ஆசிரியர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

தீர்க்கப்படாத சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆசிரியர் சங்கங்கள் இம்மாதம் 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஏனைய துறைகளின் தொழிற்சங்கங்களுடன் கைகோர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளன என்று ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கையாக 2022 வரவு செலவுத் திட்டத்துக்கு முன்னர் ‘சுபோதினி அறிக்கை’ மூலம் பரிந்துரைக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவால் முன்மொழியப்பட்ட தொகையை செலுத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

கல்வி அமைச்சுக்கு எதிரே இன்று (05) நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், அனைத்துப் பல்கலைக்கழக வல்லுநர்களும் ஆசிரியர்களுடன் இணைந்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றார்.

‘சுபோதினி அறிக்கை’ பரிந்துரைத்தபடி, நாட்டின் தலைவர்கள் காலதாமதமான தொகையை ஒரே கட்டணத்தில் செலுத்துவதை உறுதிசெய்ய மற்ற தொழிற்சங்கங்களின் ஆதரவைப் பெறுவோம் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

ஆசிரியர்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருக்கும் என்பதால், பணம் வீணாகப் போவதில்லை என்றார்.

மதிய உணவு வேளை போராட்டத்துக்கு மனோ அழைப்பு

எதிர்வரும் 9ஆம் திகதி ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் நடத்தும் தேசிய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக தமது சம்பளம், விலைவாசி பிரச்சினைகளையும், ஆசிரியர்களின் பிரச்சினைகளையும் முன்வைத்து, தோட்டத்தொழிலாளர்கள், மலைகளில், தமது வேலைதளங்களில் இருந்தவாறு பகலுணவு வேளையில் ஆர்பாட்டம் செய்ய வேண்டும் என தமிழ் முற்போக்கு தலைவர் மனோ கணேசன் எம்பி கோரியுள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் பழனி திகாம்பரம், ஜ.ம.மு இரத்தினபுரி அமைப்பாளர் மற்றும் கூட்டணியின் ஆசிரியர் விவகார பொறுப்பாளர் சந்திரகுமார் ஆகியோரை, இலங்கை ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றிய பிரதிநிதிகளான வண. யல்வெல பஞ்சாசாகர தேரர், ஜோசப் ஸ்டாலின், மஹிந்த ஜயசிங்க ஆகியோர் உள்ளிட்ட குழுவினர், இன்று(04) சந்தித்து உரையாடினார்கள்.

அதன்போது இலங்கை ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் எதிர்வரும் ஒன்பதாம் திகதி செவ்வாய்கிழமை நடத்தவிருக்கும் அடையாள தேசிய எதிர்ப்பு தினத்துக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆதரவை கோரினர்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஆசிரியர்களின் எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதி செவ்வாய்கிழமை தேசிய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக தமது சம்பளம், விலைவாசி பிரச்சினைகளையும், ஆசிரியர்களின் பிரச்சினைகளையும் முன்வைத்து, தோட்டத்தொழிலாளர்கள் மலைகளில், தமது வேலைதளங்களில் இருந்தவாறு பகலுணவு வேளையில் ஆர்பாட்டம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை விடுப்பதாக கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் பழனி திகாம்பரம் ஆகியோர் தெரிவித்தனர்.

அதேவேளை ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் பிரதிநிதிகளுக்கு, இன்று தோட்ட தொழிலாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் பழனி திகாம்பரம் ஆகியோர் விரிவாக எடுத்து கூறினர்.

எதிர்காலத்தில்  தோட்ட தொழிலாளர் பிரச்சினைகளையும் பொது தேசிய தொழிற்சங்க வேலைத்திட்டத்தில் இணைத்துக்கொள்ள இது ஒரு ஆரம்பமாக அமைய வேண்டும் என இரு தரப்பினரும் இணங்கினர்.

சீன இராணுவத்திற்கு வசதி வழங்கும் நிலையமாக இலங்கை மாற இடமுள்ளது: பென்டகன் ஆய்வறிக்கை

இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் சீன குடியரசின் இராணுவத் தளங்களாக அல்லது வசதி வழங்கும் நிலையங்களாக மாறுவதற்கு பெரும்பாலும் இடமுள்ளதாக பென்டகன் விடுத்துள்ள புதிய பாதுகாப்பு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன இராணுவ மற்றும் பாதுகாப்பு அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் இந்த அறிக்கையை தயாரித்துள்ளது.

சீனா தமது இராணுவ பலத்தை பரந்த பிரதேசத்தில் பேணும் நோக்கில், இலங்கை உள்ளிட்ட 13 நாடுகளில் தமது இராணுவத்திற்கு வசதி வழங்கும் நிலையங்களை ஸ்தாபிப்பதற்கு இடமுள்ளதாக இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையுடன் கம்போடியா, மியன்மார், தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேஷியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 13 நாடுகளை சீனா இதற்காக பயன்படுத்துவதற்கு இடமுள்ளதாக பென்டகன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா தமது இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையை வலுப்படுத்துவதற்கு இதன் மூலம் எதிர்பார்ப்பதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

எல்லா தமிழ், முஸ்லிம் கட்சிகளும் ஒரு தளத்தில் அமர்ந்து பேசுவது ஆரோக்கியமானதே

யாழில் சனிக்கிழமையன்று நடைபெற்ற தமிழ், முஸ்லிம் கட்சிகளின் கலந்துரையாடலில் அகில இலங்கை தமிழரசு கட்சியும் இருக்க வேண்டும் என நானும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நண்பர் ரவுப் ஹக்கீமும் வலியுறுத்தினோம். அதை அந்த உரையாடலில் கலந்துக்கொண்ட எல்லா கட்சிகளும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டார்கள். என்னை பொறுத்தவரையில், அகில இலங்கை தமிழரசு கட்சி மட்டுமல்ல, இந்த பொது நோக்கில் இணைந்து செயற்பட விரும்பும் எல்லா தமிழ், முஸ்லிம் கட்சிகளும் ஒரு தளத்தில் அமர்ந்து பேசுவது ஆரோக்கியமானதே என எண்ணுவதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

ஆனால், அகில இலங்கை தமிழரசு கட்சி பிரதானமான கட்சி என்பதால், முதலில் அந்த கட்சி உள்வாங்கப்பட வேண்டுமெனவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இந்த கலந்துரையாடல் தொடர்ந்து நிகழ வேண்டும் எனவும் நான் விரும்புகிறேன்.

கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த உரையாடல் ஏற்பாட்டை தமிழீழ விடுதலை இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. அக்கட்சியின் தலைவர் நண்பர் செல்வம் அடைக்கலநாதனின் அழைப்பின் பேரிலேயே நாம் கலந்துக்கொண்டோம். அடைக்கலநாதன் எம்பியினதும், அவரது கட்சியினதும் இந்த முன்முயற்சி பாராட்டுக்குரியது எனவும் நான் எண்ணுகிறேன்

ஆனால், இத்தகைய உரையாடல் தமிழ் கட்சிகள் மத்தியில் ஐக்கியத்தை மென்மேலும் வலுப்படுத்த வேண்டும். அதைவிடுத்து இதன் மூலம் பிளவுகள் அதிகரிக்குமானால், இத்தகைய முயற்சிகளில் பங்குபற்றி காலவிரயம் செய்ய தமிழ் முற்போக்கு கூட்டணியாக நாம் விரும்ப மாட்டோம் என தமுகூ தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

COVID தொற்று நிலைமை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் – புறக்கோட்டை ரயில் சேவை 5 மாதங்களின் பின்னர் இன்று மீண்டும் ஆரம்பமானது.

காலை 05.30-க்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்ட யாழ் தேவி ரயில் யாழ்ப்பாணத்தை சென்றடைந்து மாலை 06.10-க்கு அங்கிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டது.

பகல் 01.15-க்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்படும் நகர்சேர் கடுகதி ரயிலும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

ஸ்கொட்லாந்து பொலிஸார் இலங்கைப் பொலிஸாருக்குப் பயிற்சிகளை வழங்குவதை உடனடியாக நிறுத்தவேண்டும் – பொது மகஜர் வெளியீடு

இலங்கைப் பொலிஸாருக்கு சுமார் 15 வருடங்களுக்கும் அதிகமான காலம் இலங்கைப் பொலிஸாரினால் பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்ற போதிலும், மனித உரிமைகள் விவகாரத்தில் இதுவரையில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றங்கள் எவையுமில்லை.

மனித உரிமைகள் தொடர்பில் தாம் கொண்டிருக்கும் மோசமான பதிவுகளை வலுவிழக்கச்செய்யும் வகையிலான ‘பொதுத்தொடர்பு மேம்பாட்டு’ உத்தியாகவே இப்பயிற்சி வழங்கலை இலங்கை அரசாங்கம் நோக்குகின்றது என்று ஸ்கொட்லாந்தைத் தளமாகக் கொண்டியங்கும் ஃப்ரீடம் ஃப்ரொம் டோர்ச்சர் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

அதுமாத்திரமன்றி இலங்கைப் பொலிஸாருக்குப் பயிற்சிகளை வழங்குவதை ஸகொட்லாந்து பொலிஸ் உடனடியாக நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தி பொதுமகஜர் ஒன்றையும் அவ்வமைப்பு வெளியிட்டுள்ளது.

ஐக்கிய இராச்சியத்தின் ஸ்கொட்லாந்தைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் ‘ஃப்ரீடம் ஃப்ரொம் டோர்ச்சர்’ (சித்திரவதைகளிலிருந்து விடுதலை பெறல்) என்ற அமைப்பு, உலகளாவிய ரீதியில் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்குவதுடன் அவர்களது உரிமைகளுக்காகவும் போரடிவருகின்றது.

அவ்வமைப்பு அதன் உத்தியோகபூர்வ இணையப்பக்கத்தில் ‘ஸ்கொட்லாந்து பொலிஸுக்குக் கூறுங்கள்: இலங்கையில் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒன்றிணையுங்கள்’ என்ற தலைப்பில் பொதுமகஜர் ஒன்றை வெளியிட்டிருக்கின்றது.

இலங்கையில் சிறுபான்மையினத்தவருக்கு எதிரான சித்திரவதைகள் மற்றும் பாலியல் ரீதியான அச்சுமீறல்களுடன் இலங்கைப் பொலிஸார் தொடர்புபட்டிருக்கின்றார்கள் என்று அந்த மகஜரில் சுட்டிக்காட்டியிருக்கும் அவ்வமைப்பு, இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டு தற்போது ஐக்கிய இராச்சியத்தில் வாழ்பவர்கள், சித்திரவதைகளால் ஏற்பட்ட பாதிப்புக்களிலிருந்து மீண்டு அவர்களது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான அனுசரணையைத் தமது அமைப்பு வழங்கிவருவதாகவும் தெரிவித்திருக்கின்றது.

மேலும் இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுடனான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதாக இருந்தால், ஸ்கொட்லாந்து பொலிஸார் இலங்கைப் பொலிஸாருடன் ஒன்றிணைந்து பணியாற்றுவதை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் தமது இணையப்பக்கத்தில் பகிரப்பட்டுள்ள பொதுமகஜரைப் பூரணப்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவை வெளிக்காட்டுமாறும் அவ்வமைப்பு பொதுமக்களிடம் கோரியுள்ளது.

சுமார் 1000 பேரின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதை இலக்காகக்கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்தப் பொதுமகஜரை தற்போதுவரை (நேற்று நண்பகல்) 204 பேர் பூரணப்படுத்தி, இலங்கைப்பொலிஸாருடன் ஸ்கொட்லாந்து பொலிஸார் இணைந்து பணியாற்றக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர்.

அதேவேளை இம்மகஜர் தொடர்பில் ‘ப்ரீடம் ஃப்ரொம் டோர்ச்சர்’ அமைப்பு அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்துள்ளது. ‘பொதுமக்களை சித்திரவதைகளுக்கு உள்ளாக்கும் பொலிஸாருக்குப் பயிற்சி வழங்கப்படக்கூடாது.

இலங்கைப் பொலிஸ் பொதுமக்களை சித்திரவதைகளுக்கு உட்படுத்தியதுடன் சிறுபான்மையின சமூகத்தின்மீது அடக்குமுறையைப் பிரயோகித்த வரலாற்றைக் கொண்டிருக்கின்றது. அவ்வாறிருந்தும் அவர்களுடன் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான ஊதியத்தை போரிஸ் ஜோன்ஸனின் அரசாங்கம் ஸ்கொட்லாந்து பொலிஸுக்கு வழங்குகின்றது’ என்று அப்பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்து பொலிஸாரினால் சுமார் 15 வருடங்களுக்கும் அதிகமான காலம் பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்ற போதிலும், இதுவரையில் மனித உரிமைகள் விவகாரத்தில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றங்கள் எவையுமில்லை.

மனித உரிமைகள் தொடர்பில் தாம் கொண்டிருக்கும் மோசமான பதிவுகளை வலுவிழக்கச்செய்யும் வகையிலான பொதுத்தொடர்பு மேம்பாட்டு உத்தியாகவே இப்பயிற்சி வழங்கலை இலங்கை அரசாங்கம் நோக்குகின்றது என்றும் அவ்வமைப்பு அதன் டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

பல அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாட்டு விலை நீக்கம்

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் கட்டுப்பாட்டு விலையை நீக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு அமைய சீனி, பருப்பு, கோழி இறைச்சி, செமன், சோளம், பெரிய வெங்காயம், கோதுமை மா, உருளைக்கிழங்கு மற்றும் பால்மா மற்றும் உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் வௌியிடப்பட்ட 7 வர்த்தமானி அறிவித்தல்கள் இந்த விஷேட வர்த்தமானி அறிவிப்பின் ஊடாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி வௌ்ளை மற்றும் சிகப்பு சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

பண்டோரா ஆவணக் கசிவில் இடம்பிடித்திருந்த திருக்குமார் நடேசன்: மற்றொரு பட்டியலிலும் இடம்பிடித்தார்

கார்கில்ஸ் (சிலோன்) பிஎல்சியின் முதல் 20 பங்குதாரர்கள் பட்டியலில், முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவர் தொழிலதிபர் திருகுமார் நடேசனும் இடம்பிடித்துள்ளார்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கசிந்த பண்டோரா பேப்பர்ஸில் பெயரிடப்பட்ட நடேசன், 2021, செப்டம்பர் இறுதியில் காா்கில்ஸின் கிட்டத்தட்ட 600, 000 பங்குகளை அல்லது 0.23 சதவீத  பங்குகளை வைத்திருந்தார்.

அத்துடன் அதன் 18வது பெரிய பங்குதாரராகவும் இருந்தாா்.

புலனாய்வுச் செய்தியாளா்களின் சர்வதேச கூட்டமைப்பு (ICIJ) வெளியிட்ட பண்டோரா ஆவணங்களில், நடேசன் மற்றும் நிருபமா ஆகியோர் பல்வேறு வெளிநாட்டுக் கணக்குகள்  மற்றும்  சொத்துக்கள் வைத்திருப்பதற்காக பெயரிடப்பட்டிருந்தனா்.

இதனையடுத்து பண்டோரா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கையூட்டல் மற்றும் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவிற்கு இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கனவே பணிப்புரை விடுத்திருந்தாா்.

எனினும் தாமும் தமது மனைவியும் முற்றிலும் நிரபராதி என்றும் எந்தத் தவறும் செய்யாதவா்கள் என்றும் நடேசன் , ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் ஒன்றில் தொிவித்திருந்தாா்.

இதற்கிடையில், கார்கில்ஸின் முதல் 20 பங்குதாரர்களில் மற்றொரு தமிழரும் இணைந்துள்ளாா்.

A. I. டொமினிக் என்டோயின் இந்திரஜித்   என்ற அவா், நியூயோா்க்கில் வா்த்தகத்தில் ஈடுபட்டுள்ள யாழ்ப்பாணத்தைச் சோ்ந்தவராவார்.

2021 செப்டம்பர் இறுதியில், அவா்,  கார்கில்ஸின் 1.96 மில்லியன் பங்குகளை கொண்டிருந்தார்.

Posted in Uncategorized

உலகத் தலைவர்கள் மீது கோபமாக இருக்கிறோம்: ஸ்கொட்லாந்து மாநாட்டில் தமிழ் மாணவியின் துணிச்சல் பேச்சு

இன்றைய இளம் தலைமுறையினர் உலக தலைவர்கள் மீது கோபமாக இருக்கிறார்கள் என்று ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்த காலநிலை மாற்ற மாநாட்டில் தமிழக மாணவி ஒருவர் உரையாற்றியுள்ளார்.

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காலநிலை மாற்ற மாநாடு இடம்பெற்றுவருகிறது. கால நிலை மாற்ற மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த வினிஷா உமா சங்கர் என்ற மாணவியும் கலந்துகொண்டுள்ளார்.

இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் அழைப்பின் பெயரில் காலநிலை மாற்ற மாநாட்டில் வினிஷா உமாசங்கர் பங்கேற்று உரையாற்றியுள்ளார். இதன்போது குறித்த மாணவி உரையாற்றியதாவது, நாம் பேசுவதை நிறுத்திவிட்டு செயல்படத் தொடங்க வேண்டும். எர்த்ஷாட் பரிசு வென்றவர்கள் மற்றும் இறுதி போட்டியாளர்களின் கண்டுபிடிப்புகள், திட்டங்கள் மற்றும் தீர்வுகளை உலக தலைவர்கள் ஆதரிக்க வேண்டும்.

பழைய விவாதங்களை பற்றி நாம் சிந்திப்பதை நிறுத்த வேண்டும். ஏனென்றால் புதிய எதிர்காலத்துக்கான புதிய பார்வை எங்களுக்கு தேவை. எனவே எங்கள் எதிர்காலத்தை வடிவமைக்க உங்கள் நேரத்தையும், பணத்தையும், முயற்சியையும் எங்களிடம் முதலீடு செய்ய வேண்டும். எர்த்ஷாட் பரிசு வென்றவர்கள் மற்றும் இறுதி போட்டியாளர்களின் சார்பாக உங்களை எங்களுடன் சேர அழைக்கிறேன்.

எங்களுடன் துணை நிற்க உங்களை அழைக்கிறேன். நீங்கள் பழைய சிந்தனை முறைகளையும், பழைய பழக்கங்களையும் கைவிடுவீர்கள் என்று நம்புகிறேன். ஆனால் நான் தெளிவாக சொல்லிக்கொள்கிறேன். எங்களுடன் நீங்கள் சேராமல் இருந்தாலும் நாங்கள் வழி நடத்துவோம். நீங்கள் தாமதித்தாலும் நாங்கள் செயல்படுவோம். நீங்கள் கடந்த காலத்தில் சிக்கிக் கொண்டாலும், நாங்கள் எதிர்காலத்தை உருவாக்குவோம். ஆனால் தயவு செய்து எனது அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.

நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். நீங்கள் வருத்தப்படமாட்டீர்கள் என்று. வெற்று வாக்குறுதிகளை அளித்து நிறைவேற்ற தவறிய தலைவர்கள் மீது எனது தலைமுறையினரில் பலர் கோபமாகவும், விரக்தியாகவும் உள்ளனர். கோபப்படுவதற்கு எங்களுக்கு எல்லா காரணங்களும் உள்ளன. ஆனால் கோபப்படுவதற்கு எனக்கு நேரமில்லை. நான் செயல்பட விரும்புகிறேன்.

நான் இந்தியாவில் இருந்து வந்த ஒரு சிறுமி மட்டுமல்ல. நான் பூமியில் இருந்து வந்த சிறுமி. நான் அப்படி இருப்பதில் பெருமைப்படுகிறேன். நானும் ஒரு மாணவி, கண்டுபிடிப்பாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் தொழில் முனைவோர். மிக முக்கியமாக நான் ஒரு நம்பிக்கையாளர் என்றார்.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியவர்களுக்கு எர்த்ஷாட் என்ற பெயரில் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உருவாக்கிய இந்த பரிசு சுற்றுச்சூழல் ஆஸ்கர் விருது என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான விருது இறுதி போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேரில் வினிஷா உமா சங்கரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பான்மையினரின் மனங்களிலுள்ள நரகாசுர அரக்கர்கள் அழியும் தீபாவளியாக அமையட்டும் -ரெலோவின் செயலாளர் நாயகம் ஜனா

பெரும்பான்மையினரின் மனங்களிலுள்ள நரகாசுர அரக்கர்கள் அழியும் தீபாவளியாக அமையட்டும். என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

தீபாவளியை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

காலங் காலமாக எம் மக்கள் அனுபவித்துவரும் இனத்துவ ரீதியான அடக்குமுறைகளுக்கு ஒவ்வொரு வருடத்திலும் தீர்வு கிடைத்துவிடும் என்றே நாம் நம்புகிறோம். வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம். அதனாலேயே கூட மக்களிடம்வெறுப்பு குடிகொண்டுவிட்டது.

கடந்த காலத்தில் யுத்தத்தின் மூலம் மக்கள் கடும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து, யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் சர்வதேசத்தின் நீதியை எதிர்பார்த்துக் கொண்டே 12 வருடங்களைக் கடத்திவிட்டார்கள்.

ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெறும் அரசாங்கங்கள் பூச்சாண்டிகளைக் காண்பிப்பது போன்று ஏதோ ஒன்றைக் காட்டி மக்களை ஏமாற்றுவதே வழக்கமாக இருந்து வருகிறது. இம்முறை தீபாவளிப் பரிசாக ஒரே நாடு ஒரே சட்டம் இலங்கை அரசாங்கத்தினால் கடந்த வாரத்தில் கொடுக்கப்பட்டது. அதற்கான எதிர்ப்புக் கருத்துக்கள் தமிழ்த் தரப்புகளால் முன்வைக்கப்பட்ட வண்ணமே இருக்கின்றன.

தீபத்திருநாள் என்பது நரகாசுரனை வதம் செய்த தினமாகும் இம்முறை இந்தத் தீபாவளியாகிலும் பெரும்பான்மையினரின் மனங்களிலுள்ள நரகாசுரன்களை அழிப்பதாக அமைய வேண்டும். வெறுமனே கொண்டாட்டம், மகிழ்ச்சி என்பவைகள் மாத்திரம் பண்டிகையல்ல என்பதனை இலங்கை அரசாங்கம் புரிந்து கொள்கின்ற திருநாளாக இன்றைய தினம் அமையவேண்டும்.

அசுரர்கள் அழிக்கப்பட்டு மகிழ்ச்சியைக் கொண்டாடும் இந்த நாளில் ஜனாதிபதியும் அரசாங்கமும் எதிர்பார்க்கின்ற சுபீட்சமான நாடு உருவாக வேண்டுமானால் தமிழ் மக்களுக்கான சுதந்திரம் ஏற்படுத்தப்படவேண்டும்.

தமிழர்களுக்கு ஒருவித சட்டம் பெரும்பான்மை சிங்களவர்களுக்கு ஒரு சட்டம் என்றிருக்கின்ற இந்த நாட்டில் ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றது முதலே அடக்குமுறைகளுக்குள்ளும், நெருக்குதல்களுக்குள்ளும் வாழ்ந்துவரும் தமிழ் மக்களின் தீபாவளி என்பது பாரபட்சம், பாகுபாடு, ஒடுக்குமுறைகள் இல்லாத சமத்துவ உரிமைகள் வழங்கப்படும் நாளாகவே இருக்கும்.

இருப்பினும் இன்றைய தீபத்திருநாளில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமானதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுமான தீர்வானது ஏற்படுவதற்கான முயற்சிகளில் அனைத்து தமிழ் அரசியல் தலைமைகளும் ஒருங்கிணைந்து செயற்படுவதற்கு திடசங்கர்ப்பம் பூணுகின்ற நாளக அமையவேண்டும் என முதலில் வேண்டிக் கொள்கிறேன்.

அத்துடன், மகிழ்ச்சியும், நிமம்மதியும், அமைதியும் முன்னேற்றமுமுடையதான பிரகாசமான எதிர்காலம் எம் மக்களுக்கு ஏற்படவேண்டும் என்று இன்றை மகிழ்ச்சியான தினத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.