இப்படியும் நடக்கிறது! ஈழநாடு

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கோரி கூட்டமைப்பின் பராளுமன்ற உறுப்பினர் சந்திக்குச் சந்தி மேசை வைத்து கடைவிரிக்கின்ற செய்திகள்தான் இப்போது தினமும் வந்தகொண்டிருக்கின்றன.

இந்தக் கொடிய சட்டம் நீக்கப்படவேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்கும் என்று நினைக்கவில்லை.

அது நீக்கப்பட்டால் இன்று சிறையில் இருக்கும் பல கைதிகள் வெளியே வந்துவிடுவார்கள். சுமந்திரனின் இந்த முயற்சி பாராட்டுக்குரியதுதான்.

இன்று இருக்கும் ராஜபக்ஷ அரசுக்கு இந்தச் சட்டத்தை நீக்குவதற்கு விருப்பம் இருக்கும் என்று யாரும் நம்பப்போவதில்லை.

ஆனால், இதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த நல்லாட்சி அரசில் இந்தச் சட்டத்தை நீக்குவதற்கு அனைவரும் விருப்பம் தெரிவிக்காவிட்டாலும், அதில் மாற்றங்களைச் செய்யவேண்டும் என்று அனேகமாக எல்லாருமே சொன்னார்கள். சர்வதேச நியமங்களுக்கு அமைய இந்தச் சட்டத்தை மாற்றவேண்டும் என்ற நிலையிலேயே அன்றைய நல்லாட்சி அரசில் அங்கம்வகித்த பல்வேறு கட்சிகளும் கருத்து வெளியிட்டு வந்தன.

அப்போது, அந்தச் சந்தாப்பத்தை பயன்படுத்தி, அதனை மாற்றியமைக்கவாவது நாம் முயன்றிருக்கலாம். அதிலும், தங்களையே சட்ட மேதைகளாகவும், ஜனநாயக காவலர்களாகவும் காட்டிக்கொண்டவர்கள் பலர் அந்த ஆட்சியில் யானைப் பலத்துடன் இருந்தார்கள். அப்போதெல்லாம் அதுகுறித்து எந்த அக்கறையும் இல்லாம் இருந்தவர்கள் இப்போது எதற்காக இப்படி கிராமம் கிராமமாக போகிறார்கள் என்று இந்த ஊர்க்குருவி யோசித்துக்கொண்டிருந்தபோது, தென்னிலங்கை அரசியல்வாதி ஒருவர் தொடர்புகொண்டு அந்த விடயம் குறித்து கேள்வி எழுப்பினார்.

நல்லாட்சி அரசாங்கம் அமைவதற்கு தீவிரமாக உழைத்தவர்களில் அவரும் ஒருவர். அந்தக் காலத்தில் நமது சுமந்திரனுடன் நெருக்கமாக பணியாற்றியவர்.

இந்த ஊர்க்குருவிக்கு எழுந்த சந்தேகம்தான் அவருக்கும் வந்திருக்கின்றது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

அவரும் கேட்டார், நாங்கள் எல்லோரும் முற்றாக நீக்குவதற்கு தயாராக இருக்கவில்லை என்றாலும், சர்வதேச நியமங்களுக்கு அமைய அதனை மாற்றியமைக்க தயாராகத்தானே இருந்தோம், அப்போது அதனை முன்னின்று செய்திருக்கவேண்டியவர், அப்போது செய்யாமல் இருந்துவிட்டு இப்போது, அதுவும் தெற்கில் ராஜபக்ஷக்கள் அரசியல் இறங்கு முகத்தில் இருக்கும்போது, அவர் இந்த விடயத்தை கையில் எடுத்திருப்பது அவர்களுக்கல்லவா இங்கு பலம் சேர்க்கிறது என்று கேட்டார்.

இந்தச் சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும் என்பது நமது விருப்பம். அப்படியிருக்கையில், அதற்காக உழைக்கும் ஒருவர்பற்றி நாமும் குறைகூற முயாதல்லவா?

நான் சொன்னேன்:

“முன்னர் அவர் கனவான் அரசியல் செய்தவர். இவ்வாறு வீதியில் இறங்கியெல்லாம் தன்னால் அரசியல் செய்யமுடியாது என்று நினைத்துக்கொண்டிருந்தவர். ஆனால் இப்போது அப்படியல்ல, தன்னாலும் வீதியில் இறங்கி அரசியல் செய்யலாம் என்று நினைத்து இறங்கிப் பார்த்தார். தன்னாலும் முடியும் என்று தெரிந்தபோது, இப்போது எல்லா விடயங்களையும் கையில் எடுத்துக்கொண்டு வீதிக்கு இறங்கியிருக்கிறார் போலும்’’ என்று அவருக்காக வாதிடவேண்டியதாயிற்று.

அது சரிதான், இப்போது அரசாங்கம் இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்காக திருத்தச் சட்டமூலம் ஒன்றை பாராளுமன்றில் தாக்கல் செய்திருக்கின்றதே. அதனை வழக்கம்போல சட்ட சவாலுக்கு உட்படுத்துவதை விட்டுவிட்டு, அவர் வீதிக்கு இறங்கியிருப்பதுதான் நமக்குள் கேள்வியை உருவாக்குகின்றது என்றார் அவர்.

சுமந்திரனின் சகபாடியான ஒரு பெண் சட்டத்தரணி, இந்த புதிய சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி, நீதிமன்றப் படிகளில் ஏறியிருக்கிறார். சுமந்திரன் வீதியில் இறங்கியிருக்கிறார் என்று அவருக்கு விளக்கமளித்தேன்!

அந்த சட்டத்தை நீக்கவேண்டும் என்று மேற்குலகும், குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கைக்கு அழுத்தம்கொடுக்கும்போது, அதனை பேசுபொருளாக்கினால் ராஜபக்ஷக்கள் தெற்கில் அரசியல் செய்ய அதுவும் உதவும் என்ற வாதமும் நிராகரிக்கக்கூடியது இல்லைத்தான்.

அதற்காக நாம் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்துவதும் நல்லதுதானே!

– ஊர்க்குருவி

Posted in Uncategorized

இலங்கை குறித்த மனித உரிமை பேரவை 17 பக்க அறிக்கையில் இரு புதிய விடயங்கள் உள்ளடக்கம்!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் 17 பக்க அறிக்கையில் இலங்கை மீது மேலதிக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிக்கை குறித்து மார்ச் 3ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட உள்ளது.

கடந்த திங்கட்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இந்த அறிக்கை, அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து ஐ.நா. மனித உரிமைப் பேரவையால் எழுப்பப்பட்ட பல பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்தின் அவதானிப்புகள் மற்றும் விளக்கங்களுடன் இந்த அறிக்கை ஜெனீவாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் 17 பக்க அறிக்கையில் சர்வதேச தரத்திற்கு ஏற்ப பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் மாற்றங்களை செய்ய அரசாங்கம் தவறியுள்ளமை குறித்து விசேடமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாதத் தடைச் சட்ட திருத்தங்கள் குறித்து அதிருப்தியையும் ஆணையாளர் முன்வைத்துள்ளார். இச்சட்டம் தொடர்பாக அரசாங்கம் பலமுறை உறுதியளித்த திருத்தங்கள் அதில் உறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை பாதிக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை தற்காலிகமாக திரும்பப் பெற வேண்டும் என்று ஐரோப்பிய பாராளுமன்றம் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய-இலங்கை கூட்டு ஆணைக்குழு பெப்ரவரி 8ஆம் திகதி பிரஸ்ஸல்ஸில் கூடிய போது இதற்கான குறிப்பு வெளிப்பட்டது.

இதனைவிட ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் புதிய அறிக்கையில் 2019 உயிர்த்த ஞாயிறு படுகொலைகள் பற்றிய குறிப்புகளும் உள்ளன. கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை முயற்சியின் விளைவாக இந்த விவகாரம் உள்ளடக்கப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணைகளில் சட்டமா அதிபர் சுதந்திரமாக செயற்பட வேண்டும் என மனித உரிமைகள் பேரவை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் அவர்களை விடுத்துள்ளமை சட்டமா அதிபர் குறித்த விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது. அவர்கள் மீது 855 குற்றச்சாட்டுகளை சட்டமா அதிபர் பதிவு செய்தார். ஆனால் எதுவும் நிரூபிக்கப்படவில்லை.

இதேவேளை, பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை 49 ஆவது அமர்வில் இலங்கை விவகாரம் குறித்த வாக்கெடுப்பு இடம்பெறாது. எனினும், இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை தொடர்பான மற்றொரு தீர்மானத்திற்கு முன்னோடியாக இந்த அமர்வு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“ கொரியாவிலிருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்த எனக்கு பல்லினத்தன்மை, சகிப்புத்தன்மை என்பன முக்கியமான விடயங்களாகும் ” – இலங்கைக்கான புதிய அமெரிக்கத்தூதுவர்

அமெரிக்கப்பிரஜை என்ற ரீதியில் நான் முதலாவது தலைமுறையைச் சேர்ந்தவளாவேன். எனக்கு ஐந்து வயதாக இருந்தபோது எனது குடும்பம் கொரியாவிலிருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தது.

ஆகவே என்னைப்பொறுத்தமட்டில் பல்லினத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மை என்பன மிகவும் முக்கியமான விடயங்களாகும் என்று தெரிவித்துள்ள இலங்கைக்கான புதிய அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், இலங்கைக்கு மீண்டும் வருகைதருவது கனவொன்று நனவானதைப்போன்ற விடயமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான புதிய அமெரிக்கத்தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜுலி சங் சனிக்கிழமை (19 )கொழும்பை வந்தடைந்துள்ள நிலையில், இலங்கை மக்களுக்குத் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் வகையில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தின் ஊடாகப் பகிர்ந்திருக்கும் காணொளியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.

அக்காணொளியில் ஜுலி சங் மேலும் கூறியிருப்பதாவது:

என்னைப்பொறுத்தமட்டில் இலங்கைக்கு மீண்டும் வருகைதருவது கனவொன்று நனவானதைப்போன்ற விடயமாகும்.

நான் பத்து வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வருகைதந்திருந்தேன். அந்த நினைவுகள் இப்போதும் தெளிவாகவும் புதிதாகவும் என்னுள் பதிந்திருக்கின்றன.

ஆச்சரியம் மிகுந்த இயற்கை அழகு, சுவையான உணவுப்பொருட்கள் மற்றும் வாசனைத்திரவியங்கள் புகையிரம் மற்றும் முச்சக்கரவண்டிகள், அவையனைத்திற்கும் மேலாக அப்போது நான் சந்தித்த இலங்கை மக்கள் காண்பித்த அன்பு உள்ளிட்ட அனைத்தும் நினைவிருக்கின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது இலங்கைக்கான தூதுவராகப் பதவியேற்பது எனக்குக் கிடைத்த கௌரவமாகும்.

அதனூடாக இலங்கையின் கலாசாரம், பாரம்பரியம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் மேலும் அறிந்துகொள்வதற்கு எதிர்பார்க்கின்றேன்.

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் குடியேறிய மக்களின் முயற்சியினால் கடந்த இரு நூற்றாண்டு காலமாக நவீன தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் புத்தாக்கங்களை உள்வாங்கி அமெரிக்கா முன்னேற்றம் கண்டிருப்பதுடன் அதன் பொருளாதார வளர்ச்சிக்குப் பலரும் பங்களிப்புச்செய்திருக்கின்றார்கள்.

அந்த முயற்சி இலங்கைக்கான தூதுவர் என்ற ரீதியில் நான் ஆற்றவிருக்கும் பணியிலும் பிரதிபலிக்கும். அதன்படி இலங்கையிலுள்ள சிவில் சமூக அமைப்புக்கள், வர்த்தகத்துறையினர் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட தரப்புக்களுடன் ஒன்றிணைந்து பணியாற்றுவதன் ஊடாக மக்களுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளேன்.

இவற்றுக்கு முன்னர் என்னைப் பற்றிய சில விடயங்களைப் பகிர்ந்துகொள்வதற்கு விரும்புகின்றேன்.

அமெரிக்கப்பிரஜை என்ற ரீதியில் நான் முதலாவது தலைமுறையைச் சேர்ந்தவளாவேன். எனக்கு ஐந்து வயதாக இருந்தபோது எனது குடும்பம் கொரியாவிலிருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தது.

ஆகவே பல்லினத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மை என்பன எனக்கு மிகமுக்கியமான விடயங்களாக இருப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

எனது குடும்பம் இலங்கை – அமெரிக்க சமூகத்தினர் பெருமளவிற்கு செறிந்துவாழும் பகுதியான கலிபோர்னியாவில் குடியேறியது.

இந்நிலையில் எமது செல்லநாய் மார்த்தாவுடன் எனது கணவர் மற்றும் மகனும் என்னுடன் இலங்கைக்கு வருகின்றார்கள்.

அதேபோன்று மலையேறல், நீச்சல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுக்களையும் பார்வையிடுவது எனக்குப் பிடித்த விடயமாகும்.

எனவே குறிப்பாக கிரிக்கெட் பற்றி அறிந்துகொள்வதற்கும் இலங்கையின் தேசிய அணியை ஊக்குவிப்பதற்கும் எதிர்பார்த்துள்ளேன்.

என்னை இலங்கைக்கு வரவேற்றமைக்கு நன்றி கூறுவதுடன் இயலுமானவரை உங்களில் பலரைச் சந்திப்பதற்கு ஆர்வத்துடன் இருக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக இல்லாமல் செய்ய மாநகர சபை அமர்வில் பிரேரணை ரெலோ உப தலைவர் ஹென்றி மகேந்திரன்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக இல்லாமல் செய்வதற்கு எதிர்வரும் மாநகர சபை அமர்வில் பிரேரணை ஒன்றினை நிறைவேற்ற தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் முன்னாள் மாநகர சபையின் எதிர்கட்சி உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் செயலாளர் நாயகமும் தற்போதைய உப தலைவருமான ஹென்றி மகேந்திரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் இடம்பெறும் கையெழுத்துப் போராட்டத்தின் ஓரங்கமாக அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(20) அன்று மாலை நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்யக்கோரி நாடளாவிய ரீதியில் இடம்பெறும் கையெழுத்து போராட்டத்தின் ஓரங்கமாக இன்று அம்பாறை மாவட்டத்தில் கல்முனை காரைதீவு உள்ளிட்ட பல இடங்களில் கையெழுத்து வேட்டை நடைபெற்றது.இதில் குறித்த தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதற்கு ஒவ்வொருவரும் தத்தமது கையொப்பங்களை இட்டு இப்போராட்டத்தில் இணைந்து கொண்டு உங்களினதும் உங்கள் சந்ததியின் பாதுகாப்புக்காகவும் பாடுபட முன்வர வேண்டும்.

இந்த நாட்டில் கொடூரமான தடைச்சட்டமாக பயங்கரவாத தடைச்சட்டம் இருப்பதை நாம் அறிவோம்.அந்த வகையில் தற்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் கையெழுத்து போராட்டமானது மேற்கொள்ளப்படுகின்றது.எனவே இந்த சட்டத்தை முற்றாக எமது நாட்டில் இருந்து அகற்றுவதற்கு தமிழ் பேசும் மக்களாகிய நாங்கள் அனைவரும் முன்வர வேண்டும்.அத்துடன் நாம் அங்கம் வகிக்கின்ற கல்முனை மாநகர சபையில் கூட எதிர்வரும் மாதாந்த அமர்வில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக இல்லாமல் செய்வதற்கு பிரேரணை ஒன்றினை நிறைவேற்ற தீர்மானித்துள்ளோம்.எமது மாநகர சபைக்கு தமிழர்கள் தரப்பில் தார்மீக ஆதரவினை வழங்கி வருகின்றோம்.அந்த வகையில் முழு மாநகர உறுப்பினர்களும் இப்பிரேரணைக்கு தத்தமது ஆதரவினை வழங்குவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேற்படி விசேட செய்தியாளர் சந்திப்பில் தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும் கல்முனை மாநகர சபை முன்னாள் எதிர்கட்சி தலைவருமான குஞ்சுத்தம்பி ஏகாம்பரம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர்களான அழககோன் விஜயரட்ணம் சோ.குபேரன் தி.இராசரட்ணம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

கொழும்பு மாநகர முதல்வர் ரோசி யாழ் விஜயம்

கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்கா இன்றைய தினம் யாழ்ப்பாணம் மநகர சபைக்கு விஜயம் மேற்கொண்டார்.

சிநேக பூர்வ விஜயத்தில் கொழும்பு மாநகர முதல்வரை யாழ்ப்பாணம் மாநகர சபையின் ரெலோ பிரதி முதல்வர் து.ஈசன் வரவேற்றார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் பிரதான நூலகம் 1959ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட காலம் முதல் இன்றைய வரையான வரலாற்றையும் தெரிவித்து நூலகத்தின் தற்போதைய பணிகளை நேரில் காண்பித்தனர்.

இதன்போது யாழ்ப்பாணம் பிரதி முதல்வருடன் மாநகர ஆணையாளர் ரி.ஜெயசீலனும் உடன் இருந்து கொழும்பில் இருந்து வந்தவர்களிற்கு வழிகாட்டினார்.

Posted in Uncategorized

இப்படியும் நடக்கிறது! -ஈழநாடு

‘ஈழநாடு’ குழுமத்தின் தலைவர் குகநாதன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரைப் பார்த்து அடிக்கடி சொல்லுவார், இவர்கள் பிள்ளையைப் பெறவும் விரும்புகின்றார்கள். அதேவேளை, கன்னித் தன்மையுடன் இருக்கவேண்டும் என்றும் நினைக்கின்றார்கள் என்று.

அவர்கள் கொள்கையில் உறுதியாக இருப்பதால், அதற்காக கன்னியாகவே இருக்கவேண்டும் என்பது கொள்கை என்றால் அவர்களால் எந்தக் காலத்திலுமே பிள்ளை பெற்றுக்கொள்ளமுடியாது. அவர்கள் பிள்ளையைப் பெறவேண்டும் என்றால் சில விட்டுக்கொடுப்புக்களைச் செய்யத்தான்வேண்டும் என்பது அவரது கருத்தாக இருக்கவேண்டும்.

சில வருடங்களுக்கு முன்னர் சங்கிலியன் பூங்காவில் நடந்த முன்னணியின் கூட்டம் ஒன்றில் பேசிய ஒருவர், அவர்களின் தலைவரை பிரபாகரனுடன் ஒப்பிட்டு பேசியது பலருக்கும் சிரிப்பிற்கிடமாக இருந்தபோதிலும், முன்னணியின் தலைவர் தனது கொள்கையில் உறுதியாக இருப்பதை வைத்துத்தான் அவர் அப்படிச் சொல்கிறார் என்று நினைத்தவர்களும் உண்டு.

ஒருநாடு இரு தேசம் என்ற தமது கொள்கையில் அவர்கள் உறுதியாக இருப்பது பாராட்டுக்குரியதுதான், அதற்காக அதேகொள்கையைத்தான் விடுதலைப் புலிகளும் கொண்டிருந்தார்கள் என்று முன்னணியின் செயலாளர் செல்லையா கஜேந்திரன் இப்போது தெரிவித்திருப்பதைப் பார்க்கின்றபோது, அவர்களும் இப்போது மற்றைய அரசியல்வாதிகளுக்கு சளைத்தவர்கள் அல்லர் என்பதை நிரூபித்திருக்கின்றார்கள்.

விடுதலைப் புலிகள் ஆயுதத்தில் மாத்திரமே நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். அவர்கள் அரசியல் தீர்வு ஒன்றிற்கு எந்தக் கட்டத்திலும் வரப்போவதில்லை என்று, அரசாங்கம் சர்வதேசத்தை புலிகளுக்கு எதிராக அணிதிரட்ட எடுத்த சதியை முறியடிக்க, புலிகள் தமிழீழத்திற்கு நிகரான தீர்வை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகக் கூறியே பேச்சுவர்த்தைக்கு முன்வந்திருந்தார்கள் என்பது தெரிந்ததுதான். ஆனால், அதற்காக அவர்கள் தனிநாட்டுக்காக போராடவில்லை, தமிழர் தேசத்தை அங்கீகரிக்கவே போராடினார்கள் என்று அவர் கூறியிருப்பது புலிகள் மீதான சேறடிப்பு என்பதை புரிந்துகொள்ள அதிகம் ஆராய்ச்சி செய்யவேண்டியதில்லை.

தனது கருத்து, சர்ச்சையை ஏற்படுத்திய பின்னர், அதுகுறித்து விளக்கமளித்த கஜேந்திரன், பின்வருமாறு தெரிவித்திருக்கிறார்:

“…விடுதலைப் புலிகள் தமிழீழத்திற்காக போராடிவந்த நிலையில், அரசுடன் நேரடியாக இடம்பெற்ற பேச்சுக்களிலும் சர்வதேச மத்தியஸ்தத்துடன் இடம்பெற்ற பேச்சுக்களின்போதும் தமிழ்த் தேசத்தின் இருப்பைப் பாதுகாக்கக்கூடிய தீர்வை அரசுத் தரப்பு முன்வைத்தால் பரிசீலிக்கத் தயாராக இருந்தார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்த முற்பட்ட வேளையில், நான் கூறிய கருத்துக்களானவை, விடுதலைப் புலிகள் தனிநாட்டுக்காக போராடவில்லை என தவறாக அர்த்தப்படுத்துவதற்கு ஏதுவாக அமைந்திருந்தது. தெளிவற்ற வகையில் அந்தக் கருத்து வெளிவந்தமைக்காக நான் மனம் வருந்துகின்றேன்.”

மேற்கண்டவாறுதான் தனது மன்னிப்பு அறிக்கையில் கஜேந்திரன் தெரிவித்திருக்கின்றார்.

‘டான் ரிவி’யில் சுரேஸ் பிரேமச்சந்திரனுடனான நிகழ்ச்சியில் சுரேஸ், “2009 வரை தனி நாட்டுக்கான யுத்தம் ஒன்று நடக்கிறது. தனி நாட்டுக்கான யுத்தம் நடக்கும்போது எல்லோருக்கும் ஓர் எதிர் பார்ப்பு இருந்தது.” என்று கூறிக்கொண்டிருந்தபோது குறுக்கிட்ட கஜேந்திரன் எம். பி., “தனிநாட்டுக்கான யுத்தம் அல்ல, தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்கான யுத்தம்” என்றார். அத்துடன், “இவர்கள் (சுரேஸ்), அரசாங்கம் புலிகளை அழித்தது சரியென்று சொல்லப் பார்க்கிறார்” என்றும் கூறினார். இதன்மூலம் அவர் சொல்ல வருவது, புலிகள் தனிநாடு கேட்டுத்தான் போராடினார்கள் என்றால் அது புலிகளை அரசு அழித்தது சரி என்றாகிவிடும். அப்படியல்ல, அவர்கள் தமிழ் தேசத்தை அங்கீகரிக்கவே போராடினார்கள் என்கிறார் கஜேந்திரன்.

அவரது கருத்துக்கும், மறுப்பு அறிக்கைக்கும் எந்த தொடர்பும் இருப்பதாக தெரியவில்லை. புலிகள், பேச்சுவார்த்தை மேசையில் தனிநாட்டுக்கு நிகரான தீர்வை முன்வைத்தால் பரிசீலிக்க தயாராக இருக்கிறோம் என்று சொன்னார்களே தவிர, தமிழ்த் தேசத்தின் இருப்பைப் பாதுகாக்கக்கூடிய தீர்வை பரிசீலிக்கத் தாயராக இருந்தார்கள் என்பது சரியானதல்ல.

ஒருவர் தனது மனதில் என்ன நினைக்கின்றார் என்பதை அறியவேண்டும் என்றால், அவரை நன்றாக மதுஅருந்த வைத்துவிட்டு அவரைக் கிளறினால் அடிமனதில் இருப்பதை அறிந்துகொள்ளலாம் என்பார்கள். மதுபோதை ஊட்டுவதும், ஒருவரை கோபப்படுத்துவதும் ஒன்றானதுதான். ஒருவரை கோபப்படுத்துவதாலும் அவரின் அடிமனதை அறியலாம் என்பார்கள்.

கோபப்படுத்தி, சுரேஸ் அவரின் ஆழ்மனதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்.

– ஊர்க்குருவி

Posted in Uncategorized

திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி ; நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தர அனுமதி

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுகளுக்காக நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தரவுள்ள நிலையில் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 1ஆம் திகதி மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் முன் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் அவசர கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

திருக்கேதீஸ்வர ஆலய பரிபாலகர் சபை, திணைக்களத் தலைவர்கள் என பலரும் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல், “கடந்த வருடத்தை விட இவ்வருடம் நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தர அனுமதி வழங்கி உள்ளோம்.

வருகை தருகின்ற பக்தர்கள் முழுமையாக தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். தடுப்பூசியை பெற்றுக்கொண்டமைக்கான ஆதாரமாக தடுப்பூசியை அட்டையை அல்லது தடுப்பூசி அட்டையினை கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம் எடுத்து கொண்டு வர வேண்டும்.

கடமையில் ஈடுபடுத்தப்படும் பொது சுகாதார பரிசோதகர்கள் நுழைவாயிலில் பரிசீலனை செய்வார்கள். இதன்போது காண்பிக்க வேண்டும். திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு வருகை தருகின்ற சகல பக்தர்களும் சுகாதார விதிமுறைகளை உரிய முறையில் கடைபிடிக்க வேண்டும்.

அதற்கான சகல ஒழுங்குகளும் சுகாதார திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உணவு வழங்குவதற்கான வியாபார நிலையங்கள் அமைக்கப்படும். ஆனால் உணவை பெற்றுக் கொண்டு சென்று உண்ண வேண்டும்.

உணவகங்களில் இருந்து சாப்பிட முடியாது. பாலாவி தீர்த்தத்தில் இறங்கி குளிப்பதற்கு சுகாதார துறையினரால் அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் பக்தர்கள் பாலாவி தீத்தத்தை பெற்றுக் கொள்வதற்கு அங்கு கடமையில் இருக்கும் தொண்டர்கள் நீரை அள்ளி பக்தர்களுக்கு கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆலயத்திற்கு வர முடியாத பக்தர்களுக்காக தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் மற்றும் அரச வாகனங்களின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய அவசிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.“ எனத் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

பாகிஸ்தான் புதிய உயர்ஸ்தானிகர், ஜெனரல் ஷவேந்திர சில்வாவுடன் சந்திப்பு

இலங்கைக்கான பாக்கிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் (ஓய்வு) உமர் பாரூக் புர்கி, ஹிலால்-ஐ-இம்தியாஸ் அவர்கள், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை வெள்ளிக்கிழமை (18) பிற்பகல் இராணுவத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.

இருவருக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகர் இரு நாடுகளுக்கும் இடையில் பல வருடங்களாக நிலவும் நட்புறவுகள் மற்றும் தற்போதைய பரிமாற்ற நிகழ்ச்சிகள் குறிப்பாக இரு நாடுகளின் பயிற்சி பரிமாற்ற தொகுதிகளில் ஆயுதப்படைகளின் பங்கேற்புடனான நிகழ்ச்சிகளினையும்நினைவுகூர்ந்தார்.

ஜெனரல் ஷவேந்திர சில்வா புதிய உயர்ஸ்தானிகரின் நியமனத்திற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் அவருக்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்தார்.

பின்னர் இருவருக்குமிடையில்நினைவுச் சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேனல் முஹம்மது சப்தாரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.

மலையக மக்களின் அரசியல் ஆவணம் 21 ஆம் திகதி இறுதி வடிவம் பெறும்: மனோ கணேசன் அறிக்கை

இந்திய வம்சாவளி மலையக மக்களின் அரசியல் ஆவணம் எதிர்வரும் 21 ஆம் திகதி கொழும்பில் இறுதி வடிவம் பெறும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்.

கண்டி சமூக அபிவிருத்தி மன்றம், சமூக செயற்பாட்டாளர் கௌதமன் பாலச்சந்திரனின் ஏற்பாட்டில் இந்திய வம்சாவளி மலையக மக்களின் அரசியல் ஆவணம் தயாரிக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட கட்சித் தலைவர்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகக் கட்சிகளின் தலைவர்கள், பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச நாட்டு அரசுகள், சர்வதேச நிறுவனங்களுக்கும் இந்த ஆவணத்தை சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியல் அமைப்பை தயாரிக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டு வரும் நிலையில், மலையக மக்கள் தொடர்பாக விரிவுபடுத்தப்பட்ட நிலைப்பாட்டு கோரிக்கைகளை அரசுக்கு அறிவித்து, பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உத்தேசித்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளி மலையக மக்கள் தொடர்பில் இலங்கை அரசுடன், இந்திய அரசுக்கும் காணப்படுகின்ற கடப்பாடுகள் நல்லெண்ண அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய மகாராணியாரின் அரசாங்கத்திற்கும் மலைய மக்கள் தொடர்பில் காணப்படும் பெரும் கடட்பாட்டை எடுத்துக்கூறி, பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது அறிக்கையினூடாக சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized

பயங்கரவாத்தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்யுங்கள் – சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தல்

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள டிவானியா முகுந்தன், மொஹமட் இம்ரான் மற்றும் செல்வநாயகம் சசிகரன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, பயங்கரவாதத்தடைச்சட்டத்துடன் தொடர்புடைய வகையில் அரசாங்கத்தினால் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படவேண்டிய 7 பரிந்துரைகளையும் முன்வைத்திருக்கின்றது.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகத்தை உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும் அச்சட்டத்தை முழுமையாக இல்லாதொழிக்கவேண்டும் என்றும் தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் சர்வதேச மன்னிப்புச்சபை, பயங்கரவாத்தடைச்சட்டத்துடன் தொடர்புடையதாக அரசாங்கத்தினால் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படவேண்டிய 7 பரிந்துரைகளை உள்ளடக்கி புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2021 மார்ச் மாதம் 29 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு இன்னமும் வழக்குப்பதிவு செய்யப்படாமல் 10 மாதங்களுக்கும் அதிகமான காலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள கிளிநொச்சியைச் சேர்ந்த 34 வயதான டிவானியா முகுந்தன், கடந்த 2019 மேமாதம் 9 ஆம் திகதி விசாரணைகளுக்கெனக் கைதுசெய்யப்பட்டு எவ்வித குற்றச்சாட்டுக்களுமின்றி இரண்டரை வருடங்களுக்கும் அதிகமான காலம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள காத்தான்குடியைச் சேர்ந்த 23 வயதான மொஹமட் இமாம் மொஹமட் இம்ரான், கடந்த 2020 மேமாதம் 5 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு இன்னமும் வழக்குப்பதிவு செய்யப்படாமல் ஒன்றரை வருடங்களுக்கும் அதிகமான காலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள கிளிநொச்சியைச் சேர்ந்த 28 வயதான செல்வநாயகம் சசிகரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டுள்ள முறை, அவர்களது குடும்பத்தினர் முகங்கொடுத்திருக்கக்கூடிய சிக்கல்கள், பிணைக்கோரிக்கையை முன்வைப்பதற்கான வாய்ப்பு, பொருளாதார ரீதியில் அவர்கள் எதிர்கொண்டிருக்கும் தாக்கங்கள் என்பன தொடர்பிலும் மன்னிப்புச்சபையின் அவ்வறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் முக்கிய விடயங்கள் வருமாறு,

இலங்கையைப் பொறுத்தமட்டில் பயங்கரவாதத்தடைச்சட்டமானது நபர்கள் ஒன்றுகூடுவதைத் தடுக்கும் வகையில் கடந்த 1979 ஆம் ஆண்டில் ஓர் தற்காலிகச் சட்டமாகவே நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் 1982 ஆம் ஆண்டில் அது நிரந்த சட்டமாக்கப்பட்டது.

எவ்வித குற்றச்சாட்டுக்களுமின்றி நபரொருவரை நீண்டகாலத்திற்குத் தடுத்துவைப்பதற்கான வாய்ப்பை வழங்கக்கூடிய இச்சட்டத்தினால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுமையை இலங்கையர்கள், குறிப்பாக சிறுபான்மையினத்தவர்கள் தற்போதும் தாங்கிக்கொண்டிருக்கின்றனர்.

பயங்கரவாதத்தடைச்சட்டமானது சர்வதேச சட்டங்கள் மற்றும் நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்கப்படும் என்று இல்ஙகை அரசாங்கம் பல்வேறு தடவைகள் வாக்குறுதி வழங்கியிருந்தாலும், தற்போதுவரை அச்சட்டத்தில் உரியவாறான திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன் நபர்களைத் தன்னிச்சையாகக் கைதுசெய்து தடுத்துவைப்பதற்கான ஓர் ஆயுதமாக தொடர்ந்தும் அச்சட்டம் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் பயங்கரவாதத்தடைச்சட்டத்திருத்த முன்மொழிவுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் திகதி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டது. இருப்பினும் இந்தத் திருத்த முன்மொழிவுகள் அச்சட்டத்தில் காணப்படும் முக்கிய குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்குத் தவறிவிட்டன என்று நாம் கருதுகின்றோம்.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குமாறு உள்ளக மற்றும் சர்வதேசத்தரப்புக்களினால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுவந்த நிலையில், அதனை முடிவுறுத்துவதற்கான முயற்சியாக பெருமளவிற்கு எவ்வித பயனையும் அளிக்காத திருத்தங்களை இலங்கை அரசாங்கம் முன்மொழிந்திருக்கின்றது.

ஆகவே பயங்கரவாதத்தடைச்சட்டத்தை சர்வதேச நியமங்களுக்கு அமைவாக மாற்றியமைப்பதற்கு இந்தத் திருத்தங்கள் போதுமானவையல்ல.

ஆகவே பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள டிவானியா முகுந்தன், மொஹமட் இம்ரான் மற்றும் செல்வநாயகம் சசிகரன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இல்லாவிட்டால் அவர்கள் குற்றம் புரிந்தமைக்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் காணப்படும்பட்சத்தில், அவர்களுக்கு எதிராக உரியவாறு வழக்குத்தாக்கல்செய்து, சர்வதேச நியமங்களுக்கு அமைவாக நீதிமன்றத்தின் ஊடாக விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும்.

அதேவேளை பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குவதுடன் அச்சட்டத்தின் பிரயோகத்தை உடனடியாக இடைநிறுத்தவேண்டும். பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைவரினதும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தவேண்டும்.

மேலும் அச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் முழுமையான மீளாய்வொன்றினை மேற்கொள்வதுடன் அவர்கள் பிணைக்கோரிக்கையை முன்வைப்பதற்கான வாய்ப்பை வழங்குவதுடன் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்படாத குற்றச்சாட்டில் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலைசெய்யவேண்டும்.

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் சட்ட உதவியை நாடுவதற்கும் அவர்களது குடும்பத்தினரை சந்திப்பதற்குமான வாய்ப்பை வழங்குவதுடன் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் காரணமாக மனித உரிமை மீறல்களுக்கு உள்ளானவர்களுக்கான இழப்பீட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நிறைவாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் மேற்கொள்வதற்கென முன்மொழியப்படும் எந்தவொரு திருத்தமும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் பிரகாரம் அச்சட்டம் கொண்டிருக்கக்கூடிய கடப்பாடுகளைப் பூர்த்திசெய்யும் வகையில் அமையவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை அதன் அறிக்கையின் ஊடாக அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.