இந்தியா முழுமையான ஆதரவை இலங்கைக்கு வழங்கும் இந்திய தூதரகம் தெரிவிப்பு

இலங்கையில் ஜனநாயகக்கோட்பாடுகளுக்கும் அரசியலமைப்பிற்கும் அமைவாக மிகவிரைவாக அரசியல் தீர்வு அடைந்துகொள்ளப்படுவதற்கு இந்தியா முழுமையான ஆதரவை வழங்கும் என்று இலங்கையிலுள்ள இந்திய தூதரகம் அறிவித்திருக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கோ அல்லது பயணிப்பதற்கோ ஏதேனுமொரு வகையில் இந்தியா உதவியதாக வெளியாகும் தகவல்களை முற்றாக மறுப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஜனநாயகக்கோட்பாடுகள், ஜனநாயகக்கட்டமைப்புக்கள் மற்றும் அரசியலமைப்பு என்பவற்றுக்கு அமைவாக சுபீட்சம் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை இலக்காகக்கொண்ட மக்களின் அபிலாஷைகள் அடைந்துகொள்ளப்படுவதை முன்னிறுத்தி இந்தியா எப்போதும் இலங்கை மக்களுடன் உடன்நிற்கும் என்றும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

நாட்டை வழிநடத்துவதற்கு சரியானவர் ரணில் விக்ரமசிங்க – பொதுஜன பெரமுன

ஜனாதிபதி பதவிக்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஆளும்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.இருப்பினும் புதிய அபிவிருத்தியை கருத்தில் கொண்டு, அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பில், பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அனுபவம், சர்வதேச உறவுகள் மற்றும் திறமைகளை கருத்திற்கொண்டு அவர் நாட்டை வழிநடத்துவதற்கு சரியானவர் என அவர்கள் கருதுவதாக அவர் கூறினார்.நீண்ட கலந்துரையாடலின் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவரை ஜனாதிபதி பதவிக்கு நியமித்தால், சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் இலக்கை அடைய முடியாது என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நாடாளுமன்ற ஒருவர் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பொதுஜன பெரமுனவின் அடிப்படைக் கொள்கைக்கு இது ஒரு சவால் என சாகர காரியவசம் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

ஜனாதிபதி பதவிக்கு அனுரகுமார போட்டி!

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய பாராளுமன்றத்தில் நடக்கும் வாக்கெடுப்பில் வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்க போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதிக்கான வேட்புமனு கோரல் எதிர்வரும் 19 ஆம் திகதியும் ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு 20 ஆம் திகதியும் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவசர நிவாரண வேலைத்திட்டம்: பதில் ஜனாதிபதி ரணில் தீர்மானம்!

பொருளாதார நெருக்கடியால் சிரமப்படும் பொதுமக்களுக்கு எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் அவசர நிவாரண வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்

இன்று (16) காலை அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்

மேலும், ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்படும் நிவாரண பட்ஜெட்டில் இருந்து கூடுதல் தொகையை இதற்காக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது

அக்கலந்துரையாடலில், உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துமாறு செயல் தலைவர் அறிவுறுத்தினார்.

எரிபொருள் மற்றும் உரங்களை முறையாகவும் உடனடியாகவும் வழங்குவதற்கு இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், இக்கலந்துரையாடலின் போது வர்த்தகர்கள் தமது தொழிலை எவ்வித இடையூறும் இன்றி நடத்துவதற்கு தேவையான சூழலை தயார்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அமைதியான போராட்டக்காரர்களால் கையளிக்கப்பட்ட திட்டம் நல்ல திட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக பதில் ஜனாதிபதி விக்ரமசிங்க கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.

ஊழலுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து செயற்பாட்டாளர்களுக்கு அறிவிக்கவுள்ளதாக பதில் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

இலங்கையின் சமகால நிலைமை குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு!

இலங்கையின் சமகால நிலைமை குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெரி ரைஸ் இதனை அறிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியல் மற்றம் சமூக நிலை குறித்து சர்வதேச நாணய நிதியம் அவதானத்துடன் உள்ளது.

விரைவில் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் என நம்பிக்கை கொள்வதாகவும், அதன் பின்னர் சர்வதேச நாணய நிதிய திட்டம் குறித்து தங்களுக்கு மீளவும் பேச்சுவார்த்தை ஆரம்பிக்க முடியும் என்றும் அதன் பேச்சாளர் கூறியுள்ளார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நிலைமை சீராக இல்லை. இந்த நிலையில் அது குறித்து உறுதிப்பாடு அவசியமாகும் என சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் முறை

அரசியலமைப்பின் 38 வது சரத்தின் (1) உப சரத்துக்கு அமைய ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் அரசியலமைப்பின் 40 வது சரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமைக்கு அமைய பதவியை வறிதாக்கிச் செல்லும் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவுறாது எஞ்சியுள்ள காலத்துக்கு மாத்திரம் அப்பதவியை வகிப்பதற்கு பாராளுமன்றத்தினால் அதிலுள்ள உறுப்பினர்களில் ஜனாதிபதிப் பதவிக்குத் தேர்ந்தெடுப்பதற்குத் தகுதி உள்ள ஒருவர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

இதன்போது இந்தத் தெரிவு 1981ஆம் ஆண்டு 02 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தைப் பின்பற்றியதாக அமைந்திருக்கும்.

விசேடமாக இந்த நடைமுறை பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் தலைமையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுடன், வாக்கெடுப்பின் போது சபாநாயகரும் வாக்களிப்பார். அத்துடன் இந்த நடைமுகைளுக்காக பாராளுமன்றம் மூன்று நாட்கள் கூடும். அதன்படி, சட்ட விதிகளுக்கு உட்பட்டதாக இந்தத் தேர்தலை நடத்துவதற்குப் பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

● இதில் ஜனாதிபதிப் பதவி வெற்றிடமான திகதிக்குப் பின்னர் இயன்றளவு விரைவாகவும், எச்சந்தர்ப்பத்திலும் அத்திகதியிலிருந்து ஒரு மாதத்திற்குப் பிந்தாமலும் இந்தத் தெரிவு நடாத்தப்படுதல் வேண்டும்.

● இதற்கமைய இந்த வெற்றிடம் ஏற்பட்டு மூன்று நாட்களுக்குள்ளாகப் பாராளுமன்றத்தைக் கூடுமாறு அழைப்பதாகச் செயற்படுதல் வேண்டும் என்பதுடன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் அத்தகைய கூட்டத்துக்கு என நிர்ணயிக்கப்படும் திகதியையும், நேரத்தையும் பாராளுமன்றத்தின் உறுப்பினர்களுக்கு அறிவிக்க வேண்டும்.

● அவ்வாறு பாராளுமன்றம் கூடும்போது ஜனாதிபதிப் பதவியில் வெற்றிடம் ஒன்று ஏற்பட்டுள்ளது எனச் செயலாளர் நாயகம் பாராளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும். இதற்கமைய நியமனங்கள் அவரால் பெற்றுக்கொள்ளப்படுவதற்கான திகதியையும் நேரத்தையும் அவர் நிர்ணயிப்பதுடன், கூட்டத் திகதியிலிருந்து 48 மணித்தியாலங்களுக்கு முந்தாததும், ஏழு நாட்களுக்குப் பிந்தாததுமான ஒரு திகதியாக அது இருக்க வேண்டும்.

● நியமனங்கள் பெற்றுக் கொள்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட திகதியன்று பாராளுமன்றம் கூடவேண்டும் என்பதுடன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவத்தாட்சி அலுவலராகவும் செயலாற்றுவார். ஜனாதிபதிப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கென எவரேனும் உறுப்பினரின் பெயரை முன்மொழிய விரும்பும் ஒவ்வோர் உறுப்பினரும், அவர் எந்த உறுப்பினரின் பெயரை முன்மொழிய விரும்பகிறாரோ, அந்த உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஜனாதிபதி பதவியில் அவர் சேவை செய்ய விருப்புடையவராகவுள்ளார் எனக் கூறும் எழுத்திலான சம்மதத்தை அத்தகைய உறுப்பினரிடமிருந்து முன்னர் பெற்றுக்கொண்டிருத்தல் வேண்டும். அவ்வாறு சம்மதத்தைத் தெரிவித்த உறுப்பினர்கள் அன்றையதினம் பாராளுமன்றத்திற்கு சமுகமளித்திருக்க வேண்டும்.

● இங்கு ஜனாதிபதிப் பதவிக்கு உறுப்பினர் ஒருவரின் பெயர் மட்டுமே முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டிருந்தால் அவர் அந்தகைய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரென செயலாளர் நாயகம் பாராளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் அவ்வாறு முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டு இருப்பின் வாக்கெடுப்பை நடத்துவதற்கான திகதியும், நேரமும் பாராளுமன்றத்தினால் நிர்ணயிக்கப்பட வேண்டும், அத்தகைய திகதி நியமனங்களைப் பெற்றுக் கொள்வதற்கான நேரத்திலிருந்து நாற்பத்தெட்டு மணித்தியாலங்களுக்குப் பிந்தாத ஒரு திகதியாக இருக்க வேண்டும்.

● வாக்கெடுப்பை நடத்துவதற்கென நிர்யணிக்கப்பட்ட திகதியன்று செயலாளர் நாயகமே தெரிவத்தாட்சி அலுவராகச் செயற்படுவதுடன், வாக்களிப்புத் தொடங்குவதற்கு முன்னர் வெற்று வாக்குச்சீட்டுப் பெட்டியை உறுப்பினர்களுக்குக் காண்பித்து அவர்கள் முன்னிலையில் இலச்சினையிடல் வேண்டும். இதற்கமைய வாக்களிப்புத் தொடங்கியவுடன் தெரிவத்தாட்சி அலுவலராகப் பணியாற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் சபாநாயகர் உள்ளிட்ட ஒவ்வொரு உறுப்பினரினதும் பெயரையும் அழைத்தல் வேண்டும். அவ்வாறு அழைக்கப்படும் போது உறுப்பினர்கள் தெரிவத்தாட்சி அலுவலரின் மேசைக்குச் சென்று வாக்குச்சீட்டொன்றைப் பெற்று தமது வாக்குகளை அடையாளமிட வேண்டும். அதன் பின்னர் தமது வாக்குகளை அளிக்க வேண்டும்.

● உறுப்பினர் ஒருவர் வாக்குச்சீட்டொன்றினை தற்செயலாகப் பழுதாக்கினால், அதனை அவர் தெரிவத்தாட்சி அலுவலரிடம் திருப்பிக் கொடுத்து, தெரிவத்தாட்சி அலுவலர் அத்தகைய தற்செயல் பற்றித் திருப்தியுற்றால் அவருக்கு வேறொரு வாக்குச்சீட்டைக் கொடுக்கலாம். பழுதாக்கப்பட்ட வாக்குச்சீட்டு தெரிவத்தாட்சி அலுவலரால் உடனடியாக இல்லாததாக்கப்படும். பெயர் கூப்பிடப்பட்டபோது வாக்களிக்காதிருந்த எவரேனும் உறுப்பினரின் பெயரை இரண்டாவது முறையாக அழைத்தல் வேண்டும். அவ்வாறு அழைக்கப்பட்ட பின்னரும் வாக்களிக்காதிருந்தால் அவர் வாக்களிக்காது ஒதுங்கியிருந்தவராகக் கருதப்படுவார்.

● ஒவ்வோர் உறுப்பினருக்கும் ஒரு வாக்கு உரித்துடையதாக இருக்கும் என்பதுடன், எந்த வேட்பாளருக்கு வாக்களிக்கின்றாரோ அந்த வேட்பாளரின் பெயருக்கு எதிரேயுள்ள சதுரத்தில் ‘1’ எனும் எண்ணை இடுதல் வேண்டும். பல வேட்பாளர்கள் காணப்படும் சந்தர்ப்பத்தில் விருப்பத் தெரிவுகளை வழங்க முடியும். இதற்கமைய போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு அமைய பெயர்களுக்கு எதிரேயுள்ள சதுரங்களில் 2, 3 எனும் விருப்பத் தெரிவுகளை வழங்க முடியும்.

● இவ்வாறு வாக்களிப்பு இடம்பெற்ற பின்னர் வாக்கு எண்ணும் பணி முன்னெடுக்கப்படும். எவரேனும் வேட்பாளர் வாக்குகள் எண்ணப்படும் இடத்தில் சமுகமளிக்க விரும்பினால் அதற்கு வாய்ப்புக் கிடைக்கும் அல்லது அவரது பிரதிநிதியாகச் சமுகமளிப்பதற்கு வேறொரு உறுப்பினரை நியமிக்கவும் முடியும்.

● அளிக்கப்பட்ட செல்லுபடியாகும் வாக்குகளுள் அரைவாசிக்குக் கூடுதலான வாக்குகளைப் ஒரு வேட்பாளர் பெற்றுள்ளவிடத்து தெரிவத்தாட்சி அலுவலர் அத்தகைய வேட்பாளர் ஜனாதிபதிப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை உடனடியாக அறிவிக்க வேண்டும்.

● அதேநேரம், வேட்பாளர் எவரும் அளிக்கப்பட்ட செல்லபடியான வாக்குகளுள் அரைவாசிக்கும் கூடுதலான வாக்குகளைப் பெறாதவிடத்து இரண்டாவது, மூன்றாவது விருப்பத் தெரிவுகள் சரிபார்க்கப்படும். இதில் குறைந்த வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் நீக்கப்பட்டு அவருக்கு வழங்கப்பட்ட இரண்டாவது விருப்பத் தெரிவு எண்ணப்படும்.

● வாக்கு எண்ணுகையின் முடிவில் வேட்பாளர் எவருமே செல்லுபடியான வாக்குகளுள் அரைவாசிக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றில்லாதவிடத்து அந்த எண்ணுகையின் போது பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ள வேட்பாளர் ஜனாதிபதிப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை தெரிவத்தாட்சி அலுவலர் பாராளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும்.

● அத்துடன், இரு வேட்பாளர்கள் அல்லது பலருக்கிடையிலான வாக்குகள் சரிசமமாகக் காணப்படும் சந்தர்ப்பத்தில் திருவுளச்சீட்டு போடப்படும்.

எச்.ஈ. ஜனகாந்த சில்வா,
பணிப்பாளர் சட்டவாக்க சேவைகள் / பணிப்பாளர் தொடர்பாடல் (பதில்)
இலங்கை பாராளுமன்றம்.

Posted in Uncategorized

ஜனாதிபதியாக பதவியேற்கத் தயாராகும் ரணில்!

பதில் ஜனாதிபதியான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினத்தில் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

இதற்கு தேவையான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியோருவர் தெரிவு செய்யப்படும் வரையில் இவரே ஜனாதிபதியாக இருப்பார்.

அடுத்த வாரத்தில் பாராளுமன்றத்தில் புதிய ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இதன்போது புதிய ஜனாதிபதியொருவர் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவர் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் முடியும் வரையில் பதவியில் இருப்பார்.

Posted in Uncategorized

7 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் – சபாநாயகர் அறிவிப்பு

ஜூலை மாதம் 14ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபயவர்த்தன சற்று நேரத்திற்கு முன்னர் உறுதிப்படுத்தி உள்ளார்.

ஜனாதிபதியின் கடிதம் தனக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் யாப்பின் அடிப்படையில் பிரதமர் ஜனாதிபதியின் கடமைகளை பொறுப்புகளையும் தற்காலிகமாக நிறைவேற்றுவார் எனவும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் திட்டத்தை ஏழு நாட்களுக்குள் நிறைவேற்ற எதிர்பார்ப்பதாகவும் அதற்கான அமைதியான சூழ்நிலையை நாட்டில் உருவாக்க உதவி செய்யுமாறும் பாதுகாப்பு தரப்பினரிடமும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளிடமும் சபாநாயகர் கேட்டுக்கொண்டார்.

இந்த நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு நாளை பதினாறாம் திகதி சனிக்கிழமை பாராளுமன்றம் கூடும் எனவும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் எனவும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.

Posted in Uncategorized

’பதவி விலகல் கடிதம்’ போலியானது

ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் என சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் ஆவணம் போலியானது என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சிங்கப்பூரிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவி விலகல் கடிதத்தை இலங்கைக்கான சிங்கப்பூர் தூதரகம் ஊடாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், குறித்த கடிதத்தின் சட்டரீதியான செல்லுபடியாகும் தன்மை குறித்து ஆராய்வதாகவும், இது தொடர்பில் இன்று  சபாநாயகர் விசேட அறிக்கையொன்றை வெளியிடுவார் எனவும் சபாநாயகர் அலுவலகம் அறிவித்தது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி அனுப்பியுள்ள கடிதம் இதுவரையில் சபாநாயகரினால் பகிரங்கமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (

பாராளுமன்ற குழுவின் கூட்டம் இன்று

பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டட தொகுதியில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

இன்று முற்பகல் இடம்பெறவுள்ள இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத்தை கூட்டுவது உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.