புலம்பெயர் இலங்கையர்களுக்கு லண்டனில் இருந்து ஜனாதிபதி விடுக்கும் அழைப்பு!

தற்போதுள்ள நெருக்கடிக்களை வெற்றிகொண்டு, வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று பிரித்தானிய வாழ் இலங்கையர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், புலம்பெயர் அலுவலகப் பணிகள் உள்ளிட்ட இலங்கையில் உள்ள புதிய முதலீட்டு வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

வடக்கில் காணப்படும் காணிப்பிரச்சினை, காணாமற்போனவர்கள் தொடர்பான பிரச்சினை ஆகியவற்றுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் அதிகாரப் பகிர்வின் சில அடிப்படைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பிரித்தானியாவிற்கு சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பிரித்தானிய வாழ் புலம்பெயர் இலங்கையர்களுக்கும் இடையில் நேற்று (19) பிற்பகல் சந்திப்பு ஒன்று நடைபெற்றது.

பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில் பிரித்தானிய வாழ் இலங்கை வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள், தொழில் வல்லுநர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

புதிய அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து இதன்போது விளக்கமளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கையில் உள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகளில் இணைந்து கொள்ளுமாறு பிரித்தானிய வாழ் இலங்கையர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

பிரித்தானியாவின் புதிய மன்னரின் தலைமையில் பொதுநலவாய நாடு என்ற வகையில், எதிர்கால சவால்களை இலங்கை வெற்றிகொள்ளும் என்றும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.

இங்கு மேலும் குறிப்பிட்ட ஜனாதிபதி,

எதிர்காலத்தில் நாம் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து பொதுநலவாய செயலாளர் நாயகத்துடன் கலந்துரையாடவுள்ளோம். பொதுநலவாய அமைப்பு வலுவடைந்து முன்னேறிச் செல்ல வேண்டும். அதேபோன்று இங்கிலாந்திற்கு உள்ள பிரச்சனைகளை அவர்கள் வெற்றிகரமாக தீர்த்துக் கொள்வார்கள். இங்கிலாந்து எங்களுடன் நீண்டகால நட்பு கொண்டுள்ளது. எமது நாடு ஐக்கிய இராச்சியத்தின் ஆட்சியின் கீழ் இருந்தபோதும், சுதந்திர நாடாக நாம் இங்கிலாந்துடன் சிறந்த உறவுகளை பேணி வருகிறோம். எங்கள் உறவு நீண்ட காலமாக தொடர்கிறது. இங்கிலாந்துடன் உடன்படும் சந்தர்ப்பங்களைப் போன்றே, உடன்படாத சந்தர்ப்பங்களும் இருக்கின்றன.

ஆட்சியில் இருப்பது தொழிற்கட்சி அல்லது கன்சர்வேடிவ் கட்சி அல்லது கூட்டணியென எதுவாக இருந்தாலும், நாங்கள் இங்கிலாந்துடனான எமது உறவை தொடர்ந்து பேணவே விரும்புகிறோம். எமது நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்துள்ளது என்பது இரகசியமல்ல. இந்தப் பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. IMF உடனான அதிகாரிகள் மட்ட ஒப்பந்தத்தில் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ளோம். நாம் இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுடனும் தனியார் கடன் வழங்குநர்களுடனும் பேச்சு நடத்த வேண்டும். நாம் பெற்றுள்ள கடன்களையும் அடைக்க வேண்டும். கடனை அடைப்பதற்கு இன்றிலிருந்து 25 ஆண்டுகள் வரை செல்லும். அதாவது 2048 இல், இலங்கை சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் இலங்கை சுபீட்சமான நாடாக உருவாக முடியும்.

அச்சமயத்தில் நம்மில் பலர் உயிருடன் இருக்கமாட்டோம். ஆனால் அதற்கு பங்களித்தவர்களாக இருப்போம். அரசியல் செயற்பாடுகளில் இளைய தலைமுறையினரின் கருத்துக்களை எப்படி உள்வாங்குவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்கு ஜனநாயகம் வேண்டும் என்றால் நிலையான ஆட்சி, ஒழுக்கம் மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பன இருக்க வேண்டும். வீடுகளை எரிப்பதா அல்லது அலுவலகங்களைக் கைப்பற்றுவதா என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாது. அது ஜனநாயகம் அல்ல. ஜனநாயகம் என்பது சட்டத்தின் ஆட்சியின் கீழ் செயல்படுவதாகும்.

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சில தரப்பினர் வன்முறையில் ஈடுபட்டனர். நாம் அவர்களின் கருத்துக்களை கண்காணிப்புக் குழுக்களில் சேர்த்துள்ளோம். பாராளுமன்றத்தில் 19 கண்காணிப்புக் குழுக்கள் உள்ளன. அவற்றில் ஐந்து இளைஞர் பிரதிநிதிகளை நியமிக்க இருக்கிறோம். வேறு எந்த நாடும் அவ்வாறு செய்தது கிடையாது. கண்காணிப்புக் குழுவால் அனுப்பப்படும் எந்த அறிக்கைக்களுடனும் மேலதிக ஆவணமாக இளைஞர்களின் கருத்துக்களை சமர்ப்பிக்கலாம். எதிர்காலத்தை கருத்திற் கொண்டு அவர்களின் தேவைகளின் பிரகாரம் நாட்டை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். அவர்களை இணைத்துக் கொள்ளக் கூடிய பல்வேறு வழிகளைக் கண்டறிய வேண்டும். கரு ஜயசூரிய மற்றும் விக்டர் ஐவன் ஆகியோர் கிராம சேவகர் மட்டத்தில் மக்கள் சபைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கில் காணப்படும் காணிப்பிரச்சினை, காணாமற்போனவர்கள் தொடர்பான பிரச்சினை, அவர்களுக்கு உரிய நட்டஈடு வழங்குவது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை என்பவற்றுக்கு தீர்வு வழங்க வேண்டும். அதிகாரப் பகிர்வின் சில அடிப்படைகளைக் கவனிக்க வேண்டும். 2018ஆம் ஆண்டு அரசியலமைப்பை திருத்த நாம் நடவடிக்கை எடுத்தபோது வடக்கு கிழக்குக்கு வெளியில் உள்ள ஏழு முதலமைச்சர்களும் எதிர்க்கட்சித் தலைவரும் யோசனைகளை முன்வைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. வடக்கு, கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களும், முதலமைச்சர்களும் அதற்கு உடன்பட்டுள்ளதால் எமக்கு அதனை தொடர முடியும். அதனை நிறைவேற்ற முடியும் என்றும் நம்புகிறேன்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து வளமான தேசமாக எமது நாட்டை மாற்ற வேண்டும். இங்கே வாழ்வதால் நீங்கள் வெற்றி அடைந்திருப்பீர்கள். இங்கு வாழும் சுமார் 500,000 இலங்கையர்கள், தங்களை முதல் அல்லது இரண்டாம் தலைமுறை இலங்கையர்களாக அடையாளப்படுத்துகின்றனர். வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள், புலம்பெயர் மக்களாக அழைக்கப்படுகின்றனர். புலம்பெயர் அலுவலகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான பணி முன்னெடுக்கப்படுகிறது. வெளிவிவகார அமைச்சு அதைச் செயல்படுத்தி வருகிறது. அது ஜனாதிபதியின் அலுவலகத்தின் கீழ் இருக்கும். சில காலங்களின் பின்னர் அது வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டுவரப்படும். ஆனால் இந்த அலுவலகம் வெற்றிபெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நாம் அனைவரும் இதில் கைகோர்க்க வேண்டும். வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் முதலீடு செய்ய முடியும். உங்களில் சிலருக்கு தெற்கு அல்லது கிழக்கில் தொடர்புகள் இருக்கலாம். அவர்களுக்கு உதவியளிக்க விரும்பலாம். அதில் எந்த பிரச்சினையும் இல்லை. உங்களால் முடிந்த விதத்தில் இலங்கைக்கு உதவுங்கள்’’ என்று ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்தார்.

ஐக்கிய இராச்சியத்திற்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதியின் ஆலோசகரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான ருவன் விஜேவர்தன, முதற் பெண்மணி சிரேஷ்ட பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க, இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஊடகவியலாளர்கள் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயம்

இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டன என ஊடகவியலாளர்கள் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது.குறிப்பாக வாழும் உரிமை கருத்துச் சுதந்திரம் மற்றும் பயனுள்ள தீர்வுக்கான உரிமை ஆகியவற்றை மீறியுள்ளதாக குற்றப்பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுதந்திர சிந்தனையுள்ள ஊடகவியலாளர்கள் அந்தக் காலத்திலும் இன்றும் எதிர்கொள்ளும் ஒரு பெரிய பிரச்சினையை இது காட்டுவதக்கவும் இலங்கையின் மிகவும் பிரபலமான மற்றும் வெளிப்படையாகப் பேசும் ஊடகவியலாளர் ஒருவர் மீதான துணிச்சலான தாக்குதலுக்கு லசந்தவின் படுகொலை எடுத்துக்காட்டு என கூறியுள்ளது.

விசாரணையின் இரண்டு நாட்களில், 2004-2010 க்கு இடையில் 27 ஊடகவியலாளர்கள் மற்றும் 17 ஊடக பணியாளர்கள் சட்டத்திற்கு புறம்பாக கொல்லப்பட்டது தொடர்பான சாட்சியங்களும் ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டன, அவர்களில் குறைந்தது 35 பேர் தமிழர்கள்.கொல்லப்பட்ட ஊடகவியலாளரின் சர்வதேச மனித உரிமைகள் பாரதூரமான மீறலுக்கு இலங்கை பொறுப்பேற்க வேண்டும் என கூறி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.(

Posted in Uncategorized

வடக்கு கிழக்கில் தமிழர் நில ஆக்கிரமிப்பு நின்றபாடில்லை – பா. உ. ஜனா 

நாட்டின் நலிவுற்ற பொருளாதாரத்தை மீட்டெடுக்க முதலீடுகளை மேற்கொள்ள புலம்பெயர் தமிழர்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்ற இந்த நிலையிலும் வடக்கு கிழக்கில் மீண்டும் மீண்டும் தொல்பொருள் திணைக்கம் என்ற போர்வையில் தமிழரின் பூர்வீக நிலங்;களையும், புராதனச் சின்னங்கள் இருக்கும் இடங்களையும் ஆக்கிரமிக்கும் செயற்பாடு தொடர்கிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற தேசிய சபையை அமைப்பதற்கான பிரேரணை தொடர்பான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உண்;மையில் இந்த தேசியசபை என்ற பெயரளவிலான பாராளுமன்றக் குழு சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றத்திற்கு மேலே அமையவிருப்பதாகவே நாங்கள் அறிகின்றோம். இந்த நாட்டிலே பல ஆணைக்குழுக்கள் பல சபைகள் அனைத்தும் அமைத்து இன்று தேசியசபை என்பது இலங்கையின் குறுகிய நடுத்தர மற்றும் நீண்டகாலத் தேசியக் கொள்கைகளை வகுப்பதற்கான வழிகாட்டுதல் தொடர்பாக பாராளுமன்றத்தின் பொதுவான முன்னுரிமைகளைத் தீர்மானிப்பதற்கும் இன்னும் பல விடயங்களை உள்ளடக்கியதுமாக அமைக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது.

ஆனால் தேசிய அரசாங்கம் அமைப்பது, தேசிய வேலைத்திட்டம் செயற்படுத்துவது என்பன சம்மந்தமான புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இந்த நாட்டிலே தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் கலந்தாலோசனைகள் பல நடத்தி அது நிறைவேறாத காரணத்தினால் இன்று தேசியசபை அமைப்பதற்குப் பிரதமர் முடிவெடுத்திருக்கின்றார்.

தேசிய அரசாங்கம், தேசியசபை போன்றவைகளை நாங்கள் எதிர்ப்பவர்கள் அல்ல. உண்மையிலேயே இந்த நாட்டின் கடந்த கால அரசியல் நிகழ்வுகளைப் பார்க்கும் போது தேசியசபையோ தேசிய அரசாங்கமோ அல்லது இந்த நாட்டின் ஒட்டுமொத்த அரசியற் கட்சிகளும் சேர்ந்து எமது இனப்பிரச்சனை தொடர்பில் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்களது எதிர்பார்ப்பு.

கடந்த காலங்களிலே இந்த நாட்டின் தேசிய இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக ஒரு கட்சி ஆயத்தமாகும் போது மற்றைய கட்சி அதை எதிர்ப்பதுதான் வரலாறாக இருக்கின்றது. உண்மையிலேயே இதயசுத்தியுடன் தேசிய அரசாங்கமொன்று அமைந்திருக்குமானால் அனைத்துக் கட்சிகளும் இணைந்து எமது இனப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தர அரசியற் தீர்வைக் கண்டிருக்கலாம்.

இன்று இந்த நாடு பொருளாதார ரீதியாக நலிவுற்று இந்தளவிற்குப் பாதிக்கப்பட்டு இருப்பதற்கு முதற் காரணம் இலங்கையின் இனப்பிரச்சனை என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் இந்தப் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியற் கட்சிகளோ, இலங்கையிலுள்ள அரசியற் கட்சிகளோ அல்லது இந்த நாட்டின் ஆட்சியை மாற்;றிய அரகல போராட்டத்தில் பங்குபற்றியவர்களோ இந்த நாட்டின் தேசிய இனப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். இனப்பிரச்சனையால் தான் இந்தளவுக்கு பொருளாதாரம் வீழ்ச்சி கண்டிருக்கின்றது என்பதை உணர்ந்ததாகத் தெரியவில்லை.

எங்களது இனத்தை ஒடுக்குவதற்காக மாறி மாறி ஆண்ட அரசுகள் போர்த் தளபாடங்களுக்காக கூடுதலான பில்லியன் கணக்கான பணத்தைச் செலவழித்தமையே பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது. இன்று ஐநா சபையிலே ஒவ்வொரு முறையும் மாறி மாறி பிரேரணைகள் வருகின்றன. ஆனால் ஐநா மனித உரிமைகள் ஆணையகத்தின் 51வது சபையிலே இலங்கையில் பொருளாதாரக் குற்றங்களும் நடைபெற்றிருப்பதாகப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது. இந்தப் பொருளாதார நெருக்கடி தொடர்பான குற்றங்களுக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து அதற்கான தண்டனை வழங்கவேண்டிய ஒரு நிலை ஏற்பட்டிருக்கின்றது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைக்குப் பிற்பாடு புலம்பெயர் நாடுகளில் இருந்து தமிழ் மக்கள் டொலர்களைக் கொண்டு வந்து இங்கு முதலிட வேண்டும் என இந்த நாட்டின் அரசாங்கங்களும் ஏனைய கட்சிகளும் வேண்டுகோள் விடுக்கின்றீர்கள். இந்த நாட்டில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் எதற்காகப் புலம்பெயர்ந்தார்கள் என்பதை மறந்து அவர்களிடம் அக்கோரிக்கைகளை முன்வைக்கின்றீர்கள். இந்த நாட்டில் நிலவிய உயிர் அச்சுறுத்தலினாலேயே அவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறியிருக்கின்றார்கள்.

இந்த நாட்டிலே தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் அபிலாசைகளுடன் கூடிய நிரந்தரமான அரசியற் தீர்வு வந்தாலே ஒழிய புலம்பெயர் தேசத்திலே இருக்கும் தமிழ் மக்கள் இந்த நாட்டிற்கு வந்து முதலிடுவதற்குத் தயாராக இல்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இத்தனைக்கும் பின்பும் இன்றும் கூட ஒரு பக்கம் பொருளாதார ரீதயில் இந்த நாடு நலிவடைந்திருக்க முதலீடுகளை மேற்கொள்ள புலம்பெயர் தமிழர்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்திலே வடக்கு கிழக்கை நீங்கள் மீண்டும் மீண்டும் தொல்பொருள் திணைக்கம் என்ற போர்வையில் எங்களது பூர்வீக நிலங்;களையும், எமது புராதனச் சின்னங்கள் இருக்கும் இடங்களையும் ஆக்கிரமிக்கின்றீர்கள்.

இன்ற திருகோணமலையிலே தேவாரப் பாடல் பெறற ஈஸ்வரங்களில் ஒன்றான திருக்கோணணேஸ்வரம் கோயிலிலே என்ன நடக்கின்றது. 1970, 1980 களிலே அந்தக் கோணேஸ்வரர் ஆலயத்தைச் சுற்றி 340 ஏக்கர் தொல்பொருள் திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்டது. அதிலே 18 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் கோணேஸ்வரர் ஆலயத்திற்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் தொல்லியல் இடங்களைப் பாதுகாக்க வேண்டிய தொல்பொருள் திணைக்களம் கோணேஸ்வரத்திலே குடியேற்றங்களைச் செய்வதற்கு இன்று முற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

திருக்கோணேஸ்வரம் என்பது 7ம் நூற்றாண்டிலே திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரால் தேவாரம் பாடப்பட்ட ஒரு ஈஸ்வரம். 1600 களிலே போர்த்துக்கேயர்களால் அந்தக் கோயில் உடைக்கப்பட்டு அங்கு ஒரு கோட்டை அமைக்கப்பட்டது. கோயிலை உடைத்த கற்களினாலேயே அந்தக் கோட்டைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 2010ம் ஆண்டு இரத்தினபுரியில் இருந்து வந்த புஞ்சி நிலமே என்ற பிரபல அரசியல்வாதி தனது அரசியலுக்காக அங்கிருந்து கொண்டு வந்த 45க்கு மேற்படட்ட குடும்பங்களை கோணேஸ்வரர் கோயில் அருகே குடியமர்த்தியிருக்கின்றார். இன்று 68 பேருக்கு அங்கு நிரந்தரமாக வீடுகளும், கடைகளும் அமைத்துக் கொடுப்பதற்கு முற்படுகின்றார்கள்.

தொல்பொருள் திணைக்களம் அவர்களுக்கான கடைகளையும் வீடுகளையும் அமைப்பதற்கு அனுமதி கொடுத்திருக்கின்றார்கள். இதே தொல்பொருள் திணைக்கம் இன்று மட்டக்களப்பிலே தாந்;தாமலை, குடும்பிமலை, வேலொடுமலை, குசலனார்மலை, அம்பாறையிலே சங்கமன்கண்டி, திருகோணமலையிலே கன்;னியா, அகஸ்தியர் போன்ற இடங்களிலே அவற்றுக்கான அபிவிருத்திகளைச் செய்வதற்கே அனுமதி கொடுப்பதில்லை. கோணேஸ்வரர் கோவிலிலே கோபுரம் அமைப்பதற்குக் கூட அனுமதி இல்லை. ஆனால் அதேவேளை அப்பிரதேசத்திலே 68 குடும்பங்;களுக்கு நிரந்தர வீடுகளும், அவர்களுக்கான கடைகளும் ஏற்படுத்திக் கொடுப்பதற்காக கோயில் நிருவாகத்தை வற்புறுத்துகின்றார்கள்.

கடந்த பாhராளுமன்றததிலே சரத் வீரசேகர அவர்கள் பேசுகையில் இது ஒரு பௌத்த நாடு பௌத்தத்தைக் காப்பாற்றுவதற்கு எதிராக எவரும் செயற்படக் கூடாது. வெளிநாடுகளில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றால் அங்கு அவர்கள் காணாமல் சென்று விடுவார்கள் என்று சொல்லியிருந்தார். நான் அவருக்கு ஒன்றை ஞாபகப்படுத்துகின்றேன். நீங்கள் ஆட்சியில் இருந்த காலத்தில் தான் வடக்கு கிழக்கிலே ஆயிரக்கணக்கான எமது தமிழ் மக்களைக் காணாமல் ஆக்கச் செய்திருந்தீர்கள். இன்று துபாய் எனப்படும் நூறு வீPதம் முஸ்லீம்கள் வாழும் அரபு நாட்டிலே சிவன் கோயிலைக கட்டித் திறந்துள்ளார்கள். ஆனால் இங்கு இந்துக்கள், தமிழர்கள் பூர்வீகமாக வாழும் இடங்களில் நீங்கள் சிங்கள மக்களைக் குடியேற்றி எங்கள் சின்னங்களை அழிக்க முற்படுகின்றீர்கள்.

தயவு செய்து இந்த விடயங்களை நிறுத்தி ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இந்தத் தேசிய சபை முற்படுமாக இருந்தால் அதற்கு ஆதரவு கொடுப்பதற்கு சிந்திப்போம் என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

மூன்றாம் சார்ள்ஸ் மன்னருடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு!

மூன்றாம் சார்ள்ஸ் மன்னருடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிநேகபூர்வமாக சந்தித்து உரையாடினார்
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றுள்ள உலக தலைவர்களுக்கும் மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கும் இடையிலான சந்திப்பு பக்கிங்ஹாம் அரண்மனையில் கடந்த 18ஆம் திகதி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மூன்றாம் சார்ள்ஸ் மன்னருடன் சிநேகபூர்வமாக உரையாடுவதை படத்தில் காணலாம்.
இந்நிகழ்வில் முதல்பெண்மணி சிரேஷ்ட பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் கலந்துகொண்டார்.
Posted in Uncategorized

”சர்வதேச நாடுகள் தமிழர்களை ஏமாற்றுகின்றன” – பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்

சர்வதேச நாடுகள் இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு தமிழர்களின் விடையங்களை பயன்படுத்துகின்றன என்று மிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

இதன்படி அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையை பகடக்காயாக பயன்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

மன்னாரில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், மனித உரிமை உதவி ஆணையாளர் இலங்கை தொடர்பான பரிந்துரைகளை முன் வைத்துள்ளார்.

வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் இலங்கை அரசாங்கத்தினால் நீண்ட காலமாக துன்புறுத்தப்பட்டு, கடைசியாக 2009 ஆம் ஆண்டு, தமிழ் இனத்தை இனப் படுகொலையாக அழித்த சம்பவங்கள் தொடர்ச்சியாக சர்வதேச நாடுகள் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு வரும் என்று நம்புகின்றார்கள்.

ஆனால் சர்வதேச நாடுகளை பொருத்தவரையில், இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்காக தமிழர்களின் விடையங்களை பயன்படுத்தி, அமெரிக்கா போன்ற நாடுகள், இலங்கையை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதற்கு பகடக்காயாக பயன்படுத்துவதாக நான் பார்க்கின்றேன்.

சர்வதேச விசாரணை வேண்டும் என்று தொடர்ச்சியாக தாயகம் புலத்தில் இருக்கின்ற சகல தரப்பினரும் ஒன்றிணைந்து ஒருமித்து கோரிக்கை முன் வைத்த போதும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையை கையாளுகின்ற நாடுகள் ஒரு மென் போக்கை கடைபிடித்து வருகிறது.

தற்போது வந்துள்ள பரிந்துரையில் பல விடையங்கள் இருந்தாலும்,தீர்மானம் ஒன்று நிறைவேறும் போது, பிரேரணை எந்த வித பயனும் இல்லாத ஒன்றாக காணப்படும்.

இலங்கை அரசாங்கம் ஐ.நாவில் எப்படியான தீர்மானங்களை நிறைவேற்றினாலும், இலங்கை அரசாங்கம் இவ்வளவு காலமும், ஐ.நா பரிந்துரைகளுக்கும்,தீர்மானங்களையும் நிறைவேற்ற எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. தற்போதைய பரிந்துரையின் போது அமைச்சர் அலி சப்ரி தாங்கள் அதற்கு உடன் பட மாட்டோம் என்று கூறியிருக்கிறார்.

தொடர்ச்சியாக தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்ற ஒரு சூழ்நிலையும், மேற்குலக நாடுகளும் தமிழர் தரப்பை தொடர்ச்சியாக ஏமாற்றுகின்ற சூழ்நிலை தான் தொடர்ச்சியாக காணப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

திருக்கோணேஸ்வரத்தில் அத்துமீறிய செயற்பாடுகள்: ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய சம்பந்தன்

வரலாற்று சிறப்புமிக்க திருகோணமலை திருகோணேஸ்வரர் ஆலய சூழலில் இடம்பெறுகின்ற அத்துமீறிய செயற்பாடுகள் மற்றும் திருகோணமலை மாவட்ட எல்லைகளை மாற்றுவதற்கான முயற்சிகளை சுட்டிக்காட்டி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், ஜனாதிபதிக்கு கடிதமொன்றை  அனுப்பியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இனத்துவ நிலத் தொடர்ச்சியை துண்டிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

பல தலைமுறைகளாகவும் நூற்றாண்டுகளாகவும் தமிழர்களின் வரலாற்று ரீதியான வாழ்விடங்களாகவிருக்கும் நிலப்பரப்பை பாரதூரமானதொரு முறையில் மாற்றியமைக்கும் வகையில் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக பிரிவுகளின் எல்லைகளை மாற்றுவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக  இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச உடன்படிக்கையான இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் கீழ், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தமிழர்களினதும் தமிழ் பேசும் மக்களினதும் வரலாற்று ரீதியான வாழ்விடப் பகுதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அவர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தின் வடகோடியிலுள்ள ஒரு பெரும் நிலப்பரப்பு திருகோணமலை மாவட்டத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக வட மத்திய மாகாணத்திலுள்ள அனுராதபுரம் மாவட்டத்திலிருந்து ஒரு பெரும் நிலப்பரப்பு பதிலீடு செய்யப்படவுள்ளதென தமக்கு அறியக்கிடைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து பெரும் நிலப்பரப்பொன்றை கிழக்கு மாகாணத்திற்குள் கொண்டுவரும் அதேவேளை, கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்திலிருந்து பெரும் நிலப்பரப்பொன்றை பொலன்னறுவை மாவட்டத்துடன் இணைக்கும் முன்மொழிவு திருகோணமலையின் தெற்குப் பகுதியில் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது பாரதூரமான எதிர்வலைகளையும் உலகில் இரண்டாவது மிகச் சிறந்த துறைமுகமாக கருதப்படும் திருகோணமலை துறைமுக்திற்கு பாரதூரமான பின்விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடிய சாத்தியத்துடன், வடக்கு மற்றும் தெற்கின் கடல்சார் எல்லைகள் ஊறுபடுவதற்கு வழிவகுக்கும் என அவரது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களோ அல்லது இலங்கையின் அயல் நாடோ அல்லது மிக அருகில் உள்ள நாடுகளோ இந்த நடவடிக்கையை அங்கீகரிக்க மாட்டாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தின் வடக்கிலும் தெற்கிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கிடையில் இனத்துவ நிலத் தொடர்ச்சியை இல்லாது செய்வதே இதன் முழு நோக்கமாகும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.

திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்வதற்காக 15 பேர் கொண்ட பொதுக் கட்டமைப்பு குழு

தியாகதீபம் திலீபனை நினைவேந்தலை மேற்கொள்வதற்காக 15 பேரைக் கொண்ட பொதுக் கட்டமைப்பு தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

தியாகதீபம் திலீபனை நினைவேந்தலை மேற்கொள்ள பொதுக் கட்டமைப்பொன்றினை உருவாக்கி முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் நடைபெற்றது.

யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனின் ஏற்பாட்டில் நாவலர் கலாசார மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை(17)நடைபெற்ற கலந்துரையாடலின் தொடர்ச்சியாக   நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் இன்று மதியம் 2மணியளவில் இடம்பெற்றது.

கடந்த கூட்டத்தில் பொதுக் கட்டமைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டு ஏழு பேர் கொண்ட பொதுக் கட்டமைப்புக்கான அழைப்பாளர் குழு தெரிவு செய்யப்பட்டநிலையில் அந்தக் குழு, கலந்துரையாடலில் பங்கேற்காத அமைப்புகள், அரசியல் கட்சிகள் என்பனவற்றுடன் கலந்துரையாடி பொதுக்கட்டமைப்பை உருவாக்கி நினைவேந்தலை சிறப்பாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டநிலையில் இன்றையதினம் மதகுருமார்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள், அரசியல் கைதிகளுக்கான அமைப்பின் பிரதிநிதி, சிவில் சமூகப் பிரதிநிதிகள், காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர் என 15 பேரைக் கொண்ட பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

பெருந்திரளாவர்கள் கலந்துகொண்ட மகாராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு

பிரிட்டனின் மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற்றது.

பூரண அரச மரியாதையுடன் அவரின் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது.

வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த மகாராணியின் உடல், இன்று வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு நடைபெற்ற ஜெபக் கூட்டத்தை தொடர்ந்து, விண்ட்சர் கோட்டையில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

புதிய அரசர், அவரது மகன்கள் இளவரசர் வில்லியம், இளவரசர் ஹேரி, அரச குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

திருகோணமலை:வடக்கு கிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வை வலியுறுத்தி போராட்டம்

வடக்கு கிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனும் கோஷத்தை வலியுறுத்தி வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டமானது  திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் செயல் முனைவின் 50 வது நாளை குறிக்கும் முகமாக குறித்த ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக ஒன்று கூடிய பொதுமக்கள் கையில் பாதாதைகள், பலூன்கள் மற்றும் பட்டங்களை ஏந்தியவாறு பேரணியாக சென்று குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்த சூழ்நிலைக்கு பின்னரான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும், காணிப் பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வு கிடைக்க பெற வேண்டும், கருத்து சுதந்திரம் வழங்கப்பட வேண்டும், ஒன்று கூடுவதற்கான அனுமதி மறுக்கப்படக்கூடாது, பயங்கரவாத தடைச் சட்ட திட்டத்தில் கைது செய்யப்படுபவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், மத சுதந்திரம் சிறுபான்மையினருக்கு கேள்விக்குறியாக காணப்படுகிறது, எனும் கோரிக்கைள் பொறிக்கப்பட்ட பலூன்கள் மற்றும் பட்டங்கள் பறக்க விடப்பட்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

இலங்கை தொடர்பில் ஐநா பிரதிநிதி வெளியிட்ட டுவிட்டர் பதிவு!

சுகாதாரம், கல்வி மற்றும் வறுமை ஒழிப்பு போன்ற துறைகளில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் தற்போதைய நெருக்கடியின் காரணமாக அவதானத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹன்னா சிங்கர் தெரிவித்தார்.

இந்த நாட்டில் உணவு மற்றும் மருந்துப் பற்றாக்குறையை சமாளிக்க இலங்கையுடன் வௌிநாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Hanaa Singer-Hamdy