துறைமுக நகரத் திட்டம் தொடர்பில் தேரர்களுக்கு விளக்கமளிப்பு

பௌத்த ஆலோசனை சபைக் கூட்டம் நேற்று பிற்பகல் 10 ஆவது தடவையாக ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியபோது, கொழும்பு துறைமுக நகரத் திட்டம் தொடர்பில் தேரர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இத்திட்டம் தொடர்பில் விரிவாகத் தெளிவுபடுத்தியதுடன் பொருளாதாரத்துக்கும், நாட்டுக்கும் கிடைக்கும் பயன்கள் பற்றியும் கருத்து வெளியிட்டார்.

நில அளவை விரிவுபடுத்தி புதிய முதலீடுகளுக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்துதல் ஒரு நாடு என்ற வகையில் பெற்றுக்கொள்ளும் பாரிய வெற்றியாகும்.

தவறான கருத்துக்களைப் பரப்பி அனைத்தையும் எதிர்ப்பதற்கு பதிலாக ஒரு தேசமாக முன்னேறுவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும்- என்றார்.

இதேவேளை, இந்த அபிவிருத்தித்திட்டம் தொடர்பில் மக்களுக்கு சரியான தெளிவை வழங்கி, அதற்கான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டுமென்று தேரர்கள் சுட்டிக்காட்டினர்.

கொரோனா புதிய உருமாற்றம், சுகாதாரத் துறையின் ஆலோசனைகள் தொடர்பில் ஜனாதிபதி மகா சங்கத்தினருக்கு தெளிவுபடுத்தினார்.

புத்தபெருமான், திரிபீடகம் மற்றும் பௌத்த புண்ணிய தலங்கள் குறித்து தவறான கருத்துக்களை பரப்புவோர் குறித்து கண்டறிய நியமிக்கப்பட்ட குழு தமது பரிந்துரைகளை ஆலோசனை சபைக்கு முன்வைத்தது.

எதிர்வரும் கூட்டத்தில் இதுதொடர்பில் மகா சங்கத்தினரின் கருத்துக்களை குழுவிடம் முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

பௌத்த ஆலோசனை சபையின் உறுப்பினர்களான மகா சங்கத்தினர், இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் அரச அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளமைக்கு தமிழர்களே சிறந்த உதாரணம் – ரெலோ செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் பா. உ

இந்த நாட்டில் தமிழர்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது அரசியல் பழிவாங்கலுக்கு சிறந்த உதாரணம். இவ்வாறான அரசியல் பழிவாங்கல்களை பார்க்கும்போது புத்தரின் போதனைகளை மதிக்கும் ஒருவன் என்ற ரீதியில் வெட்கப்படுவதா,வேதனைப்படுவதா, அல்லது கௌதம புத்தரைப்போன்று எனது மனைவி, பிள்ளைகளை விட்டு துறவறம் போவதா என்ற சிந்தனைகள் எனது மனதைக் குழப்புகின்றன என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

கௌதம புத்தரின் பௌத்த சின்னங்கள் இருப்பதாகக் அடையாளம் காட்டி நிலங்களை அபகரிக்கின்றீர்கள். இந்து மன்னர்கள், ஆட்சி புரிந்த பொலநறுவை, அனுராதபுர பிரதேசங்களில் இந்து தாபனம் அமைக்க நூறு ஏக்கர் காணியை தர முடியுமா என்று கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்( ஜனா) கல்முனை பிரதேச தரம் இறக்கல் போர்ட் சிற்றி பிரேரணைக்கு ஆதரவு பெறவா என்றும் பாராளுமன்றத்தில் வினவியுள்ளார்.

அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரித்து தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இந்தக் கேள்விகளை அவர் எழுப்பினார்.

தோடர்ந்து உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா),

நமது நாடு ஒரு சுந்தரத் தீவு. நமது நாடு இந்து சமூத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த முத்து. நமது நாடு உலகுக்கு ஆன்மீக ஒளியைப் பரப்பிய நான்கு மதங்களும் தளைத்தோங்கும் நாடு. நமது நாடு மூப்பு, பிணி, சாக்காடு கண்டு தனது இல்லற வாழ்வில் அழகிய இளம் மனைவியையும் துறந்து தனக்கு ராஜபோகம் தரக்கூடிய அரச சுகபோகங்கள் அனைத்தையும் துறந்து உலகுக்கு ஞான ஒளியினை தன் பரிநிர்வாணம் மூலம் ஏற்படுத்திய கௌதம புத்தரின் ஆன்மீக ஒளியின் பெருமையினை பின்பற்றும் நாடும் கூட.

மூப்பு, பிணி, சாக்காடு கண்டு முத்தி கண்ட கௌதம புத்தருக்கு எதிரி என்று எவருமில்லை. இருப்பவரும் வாழ்பவரும் மனுக்குலத்தவரே. இந்த மண்ணில் வாழ்வது இன, மத, மொழி பேதங்களற்ற ஒரே மனுக்குலமே என்று போதி மர நிழலில் இருந்து பெற்ற ஞானம் மூலம் அறியத் தந்த கௌதம புத்தரை விசுவாசிக்கும் நாட்டில், அந்த விசுவாசம் உண்மையாக மாறி மாறி நாட்டை ஆட்சி செய்த அரசுத் தலைவர்களுக்கு உண்மையாக இருக்குமானால், இந்த நாட்டில் அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விவாதம் ஒன்று ஏன் தேவை என்பதுதான் இன்று என் முன் எழுந்துள்ள பிரதான கேள்வியாகும்.

நம் அரசின் தலைவர்கள் தாம் உதட்டளவில் பேசும் பௌத்த தர்மம், தேசாபிமானம் என்பன தம் உள்ளத்திலிருந்து வெளிவராததன் காரணமாகவே இந்த நாட்டின் உயரிய சபையில் இன்று இந்த விவாதம் நடைபெறுகிறது. இதையிட்டு கௌதம புத்தரின் போதனைகளை மதிக்கும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் வெட்கமடைவதா, தேவையடைவதா, துக்கமடைவதா, துயரமடைவதா இல்லை கௌதம புத்தனைப் போல் என் மனைவி பிள்ளைகளை விட்டுத் துறவறம் செல்வதா என்று பல்வேறு சிந்தனைகள் என் மனதைக் குழப்புகின்றது. வேதனைப்படுத்துகின்றது.

ஆட்சி மாறும் போது அமைச்சர்கள் மாற்றம் பெறுவார்கள், அமைச்சின் செயலாளர்கள் மாற்றம் பெறுவார்கள், அரச திணைக்கள, கூட்டுத்தாபன நியதிச் சபைகள் உட்பட அரச இயந்திரம் முற்றிலும் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளருக்குச் சாதகமாக மாறும் கடந்த அரசாங்க காலத்தில் உயர் பதவி பெற்றவர்கள் ஏன் அகில இலங்கைச் சேவை ஆளணியினர்கூட பொலிஸ் சேவை இப்படி பல பதவி நிலையில் இருப்பவர்கள் பந்தாடப்படுவார்கள். இது எமது நாட்டின் ஆட்சிமாற்றங்கள் நடைபெறும் பொழுது காணும் சாதாரண காட்சிகள். ஓவ்வொரு ஆட்சியாளரும் தமது பக்க நியாயத்தை தாம் சார்ந்த அலுவலர்கள் சார்பில் நியாயப்படுத்துவார்கள். இன்று எமது கௌரவ நீதி அமைச்சர் அலி சப்றி கூட பிரதம நீதியரசர் பதவியிலிருந்து சிரானி பண்டாரநாயக்கா அவர்கள் நீக்கப்பட்டது அரசியலமைப்புக்கு முரணானது அல்ல எனவும், பிரதம நீதியரசர் மொஹான் நீதியரசர் அந்தப்பதவியிலிருந்து நீக்கப்பட்டது அரசியலமைப்புக்கு முரணானது என்றும் ஒரு சட்டத்தரணிக்கே உரிய வாதத்திறனோடு நியாயப்படுத்துகிறார்.

இவை ஆட்சி மாற்றங்கள் நடைபெற்ற போது பெரும்பான்மை இன மக்களுக்கிடையே, பௌத்த சிங்க மக்களுக்கிடையே ஏற்படும் அரசியல் பழிவாங்கல்களினதும் அவற்றுக்கான நிவாரணம் வழங்குவது என்பதும் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் எனும் வகையில் ஓரிரு உதாரணங்களாகும். தமது இனத்துக்குள்ளே, தமது மதத்துக்குள்ளே, மாறி மாறி ஆட்சியமைக்கும் அரசியல் தலைவர்களால் அரசியல் பழிவாங்களல்கள் ஏற்படுவதென்நால், அர்த்த புஸ்டியுள்ள அதிகாரப்பகிர்வுக்காகவும் புறக்கணிப்புக்கு எதிராகவும் சமத்துவத்துக்காகவும் போராடும் எமது மக்கள் எத்துணை பழிவாங்கப்பட்டிருப்பார்கள். இத்தகைய பழிவாங்கல்களுக்காக நியாயம் கெட்க முடியாத நாதியற்ற சமுதாயமாக எமது மக்கள் எவ்வளவு காலம் வாழ்ந்திருப்பார்கள். சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்து தொடர்ச்சியாக தேசியத்துக்கு உழைத்த எம் இனத் தலைவர்கள் கூட இன்று உரிய தேசிய மரியாதை இன்றி புறக்கணிக்கப்படுகின்றார்கள். ஆனால், எம் இனத்தின் பெயரில் அரசிற்கு ஆதரவு வழங்கும் ஒரு சில அரசியல்வாதிகளுக்கு எலும்புத் துண்டுகளுக்கும் குறைவான மரியாதையை மக்கள் வழங்குகின்றார்கள் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

ஆட்சியாளர்களுக்குச் சார்பாக அரச சட்டங்கள் வளைந்து கொடுக்கின்றன. கிருசாந்தி குமாரசாமி கொலை வழக்கில் நீதி மன்றத்தின் மூலம் சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்ட மரண தண்டனைக் கைதி ஒரு பெரும்பான்மை இன இராணுவச் சிற்பாய் என்பதனால் அவர் அரசின் பொது மன்னிப்புக்கு ஆளாகின்றார். இப்படி எத்தனையோ இராணுவத்தினர் நீதிமன்றங்கள் வழங்கிய தண்டனைத் தீர்ப்பிலிருந்து பொது மன்னிப்பு பெற்றுள்ளனர். ஆனால், தாயை இழந்து தனியாக உறவினர் தயவில் வாழும் தன் மகளின் வாழ்வை காப்பாற்றுவதற்காக ஆனந்த சுதாகரனுக்கு பொதுமன்னிப்பு அளியுங்கள் என்று முழந்தாளில் நிற்காத குறையாக அகிலமே வண்டியும் கூட ஆட்சியாளர்களின் அஹிம்சைக் கண் திறக்கவில்லை.

தென்னாபிரிக்காவின் தேச பிதாவான நெல்சன் மண்டேலா அவர்களை ஏகாதிப்பத்திய அரசு 26 வருடங்கள் சிறையில் வைத்து 26வது வருடத்தில் விடுதலை செய்தது. இங்கு 26 வருடங்களுக்கு மேலாக விசாரணைகளின்றி வழக்குத் தாக்கலின்றி வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் எத்தனை அரசியல் கைதிகள் சிறையில் வாடுகின்றனர். தமது வாழ்வின் இளமையைத் தொலைத்துள்ளனர். இவர்கள் செய்த குற்றம் என்ன. தன் இனத்தை தன் மொழியை தன் மண்ணை நேசித்ததா, இது போன்ற ஒரு அரசியல் பழிவாங்கல் உலகின் இராணுவ ஆட்சி நடக்கும் நாட்டில் கூட நடந்ததாக, நடப்பதாக அண்மைய உலக வரலாறுகள் எதுவும் பதிவுசெய்யவில்லை. ஆனால் உலகுக்கு ஜனநாயகத்தைப் போதித்த பாராளுமன்ற சம்பிரதாயங்களின் தாய் என போற்றப்படும், பிரித்தானியாவுக்கு முன்னரேயே சர்வஜன வாக்குரிமையை வழங்கியதாக பெருமை கொண்ட ஆசியப்பிராந்தியத்தில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தைப் பேணும் ஒரு முக்கிய நாடான எமது நாட்டில் இத்தகைய பழிவாங்கல்கள் என்று ஓயும். இவை ஓயுமா, அல்லது அடுத்த தலைமுறைக்கும் இது நகர்த்தப்படுமா?

அரச உயர் பதவி நியமனங்களில் தமிழர்கள் முற்றாகப் புறக்கணிக்கப்படுகிறார்கள். அண்மைய இலங்கை நிருவாக சேவைப் பரிட்சைகளின் முடிவு இதற்குத் தகுந்த சான்றாகும். முட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் கடந்த முறை 69 பேர் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். அதில் ஒரு பரீட்சாத்தி கூட தமிழ் பேசுபவர் இல்லை என்பதே ஒரு உதாரணமாகும். ஒரு பழிவாங்கலுமாகும். அந்தப்பரீட்சை முடிவுகளின்படி சித்தியடைந்த அனைவருமே பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாவார்களா என்பதைக் கேட்க விரும்புகிறேன். இது ஒரு திட்டமிட்ட பழிவாங்கலாகும். பதவி நியமனங்கள் வழங்கப்படும் போது தகுதிக்கும் திறமைக்கும் முன்னுரிமை அளியுங்கள். உறவுக்கும் இனத்துக்கும் முன்னுரிமையளிக்காதீர்கள். ஒரு காலத்தில் புகழ்பூத்த வெளிநாட்டுச் சேவையாக இருந்த இலங்கை வெளிநாட்டுச் சேவை இன்று அரசியல் நியமனங்களால் அலங்கரிக்கப்பட்டு நிற்கின்றது என்பதற்கு அண்மைய ஜெனீவா மகா நாடு சரியான முன்னுதாரணங்களாகும்.

எமது நாடு மீண்டும் பண்டைய சிறப்புகளை, பண்டைய பெருமையினைப் பெற வேண்டுமாக இருந்தால் ஆட்சியாளர்கள் கடந்த கால வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவைகள் அனேகம் உண்டு. தவறுகளும் குறைபாடுகளும் கொண்டதுதான் மனித வாழ்க்கை. தவறுகள் இனங்காணப்பட்டு குறைகள் களையப்பட்டு வாழ்க்கையைச் சீராக்க வேண்டியது வாழ்வியலின் தத்துவம். இது தனிமனித வாழ்க்கைக்கு மாத்திரமல்ல நாட்டின் ஆட்சியாளர்களுக்கும் பொருந்தும்.
ஆட்சியாளர்களே! எமது நாட்டின் கடந்த கால வரலாற்றினை நன்கு சீர்தூக்கிப் படியுங்கள் தவறுகள் எங்கு எவ்வாறு எவரால், உருவாக்கப்பட்டது என்பதனைக் கண்டுபிடியுங்கள். அதற்கான தீர்வினை இன மத, மொழி வேறுபாடின்றி நடுநிலையுடன் வழங்குவதற்கு முனையுங்கள். வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாத எவரும் மக்கள் போற்றும் அரசுத் தலைவராக மிளிர முடியாது. இதனை உணர்ந்து உங்கள் தீர்மானங்களை எடுங்கள். அவ்வாறு நீங்கள் தீர்மானம் மேற்கொள்வீர்களாக இருந்தாhல் அரசியல் பழிவாங்கல் என்ற சொல் இலங்கை அரசியல் வரலாற்றின் அகராதியில் இருந்து பூரணமாக நீக்கப்பட்டுவிடும்.

இந்த நாட்டில் இன்று தமிழ் பேசும் மக்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது இந்த அரசியல் பழிவாங்கலுக்கு நல்ல உதாரணமாகும்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கடந்த 28 ஆண்டுகளாக அந்தப்பிரதேச செயலகம் தனியாக இயங்கிவந்தது. 40ஆயிரத்துக்கும்அதிகமான தமிழர்கள் வாழ்கின்றார்கள். 29 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டு இருக்கும் அந்தப்பிரதேச செயலகம் இன்று தரம் இறக்கப்பட்டதாக அறிகின்றோம். கடந்த கால ஆட்சியில் அது தரம் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். அது தவிர்க்கப்பட்டிருக்கிறது, கல்முனை நகரரில் அரசியல் செய்யும் அரசியல்வாதியான ஹரீஸ் எம்.பியின் நடவடிக்கைதான் இது. பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டுமே தவிர தரம் இறக்கப்படக்கூடாது. இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் இறக்கப்பட்டுள்ளது.

ஹரீஸ் பாராளுமன்ற உறுப்பினர், தான் சார்ந்த சமூகத்தின் மரணமானவர்களின் உடலங்கள் எரிக்கப்பட்டிருக்கும் போதே 20வது திருத்தத்துக்கு வாக்களித்து ஆதரவளித்து தன்னுடைய சமூகத்துக்கே துரோகம் செய்தவர். இன்னுமொரு சமூகத்துக்கு உதவி செய்வார் என்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் நாங்கள் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக எதிர்காலத்தில் தமிழ் முஸ்லிம்கள் இன ஒற்றுமையாக வாழவேண்டுமென்று ஆசைப்படுகின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் தமிழ் முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்று எங்களுடன் பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பெரும்பான்மை ஆட்சியாளர்களின் பிரித்தாளும் தந்திரத்தின் ஊடாக இந்த வேலையைச் செய்கின்றார்கள். எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. 20வது திருத்தச் சட்டத்திற்கு வாக்களித்த இவர்கள் பிரதேச செயலகத்தினை தரம் இறக்குவதன் மூலம் எதிர்வரும் காலங்களில் கொண்டுவரப்படவிருக்கின்ற கொழும்பு துறைமுக நகர பிரேரணையிலும் அதரவைப் பெறுவதற்காக இப்படிச் செய்கின்றார்கள என்று நினைத்துப்பார்க்க வேண்டியதாகயிருக்கிறது.

அதற்கும் மேலாக வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தொல்பொருள் என்ற ரீதியில் பழிவாங்கப்பட்டு பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அம்பாறை பொத்துவில்லிருந்து பருத்தித்துறை வரையில் பல ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டுக்கொண்டு வருகின்றன.

கௌதம புத்தரின் பௌத்த சின்னங்கள் இருப்பதாகக் அடையாளம் காட்டி நீங்கள் அபகரிக்கின்றீர்கள். கடந்த காலங்களில் இந்து மன்னர்கள் வாழ்ந்த, ஆட்சி புரிந்த பொலநறுவை, அனுராதபுரம் போன்ற இடங்களில் இந்து சின்னங்கள் இன்னும் இருக்கின்றன. அங்கு நூறு ஏக்கர் காணியைக் கொடுத்து இந்து மத ஸ்தாபனம் அமைக்க உங்களால் இடம் தரமுடியுமா என்று கேட்க விரும்புகிறேன்.

Posted in Uncategorized

தமிழ்த் தரப்பை ஐக்கியப்படுத்தும் ரெலோவின் முயற்சியை வரவேற்கிறோம் -சுரேஷ்

மாகாணசபை முறைமையைக் காப்பதற்கு தமிழ்த் தரப்புகள் ஒன்றிணைய வேண்டும் என்று அண்மையில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் சுரேன் ஊடக அறிக்கையின் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது அறிக்கையை வரவேற்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிறேமச்சந்திரன் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றினை அனுப்பிவைத்துள்ளார்.

அவரது ஊடக அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:

அண்மையில் ரெலோவின் பேச்சாளர் பதின்மூன்றாவது திருத்தத்தையும் மாகாணசபையையும் பாதுகாக்க வேண்டும். அதற்கு தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற ஒரு கருத்தை ஊடகங்கள் ஊடாக வெளியிட்டிருந்தார். ரெலோவின் பேச்சாளர் என்ற அடிப்படையில் அது ரெலோவின் கருத்தாகவே கொள்ளப்படும்.

1987ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, 1988ஆம் ஆண்டு 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஈபிஆர்எல்எவ், ஈஎன்டிஎல்எப் இணைந்து இணைந்த வடக்கு-கிழக்கு மகாணசபையை உருவாக்கினோம். 1990ஆம் ஆண்டு மாகாணசபை கலைக்கப்பட்டு 2009ஆம் ஆண்டுவரை யுத்தம் நீடித்தது. யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மௌனிக்கப்பட, இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்குக் கிடைத்த அர்ப்ப சொற்ப சலுகையான மாகாணசபை உரிமைகளைப் பறிக்கின்ற அதேசமயம், புதிய அரசியல் சாசனத்தினூடாக மாகாணசபை முறைமையை இல்லாமல் செய்கின்ற ஒரு கருத்தும் நிலவுகின்றது.

மாகாணசபை முறைமையை இந்திய-இலங்கை ஒப்பந்தத்தினூடாக கொண்டுவந்தது என்ற அடிப்படையில், பதின்மூன்றாவது திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்படவேண்டும் என்றும் உடனடியாக மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என்பதையும் இந்தியா இலங்கைக்கு தொடர்ந்தும் அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றது. இந்த சூழ்நிலையில், மாகாணசபை முறைமையை ஏற்றுக்கொள்ளதாத தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய பல தரப்புகள் கையில் இருப்பவற்றைக் கோட்டை விட்டுவிடக்கூடாது என்ற அடிப்படையில், மாகாணசபையைக் காப்பாற்ற முற்படுவது வரவேற்கத்தக்கது.

இந்தப் பின்னணியில் ரெலோவின் இந்த முன்முயற்சி வரவேற்கத்தக்கது. கடந்த காலத்தில் 13ஆவது திருத்தம் என்பதே தமிழ் மக்களின் அபிலாசைகளைத் தீர்ப்பதற்குப் போதுமானதல்ல. ஆகவே அது ஏற்புடையதுமல்ல அதனை தும்புத்தடியால்கூட தொடுவதற்கு நாங்கள் தயாரில்லை என்ற அடிப்படையில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு.சம்பந்தன் அவர்களது கருத்துகள் அமைந்திருந்தன. அதே கருத்தினை ரெலோ கொண்டிருந்தாலும்கூட, இன்று தனது நிலையை மாற்றிக் கொண்டதானது கூரிய அவதானத்திற்குரியது.

ஆனால் இது வெறும் ஊடக அறிக்கையையும் தாண்டி இதற்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டிய தேவையும் இருக்கின்றது. அதற்கான முயற்சிகளை எடுத்து, தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள அனைத்துக் கட்சிகளுடனும் பேசி அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டிய கடமைகளை ரெலோ தரப்பினர் செய்வார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிரசுக் கட்சியின் மேலாதிக்கம் காரணமாகவும் தன்னிச்iயான செயற்பாட்டின் காரணமாகவும் கூட்டமைப்பிற்கென புரிந்துணர்வு ஒப்பந்தங்களோ அல்லது ஒரு யாப்போ இல்லாமல் ஒழுங்கற்ற போக்கைக் கைக்கொண்டு செயற்பட்டது. தமிழரசுக் கட்சியினர் அங்கத்தவக் கட்சிகளை ஒதுக்கி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைக்கே குந்தகமாக விளங்கினர். தனது தன்னிச்சையான முடிவுகளை அங்கத்துவக் கட்சிகள் ஏற்க வேண்டும் என்று நிர்ப்பந்தித்தனர். இவர்களது தன்னிச்iயான முடிவுகள் அனைத்தும் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் எதிராகவே இருந்தது.

தமிழரசுக் கட்சியின் இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கைகளுககு; கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாகிய நீங்களும் உறுதுணையாக இருந்து வந்திருக்கிறீர்கள். இவ்வாறான ஒரு சூழ்நிலையில், கூட்டமைப்பிற்குள் இருக்கக்கூடிய கட்சிகளுடனும் தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள ஏனைய கட்சிகளுடனும் பேசி அவற்றை ஒருங்கிணைப்பதனூடாகவே நீங்கள் கூறிய மாகாணசபை முறைமையைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

மாகாணசபைக்கான அதிகாரங்கள் போதாதென்பதை நாம் அதன் ஆரம்ப காலத்திலிருந்தே கூறி வருகின்றோம். சமஷ;டி அரசியலமைப்புமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதிலும் தமிழ் மக்களுக்கான சுயாட்சி உருவாக்கப்பட வேண்டும் என்பதிலும் எமக்கும் மாற்று கருத்து கிடையாது.

ஆனால், இன்றைய காலகட்டத்தில், சிங்கள பௌத்த மேலாதிக்கமானது தமிழர்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கி, எந்தவித அதிகாரமுமற்ற ஒரு சிறுபான்மையினராக வாழ வேண்டும் என்ற ஒரு நிலையில், உள்ளவற்றைக் காப்பாற்ற வேண்டியது அவசியமாகின்றது. எனவே இன்றைய காலத்தின் தேவை கருதி, அவசிய அவசரம் கருதி வெறுமனே அறிக்கையோடு மட்டும் நிற்காமல் ரொலோ இதயசுத்தியுடன் முன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நாம் பக்கபலமாக இருப்போம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

Posted in Uncategorized

11 மாணவர்களை கடத்தி கொலைசெய்து கடலில் போட்டனர்

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பிரஜாவுரிமையை பறித்து அரசாங்கத்திற்கு எதிரான அழுத்தங்களில் இருந்து தப்பித்துக்கொள்ளவே அரசியல் பழிவாங்கல் ஜனாதிபதி ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது பதினொரு மாணவர் படுகொலை, அவன்கார்ட் ஊழல் வாதிகள் என முக்கியமான குற்றவாளிகளை விடுதலை செய்யும் நோக்கமும் இவர்களுக்கு உள்ளதென எதிர்க்கட்சி உறுப்பினர் சரத் பொன்சேகா சபையில் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைமீதான முதலாம் நாள் விவாதத்தில் ; உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் தலைவர் குறித்தும் இந்த ஆணைக்குழு குறித்தும் நாட்டிற்கு விசர்பூனை ஆணைக்குழு என கூறினால்தான் தெரியும்.

அந்தளவு மோசமான, கிறுக்குத்தனமான ஆணைக்குழுவாகும். நீதிமன்றத்தை பலவீனப்படுத்தி சட்டத்தை ஆணைக்குழு கையில் எடுக்கும் விதமாகவே இது அமைந்துள்ளது.

இந்த ஆணைக்குழு மூலமாக எதிர்காலத்தில் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தே இன்று பிரச்சினை எழுகின்றது. ஆணைக்குழு அறிக்கைக்கு அமைய நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் ; பிரஜாவுரிமை பறிக்கப்படும் நிலைமையொன்று நாடாளுமன்றத்தின் ஊடாக முன்னெடுக்க அரசாங்கம் முயற்சிப்பதாக எமக்கு தெரியவருகின்றது. இதற்கு அரசாங்கத்தில் உள்ள பலர் விருப்பமில்லை என்பதும் எமக்கு தெரியும்.

எதிர்க்கட்சி உறுபினர்களின் பிரஜாவுரிமையை பறிப்பது ஜனநாயக செயற்பாடு அல்ல, இந்த செயற்பாடுகள் பயந்த, பலவீனமான அரசியல் நகர்வுகள் என்றே நாம் கருதுகின்றோம். இந்த ஆணைக்குழுவின் நோக்கம் என்னவெனில், முன்னைய ஆட்சிக்காலத்தில் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டு தற்போது சிறையில் உள்ளவர்கள் மற்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதாகவும். முக்கியமாக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் அவருடன் நெருக்கமாக செயற்பட்ட தசநாயக, சுமித் ரணசிங்க ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டு ஒன்று உள்ளது

பாடசாலை மாணவர்கள் 11 பேரை கடத்தி அவர்களின் பெற்றோரிடம் கப்பம் கேட்ட குற்றச்சாட்டு. இதில் தமிழ் சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் இருந்தனர். இந்த உண்மைகள் வெளிவந்த நேரத்தில் அவர்களை கொலைசெய்து கடலில் போட்டனர்.

இவ்வாறான சம்பவம் இன்று ஆட்சில் உள்ளவர்களின் குடும்பத்தினருக்கு நடந்தால் எவ்வாறு இருக்கும். இவ்வாறான நபர்களை விடுதலை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைப்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயம் ?, இதுவா சட்ட நியாயாதிக்கம் ?, இவ்வாறன செயற்பாடுகளை நாம் ஒருபோதும் ஏற்றுகொள்ள மாட்டோம்.

அதேபோல் அவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி போன்றவர்களை விடுதலை செய்யவும் ஆணைக்குழு வலியுறுத்துகின்றது. இவர்களை காப்பாற்ற அன்றும் எமது தரப்பில் இருந்த சட்டத்தரணிகள் முன்வந்தனர், அவர் இன்று ஜனாதிபதியுடனும் மோதிக்கொண்டுள்ளார்.

அதேபோல் மரண தண்டனை கைதியான துமிந்த சில்வாவை விடுதலை செய்யக்கோரியும் இந்த விசர் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. அதேபோல் சுனில் ரத்நாயக்க உள்ளிட்ட இராணுவத்தினர் கடந்த 2000 ஆம் ஆண்டில் செய்த எட்டுப்பேர் கொலை, அவர்களை தாக்கி தலைகளை வெட்டிய சம்பவம் தொடர்பில் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

ஒரு இராணுவ சிப்பாயாக இருக்கலாம், அல்லது இராணுவ அதிகாரி என்பதற்காக அநாவசியமான கொலைகளை செய்தவர்களை விடுதலை செய்ய முடியாது

அதேபோல் குற்றவாளிகளை விடுதலை செய்துவிட்டு இராணுவ வீரர்களை பாதுகாத்தோம் என கூறவும் முடியாது. இதனை எவரும் ஏற்றுகொள்ள முடியாது, கொலைகாரர்களை விடுதலை செய்துவிட்டு எவராலும் புகழாரம் சூட்டிக்கொள்ள முடியாது என்றார்.

Posted in Uncategorized

அதிகாலையில் வீடுபுகுந்து ரிசாட், ரியாஜ் இருவரும் சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டனர்

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும் அவரின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் இன்று (24) அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாமும், தமது சகோதரரும் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் ட்விட்டர் பதிவொன்றையும் பதிவு செய்திருந்தார்.

“என்னை எவ்விதமான ஆதாரங்களுமின்றி கைது செய்யும் வகையில், இன்று அதிகாலை 1.30 மணி முதல் பௌத்தாலோக மாவத்தையிலுள்ள எனது வீட்டின் முன்னால் சிஐடியினர் உள்ளனர். எனது சகோதரரை ஏற்கனவே கைது செய்துள்ளனர். நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர். இதுவரையில் சகல சட்டபூர்வ விசாரணைகளுக்கும் முழு ஆதரவை வழங்கியுள்ளேன். இது சட்டத்துக்கு முரணானது” என அந்த ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய விசாரணைகளை முன்னெடுப்பதற்காக முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது.

Posted in Uncategorized

எதிர்க்கட்சி உறுப்பினர்களை பழிவாங்க முற்பட்டால் சர்வதேசத்திடம் செல்வோம் – கபீர் ஹாசிம்

நீதிமன்ற அதிகாரத்தை ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றுக்கு வழங்குவது நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கு பாரிய அச்சுறுத்தலாகும்.

அதனால் அரசாங்கம் விசேட ஆணைக்குழு அமைத்து ஹரீன் பெர்ணான்டோவை அரசியல் வேட்டையாடயாட முற்பட்டால் நாங்கள் சர்வதேசத்தில் முறையிடவும் தயார் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

Articles Tagged Under: கபீர் ஹாசிம் | Virakesari.lk

பாராளுமன்றத்தில் இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்ற 2015 முதல் 2019 நவம்பர் மாதம் 19ஆம் திகதிவரையான காலத்தில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்டவர்கள் தொடர்பில் ஆராய விசாரணை குழு அமைத்து, அதன் பரிந்துரைகளை குற்றப்புலனாய்வு துறைக்கு வழங்கி இருந்ததோம்.

குற்றப்புலனாய்வு துறை அதுதொடர்பில் விசாரணை செய்து அதன் அறிக்கையை சட்டமா அதிபருக்கு வழங்கி இருந்தது. சட்டமா அதிபர் திணைக்களமே குற்றம் உள்ளவர்களுக்கு எதிராக வழக்கு தொடுத்தது. அதனால் நாங்கள் காட்டுச்சட்டத்தை பின்பற்றி செயற்டபவில்லை. தொடுக்கப்பட்ட வழக்குகளுக்கு சாட்சியம் இலலை என்றால் அவருக்கு அதிலிருந்து விடுதலையாகலாம்.

அப்படி இருக்கும் நிலையில் நீதிமன்றத்துக்கு சென்று தங்களின் குற்றமற்ற தன்மையை ஒப்புவிக்க ஏன் அச்சப்படுகின்றீர்கள். அத்துடன் அரசாங்கத்தின் விசேட ஜனாதிபதி ஆணைக்குழு நாட்டின் சுயாதீன் நீதித்துறைக்கு பாரிய அச்சுறுத்தலாகும்.

அதனால்தான்தான் இதற்கு எதிராக சட்டத்தரணிகள் சங்கம் உட்பட பல அமைப்புகள் நீதிமன்றம் சென்றிருக்கின்றது. இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவது மக்களின் இறையாண்மைக்கு எதிராகும்.

மேலும் எமது நாடு தொடர்பில் மனித உரிமை பேரவையால் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மேலும் உறுதிப்படுத்துவதாக இருக்கின்றது.

நீதிமன்றத்துக்கு அப்பால் ஆணைக்குழுவொன்று தீர்ப்பு வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்வது நாட்டின் சுயாதீன் நீதித்துறைக்கு பாரிய அச்சறுத்தலாகும். அதனால் அரசாங்கம் விசேட ஆணைக்குழு அமைத்து ஹரீன் பெர்ணான்டோ உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்களை அரசியல் வேட்டையாட முற்பட்டால். அதற்கு எதிர்க்கட்சி என்றவகையில் நாங்கள் சர்வதேசத்துக்கு செல்லவும் தயார் என்றார்.

Posted in Uncategorized

மிருசுவிலில் 8 பேரின் கழுத்தை அறுத்து கொன்றது சுனில் ரத்னாயக்க – சரத் பொன்சேகா

சுனில் உள்ளிட்ட இராணுவ சிப்பாய்கள் மிருசுவிலில் 8 பேரை கொலைசெய்து,கழுத்தை அறுத்து புதைத்தனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் வைத்து நேற்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில் –

மரண தண்டனை கைதியாக தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் எம்.பி துமிந்த சில்வாவை விடுதலை செய்யவும் அரசியல்பழிவாங்கல்தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

ஒருமரணதண்டனைக் கைதியைவிடுவிக்கசிலபொறிமுறைகள் உள்ளன.இங்குஅவைபின்பற்றப் படவில்லை. ஜனாதிபதி பின்கதவால்தீர்மானங்களைஎடுக்கின்றார். மரணதண்டனைக் கைதியை விடுவிக்க சிறைச்சாலைகள் ஆணையாளர் பரிந்துரை முன்வைக்கவேண்டும்.பின்னர்ஓய்வு பெற்ற சட்டமா அதிபர் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும். பாரியகுற்றம்செய்தவர்தொடர்பில் ஜனாதிபதிக்கு சமூகப் பொறுப்பு இருக்க வேண்டும்.

நன்னடத்தை தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும். ஆனால் இவை அனைத்தும் இங்கு பின்பற்றப்படவில்லை. இந்த அரசாங்கம் மரண தண்டனை கைதி சுனில் ரத்நாயக்கவுக்கு மன்னிப்பளித்து விடுதலை செய்தது. சுனில் உள்ளிட்ட இராணுவ­ ­ சிப்பாய்கள்­ ­மிருசுவிலில் 8 பேரை கொலை செய்து, கழுத்தை அறுத்துப் புதைத்தனர்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட அவரை விடுதலை செய்துள்ளீர்கள். நீங்கள் எவ்வாறு அத்தகைய செயல்களை அங்கீகரிப்பீர்கள்? கொலைகாரன் கொலைகாரன்தான். பிரேமாவதி மனம்பேரியை கொன்றதும் இராணுவ சிப்பாயே. அவர் தூக்கு மேடைக்கு அனுப்பப்பட்டார்.இராணுவவீரரர் களை விடுவிக்கின்றோம் என நீங்கள் கொடி தூக்க முடியாது” என அவர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

சஹ்ரானின் மாமனார் உள்ளிட்ட மூவர் கைது!

உயிர்த்த ஞாயிறு தாக்கல்களுடன் தொடர்புடைய பிரதான குண்டுதாரி சஹ்ரான் ஹசீமின் மாமனார் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குளியாப்பிட்டிய – கெகுனகொல்ல பிரதேசத்தில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

சஹ்ரானினால் நடாத்தப்பட்ட அடிப்படைவாத வகுப்புக்களில் கலந்து கொண்ட குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Batticaloa Campus பல்கலைக்கழகமாக மாற்றம் !-G.L.பீரிஸ்

சர்ச்சைக்குரிய Batticaloa Campus கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட வளாகமாகவோ தனியானதொரு பல்கலைக்கழகமாகவோ மாற்றப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Batticaloa Campus-இற்கு பட்டங்களை வழங்கும் அனுமதியை உயர்கல்வி அமைச்சோ பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோ வழங்கவில்லை என G.L.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களை விட இந்த வளாகத்தில் வசதிகளும் கட்டடங்களும் அதிகம் இருப்பதால், பல்கலைக்கழக மாணவர்களுக்காக அதனை பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பல்கலைக்கழகங்களுக்கு 30,000 மாணவர்கள் மாத்திரமே இணைக்கப்பட்ட நிலையில், இவ்வாண்டில் 41,000 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என அவர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கையில் தற்போது 16 பல்கலைக்கழகங்களே உள்ள நிலையில், எதிர்வரும் மே மாதம் 17 ஆவது பல்கலைக்கழகம் திறந்து வைக்கப்படும் என அவர் தகவல் வௌியிட்டுள்ளார்.

அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்விடயங்களைக் கூறியுள்ளார்.

யாழ் பல்கலை கழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி திறந்து வைப்பு

யாழ் பல்கலையில் புதிதாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டு இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது.

இதனையடுத்து மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் அரசியல் பிரதிநிதிகள் கண்டனம் வெளியிட்டதோடு, பல்கலைக்கழக மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்தனர்.

மாணவர்களின் கடும் அழுத்தத்தை அடுத்து மீண்டும் நினைவுத் தூபியை அதே இடத்தில் அமைப்பதற்கு முன்வந்த பல்கலை நிர்வாகம் கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் திகதிகாலை அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிலையில் நினைவுத் தூபி கட்டுமானம் நிறைவுக்கு வந்த நிலையில் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized