வடக்கில் சிவில் நிர்வாகம் இராணுவப் பிடிக்குள்ளா? ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

வடக்கில் சிவில் நிர்வாகம் இராணுவப் பிடிக்குள்ளா? என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் கேள்வி

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மண்டலாய் பிரதேசத்தில் பொது மக்களின் காணிகளை சிவில் நிர்வாக அதிகாரிகள் இன்றி காணிகளுக்கு உரித்தான பொது மக்களுக்கு முன் அறிவித்தல் செய்யாது அடாவடித்தனமாக இராணுவம் தாங்களே நில அளவைத் திணைக்களம் இல்லாமல் அளவீடு செய்து எல்லைக் கட்டைகள் அடித்துள்ளனர்.

இந்த செயற்பாடு வடக்கு மாகாணத்தில் சிவில் நிர்வாகம் இராணுவப் பிடிக்குள் அகப்பட்டுள்ளதா? என பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மண்டலாய் பகுதியில் 700 ஏக்கர் காணியை இராணுவ முகாமிக்கு சுபிகரிக்க திட்டமிட்ட இராணுவம் தற்போது 300 ஏக்கர்களை அபகரித்துள்ளதாக அப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ் விடையம் தொடர்பில் மருதங்கேணி பிரதேச செயலாளர் எவ்வித பதில்களையும் வழங்கவில்லை. அரச அதிகாரிகளும் இவ் விடையங்களுக்கு உடந்தையாக உள்ளனரா? இல்லை இராணுவ மிரட்டல் உள்ளதா? என மக்கள் சந்தேகிக்கின்றனர்.

நில அளவைத் திணைக்களம் இல்லாது இராணுவம் அளவிட்ட நிலப்பகுதி கடந்த காலங்களில் பல தடவை அளவீடு செய்ய முயன்ற போது மக்களின் எதிர்ப்பால் தடுக்கப்பட்டது தற்போது பயணத் தடையை பணயமாக வைத்து மக்களுக்கும் அறிவிக்காது அபகரித்தமை மிகவும் அப்பட்டமான மனிதவுரிமை மீறல்.

வடமராட்சி கிழக்கில் வளமான பகுதியாக உள்ள மண்டலாய்ப் பகுதியில் திராட்சைத் தோட்டங்கள் ஏனைய பயிர்கள் காணப்படுவதுடன் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை நிர்ணயிப்பதாகும்.

வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிய 92 உறவுகள் இதுவரை உயிரிழப்பு

வடக்குக்கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி போராட்டம் மேற்கொண்டு வரும் அவர்களது உறவுகள் அவர்களின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களையும் நீண்டகாலமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியலைந்து சொல்லெண்ணா துன்பங்களையும் , துயரங்களையும் சுமந்து வயோதிப ஓய்வு காலங்களில் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைகளிலும் ஏனைய உறவுகளின் பாதுகாப்பிலும் இருந்து வருகின்றார்கள் .

இவ்வாறு தமது உறவுகளை தேடியலைந்து 92 உறவுகள் நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் 12 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உறவுகள் தெரிவித்துள்ளனர்.

வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வீதிகளிலிருந்து தமது போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். சர்வதேசத்தின் தலையீடுகளை கோரியும் ஐக்கிய நாடுகள் தமது விடயங்களில் தலையீடு செலுத்தி தீர்வுகளை பெற்றுத்தருமாறு கோரியும் உறவுகள் தமது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஜனாதிபதியுடன் உள்ள மிகப்பெரிய எட்டப்பன் PB ஜயசுந்தர, விழ்ச்சிக்கு அவரே காரணம் – ஆனந்த தேரர்

நாரஹேன்பிட்டி அபயாராமய விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இன்று -15- அரசாங்கத்திற்கு எச்சரிக்கையொன்றை விடுத்தார்.
மிக குறுகிய காலத்தில் மக்களின் வரவேற்பை இழந்த அரசாங்கம் கோட்டாபய ராஜபக்ஸவின் அரசாங்கம் தான் என தேரர் தெரிவித்தார்.

நாட்டில் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியே இருப்பதாகவும் ஜனாதிபதியின் அனுமதியின்றி பிரதிநிதிகள் செயற்படுவார்களாயின், யாரிடம் இதனை முறையிடுவது என தேரர் கேள்வி எழுப்பினார்.

பிரதிநிதிகள் ஜனாதிபதியின் கண்ணில் மண்ணைத் தூவியுள்ளதாகவும், “நாம் மன்னர்” என நினைத்துக் கொண்டு எவரேனும் செயற்படுவதாக இருந்தால் அது அந்த தனிநபரின் தவறு அல்ல, நாட்டை நிர்வகிக்கும் அதிகாரிகளின் குறைபாடே அதற்கு காரணம் எனவும் தேரர் குறிப்பிட்டார்.

எந்தவொரு நபரையும் சுற்றி எட்டப்பன்மார் இருப்பார்கள். புரோகிதர்களும் இருப்பார்கள், புரோகிதர்கள் கூறினால் அதனையே பின்பற்றுவார்கள். இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இருக்கும் மிகப்பெரிய எட்டப்பனாக கலாநிதி ஜயசுந்தரவை காண்கின்றோம். ஜனாதிபதியின் இந்த விழ்ச்சிக்கு அவரே காரணம்

என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டார்.

P.B. ஜயசுந்தரவை பதவியில் இருந்து நீக்கி, அதனை வழிநடத்தக் கூடிய ஒருவரை நியமிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அவ்வாறு செய்யாவிட்டால் எதிர்காலத்தில் பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை ஏற்பாடு செய்யப் போவதாகவும் அரசாங்கத்திற்கு தேரர் எச்சரிக்கை விடுத்தார்.

காலை முதல் இரவு வரை வீதியில் இறங்கி சத்தமிடுகின்றனர். உண்பதற்கு ஒன்றும் இல்லை. உரம் இல்லை. கடலாமைகள் போன்ற உயிரினங்கள் இறக்கின்றன. இந்த அனைத்து அவலக் குரலுக்கு மத்தியில், வாகனங்களை கொண்டுவர முயற்சிக்கின்றனர். மக்கள் மீது சுமையை சுமத்தி அவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ முயல்கின்றனர். சொகுசு வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டால் அது யாராகவும் இருக்கலாம், அவரது முடிவு அன்றிலிருந்தே ஆரம்பமாகும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்

என தேரர் மேலும் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

இலங்கைக்கு புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்கின் (Julie Jiyoon Chung) பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனினால் நேற்றைய தினம் இவருடைய பெயர் பரிந்துரை செய்யப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு மேலதிகமாக மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவராகவும் இவருடைய பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் இவர் கம்போடியா, தாய்லாந்து, ஈராக், கொலம்பியா, வியட்நாம், ஜப்பான் மற்றும் சீனாவிற்கான அமெரிக்க தூதுவராலயங்களில் பல்வேறு பொறுப்புகளில் கடமையாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் தொடர்பான ஆவணம் தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதற்குரிய ஆவணம், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இன்று (16) சமர்ப்பிக்கப்பட்டதாக பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.

கடந்த மாதம் இடம்பெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமைக்கு, கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க தீமானிக்கப்பட்டமையும் குறிப்பிடதக்கது.

Posted in Uncategorized

ரணிலுடன் இரகசிய பேச்சு நடத்திய அரசாங்க தரப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, அரசாங்கத்தரப்புடன் இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுடனான பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் சிலரும் சம்பந்தப்பட்டுள்ளனர்.

ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க பிரதமர் மகிந்த ராஜபக்சவும் சென்றுள்ளார்.

“ நீங்கள்தான் நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும்” என இந்த சந்திப்பின் போது மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார் எனவும் அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இப்படியான பின்னணியில், ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு வந்த பின்னர், ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ரணிலுடன் இணையலாம் என்ற வதந்தியை அரசாங்கத் தரப்பினரே சமூக ஊடகங்களில் பரப்பியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்தவர்களுக்கு ரணில் விக்ரமசிங்க , ராஜபக்சவினருடன் உடன்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டதை நன்கு அறிவார்கள்.

ரணில் விக்ரமசிங்க தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கவில்லை என்றாலும் அவரது பாதுகாப்புக்காக 100க்கும் மேற்பட்ட படையினர் வழங்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினரல்லாத ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளருக்கும் உயர்மட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவுக்கும் ராஜபக்ச தரப்பினருக்கும் இடையில் இருக்கும் தொடர்புகள் காரணமாகவே இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன எனவும் அசோக அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் மேலும் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 227,765 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களில் 192,478 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,260 ஆக அதிகரித்துள்ளது.

Posted in Uncategorized

வடக்கின் 04 மாவட்ட பொது வைத்தியசாலைகளின் அதிகாரங்கள் பறிபோயின!

வடக்கு மாகாண நிர்வாக ஆளுகைக்குள் செயற்பட்டுவந்த மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்ட பொது வைத்திசாலைகள் உட்பட இலங்கையின் 09 வைத்தியசாலைகளை மத்திய சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு செல்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சேவை வழங்கலில் தரம், சமத்துவம், வினைத்திறன் போன்றவற்றை அதிகரிக்கவும் இலகுவாக நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கத் தரப்புத் தெரிவித்துள்ளது.

குறித்த யோசனையை சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி சமர்ப்பித்தாகவும் அதற்கு அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய வடக்கின் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகள் மற்றும் மாத்தளை, நாவலப்பிட்டி, எம்பிலிப்பிட்டி, அவிசாவளை, கம்பஹா ஆகிய வைத்தியசாலைகளின் நிர்வாகத்தினை இனிவரும் காலங்களில் மத்திய சுகாதார அமைச்சே நிர்வகிக்கும் என்று தெரியவருகிறது.

இரத்தானது ஜனாதிபதி – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் நாளை நடைபெறுவதாக இருந்த சந்திப்பு “பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக ஜனாதிபதி செயலகத்தினால் கூறப்பட்டு” இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுப் பற்றிய விவரம் வெளிவந்ததால் தெற்கில் ஜனாதிபதிக்கு ஏற்பட்ட அழுத்தத்தையடுத்தே அவர் பேச்சை இப்போதைக்குத் தள்ளிப்போடும் முடிவை எடுத்திருக்கின்றார் எனக் கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிய பேச்சுத் திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூட்டமைப்புக்கு ஜனாதிபதி செயலகம் இன்று மாலை அறிவித்துள்ளது.

கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் ஜனாதிபதி நாளை சந்திப்பு

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நாளை (புதன்கிழமை) மாலை இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன்,புளொட் தலைவர் சித்தார்த்தன், மற்றும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜாவும் கலந்துகொள்ளவுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகைய பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அவர் நடத்தும் முதலாவது சந்திப்பு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized