யாழ் இந்தியத் துணைத் தூதுவர் – யாழ் மாவட்ட விமானப்படை கட்டளைத் தளபதி இடையே சந்திப்பு

யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும், யாழ்ப்பாண விமானப்படையின் கட்டளை தளபதி குரூப் கப்டன் சமிந்த ஹேரத் இடையிலான சந்திப்பு ஒன்று யாழ்ப்பாணம் மருதடி வீதியில் உள்ள யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரக அலுவலகத்தில் நேற்றையதினம்(01) இடம்பெற்றது.

இதில் யாழ்ப்பாண விமானப்படையின் தற்போதைய நிலைமைகள் மற்றும் பொதுமக்களுக்கு செயலாற்றக்கூடிய வகையிலான உதவித் திட்டங்கள், பரஸ்பர உதவித்திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டன.

இச் சந்திப்பில் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரி ராம் மகேஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் யார்? தமிழ் கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு – ரெலோ பேச்சாளர் சுரேந்திரன்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதா அல்லது தென்னிலங்கை வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்குவதா என்பது தொடர்பில் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுகின்ற தமிழ் தேசிய கட்சிகளுடன் இணைந்து பேசி முடிவெடுக்கப்படும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அமைப்பின் ஊடகப் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் அரசியல் அமைப்பின் பிரகாரம் இவ்வருடம் பழைய முறையிலோ அல்லது புதிய ப முறையிலோ தேர்தலை நடத்தியே ஆக வேண்டும்.

இவ்வாறான நிலையில் தென் இலங்கையில் போட்டியிடுகின்ற ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்குவதா அல்லது தமிழ் தேசியக் கட்சிகள் சார்ந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதா என்பது தொடர்பில் பல்வேறு தரப்பினர்களும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

தமிழ் கட்சிகளைச் சேர்ந்த சிலர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக தமிழர் ஒருவரை நிறுத்தி தமிழ் மக்களிடம் வாக்குகள் வழங்குமாறு கோருவது என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு கோருவதால் தென் இலங்கையில் செயல்படுகின்ற இனவாத சக்திகளுக்கு சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்கு சாதகமாக அமைந்து விடும் என சில தமிழ் தரப்பினர்கள் கருத்துக்களை முன் வைக்கிறார்கள்.

இவ்வாறு இரு பக்கவாதங்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஒரே நிலைப் பாட்டில் செயற்படுகின்ற தமிழ் கட்சிகள் மக்களின் எதிர்கால அரசியல் நலன் கருதி முடிவுகளை எடுக்க வேண்டும்.

ஆகவே ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கின்ற நிலையில் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சக தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடி முடிவுகளை எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து சென்ற நான்கு பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உட்பட நான்கு பேர் அகதிகளாக தனுஷ்கோடியில்(Dhanushkodi) தஞ்சமடைந்துள்ளனர்.

இவர்கள் மன்னாரில் இருந்து படகில் சென்று நேற்று (30) காலை தனுஷ்கோடி மணல் திட்டிற்கு சென்றுள்ளனர்.

மணல் திட்டில் நின்று கொண்டிருந்த இலங்கை தமிழர்கள் நால்வரை மண்டபம் இந்திய கடலோர காவல்படை ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பலில் மீட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை அழைத்து வந்து ராமேஸ்வரம் மெரைன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

ஒப்படைக்கப்பட்ட நால்வரையும் விசாரணைக்காக மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் விசாரணைக்குப் பின்னர் இலங்கை தமிழர்களை மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தினசரி ஒரு குடும்பத்தில் ஒரு நேரம் மட்டும் சாப்பிட முடிவதாகவும், இலங்கையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் குழந்தைகளை வைத்துக் கொண்டு பாதுகாப்பாக வாழ முடியாததால் தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக இலங்கை தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ வழியின்றி தமிழகத்தில் தஞ்சம் அடைந்து வரும் செயற்பாடு அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.

Posted in Uncategorized

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சர்வதேச நீதி கோரி வவுனியாவில் போராட்டம்

வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் சர்வதேச நீதி கோரி இன்றைய தினம் (30) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று காலை 10 மணிக்கு போராட்டம் ஆரம்பமானது.

இதன்போது போராட்டக்காரர்கள் தெரிவிக்கையில்,

குற்றமிழைத்த நாட்டில் எமக்கான நீதி கிடைக்கப்பெறாது. இதனால் சர்வதேச நீதி கோரி நாம் போராட்டத்தினை முன்னெடுத்து வருகிறோம். எனவே சர்வதேசம் இனியும் கண்மூடித்தனமாக இருக்காமல் எமக்கான நீதியை பெற்றுத்தர வேண்டும்.

எமது போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்வதற்காக பல அமைப்புக்கள் முற்படுகின்றன. எனவே, குற்றம் இழைத்தவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்தி எமக்கான நீதியை வழங்கவேண்டும். அதுவரை நாம் போராடிக்கொண்டே இருப்போம் என்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ‘ஓ.எம்.பி கண்துடைப்பு நாடகம்’, ‘சர்வதேச விசாரணையே எமக்கு தேவை’, ’12 ஆணைக்குழுக்கள் அமைத்தும் பயன் இல்லை’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு பல்வேறு கோசங்களை எழுப்பியிருந்தனர்.

‘ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமையை ஆதரித்து பொதுவாக்கெடுப்பு முறைக்கு ஆதரவு’

ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்து, மற்றும் சர்வதேச சட்டங்களின்படி அவர்களுக்குள்ள உரிமைகளின்

அடிப்படையில், பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனநாயக வழிமுறையான பொதுவாக்கெடுப்பு முறையை ஆதரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கெனிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் டொனால்ட் ஜி டேவிஸ் வைலிநிக்கலஸ் ஜோன்கொதைமர் ஜெப்ஜக்சன் சமர்லீ டானி கே டேவிஸ் சூசன் வைல்ட் ராஜாகிருஸ்ணமூர்த்தி ஜமால்போமன் கேப்வாஸ்குவாஸ் ஆகியோர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கைப் போர் மே 18, 2009 அன்று முடிவடைந்த 15வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. கால் நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்த இந்த பேரழிவுகரமான மோதல், தேசம், அதன் மக்கள் மற்றும் குறிப்பாக தமிழ் சமூகத்தின் மீது ஆழமான மற்றும் நீடித்த வடுக்களை விட்டுச் சென்றுள்ளது.

1983இல் தொடங்கி 2009 இல் முடிவடைந்த இந்தப் போரானது, பொதுமக்களுக்கு எதிரான பயங்கரமான அட்டூழியங்களை உருவாக்கியது. இதில் 170,000 தமிழர்கள் வரையில் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என மதிப்பிடப்பட்டள்ளதுடன் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினராலும் பரவலான மனித உரிமை மீறல்களும் இழைக்கப்பட்டது.

2015இல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த மீறல்கள் தொடர்பான சுயாதீன விசாரணைகளுக்கு சர்வதேச அமைப்புகளுடன் ஒத்துழைக்க உறுதியளித்தார், அத்தகைய விசாரணைகளை எளிதாக்குவதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் 30/1 மற்றும் 40/1க்கு இணை அனுசரணை வழங்கினார்.

இறுதிக் கட்டப் போரின் போது பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றிய கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதையடுத்து, 2020 ஆம் ஆண்டில் இந்த உறுதிமொழிகளிலிருந்து நாடு விலகிக் கொண்டது தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் தற்போது இடம்பெறும் காணி அபகரிப்புகள் அவர்களது சுய-ஆட்சியற்ற-பிரதேசமாக (non-self-governing territory) உள்ள தமிழர்களின் தாயகத்தை மேலும் அரித்து வருகின்றன.

அரசியல் விமர்சகர்கள், அதிருப்தியாளர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கு எதிராக அரசாங்கம் கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது, தமிழர்கள் உட்பட இலங்கையர்களின் உரிமைகளைத் தொடர்ந்து மீறுகிறது.

முக்கிய உலகளாவிய கப்பல் வழித்தடங்களுக்கு அருகில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள இலங்கையின் மூலோபாய இருப்பிடம் அமெரிக்க தேசிய நலன்களுக்குத் தேவையான பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் சமாதானத்தில் முக்கிய இடத்தை வகிக்கிறது.

கடந்தகால மனித உரிமை மீறல்களை நிவர்த்தி செய்வதும், மோதலுக்கான மூல காரணங்களைக் கையாள்வதும் எதிர்கால வன்முறையைத் தடுப்பதற்கு இன்றியமையாததாகும். குற்றவாளிகளை பொறுப்புக்கூற வைப்பதும், ஐக்கிய நாடுகள் சாசனம் மற்றும் அமெரிக்காவின் கொள்கைகளுக்கு ஏற்ப தமிழ் மக்கள் அவர்களின் எதிர்காலத்தை ஜனநாயக ரீதியாக தீர்மானிக்க உதவுவதும் இலங்கையில் நல்லிணக்கத்திற்கும் முன்னேற்றத்திற்கும் இன்றியமையாததாகும்.

துரதிஷ்டவசமாக இலங்கையில் ஐ நா வின் உண்மை மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன. இந்த பிரச்சனையை சுயாதீனமாக தீர்ப்பதற்கான விருப்பும் மற்றும் திறனும் இன்மையை இலங்கை வெளிப்படுத்தியுள்ளது.

ஐக்கிய அமெரிக்கா இந்த நீடித்து வரும் பிரச்சினைக்கு தீர்வைக் காண வேண்டும். உக்ரைன், கொசோவோ, கிழக்கு திமோர், தெற்கு சூடான் போன்ற நாடுகளில் சுயநிர்ணய உரிமைக்காக நாங்கள் காண்பித்த ஆதரவிற்கு ஏற்ப, உலகளாவில் எமது கொள்கைகளை நாம் மாற்றமின்றி கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் பின்வரும் நடவடிக்கைகளைக் கருத்தில் கொள்ளுமாறு வெளியுறவுத் துறையை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

1 ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்து, மற்றும் சர்வதேச சட்டங்களின்படி அவர்களுக்குள்ள உரிமைகளின் அடிப்படையில், பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, உலகளாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனநாயக வழிமுறையான பொதுவாக்கெடுப்பு முறையை (Referendum)ஆதரிக்கவும்.

2. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரின் பரிந்துரைகளைப் பின்பற்றி போரின் போது பொதுமக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு விரிவான சர்வதேச விசாரணைகள் மற்றும் பொறுப்புக்கூறலை ஆதரிக்கவும் அத்தகைய விசாரணையில் இனப்படுகொலை (Genocide) செய்யப்பட்டதா என்பது பற்றிய ஆராய்வதும் அடங்கும்.

சுயாதீனமான நீதித்துறை நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் சாத்தியமான குற்றச்சாட்டுகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு international Criminal Court) விசாரணைகளுக்காகப் பரிந்துரைக்கவும் அமெரிக்காவிற்கு ஐக்கிய நாடுகள் சபையில் பொதுச் சபை (General Assembly), பாதுகாப்பு கவுன்சில் (Security Council) மற்றும் மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC) உட்பட உள்ள தலைமைப் பாத்திரத்தை வாய்ப்பாகப் பயன்படுத்தவும்,

இந்த முக்கியமான பிரச்சினையை நீங்கள் கருத்தில் கொண்டதை நாங்கள் பாராட்டுகிறோம். மேலும் நீதி மற்றும் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவதில் உங்களது தலைமைத்துவத்தை எதிர்பார்க்கிறோம் vஎனவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

IMF சீர்திருத்தங்கள் முடியும் வரை தேர்தல்கள் இல்லை!

சர்வதேச நாணய நிதியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை தேர்தலை

நடத்துவதற்கு வாய்ப்பில்லை என, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளமை தொடர்பில் பல அரசியல்வாதிகள் அதிர்ச்சியடைந்துள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளை தனித்தனியாக சந்தித்தபோதே நாட்டில் நடத்தவேண்டிய குறித்த தேர்தல்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார்

மேலும் அவர், நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றம் காண சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் பொருளாதார சீர்திருத்த செயற்பாடுகள் மிகவும் முக்கியமாகும். எனவே அந்த வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் ஜூலை இறுதி வரை அமுலில் உள்ளதால் அதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட மாட்டாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்

அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான நேரம் நிதியளிப்புச் செயற்பாட்டின் பின்னரே வருகின்றது.

எனவே ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தாது. அதற்கேற்ப தேர்தல் வரைபடத்தை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனவே முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை பொதுஜன பெரமுனவின் நிறைவேற்றுக்குழுவே தீர்மானிக்க வேண்டும் – பசில் ராஜபக்ச

எந்த தேர்தல் முதலில் நடைபெற வேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள் என முன்னாள் நிதியமைச்சர் பசில்ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நிறைவேற்றுக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்துங்கள் என என்னுடைய தனிப்பட்ட கருத்தினையே நான் ஜனாதிபதியிடம் தெரிவித்தேன் என பசில்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கட்சி இது குறித்து கலந்தாராய்ந்து தீர்மானத்தை எடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையில் பசில் ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலே முதலில் இடம்பெறவேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து என பசில் ராஜபக்ச தெரிவித்தார் என கட்சியின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை முதலில் நடத்தவேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து அவர் அது தனது தனிப்பட்ட கருத்து கட்சியின் கருத்து என்பதை ஜனாதிபதியிடமும் தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ள சாகரகாரியவசம் கட்சி இது குறித்து மேலும் ஆராய்ந்து தீர்மானிக்கலாம் எனவும் பசில்ராஜபக்ச தெரிவித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே ஈஸ்டர் தாக்குதல் குறித்த உண்மைகள் வெளிவரும் – அருட்தந்தை சிறில்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார் என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள அருட்தந்தை சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார்.

ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.

நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே

பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை

அம்பாந்தோட்டையில் உத்தேச புதிய சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கான பங்குதாரர்களுடனான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து சினொபெக் நிறுவனம் அரசாங்கத்துக்கு விளக்கமளித்துள்ளது.

சினொபெக் வெளிநாட்டு முதலீட்டு நிறுவவனத்தின் அதிகாரிகளுக்கும், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை (18) இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

சினோபெக்கின் நிர்வாகம் அசல் முன்மொழிவு மற்றும் முதலீட்டில் சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

அவர்கள் திட்டத்துக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு எதிர்வரும் ஜூன் மாதத்துக்குள் பணிகளைத் தொடங்க உள்ளனர். நீர் வழங்கல், மின்சாரம், நில ஒதுக்கீடு உள்ளிட்ட வசதிகள் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை

இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படாபாண்டி இன்று தீர்ப்பளித்துள்ளார்.

குரகல விகாரை தொடர்பான பேச்சு இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தியதாக சட்டமா அதிபர் முன்வைத்த குற்றச்சாட்டின் பேரில் நீதிவான் இந்த தண்டனையை வழங்கியுள்ளார்.

இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் ஞானசாரர் மீது இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.