மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான இறுதி முடிவு

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் மே 4 ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

கூட்டத்தில் இரண்டு பிரச்சினைகளை உறுதியாக தீர்க்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஒன்று தேர்தல் முறையின் தீர்க்கப்படாத பிரச்சினை மற்றும் ஒவ்வொரு பிரிவுக்கும் 03 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா என்பது இரண்டாவதாகும்.

இது தொடர்பில் அன்றையதினம் இறுதி முடிவு எடுக்கப்பட்டால், மாகாண சபை தேர்தல் சட்டம் அடுத்த சில வாரங்களில் திருத்தம் செய்யப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் மாகாண சபை தேர்தல்களை நடத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

‘சீனப் பட்டினம்’ ஒரே நாடு ஒரே சட்டத்துக்குள் அடங்காதா? – தமிழர்களைத் தூண்டிலாக்கும் எதிர்த் தரப்புகள்!

கொழும்பு துறைமுகத்துக்கு அருகே சீனாவால் கட்டப்பட்டுவரும் நிதி நகரம் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன.

இப்பட்டினம் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டத் தொடங்கியது. கொழும்பின் இதயமான ஒரு பகுதியில் கடலை பகுதியை மூடி இந்நகரம் உருவாக்கப்பட்டுகிறது.

ஏறக்குறைய 216 ஹெக்டேர் நிலப்பரப்பில் இந்நகரம் உருவாக்கப்படுகிறது. இதில், 116 ஹெக்டேர் நிலப்பரப்பு சீனக் கம்பனிக்கு உரித்தாக இருக்கும். சுமார் 90 ஹெக்டேர் நிலப்பரப்பு இலங்கை அரசாங்கத்தின் உரித்தாக இருக்கும்.

சீனக் கம்பனிக்கு உரித்தாகவுள்ள நிலப்பரப்பில் சுமார் 20 ஹெக்டேர் நிலப்பரப்பு முழுக்கமுழுக்க அந்தக் கம்பனிக்கே சொந்தமாக மாற்றப்பட்டுவிடும். அது இலங்கைத் தீவின் சட்டதிட்டங்களுக்கு உட்படாது. சீன கம்பனியே கடந்த தேர்தல்களின் போது ராஜபக்ஷக்களுக்கு பெருமளவு நிதியுதவிகளை வழங்கியதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு.

இவ்வாறு கடலை மூடி ஏன் ஒரு நகரத்தை உருவாக்க வேண்டும் என்ற கேள்வி அப்போதே கேட்கப்பட்டது. இலங்கை தீவில் குறிப்பாக கொழும்பில் போதிய அளவு நிலம் இருக்கத்தக்கதாக எதற்காக கடலை மூட வேண்டும் என்ற கேள்வி அப்போது எழுந்தது. கேள்விக்கு உரிய பதில் எதுவெனில் கொழும்பின் இதயமான பகுதியில் சீனா ஒரு நகரத்தைக் கட்டியெழுப்ப விரும்பியது என்பதுதான்.

கொழும்பின் ஏனைய பகுதிகளில் நிலத்தை வாங்கி அந்த நகரத்தை உருவாக்க அவர்கள் விரும்பவில்லை. கொழும்பின் இதயமான பகுதியில் அதிலும் குறிப்பாக அரசியல் அதிகாரத்தின் மையம், கொழும்பு மேட்டுக்குடியின் மையம், ராஜதந்திரிகளின் மையம், நிதி நடவடிக்கைகளின் மையம், உல்லாசப் பயணிகளின் கவர்ச்சி மையம் என்று கருதத்தக்க ஓரிடத்தில் கடலில் சீனா ஒரு புதிய நகரத்தைக் கட்டிவருகிறது.

இதனால், இலங்கைத் தீவின் வரைபடம் மாற்றப்பட்டிருக்கிறது. அதாவது இலங்கைத் தீவின் நிலப்பரப்பு அதிகரித்திருக்கிறது.

மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் பின்னர் ஆட்சிமாற்றம் நிகழ்ந்தபோது இடைநிறுத்தப்பட்டது. எனினும், ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தோடு சீனா மேற்கொண்ட சமரச முயற்சிகளின் பின்னர் இந்நகரம் சர்வதேச நிதி நகரம் என்று பெயர் மாற்றப்பட்டு மறுபடியும் தொடர்ந்து கட்டப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதற்காக உடன்படிக்கை மீள எழுதப்பட்டது.

இந்நகரத்தை, நிர்வகிப்பதற்காக அரசாங்கம் அண்மையில் கொழும்புத் துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலம் ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது. இச்சட்டமூலம் முன்பு சொன்ன சீனக் கம்பனிக்கு அதிகம் அனுகூலங்களை வழங்குகிறது. அது குறிப்பிட்ட துறைமுக நகரத்தை ஒரு சீன மாநிலமாக மாற்றுகிறது என்று ஜே.வி.பி. குற்றம்சாட்டுகிறது.

இலங்கை தீவில் இதுபோன்ற முதலீடுகளுக்கு முதலீட்டு சபைச் சட்டம், மூலோபாய அபிவிருத்திச் சட்டம் என்ற இரண்டு சட்டங்கள் உள்ளன. இச்சட்டங்கள் மூலமாகவும் வரிச் சலுகைகளை வழங்க முடியும். ராஜபக்ஷக்கள் சீன முதலீடான சங்கரில்லா ஹோட்டலுக்கு இவ்வாறு இருபத்தைந்து வருட வரிச்சலுகைகளை வழங்கியிருக்கிறார்கள்.

ரணில் விக்ரமசிங்க ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனக் கம்பனிக்கு வரிச் சலுகைகளை வழங்கியிருந்தார். இவ்வாறு இரண்டு சட்டங்கள் இருக்கத்தக்கதாக இப்பொழுது ஒரு புதிய சட்டமூலத்தை ஏன் அரசாங்கம் சமர்ப்பித்திருக்கிறது?

இதன்மூலம் துறைமுக நகரத்தை நாட்டின் சட்டங்களுக்குக் கட்டுப்படாத ஒன்றாகவும் தனி விசேட அந்தஸ்தைப் பெற்ற ஒரு சுயாதீன நகரமாகவும் ராஜபக்ஷக்கள் கட்டியெழுப்ப முற்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இவ்வாறு எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளைப் பின்வருமாறு தொகுத்துப் பார்க்கலாம்,

முதலாவது, துறைமுக நகரம் எந்தவொரு உள்ளுராட்சி மன்றத்தினதும் ஆளுகைக்குள் வராத ஒரு விசேட கட்டமைப்பாக இயங்கும். உள்ளுராட்சி மன்ற நிர்வாகங்களை அங்கு வாழும் மக்கள் வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்கிறார்கள்.

உள்ளூராட்சி மன்றங்கள் மக்கள் பிரதிநிதிகளால் நிர்வகிக்கப்படுகின்றன. ஆனால், துறைமுக நகரத்தை ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஒரு விசேட ஆணைக்குழுவே நிர்வகிக்கும். இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இலங்கை பிரசைகளாக இருக்க வேண்டும் என்றில்லை.

இரண்டாவது, இந்த ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கு எதிராக இலங்கை தீவில் எந்தவொரு நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர முடியாத விடுபாட்டுரிமை உண்டு.

மூன்றாவது, இந்த ஆணைக்குழுவிற்கு விசேட நிதிசார் அதிகாரங்கள் உண்டு. இந்த ஆணைக்குழுவுக்கு தனியொரு நிதியம் உண்டு. அரச வருமானத்தின் திரட்டப்பட்ட நிதியில் இருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ள நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் தேவை.

ஆனால், துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவானது நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் தேவைப்படாத தனியொரு நிதியம் ஒன்றைப் பேண முடியும்.

நாலாவது, துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவுக்கு பல்வேறு வரிச்சலுகைகளை வழங்கும் அதிகாரம் உண்டு. பொதுவாக நாடாளுமன்றத்தால் மாத்திரமே வரிச்சலுகை வழங்கப்படலாம். இங்கே இந்த ஆணைக்குழுவுக்கு வரிச்சலுகை வழங்கும் அதிகாரம் தரப்பட்டிருக்கிறது.

ஐந்தாவதாக, அரசாங்கத்துக்குக் கிடைக்கும் பணம் கணக்காய்வாளர் தலைமை நாயகத்தின் மேற்பார்வைக்குக் கட்டுப்படும். ஆனால், துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் நிதி நடவடிக்கைகள் தனியார் நிறுவனம் ஒன்றின் மூலமாகவே அவை கணக்காய்வு செய்யப்படும்.

ஆறாவது, அரச நிறுவனங்கள் நாடாளுமன்றத்தின் கோபா (COPA) மற்றும் கோப் (COPE) ஆகிய குழுக்களுக்கு முன்னாள் பதில் கூறுமாறு அழைக்கப்படலாம். ஆனால், இது துறைமுக நகரப் பொருளாதார வலைய ஆணைக்குழுவுக்குப் பொருந்தாது.

ஏழாவது, துறைமுக நகரத்தில் வெளிநாட்டவர்கள்தான் முதலீடு செய்யலாம். இலங்கையர்கள் முதலீடு செய்வது என்றால் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கூடாகத்தான் முதலீடு செய்யலாம்.

எட்டாவது, துறைமுக நகரத்தில் தொழில் செய்பவர்களுக்கு ஊழியம் சீன நாணயமான யுவான் மூலமே வழங்கப்படும்.

ஒன்பதாவது, துறைமுக நகரத்தில் சேவையாற்றுபவர்களின் வருமானம் வருமான வரியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறது.

பத்தாவது, இலங்கை பிரசைகள் கொழும்புத் துறைமுக நகரத்தின் சேவைகளைப் பணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். எனினும், அங்கே கொள்வனவு செய்யும் பொருட்களை நகரத்துக்கு வெளியே கொண்டுவரும்போது அவற்றுக்கு வரி செலுத்தவேண்டும்.

பதினொராவது, துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தில் ஏற்படும் பிணக்குகளை சர்வதேச விளக்கத்திற்கும் அமைப்பு ஒன்றின் மூலமாகவே தீர்த்துக் கொள்ளலாம்.

இவையாவும் துறைமுக நகரத்துக்கான புதிய சட்டமூலத்தைக் குறித்து எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் ஆகும். இக்குற்றச்சாடுக்களை முன்வைக்கும் எதிர்க்கட்சிகளில் பிரதானமான சஜித் அணி இந்நகரத்தை சீன ஈழம் என்று வர்ணிக்கிறது.

இங்கே முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவெனில், சீனப் பட்டினத்துக்கு எதிராக சிங்களப் பொது உளவியலைத் தூண்டிவிட அவர்கள் கையிலெடுத்திருப்பது ஒரு விதத்தில் தமிழின எதிர்புத்தான். அதாவது, சீனப் பட்டினத்தை அவர்கள் ஈழத்துடன் ஒப்பிடுகிறார்கள். ஈழத்தைக் கொடுக்காத நாங்கள் எப்படி சீனாவுக்கு இப்படியொரு நகரத்தைக் கொடுப்பது என்று அவர்கள் கேட்கிறார்கள்.

நாட்டில் சிங்கள மக்களைத் தூண்டுவதற்கு ஏதோவொரு விதத்தில் இனவாதத்தைத்தான் பேசவேண்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளின்படி துறைமுக நகரமானது இலங்கை தீவில் தற்போது நடைமுறையில் உள்ள 21 சட்டங்களிலிருந்து விடுபாட்டுரிமையைக் கொண்டிருக்கிறது.

இது, துறைமுக நகரத்தை இலங்கை தீவில் தனி அந்தஸ்துடைய இலங்கை தீவின் பெரும்பாலான சட்டங்களுக்குக் கட்டுப்படாத ஒரு தனி நிர்வாக பிரதேசமாகக் காட்டுகிறது.

ராஜபக்ஷக்கள் பெருமையோடு கூறிக்கொள்கிறார்கள் ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே சட்டம் என்று. ஆனால், சீன துறைமுக நகரமானது அவ்வாறு நாட்டில் ஒரே சட்டம் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. அதுதான் உண்மை.

தமிழ் மக்களை நசுக்குவதற்காக எந்தப் பிசாசோடும் கூட்டுச்சேரத் தயார் என்று முன்னாள் ஜனாதிபதி ஜெயவர்த்தன கூறினார். இவ்வாறு பிசாசுகளை கூட்டுச் சேர்த்து தமிழ் மக்களின் போராட்டத்தை நசுக்கிய இலங்கை அரசாங்கம் இப்பொழுது அந்தப் பிசாசின் கடன் பொறிக்குள் இருந்து விடுபட முடியாத ஒரு நிலை தோன்றியிருக்கிறது. இலங்கையில் இப்பொழுது கிட்டத்தட்ட ஆறு இலட்சம் சீனர்கள் இருப்பதாக ஒரு உத்தியோகபூர்வமற்ற கணக்கு உண்டு.

இம்மாத இறுதிளவில் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு வருகிறார். ஏறக்குறைய அதே காலப்பகுதியில் ஜனாதிபதி கோட்டபாய இந்தியாவுக்குச் செல்கிறார். ஒரே சமயத்தில் அவர்களால் சீனாவையும் இந்தியாவையும் கையாளக் கூடியதாக இருக்கிறது. இந்தியாவை சமாளிப்பதன் மூலம் மேற்கு நாடுகளையும் ஜெனிவாவையும் சமாளிக்கலாம் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

சீனாவின் செல்லப்பிள்ளையாக இருப்பதன் மூலம் பொருளாதார நெருக்கடிகள் உட்பட எல்லா பிரச்சினைகளில் இருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். ஆனால், சீனாவை நோக்கி அதிகமாகச் சாய்ந்து கொண்டு இலங்கை தீவு சுயாதீனமாக இறைமையோடு இருக்க முடியாது என்பதைத்தான் கடந்த 12 ஆண்டுகள் நிரூபித்திருக்கின்றன.

மெய்யான பொருளில் கூறின் இலங்கைத்தீவு இப்பொழுது இறைமையுடைய நாடு அல்ல. அது பேரரசுகளால் பங்கிடப்படும் ஓர் அப்பம். சீன மயமாதலின் விளைவாக இச்சிறிய தீவை நோக்கி இந்தியாவும் மேற்கு நாடுகளும் அதிகம் கவனத்தைக் குவிக்கும். அவர்கள் அதற்கு எடுத்துக் கையாளும் ஆயுதம் தமிழ் மக்களின் பிரச்சினையாகும். தமிழ் மக்களின் விவகாரத்தை அல்லது தீர்க்கப்படாத இனப் பிரச்சினையை ஒரு கருவியாகக் கையாண்டு வெளிச் சக்திகள் இலங்கைக்குள் நுழைகின்றன. சீனாவும் அப்படித்தான் நுழைந்தது.

அழகிய இச்சிறிய தீவை தமிழ் மக்களோடு சேர்ந்து பகிரத் தயாரற்ற சிங்கள ஆட்சியாளர்கள் அதனை இறுதியிலும் இறுதியாக சீனர்களும் உட்பட வெளிநாட்டவர்களிடம் இழந்து வருகிறார்கள் என்பதே சீனப் பட்டினம் உணர்த்தும் உண்மையாகும்.

கட்டுரை ஆசிரியர்: நிலாந்தன்

Posted in Uncategorized

சர்வதேச நிபுணர்களின் பிரத்யேக கண்காணிப்புக் குழுவில் இலங்கை பிரதிநிதிகள் தவிர்ப்பு

ஜெனீவாவை தளமாகக் கொண்ட சர்வதேச நிபுணர்களின் பிரத்யேக விசாரணை மற்றும் கண்காணிப்புக் குழுவில் இலங்கை பிரதிநிதிகளை இணைக்கப்போவதில்லை என மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் குறித்த முடிவுக்கு இலங்கை அரசாங்கம் முறையான பதிலை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு போருக்கு பின்னர் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட ஐந்தாவது தீர்மானத்தின் விதிகளை விரைவாக அமுல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் சமீபத்தில் கூறியது.

அதன்படி போரின் போது மற்றும் அதற்குப் பிறகான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தகவல் சேகரித்தல், பாதுகாத்தல் மற்றும் பகுப்பாய்வு ஆகியவை இதில் அடங்கும் என்று கூறப்படுகிறது.

அதன்படி, இலங்கையை கண்காணிக்க ஜெனீவாவை தளமாகக் கொண்ட சர்வதேச நிபுணர்களின் குழுவை மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் திரட்டி வருகின்றது.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புகவெல்ல, இந்த விசாரணைக் குழுவில் இலங்கையின் பிரதிநிதியைத் தவிர்ப்பதற்கான அவர்களின் முடிவு குறித்து அரசாங்கம் விரைவில் முறையான பதிலை அளிக்கும் என கூறியுள்ளார்.

இருப்பினும் நிதிப்பற்றாக்குறை செயல்முறைகளை மேற்கோள் காட்டி சர்வதேச நிபுணர்கள் குழு பெரும்பாலும் ஜெனீவாவில் இருக்கும் என மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் கூறியிருந்தது.

இவ்வாறு பெயரிடப்பட்டவர்களில் பலர் இலங்கையின் கலாச்சாரம் மற்றும் பின்னணிக்கு அந்நியர்கள் என்பதால் அத்தரப்பினரால் வழங்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் தகவல்களின்படி செயற்படுவதன் ஒருதலைப்பட்ச நடவடிக்கை என அமைச்சர் கெஹலிய ரம்புகவெல்ல சுட்டிக்காட்டினார்.

இலங்கை தொடர்பான ஐ.நா. உறுப்பு நாடுகளால் முன்வைக்கப்பட்ட நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் என்ற தீர்மானம் இந்த ஆண்டு மார்ச் 23 அன்று ஜெனீவாவில் நடைபெற்ற 46 வது அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

கிழக்கில் தமிழர்களின் இனப் பரம்பலை திட்டமிட்டு குறைத்த அரசாங்கம் – ரெலோ செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் பா. உ

கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்டு தமிழர்களின் இனப்பரம்பலை கடந்த காலத்தில் குறைத்த அரசாங்கம், இன்று இறுதியாக 74வீதம் தமிழர்கள் வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் இனப்பரம்பலை குறைப்பதற்காக மிகவும் சாதுரியமாக தங்களது காரியங்களை எல்லைப்புறங்களில் அரங்கேற்றி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் குற்றம்சுமத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரடியனாறு,கதிரவன் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் கலாசார விளையாட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு கிழக்கிலே எத்தனையோ திறமையானவர்கள் இருந்தும் மாறிமாறி இந்த நாட்டை ஆண்ட அரசுகளினால் எமது இனம் புறக்கணிக்கப்பட்டு இரண்டாந்தரப் பிரஜைகளாகவே நடத்தப்பட்டுக்கொண்டு வருகின்றனர்.

இன்று இந்த நாட்டில் தமிழர்களுக்கு மட்டுமல்ல நாட்டின் அனைத்து மக்களுக்கும் இந்த அரசாங்கம் அநியாயம் இழைத்துவருகின்றது. எதிர்த்துப் பேசுபவர்கள் சிறைப்பிடிக்கப்படுவது மாத்திரமல்லாமல் பிணையெடுக்க முடியாதளவிற்கு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

தமிழினம் கடந்த காலங்களில் பலவகையிலும் துன்புறுத்தப்பட்டு அகிம்சைப் போராட்டம் நடத்தி பின்னர், ஆயுதப்போராட்டம் நடத்தினர். ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு 12வருடங்களாகின்றது. தமிழ்த் தேசியபக் கூட்டமைப்பும் தேசியம் சார்ந்த கட்சிகளும் ஜனநாயக ரீதியாக இராஜதந்திர ரீதியாக எமது மக்களின் உரிமைகளை பெறுவதற்கு போராடிக்கொண்டிருக்கின்றோம்.

2015ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டின் தொடக்கம் வரை இந்த நாட்டில் நல்லாட்சி என்று கூறிக்கொண்ட ஒரு ஆட்சி நடைபெற்றது. அந்த ஆட்சியில்கூட எமது மக்களின் உரிமைகள் பெறப்படவேண்டிய நிலை இருந்திருந்தாலும் அங்கேயிருந்த அதிகாரப் போட்டியினால் அது தடுக்கப்பட்டது. அமையவிருந்த புதிய அரசியலமைப்பு இல்லாமல் ஆக்கப்பட்டது.

2019ஆம் ஆண்டு ஆரம்பம் தொடங்கி மீண்டும் இராஜபக்ச சகோதரர்களின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. அவர்களின் நீண்டகால திட்டமாக எமது பிரதேசத்தை குறிப்பாக கிழக்கு மாகாணத்தை கபளீகரம் செய்வதற்கு முயற்சி செய்துகொண்டு இருக்கின்றார்கள்.

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களிலிருந்து ஏற்கனவே மாகாணசபைக்கும் நாடாளுமன்றத்திற்கும் பிரதிநிதிகள் செல்லக்கூடியளவிற்கு இந்த நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து குடியேற்றங்களை செய்து பெரும்பான்மை இனப்பரம்பலை அங்கு அதிகரித்திருக்கின்றார்கள்.

இறுதியாக 74வீதம் தமிழர்கள் வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் இனப்பரம்பலை குறைப்பதற்காக மிகவும் சாதுரியமாக தங்களது காரியங்களை எல்லைப்புறங்களில் அரங்கேற்றி வருகின்றார்கள்.

பொலன்னறுவை எல்லையிலிருந்து மயிலத்தமடு, மாதவனை, கார்மலை, மேய்ச்சல்கல், வெட்டிப்போட்ட சேனை, கெவிலியாமடு என அம்பாறை வரை எமக்கான மேய்ச்சற்தரைகளை அம்பாறை, பொலன்னறுவை மாவட்டங்களிலிருந்து வருகை தந்த சிங்கள பெரும்பான்மையினருக்கு சேனைப் பயிர்ச்செய்கைக்கும் மரமுந்திரிகை செய்கைக்கும் என இரண்டு ஏக்கர், மூன்று ஏக்கர் என காணிகளை பகிர்ந்தளித்து எதிர்காலத்திலே குடியேற்றுவதற்கான திட்டங்களை தீட்டிக்கொண்டிருக்கின்றனர்.

1993ஆம் ஆண்டு கல்முனை வடக்கு பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டது. 40ஆயிரம் தமிழர்கள் இந்த பிரதேச செயலகத்தில் வாழ்கின்றனர். 29கிராம சேவகர் பிரிவுகள் அங்கிருக்கின்றன. 28வருடங்களாக நடைபெற்று வருகின்ற பிரதேச செயலகத்திலே இன்றிருக்கின்ற பிரதேச செயலாளர் உட்பட ஒன்பது பிரதேச செயலாளர்கள் கடமையாற்றியிருக்கின்றார்கள்.

பிரதேச செயலாளர் உட்பட 135 உத்தியோகத்தர்கள் கடமை புரிந்து வருகின்றனர். பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் தொடர்ச்சியாக அந்த பிரதேச செயலகத்தில் நடைபெற்றுவருகின்றன.

ஆனால் அந்தப் பிரதேச செயலகம் இன்று உபபிரதேச செயலகமாக தரமிறக்கப்பட்டிருப்பதாக கடிதம் மூலம் அம்பாறை மாவட்ட செயலகத்திற்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த கல்முனையை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் அவர்களின் அழுத்தம் காரணமாக அந்தப் பிரதேச செயலகம் தரமிறக்கப்பட்டிருக்கின்றது.

கல்முனையில் வாழும் முஸ்லிம் இனத்திற்கு அவர் ஏதாவது செய்ய வேண்டுமானால் இன்னுமொரு இனத்திற்கு கிடைக்கும் வரப்பிரசாதத்தை அழித்து கொடுக்குமளவிற்கு அவர் இருக்கின்றார்.

கடந்த தேர்தலில் அவர் வென்றது எதிர்க்கட்சியிலாகும். எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வெளியிலிருந்து 20ஆவது திருத்தச் சட்டம் நாடாளு மன்றத்திற்கு வரும்போது அரசாங்கத்திற்காக கைகளை உயர்த்தி இன்று தமிழர்களுக்கு எதிராக அந்தப் பிரதேச செயலகத்தை தரமிறக்கம் செய்கின்றார் என்றால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அரசுடனே இருந்து அரசகட்சியுடனே சேர்ந்து தேர்தலில் போட்டியிட்ட மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசிற்கு தேவையில்லையா? இதனை அவர்கள் அரசிடம் கேட்க வேண்டும்.

சிறீலங்கா பொதுஜன பெரமுன மூலமாக தெரிவு செய்யப்பட்ட தம்பி வியாழேந்திரன் அவர்களும், என்னைப்போல போராட்டத்தில் இணைந்திருந்து இன்று பாராளுமன்ற உறுப்பினராக வந்திருக்கின்ற தம்பி சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும் இந்த அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்கின்றனர். உங்களை நான் குற்றம் சாட்டவில்லை. நாடாளுமன்றத்திலே இருக்கக்கூடிய விரல்விட்டு எண்ணக்கூடிய சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் நானும் ஒருவன். அந்தவகையில் இந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் நான் கூறும் அறிவுரை அவர்கள் அரசாங்கத்திடம் இது பற்றி கேட்க வேண்டும்.

எதிர்க்கட்சியிலே இருந்து 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு கைகளை உயர்த்தி உங்களுக்கு ஆதரவளித்த ஹரிஸ் உங்களுக்குத் தேவையா, அல்லது உங்களுடனே இருந்து அமைச்சுப் பதவியையும் அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவியையும் பெற்றிருக்கின்ற நாங்கள் உங்களுக்குத் தேவையா என்பதை நீங்கள் அரசாங்கத்திடம் கேட்க வேண்டும்.

தமிழர்களுக்கு எதிராக நடக்கின்ற அநியாயங்களை தட்டிக் கேட்க வேண்டும். எங்களுக்கு அபிவிருத்தி வேண்டும். கடந்த 30வருடத்திற்கும் மேலான யுத்தத்தில் பாதிக்கப்பட்ட இனம் நாங்கள். எங்களுக்கு அபிவிருத்தி வேண்டும். அபிவிருத்தி என்பது வெறும் கொங்கிறீட் வீதிகளை அமைப்பதோ ஆடு,மாடுகளை கொடுப்பதோ, அல்லது சிறிய தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதோ அல்ல. எமது மண் பறிபோவதை தடுக்க வேண்டும்.

கடந்த காலங்களிலே கே.டபிள்யு.தேவநாயகம் இந்த தொகுதியை பிரதிநிதித்துவப் படுத்தியவர். அவர் ஐக்கிய தேசியக் கட்சி அரசிலே இருந்தபோது குடும்பிமலைப் பிரதேசத்தில் விகாரையொன்றை அமைப்பதற்கு ஒரு பிக்கு வந்தபோது தனது ஆதரவாளர்களை அங்கு கூட்டிச்சென்று அவர்களை அடித்து விரட்டினார். அதேபோல் இன்று இந்த அரசிலே இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றீர்கள்.

ஈரளக்குளம் பிரதேசத்தில் 400ஏக்கரில் ஒரு பௌத்த மத்தியஸ்தானம் அமைக்கவிருப்பதாக அறிகின்றோம். இதற்கு எதிராக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாகிய நாங்கள் குரல் கொடுக்கின்றோம். எங்களுக்கு உதவியாக எங்களுடன் இணைந்து இங்கு மேற்கொள்ளப்படும் குடியேற்றங்களை தடுப்பதற்காக குரல்கொடுக்க வேண்டும். அபிவிருத்தியையும் செய்ய வேண்டும், எமது மக்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களையும் நீங்கள் தட்டிக்கேட்க வேண்டும் என்பதே எனது பணிவான வேண்டுகோளாகும்.

பௌத்த விகாரைகள் பௌத்தர்கள் வாழும் இடத்திலே அமைய வேண்டும். பௌத்த தொல்பொருள் சம்பந்தமான விடயங்கள் எங்கும் இருக்கலாம். அதற்காக உங்களுக்கு 100ஏக்கர், 200ஏக்கர், 400ஏக்கர் நிலம் தேவையில்லை.

பொலன்னறுவையிலும் அநுராதபுரத்திலும் இந்து மன்னர்கள் ஆண்ட காலங்களில் அவர்களால் விட்டுச்செல்லப்பட்ட எச்சங்கள் இப்போதும் இருக்கின்றன. அந்தப் பிரதேசங்களிலே நீங்கள் 50ஏக்கரையோ 100ஏக்கரையோ ஒதுக்கி இந்து மதஸ்தானங்கள் அமைப்பதற்கு நீங்கள் தயாரில்லை. ஏனென்றால் நீங்கள் தமிழினத்தை அடக்கி ஒடுக்கி வாழ்வதற்காக, பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்காக ஆட்சி செய்கின்றீர்கள்.

நீங்கள் இப்படித்தான் செய்வீர்கள். ஆனால்; நாங்கள் ஒன்றாக இருக்க வேண்டும். தமிழ் மக்கள் ஒன்றாக இருக்காவிட்டால் இன்று புத்தளம், சிலாபம், உடப்பு இருப்பதுபோல எதிர்காலத்தில் எமது சந்ததியினர் தமிழ் பெயருடன் இருப்பார்கள், ஆனால் தமிழ் பேச முடியாத சிங்கள மொழிமூலம் படித்த சிங்கள கலாசாரத்தில் வாழக்கூடிய நிலைமைக்கு இந்த நாடு கொண்டுவந்துவிடும்” என்றார்.

Posted in Uncategorized

ஜனாதிபதி சற்றுமுன் வௌியிட்ட அறிக்கை!

கொவிட் தடுப்பூசி ஊடாக மாத்திரமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றை வௌியிட்டு ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

அதேபோல், முதலாவது கொரோனா பரவலின் போது செயற்பட்ட விதத்தில், தற்போதைய சவாலை சமாளிக்க சுகாதார அதிகாரிகள் பரிந்துரைத்த அனைத்து விதிகளையும் வழிகாட்டல்களையும் மக்கள் கடுமையாக பின்பற்ற வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முறையான திட்டமொன்றை அரசாங்கம் தயாரித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தற்போது உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ள மற்றும் அங்கீகரிக்கப்படவுள்ள நான்கு கொவிட் தடுப்பூசிகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. முதலில் இறக்குமதி செய்யப்பட்ட எஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி 925,242 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் மே முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. முன்னணி சுகாதார அதிகாரிகள், முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 356,000 பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்படவுள்ளது. மீதமுள்ள தேவையை பூர்த்தி செய்துக் கொள்வதற்காக எஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி தயாரிக்கும் உலகின் ஏனைய நிறுவனங்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.”

Posted in Uncategorized

வேட்புமனுக்களை ஒப்படைப்பதாயின் உட்கட்சி நெருக்கடிகளைத்தீருங்கள்

எதிர்வரும் தேர்தல்களில் உட் கட்சிநெருக்கடிகளைக் கொண்ட அரசியல் கட்சிகளிடமிருந்து வேட்பு மனுக்களை ஏற்க வேண்டாம் என்று தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

உட்கட்சி மோதல்கள் உள்ள கட்சிகள் அவை தீர்க்கப்படும் வரை அந்தக் கட்சிகளிடமிருந்து எந்தவொரு வேட்புமனுவையும் பெறாது என்று தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

தமிழக தலைமைகளை விமர்சிப்பது ஈழத் தமிழர்களுக்கு ஆரோக்கியமில்லை – ரெலோ இளைஞரணி செயலாளர் சபா குகதாஸ்

தமிழக தலைமைகளை விமர்சிப்பது ஈழத் தமிழர்களுக்கு ஆரோக்கியமில்லை என கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் ரெலோ அமைப்பின் இளைஞரணி செயலாளருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தாயகமாக கொண்டு வாழும் ஈழத் தமிழர்களுக்கு ஒரு ஆதரவான பக்கபலமான தேசம் என்றால் அது இந்தியாவின் தமிழ்நாடு தான்.

அங்கு வாழ்கின்ற எட்டுக் கோடி தொப்பிள் கொடி சொந்தங்களும் அவர்களின் அரசியல் தலைமைகளும் ஈழத் தமிழர்களின் பாதுகாப்புக்கு முக்கியமானவர்கள்.

ஈழத் தமிழர்களுக்கும் அவர்களது தேசியப் பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுப்பதற்கு தற்போதைய பூகோள அரசியல் சூழ்நிலையில் தென் ஆசிய நாடுகளின் வல்லரசாக விளங்கும் இந்தியாவின் மத்திய அரசினால் மட்டுமே முடியும். அதனை சரியான பொறிமுறை ராஐதந்திரத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள ஈழத் தமிழ்த் தலைமைகள் இன்றுவரை ஒன்றுபடவில்லை.

இவ்வாறு இருக்கும் போது இந்திய மத்திய அரசிற்கான தொடர்ச்சியான அழுத்தங்களை பிரையோகிக்க தமிழக தலைமைகளை கூட்டாக கையாள ஈழத் தமிழர்களின் தலைமைகள் இன்றுவரை முயற்சிக்கவில்லை என்ற வேதனையான இடைவெளி தொடர்கிறது.

இவ்வாறு நிலைமை இருக்க தற்போது ஈழத் தமிழர் மத்தியில் சில அரசியல் வாதிகள் ஊடகங்களின் பசிக்கு தமிழக அரசியல் தலைமைகளை கால சூழ்நிலையை கருத்தில் கொள்ளாது விமர்சிப்பது ஈழத் தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு நோக்கிய பயணத்திற்கு ஆரோக்கியமானதாக ஒருபோதும் அமையமாட்டாது.

ஈழத் தமிழர்கள் தொடர்பான பிரச்சினைக்கு இந்திய மத்திய அரசிற்கு தொடர் அழுத்தத்தை கொடுக்கக் கூடிய சக்தியாக விளங்குவது தமிழக தலைமைகளும் மக்களும் தான் இவ்வாறான நிலையில் ஒரு பலமாக இருக்கும் மக்கள் திரட்சியை கொண்ட தமிழகத்தை விமர்சிப்பதை ஈழத்தில் உள்ள சில அரசியல்வாதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்திய மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டை ஒரு பலமாக சக்தியாக இருப்பதை விரும்பாமல் துண்டுகளாக பிரித்து கையாள முயற்சிக்கும் போது ஈழத் தமிழர்களாகிய நாமும் அந்த நிகழ்ச்சி நிரலில் சென்று விடக்கூடாது.

சிங்கள பெருந்தேசியவாதத்தில் இருந்து ஈழத் தமிழர்களை ஒரு இனமாக பாதுகாக்க இன்று உள்ள பலமான தமிழகமே தேவை அதுமட்டுமல்ல ஈழத் தமிழர் விடையத்தில் ஒன்றுபட்ட பலமான தமிழக தலைமைகளே அவசியம்.

இன்று ஈழத் தமிழர் அரசியல் தரப்பில் உள்ள தலைமைகள் அதனை கையாளத் தவறினாலும் சில ஆண்டுகளுள் இதை சிறப்பாக முன்னெடுக்கக் கூடிய இளைய அரசியல் தலைமைகள் ஈழத்தில் வளர்ந்து வருகின்றார்கள் அவர்கள் கையாளக் கூடியவாறு தமிழக தலைமைகளை விமர்சிப்பதை தவிர்த்து வழிவிடுங்கள்.

Posted in Uncategorized

அரசாங்கத்திற்குள் இருந்தவாறு அதனை விமர்சிப்பவர்கள் விரும்பினால் அதிலிருந்து வெளியேறலாம் – பிரதமர்

அரசாங்கத்திற்குள் இருந்தவாறு அதனை விமர்சிப்பவர்கள் விரும்பினால் அதிலிருந்து வெளியேறலாம் அவர்களை தடுக்கவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச சண்டே ஐலண்டிற்கு தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இருந்தவாறு அதனை விமர்சிப்பவர்கள் வெளியேறி வெளியே சென்று தங்கள் விமர்சனங்களை தொடரலாம் என பிரதமர் தெரிவித்துள்ளார். அவர்கள் செல்வதற்கான கதவு திறந்திருக்கின்றது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை விமர்சிப்பதற்கான ஜனநாயக உரிமை எவருக்கும் உள்ளது என தெரிவித்துள்ள பிரதமர் தாங்கள் அங்கத்துவம் வகிக்கின்ற அரசாங்கத்தையே அவர்கள் விமர்சிக்க விரும்பினால் அவர்கள் அதிலிருந்து வெளியேறுவததை எவரும் கட்டுப்படுத்தவில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை விமர்சிப்பதன் மூலம் அவர்கள் பிரபலமாக விரும்பினால் அரசாங்கத்திற்குள் இருந்து அதனை விமர்சிக்காமல் தங்களிற்கு விருப்பமான முடிவுகளை எடுக்கலாம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரமிறக்கல் : ஆளும் தரப்புடன் கூட்டமைப்பு முக்கிய பேச்சு : சமலுடனான சந்திப்பில் இணக்கம்

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமிறக்கியமை தொடர்பாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சுடன் எதிர்வரும் மே 4 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய பேச்சுவார்த்தையொன்றை நடத்தவுள்ளது.

அதுவரையில், கல்முனை தமிழ் பிதேச செயலகத்திற்கான புதிய பெயர்ப்பலகை உள்ளிட்ட இதர செயற்பாடுகள் அனைத்தையும் உடன் நிறுத்துமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பின்போதே மேற்படி விடயங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

இச்சந்திப்பு தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவிக்கையில்,

பொதுநிருவாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவுடன் கல்முனை கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமிறக்கியமை தொடர்பாக நாம் நீண்ட கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தோம். அதன்போது 1993 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்ப் பிரிவாக இயங்கி வரும் இந்தப் பிரதேச செயலகத்திற்கு காணி மற்றும் நிதி தொடர்பான அதிகாரங்கள் மட்டுமே வழங்கப்படவில்லை.

தற்போது இந்த பிரதேச செயலகத்தில் 9 ஆவது பிரதேச செயலாளர் கடமையாற்றிக்கொண்டிருக்கின்றார். இந்தப் பிரதேச செயலாளர் நிருவாகத்தின் கீழ், 39 கிராமா சேவகர் பிரிவுகள் காணப்படுகின்றன. இங்கு 135 ஊழியர்கள் பணியாற்றுகின்றார்கள்.

அவ்விதமான ஒரு பிரதேச செயலகத்தினை ‘உப பிரதேச செயலம்’ என்ற வகைக்குள் குறிப்பிட்டு தரமிறக்குவதானது பொருத்தமற்ற செயற்படாகும். இலங்கை வரலாற்றில் முதன்முதலாக தரமிறக்கப்பட்ட செயலகமாகவும் இதுவே காணப்படுகின்றது.

நீதி, நியாயமற்ற முறையில் தனிநபர் ஒருவரின் அரசியல் இருப்பிற்காக இவ்விதமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆகவே அச்செயற்பாட்டினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதோடுரூபவ் இந்த விடயம் நியாயமான முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.

அவர், உடனயடியாகவே அம்பாறை மாவட்ட செயலாளருடன் தொடர்பு கொண்டு, கல்முறை வடக்கு தமிழ்பிரதேச செயலகத்தினை உப பிரதேச செயலகம் என்று பெயர்ப்பலகையை அமைத்தல் உள்ளிட்ட இதர அனைத்துச் செயற்பாடுகளையும் நிறுத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் அமைச்சர், செயலாளர் உள்ளிட்டவர்களுடன் பேச்சுவார்த்தையொன்றை முன்னெடுப்பதற்கும் ஏற்பாடுகளைச் செய்துள்ளர்.

அதன்பிராகரம் குறித்த சந்திப்பின்போது இந்த விடயம் சம்பந்தமான வரிவாக கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதற்கு நாம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம் என்றார்.

வன்னி மாவட்ட, பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்ட நேர அட்ட வணை தொடர்பில் ஆளுநருக்கு கடிதம் ரெலோ வினோ எம்.பி

வன்னி மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர்கள் வெவ்வேறு மாவட்டங்களில் வெவ்வேறு தினங்களிலும், நேரங்களிலும் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களை அட்டவணைப்படுத்திக்கூட்ட நேர சூசி தயாரிப்பதால் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகத் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நேற்று மாலை அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும்,

வன்னி தேர்தல் மாவட்டத்தின் மூன்று நிர்வாக மாவட்டங்களுக்குமான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு தங்களுடன் இணைத் தலைவர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் கே.திலீபன் வவுனியா மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அத்துடன் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களுக்கு இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் வெவ்வேறு மாவட்டங்களில் வெவ்வேறு தினங்களிலும், நேரங்களிலும் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களை அட்டவணைப்படுத்திக்கூட்ட நேர சூசி தயாரிப்பதால் பல்வேறு சிரமங்களை ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர் நோக்குகின்றனர்.

அவசியமாகவும், தேவைகள் உணர்ந்தும் கலந்து கொள்ள வேண்டிய கூட்டங்களில் எம்மால் பங்கேற்க முடியாமையால் நாம் புறக்கணிக்கப்படுவதாக, அந்நியப்படுத்தப்படுவதாக உணர்கின்றோம். பொது மக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் எம் மீது கூட்டங்களைத் தவிர்ப்பதாக, குற்றச்சாட்டுக்களை முன் வைக்கின்றனர்.

இது எமக்கும் பொது மக்களுக்குமான இடைவெளியை அதிகப்படுத்தும் செயற்பாடாகக் கருதுகின்றோம். அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்களாக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அதிகாரப் போட்டியாலோ அல்லது முறையான ஒழுங்குபடுத்தலின்மை காரணமாகவோ இத்தவறுகள் நடை பெற்றுக்கொண்டு வருகின்றன.

ஒவ்வொரு பிரதேச மக்களின் பிரச்சினைகளையும் நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்குத் தீர்வுகள் எட்டப்படும் சந்தர்ப்பங்களும் இதனால் மறுக்கப்படுகின்றன.

இதனால் அரசின் எதிர்க்கட்சி வரிசையின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் திட்டமிடப்பட்டோ, இல்லாமலோ பொது மக்களுக்காகப் பேசுவதற்கும், தீர்வுகள் பெற்றுக்கொடுப்பதற்குமான எமது உரிமைகளுக்குத் தடை போடப்படுவதாக உணர்கின்றோம்.

உதாரணமாகக் கடந்த பங்குனி மாதம் 2ஆம் திகதி வவுனியா பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பகல் 1.30 மணிக்கும், சம காலத்தில் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டமும் வெவ்வேறு தலைமைகளின் கீழ் நடைபெற்றது. ஏதாவதொரு கூட்டம் எம்மால் தவிர்க்கப்பட்டிருந்தது.

எதிர்வரும் 27.04.2021 அன்று காலை 09 மணிக்கு வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டமானது தங்களினதும், நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனதும் இணைத் தலைமையிலும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. அதே தினத்தில் அதே நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில் மாந்தை கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடாத்த ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த தவறுகளுக்குக் குறிப்பிட்ட குழுக்கூட்டங்களுக்குத் தலைமை வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களா, அரசாங்க அதிபர்களா, பிரதேச செயலாளர்களா காரணம் என்பதை எம்மால் அறிய முடியாமல் இருக்கின்றது.

அரசியல் தவறுகளா, நிர்வாக தவறுகளா என்பதனை நீங்கள் கண்டறிந்து அனைத்து பிரதேச, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களிலும் மக்கள் பிரதிநிதிகளான நாம் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை இணைத்தலைவர்கள், அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்களுடன் சுமூகமான முறையில் கலந்தாலோசித்து சீரான ஒழுங்கு நிரல் படுத்தல்களுடன் ஏற்படுத்தித் தருவது தங்களின் கடமையெனக் கருதுகின்றேன்.

உடனடிக் கவனமெடுத்து தவறுகள் தொடராதிருக்கவும், குழுக்கூட்டங்களின் நோக்கங்கள் பயனடையும் விதத்திலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன் எனக் குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தின் பிரதிகள் மன்னார், வவுனியா,முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized