13ஆவது திருத்தச்சட்டம் தோல்வி கண்ட பொறிமுறை – தேசிய மக்கள் சக்தி

“அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தோல்வி கண்ட பொறிமுறையாக இருந்த போதிலும் மாற்றுத் தீர்வை முன்வைக்காமல் அதனை நீக்க முடியாது. அவ்வாறு நீக்க முற்பட்டால் அது வேறு பிரச்சினைக்கு வழிவகுக்கக்கூடும்.”

– இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்திய கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அத்துடன், அரசியலுக்காகத் தமிழ் மக்களை ஏமாற்ற வேண்டிய எந்தவொரு தேவைப்பாடும் தேசிய மக்கள் சக்திக்குக் கிடையாது எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் மூலம் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர். இவ்வாறு தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி தயாரில்லை. எனவே, இந்த நாட்டை மாற்றுவதற்காக அனைத்து இன மக்களையும் அரவணைத்துக்கொண்டு புதியதொரு திசையை நோக்கி நகர வேண்டும்.

13 ஆவது திருத்தச் சட்டம் ஊடாகப் பிரச்சினைகள் தீரவில்லை. அது தோல்வி கண்டதொரு பொறிமுறையாகும். நானும் மாகாண சபையில் அங்கம் வகித்துள்ளேன். தீர்வுக்குப் பதிலாக அதன்மூலம் நிர்வாகப் பொறிமுறையில் பிரச்சினைகள் வந்துள்ளன.

13 ஆவது திருத்தச் சட்டம் ஊடாக எதிர்பார்க்கப்பட்ட விடயங்கள் நிறைவேறாத போதிலும், அது வெள்ளை யானையாகக் கருதப்பட்டாலும் தற்போது வடக்கு, கிழக்கு மக்கள் 13 என்பது தாம் வென்றெடுத்த உரிமையாகவே கருதுகின்றனர். எனவே, இதற்கு மாற்றுத் தீர்வை வழங்காமல் ஒரேடியாக 13 ஐ நீக்கினால் அது வேறு பிரச்சினைக்கு வழிவகுக்கும்.

13 ஆவது திருத்தச் சட்டம் தற்போதுள்ளவாறு அமுலாக்கப்படும். பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு கண்ட பின்னர், அதனைக் குறுகிய காலப்பகுதிக்குள் செய்ய முடியும். புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும். அதன்மூலம் அனைத்து இன மக்களினதும் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும். அனைவரும் சம உரிமை பெற்ற சமூகமாக வாழ முடியும்.” – என்றார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியப் பிரதமர்

இந்தியாவில் மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று ஜனாதிபதியின் ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆசுமாரசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“இந்தியப் பிரதமரின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா சென்றிருந்தார். இந்தியா என்பது எமது பெரிய அண்ணன். எனவே, அந்நாட்டுடன் நெருக்கமான உறவைப் பேண வேண்டியது அவசியம்.

இந்தியப் பிரதமர் விரைவில் இலங்கை வரவுள்ளார். திகதி விவரம் இன்னும் உறுதியாகவில்லை. ஆகஸ்ட் மாதமளவில் வருவார் என எதிர்பார்க்கின்றோம்.

ஏனைய அயல் நாடுகளைவிடவும் இலங்கை தொடர்பில் இந்தியா கூடுதல் கரிசனையைக் கொண்டுள்ளது. ஜனாதிபதி ரணிலுக்கு வழங்கப்பட்ட பிரமாண்ட வரவேற்பும், மோடியின் அணுகுமுறையும் இதற்குச் சான்றாகும்.

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி ரணில்தான் என்பது இந்தியப் பிரதமர் மோடிக்கும் தெரிந்துள்ளது.” – என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் நாணய நிதிய வேலைத்திட்டங்களை மாற்றியமைப்பின் நாட்டின் நலன்கள் பாதிக்கப்படும்

புதிதாக ஆட்சியமைக்கின்ற அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத் திட்டங்களை மாற்றியமைக்குமானால் அது நாட்டின் நலனிற்குப் பாதகமாகவே அமையுமென சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடைபெற்ற பின்னர் புதிதாக ஆட்சியமைக்கின்ற அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டங்களை மாற்றியமைப்பதற்கான வாயப்புகள் ஏற்படுமா என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அத்துடன் மறுசீரமைப்பு விடயங்கள், வரிகளின் குறைப்பு, அதற்கான வாய்ப்புகள் காணப்படுமா என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவரிடம் கேள்வி எழுப்பபட்டிருந்தது.

இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர்,

இலங்கை இவ்வாறான நெருக்கடிக்கு முகம் கொடுப்பதற்கு பிரதான காரணமே அரசாங்கத்தின் வருமானத்தை குறைப்பதற்காக முன்னெடுத்த திட்டங்கள் ஆகும்.

எனவே நான் இரண்டு விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளேன். ஒன்று எவ்வாறு அரச வருவாயை மீளக் கட்டியெழுப்புவது.

இரண்டாவது இலங்கையை இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அனுமதிக்கும் வேலைத்திட்டங்கள் பங்கு தொடர்பாக குறிப்பிட்டுள்ளேன்.

நிச்சயமாக இங்கே நாம் செலவினங்களுக்கும் வருவாய்க்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

செலவுகளுக்கு இணையாக அரச வருமாணத்தை உயர்த்த நடவடிககை அவசியம். இதற்கு வரிவருமானம் அவசியமானது.

இவ்வாறு செய்வதன் ஊடகவே மேலும் கடனை பெறமுடியும். இன்னும் இது தொடர்பாக விரிவாகப் பேசவெண்டும்.

இது தொடர்பாக கருத்துக்களை பெறுவதற்கு நாம் தயாராகவே உள்ளோம். பொது நிதி மேலாண்மை சட்ட மூலம் ஒன்று தற்பொது நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது நிதி கட்டமைப்பை வலுப்படுத்தும் சட்டமூலமாகும். அத்துடன் இந்த சட்டமூலம் நிதிப் பொறுப்பை அதிகரிக்க இலங்கைக்கு உதவும்.

இதன் மூலம் அரச செலவுகளையும் கட்டுப்படுத்த முடியும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராய ஜனாதிபதி நியமித்த குழுவை ஏற்றுக் கொள்ள முடியாது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முன்னைய புலனாய்வுத் தகவல்கள் தொடர்பில் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவை ஏற்றுக்கொள்ள முடியாது என கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் சிறில் காமினி தெரிவித்துள்ளார்.

கொழும்பு நடைபெற்ற கத்தோலிக்க திருச்சபையின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

குழுவின் முன் சாட்சியமளிக்க வேண்டியவர்கள் இன்னும் அந்தந்த பதவிகளில் இருப்பதால், சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணை நடைபெறுவது சந்தேகத்திற்குரியது என்று அவர் கூறினார்.

எனவே மூன்று மாதங்களுக்குள் தேவையான சட்டவிதிகளை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உரிய விசாரணை அதிகாரியை நியமிக்க ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட விடையங்கள் எதுவும் இதுவரையில் அமுல்படுத்தப்படவில்லை எனவும், ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு மக்களை ஏமாற்றும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என சந்தேகம் இருப்பதாகவும் சிறில் காமினி குறிப்பிட்டுள்ளார்.

13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்படுவதை இரத்தம் சிந்தியேனும் முறியடிப்பேன் – மேர்வின் சில்வா

13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த முயற்சித்தால், இரத்தம் சிந்தியேனும் அந்த முயற்சியை முறியடிப்பேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தப்போவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்ட கருத்து தொடர்பாக, இவ்வாறு கருத்து தெரிவித்த மேர்வின் சில்வா, நாட்டை பாதுகாத்து கொள்வதற்கு இரத்தம் சிந்த தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“சஜித் பிரேமதாச 13வது திருத்தச் சட்டத்தை வழங்குவோம் என வடக்கில் சஜித் கூறுகின்றார்.

13 ஆவது திருத்தத்திலுள்ள எதனை அவர் வழங்கப் போகின்றார்?

காணி அதிகாரங்களை அல்லது பொலிஸ் அதிகாரங்களை வழங்குகிறாரா, என்பதை அவர் தெளிவுபடுத்தவேண்டும்.

இந்த நாட்டில் வடக்கிற்கு தெற்கிற்கு என வெவ்வேறு அதிகாரங்கள் இருக்க முடியாது.

பொலிஸ் அதிகாரமும் காணி அதிகாரமும் மத்திய அரசாங்கத்தின் கைகளில் இருக்க வேண்டும்.
மாறாக மாகாணங்களுக்கு இந்த அதிகாரங்கள் பகிரப்படக்கூடாது.

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை நான் உயிரோடு இருக்கும் வரை அமுல்படுத்த விடமாட்டேன்.

அதையும் மீறி யாரேனும் 13 ஆவது திருத்தச்சட்டத்திலுள்ள அதிகாரங்களை வழங்கினால், இரத்தம் சிந்தியேனும் வீதியில் இறங்கி அந்த முயற்சியை முறியடிப்பேன்.

சஜித்தின் தந்தையான ரணசிங்க பிரேமதாச அதிகளவான ஆயுதங்களை புலிகளுக்கு வழங்கியிருந்தார்.

இதனால் நூற்றுக் கணக்கான பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டனர். அது குறித்து நான் இங்கு பேசப் போவதில்லை” என மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

ஒக்டோபர் 5 இல் ஜனாதிபதித் தேர்தல் ! – ஹரின் பெர்ணான்டோ

ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் 5 ஆம் திகதி இடம்பெறும் என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

காலியில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் 5 ஆம் திகதி நிச்சயமாக நடக்கும். அப்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.

அவர் எப்படி வெல்வார் என்பதை வென்ற பிறகு நான் காண்பிக்கிறோம். ஐ.எம்.எப். தற்போது எமது அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் திருப்தியடைந்துள்ளது.

பலரும், ஐ.எம்.எப். எமக்கு உதவிகளை செய்யாது என நாடாளுமன்றத்தில் கூறினார்கள். நாடாளுமன்றில் ஜனாதிபதியாக தெரிவாக, நான் வாக்களித்த எனது நண்பரும் ஐ.எம்.எப். எமது நாட்டுக்கு உதவிகளை செய்யாது எனக் கூறினார்.

இப்போது ஐ.எம்.எப். எமக்கான கடனுதவிகளை வழங்க முன்வந்தவுடன், எதிர்க்கட்சித் தலைவரினால்தான் இது சாத்தியமானது என்று கூறுகிறார்கள்.

இதிலிருந்தே இவர்கள் அரசியல் ரீதியாக எந்தளவு தெளிவுடன் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

இவர்களிடம் ஆட்சி சென்றால், யாழில் எத்தனை டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டு மைதானங்கள் இருக்கிறது என்று கேட்ட நிலைமை தான் நாட்டுக்கும் ஏற்படும்.

இதுதொடர்பாக மக்கள் சிந்திக்க வேண்டும்” என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு சமஸ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை வழங்க தென்னிலங்கை சக்திகள் தயாரில்லை – சபா.குகதாஸ்

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு சமஸ்டி அடிப்படையிலான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை ஐக்கிய இலங்கைக்குள் ஏற்படுத்தக் கூடிய அரசியல் அமைப்பை உருவாக்க கூடிய நிலைப்பாட்டை தென்னிலங்கை சக்திகள் எவரும் தயாராகவில்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரால் இன்றையதினம்(13) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய இனப்பிரச்சினை என்ற விடயத்தை மறைத்து தமிழர்களின் பெரும் தியாகத்தை ஒரே நிகழ்ச்சி நிரலில் சிதைக்க வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகும் பிரதான மூன்று சிங்கள வேட்பாளர்களும் அவர்கள் சார்ந்த அணியும் ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்கள் அற்ற 13ம் திருத்தத்துக்குள் தமிழர்களை சிக்க வைத்து வாக்குகளை கபளீகரம் செய்து விடலாம் என்ற கனவுடன் யாழ்ப்பாணத்தில் தமது உரையாடலை ஆரம்பித்துள்ளனர்.

தென்னிலங்கையில் பௌத்த சிங்கள நாடு என்ற கோட்பாட்டை பாதுகாப்பதுடன் சமஷ்டி மற்றும் 13ம் திருத்தம் என்பவற்றுக்கான பேச்சுக்கூட எவருடனும் இருக்காது என சிங்கள மக்களுக்கு சத்தியம் செய்யாத குறையாக உரையாடும் அதே தரப்பு வடக்கில் யாழ்ப்பாணத்தில் அதற்கு எதிரான நிலையில் உரையாடுகின்றனர்.

பூகோள நாடுகளுக்கு தமிழர் தரப்பு ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை ஏற்று விட்டார்கள் என்ற விம்பத்தை உருவாக்கவும் அதன் மூலம் கடந்த கால உயர்ந்த பட்ச கோரிக்கைகளில் இருந்து கீழ் இறங்கி விட்டனர் என்ற நிலையை வெளியில் காட்டவும் சிங்கள பேரினவாதம் வேறுபட்ட முகாங்களில் இருந்தாலும் தமிழர் விடயத்தில் ஒரே நிகழ்ச்சி நிரலில் நகருகின்றனர்.

தேசிய இனப்பிரச்சினைக்கு சமஸ்டி அடிப்படையிலான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை ஐக்கிய இலங்கைக்குள் ஏற்படுத்தக் கூடிய அரசியல் அமைப்பை உருவாக்க கூடிய நிலைப்பாட்டை தென்னிலங்கை சக்திகள் எவரும் கொண்டிருக்க வில்லை என்ற மனோநிலை யாழில் நடைபெறும் சந்திப்புக்கள் உறுதி செய்துள்ளன.

தமிழர் தரப்பு நிதானமாக சிந்தித்து உறுதியான முடிவுகளை எடுக்கவிட்டால் விலை மதிப்பிட முடியாத தியாகங்கள் கரைந்து போய்விடும் எனவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் நடாத்தப்பட வேண்டும்; எமது உரிமைகளைப் பறிக்க எவருக்கும் அதிகாரமில்லை – பேராயர் மல்கம் ரஞ்சித்

“சர்வசன வாக்கெடுப்பை நடத்தி இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குத் தாமே ஆட்சிசெய்ய முடியுமா என்று பார்க்க பட்டத்தைப் பறக்கவிட்டுப் பார்க்கிறார்கள். அதனை ஒருபோதும் ஏற்க முடியாது. அரசியலமைப்பொன்று இருக்கிறது. அதன் பிரகாரம் ஐந்து வருட ஆட்சி நிறைவின் பின்னர் கட்டாயம் தேர்தலை நடத்தியே ஆகவேண்டும். எமது உரிமைகளைப் பறிக்க எவருக்கும் அதிகாரம் இல்லை” என்று மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

கொழும்பு ஆயர் மெக்ஸ்வெல் சில்வாவால் எழுதப்பட்ட ‘இலங்கையில் கிறிஸ்தவ தர்மத்தைக் கற்பிப்பதற்கான சவால்கள்’ என்ற தலைப்பிலான நூலின் வெளியிட்டு விழா நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்றது.

அந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

நாங்கள் ரெஜிமண்ட் சமூகத்தில் இல்லை. பட்டம் அனுப்பும் விதம் தெரியுமா? இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்காக மக்களின் வெறுப்புக்குள்ளான ஆட்சியாளர்களே மீண்டும் இந்த நாட்டை ஆட்சி செய்ய சர்வசன வாக்கெடுப்பை நடத்த முடியுமா என்பதைப் பார்ப்பதற்காக பட்டம் விடுகிறார்கள்.

அதனை ஒருபோதும் ஏற்க முடியாது. அரசியலமைப்பொன்று இருக்கிறது. அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு ஐந்து வருட காலம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஐந்து வருடங்கள் நிறைவடைந்ததன் பின்னர் அவர்கள் தேர்தலை நடத்த வேண்டும். பிரஜைகள் என்ற அடிப்படையில் அது எமது உரிமையாகும்.

அரசாங்கத்தால் எமது உரிமைகளைப் பறிக்க முடியாது.

குழந்தையிடமிருந்து அதன் கெளரவத்தை எவ்வாறு பறிக்க முடியாதோ, அதேபோன்று சுதந்திரத்துக்கான எந்தவொரு விடயத்தையும் அரசாங்கத்தால் பறிக்க முடியாது. இதுவரையில் கண்டது சகலதும் போதும். சுதந்திரமான தேர்லொன்றினூடான எமது தலைவர்களைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு வழங்க வேண்டும். அது எமது உரிமையாகும். அது எமக்கு அவசியமானதாகும் என்றார்.

நலன்புரித் திட்டங்களை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் நலன்புரித் திட்டங்களை வினைத்திறனுள்ளதாக்கி அதன் பயன்களை மக்களுக்கு துரிதமாக வழங்குவதற்கு ஆளுநர்கள் பங்களிக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாகாண ஆளுநர்களுடன் நேற்று (12) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது மாகாண மட்டத்தில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை விரைவாகத் தீர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் உறுமய காணி உறுதி வழங்கும் திட்டத்தின் வினைத்திறன் என்பன குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் உறுமய காணி உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை வினைத்திறன் மிக்கதாக மாற்றுவதற்கு கிராம உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக மற்றுமொரு குழுவிற்கு அதிகாரத்தை வழங்கி நடமாடும் சேவைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பில் மக்களை ஆர்வமூட்டி, அவர்களுக்கு அந்த நன்மையை வழங்க வேண்டிய பொறுப்பு பிரதேச செயலாளர்களுக்கு உள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது தெரிவித்தார்.

சார்க் பொதுச் செயலாளர் ஜனாதிபதி இடையில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சார்க் அமைப்பின் பொதுச் செயலாளர் கோலம் சர்வார்க்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

சார்க் நாடுகளுக்கிடையிலான பல்வேறு திட்டங்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அது தொடர்பில் பாரபட்சமின்றி தலையீடு செய்யுமாறு சார்க் பொதுச் செயலாளரிடம் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

இலங்கையில் செயற்படுத்தப்படும் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், அதற்கு சார்க் நாடுகளின் ஆதரவை பெறுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை சார்க் கலாச்சார மையத்தை மொடர்ன் ஆர்டிற்காக மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.