இலங்கை இராணுவ அதிகாரிகளிற்கு கனடா தடைவிதிக்கலாம் என தகவல்

கனடா இலங்கையை சேர்ந்த மூன்று இராணுவ அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை விதிக்கவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் இலங்கை இராணுவ அதிகாரிகள் உடனடியாக இந்த தடைகளை எதிர்கொள்ளவுள்ளனர்.

கனடாவே இது தொடர்பான முதல்நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளது,கனடா மூன்று இராணுவஅதிகாரிகளிற்கு எதிராக தடைவிதிக்கலாம் இதன் பின்னர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட பல நாடுகள் தடை நடவடிக்கைளை முன்னெடுக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Posted in Uncategorized

உலகளாவிய ரீதியில் ‘பட்டினி வலயங்கள்’ பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கம்

இலங்கையில் சுமார் 6.2 மில்லியனுக்கும் அதிகமானோர் மிதமான உணவுப்பாதுகாப்பின்மைக்கு முகங்கொடுத்திருப்பதுடன் 66,000 பேர் தீவிர உணவுப்பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பும் உலக உணவுத்திட்டமும் இணைந்து வெளியிட்டுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில், உலகளாவிய ரீதியில் ‘பட்டினி வலயங்கள்’ என உலக உணவுத்திட்டத்தினால் பெயரிடப்பட்டுள்ள 48 நாடுகளில் இலங்கையும் உள்ளடங்கியிருக்கின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையொன்றின் ஊடாக இவ்விடயம் வெளிப்படுத்தப்பட்டிருப்பதுடன் கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து உலகளாவிய ரீதியில் உணவுப்பாதுகாப்பின்மை நிலை உயர்வடைந்துவருவதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

‘உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு முன்னதாகவே தொடர்ச்சியான காலநிலை மாற்றம் மற்றும் அனர்த்தங்கள், பிராந்திய ரீதியான முரண்பாடுகள், கொரோனா வைரஸ் பரவல் என்பன உணவு உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகியவற்றில் தாக்கங்களைத் தோற்றுவித்துதுடன் உணவுப்பொருட்களின் விலையேற்றத்திற்கும் காரணமாக அமைந்தன.

இந்நிலைவரம் உக்ரைன் – ரஷ்ய போரை அடுத்து மேலும் தீவிரமடைந்தது. இது குறிப்பாக உணவு மற்றும் உரம் ஆகியவற்றின் விலைகள் பன்மடங்காக அதிகரிப்பதற்கு வழிவகுத்ததுடன் இறக்குமதிகளில் தங்கியிருக்கும் நாடுகள்மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது’ என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்விளைவாகத் தோற்றம்பெற்ற உணவுப்பாதுகாப்பின்மையினால் உலகளாவிய ரீதியில் சுமார் 345 மில்லியன் மக்கள் மிகுந்த அச்சுறுத்தல் நிலைக்கு முகங்கொடுத்திருப்பதாகவும், தினமும் சுமார் 828 மில்லியன் மக்கள் பசியுடன் உறங்கச்செல்வதாகவும் உலக உணவுத்திட்டம் கவலை வெளியிட்டுள்ளது.

உணவுப்பாதுகாப்பின்மை என்பது உலகளாவிய ரீதியில் ஓர் முக்கிய பிரச்சினையாக மாறியுள்ள நிலையில், அதன்விளைவாக 48 நாடுகள் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்திய காவல்துறையினரின் மனித உரிமை மீறல் – மன்னிப்புச்சபை கண்டனம்

முஸ்லீம் மக்களுக்கு எதிராக இந்திய காவல்துறையினரும் அரசியல்வாதிகளும் மேற்கொண்டுவரும் மனித உரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக மன்னிப்புச்சபை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

மேற்கு இந்திய மாநிலமான குஜராத்தில் கோவில் திருவிழா மீது கல்லெறிந்தனர் என காரணம் கூறி முஸ்லீம் இளைஞர்களை பொதுமக்களின் உடையில் வந்த இந்திய காவல்துறையினர் மரத்தில் கட்டிவைத்து தடிகளால் தாக்கியுள்ளனர்.

அதனை பெருமளவான மக்கள் பார்வையிட்டதுடன், தமது மகிழ்ச்சியை அவர்கள் தெரிவித்ததும் மிகவும் வருந்ததக்க விடயம் என மன்னிப்புச்சபை தொவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பான காணொகளிகள் சமூகவலையத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் குஜராத் மாநிலமே வன்முறை மிக்க மாநிலமாகும்.

2002 ஆம் ஆண்டு அங்கு முஸ்லீம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறையில் 2000 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருந்தனர். குஜராத்தில் கடந்த 25 வருடங்களாக பாரதிய ஜனதா கட்சியே ஆட்சியில் உள்ளது. இந்த கட்சி அங்குள்ள மக்களிடம் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையை வளர்த்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த வன்முறையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

”ஜனாதிபதி ரணிலுக்கான ஆதரவு தொடரும்”: மகிந்த

நாட்டை முன்கொண்டு செல்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு தொடர்ந்தும் இருக்கும் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

“ஒன்றாக எழுவோம் – களுத்துறையிலிருந்து ஆரம்பிப்போம்” எனும் தொனிப்பொருளில் களுத்துறையில் நேற்று இடம்பெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது செல்கின்ற பாதை சரியானது எனவும் இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவினால் இந்த மக்கள் சந்திப்பு ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது.

போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இந்த மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த மக்கள் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

Posted in Uncategorized

கொழும்பில் காவல்துறை பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம் – மனோ கணேசன்

வெள்ளவத்தை, பம்பலபிட்டி உட்பட கொழும்பு மாநகர மற்றும் மாவட்ட காவல் நிலையங்களினால், வீடு வீடாக வழங்கப்படுவதாக கூறப்படும் காவல்துறைப் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,“காவல்துறை பதிவு பற்றி சட்ட ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மாஅதிபர் விக்கிரமரத்ன ஆகியோருக்கு அறிவித்துள்ளேன். அவர்களும் இதை ஏற்றுக்கொண்டு வடிவங்கள் வழங்குவதை உடன் நிறுத்துவதாக எனக்கு உறுதி அளித்துள்ளனர். ஜனாதிபதியின் பிரதம செயலாளர் சமன் ஏகநாயக இதுபற்றி பொறுப்பில் உள்ள சகலருக்கும் அறிவிப்பதாக எனக்கு உறுதி அளித்துள்ளார்.

“காவல்துறையினருக்கு அல்ல, எந்த ஒரு அரசு நிறுவனத்துக்கும், தனிப்பட்ட வீட்டு தகவல்களை கொடுக்க நாம் விரும்ப மாட்டோம். கொடுத்தால் அது எங்கெங்கு போகும் என எனக்கு தெரியும். மேலும் இது ஒரு காவல்துறை ராஜ்யம் அல்ல. காவல்துறை சட்டத்தில் பதிவு செய்ய இடம் இருக்கிறது. அது எனக்கு தெரியும். ஆனால், அதை விசேட அவசர காலங்களிலேயே பயன்படுத்த வேண்டும். எங்காவது சட்டத்தை மீறுபவர்கள் இருப்பார்கள் எனில் அவர்களை அடையாளம் கண்டு கைது செய்யுங்கள். விசாரியுங்கள். அதில் எனக்கு மாறுபட்ட கருத்தது இல்லை. ஆனால், பொதுவாக வீடு வீடாக போக வேண்டாம். இன்று போர் நடைபெறுகின்ற, சட்ட விரோத ஆயுத அமைப்புகள் செயற்படுகின்ற அவசர காலங்கள் அல்ல ” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

”தோட்டத் தொழிலாளர்களுக்கு 2000 ரூபா சம்பளம் வேண்டும்”

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக 2,000 ரூபாய் வழங்கப்பட வேண்டுமென்ற யோசனையை தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் கூட்டணி முன்வைத்துள்ளது.

மலையக சிவில் மற்றும் தொழிற்சங்க, வெகுசன அமைப்புகள் இணைந்து ஹட்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடத்திய கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

அத்துடன், மலையக மக்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கையும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இதில் மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் செயற்பாட்டாளர் எஸ்.டி.கணேசலிங்கம், சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பின் செயற்பாட்டாளர் இராஜேந்திரன், தோட்ட தொழிலாளர் மத்திய நிலையத்தின் அமைப்பாளர் டீ.மாக்ஸ் பிரபாகரர், ப்ரொடெக்ட் சங்கத்தின் உப தலைவி கருப்பையா மைதிலி, தோட்ட தொழிலாளர் மத்திய நிலையத்தின் செயலாளர் வசந்தகுமார அபேகோன் ஆகிய பிரதிநிதிகள் கலந்துகொண்டு, கருத்துகளை முன்வைத்தனர்.

திருத்தச் சட்டங்களெல்லாம் ஒரு சிலரது, சில கட்சிகளது விருப்பங்களுக்காகவே அன்றி மக்களுக்காகக் கொண்டு வரப்படுவதில்லை – ஜனா

பாராளுமன்றத்தில் வருகின்ற திருத்தச் சட்டங்களெல்லாம் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக அல்லாமல் ஒரு சிலரது, ஒரு சில கட்சிகளது விரும்பங்களை நிறைவேற்றுவதற்காகவே கொண்டு வரப்படுகின்றன. அந்த அடிப்படையிலேயே 22வது திருத்தச் சட்டத்தின் விவாதமுமும் பிற்போடப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் நேற்றைய உரை மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

22வது திருத்தச் சட்டம் தொடர்பாக விவாதிக்க வேண்டிய இந்த நேரத்திலே ஜனாதிபதி அவர்களின் உரை சம்மந்தமான ஒத்திவைப்புப் பிரேரணையிலே பேசுகின்றோம். 22வது திருத்தச் சட்டம் ஒரு சிலரின் விருப்பதைப் பூர்த்தி செய்யாதமையினாலே அது இன்று சபைக்குக் கொண்டுவரப்படவில்லை எனக் கருதுகின்றேன்.

இதேபோல் தான் மாறி மாறி இந்த நாட்டை ஆண்ட அரசாங்கங்கள் தங்களது தேவைக்காக அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வருகின்றார்கள். இந்த அரசியலமைப்பில் 44 வருட காலத்திலே 2வது திருத்தச் சட்டம் முன்னாள் மட்டக்களபப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராஜதுரை அவர்களை அரச தரப்பிற்கு எடுப்பதற்காக அவரது உறுப்புரிமையைப் பறிப்பதைத் தடுப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட சட்டமாக இருக்கின்றது. 3வது திருத்தம் ஒரு ஜனாதிபதி ஆறு வருடங்கள் ஆட்சியில் இருக்கலாம் என்பதை மாற்றி அவரது ஆட்சிக் காலத்திலே நான்கு வருடத்தினுள் தேர்தலை நடத்தலாம் என்று கொண்டு வரப்பட்டது. 6வது திருத்தச் சட்டம் அப்போதைய தமிழர் விடுதலைக கூட்ணியின் பாராளுமன்ற உறுப்;பினர்களாக வந்தவர்களை இந்தச் சபையில் இருந்து துரத்துவதற்காகக் கொண்டு வரப்பட்டது. 13வது திருத்தச் சட்டம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலமாகப் பிறப்பிக்கப்பட்ட குழந்தை, 18வது திருத்தச் சட்டம் மஹிந்த ராஜபக்ச அவர்களின் அதிகாரத்தைப் பலப்படுத்தக் கொண்டு வரப்பட்டது. 19வது திருத்தச் சட்டம் ராஜபக்ச குடும்பத்தை மையப்படுத்தி அவர்களை அரசியலில் இருந்து ஒதுக்குவதற்காகக் கொண்டு வரப்பட்டது. 20வது திருத்தச் சட்ட மீண்டும் கோட்;டபாய ராஜபக்சவின் அதிகார வெறிக்கு உரமூட்டிய சட்டம்.

ஆக மொதத்தில் இங்கு வருகின்ற திருத்தச் சட்டங்களெல்லாம் ஒரு சிலரது, ஒரு சில கட்சிகளது விரும்பங்களை நிறைவேற்றுவதற்காகத் தான் கொண்டு வரப்படுகின்றன. அதேபோல் தான் 22வது திருத்தச் சட்டமும் இந்தச் சபையிலே விவாதிக்கப்பட வேண்டிய நிலையிலே ஒரு சிலருக்காக இந்தச் சட்டம் இங்கே கொண்டு வரப்படாமல் இருக்கின்றது.

இந்தத் திருத்தச் சட்டங்களிலே பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் ஒன்றுதான் இலங்கையில் மக்களின் பிரச்சனைகளை ஓரளவேனும் தீர்ப்பததற்காகக் கொண்டு வரப்பட்ட சட்டமாகும். நாங்கள் அதை முற்றுமுழுதாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அவ்வாறு இனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கான ஆரம்பப் புள்ளியாகக் கொண்டுவரப்பட்ட சட்டத்தைக் கூட இந்த நாட்டின் அரசுகள் அரசிலமைப்பினை மீறி கையாளுகின்றன. 13வது திருத்தச் சட்டத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்கள் கூட இன்றுவரை முழுமையாக வழங்கப்படாமல் மாறி மாறி ஆண்டுகொண்டிருக்கும் ஆட்சியாளர்;களால் அரசியலமைப்பு இன்றுவரை மீறப்படுகின்றது.

ஜனாதிபதி அவர்களின் நேற்றைய உரை நாட்டின் யதார்த்தத்தைப் பிரதிபலித்தது. இன மத மொழி பேதமின்றி கட்சி அரசியல் பேதமின்றி நாடாக ஒன்;றிணைய வேண்டும் என்ற தொனி அவரது உரையில் தெரிந்தது. அதனை முழுமையாக நாங்கள் ஏற்கின்றோம். ஆனால் எமது ஒத்துழைப்பு உங்கள் காரியங்களை நிறைவேற்றுவதற்காக மாத்திரமா? என்கின்ற ஐயத்துடனான கேள்வி எங்களுக்குள் எழுகின்றது. நாட்டின் தலைமை வகித்தவர்களில் நல்லவராகக் காட்டக் கூடியவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்பதில் எனக்கு ஐயமில்லை. அவர் ஜனாதிபதியாக வந்தமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், அவர் ஜனாதிபதியாக வந்தது அரசியலமைப்பின் அடிப்படையிலேயே என்பதில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை.

ஆனால், இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த காலத் தேர்தல் வரலாற்றை உணர வேண்டும். கடந்த நல்லாட்சி என்ற அரசின் காலத்தில் நடந்த அரசியல் கோமாளித் தனத்தை உணர வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலங்களில் உங்கள் பக்கமே எம் தமிழர்கள் இருந்தார்கள். 2010, 2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலங்களில் தற்போதைய ஜனாதிபதி இருந்த பக்கமே எமது தமிழ் மக்கள் இருந்தார்கள். அது நாட்டைப் பிளவுபடுத்த அல்ல சுபீட்சப்படுத்தவே.

நல்லாட்சிக் காலத்தில் இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்த செயலுக்காக அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் ஒத்துழைத்து உங்களை மீண்டும் பதவியில் அமர்த்தியதில் கூடுதல் பங்காற்றியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே. இந்த வரலாற்றை நீங்கள் என்றும் மறக்கக் கூடாது. உங்களது கடந்த கால வரலாற்றின் துயரங்கள் இனிமேலும் தொடரக் கூடாது. இந்த நாட்டில் புதிய அத்தியாயத்தைப் படைக்கக் கூடிய சுபீட்சத்தை ஏற்படுத்தக் கூடிய ஏன் உங்களது நீண்ட கனவு கூட இன்று நிறைவேறியுள்ளது. எனவே நிதானமாகச் செயற்படுங்கள்.

எமது நாட்டின் வரலாற்றில் போற்றப்பட வேண்டியவராக இருக்க வேண்டுமென்றால் இந்த நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைக்கு முக்கியமான காரணமாகவுள்ள புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்குத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய ஒரு தீர்வைத் தாருங்கள்.

இன்று ஐநா மனித உரிமைகள் பேரவையில் வெளிவிவகாhர அமைச்சர் அலிசப்றி அவர்கள் வீPரவசனங்கள் பேசிக் கொண்டிருக்கின்றார். இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட பிரேரணையில் இலங்கைக்கு ஆதரவாக ஏழு நாடகளே ஆதரவு தெரிவித்திருக்கின்றன. அவை எந்த நாடுகள் சீனா, பாக்கிஸ்தான் போன்றவை. இந்த நாடுகளில் ஜனநாயகம் இருக்கின்றதா என்பதைப் பாருங்கள். இலங்கைக்கு எதிராகவுள்ள நாடுகளைப் பாருங்கள் அமெரிக்கா பிரித்தானியா போன்ற ஜனநாயகம் நிரம்பிய நாடுகள். அந்த நாடுகளிலே பல்மொழி பேசுகின்ற பல இன மக்கள் வாழுகின்றார்கள். அந்த மக்களுக்கான அதிகாhரங்கள் பரவலாக்கபட்டுக் கொண்டிருக்கின்றது. அந்த நாடுகள் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முன்னேறிக் கொண்டிருக்கின்றார்கள்.

அதேபோன்று இந்த நாடும் முன்னேற வேண்டுமானால் உங்களிடையே நல்லெண்ணம் உருவாக வேண்டும். பிரேரணைக்கு நடுநிலை வகித்த இந்தியாவைப் பின்பற்றிய நாடுகள் என்ன சொல்லுகின்றன. 13வது திருத்தச் சட்டத்தை முழு அதிகாரத்துடன் நிறைவேற்றுங்கள், மாகாணசபைத் தேர்தலை நடாத்துங்கள் என்றே கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமல் மக்கள் சபையொன்று இல்லாமல் இருக்கின்றது. மாகாண ரீதியில் இருக்கின்ற தொல்பொருள் திணைக்கம் மதவாதம், இனவாதம் கொண்டதாகவே இருக்கின்றது. கடந்த கோட்டபாய ஆட்சியிலே கிழக்கு மாகாணத்திலே உருவாக்கப்பட்ட தொல்பொருள் செயலணி என்ன செய்து கொண்டிருக்கின்றது. இந்தத் தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாக எமது இந்து மதப் பாரம்பரிய புராதனச் சின்னங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், இங்கே முன்னாள் அமைச்சர்கள் நல்லிணக்கத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழர்களுக்கு இரத்தம் கொடுத்ததாக முன்னாள் அமைச்சர் கடந்த பாராளுமன்றத்திலே பேசியிருந்தார். ஆனால், அவர் எத்தனை தமிழர்களின் இரத்தங்களை வெளியில் எடுத்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். தொல்பொருளுக்குப் பொறுப்பான அமைச்சர் கூறுகின்றார் எதுவும் நடக்காது என்று. ஆனால், தொல்பொருள் திணைக்களத்திற்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாயவினால் உருவாக்கப்பட்ட வியத்மக அமைப்பிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. இந்த சரத் வீரசேகர போன்றவர்கள் வியத்மக அமைப்பில் இருந்து கொண்டு சம்மந்தப்படட அமைச்சருக்கே தெரியாமல் தொல்பொருள் திணைக்களத்துடன் தொடர்புகளை வைத்தக் கொண்டு இவ்வாறான வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

கடந்த காலங்களிலே எமது உயிர்நீத்த உறவுகளை நாங்கள் நினைவு கூருகின்ற போது போராட்ட வரலாற்றிலே இருந்த விமல் வீரவன்ச அவர்கள் புலிப்பயங்கரவாதிகளை நினைவு கூருகின்றார்கள். அவர்களைக் கைது செய்யச் சொல்லுகின்றார். ஆனால், அவரது தலைவர் ரோகண விஜயவீர உட்பட அவர்களது தோழர்கள் இறந்தமையை அவர்கள் இன்றும் நிpனைவுகூர்ந்து வருகின்றார்கள். ஆனால், எமது விடுதலைக்காகப் போராடியவர்களை நினைவு கூருபவர்களை கைது செய்யச் சொல்லுகின்றார்கள்.

இன்று பாhளுமன்றத்திலே கேள்வி பதில் விடயத்திலே ரோகண விஜயவீர அவர்கள் கடந்த 1989.12.12ம் திகதி பிடிபட்டதாகவும், 13ம் திகதி கொல்லப்பட்டதாகவும் அதற்கு யாரும் விவாசரணை கேட்கவில்லை என்று தோழர் விமல் விரவன்ச தெரிவித்தார். அவரிடம் நான் கேட்கின்றேன் அப்போது ரோகண வியஜயவீரவுடன் இருந்த நீங்கள் தான் அதற்கு நீதி கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

முல்லைத்தீவு சம்பவத்திற்கு வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் கண்டனம்!

வீதியில் இறங்கி போராடிய முல்லைத்தீவு மீனவர்கள் தாக்கப்பட்டமைக்கு, வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

வடமராட்சியில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் காத்தலிங்கம் அண்ணாமலை இந்த கண்டனத்தை பதிவு செய்தார்.

எதிர்வரும் 9ஆம் திகதி இந்த தாக்குதலுக்கு நல்ல பதில் தருவதாக அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்தவர்கள் உறுதியளித்ததாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படாத நிலையில், வடக்கு மாகாணம் தழுவிய போராட்டம் முன்னெடுக்கப்படுமென எச்சரித்தார்.

இதேவேளை மண்ணெண்ணெய் விநியோகம் வாரத்திற்கு ஒரு தடவை மாத்திரம் 29 லிட்டர் வழங்கப்படுவதாகவும் அது ஒரு நாளுக்கு மாத்திரமே போதுமானதாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை வெற்றிக்கொள்ள ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்- பிரித்தானியா

இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கான கூட்டு மற்றும் புதுப்பிக்கப்பட்ட திறனின் மீது தற்போது கவனம் திரும்ப வேண்டும் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.

எனவே இந்த முயற்சிக்கு ஆதரவளிக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் உறுப்பினர்களை அழைப்பதாக பிரித்தானிய அமைச்சர் தாரிக் அஹமட் பிரபு தெரிவித்துள்ளார்.

அனைவரும் இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை வெற்றிக்கொள்ள ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இலங்கைக்கு எதிராக நேற்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பின்னர் இந்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

Posted in Uncategorized

”இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்”

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார்.

‘ஆயுத மோதலின் போதும் அதற்கு பின்னரும் இலங்கையில் தமிழர் உரிமைகளுக்கான சர்வதேச சட்ட பாதுகாப்பில் தோல்வி’ என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற உப நிகழ்வில் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி, தமிழர் உரிமைக்கான குழுமத்தின் பிரதிநிதி பெரிடன்ஸ்  பெர்டினான்டஸ்  மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் இந்த  உப நிகழ்வில்  கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கை பொறுப்புக்கூறலை இழுத்தடித்துள்ளதால் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என இதன்போது தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி  குறிப்பிட்டுள்ளார்.

பல வருடங்கள் கடந்து விட்ட போதிலும் இலங்கை அரசு கலப்பு நீதிமன்ற பொறிமுறை தொடர்பில் கரிசனை செலுத்தவில்லை எனவும் தமிழர் பிரதேசங்களை சிங்களமயமாக்குவதையும் இராணுவமயமாக்கல் மற்றும் காணி சுவீக்கரிப்பையும் முன்னெடுத்து வருவதாக சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில்  தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்ற போதிலும் தமிழர்களுக்கு ஏதும் மாறவில்லை  எனவும், மாறாக சர்வதேச சமூகத்துடன் தனது உறவுகளை கட்டியெழுப்ப இலங்கை அரசிற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் இதன்போது தமிழர் உரிமைக்கான குழுமத்தின் பிரதிநிதி பெரிடன்ஸ்  பெர்டினான்டஸ் கூறியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல தசாப்தங்களாக  தமக்கான நீதியைக் கோரி நிற்பதாக வட கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் செயலாளர் லீலாவதி ஆனந்தராஜா தெரிவித்தார்.

Posted in Uncategorized