ஜனாதிபதியுடன் உள்ள மிகப்பெரிய எட்டப்பன் PB ஜயசுந்தர, விழ்ச்சிக்கு அவரே காரணம் – ஆனந்த தேரர்

நாரஹேன்பிட்டி அபயாராமய விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இன்று -15- அரசாங்கத்திற்கு எச்சரிக்கையொன்றை விடுத்தார்.
மிக குறுகிய காலத்தில் மக்களின் வரவேற்பை இழந்த அரசாங்கம் கோட்டாபய ராஜபக்ஸவின் அரசாங்கம் தான் என தேரர் தெரிவித்தார்.

நாட்டில் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியே இருப்பதாகவும் ஜனாதிபதியின் அனுமதியின்றி பிரதிநிதிகள் செயற்படுவார்களாயின், யாரிடம் இதனை முறையிடுவது என தேரர் கேள்வி எழுப்பினார்.

பிரதிநிதிகள் ஜனாதிபதியின் கண்ணில் மண்ணைத் தூவியுள்ளதாகவும், “நாம் மன்னர்” என நினைத்துக் கொண்டு எவரேனும் செயற்படுவதாக இருந்தால் அது அந்த தனிநபரின் தவறு அல்ல, நாட்டை நிர்வகிக்கும் அதிகாரிகளின் குறைபாடே அதற்கு காரணம் எனவும் தேரர் குறிப்பிட்டார்.

எந்தவொரு நபரையும் சுற்றி எட்டப்பன்மார் இருப்பார்கள். புரோகிதர்களும் இருப்பார்கள், புரோகிதர்கள் கூறினால் அதனையே பின்பற்றுவார்கள். இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இருக்கும் மிகப்பெரிய எட்டப்பனாக கலாநிதி ஜயசுந்தரவை காண்கின்றோம். ஜனாதிபதியின் இந்த விழ்ச்சிக்கு அவரே காரணம்

என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டார்.

P.B. ஜயசுந்தரவை பதவியில் இருந்து நீக்கி, அதனை வழிநடத்தக் கூடிய ஒருவரை நியமிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அவ்வாறு செய்யாவிட்டால் எதிர்காலத்தில் பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை ஏற்பாடு செய்யப் போவதாகவும் அரசாங்கத்திற்கு தேரர் எச்சரிக்கை விடுத்தார்.

காலை முதல் இரவு வரை வீதியில் இறங்கி சத்தமிடுகின்றனர். உண்பதற்கு ஒன்றும் இல்லை. உரம் இல்லை. கடலாமைகள் போன்ற உயிரினங்கள் இறக்கின்றன. இந்த அனைத்து அவலக் குரலுக்கு மத்தியில், வாகனங்களை கொண்டுவர முயற்சிக்கின்றனர். மக்கள் மீது சுமையை சுமத்தி அவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ முயல்கின்றனர். சொகுசு வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டால் அது யாராகவும் இருக்கலாம், அவரது முடிவு அன்றிலிருந்தே ஆரம்பமாகும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்

என தேரர் மேலும் குறிப்பிட்டார்.