Category: செய்திகள்
கைதடி அரச முதியோர் இல்லத்தில் இதுவரை 115 பேருக்கு கொரோனா!
கைதடி அரச முதியோர் இல்லத்தில் இன்று வியாழக்கிழமை(02.08.2021) மீண்டும் துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் 68 முதியோர்களுக்கும், நான்கு ஊழியர்களுக்கும் என 72 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை(31) குறித்த முதியோர் இல்லத்தில் நடாத்தப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் 43 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் மேற்படி முதியோர் இல்லத்தில் இதுவரை 115 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் வலுப்பெறும்! – ஞானசார தேரர்
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாதம் முற்றாக இல்லாமல் போயுள்ளது என்று ஒருபோதும் கருதக் கூடாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் அமைப்பு மீண்டும் ஆட்சியதிகாரத்தை போராட்டத்தின் ஊடாக கைப்பற்றியுள்ளது. தலிபான்கள் இறுக்கமான மத கொள்கையையும் மதத்தின் பெயரில் அடிப்படைவாத செயற்பாடுகளிலும் ஈடுபடுவர்கள்.
இறுக்கமான மத கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அந்நாட்டு மக்கள் அபாயகரமான நிலையில் நாட்டை விட்டு வெளியேறுவதனை அவதானிக்க முடிகிறது. தலிபான் அமைப்புக்களின் மீள் எழுச்சி இலங்கையில் தற்போது 70 சத வீதமளவில் ஆதிக்கம் பெற்றுள்ள இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுக்கு சாதகமாக அமையும்.
தலிபான் அமைப்பின் கொள்கையால் ஈர்க்கபட்டுள்ள இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் இலங்கையிலும் உள்ளன. குறிப்பாக தப்லீக் ஜமாத் அமைப்பை குறிப்பிட வேண்டும். இந்த அமைப்பை அரசாங்கம் உடனடியாக தடை செய்ய வேண்டும்.அத்துடன் இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கையுடைய அமைப்புக்கள் குறித்தும் அதிக கவனம்செலுத்தப்பட வேண்டும்.
இலங்கையில் வாழும் சுதேச பாரம்பரிய முஸ்லிம்கள் இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கைக்கும், மதத்தின் பெயரை குறிப்பிட்டுக் கொண்டு தவறான புரிதல்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். இருப்பினும் இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் தலைமைகள் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் குறித்து முதலில் முஸ்லிம் மக்கள் ஒரு தீர்வை எடுக்க வேண்டும் என்றார்.
சீனாவின் சட்டமன்ற உறுப்பினர் லி ஜான்ஷு சபாநாயகருடன் பேச்சுவார்த்தை
சீனாவின் உயர்மட்ட சட்டமன்ற உறுப்பினர் லி ஜான்ஷு செவ்வாய்க்கிழமை பீஜிங்கில் இருந்து காணொளி இணைப்பு மூலமாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த தகவலை சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தேசிய மக்கள் காங்கிரஸ் (NPC) நிலைக்குழுவின் தலைவரான லி, இரு நாடுகளின் தலைவர்கள் எட்டியுள்ள முக்கிய ஒருமித்த கருத்தை அமுல்படுத்துவதற்கும், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கும் சீனா இலங்கையுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக கூறினார்.
அரசியல் பரிமாற்றங்களை மேம்படுத்தவும், கொவிட் -19 ஒழப்புக்கான ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும், பலதரப்பு ஒருங்கிணைப்புக்கு ஒத்துழைக்கவும் இதன்போது அவர் அழைப்பு விடுத்தார்.
சந்திப்பின் போது, லி சீனாவின் கோட்பாடுகள் மற்றும் கொவிட் -19 தோற்றம் குறித்த நிலைப்பாட்டையும் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
கொவிட் -19 இன் தோற்றத்தை கண்டறிவது ஒரு சிக்கலான அறிவியல் விடயம் என்றும் இது கூட்டு ஆராய்ச்சி மூலம் உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளால் மட்டுமே மேற்கொள்ளப்பட முடியும்.
தொற்றுநோய்க்கு எதிரான ஒத்துழைப்புக்கான அறிவியல் சூழல் மற்றும் தோற்றத்தின் தீவிரத்தன்மையை பாதுகாப்பதற்கும் மற்றும் ஒரு சிறந்த சூழ்நிலையை பராமரிப்பதற்கும் சீனா இலங்கையுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளது என்றும் லி தெரிவித்தார்.
இதன்போது சபாநயகர் இறையாண்மையைப் பாதுகாக்கவும், பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை ஊக்குவிக்கவும், கொவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் இலங்கையின் முயற்சிகளுக்கு உறுதியான ஆதரவளிப்புக்காக சீனாவுக்கு நன்றி தெரிவித்தார்.
நாடு நிதி ரீதியான நெருக்கடியை கடந்துவருகிறது -கலாநிதி ரமேஷ் பத்திரன
நாடு நிதி ரீதியில் நெருக்கடியான காலக்கட்டத்தை கடந்துவரும் இந்த சந்தர்ப்பத்தில் நிதி ஒழுங்குவிதிகளை இறுக்கமாக கடைபிடிக்க வேண்டிய கடற்பாடு இருப்தாக அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பத்திரன நேற்று (31) தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பது அல்லது முடிவுறுத்துவது குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார். இதில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன, இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அரச நிறுவனங்களில் கடுமையான நிதி ஒழுங்கைப் பேண வேண்டியதன் அவசியத்தை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச சுட்டிக்காட்டியதாகவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன கூறினார்.
நடைமுறைப்படுத்த முடியாத யோசனைகள் தொடர்பில் கவனம் செலுத்த கூடாது. தேவையற்ற கொடுப்பனவுகளை நிறுத்தி கடுமையான நிதி கட்டுப்பாட்டை நாட்டில் முன்னெடுக்க வேண்டும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேல்விக்கு பதிலளித்த அமைச்சர் ,சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் செயற்படுவது குறித்த இறுதித் தீர்மானம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்தார்.
அத்தியாவசியமற்ற ஆட்சேர்ப்பு நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும். இதேபோன்று தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுததப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் அதிகாரிகளுக்கு எரிபொருளுக்கான கொடுப்பனவு வழங்கப்படுமாயின் அதுதொடர்பில் அமைச்சு மற்றும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை : மூவரடங்கிய விசேட மேல்நீதிமன்ற தீர்ப்பாயம் நியமிப்பு
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ல் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்காக உயர் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த தலைமையிலான மூவரடங்கிய விசேட மேல்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.
நீதிபதி தமித் தொடவத்த தலைமையிலான இந்த குழாத்தில் நீதிபதிகள் அமல் ரணராஜ மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாவர்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக 25 முஸ்லிம் மௌவிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவசரகால நிலை பிரகடனத்துக்கு த. தே. கூ. கண்டனம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அத்தியவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தியதை வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
“நாட்டிலே உணவு விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்துவதற்காக இதனை செய்ததாக கூறப்படுகின்றது. ஆனால், இந்த சட்டத்தின் கீழ் பாதுகாப்பிற்கு ஆபத்து இருந்தால் அதனோடு சம்பந்தப்பட்ட விவாதங்களைத் தான் இந்தச் சட்டத்தின் மூலம் பாவிக்க முடியும்” என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நேற்றுத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;
“இதனாலேயே, பொது சுகாதார அவசர கால நிலைமைக்கான சட்டம் இயற்றப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தோம். அதற்கான தனி நபர் சட்டமூலத்தையும் பாராளுமன்றில் பிரேரித்துள்ளேன். அதனை சட்டமாக நிறைவேற்றுவதாக அரசாங்கம் அண்மையில் தீர்மானித்திருந்தது. ஆனால், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்ற தோரணையில் இப்போது அவரசகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
“இதிலுள்ள ஆபத்து என்னவென்றால், முற்று முழுதாக ஜனாதிபதி ஆட்யே நடைபெறும். ஜனாதிபதி தான் விரும்பிய அவசரகால விதிமுறைகளை வகுக்க முடியும். அத்துடன் சட்டமாக்கும் அதிகாரமும் ஜனாதிபதியின் கைக்குச் சென்றடையும். எனவே இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்” எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய உணவு விநியோகத்துடன் சம்பந்தப்பட்ட அவசரகால விதிமுறைகள், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி பொதுமக்களின் வாழ்க்கை நிலையை இயல்பு நிலையில் பேணுவதற்குத் தேவையான நெல், அரிசி, சீனி உள்ளிட்ட ஏனைய நுகர்வுப் பொருட்களை விநியோகிப்பதை ஒருங்கிணைப்புச் செய்வதற்காக, அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகமாக, மேஜர் ஜெனரல் எம்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காணாமல் போனவர்கள் விவகாரம் முடிவுக்கு கொண்டுவரப்படும்! – அலி சப்ரி
காணாமல் போனவர்கள் தொடர்பான விடயத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்களுக்கான சர்வதேச தினம் நேற்று முன்தினம் அனுஷ்டிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு பேசும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
கடந்த அரசாங்கத்தை போலல்லாது காணாமல் போனோர் அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் தொடர்பான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் தொடர்பாக கண்காணித்து, இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வருவதாக அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காணாமற்போனவர்கள் எந்த காரணத்திற்காக காணாமல்போனார்கள் என்பதை பற்றி விசாரிக்கத் தேவையில்லையென ஜனாதிபதி கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அவர்கள் அனைவரும் இலங்கை பிரஜை என்பதை மனதில் வைத்து, இவ்வாறான சம்பவம் மீண்டும் நிகழாமலிருப்பதை உறுத்திப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி கூறியுள்ளதாகவும் அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டினார்.
யுத்தம் முடிவுக்கு வந்து 12 ஆண்டுகள் கடந்தபோதிலும் இன்னும் காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் இருப்பது, நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணமென அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஒருவர் எத்தகைய சூழலில் காணாமல் போனார் எனபதை பார்க்காது, காணாமற்போனோரை அடையாளம் கண்டு இழப்பீட்டை வழங்குவோமென அமைச்சர் அலி சப்ரி உறுதியளித்துள்ளார்.
ஒருமைப்பாட்டை வெளிப்படுத்திய ஐரோப்பிய ஒன்றியம்
வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களால் இலங்கையிலும் ஏனைய உலகநாடுகளிலும் தமது அன்பிற்குரியவர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்குத் தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமான நேற்று திங்கட்கிழமை, பாதிக்கப்பட்டவர்களுடனான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருந்த பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
இன்று (நேற்று) வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமாகும். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது அவர்களது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தெரியாமலிருக்கும் நிலையில், இது அவர்களை நினைவுகூருவதற்கான தினமாக விளங்குகின்றது.
இலங்கையிலும் ஏனைய உலகநாடுகளிலும் தமது அன்பிற்குரியவர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுடனான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டியய தருணம் இதுவாகும் என்று அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தியாவசிய உணவு விநியோகத்துக்கான அவசரகால விதிமுறைகள்
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆவது பிரிவின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், அக்கட்டளைச் சட்டத்தின் ii ஆவது பிரிவின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தி, 5ஆவது பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் தயாரிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு விநியோகத்துடன் சம்பந்தப்பட்ட அவசரகால விதிமுறைகள், இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாகப் பதுக்குதல், அதிக விலை அறவிடுவதன் மூலம் நுகர்வோரை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் சந்தை முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக, அரசாங்கத்தின் உத்தரவாத விலைக்கு அல்லது சுங்கத்தில் இறக்குமதி செய்யப்பட்ட விலையை அடிப்படையாகக் கொண்டு நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாகக் கொள்வனவு செய்து மக்களுக்கு நியாயமான விலைக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கும், அரச வங்கிகளின் மூலம் மொத்தமாகக் கொள்வனவு செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள கடன், கடன் பெற்றுக்கொண்டவர்களிடம் இருந்து அறவிடப்படக்கூடிய வகையில் இது நடைமுறைப்படுத்தப்படும்.
சாதாரண பொதுமக்களின் வாழ்க்கை நிலையை இயல்பு நிலையில் பேணுவதற்குத் தேவையான நெல், அரிசி, சீனி உள்ளிட்ட ஏனைய நுகர்வுப் பொருட்களை விநியோகிப்பதை ஒருங்கிணைப்புச் செய்வதற்காக, அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகமாக, மேஜர் ஜெனரல் எம்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.