சீன இராணுவத்தினர் நாட்டில் உள்ளார்களா ? இல்லையா ? ஜனாதிபதி பதிலளிக்க வேண்டும் – ஜே.வி.பி.

நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்துவதாகக் கூறி பழைய கதைகளையே மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சீன இராணுவத்தின் உடையை ஒத்த ஆடையை அணிந்துள்ள சீன பிரஜைகள் யார்? என்றும், எரிபொருள் விலை குறைவடையுமா? இல்லையா? விவசாயிகளுக்கு எப்போது உரம் வழங்கப்படும்? இணையவழி கல்வியால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு எப்போது நிவாரணம் வழங்கப்படும்? என்பதை கூறுமாறு ஜனாதிபதியை வலியுறுத்துவதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.

மாத்தறை மாவட்டத்தில் கம்புறுபிபட்டி நகர பஸ் தரப்பிடத்திற்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில,

நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதாகவும் “ஒரே நாடு ஒரே சட்டம்” காணப்படுவது என்று கூறினாலும், நான் தான் நன்றாக செய்தேன் என்று மாத்திரம் கூறவேண்டாம். பழைய கதைகளையே கூறிக் கொண்டிருக்காமல் சீன இராணுவத்தின் உடையை ஒத்த உடையணிந்த நபர்கள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். அதே போன்று ட்ரோனர் கமரா மூலம் இலங்கையை இந்தியா கண்காணிப்பதைப்பற்றிக் கூறுங்கள்.

தேசிய பாதுகாப்பு என்று வசனங்களால் மாத்திரம் கூறுவது போதுமானதல்ல. அதிகாரம் உடையவர்களுக்கும் அதிகாரம் அற்ற சாதாரண மக்களுக்கும் வெவ்வேறான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதை அனைவரும் அறிவார்கள். எனவே, முடியுமானால் இந்த வைரஸ் பரவலை எப்போது கட்டுப்படுத்துவீர்கள்? என்று கூறுங்கள். அவ்வாறில்லை என்றால் நாட்டை நிர்வகிக்கக் கூடியவர்களிடம் ஒப்படைத்து செல்வதாகக் கூறுங்கள்.

அதே போன்று விவசாயிகளுக்கு உரத்தை எப்போது வழங்குவீர்கள் என்றும் கூறுங்கள். இவற்றை அறிந்துகொள்ள மக்கள் விரும்புகின்றனர். தற்போது எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. பொருட்களின் விலைகளும் உயர்வடைந்துள்ளன.

அதனை குறைப்பீர்களா? இல்லையா? எப்போது எரிபொருள் விலையைக் குறைப்பீர்கள் என்று அறிவியுங்கள்? இதனையும் அரசியல் வேலைத்திட்டமாக்க முயற்சிக்க வேண்டாம்.

இதேபோன்று இணையவழி கல்வியால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான நிவாரணத்தை எவ்வாறு வழங்கப்போகிறீர்கள்? என்று கேள்வியெழுப்புகின்றோம். எவ்வாறிருப்பினும் மீண்டும் மீண்டும் உங்களின் போலியான வாக்குறுகிகளை நம்பி ஏமாறுவதற்கு மக்கள் தயாராக இல்லை. 73 வருடங்களாக வெவ்வேறு முகங்களில் ஒரே பொய்களையே கேட்டுக் கொண்டிருக்கின்றோம் என்பதை மக்களுக்கு நினைவுபடுத்துகின்றோம் என்றார்.

தூத்துக்குடியில் இலங்கை அகதிகளை சந்தித்து கலந்துரையாடிய கனிமொழி

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமிற்கு விஜயம் செய்த ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைத் தலைவர் க.கனிமொழி, அங்குள்ள மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் – மாப்பிள்ளையூரணி பகுதியிலுள்ள இலங்கை அகதி முகாமில் சுமார் 75 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

குறித்த பகுதிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிரணி செயலாளரும் நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவருமான க.கனிமொழி நேற்று முன்தினம் (23) விஜயம் செய்தார்.

இதன்போது, அங்குள்ள இலங்கைத் தமிழர்களின் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டு, அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கியுள்ளார்.

தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசாங்கத்தை தமிழகத்தின் ஆளும் கட்சியான தி.மு.க அண்மைக்காலமாக வலியுறுத்தி வருகின்ற நிலையில், கனிமொழியின் இந்த விஜயம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

காலம் கடந்த ஞானமாக இருந்தாலும் அதனை வரவேற்கின்றோம் – ரெலோவின் செயலாளர் நாயகம் ஜனா பா.உ.

பயங்கரைவாதத் தடைச் சட்டத்தை மீள்பரிசீலனை செய்யாமல் அதனை முழுமையாக இல்லாமல் செய்தால் தான் இந்த நாடு சுபீட்சம் அடையும். அரசியற் கைதிகள் விடயம் தொடர்பில் அமைச்சர் நாமலின் கருத்து காலம் கடந்த ஞானம் என்றாலும் நாங்கள் அதனை வரவேற்கின்றோம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உரறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

பாராளுமன்ற அமர்வில் உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவரது உரையிலே மேலும் தெரிவிக்கையில்,

கொவிட் தொற்றினை ஒழிப்பதற்காக அனைவரும் ஒன்று திரள வேண்டும் என நாம் பேசிக் கொண்டிருக்கின்றோம். உண்மையில் இந்த கொவிட் தொற்றினை ஒழிப்பதற்காக இரவு பகலாகப் பாடுபடும் வைத்தியத்துறை. சுகாதாரத்துறை போன்றோரை நாங்கள் பாராட்ட வேண்டும். உள்ளுராட்சி அமைப்புகளும் இதில் பங்கு கொள்கின்றார்கள். அவர்களுக்கும் எமது பாராட்டுகளைத் தெரிவிக்க வேண்டும். இவர்களுக்கான அனைத்து வசதிகளும் பூரணமாகக் கிடைப்பதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும்.

சுகாதாரத்துறையினர், தாதியர்கள் போன்றோர் தங்களுக்குத் தேவையான வசதிகள் கிடைக்கவில்லை என கடந்த சில வாரங்களாக, நாட்களாக ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். உண்மையில் அரசு அவர்களை நல்ல முறையில் கவனிக்க வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளைக் கவனத்திற் கொண்டு செற்படுத்த வேண்டும்.

இருப்பினும் வைத்தியத்துறையையும், சுகாதாரத்துறையையும் சுயமாக இயங்க விடாமல் இராணுவத்தினர் கொவிட் செயலணியில் உள்வாங்கப்பட்டிருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயம். இதனை சுகாதாரத் துiயினரும் உணர்ந்துள்ளார்கள். அவர்கள் நியாயமான முறையில் தங்கள் சேவைகளைச் செய்வதற்கு முடியாமல் இருக்கின்றார்கள்.

இன்று பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களும் தனது 44 வருட பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தின் அனுபவத்தைக் கொண்டு நல்ல பல கருத்துக்களை வெளியிட்டார். மக்கள் ஆணை தந்துள்ள ஜனாதிபதி, பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அத்துடன் ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை அதற்குக் கீழே பல துறைகளிலும் செயலாளர்கள், பணிப்பாளர்கள், துறைசார் நிபுனர்கள் எனப் பலரும் இருக்கும் போது சுகாதாரத்துறையினர் அவை சார்ந்த நிபுனர்கள் இந்தக் கொவிட் தொற்று தொடர்பில் பாடுபம் போது இராணுவத்தின் தலையீடு அதில் இருப்பதை அவர் கண்டித்திருந்தார். உண்மையில் அது வரவேற்கத்தக்கது.

இந்தக் கொவிட் தொற்றினால் மக்கள் பலவிதத்திலும் கஷ்டத்திற்குள்ளாகியிருக்கின்றார்கள். அவர்களது தோள்களிலே சுமக்க முடியாத சுதைகள் இன்று சுமத்தப்பட்டிருகக்கின்றது. இன்று கொவிட் தொற்றினால் தங்களது அன்றாடத் தொழில்களை இழந்து நிற்கும் கூலித் தொழிலாளிகள், விவசாயிகள், மின்பிடித்  தொழிலாளிகள் தங்களது தொழில்களை இழந்து வாழ்ந்து கொண்டிருக்கும் போது இந்த அரசு என்ன செய்கின்றது. எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது.

இதனால் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்பவர்கள், விவசாயத்தில் ஈடுபடுபவர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியிருக்கின்றார்கள். ஆட்டோ சாரதிகள் கூட மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் என்ன நடக்கின்றது. அடிப்படை வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்கள் மேலும் மேலும் துன்பங்களைச் சுமந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்தக் கொவிட் தொற்றினால் பெரிய முதலாளிமார் தங்களுக்கான வரிச் சலுகைகளைப் பெற்று தங்களின் வியாபாரத்தை கொண்டு நடத்துகின்றார்கள். சிறு முதலாளிமார் பெற்ற வங்கிக் கடன்களைக் கூட கட்ட முடியாமல் திண்டாடுகின்றார்கள். அதற்கும் மேலாக கூலித் தொழிலாளிகள் பசியினால் வாடுகின்றார்கள். பெரிய முதலாளிமார் தங்கள் வாழ்வாதாரத்தை மேலும் உயர்த்தும் போது அடிமட்ட மக்களின் வயிற்றில் அடிக்கும் ஒரு நிலையே இங்கு உருவாகியுள்ளது.

இதற்கெல்லாம் மேலாக இன்று எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் இந்த நாட்டிற்கு வந்து எமது கடற்பரப்பை அழித்ததன் ஊடாக பல கஸ்டத்தின் மத்தியில் கடற்தொழிலாளர்கள் வாழ்வது மாத்திரமல்லாமல் கடல் உணவை உண்பதற்குக் கூட இந்த நாட்டில் மக்கள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். நாட்டின் பல பாகங்களிலும் கடலாமைகள், டொல்பின்கள், திமிங்கலங்கள் போன்றன கரையொதுங்குகின்றன. சம்மந்தப்பட்ட பகுப்பாய்வு நிறுவகனங்களும், அரசும் அந்த உயிரினங்கள் இறப்பதற்கான காரணத்தினைக் கூறுகின்றார்கள் இல்லை. அதனை அரசு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

அத்துடன், நேற்றைய சபை அமர்விலே அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீள்பரிசீலனை செய்வது, நீண்டகாலம் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் எமது உறவுகளான அரசியற் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான அறிக்கையினை விட்டிருந்தார். இது மிகவும் சந்தோசமான விடயம். இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது.

இந்த விடயத்தை நீங்கள் எப்போதோ செய்திருக்க வேண்டும். 2009களிலே பன்னிரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளை புனர்வாழ்வளித்ததாகவும், அவர்களில் சுமார் மூவாயிரத்து ஐநூறு பேருக்கு தொழில் வாய்ப்புப் பெற்றுக் கொடுத்ததாகவும் கூறும் நீங்கள் ஒரு சில நூற்றுக் கணக்கான போராளிகளை முப்பது நாற்பது ஆண்டுகளாக சிறையில் வைத்திருந்ததைப் பற்றி ஏற்கனவே சிந்தித்திருக்க வேண்டும்.

இன்று ஜி.எஸ்.பி வரிச்சலுகை, அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் அறிக்கை என்பன போன்ற சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக இவற்றை நீங்கள் கையில் எடுக்கின்றீர்கள். இருந்தாலும் காலம் கடந்த ஞானம் என்பது போல நாங்கள் அதனை வரவேற்கின்றோம்.

நீண்ட காலமாகச் சிறையில் இருந்தவர்கள் மாத்திரமல்லாமல் கடந்த காலங்களிலே முகநூல்கள் போன்ற சமூக வளைதளங்கள் ஊடக தகவல்களைப் பதிவு செய்தார்கள் என்பதற்காகப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் அகை;கப்பட்டவர்களும் விடுவிக்கப்பட வேண்டும். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீங்கள் மீள்பரிசீலனை செய்யாமல் அதனை முழுமையாக இல்லாமல் செய்தால் தான் இந்த நாடு சுபீட்சம் அடையும்.

1978ம் ஆண்டு ஜே.ஆர் ஜெயவர்த்தன அவர்களினால் இந்தப் பயங்ககரவாதத் தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தினூடாக இந்த நாட்டிலே நடைபெற்ற போராட்டத்தினை உங்களால் முடிவுக்குக் கொண்டுவர முடிந்ததா? இல்லையே 2009ல் எத்தனையோ வெளிநாடுகள் உதவி செய்ததன் காரணமாகத் தான் இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தீர்கள். இன்று உங்களுக்குப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உதவிய அதே நாடுகளே இன்று பல திணிப்புகளை திணிக்கின்றன. அந்த வகையில் தான் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மீள்பரிசீலனை செய்வதற்கு நீங்கள் முற்படுகின்றீர்கள்.

மேலும், நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அவர்களின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரைச் சுட்டுக் கொன்றிருக்கின்றார். தனக்கும் அதற்கு எவ்;வித சம்மந்தமும் இல்லை என்று அமைச்சர் கூறியிருந்தாலும் ஒருவருக்கு மரண தண்டனை வழங்குவதற்கு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. எனவே இராஜாங்க அமைச்சரும், இந்த அரசாங்கமும் அந்த இறந்த இளைஞனுக்கு நியாயமான நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

துமிந்தவின் விடுதலை சட்டத்தின் ஆட்சியை கேள்விக்குள்ளாக்குகிறது – அமெரிக்க துதுவர்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கொலைக் குற்றவாளி என உயர் நீதிமன்றால் தீர்ப்பிடப்பட்டவருமான துமிந்த சில்வா, ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டமைக்கு அமெரிக்கா எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி. டெப்பிலிட்ஸ் கண்டனம் வெளியிட்டு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

2018 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றம் உறுதிசெய்த துமிந்த சில்வாவின் தீர்ப்பை தற்போது மன்னிப்பதென்பது சட்டத்தின் ஆட்சியைக் குறைத்து மதிப்பீடுக்கு உட்படுத்துவதாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், “இலங்கை அரசாங்கம் செய்துள்ள ஐ.நா.வின் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான சமமான அணுகல் அடிப்படைக்கு இது விரோதமானது ” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (பி.டி.ஏ) கீழ் தடுத்து வைக்கப்பட்ட கைதிகள் விடுவிக்கப்பட்டமைக்கு அவர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Gallery

ஜப்பான், அமெரிக்க கடற்படையினர் திருகோணமலையில் கூட்டுப் பயிற்சி!

இலங்கை கடற்படை, ஐக்கிய அமெரிக்காவின் கடற்படை மற்றும் ஜப்பானின் கடற்பாதுகாப்பு தன்னார்வ படையணி ஆகியன இணைந்து நடத்தும் கடற்பயிற்சி, திருகோணமலை கடற்படைத் தளத்தில் இன்று ஆரம்பமானது.

இந்த கூட்டு கடற்பயிற்சி, திருகோணமலை துறைமுகம் மற்றும் திருகோணமலையை அண்மித்த கிழக்குக் கடற்பரப்பில் ஜூன் 30 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது.

திருகோணமலை கடற்படைத் தளத்தில் இந்த பலதரப்பு கடற்பயிற்சி நடவடிக்கை இன்று ஆரம்பமானது.

கடற்படையின் பிரதித் தலைவர் மற்றும் கடற்படையின் கிழக்கு கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் Y.N. ஜயரத்ன ஆகியோரின் தலைமையில் இது ஆரம்பமானது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் கடல்சார் ஆலோசகர், தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சமுத்திரத் தலையீடு மற்றும் உள்ளக நடவடிக்கைகளை மேம்படுத்தல், பொதுவான சமுத்திர சவால்களில் இணைதல், சமுத்திர நடவடிக்கை தொடர்பில் முழுமையான புரிதலைப் பெற்றுக்கொள்ளல், சமுத்திரப் பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கான நெருக்கமான இயலுமையை மேம்படுத்தல், சர்வதேச சட்டம், தரத்திற்கு அமைய நடவடிக்கைகளை முன்னெடுத்தல் ஆகியன தொடர்பில் இதன்போது அதிகக் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இதனிடையே, சமுத்திர பாதுகாப்பு தொடர்பில் செயற்படும் தரப்புகள் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோர் இடையேயான தொடர்புகளை மேம்படுத்துவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தல், இலங்கை கடற்படை, ஐக்கிய அமெரிக்காவின் கடற்படை மற்றும் ஜப்பான் கடற்பாதுகாப்பு தன்னார்வ படையணி ஆகிய தரப்புகளிடையேயான தொடர்பை மேம்படுத்தல் ஆகியனவும், CARAT–21 என பெயரிடப்பட்டுள்ள இந்த கடற்பயிற்சி மூலம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதன் துறைமுகம் தொடர்பான கட்டம் இன்றும் நாளையும் திருகோணமலை துறைமுகத்தில் நடத்தப்படுகின்றது.

அத்துடன், கடல்சார் கட்டம் இம்மாதம் 26 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை திருகோணமலையை அண்மித்த கிழக்கு கடற்பரப்பில் நடத்தப்படவுள்ளது.

இதனைத் தவிர, இந்தப் பயிற்சியின் போது மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணத் திட்டமிடல், சமுத்திரம் தொடர்பான புரிதல், சமுத்திர விமான நடவடிக்கை, கப்பல்களுக்கு இடையே கடலில் பொருட்களைப் பரிமாற்றுதல், எதிரிக் கப்பல்களைப் பின்தொடர்தல், கப்பலுக்குள் பிரவேசித்தல், சோதனை செய்தல் மற்றும் விடுவித்தல் ஆகிய விடயங்கள் இதில் உள்ளடங்கியுள்ளன.

COVID-19 தொற்றைத் தடுப்பதற்கான சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கை கடற்படையின் சயூர மற்றும் கஜபாஹூ கப்பல்களும் ஆழமான கடற்பகுதியைக் கண்காணிக்கும் கப்பல், இலங்கை விமானப் படையின் Bell 212, Bell 412 ரக ஹெலிகொப்டர்கள், கண்காணிப்பு விமானங்கள் ஆகியனவும் இந்தப் பயிற்சிக்காக பயன்படுத்தப்படவுள்ளன.

அத்துடன், ஐக்கிய அமெரிக்க கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி Littoral Combat ரக USS Charleston கப்பல், Boeing P-8 Poseidon ரக சமுத்திரப் பாதுகாப்பு விமானம், MH-60S ரக ஹெலிகொப்டர் ஆகியனவும் இந்த பயிற்சியில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

ஜப்பானின் கடற்பாதுகாப்பு தன்னார்வ படையணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, Destroyer ரக JDS Yugiri கப்பல் மற்றும் MH – 60R ரக ஹெலிகொப்டர் ஆகியன ஈடுபடுத்தப்படவுள்ளன.

அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்-ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் அரசியல் கைதிகள் 16 பேரை விடுதலை செய்தமைக்கு ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி கூறுவதோடு மேலும் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விரைவில் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொசன் போயா தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் 16 முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பதை நான் வரவேற்கின்றேன். அதற்காக ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி கூறிகின்றேன்

மேலும் அனைத்து சிறைகளிலும் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் விரைவாக விடுதலை செய்து அவர்களுடைய குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாக வாழ்வதற்கு இந்த நாட்டின் ஜனாதிபதி விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இந்த 16 அரசியல் கைதிகள் கைதிகளின் விடுதலை என்பது அவர்களுடைய பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர்களின் கண்ணீருக்கும் காத்திருப்புகளுக்கும் கிடைத்த பரிசு என்றே நான் கருதுகின்றேன்.

இதே நேரம் விடுதலை செய்யப்பட்டிருக்கும் முன்னாள் போராளிகளின் பெயர் பட்டியல் வெளியாகியிருக்கின்றது.

இதனடிப்படையில் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 9 பேரும், மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 6 பேரும், மாத்தளை பகுதியை சேர்ந்த ஒருவருமான 16 முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

Posted in Uncategorized

விடுதலையான 16 பேர் தொடர்பிலான விபரங்கள் வெளியாகின!

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இன்று விடுதலை செய்யப்பட்ட 16 நபர்கள் குறித்த மேலதிக விபரங்கள் வெளியாகியுள்ளன.

விடுதலையானவர்கள் அனைவரும் நீதிமன்றங்கள் ஊடாக தீர்ப்பு வழங்கப்பட்டு தண்டனை அனுபவித்துவந்தவர்கள் என்றும் விரைவில் அவர்களுக்கான தண்டனைக் காலம் நிறைவடையவுள்ளதாகவும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

விடுதலையான 16 பேரும் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் என்று சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுவரும் நிலையில் குறித்த தகவலை மறுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பிரதிநிதிகள்,

விடுதலையானவர்களில் மிக அதிகமானவர்கள் போராளிகள் அல்ல என்றும் போராட்டத்திற்காக உதவிய குற்றச்சாட்டில் கைதானவர்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றங்கள் ஊடாக தண்டனை வழங்கப்பட்ட நிலையில் அவர்கள் தண்டனை அனுபவித்து தண்டனைக் காலம் நிறைவடையவுள்ள நிலையிலேயே அவர்கள் விடுதலையாகியிருக்கின்றனர் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இதனிடையே இன்று விடுதலையானவர்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

அவர்கள் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 09 பேரும், மன்னார் மாவட்டத்தினைச் சேர்ந்த ஆறு பேரும் மாத்தளை மாவட்டத்தினைச் சேர்ந்த ஒருவரும் என்று தெரியவந்துள்ளது.

அதன் அடிப்படையில்,

யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த,

நடராஜா சரவணபவன்,

புருஷோத்தமன் அரவிந்தன்,

இராசபல்லவன் தவரூபன்,

இராசதுரை ஜெகன்,

நல்லான் சுவலிங்கம்,

சூரியமூர்த்தி ஜெவோகன்,

சிவப்பிரகாசன் சிவசீலன்,

மயில்வாகனம் மதன்,

சூரியகாந்தி ஜெயச்சந்திரன் ஆகியோரும்,

மன்னார் மாவட்டத்தில்,

சிமோன் சந்தியாகு,

ராகவன் சுரேஷ்,

சிறில் ராசமணி,

சாந்தன் ஸ்ராலின் ரமேஸ்,

கபிறில் எட்வேட் யூலியன் ஆகியோருடன்,

மாத்தளை மாவட்டத்தினைச் சேர்ந்த

விசுவநாதன் ரமேஸ் ஆகியோரே விடுதலையாகியுள்ளனர்.

விடுதலையானவர்களில் 15 பேர் அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்தும் ஒருவர் யாழ். சிறைச்சாலையிலிருந்தும் விடுதலையாகியிருக்கின்றனர்.

யாழ்.சிறைச்சாலையிலிருந்து விடுதலையானவர் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவர் என்று தெரியவந்துள்ளது.

Posted in Uncategorized

மரணதண்டனைக் கைதி துமிந்த சில்வா ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரை சுட்டுக்கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வா ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் இன்று விடுதலை செய்யப்பட்டார்.

இதனை சிறைச்சாலை பேச்சாளர் ஊடகங்களிடம் உறுதி செய்தார்.

2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி அங்கொடை – முல்லேரியா பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தொழிற்சங்க விவகார ஆலோசகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரை சுட்டுக்கொலை செய்த குற்றத்திற்காக துமிந்த சில்வா உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு மேல்நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீா்ப்பளித்தது.

எனினும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு துமிந்தா சில்வாவை விடுவிக்க பரிந்துரைத்தது.

இந்நிலையிலேயே கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு நீதிமன்றால் தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வா ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் இன்று விடுதலை செய்யப்பட்டார்.

Posted in Uncategorized

நிதியைக் காட்டி அதிகாரங்களைப் பறிக்க முடியாது! – பவித்ராவுக்கு ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் பதில்

“மாகாண சபை வைத்தியசாலைகளை மத்திய அரசு கையகப்படுத்தினால் மாத்திரமே நிதி வழங்குவோம் என்ற மிரட்டல் மூலம் மாகாண சபை அதிகாரங்களைப் பணயம் வைக்க சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி முயல்கின்றார்.”

-இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“பாராளுமன்ற உரையிலே மாகாண சபை வைத்தியசாலைகளைக் கையகப்படுத்த மாட்டோம்; ஆனால் நிதியும் ஒதுக்கமாட்டோம் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். அவர் மாகாண சபை வைத்தியசாலைகளை மத்திய அரசு கையகப்படுத்தினால் மாத்திரமே நிதி வழங்குவோம் என்ற மிரட்டல் மூலம் மாகாண சபை அதிகாரங்களைப் பணயம் வைக்க முயல்கின்றார். இது ஒரு அரசியல் குற்றம் என்பதை அவர் உணரத் தவறி இருக்கின்றார்.

அமைச்சரின் கூற்று தற்போது அரசின் சர்வாதிகாரப் போக்கை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

அரசியல் சாசனத்தின் ஊடாகவும் மாகாண சபை சட்டத்தின் மூலமாகவும் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் மாகாண சபையின் அதிகார வரம்புக்கு உட்பட்ட வைத்தியசாலைகள், மத்திய அரசால் கையகப்படுத்துவது அரசியல் யாப்பை மீறும் செயலாகும். மாகாண சபையின் ஒப்புதலுடன்தான் இதை நடைமுறைப்படுத்த முடியும்.

மாறாக மாகாண சபைகள் இயங்கு நிலையில் இல்லாத சூழலில் கையகப்படுத்துவது தவறானதாகும். மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மக்களின் உரிமை என்பதையும், மத்திய அரசின் திறைசேரி நிதியும் மக்கள் வரிப்பணத்தில் பெறப்பட்டதால் மக்களுக்கே உரித்தானது என்பதையும் அமைச்சர் மறந்துவிட்டார். நிதி ஒதுக்கீடு என்பதும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களின் அடிப்படையில்தான் என்பதையும் மாகாண சபைக்குரிய வைத்தியசாலைகளால் பயனடைவது திறைசேரிக்கு வரி செலுத்தும் மக்களே என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

ஆகவே, நிதி ஒதுக்கீடு என்பது பயனாளிகளின் நலன் கருதி இருக்க வேண்டுமே தவிர அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவதற்கு மிரட்டுகின்ற அல்லது பணயம் வைக்க கையாளுவது அரசியல் குற்றம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மாகாண சபையின் அதிகாரத்துக்குள் வைத்தியசாலைகள் இயங்கும்போது கூட மத்திய அரசால் நிதி ஒதுக்கி அவற்றின் தரத்தை உயர்த்த முடியும். அப்படி பல வைத்தியசாலைகள் சிறந்த முறையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அபிவிருத்தி அடைந்த நிலையில் பல மாகாணங்களில் காணப்படுவதையும் அமைச்சர் கருத்தில்கொள்ள வேண்டும்.

அண்மையில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட 46/1இல் குறிப்பிடப்பட்ட சரத்துக்களின் பிரகாரம் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் அடிப்படையில் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டு அவைகளின் நிர்வாகம் சிறந்த முறையில் இயங்குவதை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மீறும் செயலாக இதை நோக்குகின்றோம்.

மாகாண சபைகளின் நிர்வாகத்தைக் குழப்பும் முகமாக அல்லது மிரட்டு முகமாக அமைச்சர் தெரிவித்த கூற்றை மக்களின் அடிப்படை மனித உரிமை மீறலாகக் கருதி ஐ.நா. மனித உரிமைப் சபையில் ஆவணப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுப்போம்” – என்றுள்ளது.

Posted in Uncategorized

சர்வதேச அழுத்தம் வருகின்ற வேளையில் கைதிகளை விடுவிக்க முயற்சி காலம் கடந்த ஞானம்- ரெலோ செயலாளர் கருணாகரம் ஜனா

நீண்டகாலமாக சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமல்ல அண்மைக்காலமாக சிறிய தவறுகளில், முகப்புத்தகத்தில் கருத்துக்களை முன்வைத்தமைக்கான பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட இளைஞர்களையும் விடுவிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும்,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.

பயங்கரவாத தடை சட்டத்தை மாற்றுவதற்கு பரிசீலனை செய்வதை விடவும் முற்றுமுழுதாக பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம், ஏற்றுமதி இறக்குமதி கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள், அரசாங்கத்தின் அத்தியாவசிய செலவீனங்கள் மற்றும் கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அமைச்சர் நாமல் ராஜபக் ஷ கூறிய விடயத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்கின்றது.

ஆனால் இந்த விடயத்தை 2009 ஆம் ஆண்டில் செய்திருக்க வேண்டும். அப்போது 12 ஆயிரம் பேரை புனர்வாழ்வு வழங்கி விடுவித்ததாகவும், மூவாயிரம் பேருக்கு தொழில்வாய்ப்பை வழங்கியதாகவும் கூறினீர்கள், அப்படியென்றால் சில நூறு பேரை ஏன் 30-40 ஆண்டுகளாக தடுத்து வைத்தீர்கள்.

இது குறித்து நீங்கள் சிந்தித்திருக்க வேண்டும். இன்று ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இல்லாது போகின்றமை, அமெரிக்க காங்கிரஸில் அறிக்கை என்பவற்றை வைத்துக்கொண்டு சர்வதேச அழுத்தம் வருகின்ற வேளையில் இதனை செய்ய முயற்சிக்கின்றீர்கள். எவ்வாறு இருப்பினும் காலம் கடந்த ஞானம் பிறந்துள்ளது. எனவே அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்.

நீண்டகாலமாக சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமல்ல அண்மைக்காலமாக சிறிய தவறுகளில், முகப்புத்தகத்தில் கருத்துக்களை முன்வைத்தமைக்கான பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட இளைஞர்களையும் விடுவிக்க வேண்டும்.

அதேபோல் பயங்கரவாத தடை சட்டத்தை மாற்றுவதற்கு பரிசீலனை செய்வதை விடவும் முற்றுமுழுதாக பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்போதுதான் இந்த நாட்டிற்கு சுபீட்சம் ஏற்படும். 1978 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்தனவினால் பயங்கரவாத தடை சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த சட்டத்தினால் நாட்டில் இடம்பெற்ற போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை.

இறுதியாக 2009 ஆம் ஆண்டு உலக நாடுகளின் ஒத்துழைப்பில் தானே யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவர முடிந்தது. அன்று யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர உதவிய நாடுகள் இன்று இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்ற காரணத்தினால் அரசாங்கம் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது என்றார்.

Posted in Uncategorized