ஐ. நா.வின் அதீத தலையீட்டை இலங்கை ஒருபோதும் ஏற்காது; 17 நாடுகளின் தூதுவர்களிடம் பீரிஸ்

ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கை சுமூகமான முறையில் இணைந்து செயல்படும் எனத் தெரிவித்திருக்கும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரி யர் ஜீ. எல். பீரிஸ், நாட்டின் உள்விவகாரங்களில் ஐ.நாவின் அதீத தலையீட்டை இலங்கை ஒருபோதும் ஏற்காது, எதிர்க்கும் என்றும் கூறியுள்ளார்.

தகவல்களை சேகரிப்பதற்காகவென விசேட பொறிமுறை ஒன்றை அமைப் பதற்காக ஐ. நா. முன்னெடுக்கும் முயற்சி களை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த அவர், இலங்கைக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காகவே இவ்வாறு தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன எனவும் குற்றம்சாட்டினார்.

அந்தத் தகவல்கள் என்ன என்பதை அறிந்துகொள்வதற்கான வழிகள் எதுவும் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், இவ் வாறு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக் களிலுள்ள உண்மையை அறிந்துகொள் வதற்கான வாய்ப்புக்களும் இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

புதிதாக நியமிக்கப்பட்ட 17 நாடு களின் தூதுவர்களை நேற்றைய தினம் சந்தித்த போதே அமைச்சர் பீரிஸ் இத னைத் தெரிவித்தார். குறிப்பிட்ட தூதுவர்கள் நேற்று முன்தினம் ஜனாதிபதியி டம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கொடுத்து பதவியேற்றுக்கொண்டனர்.

இந்த தூதுவர்களை வரவேற்ற அமைச் சர் பீரிஸ், இந்த நாடுகள் ஒவ்வொன்றுட னும் நெருக்கமான உறவுகளைப் பேண அரசாங்கம் விரும்புகின்றது எனத் தெரிவித்தார். இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக தூதுவர்களுக்கு விளக்கமளித்த அமைச்சர், கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்புக்களையும், தடுப் பூசி வழங்குவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாகவும் விளக்கமளித்தார்.

இலங்கை அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் செய லகம், விசாரணை ஆணைக்குழுக்கள், மனித உரிமைகள் ஆணைக்குழு போன் றனவற்றின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கமளித்த அமைச்சர், ஐ. நாவுடன் சுமூகமான முறையில் இணைக்கமாகச் செயல்படுவதற்கே அரசாங்கம் விரும்புவ தாகவும், அதிகமான தலையீடுகளை ஏற்க முடியாது எனவும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

ஒரு நாடு, ஒரு சட்டமல்ல, ஒரு ஆளுக்கு ஒரு சட்டம் -மனோ கணேசன்

அமைச்சர் அலி சப்றியை பதவி விலக சொல்லும் ஞானசார தேரரை, ஜனாதிபதி செயலணிக்கு, இந்த ஜனாதிபதிதான் நியமித்தார். அமைச்சர் அலி சப்றியையும், கேபினட் அமைச்சராக இந்த ஜனாதிபதிதான் நியமித்தார் எனத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இந்நிலையில், ஜனாதிபதியின் ஞானசாரர், ஜனாதிபதியின் அமைச்சரை பதவி விலக சொல்கிறார். இதென்ன கூத்து? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் முகநுாலில் தனது கருத்தை பதிவு செய்துள்ள மனோ கணேசன்,

“எதிர்கட்சி அரசியல்வாதிகள் இப்படி சொன்னால் அதில் ஒரு அரசியல் தர்க்கமாவது இருக்கும். அப்படியும் நான் அதை சொல்ல மாட்டேன். அரசை நாம் கடுமையாக எதிர்ப்பது என்பது வேறு.ஆனால் இந்த அரசுக்குக்கு உள்ளே சிறுபான்மை கேபினட் அமைச்சர்கள் இருப்பது நல்லது. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இதுதான் இலங்கை அரசு.

அமைச்சர்கள் அலி சப்றி, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் அங்கே இருப்பதால் தமிழ் பேசும் மக்களின் குறைந்தபட்ச பிரச்சினைகளையாவது அரசாங்க தலைமையின் கவனத்திற்கு கொண்டு வர முடிகிறது. இந்த குறைந்தபட்ச அவகாசத்தையும் கூட தட்டி பறிக்க இந்த காவி பயங்கரவாதி ஆள் முயல்கிறார்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக இந்த ஆள் பேசுகிறார். இவர் மீது சட்டம் பாயாது. ஆனால், முகநூலில் எதையாவது சிறுபிள்ளைத்தனமாக எழுதி விடும் தமிழ் பையன்களை தேடி வீட்டுக்கு பொலிஸ் வருகிறது. இந்த ஆளுக்கு விசேட சட்ட விலக்கு இருக்கிறது.ஆகவே, இவரது செயலணியின் பெயரை “ஒரு ஆளுக்கு ஒரு சட்டம்” என நான் பிரேரிக்கிறேன்.

அதேபோல், இவரது இந்த வாயில் வருவதை எல்லாம் பேசும் நடத்தையை ஆட்சேபித்து, இந்த செயலணியில் இருக்கும் தமிழ், முஸ்லிம்கள் உடன் பதவி விலக கோருகிறேன். இல்லா விட்டால் இந்த பாவம் இவர்களையும் சேரும் எனவும் கூறுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானம்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற மத்திய குழுக் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சட்டப்பூர்வ மருத்துவ இடமாறுதல் வாரியத்தின் அனுமதியின்றி சிறப்பு மருத்துவர்களின் நியமனப் பட்டியலைத் தொகுத்தல், 2022ஆம் ஆண்டுக்கான இடமாறுதல் பட்டியலை வெளியிடாமை, வர்த்தமானி அறிவித்தலை வெளியிடாமை உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏ9 வீதி மற்றும் யாழ். மாவட்ட செயலகத்தை முடக்கி மீனவர்கள் போராட்டம்

ஏ9 வீதி மற்றும் யாழ். மாவட்ட செயலகத்தை முடக்கி மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் உட்பட பல்வேறு மீனவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன முன்றலில் இருந்து கடற்றொழிலாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட பேரணி யாழ். மாவட்ட செயலக முன்றலில் நிறைவடைந்தது.

அதனைத்தொடர்ந்து, யாழ். மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கைது செய், நல்லெண்ண அடிப்படையில் அவர்களை விடுதலை செய்யக்கூடாது, கைது செய்த படகுகளைப் விடக்கூடாது போன்ற பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரபாகரனின் கல்வி அறிவைப் பற்றி கதைக்கும் பொன்சேகாவிற்கு சஜித்தின் படிப்பறிவு தொடர்பாக தெரியுமா? – சிவாஜி கேள்வி

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கல்வி அறிவைப் பற்றி கதைக்கும் சரத் பொன்சேகாவிற்கு தமது கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் படிப்பறிவு தொடர்பாக தெரியுமா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பினார்.

சரத் பொன்சேகா விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பாக தெரிவித்த கருத்து குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், சரத் பொன்சேகா என்பவர் இரட்டை வேடமாக செயற்படுகின்ற ஒருவர். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்தோர் ஏனைய விடுதலைப் போராட்ட இயக்கத்தில் இருந்தவர்கள் படிப்பறிவு அற்றவர்கள் என்ற ஒரு கருத்தினை பதிவு செய்துள்ளார்.

நான் அவருக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால் இலங்கையினுடைய தலைவர்களாக, பிரதமராக இருந்தோர் மற்றும் ஏனையோர் எட்டாம் ஆண்டு பத்தாம் ஆண்டு படித்தவர்கள். பல்கலைக்கழகப் படிப்பு அல்லது பட்டப் படிப்பினை முடித்தவர்களல்ல. ஆனால் அனைவருமே சாதாரண மட்டத்திலிருந்து தலைவர்களாக வந்தவர்கள். எனவே இவ்வாறு பல உதாரணங்களைக் கூற முடியும்

ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தன்னுடைய 15ஆவது வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் இணைந்துவிட்டார். அவர் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்துவிட்டு தோற்றவில்லை.

அதேபோல ஏனைய இயக்கங்களினுடைய தலைவர்களையும் எடுத்துப் பார்த்தால் அவர்களும் உயர் படிப்புகளை படித்திருக்கவில்லை. ஆனால் அனுபவங்களின் மூலம் செயற்பட்டவர்கள்.

விடுதலைப் புலிகளின் தலைவர் ஒரு நடைமுறை அரசை ஒரு முப்படையினை கொண்டு வழிநடத்தியவர். குறிப்பாக ஜெயசிக்குறு ராணுவ நடவடிக்கையை ஓயாத அலை என்னும் முறியடிப்பு சமர் மூலம் முறியடித்த பெருமை பிரபாகரனையே சேரும்.

எனவே அவ்வாறான திறமைகளை புரிந்தவரை இரட்டைவேடம் போடும் பொன்சேகா போன்ற நடிகர்கள் படிக்காதவர் என்று கூறும் அளவுக்கு அவர் எளிதானவர் அல்ல.

இவருடைய கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவின் கல்வி நிலை என்ன என்று தெரியுமா? அவருடைய கல்வி நிலை பற்றி பொன்சேகா அறிய வேண்டும். அது தொடர்பிலும் பொன்சேகா தனது கருத்தினை கூற வேண்டும்.

2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் போது சரத் பொன்சேகா இவ்வாறான கருத்துக்களை கூறி இருக்கலாமே? ஏன் அவ்வாறு கூறவில்லை. அவர் ஒரு நடிகர். இரட்டை வேடம் போடும் நபர் எனவேதான் அவர் தற்போது தென்பகுதி மக்களின் வாக்குகளை சூறையாடுவதற்காக சில கதைகளை கூறி வருகின்றார். நாங்கள் இன்று மகிழ்கின்றோம். ஏனென்றால் இவ்வாறான ஒரு வரை ஜனாதிபதியாக நியமித்திருந்தால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்போம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதியரசர் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதியரசராக விக்கும் அதுல களுஆராச்சி இன்று (24) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் தேவிகா அபேரத்ன ஓய்வுபெற்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான விக்கும் அதுல களுஆராச்சி கொழும்பு சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்று சட்டத்துறையில் பிரவேசித்தார்.

விக்கும் அதுல களுஆராச்சி தனது 33 வருட சேவையில் 27 வருடங்கள் நீதவானாக, மாவட்ட நீதிபதியாக, குற்றவியல் மேல் நீதிமன்றம் மற்றும் சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றியுள்ளார்.

Posted in Uncategorized

வௌிநாட்டு பணியாளர்கள் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

வெளிநாட்டில் தொழில் புரிகின்ற இலங்கையர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைப் பரிசீலனையிற்கொண்டு, உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் வேறு முறைசார்ந்த வழிகள் ஊடாக அனுப்பப்பட்டு இலங்கை ரூபாவாக மாற்றப்படுகின்ற அத்தகைய வெளிநாட்டில் தொழில்புரிபவர்களினால் அனுப்பப்படும் பணத்திற்காக “தொழிலாளர்களின் உள்முகப் பணவனுப்பல்கள் மீதான ஊக்குவிப்புத் திட்டம்” என்ற திட்டத்தின் கீழ் கொடுப்பனவு செய்யப்படும் ஐ.அ.டொலர் ஒன்றிற்கான ரூ.2 இனைக் கொண்ட ஊக்குவிப்புத் தொகைக்கு மேலதிகமாக அவ்வாறு அனுப்பும் பணத்திற்காக மேலும் ரூ.8 வழங்குவதை 2022.01.31 வரை நீடிப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

2021 டிசெம்பர் காலப்பகுதியில் இதுவரையிலும் வெளிநாட்டில் தொழில்புரிபவர்களின் பணவனுப்பல்களில் அவதானிக்கப்பட்ட சாதகமான முன்னேற்றங்களுக்கு பதிலிறுத்தும் விதத்திலேயே ஐ.அ.டொலர் ஒன்றிற்கு ரூ.10 கொண்ட இம்மேலதிக ஊக்குவிப்பினை தொடர்ந்தும் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாட்டில் தொழில்புரிகின்ற இலங்கையர்கள், பணப் பரிமாற்று நிறுவனங்கள் அத்துடன்/ அல்லது வங்கிகள் ஊடாக இலங்கைக்கு பணம் அனுப்புகின்ற போது அவர்களுக்கு ஏற்படுகின்ற பரிமாற்றுச் செலவின் வரையறை செய்யப்பட்ட மட்டமொன்று வரை ஏற்றுக்கொள்வதற்கும் இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, வெளிநாட்டில் தொழில்புரிகின்ற பாரிய எண்ணிக்கையிலானோர் எவ்விதக் கட்டணமுமின்றி தமது பணத்தை இலங்கைக்கு அனுப்பக்கூடியதாகவிருக்கும். தொடங்கும் திகதி உள்ளடங்கலாக இது தொடர்பிலான தொழிற்பாட்டு அறிவுறுத்தல்கள் இலங்கை மத்திய வங்கியினால் விரைவில் வழங்கப்படும்.

Posted in Uncategorized

சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா இல்லையா? – ஜனவரி 3 இறுதித் தீர்மானம்

நாட்டின் நிதி நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு அமைச்சரவையில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ள போதிலும், அரசாங்கத்திற்குள் ஒரு சில மாற்றுக்கருத்துகள் நிலவுகின்றன.

இதனால் எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி கூடும் அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அமைச்சரவை மட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 ஆம் திகதி கூடும் அமைச்சரவை கூட்டத்திற்கு மத்திய வங்கி ஆளுநர் மற்றும் திறைசேரி செயலாளர் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நிதி நெருக்கடி நிலைமைகள் மற்றும் டொலர் பற்றாக்குறை காரணமாக நாடு எதிர்கொண்டுவரும் சிக்கல்களை கையாள சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதே சிறந்த தீர்வாக அமையுமென பொருளாதார நிபுணர்கள், பொருளாதார நிபுணத்துவம் பெற்ற ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் வலியுறுத்தி வருகின்ற நிலையில் அரசாங்கம் இந்த விடயத்தில் உறுதியான தீர்மானமொன்றை எடுக்காது தடுமாறி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

தற்போதைய நிலைமையில் நாம் பெறவேண்டியவற்றை பேசுவதற்கான ஒரு தளம் தேவை. அதற்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வடமாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

என்னுடைய அனுபவத்தை பொறுத்தவரை மாகாணசபை கூடிப் பேசுவதற்கான ஒரு கட்டமைப்பு. மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.

வவுனியா வடக்கு பிரதேச சபை போல மாகாண சபையும் மாறலாம். புதிய அரசியல் யாப்பில் சில சமயங்களில் மாகாண சபையை இல்லாமல் செய்து முழுமையான ஒற்றையாட்சி யாப்பு உருவாகுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகிறது.

மாகாண சபை முறை தான் தீர்வென நாங்கள் கூறவில்லை. அது ஒரு அடிப்படை. ஆனால் ஒரு சிலர் மாகாணசபையை ஆரம்பப் புள்ளியாகவே ஏற்றுக்கொள்ளமாட்டோம் எனக் கூறுகின்றார்கள். தற்போதைய நிலைமையில் நாம் பெறவேண்டியவற்றை பேசுவதற்கான ஒரு தளம் தேவை. அதற்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் சீனா கால் பதிப்பது தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நிலை என்பது இந்தியாவுக்கு தெரியும். அதை கையாள வேண்டியது இந்திய தரப்பு. எங்களை பொறுத்தவரை இந்த விடயத்தை தீர்மானிக்கும் பொறுப்பில் நாங்கள் இல்லை.சீனாவின் செயற்பாட்டில் எமக்கு உடன்பாடில்லை என்பதை நாங்கள் தெளிவாக சொல்கின்றோம். அதற்கு மேலாக இது இரு நாடுகளுடன் சம்பந்தப்பட்ட விடயம் என்றார்.

Posted in Uncategorized

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில் நிச்சயம் பங்கேற்கும்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில், தமிழ்பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டத்தில் அது நிச்சயம் பங்கேற்கும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலை சி.எல்.எவ் வளாகத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ” தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டத்தில் பங்குபற்றுவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா” என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் ஜீவன் தொண்டமான் மேலும் கூறியவை வருமாறு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அதற்கு அரசியலும் காரணமாக இருக்கலாம். சம்பந்தன் ஐயா மூத்த அரசியல்வாதி. அவரை நாம் மதிக்கினறோம். மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் காலத்திலும் எமக்கு தொடர்பு இருந்தது.

எமக்கு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில் அந்த வேலைத்திட்டத்தில் பொதுநலன் இருப்பின் பங்கேற்போம். எமக்கு அழைப்பு விடுக்கப்படாவிட்டாலும் கூட எல்லோரும் ஓரணியில் இணைந்துள்ளமை மகிழ்ச்சி என்றார்.