நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆயுதம் தாங்கிய படையினர் – வர்த்தமானி வெளியீடு!

நாட்டின் அனைத்து ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கும் அழைப்பு விடுக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலாகும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையின் அனைத்து நிர்வாக மாவட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடற்பரப்புகளில் பாதுகாப்பைப் பேணுவதற்காக இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 தாக்குதலைத் தொடர்ந்து, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆயுதம் தாங்கிய படையினரை அமைதியை பேண அழைப்பு விடுத்து விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.

ஒரு மாத காலத்துக்கு அமுலாகும் வகையில் ஒவ்வொரு மாதமும் 22ஆம் திகதி இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தன்மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் பூஜித் ஜயசுந்தர

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்த போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமை மற்றும் கடமையைத் செய்யத் தவறியமை ஆகிய குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் தெரிவித்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் நாமல் பலல்லே, ஆதித்ய படபெந்திகே மற்றும் மொஹமட் இர்ஷதீன் ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கை பிரதிவாதி முன்னிலையில் வாசிக்கப்பட்டது.

இதன்போது, குறித்த குற்றச்சாட்டுக்களை தான் நிராகரிப்பதாக பூஜித் ஜயசுந்தர நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து வழக்கின் ஆரம்ப சமர்ப்பணங்களை முன்வைக்க முறைப்பாடு சார்பில் முன்னிலையான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் நாயகம் திலீப பீரிஸ், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் ்திகதி உயிர்த்த ஞாயிறு சஹ்ரான் ஹசீமின் தலைமைத்துவத்திலான தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற தீவிரவாத அமைப்பினால் நாட்டில் 08 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களை அடிப்படையாக கொண்டு சட்டமா அதிபரினால் பிரதிவாதிக்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தாக்குதல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றிருந்த போதும் இலங்கைக் குடியரசின் பொலிஸ் மா அதிபராகச் செயற்பட்டு அதனைத் தடுக்கும் கடமையை அலட்சியமாகப் புறக்கணித்ததன் மூலம் இலங்கை தண்டனைச் சட்டத்தின் 102ஆவது பிரிவின் கீழ் குற்றம் இழைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்..

பிரதிவாதிக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்காக 2019 ஆம் ஆண்டும் ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முறையான சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் தெரிவித்தார்.

அதன்படி, பிரதிவாதிக்கு எதிராக 855 குற்றச்சாட்டுக்களும், 1,215 சாட்சிகள் முன்னிலையாகியுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மேலும் தெரிவித்தார்.

பின்னர் மேலதிக விசாரணைக்காக வழக்கு நாளை தினம் (23) வரையில் ஒத்தி வைக்கப்பட்டது.

வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றம்

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 93 வாக்கு வித்தியாசத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

கடந்த 12 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

வரவு செலவு திட்ட யோசனை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இன்று வரையில் 7 நாட்களுக்கு இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது.

அதன்படி, இன்று சற்று முன்னர் வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது.

அதனடிப்படையில் வரவு செலவு திட்ட ஆதரவாக 153 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் வழங்கப்பட்டிருந்தது.

வரவுச் செலவு திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

13 ஆவது திருத்த சட்டத்தை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டும் – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி.

மாகாண சபைகளை எலும்புக்கூடுகளாக ஏற்றுக்கொள்ள நாம் தயாரில்லை. 13 ஆவது திருத்தத்திலுள்ள முழுமையான அதிகாரங்களுடன் மட்டுமே ஏற்றுக்கொள்வோம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை(19) இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இந்தியாவுடன் இலங்கையின் உறவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதனை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் இங்கு அழகாக தெளிவு படுத்தினார்.

எனவே அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்தினால் இந்தியாவுடனான நட்புறவை மேலும் நெருக்கமாக்க முடியும். இந்தியாவின் முழுமையான ஆதரவும் இலங்கைக்கு கிடைக்கும்.

எனவே 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும்படி அரசாங்கத்தை கோருகின்றோம். அதேவேளை 13 ஆவது திருத்தத்துக்கு அமைய மாகாண சபைகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.

மாகாணசபையை எலும்புக்கூடுகளாக நாம் ஒரு போதும் ஏற்க மாட்டோம். 13 ஆவது திருத்தத்திலுள்ள முழுமையான அதிகாரங்களுடன் மட்டுமே மாகாணசபையை நாம் ஏற்போம்.

மாகாண சபைகளுக்குள்ள அதிகாரங்களை அரசாங்கம் மீளப்பெற்றுவிட்டது.

எனவே அந்த அதிகாரங்களை அரசாங்கம் மீளவும் மாகாணசபைகளுக்கு வழங்க வேண்டும். அதனடிப்படையிலேயே தேர்தலும் நடத்தப்பட வேண்டும் என்றார்.

ஜே.வி.பி கார்த்திகை வீரர்களை நினைவுகூர முடியுமெனில், நாம் ஏன் மாவீரர்களை நினைவுகூரமுடியாது? ரவிகரன்

ஜே.வி.பி கட்சியினர் யாழில் கடந்த 13ஆம் திகதியன்று கார்த்திகை வீரர்களின் ஞாபகார்த்தம் என்னும் பெயரில் நினைவேந்தல் நிகழ்வொன்றினை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு ஜே.வி.பி கட்சியினர் கார்த்திகை வீரர்களை நினைவேந்த முடியுமெனில், நாம் ஏன் மாவீர்களை நினைவேந்த முடியாது என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேவேளை மாவீரர் நாளினைத் தடுப்பதற்காக நீதிமன்றிலே வழக்குத்தாக்கல் செய்யும் காவல்துறையினர், ஏன் கார்த்திகை வீரர்களின் நினைவேந்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும்  கேள்வி எழுப்பியதுடன், காவல்துறையினரின் இந்த பாரபட்சமான செயற்பாட்டினை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிக்குள் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை செய்யக்கோரி, முல்லைத்தீவு  காவல்துறையினர் 17.11.2021அன்று மாங்குளம் நீதிமன்றில் AR/868/21 என்னும் வழக்கிலக்கத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

அதற்மைய வழக்கினை ஆராய்ந்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா, முல்லைத்தீவு காவல் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட பன்னிரெண்டு பேருக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

இவ்வாறு நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்ட தடைக்கட்டளையினை 19.11.2021இன்று முல்லைத்தீவு காவல்துறையினர் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் இல்லத்திற்கு சென்று கையளித்திருந்தனர்.

குறித்த தடைக்கட்டளையினைப் பெற்றுக்கொண்ட பின்னர் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (19)  முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு காவல்துறையினரால் தடை உத்தரவு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை மதிக்கின்றோம்.

காவல்துறையினர் இந்த விடயத்தில் ஒரு பாரபட்சமாக நடக்கின்றார்கள் .மாவீரர் நாள் நிகழ்வினை தமிழ் மக்கள் அனுஸ்டிக்கக் கூடாது என்ற நிலையில் பல நீதிமன்றங்கள் ஊடாக தடை  உத்தரவினை பெற்று எல்லோருக்கும் வழங்கி வருகின்றார்கள்.

கடந்த 13 ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணி கட்சியினர் யாழ்ப்பாணத்தில் கார்த்திகை வீரர்கள் தினம் என்று நினைவு கூர்ந்துள்ளார்கள். இதற்கு நாங்கள் எதிர்ப்பல்ல.

கார்த்திகை வீரர்கள் நினைவுதினம் என யாழில் வந்து நினைவுகூர முடியுமானால் எங்கள் மக்கள் ஏன் தங்கள் மாவீரர்களை நினைவு கூரமுடியாது என்பது தான் என்னுடைய கேள்வி? என்றார்.

Posted in Uncategorized

“மஞ்சள் கோட்டில் மாணவரை பாதுகாப்போம்”விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்

“மஞ்சள் கோட்டில் மாணவரை பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் வவுனியா முதல் வட்டுக்கோட்டை வரை விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று ஆரம்பமானது.

குறித்த வேலைத்திட்டம் இன்று கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் முன்பாக ஆரம்பமானது.

கிளி பீப்பிள் எனும் புலம்பெயர் அமைப்பின் நிதி பங்களிப்புடன் கல்வி கலாசார அபிவிருத்தி அமையத்தின் ஒழுங்கமைப்பினால் இந்த விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

கல்வி கலாசார அபிவிருத்தி அமையத்தின் ஒழுங்கமைப்பில் கிளி பீப்பிளின் செயற்திட்டமான “வவுனியா தொடக்கம் வட்டுக்கோட்டை வரை” (ஏ2ஏ) வீதி விபத்துக்களை குறைக்கும் விழிப்புணர்வு பதாதைகளை பாடசாலை முன்பாக மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் நிறுவும் செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

ஆரம்ப நிகழ்வில் வைத்தியர்கள்இ அதிபர்கள்இ ஆசிரியர்கள்இ சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள்இ பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

அண்மையில் விபத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவிக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் விழிப்புணர்வு பதாதைகள் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஓ.எம்.பி.அலுவலக செயற்பாடுகளுக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்ப்பு

ஓ.எம்.பி.அலுவலக செயற்பாடுகளுக்கு  முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.  

முல்லைத்தீவு மாவட்ட  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி முல்லைத்தீவு ஊடக அமையத்தில்  நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில்,

இன்று 1718 ஆவது நாளாக நாங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இந்த நேரத்திலே நாங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவினர்களுக்கும் சர்வதேசத்துக்கும் அவசரமும் அவசியமானதுமான ஒரு தகவலை தெரிவிக்கவே இந்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்தோம்.

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் அதாவது ஓ எம் பி அலுவலகத்தால் நாங்கள் ஏற்றுக்கொள்ளாத அலுவலகம் எங்களை பதிவு செய்ததாக கூறி, அதாவது காணாமல் போனோர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் தகவல் அடிப்படையில் தங்களுக்கு மிகுதி தகவல்களையும் வழங்குமாறு காணாமல் போன உறவுகளுக்கு கடிதங்கள் அனுப்பி வருகின்றனர்.

இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்டத்திலே கடிதங்கள் வந்து கொண்டிருக்கிறது. நாங்கள் இந்த ஓ எம் பி அலுவலகத்திலே எந்த ஒரு தகவலையும் பதிவு செய்யவில்லை.  ஒரு பொய்யான  தகவலை வைத்துக்கொண்டு மக்களிடம் இருந்து தகவலை பெற்று எமக்கான மரணச்சான்றிதழ் இழப்பீடுகளை வழங்குவதற்கான ஆரம்பகட்ட வேலைகள் செய்வதற்கு முனைகின்றனர்.

இதில் மக்கள் மிகவும் அக்கறையாக இருக்க வேண்டும்.  வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களாகிய நாங்கள் இந்த முறைப்பாடுகளை செய்யவில்லை.

நாங்கள் இதில் கவனமாக இருப்பதோடு ஓ எம் பி அலுவலகத்திடம் நாங்கள் பலதடவைகள் கூறினோம். இந்த அலுவலகம் எங்களுக்கு தேவையில்லை. நீங்கள் எந்த பதிவுகளையும் செய்ய வேண்டாம் என்று. இருப்பினும் அவர்கள் காணாமல் போனவருடைய   புகைப்படம்,   அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட சகல தகவல்களையும் கோருகின்றனர். ஆனால் நாம் கொடுக்கப்போவதில்லை.

எனவே நாங்கள் இப்போதும் ஆணித்தரமாக கூறுகிறோம் எமக்கு இந்த ஓ எம் பி அலுவலகம் தேவையில்லை. ஜனாதிபதி ஏற்கனவே கூறியிருக்கிறார் காணாமல் போனோருக்கு தான் மரணச்சான்றிதழ் வழங்க தயாராகவுள்ளதாக. இந்த நிலையில் அதை சந்தர்ப்பமாக வைத்து ஓ எம் பி அலுவலகம் பாதிக்கப்பட்ட எம்மிடமிருந்து தகவலை பெற்று எமக்கு மரணச்சான்றிதழ் தருவதற்கு முனைகின்றார்கள். இதனை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

எச்சரிக்கை – எல்லை தாண்டும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை – ராமேஸ்வரம் மீன்வளத்துறை

எல்லை தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ராமேஸ்வரம் மீன்வளத்துறை எச்சரிக்கை: சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட மாட்டோம் என தமிழக மீனவர்கள் உறுதி

எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடிக்கும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராமேஸ்வரம் மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட மாட்டோம் என ராமேஸ்வரம் மீனவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சமீப காலமாக தடை செய்யப்பட்ட வலைகளளை பயன்படுத்தி மீனவர்கள் மீன் பிடிப்பதால் கடல் வளம் குறைந்து வருகிறது.

அதே போல் எல்லை தாண்டி மீனவர்கள் மீன் பிடிப்பதால் இலங்கை இந்திய மீனவர்கள்; இடையே பிரச்சனை ஏற்படுகிறது. எனவே, இவ்வாறான பிரச்சைகளை தடுக்கும் வகையில் இன்று காலை ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் அருகே உள்ள மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் மீனவர்கள் மற்றும் மீன்வளத்துறையினர், மெரைன் போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தடை செய்யப்பட்ட மீன்பிடி முறையினை பயன்படுத்தி மீன் பிடிக்கும் மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்ததுடன், கடற்கரையிலிருந்து 5 நாட்டிகலுக்குள் கரையோரம் மீன்பிடிக்கும் விசைப்படகுகள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து கூட்டத்தில் கலந்து கொண்ட மீனவ சங்க தலைவர்கள மற்றும் விசைப்படகு உரிமையாளர்கள் அரசால் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீனவர்கள் மீன் பிடிக்க மாட்டோம் எனவும், அப்படி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உறுதியளித்தனர்.

மேலும், இலங்கை இந்திய மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க இலங்கை அரசுடன் இந்திய அரசு உடனடியாக பேசி நடுக்கடலில் பிரச்சினையின்றி மீனவர்கள் மீன் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேஸ்வரம் துறைமுகம் மிகவும் பழமையான துறைமுகம் என்பதால் சேதமடைந்துள்ளது. இதனால் பேரிடர் காலங்களில்; மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்த முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே தூண்டில் வளைவுகளுடன் கூடிய புதிய மீன் பிடி துறைமுகம் அமைத்து தர வேண்டும் என மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

Posted in Uncategorized

மஹிந்த ராஜபக்ஷவே எமது காலத்து அரசர்- பேராசிரியர் இந்துருகாரே தம்மரதன தேரர்

யுத்தம் என்பது பயங்கரவாதத்திற்கு அறிந்த மொழியில் பதிலளிப்பதே ஆகும். யுத்தம் என்பது இரு நாடுகளுக்கு இடையே நடப்பதாகும். அதனால் இலங்கையில் யுத்தம் நடக்கவில்லை என்று பேராசிரியர் வணக்கத்திற்குரிய தம்மரதன தேரர் தெரிவித்தள்ளார்.

அனுராதபுரத்தில் குறைந்த வருமானம் பெறும் 100 குடும்பங்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் குழாய் மூலமான குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார்.

இந் நிகழ்வு அநுராதபுரம் மிரிசவெட்டிய ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற போது அனுசாசனம் நிகழ்த்திய பேராசிரியர் வணக்கத்திற்குரிய இந்துருகாரே தம்மரதன தேரர்,

சிங்கள துட்டகைமுனு தமிழ் எல்லாளனுக்கு எதிராகப் போரிட்டார். எல்லாள மன்னருக்கும் துட்டகைமுனு மன்னனுக்கும் இடையே நடந்த போரை வரையறுக்க முடியாது. காரணம் எல்லாளன் தமிழன் அல்ல. துட்டகைமுனு மன்னன் தமிழர் படைக்கு எதிராகப் போரிடவில்லை, படையெடுத்து வந்த சோலிப் படைக்கு எதிராகப் போரிட்டான். எனவே, சோழப் பேரரசின் படையெடுப்பாளர் மீது மன்னர் துட்டகைமுனு நடவடிக்கை எடுத்தார்.
எனவே யுத்தம் என்பது பயங்கரவாதத்திற்கு அறிந்த மொழியில் பதிலளிப்பதே ஆகும். யுத்தம் என்பது இரு நாடுகளுக்கு இடையே நடப்பதாகும். அதனால் இலங்கையில் யுத்தம் நடக்கவில்லை.
ஐரோப்பிய முகவர்கள் மற்றும் உள்ளூர் முகவர்களின் சலசலப்பை இறுதி நொடியில் நிறுத்துவதற்கு ஹெலிகொப்டரில் எம்பிலிபிட்டியவிற்கு சென்று முயற்சித்தார். அப்போது படையெடுப்பாளருக்கு எதிராக செயற்பட்ட மஹிந்த ராஜபக்ஷவே எமது காலத்து அரசர்.
எமக்கு அதுவே முக்கியமானது. உருளைக்கிழங்கு, வெங்காய அரசியல் அல்ல. உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் குறைவடையும், அதிகரிக்கும். ஆனால், இந்நாட்டின் சுதந்திரம் என்ற விடயத்தை ஒருவர் தமிழ் மக்களுக்கு எதிரான தமிழ் இனப்படுகொலை என்று வரையறுத்தார். அது அப்படியல்ல, அது ஆக்கிரமிப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகும். தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் நடத்தப்பட்டிருந்தால் முதலில் வெள்ளவத்தை மீதே தாக்குதல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். முதலில் கோவில்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.
எனவே இன்று இந்த யுத்தத்தினால் பயனடைவது யார், சிங்களவர்களா இல்லை. சாதாரண மக்களா? அதுவும் இல்லை. வர்த்தகர்கள் அனைவருமே ஆவர். எனவே, உருளைக்கிழங்கைக் குறைக்கவோ, எரிவாயுவை அதிகரிக்கவோ இந்நாட்டு மக்கள் கேட்கவில்லை. அப்போது நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் கோரிக்கை. அதனால்தான் நாட்டு மக்கள் இன்னும் உங்களை நேசிக்கிறார்கள்.
எனவே, இந்நாட்டில் உள்ள இலட்சக்கணக்கான மக்கள் உங்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.
இலங்கை வரலாற்றில் மன்னர்களின் வம்சத்திற்குப் பின்னர் மீண்டும் ஒருமுறை அண்மைக்கால வரலாற்றில் பெரும் தூபியான சந்தஹிரு சேயாவை அமைக்க சந்தர்ப்பம் ஏற்பட்டது. இந்த நாட்டில் எந்த அரசனுக்கும் இப்படி ஒரு ஆணை கிடைத்ததில்லை. இவ்வாறான பிறந்தநாள் பரிசுகள் வேறு எவருக்கும் கிடைக்கவில்லை என பேராசிரியர் இந்துராகாரே தம்மரதன தேரர் தெரிவித்தார்.
இந் நிகழ்வில், ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தர், மிரிசவெட்டிய சைத்தியாராமாதிகாரி வணக்கத்திற்குரிய ஈதல வெடுணு வெவே ஞானதிலக தேரர், பேராசிரியர் வணக்கத்திற்குரிய இந்துருகாரே தம்மரதன தேரர், கங்காராம விகாராதிகாரி கலாநிதி வணக்கத்திற்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர், கலாநிதி வணக்கத்திற்குரிய அக்ரஹார கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் பங்கேற்றனர்.

லண்டனில் தீ விபத்தில் இலங்கையர்கள் நால்வர் பலி

லண்டனின் தென்கிழக்கு பகுதியில் Bexleyheath நகரில் ஹெமில்டன் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் பரவிய தீயில் கருகி ஒரே குடும்பத்தை சேர்ந்த இலங்கையர்கள் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் நால்வரும் திருகோணமலை – உவர்மலையை சேர்ந்தவர்களென தெரியவந்துள்ளது.

ஹெமில்டன் வீதியில் அமைந்துள்ள குறித்த வீட்டில் கடந்த வியாழக்கிழமை இரவு 8.30 அளவில் தீ பரவியுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படையினர், அனர்த்தத்தை எதிர்நோக்கிய ஐவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

எவ்வாறாயினும், அவர்களில் நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒன்றரை வயதான ஷஸ்னா, 4 வயதான தபிஷ், இவர்களின் தாயார் நிரூபா மற்றும் அவரது மாமியார் ஆகியோரே தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.

நிரூபாவின் மாமி, தனது பேரப்பிள்ளைகளை பார்ப்பதற்காக இலங்கையிலிருந்து சென்றுள்ளதுடன் அன்றைய தினம் மீண்டும் நாடு திரும்பவிருந்த நிலையில் இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், நிரூபாவின் கணவர் தீ பரவிய போது வீட்டில் இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Metropolitan பொலிஸாரும் தடயவியல் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

நிரூபாவின் குடும்பத்தினர் சுமார் 15 வருடங்களாக பிரித்தானியாவில் வசித்து வருவதுடன் 03 மாதங்களுக்கு முன்னரே குறித்த வீட்டில் குடியேறியதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.