Category: பிரதான செய்திகள்
எரிக்சொல்ஹெய்மை தனது சர்வதேச காலநிலை ஆலோசகராக ஜனாதிபதி ரணில் நியமனம்
நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்மை தனது சர்வதேச காலநிலை ஆலோசகராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இன்று காலை இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பு மிகவும் சிறப்பு மிக்கது என எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
மேலும் பசுமைப் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் இலங்கையின் காலநிலை தொடர்பான தலைமைத்துவத்திற்கான தொலைநோக்கு பார்வை, ஜனாதிபதிக்கு உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.“ இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சிறந்த சந்திப்பை முன்னெடுத்தோம். பசுமைப் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் இலங்கையின் காலநிலைத் தலைமைத்துவத்திற்கான சிறந்த தொலைநோக்குடையவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. அவரது சர்வதேச காலநிலை ஆலோசகராக நியமிக்கப்பட்டதில் பெருமிதம் கொள்கிறேன் எரிக் சொல்ஹெய்ம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் என குறிப்பிட்டுள்ளார்.(
முட்டாள்தனமான அரசாங்கம் நாட்டை அழித்து வருகின்றது
இந்த முட்டாள்தனமான அரசாங்கம் நாட்டை அழித்து வருவதாகவும், தேர்தலொன்று இல்லாமல் முன்னேற்றமொன்று இல்லை எனவும், அரசாங்கம் தேர்தலை நடத்தாவிட்டால் வீதியில் இறங்கி அதற்காக போராடுவோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அன்று வரிசையில் நின்று மக்கள் செத்து மடியும் போது அழுவதை மறந்த அரசாங்க தரப்பு,உரமின்றி விவசாயிகள் பெருமூச்சு விடும் போது அழுவதை மறந்த அரசாங்க தரப்பு, எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து உயிர் இழந்தது போது அழுவதை மறந்த அரசாங்க தரப்பு, இன்று புலம்பிய வன்னம் கதறி அழுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் உடுதும்பர தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் இன்று (10) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி சனத் பண்டார அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் பெரும்திரளான ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
அமைதியான போராட்டங்களைக் கண்டும் அரசாங்கம் அச்சமடைந்துள்ளதாகவும், காலி முகத்திடல் வளாகத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நேற்றைய தினம் அடக்குமுறை மேற்கொள்ளப்பட்டதும் இதன் பிரகாரமே எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தாயும் மகனும் கைகோர்த்து நடத்தும் அமைதியான ஆர்ப்பாட்டத்தை கூட அரசாங்கத்தால் பொறுத்துக்கொள்ள முடியாது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,மகனிடமிருந்து தாயை பறித்துச் சென்று ஜீப்பில் ஏற்றிச் செல்லும் காட்சிகளைக் கூட பார்க்கக்கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அமைதியான போராட்டங்களில் ஈடுபடும், ஜனநாயக சுதந்திரத்தை அனுபவிப்பவர்களுக்கு எதிராக செயல்படும் அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இழப்பீடு வழங்க வேண்டிவரும் எனவும் அவர் தெரிவித்தார்.
அரச பயங்கரவாதத்துக்கும் அரச வன்முறைக்கும் நீண்ட கால ஆயுள் இல்லை என தெரிவித்த எதிர்கட்சித் தலைவர்,இதற்கு வரலாற்றில் பல படிப்பினைகள் உள்ளன எனவும் தெரிவித்தார்.
இந்த அரசாங்கம் தேர்தலுக்கு முற்றாக அஞ்சுவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,தேர்தலை பிற்போடவே முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.
உடனடியாக தேர்தலொன்றை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுவதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், முடிந்தால் ஜனாதிபதி தேர்தலையும் நடத்துங்கள் எனவும் சவால் விடுத்தார்.
தேர்தலை ஒத்திவைக்க பல்வேறு சூழ்ச்சிகளை பயன்படுத்துவதை விடுத்து, முடிந்தால் மொட்டு விரும்பும் எந்தத்தேர்தலையும் நடத்துங்கள் என்றும் சவால் விடுத்தார்.
IMF அதிகாரிகளினால் அமைச்சரவைக்கு தௌிவூட்டல்
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதி வசதி தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (10) பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக பங்குபற்றிய சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இதனை அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் டொலர் நிதி வசதியை வழங்க பூர்வாங்க ஒப்பந்தத்தை எட்டியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நிதி பங்களிப்பு தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவித்ததுடன் அமைச்சர்களும் தமது பிரச்சினைகளை முன்வைக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
இதேவேளை, நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினை மற்றும் அதற்கு வழங்கக்கூடிய தீர்வுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கும் வேலைத்திட்டம் அடுத்த வாரம் அமுல்படுத்தப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு தொகை அதிகரிப்பு
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவுகளுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீடு தொகையை இரண்டு இலட்சம் ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதென அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்றார்.
ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையில் கார்பன் வளர்ச்சி தொடர்பான கூட்டு கடன் பொறிமுறை உடன்படிக்கை
ஜப்பானும் இலங்கையும் குறைந்த கார்பன் வளர்ச்சி பங்காளித்துவத்திற்கான கூட்டு கடன் பொறிமுறை (JCM) தொடர்பான ஒத்துழைப்பு உடன்படிக்கையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கைச்சாத்திட்டன.
இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இதனையடுத்து, ஜப்பானிய தூதுவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
புவி வெப்பமடைவதற்கு காரணமான பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைப்பதற்காக உலகளாவிய ரீதியில் ‘கியோத்தோ’ அமைப்பு நிறுவப்பட்டது. இந்த அமைப்பின் இரண்டாவது பதவிக் காலத்தின் போது (2013-2020) ஜப்பான் அந்த அமைப்பிலிருந்து விலகிக் கொண்டது.
அதனைத்தொடர்ந்து உலகளாவிய பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் பங்களிப்புச் செலுத்துவதற்காக 2013 ஆம் ஆண்டளவில் காபன் அளவைக் குறைக்கும் இருதரப்பு கூட்டுப் பொறிமுறையொன்றை ஜப்பான் அறிமுகம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் ருவன் விஜேவர்தன உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
தேர்தலை தாமதப்படுத்த அரசாங்கம் முயற்சி! பெபரல் அமைப்பு
தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக பெபரல் என்னும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
தேர்தல் தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழுக்களை நியமித்தல் மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துதல் போன்றவற்றின் ஊடாக அரசாங்கம் தேர்தலை காலம் தாழ்த்த முயற்சிப்பதாக தெரிவித்துள்ளது.
பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தேர்தல் முறையில் திருத்தம் செய்வதாகவும், புதிய தேர்தல் முறையை அறிமுகம் செய்வதாகவும் கூறி அரசாங்கங்கள் தொடர்ச்சியாக தேர்தல்களை காலம் தாழ்த்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2001ம் ஆண்டு முதல் இதுவரையில் இவ்வாறான பல குழுக்கள் நிறுவப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பல மில்லியன் ரூபா இதற்காக செலவிடப்பட்ட போதிலும் எவ்வித பயனும் கிடைக்கப்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.சர்வஜன வாக்கெடுப்பு நடத்த நிதி வசதி இருந்தால் ஏன் தேர்தல் நடத்தப்பட முடியாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எவ்வாறெனினும், தேர்தலில் செலவு செய்யும் நிதி குறித்த உத்தேச சட்டம் உள்ளிட்ட பல்வேறு புதிய சட்டப் பரிந்துரைகளை வரவேற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு தவறான நிர்வாகமே காரணம்-சர்வதேச நாணய நிதியத் தலைவர்
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு தவறான நிர்வாகமே பிரதான காரணம் என சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி கிறிஸ்டினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு கடனுதவி வழங்குவதற்காக இலங்கையுடன் இணைந்து செயற்படும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், நாட்டில் மோசடிகள் மற்றும் ஊழல்கள் இடம்பெற்றுள்ளதை ஒப்புக்கொண்டுள்ளதோடு, மீண்டும் மோசடிகள் மற்றும் ஊழல்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களை எந்த அடிப்படையில் கலைப்பதற்கு பொலிஸார் தீர்மானித்தனர் – மனித உரிமை ஆணைக்குழு கேள்வி
காலிமுகத்திடலில் நேற்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை எந்த அடிப்படையில் கலைப்பதற்கு பொலிஸார் தீர்மானித்தனர் என்ற விபரத்தை 24 மணிநேரத்தில் பொலிஸார் சமர்ப்பிக்கவேண்டும் என இலங்கைமனித உரிமை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை காலிமுகத்திடலில் நேற்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கலைத்தமை குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.மேலும் நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் போது கைதுசெய்யப்பட்ட நால்வர் இன்று விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வரவேற்பதாக சம்பந்தன் தெரிவிப்பு
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு பொறுப்புக்கூறலை செய்வதற்கான குறிப்பிட்ட காலக்கெடுவை வழங்க வேண்டும் என இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.இலங்கை அரசாங்கம் ஐ.நா.விலும் சர்வதேச மன்றங்களிலும் பொறுப்புக்கூறலை செய்வதாகவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் அரசியல் தீர்வை காண்பதாகவும் வாக்குறுதிகளை அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போது வரையில் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்த நிலை தொடர்ந்தும் நீடிப்பதற்கு சர்வதேச சமூகம் அனுமதியளிக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை நிலைநாட்டுவதற்காக, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் சர்வதேச நாடுகளும் காலக்கெடுவை விதிக்க வேண்டும் என தமிழ் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.