சர்வதேச பொறியிலிருந்து தங்களை விடுவிப்பதற்கு எம்மை பயன்படுத்த இடமளிக்க முடியாது -ரெலோ

தமிழ் தேசிய கூட்டமைப்பினரை பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று அழைப்பு விடுத்திருந்தார். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (15) மாலை 3.30 மணிக்கு சந்திப்பிற்கான நேரமும் ஒதுக்கியிருந்தார்.

இந்த நிலையில், நேற்று இரவு ரெலோவின் அரசியல்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு வாதப் பிரதிவாதங்களின் பின்னர், இது தொடர்பில், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனால், இரா.சம்பந்தனிற்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை அவரமாக பேச்சுவார்த்தைக்கு குறுகிய கால அவகாசத்தில் அழைத்திருக்கிறார். இது சம்பந்தமாக எமது கட்சியின் அரசியல் உயர்பீடம் நடாத்திய ஆய்வின் அடிப்படையில் பின்வரும் கருதுக்களை முன்வைக்கிறோம்.

இலங்கை அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டியது அவசியம் என்பதை ஏற்றுக் கொண்ட பொழுதிலும் இந்த நேரத்திலே அரசாங்கம் எம்மை அழைத்து இருப்பதென்பது எங்களை ஒரு பகடைக் காயாகப் பாவித்து சர்வதேச மற்றும் உள்ளக அரசியல் அழுத்தங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நடவடிக்கையாக அமைந்துவிடும் என்று நாங்கள் கருதுகிறோம்,.

ஜனாதிபதி அவர்கள் பதவியேற்ற காலத்திலிருந்து தான் சிங்கள-பௌத்த மக்களினால் தெரிவு செய்யப்பட்டவர் எனவும் அவர்களுடைய கருத்துக்களுக்கும் அபிலாசைகளுக்குமே முன்னுரிமை வழங்குவேன் என்றும் தெரிவித்து வருவதோடு மட்டுமல்லாமல் அந்த வகையிலே தான் அவருடைய நடவடிக்கைகளும் அமைந்திருக்கின்றன. குறிப்பாக தமிழர்களுடைய காணிகளை பல்வேறு திணைக்களங்களின் ஊடாக கையகப்படுத்தி வருவதோடு நவீன முறையிலே குடிப்பரம்பல் சிதைப்பையும் திட்டமிட்ட வகையில் ஒரு காலமும் இல்லாத வகையில் நிறைவேற்றி வருகிறார். எமது கோரிக்கைகள் போராட்டங்கள் எல்லாம் பயனற்றவையாகவே போயிருக்கின்றன.

ஓரினத்தின் தலைவரே தாமும் இந்த அரசும் என்ற அவரின் நிலைப்பாடு நல்லிணக்கதிற்கோ பொறுப்புக் கூறலுக்கோ வழியமைக்காது. அத்துடன் மற்றைய இனங்களின் அங்கீகாரத்தையும் மறுதலிப்பதோடு இனப்பிரச்சினை தீர்வுக்கான கதவுகளையும் மூடி நிற்கிறது.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு இனபிரச்சனை இல்லை பொருளாதாரப் பிரச்சனையே இருக்கின்றது என்று ஐநா வரையில் ஜனாதிபதியும் மற்றும் பல இடங்களில் அவர் சார்ந்தோரும் தெரிவித்து வருகிறார்கள். இலங்கையில் தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சனை உண்டு என்பதையும் அதற்கான தீர்வு அவசியம் என்பதையும் ஜனாதிபதி தனது நிலைப்பாடாக வெளிப்படுத்துவது அவசியம் என நாம் கருதுகிறோம்

அத்தோடு பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமை ஆகிய விடயங்களில் அரசாங்கம் எந்தவித அக்கறையும் செலுத்தாமல் செயல்பட்டு வருகிறது. கடந்த ஐநா மனித உரிமை பேரவை அமர்வில் மனித உரிமைக்கான உயர்ஸ்தானிகர், இலங்கை அரசாங்கம் மனித உரிமை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகிய விடயங்களில் பாரிய பின்னடைவை சந்தித்து வருகிறது என்று தெரிவித்து இருப்பதோடு சர்வதேச நீதிப் பொறிமுறையின் முன் இலங்கையை பாரப்படுத்துமாறு மனித உரிமை பேரவை அங்கத்துவ நாடுகளுக்கு வலியுறுத்தியிருக்கிறார். எமக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் நாடுகளும் அந்த நிலைப்பாட்டிலே கவனம் செலுத்துகிறார்கள். குறிப்பாக இந்தியா, ஐநா மனித உரிமைப் பேரவையின் நடந்துமுடிந்த கூட்டத்தொடரில் காத்திரமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

தங்கள் தலைமையிலே தமிழ்தேசிய பரப்பில் செயலாற்றும் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்ட அனைத்து கட்சிகளும் ஒருமித்து அண்மையில் இந்தியாவிற்கு முன்வைத்த கோரிக்கைக்கு பின்னர் இந்திய தரப்பில் ஏற்பட்டிருக்கும் பாரிய மாற்றத்தினை இது எடுத்துக்காட்டியுள்ளது. தமிழ் மக்களுடைய நியாயமான அபிலாசைகளை தீர்க்கக்கூடிய அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமை விடயங்களிலும் இலங்கையை தாங்கள் வலியுறுத்துவதாக இந்தியா தெரிவித்திருப்பது எம்மக்களுக்கு நம்பிக்கை தரும் விடயமாக இருக்கிறது.

இந்தச் சூழல் ஒருபுறமிருக்க, சர்வதேச அரசியலிலும் உள்ளக பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கும் அரசாங்கம் முகம் கொடுத்து இருக்கின்றது.

எமது மக்களின் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் எமது இனப்பிரச்சினை சம்பந்தமாகவும் முடிவுகளை எடுப்பதற்கு பல தடவைகள் நாங்கள் கோரிக்கைகளை விடுத்தும் எங்களை உதாசீனம் செய்த ஜனாதிபதி இன்று எங்களை அழைத்திருப்பதானது அவர்கள் முகம் கொடுத்து இருக்கக்கூடிய சிக்கல்களில் இருந்து தங்களை விடுவிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பை பயன்படுத்த நாங்கள் இடமளிக்க முடியாது. அது எங்களுடைய மக்களும் எமது மக்களுக்காக இந்தியாவும், சர்வதேசமும், நாங்களும் எடுத்து வரும் முயற்சிகளுக்கு பின்னடைவாக அமைந்துவிட ஒருபோதும் இடமளித்து விடக்கூடாது என்பதில் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம்.

மேலே குறிப்பிட்ட நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களை அரசாங்கம் நிராகரித்தும் அதை செயல்படுத்த முடியாது என்றும் உறுதிபட தெரிவித்து வருகிறார்கள். எனவே இந்த சந்திப்பு எந்த அளவிற்கு தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் என்பதில் நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம்.

இந்தப் பின்னணியில் நல்லிணக்க நடவடிக்கையாக அரசாங்கம் தமது தரப்பில் செயற்படுத்தக் கூடிய விடயங்களான காணி அபகரிப்பை முற்றாக நிறுத்துதல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல், அரசியல் கைதிகள் உடனடி விடுதலை, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான பதில் உட்பட, குறிப்பாக ஐநா மனித உரிமைப் பேரவையின் பிரேரணையில் கூறப்பட்ட பல விடயங்களில் ஏதாவது ஒரு சில விடயங்களை நிறைவேற்றுவதன் மூலம் ஒரு காத்திரமான எமது மக்களுக்கு நம்பகத்தன்மையான சூழலை ஏற்படுத்துவதே பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்ல வழிவகுக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். அப்படிப்பட்ட நல்லிணக்க நடவடிக்கையை அரசாங்கம் நிறைவேற்றிய பின்னர் இந்த சந்திப்பில் கலந்து கொள்வது எமது இனத்துக்கு ஆதரவாக செயற்பட்டு கொண்டிருக்க கூடிய இந்தியா உட்பட சர்வதேச நாடுகளுடைய முயற்சிக்கு வலுசேர்த்து எமது மக்களுக்கு காத்திரமான அரசியல் தீர்வையும் நீதியையும் பெற்றுத் தருவதற்கு வழிவகுக்கும் என்று நம்புகிறோம்.
.
கடந்தகாலங்களில் ராஜபக்க்ஷ தலமையிலான அரசோடு பேச்சுவார்த்தை நடாத்திய அனுபவங்களையும் இங்கு நினைவு கூருவது பொருத்தமானது.

ஆகவே தாங்கள் இவற்றை கருத்தில் கொண்டு அரச தரப்பில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க சமிக்ஞையின் செயற்பாட்டின் அடிப்படையில் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதே ஆக்கபூர்வமானதாக அமையும் என்பதை அரச தரப்பிற்கு தற்போதைய சூழலில் எமது நிலைப்பாடாக தெரிவிப்பதே எமது மக்கள் நலன் சார்ந்ததாக அமையும்.

தாங்கள், மேற்கூறிய விடயங்களை கவனத்தில் எடுத்து இவ்விடயத்தில் செயலாற்ற வேண்டுமென மிக அக்கறையுடன் கோருகிறோம்.

இப்படிக்கு
அ. அடைக்கலநாதன் பா.உ
தலைவர்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்.

யாழ் மாநகரத்தின் மின்சாரத் துண்டிப்பை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்! மாநகர பிரதி முதல்வர் ஆளுநரிடம் கோரிக்கை

யாழ் நகரப் பகுதிகளில் மின்சார சிக்கனம் என்ற போர்வையில் மின் துண்டிப்பை மேற்கொள்வதை வடமாகாண ஆளுநர் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என ரெலோ யாழ் மாவட்ட பிரதி தலைவரும் யாழ் மாநகர பிரதி முதல்வருமான துரைராசா ஈசன் வேண்டுகோள் விடுத்தார்.

நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ் மாநகர சபையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் உள்ளுராட்சி மன்றங்களில் மின்சார சிக்கனத்தை பேணுமாறு சுற்றுநிறுபம் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை வலியுறுத்தி வடமாகாண ஆளுநர ஜீவன் தியாகராஜா உள்ளூராட்சி மன்றங்களுக்கு வீதி மின்விளக்குகளின் மின்சார சிக்கனத்தை பேணுமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

யாழ் நகரப் பகுதிகளில் ஐந்துக்கு மேற்பட்ட எரிபொருள் நிலையங்கள் மற்றும் மொத்த வியாபார வர்த்தக நிலையங்கள் காணப்படுகின்றன நிலையில் மக்கள் இரவு நேரங்களில் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

ஏனெனில் எரிபொருளுக்காக மக்கள் இரவு நேரங்களில் எரிபொருள் நிலையங்களில் காத்திருக்கின்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறான நிலையில் வீதி மின் விளக்குகளை அணைக்கும்போது வீதி விபத்துக்கள் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுவதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அசௌகரியத்தையும் ஏற்படுத்துகிறது.

நாட்டில் இராணுவ அதிகாரிகளின் ஆலோசனைப்படி நிர்வாகங்களை நடத்துவதால் தேவையற்ற முடிவுகளை தேவையற்ற நேரங்களில் மேற்கொள்கிறார்கள்.

அமைச்சர்கள் மற்றும் அரசாங்க பிறவிகள் தமது சுகபோக வாழ்க்கையை அனுபவித்து வருகின்ற நிலையில் சாதாரண மக்களை நெருக்குதலுக்கு உள்ளாகிறார்கள்.

எரிபொருள் விலையேற்றம் சமையல் எரிவாயுக்குத் தட்டுப்பாடு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு என மக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்ற நிலையில் மின்சாரத்தையும் துண்டித்து அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறது.

யாழ் நகரப் பகுதிகளில் பல மின் விளக்குகள் துண்டிக்கப்பட்டதாக அறியக் கிடைக்கும் நிலையில் அதனை மீள பொருத்துவதற்கு வடமாகாண ஆளுநர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்க வேண்டும்.

ஆகவே குறித்த விடயம் தொடர்பில் வட மாகாண ஆளுநருக்கு எழுத்து மூலமான கடிதம் ஒன்றை அனுப்புவதற்கு தயாராக இருக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அமெரிக்கத் தூதுவர் அஞ்சலி !

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக புதிதாக நியமிக்கப்பட்ட ஜூலி சங் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

அங்கு விஜயம் மேற்கொண்ட தூதுவர் ஜூலி சங், உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்,

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த 5 அமெரிக்கர்கள் உளிட்ட ஏனையவர்களையும் நாம் இந்த சந்தர்ப்பத்தில் நினைவுகூருகின்றோம். அத்துடன் அமைதிக்காக நாம் அனைத்து மதத்தினருடனும் இணைந்து நிற்கின்றோம்.

இந்த ஆலயம் இலங்கையின் மத பன்முகத் தன்மையை வெளிப்படுத்துவதாக திகழ்வதுடன் நாட்டின் நெகிழ்ச்சித் தன்மைனை வெளிக்காட்டுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

இந்தியப் பெருங்கடல் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் : கொழும்பு மாநாட்டில் அஜித் தோவல்

கடல்சார் பயங்கரவாதம் உள்ளிட்ட பகிரப்பட்ட பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் அண்டை நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தினார்.

மாலைதீவில் இடம்பெற்ற 5 ஆவது கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அஜித் தோவல் இதனைத் தெரிவித்தார்.

புதன்கிமை ஆரம்பிக்கப்பட்டு இரு நாட்களாக இடம்பெற்ற இந்த மாநாட்டில் இந்தியா, இலங்கை, மாலைதீவு, மொரிஷியஸ், பங்களதேஷ் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பகிரப்பட்ட பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள கடல்சார் அண்டை நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தினார்.

மாநாட்டில் உரையாற்றிய மாலைத்தீவு பாதுகாப்பு அமைச்சர் மரியா தீதி கூறுகையில், போதைப்பொருள் கடத்தல், மனித கடத்தல், கடற்கொள்ளையர், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் வன்முறை தீவிரவாதம் போன்ற மாலைத்தீவு எதிர்கொள்ளும் பிராந்திய பாதுகாப்பு சவால்களை எடுத்துரைத்ததோடு ரஷ்யா-உக்ரைன் மோதலின் தாக்கங்களையும் குறிப்பிட்டார்.

உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை 4 ஆக உயர்த்தப்பட்டதுடன் பார்வையாளர் நாடுகள் விரைவில் மாநாட்டில் சேரும் என்று நம்பிக்கை தெரிவித்தார். பங்களாதேஷ் மற்றும் சீஷெல்ஸ் ஆகியவை பார்வையாளர் நாடுகளாகும்.

கடல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு, மனித கடத்தல், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் இணைய பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய நான்கு தூண்களான பாதுகாப்பு ஒத்துழைப்புடன் இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கு இடையே ஒரு முத்தரப்பு பாதுகாப்பு கட்டமைப்பாக கொழும்பு பாதுகாப்பு மாநாடு நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

எதிர்வரும் மாதம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) அடுத்த மாதம் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க இலங்கை தீர்மானித்துள்ளது.

இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரிகளிடம் இலங்கையின் பிரேரணையை கையளிப்பதற்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வொஷிங்டன் செல்ல உள்ளார்.

இந்த விஜயம் ஏப்ரல் நடுப்பகுதியில் இடம்பெறும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் சில வாரங்களில் இலங்கை அதிகாரிகளுக்கும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெறவுள்ள சந்திப்பு கடன் மறுசீரமைப்பு நோக்கத்திற்காக அல்ல என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சில செய்தி நிறுவனங்கள் வௌியிட்டு செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கைக்கு மீண்டும் 500 மில்லியன் டொலர் கடன் வழங்குகிறது இந்தியா

இலங்கையில் எழுந்துள்ள எரிபொருள் நெருக்கடியை நிவர்த்திக்க ஒத்துழைப்பு வழங்குவதற்கு இந்தியா தயாராகி வருகின்றது.

இதற்கமைய, இந்தியாவின் EXIM வங்கி இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் கடன் வழங்கவுள்ளது.

இந்த கடன் வசதியின் கீழ் கொள்வனவு செய்யப்படும் முதலாவது எண்ணெய் தொகை இந்த மாதம் 15 ஆம் திகதி கிடைக்கவுள்ளது.

500 மில்லியன் டொலரில் 75 வீதத்தை இந்தியாவிடமிருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்த வேண்டும் என இந்திய EXIM வங்கி தெரிவித்துள்ளது.

25 வீதத்தை மூன்றாவது தரப்பிடமிருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்த முடியும்.

இந்த கடனை மீள செலுத்துவதற்கான கால அவகாசத்தை 12 மாதங்களை விட நீடிக்க முடியாது என இந்திய EXIM வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியா ஏற்கனவே அத்தியாவசிய பொருள் கொள்வனவிற்காக வழங்கிய 500 மில்லியன் டொலர் கடன் , 400 மில்லியன் டொலருக்கான வட்டியை மீளச் செலுத்துவதற்கு இலங்கை கால அவகாசம் கோரியுள்ள பின்புலத்திலேயே இந்தியா இந்த கடன் தொகையை வழங்குகின்றது.

மருந்து, அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மேலும் ஒரு பில்லியன் டொலர் கடன் வசதியை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

இதன் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வதற்காக நிதி அமைச்சர் அடுத்து வரும் சில வாரங்களில் இந்தியா செல்லவுள்ளார்.

இதேவேளை, இந்தியா கடனை வழங்குவதற்காக கடும் நிபந்தனைகளை விதித்துள்ளதாக அண்மையில் தகவல் வௌியானது.

Posted in Uncategorized

நல்லூர் மந்திரி மனை யன்னல்கள் திருட்டு!

வரலாற்று தொன்மை வாய்ந்த நல்லூர் மந்திரி மனை யன்னல் மற்றும் யன்னல் கம்பிகள் என்பன களவாடப்பட்டுள்ளன.

மந்திரி மனையின் பின் பக்கமாக காணப்பட்ட யன்னல்களின் கம்பிகள் மற்றும் யன்னல் என்பவை பெயர்த்தெடுக்கப்பட்டு திருடப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கட்டிடத்தின் வரலாற்று பின்னணி

மந்திரி மனை என்பது இலங்கையின் வட பகுதியில் இருந்த யாழ்ப்பாண மாவட்டத்தின் தலை நகராக இருந்த நல்லூரில் அரச காலத்தோடு சம்மந்தபடும் ஒரு கட்டிடமாகும்.

போர்த்துக்கேயரால் யாழ்ப்பாண அரசு கைப்பற்றப்படுவதற்க முன்னுள்ள காலப்பகுதி வரை அமைச்சரின் இருப்பிடமாக இருந்துள்ளது.

இது 13 நூற்றாண்டுக்கு முற்பட்டது. இக் கட்டிடம் செங்கட்டி சுண்ணாம்பு சாந்து மரங்கள் ஓடுகள்கொண்டு கட்டப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இனிவரும் தேர்தல்களில் தனித்தே போட்டியிடும் : ஐயம் கொள்ளத் தேவையில்லை என்கிறார் நிமல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிடும். அதில் எவ்வித ஐயமும் கொள்ளத் தேவையில்லை.

எம்மால் வலியுறுத்தப்பட்டு வந்த சர்வகட்சி மாநாட்டுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதன் மூலம் அரசாங்கத்தில் சுதந்திர கட்சிக்கு தற்போது எந்தளவிற்கு முக்கியத்துவமளிக்கப்படுகிறது என்பது தெளிவாகிறது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொழும்பு மாவட்ட மாநாடு நேற்று வியாழக்கிழமை 10 ஆம் திகதி கொழும்பு – விகாரமஹாதேவி பூங்காவில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டும் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சி காலத்தில் சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளராக நியமனம் பெறுவது இலகுவானதொரு விடயமல்ல.

எவ்வாறிருப்பினும் கடந்த தேர்தல்களில் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் இடம்பெற்ற தவறால் கொழும்பில் ஒரு ஆசனத்தைக் கூட பெற்றுக் கொள்ள முடியாமல் போனது. அதற்காக கொழும்பு மக்களிடம் நான் மன்னிப்பு கோருகின்றேன்.

இவ்வாறு கட்சியை மறுசீரமைப்பதற்கு எவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் தேர்தல் முடிவுகள் மக்கள் கைகளிலேயே உள்ளது.

அண்மையில் இடம்பெற்ற மத்திய குழு கூட்டத்தில் அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் , நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கான தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த சர்வகட்சி மாநாட்டினைக் கூட்டுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அரசாங்கத்தில் தற்போது சுதந்திர கட்சிக்கு எந்தளவு முக்கியத்துவமளிக்கப்படுகிறது என்பது தெளிவாகிறது.

எனினும் இதனை எண்ணிக்கொண்டு நாம் ஒருபோதும ஏமாந்து விட மாட்டோம். அடுத்தடுத்த தேர்தல்கள் அனைத்திலும் தனித்தே போட்டியிடுவோம்.

பிரதேசசபை தேர்தலானாலும் , மாகாணசபை தேர்தலானாலும் , பாராளுமன்ற தேர்தலானாலும் சு.க தனித்தே போட்டியிடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

தேர்தலின் பின்னர் எமது கொள்ளைகளுடன் இணக்கப்பாட்டினை எட்டும் எந்தவொரு தரப்பினருடனும் கூட்டணியமைப்பதற்கு தயாராகவே உள்ளோம்.

அதற்காக புதிய சக்தியுன் சுதந்திர கட்சியை வலுப்படுத்துவதற்கு அனைவரதும் ஒத்துழைப்பினைக் கோருகின்றோம் என்றார்.

Posted in Uncategorized

லொஹானின் அமைச்சுப் பதவி ஏற்பு நீதியை மீண்டும் கேள்விக்கு உட்படுத்தியுள்ளது; சபா குகதாஸ்!

லொஹானின் அமைச்சுப் பதவி ஏற்பு நீதியை மீண்டும் கேள்விக்கு உட்படுத்தியுள்ளது என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான சபா குகதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இராஐாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அவர்களுக்கு ஏற்கனவே இருந்த இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் கைத்தொழில் விடையதானங்களுக்கு மேலதிகமாக (10/03/2022) களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், படகு மற்றும் கப்பற்தொழில் அபிவிருத்தி இராஐாங்க அமைச்சு ஐனாதிபதியால் இன்று வழங்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் லொஹான் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஐாங்க அமைச்சராக இருந்த போது மது போதையில் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல் கைதி ஒருவரை அழைத்து தனது கைத் துப்பாக்கியை கைதியின் தலையில் வைத்து தனது சப்பாத்தை நாக்கால் நக்குமாறு பணித்ததுடன் இழிவான வார்த்தகளால் பேசிய ரத்வத்த தொடர்பான நீதித்துறை விசாரணை நடவடிக்கை முடிவில்லாமல் தொடரும் போது மீண்டும் அமைச்சு பதவி வழங்கப்பட்டமை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்பதை மீண்டும் மீண்டும் உறுதி செய்கின்றது.

மனித உரிமைப் பேரவையில் சிறிலங்காவின் நீதி அமைச்சரும் வெளிவிவகார அமைச்சரும் உள்ளக பொறிமுறையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதாக கூறிய வாக்குறுதி ஏமாற்று என்பதை லொஹானின் பதவி ஏற்பு வெளிப்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு சபை அமர்வுக்கு மாட்டு வண்டியில் சென்ற ரெலோ தவிசாளர் விஜிந்தன்

நாட்டில் அதிகரித்துள்ள பொருட்கள் விலையேற்றம், எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் இன்று(10) மாட்டு வண்டிலில் பிரதேச சபைக்கு சென்று கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

நாட்டின் இந்த நிலைமைகளுக்கு அரசு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் எனக் கோரி கவனயீர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து மாட்டு வண்டியில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) மத்திய குழு உறுப்பினரும் கரைதுறைபற்று பிரதேசசபை தவிசாளருமான விஜிந்தன், உப தவிசாளர் உறுப்பினர்கள் பிரதேசசபையை நோக்கி இன்று சென்றுள்ளனர்.

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் 46வது சபை அமர்விற்கே இவ்வாறு மாட்டு வண்டியில் உறுப்பினர்கள் வந்து கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.