர்!

நாட்டின் நிதி நெருக்கடி நிலைமையை தீர்க்க இப்போதே முடியாது என்றும், குறைந்தது இதற்கு இரண்டு வருடங்களாவது செல்லும் என்றும் நிதி அமைச்சர் அலி சப்ரி இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று (04) விசேட உரையாற்றிய போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்க்க சுமார் 2 வருடங்களுக்கும் அதிகமாக செல்லும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். இதற்கு அனைவரும் ஒன்றிணைந்தாலே தீர்க்க முடியுமாக இருக்கும். இதனால் 2 வருடங்களில் இந்த பிரச்சினையை தீர்ப்பதா அல்லது 5 முதல் 10 வருடங்கள் வரை இதனை நீடிப்பதா என்பது தொடர்பில் நாம் அனைவரினதும் கையில்தான் உள்ளது.

மேலும், இலங்கையின் தற்போதைய வெளிநாட்டு நாணயக் கையிருப்பு 50 மில்லியன் டொலர்களாகவே உள்ளது. இதனால் நெருக்கடி அதிகரிக்கின்றது. இதன் காரணத்தினால் வரிகளை அதிகரிக்க வேண்டிய கட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி வரி மறுசீரமைப்பை செய்து புதிய வரவு செலவுத்திட்டத்தை கொண்டு வர தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

இந்தியத் துணைத்தூதர் யாழ். பல்கலைக்கு விஜயம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவராலயத்தின் துணைத் தூதுவர் ஜே. ராகேஷ் நட்ராஜ் இன்று புதன்கிழமை (04) காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு மரியாதை நிமித்தமான விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவை சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்ததுடன் இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் இந்திய அரசாங்கத்தின் புலமைப்பரிசில்கள் தொடர்பிலும் இன்றைய சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.

Posted in Uncategorized

பணம் இருந்தால் கூட பொருட்களை வாங்க முடியாது என்கிற நிலையை தற்போதைய நாட்டு நிலைமை – சி.வி.விக்னேஸ்வரன்

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலையினை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் பணம் இருந்தால் கூட பொருட்களை வாங்க முடியாது என்கிற தற்போதைய நாட்டு நிலைமை தொடர்பில் எடுத்துக் கூறியுள்ளேன். பொருளாதார ரீதியாக நன்மைகளை இந்தியா பெற்றுக்கொடுக்கும் என அவர் எனக்கு தெரிவித்திருந்தார் என தெரிவித்துள்ளார்.

பலாலி விமானத்தளத்தை மிக விரைவில் திறக்க வேண்டும் என்பதுடன் தென்னிந்தியாவிற்கும் வட இலங்கைக்கும் இடையில் படகு சேவைகளை மிக விரைவில் ஆரம்பிக்க வேண்டும். இவற்றினால் இரு நாடுகளிற்கும் கூடிய நெருக்கம் ஏற்படும் என்றேன்.இதற்கு தான் விமானத் தளத்தையும் படகு இறங்கு துறையையும் நேரில் சென்று தான் பார்த்தாக என்னிடம் தெரிவித்ததுடன் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார் என மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசினால் தரப்படும் அத்தியாவசிய பொருட்களை வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம், மலையகம், தென்னிலங்கை என நான்கு பாகங்களாக பிரித்து வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன். அதனை அவர் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.இந்திய பிரதமருக்கு ஆறு தமிழ் கட்சிகள் இணைந்து 13ஆவது திருத்தச்சட்டத்தை அமல்படுத்தக்கோரி எழுதிய கடிதத்தை எழுதியமைக்கான காரணத்தை அவருக்கு தெளிவுபடுத்தினேன்.

மேலும் அவரிடம் கூறாத ஒரு விடயத்தை ஊடகங்கள் ஊடாக பொதுமக்களிடம் அவரிடமும் கூறவுள்ளேன். வடமாகாண முதலமைச்சராக நான் இருந்த போது வடக்கு மாகாணத்தையும், கிழக்கு மாகாணத்தையும் இணைக்கும் வகையில் முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை வரை ஒரு கரையோர பெரும் வீதியை அமைக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தேன்.

அது சம்பந்தமாக அப்போது இருந்த இந்திய உயர்ஸ்தானிகர் என்னிடமிருந்து முழுமையான விபரங்களை அறிந்து இருந்ததுடன், அந்த நேரத்தில் ஆயிரம் கோடி ரூபாய் செலவாகுமென கணித்து சகல விவரங்களையும் அவருக்கு வழங்கியிருந்தோம்.அதைப்பற்றி இந்திய அரசாங்கத்துடன் பேசி ஒரு நடவடிக்கை எடுக்கலாம் இந்திய உயர்ஸ்தானிகர் கூறியிருந்தார். இந்த சந்திப்பில் அதனை கூற எனக்கு மறந்து விட்டது. இதனை ஊடகங்கள் வாயிலாக அவரிடம் கோரிக்கையாக முன்வைக்கின்றேன் என தெரிவித்துள்ளார்

மைனாகோகமவில் பொலிஸாரின் பஸ்கள் அகற்றப்பட்டன; இளைஞர்களும் கூடாரங்களை அப்புறப்படுத்தினர்

அலரி மாளிகைக்கு முன்பாக எதிர்ப்பிலும் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இன்று பிற்பகல் பொலிஸார் நீதிமன்ற உத்தரவொன்றை அறிவித்தனர்.

அலரி மாளிகைக்கு முன்பாக கூடியுள்ள அனைவரும் அங்கிருந்து வௌியேற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்தாலும், அது தொடர்பில் மக்கள் விளக்கம் கோரினர்.

இதேவேளை, அலரி மாளிகைக்கு முன்பாக நடைபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்களை பொலிஸார் இன்று பிற்பகல் அகற்றினர்.

அலரி மாளிகைக்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மக்கள் முன்னெடுக்கும் போராட்டம் இன்று 26 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

இன்றும் பல்வேறு தரப்பினர் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கினர்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க உறுப்பினர்கள் அங்கிருந்து பேரணியாக கோட்டாகோகமவிற்கு சென்றனர்.

நெருக்கடிகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்குமாறு கோரி, மகஜர் ஒன்றை ஜனாதிபதியிடம் வழங்குவதற்கும் அவர்கள் முயற்சித்ததனர்.

பின்னர் அவ்விடத்திற்கு சென்ற சிரேஷ்ட உதவி செயலாளர் ஒருவர் மகஜரை பெற்றுக்கொண்டார்.

Posted in Uncategorized

உரிமைகளுக்கான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கான ஆதரவை மீண்டும் வலியுறுத்தியுள்ள அமெரிக்கா

அமைதியான முறையில் உரிமைகளுக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கான ஆதரவை அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இன்றைய தினம் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் , யுவதிகள் கைது செய்யப்பட்டதையடுத்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அமெரிக்க தூதுவர் ஜூலி ஷங் இதனைத் தெரிவித்துள்ளார்.

‘கைதுக்கு அஞ்சாமல் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடும் சுதந்திரம் ஜனநாயகத்தின் அடிப்படையாகும். அமெரிக்கா அனைத்து தரப்பிலும் கட்டுப்பாட்டை வலியுறுத்துகிறது மற்றும் அமைதியான எதிர்ப்பாளர்களின் உரிமைகளுக்கான ஆதரவை மீண்டும் வலியுறுத்துகிறது.’ என்று அவது தனது டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

ஜனாதிபதிக்கு எதிராக கூட்டமைப்பு கொண்டுவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு – ரணில்

ஜனாதிபதிக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதாக ஐக்கியத் தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. காணொளி தொழில்நுட்பம் தொடர்பான கலந்துரையாடலின் போது கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளார்.

இதேநேரம், நம்பிக்கையில்லாப் பிரேரணையை தாம் எதிர்க்கவில்லை என தெரிவித்த அவர்,

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பின்னர் என்ன நடக்கும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாத்திரமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகளுக்கும் இதே பிரச்சினை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

மே 6 ஆம் திகதி நாடு தழுவிய ஹர்த்தாலுக்கு அழைப்பு

மக்களின் போராட்டத்தை வலுப்படுத்தும் முகமாக மே 6ஆம் திகதி நாடு தழுவிய ஹர்த்தாலை நடத்த தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.

இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்த தேசிய தொழிற்சங்க கூட்டமைப்பின் உறுப்பினர் கே.டி. லால்காந்த, யார் போராடினாலும் மக்களுக்கு தேர்தலை வழங்குவதும் அரசியலில் ஈடுபடுவதற்கான புதிய வாய்ப்பை வழங்குவதும் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த புதிய நிர்வாகத்தை வழங்குவதுமே யதார்த்தம் என தெரிவித்துள்ளார்.

இலங்கைக்குள் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கான ஒரே தீர்வு அரசியல் ஸ்திரத்தன்மையே என அவர் வலியுறுத்தியுள்ளார்.அதேபோல மக்களின் வெற்றியை எதிர்பார்த்து இந்த ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மக்களை மேலும் ஒடுக்காமல் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் ஒரே கோரிக்கை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் உழைக்கும் மக்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை முழு நாட்டு மக்களுக்கும் தெரிவிக்கும் செய்தியாக மே 6ஆம் திகதி நடைபெறும் ஹர்த்தால் அரசாங்கம் பதவி விலகும் வரை போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் என அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன சூரியாராச்சி தெரிவித்தார்.

இதேநேரம், தொழிற்சங்கப் பிரிவின்றி சுகாதார ஊழியர்களும் எதிர்வரும் 6ஆம் திகதி ஹர்த்தாலில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஜயந்த பண்டார மேலும் தெரிவித்தார்.

சரத் பொன்சேகாவின் Facebook பதிவு

அலரி மாளிகைக்கு முன்பாக அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை தாக்குவதற்கும் அவர்களை அங்கிருந்து விரட்டியடிப்பதற்கும் பாதுகாப்பு தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அடக்குமுறை மற்றும் பொலிஸாரின் அதிகாரம் மூலம் மக்களின் இறையாண்மை ஒடுக்கப்படுவதை மக்கள் எதிர்க்க வேண்டும் என அவர் முகப்புத்தகம் (FaceBook) ஊடாக வலியுறுத்தியுள்ளார்.

”போராட்டக்காரர்களே ஒன்றிணையுங்கள், போராடுங்கள்” எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமைதியான முறையில் போராடுபவர்கள் மீது அவ்வாறான நடவடிக்கை எடுக்கும் எதிர்பார்ப்பில்லை என பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் நியூஸ்பெஸ்ட் வினவியபோது அவர் இதனை கூறியுள்ளார்.