வரி வலையில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது

வரி வலையிலிருந்து யாரையும் தப்பிக்க அனுமதிக்கக் கூடாது என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் வரி அறவிடப்படும் முறையும், வரி அறவிடும் நிறுவனங்களும் நிலையானதாக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரிச்சுமை நியாயமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் மூன்று நிறுவனங்கள் வரி அறவீடு செய்கின்றன. வருமான வரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம் மற்றும் மதுவரித் திணைக்களம் என்பனவே அந்நிறுவனங்களாகும்.

இந்நிறுவனங்கள் சுயாதீனமாக இயங்க வேண்டும். வரி அறவிடுவதற்கு அந்த நிறுவனங்களை மறுசீரமைக்க வேண்டும்.

நேர்மையான முறையில் வரி செலுத்துவோருக்குச் சுமையை ஏற்படுத்தாமல், உழைக்கும் அனைவருக்கும் வரிச்சுமை நியாயமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். வரி வலையிலிருந்து யாரையும் தப்பிக்க அனுமதிக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நிலைமை மேலும் மோசமடையும் – உலக உணவுத் திட்டம்

இலங்கையில் உக்கிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியானது உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக தொடர்ந்தும் இருப்பதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் 2022 ஒக்டோபர் முதல் 2023 பெப்ரவரி வரையான காலத்தில் தொடர்ச்சியான உதவி இல்லாமல் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்று உலக உணவுத்திட்டம் எச்சரித்துள்ளது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின்படி, உணவுப் பணவீக்கம் ஓகஸ்ட் மாதத்தில் 93.7 சதவீதத்திலிருந்து செப்டம்பர் மாதத்தில் 94.9 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தநிலையில் மூன்று மாத காலத்திற்கு ஒரு மில்லியன் குழந்தைகளுக்கு பாடசாலை உணவை வழங்குவதற்காக, உலக உணவுத்திட்டம் ஆயிரத்து 475 மெற்றிக் தொன் அரிசி மற்றும் 775 மெற்றிக் தொன் இரும்புச் சத்துள்ள அரிசியை வழங்கியுள்ளது.

அவற்றின் விநியோகம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், அது அரசாங்கத்தின் தேசிய பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு நேரடியாக கிடைக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முறைமையை திருத்துவதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு

தேர்தல் முறைமையை திருத்துவதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 101 இன் விதிகளுக்கு அமைய இந்தக் குழுவில் 21 உறுப்பினர்களுக்கு மேல் இருக்கக் கூடாது என அமைச்சர் விஜயதாச சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தக் குழுவிற்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களை சபாநாயகர் பெயரிட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized | Tagged

புலம்பெயர் தொழிலாளர்கள் இலத்திரனியல் வாகனம் கொள்வனவு செய்ய விசேட அனுமதி

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சட்டபூர்வமான முறையில் பண அனுப்பல்களை ஊக்குவிக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சலுகைகளுக்கு கடந்த ஆகஸ்ட் 8 திகதி அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் குறித்த சுற்றறிக்கை ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளதுடன், தகைமை பெறுகின்ற புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உயர்ந்தபட்சம் 25,000 அமெரிக்க டொலர்களுக்கு உட்பட்டு இரண்டு சக்கர இலத்திரனியல் வாகனமொன்றும், உயர்ந்தபட்சம் 65,000 அமெரிக்க டொலர்கள் உட்பட்டு நான்கு சக்கர முழு அளவிலான இலத்திரனியல் வாகனமொன்றைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரால் அமைச்சரவையின் கவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள, புலம்பெயர் தொழிலாளர்களால் வெளிநாட்டில் வருமானமாக ஈட்டும் வெளிநாட்டு செலாவணியை இலங்கைக்கு அனுப்புவதை மேலும் ஊக்குவிப்பதற்காக கீழ்க்காணும் நடவடிக்கைகளுக்காக அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது :

2023.04.30 ஆம் திகதி வரை வாகனமொன்றை இறக்குமதி செய்வதற்காக விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பிக்கும் திகதி வரைக்கும் அனுப்பப்படுகின்ற அந்நிய செலாவணியின் பெறுமதி 50 சதவீதம் வரை செலவு , காப்பீட்டு பெறுமதியுடன் கூடிய இரண்டு சக்கர இலத்திரனியல் வாகனமொன்றை இறக்குமதி செய்வதற்காக அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் 2023.12.31 ஆம் திகதி வரை எமது நாட்டுக்கு அனுப்பப்பட்ட அந்நிய செலாவணிப் பெறுமதி 50 சதவீதம் வீதம் வரைக்கும் செலவு , காப்பீட்டு பெறுமதியுடன் கூடிய நான்கு சக்கர முழு அளவிலான இலத்திரனியல் வாகனமொன்றை இறக்குமதி செய்வதற்காக அனுமதி வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை – நெதர்லாந்துக்கிடையில் விமான சேவை ஒப்பந்தம்

இலங்கை மற்றும் நெதர்லாந்துக்கு இடையிலான இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கை மற்றும் நெதர்லாந்துக்கிடையில் இராஜதந்திரத் தொடர்புகள் 1951 ஆம் ஆண்டு தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், விமான சேவைகள் ஒப்பந்தத்தை மேற்கொள்வதன் மூலம் இரு நாடுகளுக்கிடையில் நேரடியான பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்குகள் விமானப் போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கு வசதிகள் உருவாகும்.

அதன் மூலம், இரு நாடுகளுக்கிடையில் சுற்றுலா, கல்வி, வணிகம், முதலீடுகள், விவசாயம் மற்றும் கலாச்சாரத் தொடர்புகள் மேலும் விருத்தியடையும்.

அதற்கமைய, இரு நாடுகளுக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்பட்டுள்ள விடயங்களுக்கமைய இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் மருந்து தட்டுப்பாட்டுக்கு உடனடி தீர்வு

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடுகளுக்கு துரித தீர்வினை வழங்குவதற்காக இந்திய கடன் திட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு , ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மருந்து தட்டுப்பாடு தொடர்பில் துரித கண்காணிப்புக்களை முன்னெடுப்பதற்காக அமைச்சுக்களின் செயலாளர்களை உள்ளடக்கிய பிரத்தியேக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு புதன்கிழமை (26) இடம்பெற்ற போது , நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் ,

இந்திய கடன் திட்டத்தின் கீழ் மருந்து தட்டுப்பாட்டுக்கு துரித தீர்வினை எட்டுமாறு சுகாதார அமைச்சருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் மருந்துகள் உள்ளிட்டவற்றை தடையின்றி மக்களுக்கு விநியோகிப்பதற்காக அரசாங்கம் தொடர்ந்தும் அக்கறையுடன் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

அதற்கமைய விநியோக முகாமைத்துவம் தொடர்பில் தட்டுப்பாடின்றி மருந்துகளை விநியோகிப்பதற்காக பிரதான அமைச்சுக்களின் செயலாளர்களை உள்ளிடக்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் , பிரதமரின் செயலாளர் ஆகியோர் உள்ளடங்களாக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. மருந்து கொள்வனவிற்காக கிடைக்கப் பெற்றுள்ள உதவிகளில் பெருமளவானவை கடனுதவிகளாகும்.

உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் என்பவற்றிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கடன்கள் தொடர்ச்சியாக மீள செலுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு கடன்களை மீள செலுத்துவதால் உதவிகளும் கிடைக்கப் பெறுகின்றன. இவ்வாறு கிடைக்கப் பெற்ற உதவிகளில் சில வீதி புனரமைப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றார்.

கனடா – ஒன்ராறியோ தேர்தலில் நான்கு தமிழர்கள் அமோக வெற்றி

ஒன்ராறியோ மாநகர, நகர, உள்ளூராட்சி, கல்விச்சபை உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதில் நான்கு தமிழர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் இரண்டு தமிழர்கள் இரண்டாவது தடவையாக மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர்.

ஸ்காபுறோ வடக்கு (Scarborough North) தொகுதியில் கல்வி சபை உறுப்பினர்பதவிக்கு மீண்டும் போட்டியிட்ட யாழினி ராஜகுலசிங்கம்(Yashini Rajakulasingham) அமோக வெற்றி பெற்றார்.

ஸ்காபுறோரூச் பார்க் (Scarborough-Rouge Park) தொகுதியில் கல்வி சபை உறுப்பினர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்ட அனு சிறீஸ்கந்தராஜா (Anu Sriskandaraja ) அமோக வெற்றி பெற்றார்.

ஸ்காபுறோ மத்தி (Scarborough Center) தொகுதியில் கல்வி சபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட நீதன் சாண் (Neethan Chan) அமோக வெற்றி பெற்றார்.

மார்கம் நகரில் வோட் – 7 (WARD 7 COUNCILLOR) கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட யுவனீற்ரா நாதன் (Yuvaneetra Nathan ) அவர்கள் அமோக வெற்றி பெற்றார்.

இதேவேளை, வெற்றிபெற்ற நான்கு தமிழர்களுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

வடக்கில் ஆதிக்கப் போட்டி

‘சீனாவின் பிரசன்னம் குறித்து இந்தியா விழிப்பு நிலையில் இருந்தாலும், சீனாவுடன் நெருங்கிய உறவாடும் இலங்கையுடன், அது முரண்பட விரும்பவில்லை’ இந்தியாவின் பாதுகாப்புக்கான எந்த அச்சுறுத்தலும், இலங்கைக்கும் அச்சுறுத்தலே என்று புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட கடந்த வாரம் ரைம்ஸ் ஒவ் இந்தியாவுக்கு வழங்கிய செவ்வியில் கூறியிருக்கிறார்.

அவரது அந்தக் கருத்து வெளியாகிய அதே நாள், இந்தியாவின் மற்றொரு நாளிதழான தி ஹிந்துவில், இலங்கையில் சீன இராணுவத்தின் பிரசன்னம் குறித்து கவலை கொள்வதாக, மாநில புலனாய்வுத் துறையின் அறிக்கையை அடிப்படையாக வைத்து ஒரு ஆய்வுச் செய்தி வெளியாகியிருந்தது. இலங்கையின் துறைமுகங்களை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கு வேறெந்த நாடும் பயன்படுத்த அனுமதிக்கப் போவதில்லை என்று, மிலிந்த மொரகொட கூறியிருந்தாலும் இந்தியாவுக்கு எதிராக இலங்கை மண்ணைப் பயன்படுத்துவதற்கு எந்த நாட்டையும் அனுமதிக்கப் போவதில்லை என்று கோட்டாபய ராஜபக்ஷவும், மஹிந்த ராஜபக்ஷவும், ஆட்சியில் இருந்த போது பலமுறை உத்தரவாதம் அளித்திருந்தாலும், இலங்கையில் அதிகரித்து வரும் சீனப் பிரசன்னம், இந்தியாவுக்கு கவலையளிப்பதாகவே உள்ளது.

இந்தியாவைக் கண்காணிப்பதற்கு இலங்கையை சீனா ஒரு தளமாகப் பயன்படுத்த தொடங்கியிருப்பது, புதுடில்லிக்கு முக்கியமானதொரு பிரச்சினையாக மாறியிருக்கிறது. இந்த விவகாரத்தை இந்தியா அவ்வளவு இலகுவாக எடுத்துக் கொள்ளவில்லை. அப்படி எடுத்துக் கொள்ளவும் முடியாது. ஏனென்றால், சீனா இப்போது இந்தியாவை தன் நேரடி மற்றும் மறைமுக பலத்தைப் பயன்படுத்தி சுற்றி வளைக்கத் தொடங்கியிருக்கிறது. சீனாவின் ‘யுவான் வாங் -5’ என்ற செய்மதி, மற்றும் ஏவுகணை வழித்தடக் கண்காணிப்புக் கப்பல், அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்துச் சென்ற பின்னர், இந்தியாவின் பாதுகாப்புக் கரிசனை இன்னும் அதிகரித்திருக்கிறது.வழக்கமாக, இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்புகள் தான், சீனாவின் பிரசன்னம் குறித்த கரிசனைகளை- எச்சரிக்கைகளை விடுப்பது வழக்கம். அதற்கு மாறாக, இப்போது இலங்கையில் குறிப்பாக வடக்கில் சீன இராணுவத்தின் பிரசன்னம் அதிகரித்திருப்பது குறித்து, எச்சரிக்கை விடுத்திருக்கிறது மாநில அரசின் புலனாய்வு அமைப்பு.

மாநில அரசின் புலனாய்வு அமைப்பு, மாவட்டங்களின் முக்கிய நகரங்கள் மற்றும் அளவிலான பொலிஸ் தலைமையகங்களுக்கு, விடுத்துள்ள எச்சரிக்கையில், சீன புலனாய்வாளர்களின் ஊடுருவல்கள் நிகழலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. இலங்கையின் அரசியல் கட்சி ஒன்றின் துணையுடன், சீன இராணுவப் புலனாய்வாளர்கள், தமிழகத்துக்குள் ஊடுருவியது பற்றிய செய்தியும், வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில், அணுமின் நிலையங்கள், விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் பிரிவு, விமான நிலையங்கள், துறைமுகங்கள், என ஏராளமான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருக்கின்றன. இந்த கேந்திரங்கள் இராணுவ ரீதியாகவோ, மூலோபாய ரீதியாகவோ, பாதுகாப்பு ரீதியாகவோ முக்கியத்துவமானவை.

இவ்வாறான இடங்களில் பாதுகாப்பில் மத்திய அரசும் அதன் புலனாய்வு நிறுவனங்களும் கவனமாக இருக்கின்ற போதும், மாநில புலனாய்வுப் பிரிவு விடுத்திருக்கின்ற எச்சரிக்கை, இந்திய அரசாங்கத்துக்கு சிக்கலை தோற்றுவித்திருக்கிறது. காரணம், சீனாவின் பிரசன்னம் குறித்து இந்தியா விழிப்பு நிலையில் இருந்தாலும், சீனாவுடன் நெருங்கிய உறவாடும் இலங்கையுடன், அது முரண்பட விரும்பவில்லை. அவ்வாறு முரண்படுவது இலங்கை அரசாங்கத்தை சீனாவை நோக்கி இன்னும் நெருங்கிச் செல்லும் நிலையை ஏற்படுத்தி விடும் என்ற அச்சம், அதற்கு உள்ளது. இவ்வாறான நிலையில் தான் மாநில புலனாய்வு அமைப்பின் எச்சரிக்கை வெளியாகியிருக்கிறது. இதற்குப் பின்னரும், புது டில்லி இந்த விவகாரத்தில் தற்காப்பு நிலையில் – மதி ல்மேல் பூனையாக இருக்க முடியாது.

அதேவேளை, வடக்கில் சீன இராணுவப் பிரசன்னம் குறித்த தமிழக புலனாய்வு அறிக்கை எந்தளவுக்கு உண்மையானது என்ற கேள்விகள் உள்ளன. ஏனென்றால் வெளிப்படையாக சீன இராணுவம் வடக்கில் இயங்கவில்லை. அதற்கான ஆதாரங்களும் வெளியாகவில்லை. ஆனால், இராணுவ பாணி சீருடையணிந்த சீனர்கள் பலர், வடக்கில் புதிதாக முளைத்த கடல் அட்டைப் பண்ணைகளில் காணப்படும் படங்கள் வெளியாகியிருந்தன. அவை சீனப் பணியாளர்கள் என்று கூறப்பட்டாலும், சீன மக்கள் விடுதலை இராணுவம் அல்லது சீன புலனாய்வு அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடம் இருந்து, அவர்களை வேறுபடுத்தி அறிவதற்கான எந்த வழிகளும் இல்லை.

தமிழக அரசின் புலனாய்வுப் பிரிவு, கடலட்டைப் பண்ணைகளில் சீன புலனாய்வுப் பிரிவினர் அதிநவீன கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்துவதாகவும், கடலட்டை பிடிப்பதை அவதானிப்பது என்ற பெயரில் சீன தூதுவரும் அதிகாரிகளும் அடிக்கடி இந்திய கடல் எல்லை வரை வந்து கண்காணித்துச் செல்வதாகவும் எச்சரித்திருக்கிறது. வடக்கில், சீனா இராணுவ ரீதியாக கால் வைக்க முடியாதென்பது சீனாவுக்கு தெரியும். ஏனென்றால் இந்தியா அதனை தீவிரமாக எதிர்க்கும். ஏற்கனவே, மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்த போது, திருகோணமலை சீனக்குடாவில், விமானங்களைப் பழுதுபார்க்கும் மையத்தை அமைக்க சீனா முற்பட்டது. அதற்கு அரசாங்கமும் அனுமதி அளித்த பின்னர் புதுடில்லி தலையிட்டு அதனை தடுத்து நிறுத்தியது. எனவே, பொருளாதார அல்லது முதலீட்டுத் திட்டங்களின் மூலமாகத் தான் வடக்கில் கால் வைக்கலாம் என்பதை சீனா உணர்ந்திருக்கிறது.

அவ்வாறாகத் தான், நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு ஆகிய இடங்களில், கலப்பு மின் திட்டங்களை அமைக்க சீனா முற்பட்டது. அதனையும் இந்தியா தடுத்து நிறுத்தி விட்டது. இப்போது கடலட்டைப் பண்ணைகளின் ஊடாக சீனா வடக்கில் தீவிரமாக கால் வைக்கத் தொடங்கியிருக்கிறது. வடக்கில் கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்படுவதால் உள்ளூர் மீனவர்கள் பாதிக்கப்படுவதாக முறையிட்டுள்ளனர். அவர்களின் எதிர்ப்பைக் கண்டுகொள்ளாமலேயே, புதிய கடலட்டைப் பண்ணைகளை அமைக்கும் முயற்சிகள் தொடர்கின்றன. கடலட்டைப் பண்ணைகளில் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம் கொண்டுள்ளதாகவும் அவற்றுடன் பேச்சு நடத்தியதாகவும், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியிருந்தார். இது, சீனாவுக்கு எதிரான உணர்வுகளை தணிக்கும் கருத்தாக இருக்கலாம். அதாவது சமநிலையை பேணுகின்ற முயற்சி.

அதேவேளை, இந்தியாவில் கடலட்டை பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு சட்டவிரோதமாகப் பிடிக்கப்படும் கடலட்டைகள் கடல் வழியாக கடத்தப்பட்டு, இலங்கையின் ஊடாகவே சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் கடலட்டை பிடிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள நிறுவனங்கள், இலங்கையில் கடலட்டை பண்ணைகளில் முதலீடு செய்ய முன்வருமா- அதற்கு சட்ட அங்கீகாரம் உள்ளதா என்பன கேள்விக்குரிய விடயங்கள். எவ்வாறாயினும், சீன கடலட்டைப் பண்ணைகளை இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்புபடுத்தும், முயற்சிகளை மத்திய அரசு எவ்வாறு எடுத்துக்கொள்ளப் போகிறது என்பது கவனத்துக்குரிய விடயமாக உள்ளது.

ஏனென்றால், இலங்கைக்கு இனி கடன்களை வழங்குவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டை இந்திய அரசாங்கம் எடுத்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டதும், முதலீடுகளின் மூலம் இலங்கைக்கு உதவவுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. அத்தகைய முதலீடுகள் கடலட்டைப் பண்ணை வடிவில் வந்தாலும் ஆச்சரியமில்லை. ஏனென்றால், மூன்று தீவுகளில் கலப்பு மின் திட்டங்களை அமைக்க சீனா முன்வந்த போது இந்தியா அதனை தட்டிப் பறித்தது.

அதுபோல, சீனாவுடன் போட்டி போட்டு, கடலட்டைப் பண்ணைகளில் இந்தியாவும் முதலிடக் கூடும். சீனப் பிரசன்னத்தை குறைப்பதை நோக்கமாக கொண்டு அவ்வாறான முடிவுகள் எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது. அவ்வாறான நிலைப்பாட்டை இந்தியா எடுக்குமானால், அது, வடக்கிலுள்ள மீனவர்களுக்குத் தான் மேலும் பேரிடியாக அமையும். ஏற்கனவே இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டுள்ள அவர்கள், மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த நிலைக்குத் தான் கொண்டு செல்லும்.

 

– ஹரிகரன்

Posted in Uncategorized | Tagged

இலங்கையில் எந்தவொரு நகர்வு நடந்தாலும் அதன் விளைவு இந்தியாவைப் பாதிக்கும் – மேஜர் மதன் குமார்

இலங்கையில் சீனாவின் நடவடிக்கைகள் இந்திய தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்துள்ள தமிழக மாநில புலனாய்வு பிரிவு கரையோர பகுதிகளில் கண்காணிப்பை அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது என்று இந்திய பத்திரிகையான இந்து ஆங்கில பதிப்பு செய்தி வெளியிட்டிருந்தது. இச் செய்தி பல விவாதங்களை தோற்றுவித்துள்ள நிலையில், இந்தியாவின் முன்னாள் புலனாய்வுத் துறை அதிகாரி மேஜர் மதன் குமார் வழங்கிய சிறப்பு செவ்வி

 

கேள்வி :-

இலங்கையின் கடல் பகுதியூடாக சீன நாட்டவர்கள் தமிழகத்திற்குள் ஊடுருவுவதாக இந்திய புலனாய்வுத்துறை தெரிவித்துள்ள கருத்தின் பின்னனி என்ன?

இந்திய புலனாய்வுத்துறை என்பதை விட, இவ்வாறான ஒரு தகவலை இந்திய நாளேடான ஹிந்து வெளியிட்டிருக்கின்றது. அதன் பிறகு இந்த தகவல் குறித்து சில ஊடகங்களில் விவாதம் நடந்தது. அடிப்படை என்னவென்றால் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் குறிப்பாக ஈழத் தமிழர்கள் வாழக்கூடிய வடக்கு பகுதியிலிருந்து இந்தியா மிக மிக அருகாமையில் இருக்கிறது.

உதாரணத்திற்கு ஒரு குறிப்பிட்ட ஒரு வார காலம் முன்பு இலங்கையிலிருந்து இந்தியாவரை, அதாவது தமிழகம் வரை நீந்தியே ஒரு சிறுவன் வந்து சேர முடிந்தது. அப்படிப்பட்ட மிகவும் அருகில் இருக்கக்கூடிய இடத்தில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இன்று சீனாவின் ஆதிக்கம் முன்பு இருந்ததைவிட கொஞ்சம் அதிகமாக இருப்பது என்பது கவலைக்குரிய விடயம் இந்தியாவிற்கு.

கடல் பாசி வளர்ப்பு அதற்கு உண்டான வர்த்தகம் என்ற போர்வையில் அவர்கள் இருந்தாலும் அங்கு இருக்கக்கூடிய தமிழர்களும் அதை இரசிக்கவில்லை. அதற்குண்டான வரவேற்பையும் கொடுக்கவில்லை. ஏனென்றால் சீனாவின் வெளிவுறவுக்கொள்கை குறிப்பாக கடல் வளத்தை அவர்களுடைய அண்டைய நாடுகளான பிலிப்பைன்ஸ், தாய்லாந்து போன்ற நாடுகளில் எந்தளவிற்கு சீனா சூறையாடிருக்கிது என்பதை இலங்கையில் இருக்கக்கூடிய மீனவ சமூகத்திற்கும் இந்தியாவில் இருக்கக்கூடிய மீனவ சமூகத்திற்கும் நன்றாகவே தெரியும்.

அப்பொழுது அங்கு இருக்கும் பூர்வ குடி மக்களான இலங்கையின் ஈழத்தமிழர்கள் 2009 ற்கு பிறகு அங்கு நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை, இராணுவ கட்டுப்பாட்டிற்குள் வந்த பல இடங்களில் இருந்து சுதந்திரமாக தகவல்கள் இன்னும் வெளியுலகிற்கு தெரிவதற்கு வாய்ப்புக்கள் 2009 லிருந்து இன்றுவரை மிகவும் குறைவாக இருந்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அது ஒரு இராணுவ பகுதியாக இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் போது பத்திரிகை சுதந்திரமோ ஒரு ஜனநாயக நாட்டில் இருக்க வேண்டிய அடிப்படை சுதந்திரம் ஓரளவிற்கு மட்டுப்படுத்தப்படும் என்பது நிதர்சனமான உண்மை. இப்பொழுது சீனர்கள் அங்கு இருப்பது, சீனர்களை சீனாவிலிருந்து வேலைக்கு வருபவராக இருந்தாலும் சரி வர்த்தகம் செய்பவராக இருந்தாலும் சரி சீனாவின் அடிப்படை கோட்பாட்டை புரிந்து கொள்ள வேண்டும் .

சீனாவின் கம்னியூசியம் சித்தாந்தம் என்ன சொல்கிறதென்றால் அவர்களுடைய மக்கள் அங்கு இருக்கக்கூடிய நிறுவனங்கள் அனைத்துமே கம்னியூசிய சித்தாந்தத்திற்கும் கம்னியூசிய அரசாங்கத்திற்கும் தங்களுடைய முழு ஒத்துழைப்பையும் முழு அங்கீகாரத்தையும் கொடுக்க வேண்டும் என்பது அவர்களுடைய ஒரு அடிப்படை சட்டம்.

இதை யாரும் மீற முடியாது. அதன் பொருள் என்னவென்றால் சீன நிறுவனங்கள், அங்கிருக்கக்கூடிய மக்கள்,சீன குடியுரிமை பெற்றவர்கள் உலகத்தில் எங்கு சென்று வேலை செய்தாலும் ஒரு நிறுவனத்தை நடத்தினாலும் சீன அரசிற்கு அதாவது சீன அரசு என்பதை விட சீன கம்னிஸ் பாட்டியிற்கு (“லோயல்“ என்று சொல்லப்படுகின்ற அவர்களுக்கு) ஒரு அடிப்படை கட்டுப்பாடு இருக்கிறது. அந்த கட்டுப்பாடு என்னவென்றால், அவர்கள் சீன நிறுவனங்களை வேறெங்கும் நடத்தும் பொழுது சீன கம்னியூசிய அரசாங்கத்திற்கு தேவையான சில காரியங்களை அவர்கள் மறுக்க இயலாது. அந்த காரியங்கள் என்னவென்றால் உளவு பார்ப்பது, கம்னியூசிய சித்தாந்தத்தைக் கொண்டு போய் சேர்ப்பது, கம்னியூசியத்தை வளர்ப்பது போன்றவற்றை செயல்படுத்த வேண்டும். எப்படி ஒரு உத்தரவு வந்தாலும் அந்த நிறுவனத்தை இயக்க கூடியவர்கள், வெளிநாட்டில் இருக்கக்கூடியவர்கள் அதை மறுக்க முடியாது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் சீன இராணுவம் உள்ளே வரவில்லை. சீருடை அணிந்த சீன இராணுவம் உள்ளே வரவில்லை. இவர்கள் வெறும் வர்த்தகர்கள், நிறுவனங்கள் நடத்த வந்தவர்கள் என்று பொருள் கொள்ள முடியாது . அது தவறாக சென்று முடிந்துவிடும் . இந்தியாவின் கவலை அதுதான்.

இலங்கையில் யாழ்ப்பாணத்தில் உள்ள என்னுடைய நண்பர்கள் சிலரிடம் பேசினேன் அவர்கள் சொன்னார்கள், இல்லை சீன இராணுவ உடையில் நாங்கள் யாரையும் பார்க்கவில்லை என்று. அங்கு இருக்கக்கூடிய சீனாவின் பிரஜைகள், சீனாவின் குடியுரிமை பெற்றவர்கள். அவர்கள் இராணுவத்திற்கு ஆதரவாகவும் அவர்களுடைய உளவுத்துறைக்கு ஆதரவாகவும் செயல்பட வேண்டிய நிலை கட்டாயம் இருக்கின்றது.

அவர்களுக்கு விருப்பம், விருப்பமில்லை என்பதை கூற முடியாது. அது இந்தியாவிற்கு நேரடியாக ஒரு பாதுகாப்பற்ற அச்சுறுத்தலை கொடுப்பது என்பது தான் இந்த ஒரு குறிப்பிட்ட செய்தியில் உள்ள சாராம்சம்.

கேள்வி:-

இந்த செய்தி உண்மையெனில் இலங்கை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நாடா?

இந்தியாவின் பாதுகாப்பிற்கு இலங்கை பூகோள ரீதியில், நான் முன்னரே கூறியது போல், இந்தியாவிலிருந்து இருக்கக்கூடிய மொத்தம் 4000km தூரம் உள்ள நீளமுள்ள கடல் பகுதியில் மிகவும் அருகில் இருக்கக்கூடிய நாடுகள் இலங்கை இரண்டாவது மாலைத்தீவு. அப்பொழுது இலங்கையில் எந்தவொரு நகர்வு நடந்தாலும் அதன் விளைவு இந்தியாவிற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ நிச்சயமாக இருக்கும். உதாரணத்திற்கு இலங்கை கஞ்சா உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்குவது என்ற நடவடிக்கையை நோக்கி செல்கின்றது.

அப்பொழுது இந்தியாவிற்கு மிக அருகில் இருக்கக்கூடிய இலங்கையில் இப்படி ஒரு நிகழ்வு நடந்தால் அங்கிருந்து கள்ளக்கடத்தல் மூலமாக கஞ்சா இந்தியாவிற்கு வரும் என்று நிச்சயமாக அறுதியிட்டு சொல்ல முடியும். அப்பொழுது இந்தியா தன் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது. இலங்கையில் எந்தவொரு நிகழ்வு நடந்தாலும் அது நிச்சயமாக இந்தியாவின் பாதுகாப்பிற்கு நேரடியாக ஒரு பாதிப்பை நல்லதாகவோ கெட்டதாகவோ எவ்வாறிருந்தாலும் ஏற்படுத்தும் என்பது நிதர்சனமான உண்மை.

கேள்வி :-

இந்த நிலையில் இந்தியா எவ்வாறு தனது பாதுகாப்பை உறுதிப்படுத் முடியும்?

இந்தியா இலங்கை இரு நாடுகளுக்கு இடையிலான நேரடி ஒப்பந்தங்கள் சில உள்ளது. அதாவது கடல் பாதுகாப்பில் போதைப்பொருள், ஆள்கடத்தல் மற்றும் பொருளாதாரம் தொடர்பான நடவடிக்கைகள்,இரு நாடுகளும் ஒருத்தருக்கு ஒருத்தர் இருக்கக்கூடிய தீவிரவாத தாக்குதல்கள் அது தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்ள வேண்டும் என்பது ஒரு நியதி. அதற்குண்டான ஒப்பந்தம் இருக்கின்றது . இரண்டாவது முக்கியமான விடயம் என்னவென்றால் BIMSTEC என்ற அமைப்பின் கூற்றின் படி இந்தியா ஒரு பெரிய நாடாக இருக்கக்கூடிய காரணத்தினால் இந்தியா தனது அண்டை நாடுகளான இலங்கை , நேபால் , பூட்டான் , பங்களாதேஷ், பாகிஸ்தானை தவிர்த்து மாலைத்தீவு வரைக்கும் அதன் பிறகு இந்தியாவிலிருந்து சற்று தொலைவில் இருக்கக்கூடிய தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு இந்தியா தன்னுடைய கடல் மார்க்கத்தில் இருக்கக்கூடிய வலிமை அதாவது கப்பல் படையினுடைய வலிமை, அவர்களுடைய தடுப்பு நடவடிக்கைகள் உளவமைப்பு, உளவு சாதனங்கள் இதை வந்து BIMSTEC அமைப்பில் இருக்கக்கூடிய உறுப்பு நாடுகளுக்கும் இந்தியா தகவல்களை பரிமாறும். அந்த நாட்டையும் சேர்த்து பாதுகாக்கும் என்ற ஒரு கருத்தும், இரண்டாவதாக அந்த நாடுகளும் மிக முக்கியமாக இலங்கை அவர்களிடம் இருக்கக்கூடிய தகவல்களை பரிமாற வேண்டும் என்பது நியதி.

இந்த இரண்டு ஒப்பந்தங்களின் அடிப்படையில் இந்த நாடுகள் BIMSTEC கூட்டமைப்பு என்பது ஆண்டுக்கு ஒருமுறை கூடும். இந்த வருடம் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவர்களின் தலைமையில் நடந்தது . இரண்டாவது இரண்டு நாடுகளு‌க்கும் பரஸ்பர தூதரகங்கள் உள்ளன. இந்த இரண்டு நாடுகளும் தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருக்கின்றன. அந்த பேச்சுவார்த்தையில் இந்த விடயங்கள் குறிப்பாக பேசி இருப்பார்கள்.

ஈழத்தமிழர்கள் வாழ்வாதார பிரச்சினை , இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இந்திய மீனவர்கள் இலங்கை மீனவர்களுக்கிடையிலான சச்சரவு மூன்றுமே ஒரு மிக மிக முக்கயமாக தூதரக அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கிடையே நடக்கக்கூடிய பேச்சுவார்த்தைகள் மிக முக்கிய அம்சமாக நிச்சயமாக வைக்கப்பட்டிருக்கும் .

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு சீனாவின் மௌனத்தால் தாமதம்?

இலங்கை அரசாங்கத்தின் தவறான கொள்கைகள் மற்றும் ஊழல் மோசடிகள் காரணமாக ஒட்டுமொத்த நாடும் மீட்டெழமுடியாத வகையில் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கின்றது.

குறிப்பாக, இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு வெறுமையாகிவிட்ட நிலையில் கடந்த ஓகஸ்ட் மாதமாகின்றபோது 70.2 சதவீதத்தினைத் தொட்டு விட்டது.

இதனால் உள்நாட்டில், அத்தியாவசியப்பொருட்கள் உள்ளிட்ட அனைத்துவகைப் பொருட்களின் விலைகளும் உச்சத்தினைத் தொட்டுள்ளன. இதனால் நாட்டில் 70 சதவீதமானவர்கள் உணவு நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர்.

அதிகமானவர்கள் இருவேளை உணவையே உட்கொள்வதாகவும், கர்ப்பிணித்தாய்மார்கள், பெண்கள், சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்துக்கள் நிறைந்திருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கையின் பாரிய நெருக்கடிகளை தவிர்க்கும் முகமாகவும், பொதுமக்களின் பட்டினி வாழ்க்கையை தடுக்கும் முகமாகவம் இந்தியா உடனடியாக அத்தியாவசிய உதவிகளை வழங்கியதோடு 4 பில்லியன் டொலர்கள் கடன்களை எந்த நிபந்தனைகளும் இன்றி வழங்கியுள்ளது.

இதனால், இலங்கை ஓரளவுக்கு நிம்மதிப்பெருமூச்சுவிடக்கூடியதாக இருக்கின்றது. அதுமட்டுமன்றி இந்தியா, சர்வதேச நாணயநிதியத்துடனான இலங்கையின் பேச்சவார்த்தைகளின்போது பிரசன்னமாகி இலங்கைக்கான சாட்சியாளராகவும் செயற்பட்டு வருகின்றது.

இதேவேளை, இம்முறை நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் இலங்கையின் பொருளாதார பிரச்சினை தொடர்பில் இம்முறை கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பொருளாதாரக் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டதோடு அதற்கான நடவடிக்கைகள் பற்றியும் ஐ.நா.உயர்ஸ்தானிகர் பரிந்துரைகளை வழங்கியுள்ளார்.

இதன்மூலம் இலங்கை கடன் பொறிக்குள் சிக்குண்ட நாடாகவும், கடனிலிருந்து வெளிவர முடியாத நாடாகவும், சர்வதேச ஆதரவு தேவை என்ற விடயமும் வெளிப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில், இலங்கைக்கு கடன் கொடுத்த நாடுகளில் பிரதான நாடாக சீனா விளங்குகின்றது. இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைக்கும் கோரிக்கைக்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

குறிப்பாக, அமெரிக்கா, உள்ளிட்ட மேற்குலக நாடுகளும், இந்தியாவும், ஜப்பானும் திறந்த மனதுடன் கடன்மறுசீரமைப்புச் செயற்பாட்டிற்கு உதவுவதற்கு தயாராக உள்ளதாக பகிரங்கமாகவே அறிவித்துள்ளன.

ஆனால் சீனா தனது பகிரங்க அறிவிப்பைச் செய்தவற்கு தயாராக இல்லை. இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதாக இருந்தால் முதலில் கடன் மறுசீரமைப்பைச் செய்ய வேண்டியுள்ளது.

ஏனென்றால், ஏற்கனவே இலங்கை கடன்களை மீளச்செலுத்தமுடியாது என்று அறிவித்துவிட்டது. இதனால் சர்வதேச நாடுகள் தொடர்ந்தும் கடன்களையோ உதவிகளையோ செய்வதற்கு தயாராக இல்லை.

ஆகவே, இலங்கை கடன் மறுசீரமைப்பைச் செய்வது மிகவும் அத்தியாவசியமானதொரு செயற்பாடாக அமைகின்றது. கடன் மறுசீரமைப்பு என்பது கடன் கொடுக்கப்பட வேண்டிய காலம், அதற்கான வட்டி, திருப்பி செலுத்த வேண்டிய தொகைகள் ஆகியவற்றில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்பதாகும்.

இதுவொரு சாத்தியமான செயற்பாடாகும். இந்த சாத்தியமான செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு அமெரிக்கா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகள் பச்சைக்கொடியை காண்பித்துள்ளதோடு ஆரம்பகட்டப் பேச்சுக்களையும் மேற்கொண்டுள்ளன.

ஆனால், சீனாவைப் பொறுத்தவரையில் இந்த விடயத்தில் வெளிப்படைத் தன்மையை பின்பற்றுவதற்கு தயாரில்லாத நிலையில் தான் உள்ளது. ஏனென்றால், சீனா இலங்கையை நெருக்கடியான நிலைமைகளை உணர்ந்து அதனைப்பயன்படுத்தி தனது ‘கடன்பொறி’ இராஜதந்திரத்தினை நடைமுறைப்படுத்தவே முயல்கின்றது.

இலங்கையின் நெருங்கிய நண்பன் என்று கூறிக்கொள்ளும் சீனா, தான் வழங்கிய கடன்களை எவ்வாறு மீளப்பெறலாம் என்பது பற்றியே அதிகளவில் கரிசனை கொண்டுள்ளது. அதுமட்டுமன்றி, அந்தக் கடன்களை மீளப்பெறுவதற்காக புதிய வட்டி வீதத்தில் மேலதிகமாக புதிய கடன்களை வழங்குவதற்கும் திட்டமிட்டுள்ளது.

இதனால் தான் இலங்கை பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி ஏறத்தாழ ஒன்பது மாதங்கள் நிறைவுக்கு வந்துவிட்ட நிலையில் இன்னமும் சீனா எந்தவிதமான நிதி நன்கொடைகளை வழங்காது அமைதியாக இருந்து வருகின்றது.

மாறாக, சீனாவின் உரத்தினை நிராகரித்தமைக்கான சீனா இலங்கையின் நெருக்கடிகளையும் நன்கு அறிந்திருந்தும் 6.9 மில்லியன்களை இழப்பீடாக பெற்றுக் கொண்டிருக்கின்றது. இது எரிகிற வீட்டில் பிடுகியது இலாபம் என்ற மனோநிலையாகும்.

இவ்வாறான நிலையில் தற்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவின் முடிவினையே சர்வதேச தரப்புக்கள் எதிர்பார்த்துள்ளன.

குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, யப்பான் உள்ளிட்ட நாடுகளும், உலகவங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணயநிதியம், பாரீஸ்கிளப் உள்ளிட்டவையும் சீனாவின் அறிவிப்பையே எதிர்பார்த்துள்ளன.

ஏனென்றால், இந்தத் தரப்புக்கள் தாம் இலங்கையின் நெருக்கடிக்காக வழங்கும் உதவி நிதியை சீனா தனது கடன்களுக்காக பெற்றுக்கொண்டுவிடும் என்ற அச்சத்தினைக் கொண்டிருக்கின்றன. இதுவொரு இயல்பான அச்சம் தான்.

சீனா, தான் இலங்கைக்கு வழங்கிய கடன்கள் தொடர்பில் மௌனமாக இருக்கும் வரையில் சர்வதேச நாடுகளும், நிதி நிறுவனங்களும் இவ்விதமான அச்சத்தினை கொண்டிருப்பதை தவிர்க்க முடியாது.

இவ்வாறான நிலையில்தான் தற்போது கடன்மறுசீரமைப்பு தொடர்பிலான பேச்சக்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சர் என்ற வகையிலும், நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேரசிங்கவும் முன்னெடுத்த வண்ணமுள்ளனர்.

இருப்பினும், இலங்கையின் கடன்மறுசீரமைப்புச் செயற்பாடும், பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீளுவதாற்கான சந்தர்ப்பங்களும் சீனாவின் கைகளுக்குள் சென்றுவிட்டது.

சீனா இதனைப்பயன்படுத்தி இலங்கையை தனது நலன்களுக்காக கையாளப்பார்க்கின்றது என்ற குற்றச்சாட்டுக்களை ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர்.

சீனாவின் தீர்க்கமான முடிவு அறிவிக்கப்படாமையால் தான் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்த உச்சிமாநாட்டிற்கு இணைத்தலைமை வகிப்பது குறித்து இலங்கையுடன் எந்த இணக்கப்பாட்டையும் எட்டாத நிலையில் ஜப்பான் உள்ளது.

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு விவகாரங்களில் நேரடி தொடர்பை கொண்டுள்ள ஜப்பான் அதிகாரியொருவர் இதனை ரொய்ட்டர் செய்தி சேவைக்கு அண்மையில் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized | Tagged