யாழ்ப்பாணம் செல்கிறார் மைத்திரிபால சிறிசேன

முன்னாள் ஜனாதிபதியும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளருமான மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள நிலையில், அதில் கலந்துகொள்ளும் ​நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாநாடு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

சீனாவினால் இன்று முழு ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளது

நாடுகளுக்கிடையிலான நட்புறவு மற்றும் தன்னம்பிக்கையுடன் எழுச்சி பெற்ற சீனாவினால் இன்று முழு ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நிறைவையும், இரப்பர்-அரிசி ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு நிறைவையும் முன்னிட்டு இன்று (17) பிற்பகல் தாமரை தடாக அரங்கில் நடைபெற்ற நிகழ்வின்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நினைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு நூல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பதில் தலைவர் வீரசுமண வீரசிங்கவினால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்வில் பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு, நான் எனது உரையை ஆரம்பிப்பதற்கு முன்னர், அனைத்து அன்பான வார்த்தைகள் மற்றும் அந்த வார்த்தைகளின் பின்னணியிலுள்ள செயல்பாடுகளுக்கு அதிமேதகு சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நமது மக்களிடையே நாம் பகிர்ந்து கொள்ளும் ஆழமான வேரூன்றிய நட்புறவால் நமது நாடுகளுக்கிடையேயான வலுவான பிணைப்புகள் மேலும் வலுப்பெறும் என்று நான் நம்புகிறேன்.

சீனா நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு நாடு. மேலும் இது ஒரு பெரிய வரலாறு. அந்த மாபெரும் வரலாற்றுக்கு கொன்ஃபியுசியஸின் தத்துவம் உதவியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

சீன வரலாற்றில் மற்றொரு முக்கியமான விடயம் என்னவென்றால், சீனா ஒரு பெரிய நாடாக இருந்த போதிலும் எந்த நாட்டையும் ஒருபோதும் ஆக்கிரமித்ததில்லை. அதேபோன்று தனது தாய்நாட்டை எந்த அந்நிய சக்திக்கும் அடிபணிய அனுமதிக்கவில்லை.

கடந்த காலங்களில், சீனாவைக் கைப்பற்றும் உலக வல்லரசுகளின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. சீனா தொடர்ச்சியாக ஐக்கிய அமெரிக்காவாக இருப்பதற்கு இன்றுவரை முடிந்துள்ளது.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் 2000 வருடங்களுக்கு முன்னிருந்தே காணப்படுவதாக வரலாறு கூறுகிறது. பௌத்தம், சர்வதேச வர்த்தகம் மற்றும் கலாசார உறவுகள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு வளர்ந்துள்ளது.

பல்வேறு படையெடுப்புகளைச் சந்தித்து 1949 இல் புதிய சீனா உதயமாகியது.

சீனத் தலைவர்களுடன் அரசியல் ரீதியாக உறவுகளைப் பேணுவதற்கு கலாநிதி சுகீஸ்வர விக்கிரமசிங்க நடவடிக்கை மேற்கொண்டார். 1945 இல் உலக தொழிற்சங்க கூட்டமைப்பு நிறுவப்பட்ட தொடக்க விழாவில் கலந்து கொண்டார். அது பரிஸில் நடைபெற்றது. சீன தலைவர்களும் கலந்து கொண்டனர். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான அரசியல் உறவு அங்கிருந்தே கட்டியெழுப்பப்பட்டது.

சீனாவிற்கு விஜயம் செய்த முதலாவது அரசியல் பிரதிநிதிகள் குழுவில் பிலிப் குணவர்தன, எஸ்.டி.பண்டாரநாயக்க, எட்மன் சமரக்கொடி, எஸ்.ஜி.எஸ்.ரத்னவீர ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதன் பின்னர் இலங்கை – சீன நட்புறவு சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. வண. உடகெந்தவல சிறி சரணங்கர தேரர், குசுமா குணவர்தன, தேஜா குணவர்தன, பீட்டர் கென்மன், எஸ்.டி. பண்டாரநாயக்க உள்ளிட்ட குழுவினரே இதற்கு தலைமை தாங்கினர்.

இரப்பர் அரிசி ஒப்பந்தம் (1952) நட்பின் மற்றொரு மைல்கல் என்று கூறலாம். உண்மையில் 1956 ஆம் ஆண்டு பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் போதே நட்பிற்கு சிறந்த அடித்தளம் இடப்பட்டது. அமரர் திரு.பண்டாரநாயக்க அவர்கள் வெளியுறவுக் கொள்கையில் தெளிவான மாற்றத்தை ஏற்படுத்தினார். சோசலிச அரசுகளுடன் உறவுகளை ஏற்படுத்தினார்.

இடதுசாரி இயக்கம், தொழிற்சங்க இயக்கம் மற்றும் இளம் மாணவர் இயக்கம் ஆகியவை சீனாவை அங்கீகரிப்பதற்காகவும், சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்காகவும் பாரிய போராட்டங்களை நடத்தின. நான் தர்ஸ்டன் கல்லூரியில் மாணவனாக இருந்தபோது அந்தப் பேரணிகளில் கலந்துகொண்டேன்.

சீனாவுக்கான முதல் தூதுவர் வில்மட் ஏ பெரேரா என்பது எனக்கு நினைவிருக்கிறது. சூரியகாந்தி மலர் வியாபாரத்தில் முன்னோடியாக திகழ்ந்தார். அதன் பிறகு ஏ.பீ. பெரேரா, ரொபர்ட் குணவர்தன, வில்லியம் கொபல்லாவ ஆகியோர் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தினர். இதன்போது டி.பீ.சுபசிங்க விசேட பங்கு வகித்தார்.

1978க்குப் பின்னர் சீனா புதிய பொருளாதார உத்திகளைக் கையிலெடுத்தது. 1978 மற்றும் 2010 க்கு இடையில் மிக விரைவான வளர்ச்சி ஏற்பட்டது. கடந்த தசாப்தத்தில் சீனா இரண்டு புதிய பொருளாதார திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. முதலில் புதிய பட்டுப்பாதை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இலங்கையும் அதன் ஒரு ஸ்தாபக உறுப்பினர். இரண்டாவது திட்டம் தீவிர வறுமை ஒழிப்பு திட்டம். இதனூடாக 800 மில்லியன் மக்களைக் கடுமையான வறுமையிலிருந்து மீட்டெடுக்க முடிந்தது. உலக வரலாற்றில் இது ஒரு வரலாறு காணாத வெற்றியாகும்.

இன்று உலகின் மிகப்பெரிய சந்தையாக சீனா உள்ளது. சீனா ஏற்கனவே உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக மாறிவிட்டது. சீனாவினால் ஒட்டுமொத்த ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளது. சீனா தன்னம்பிக்கையுடன் எழுச்சி பெற்றது. அதேபோன்று நாடுகளுக்கு இடையிலான நட்புறவுடன். சீனா நமது வரலாற்று நட்பு நாடு. அதை நான் இங்கே குறிப்பிட வேண்டும்.

சீனாவின் தற்போதைய ஜனாதிபதி சீ ஜின்பிங் எமது தனிப்பட்ட நண்பரும், அதேவேளை இலங்கையின் நல்ல நண்பரும் ஆவார். இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களில் அவர் எமக்கு உதவுகிறார்.

2012 ஆம் ஆண்டு முதல் சீனா அதிபர் சீ ஜின்பிங் அவர்களின் வலுவான தலைமையின் கீழ் புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சீனாவின் தலைவிதியை மாற்றியமைத்து, இன்று அனுபவிக்கும் வெற்றியை சீனாவுக்கு வழங்குவதற்கும் அவரது தலைமைத்துவம் முக்கிய காரணியாக இருந்தது என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். இல்லையெனில் இன்று நாம் காணும் சீனா இருந்திருக்காது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 100வது ஆண்டை குறிக்கும் வகையிலான விழாவில் ஆன்லைனிலும் பங்கேற்றேன். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாடு 2022ல் நடைபெற உள்ளது. அது வெற்றியடைய வாழ்த்துவதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

சீன – இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நினைவு நாணயம் ஒன்றையும் வெளியிட்டோம். எங்கள் நட்பின் அடையாளமாக அதைச் செய்தோம்.

சீனா ஒவ்வொரு முக்கியமான தருணத்திலும் இலங்கையுடன் நட்புறவுடன் இருந்து வருகிறது. சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை தொடர்ந்து வலுப்படுத்துவது எமது எதிர்பார்ப்பும் பொறுப்புமாகும் என பிரதமர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

தேசிய தேர்தல்கள் குறித்து கட்சி பிரதிநிதிகளுடன் அடுத்த வாரம் முக்கிய சந்திப்பு

தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பிலான பாராளுமன்ற தெரிவு குழுவிடம் சமர்ப்பித்துள்ள யோசனை தொடர்பில் அரசியல் கட்சிகளின் ஆதரவை பெற்றுக் கொள்ளும் நோக்கில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கும்,தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்குமிடையிலான விசேட பேச்சுவார்த்தை எதிர்வரும் 23ஆம் திகதி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்கள் குறித்து இச்சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாக அறிய முடிகிறது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ,மாகாண சபை தேர்தல் ஆகிய இரு பிரதான தேர்தல்களை நடத்தவதற்கான தேவை அத்தியாவசியமானதாக காணப்படும் பட்சத்தில் அது குறித்து அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.

சபை முதல்வர் தினேஷ் குணவர்தன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் முறைமை தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவு குழுவிடம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு முன்வைத்துள் யோசனைகளை செயற்படுத்த அரசியல் கட்சிகளின் ஆதரவை பெற்றுக் கொள்ளும் வகையில் தேர்தல் ஆணைக்குழு அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளது.

2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் மாகாண சபை தேர்தல் அல்லது உள்ளுராட்சிமன்ற தேர்தல் நடத்துவதற்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுவதாக ஆளும் தரப்பின் முக்கிய தரப்பினர்கள் குறிப்பிட்டுள்ளமை அவதானத்திற்குரியது.

60 சதவீத பிரதிநிதிகளை விகிதாசார தேர்தல் முறைமையின் அடிப்படையிலும் 40 சதவீத பிரதிநிதிகளை தொகுதிவாரி தேர்தல் முறைமையின் கீழ் தெரிவு செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

தேர்தல் முறைமை மற்றும் தேர்தல் சட்டம் மறுசீரமைப்பு தொடர்பில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவு குழு கடந்தவாரம் கூடியபோது இவ்விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் சகல அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்களிலும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்குவது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் உள்ளுராட்சிமன்றங்களின் தற்போதைய பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தலுக்கும் மாகாண சபைத் தேர்தலுக்கும் தற்போது அமுலிலுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறைஇவிருப்பு வாக்கு முறை ஆகியன பற்றிய பொதுமக்களின் நம்பகத்தன்மை வெகுவாக குறைவடைந்துள்ளன.

விகிதாசார பிரதிநிதித்தவ முறைமை மற்றும் விருப்பு வாக்கு முறைமை ஆகியவற்றில் காணப்படும் குறைப்பாடுகளை கருத்திற் கொண்டு கலப்பு விகிதாசார பிரதிநிதித்துவ முறைமை மிகச்சிறந்த தேர்தல் முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளது என தேர்தல் முறைமை தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவு குழுவிடம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு யோசனை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இறுதித் தீர்வை அடைவதற்கு நாங்கள் ஒற்றுமையாக, ஐக்கியமாக, ஓரணியாக போரட வேண்டும் – பாராளுமன்ற உறுப்பினர் ஜனா

மாகாணசபை எங்களுக்கு இறுதித் தீர்வல்ல. எங்களது இறுதித் தீர்வு எங்கோ இருக்கின்றது. அதை அடைவதற்கு நாங்கள் ஒற்றுமையாக, ஐக்கியமாக, ஓரணியாக போரட வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வும் தேசிய பிராந்திய சர்வதேச நிலவரங்களும் என்ற தலைப்பில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஆறு தமிழ்க்கட்சிகள் இணைந்து நடத்திய கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டைப் பொறுப்பேற்றிருக்கும் கோட்டாபய மற்றும் அவரது சகாக்ககள் குறிப்பாக இந்தியாவிற்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொரகொட இவர்கள் கூறுவது இலங்கைத் தமிழர்களுக்கு இனப்பிரச்சனை இல்லை. இவர்களுக்கு உள்ளது பொருளாதா ரீதியான பிரச்சனையே என்று. பொருளாதாரப் பிரச்சனைக்காகவா இத்தனை வருடங்கள் இத்தனை உயிர்களை, பொருளாதாரத்தை, கலை, கலாச்சாரத்தை, பிரதேசங்களை பறிகொடுத்து வந்திருக்கின்றார்கள் எமது மக்கள்.

கோட்டபாய அவர்கள் வரும்போது திடீரென வானத்தில் இருந்து அல்லது சந்திரமண்டலத்தில் இருந்து குதித்து வந்தாரா என்றே கேட்கத் தோணுகின்றது. ஏனெனில் இலங்கை சுதந்திரமடைந்து தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுக் கொண்டிருந்ததன் காரணமாகத் தான் சமஸ்டிக் கட்சி தமிழரசுக் கட்சி உருவாகி அகிம்சைப் போராட்டம் நடந்தது, அதற்கும் மேலாக இந்த நாட்டில் ஒரு இனப்பிரச்சனைன இருக்கிறது என்று உணர்ந்த காரணத்தினால் தான் பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம், 1982ம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திச் சபைகள், 1984ம் ஆண்டு திம்புப் பேச்சுவார்த்தை, 1987ல் இலங்கை இந்திய ஒப்பந்தம், அதனைத் தொடர்ந்து சந்திரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிராந்தியங்களின் ஒன்றியங்கள், ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் இடம்பெற்ற போர்நிறுத்த ஒப்பந்தத்துடன் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் இன்னும் பல வெளிநாடுகள் சம்மந்தப்பட்ட ஒப்பந்தங்கள் எல்லாம் இங்கு கொண்டு வரப்பட்டது, அவை நிறைவேற்றப்படாமல் போனதெல்லாம் எதற்காக?

தமிழரசுக் கட்சி உருவாகி எமது உரிமைகளைப் பெறுவதற்கு அகிம்சை ரீதியில் பல போராட்டங்களை நடத்தி அடி உதை வாங்கி தமிழர்களுக்கான தீர்வு பிரிந்து செல்வதற்கான தீர்வு என்பதைத்தான் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மூலமாக பல சகாப்தமாக கீரியும், பாம்புமாக இருந்து ஒன்றாகிய அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தொண்டமான் போன்றவர்கள் ஒன்று சேர்ந்தார்கள். இது ஐக்கியத்தின் உறுதிப்பாடு.

இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையிலே தமிழ் மக்கள் உறுதியாக ஐக்கியப்பட்டார்கள். 1977ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலே வடக்கு கிழக்கிலே ஒரே ஒரு தொகுதியைத் தவிர அனைத்துத் தொகுதிகளிலும் தமிழீழத்திற்கான ஆணையை தமிழ் மக்கள் ஒன்றிணைந்து கொடுத்தார்கள்.

இதனைப் பார்த்துப் பயந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசு அதிகாரமற்ற அதிகாரப் பகிர்வு என்ற ரீதியல் மாவட்ட அபிவிருத்திச் சபைகளை உருவாக்கினார். அதன் மூலமாக எங்களுக்கான தீர்வு கிடைக்கவில்லை. தொடர்ச்சியாக எங்களது குரல் ஓங்கிக் கொண்டிருந்த நேரத்தில் 1983ம்ஆண்டு பாரிய இனக்கலவரம் ஏற்படுத்தப்பட்டது. அகிம்சைப் போராட்டத்தில் வெறுப்படைந்து ஆயுதம்தான் முடிவு என்று போராட்ட இயக்கங்கள் உதித்துக் கொண்டிருந்த நேரம் ஏற்பட்ட இனக்கலவரமும் இந்தப் போராட்ட இயக்கங்களை விஸ்வரூபம் எடுக்க வைத்தது.

அந்த நேரத்திலே இந்;தியா எமக்கு உதவி செய்தது. ஆயுதப் போராட்டம் ஓங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் மீண்டும் ஒரு பேச்சுவாhத்தை. திம்புப் பேச்சுவார்த்தை திம்புப் பேச்சுவார்த்தையிலும் ஐந்து முன்னணிப் போராட்ட இயக்கங்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருந்தார்கள். உறுதியான ஐக்கியமொன்று கட்டியெழுப்பட்டது. அந்த ஐக்கியம் குழப்பப்பட வேண்டும் என்று சர்வதேசம் கங்கணம் கட்டியது. நாங்கள் உறுதியாக, ஐக்கியமாக இருந்திருக்கின்றோம். ஆனால் துரதிஸ்டவசமாக எமது ஐக்கியத்தைக் குழப்ப வேண்டும் என்ற சர்வதேசச் சதியினூடாக எமது ஐக்கியம் குழப்பப்பட்டது. தமிழர்கள் ஒரு துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டார்கள். மீண்டும் அந்த ஐக்கியம் 2001லே மலர்ந்தது. கடந்த கால கசப்பான சம்பவங்களை நாங்கள் நினைத்துக் கொண்டு ஒருநாள் புதைகுழிகளைத் தான் தோண்டிக் கொண்டிருக்க வேண்டும். அந்;தக் கசப்பான அனுபவங்கைளயெல்லாம் மறந்து 2001லே தமிழ்த் தேசியப் பரப்பிலே இருந்த மிதவாதக் கட்சிகளும், போராட்டக் கட்சிகளும் உறுதியான ஐக்கியத்துக்குள் கொண்டு வரப்பட்டன.

பின்னர் 2009 மே 18 வரை உறுதியாக ஐக்கியமாகத் தமிழ்த் தேசியப் பரப்பிலே இருந்த கட்சிகள் இன்று அந்த ஐக்கியத்தை இழந்து நிற்கின்றோம். இன்று 2009க்கு முன்னர் இருந்த நிலையை விட வடக்கு கிழக்கிலே மிக மோசமான நிலையிலே இருக்கின்றோம். எனவே அந்த ஐக்கியம் மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இதற்குப் பல காரணங்கள் உண்டு இன்று வடக்கு கிழக்கிலே எமது நிலம் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. மொழி உரிமை முற்றுமுழுதாக மீறப்பட்டிருக்கின்றது. உதாரணமாக அண்மையில் வவுனியா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவம் அனைவருக்கும் தெரியும். எமது வரலாற்று அடையாளங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டு வருகின்றன. கும்பிடுவதற்குப் புத்தர்கள் இல்லாத இடங்களிலெல்லாம் புத்தர் சிலை உருவெடுக்கின்றன. எங்கெங்கெல்லாம் உயர்ந்த மலைகள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் புத்தர் வந்து உட்காரும் ஒரு நிலைதான் தற்போது வடக்கு கிழக்கில் இருக்கின்றது. நினைவேந்தல்களுக்குத் தடை விதிக்கப்படுகின்றது.

அண்மையில் அமைச்சர் நாமல் அவர்கள் ஒரு அறிக்கை விட்டிருக்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் மக்கள்; விடுதலை முன்னணிக்கும் பெரிய வித்தியாசம் இல்லையென்று. ஆனால் தற்போது என்ன நடக்கின்றது. மக்கள் விடுதலை முன்னணி தங்கள் தலைவரையும் மறைந்த உறுப்பினர்களையும் நினைவு கூருவதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால வடக்கு கிழக்கிலே பொதுமக்களைக் கூட நாங்கள் நினைவு கூர முடியாத ஒரு நிலையிலே இருக்கின்றோம்.

ஒரு நாடு ஒரு சட்டத்தின் மூலம் மாகாண சபைகளைக் கூட அகற்ற வேண்டும் என்ற நிலைப்பாடு இருக்கின்றது. மாகாணசபைகள் இருந்தால் அவற்றுக்கான நியதிச் சட்டங்களை அவர்களே உருவாக்கும் நிலை இருக்கின்றது. அப்படியாயின் ஒரு நாடு ஒரு சட்டம் அங்கு தோற்றுப் போகும். இந்த நிலையில் நாங்கள் ஐக்கியப்பட வேண்டும்.

எமது மறைந்த தலைவர் சிறி சபாரெத்தினம் அவர்கள் முன்னர் ஒரு தடவை குறிப்பிடுகையில், இலங்கையின் விடுதலைப் போராட்டம் இந்தியாவின் பாதுகாப்புடன் பின்னிப் பிணைந்திருக்கின்றது என்று சொன்னார். இன்று அது யதார்த்தமாகவும், நிதர்சனமாகவும் இருக்கின்றது. ஆனால் நாங்கள் இன்று தேர்தல் அரசியலுக்காக பிரிந்து நிற்கின்றோம்.

இன்று ஆறு கட்சிகளின் கூட்டம்  நடைபெறுகின்றது. ஆனால் ஐந்து கட்சிகள் தான் இன்று மேடையில் இருக்கின்றன. ஆறு கட்சிகள் ஒன்றிணைந்து 13வது திருத்தத்தை முழுமையாக அழுல்ப்படுத்த வேண்டும் என்று இந்தியப் பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளன. இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவாக்கப்பட்ட போது மாகாணசபைகள் தொடர்பில் அமுல்ப்படுத்தப்பட்ட சரத்துக்கள் அனைத்தும் உள்வாங்கப்பட்டு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கடிதம் வரைந்துள்ளோம். ஏனெனில் இலங்கை இந்திய ஒப்பந்தம் எங்களுக்கு இறுதித் தீர்வு என்று ஒரு போதும் நாங்கள் சொல்லவில்லை.

நாங்கள் தனி ஈழத்திற்காகப் போராடியவர்கள். புலிகள் தமிழீழத்திற்காகப் போராடவில்லை தமிழர் தேசத்தை அங்கீகரிப்பதற்காகப் போராடியவர்கள் என்று சொல்கிறார் கஜேந்திரன் அவர்கள். புலிகளின் வாசகமே புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்பதுதான் அதுகூட அவருக்குத் தெரியாமல் இருக்கின்றது.

ஆனால் நாங்கள் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முற்றமுழுதாக அமுல்ப்படுத்தக் கோருவது தற்போது இருக்கும் எமது பிரதேசத்தையாவது நாங்கள் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே. 2009 வரை தமிழீழம் தான் எமது இலக்கு, தமிழீழத்தை அடைய வேண்டும் என்பதற்காக அதற்கு முன் வந்த எத்தனையோ சந்தர்ப்பங்களை நாங்கள் தவறவிட்டிருக்கின்றோம். அவையெல்லாம் எமது கடந்த கால அனுபவங்கள்.

எங்களை நாங்களே ஆழ வேண்டும், சுயநிர்ணய உரிமையுடன் நாங்கள் வாழவேண்டும், எமது பிரதேசஙம் எங்களுக்குத் தேவை என்பது எமது இறுதி இலக்கு. ஆனால் அதுவரை எமது இருப்பை நாங்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாணத்திலே குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் புறங்களில் சிங்களவர்கள் குடியேற்றப்படுகின்றார்கள். அங்கு தமிழர்களின் குடிப்பரம்பல் குறைக்கப்படுகின்றது. கிழக்கு மகாணத்தில் அம்பாறை, திருகோணமலை மாவட்டத்தில் இருந்து மாகாணசபைகளுக்கு பெரும்பான்மையாக சிங்கள உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் போது மட்டக்களப்பில் மாத்திரமே சிங்களப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய முடியாத நிலை இருக்கின்றது. எதிர்வரும் காலங்களில் இருபதாயிரத்திற்கு மேல் சிங்கள வாக்காளர்களை அங்கு கொண்டு வருவதற்காக கிழக்கு மாகாண ஆளுநர், பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஆகியோரின் வழிகாட்டலில் எல்லைப் புறங்களில் மர முந்திரிகை என்றும், சேனைப்பயிர்ச் செய்கை என்றும் எங்களது பண்ணையாளர்களின் மேய்ச்சற் தரைகள் கபளீகரம் செய்யப்படுகின்றன.

எனவே இவற்;றைத் தடுப்பதாக இருந்தால் மாகாணசபை உருவாக்கப்படும் போது இருந்த காணி அதிகாரங்கள் முற்றுமுழுதாக அமுல்ப்படுத்தப்பட்டு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் போதே நாங்கள் இவற்றைத் தடுத்து நிறுத்த முடியும். இவற்றைக் கருத்திற்கொண்டு நாங்கள் ஓரணியில் சேரும் போது அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் 13வது திருத்தத்தைச் சவப் பெட்டிக்குள் வைத்துத் தூக்குகின்றார்கள்

இந்த நேரத்திலாவது தமிழ் மக்கள் ஒற்றுமைப்படாவிட்டால் எதிர்காலத்தில் எங்கள் இருப்பு என்னவாகும் என்பதை இவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். ஆயுதப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவாகும் போது இவர்கள் சிறுவர்கள். இவர்கள் ஆயுதப் போராட்டத்தில் பங்குபற்றவும் இல்லை, உத்வேகம் கொடுக்கவும் இல்லை. தற்போது கஜேந்திரகுமார் சொல்லுகின்றார் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஆயுதப் போராட்த்தைக் கொச்சைப்படுத்துவதென்று.

இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட போது அதனுடாக ஏற்படுத்தப்பட்ட அதிகாரங்கள் எங்களுக்குப் போதாது என்று தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி கடிதம் எழுதியது. நாங்கள் ராஜீவ் காந்தி அவர்களை நேரடியாகவும் சந்தித்துப் பேசியிருக்கின்றோம். இலங்கை இந்திய ஒப்பந்தம், 13வது திருத்தச்சட்டம், மாகாணசபை முறைமை எங்களுக்கு இறுதித் தீர்வல்ல. எங்களது இறுதித் தீர்வு எங்கோ இருக்கின்றது. நாங்கள் அதை அடைவதற்கு ஒற்றுமையாக, ஐக்கியமாக, ஓரணியாக போரட வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள் என்று தெரிவித்தார்.

 

ஜெனீவா அமர்வில் தென்னாபிரிக்காவின் ஆதரவை கோரியது இலங்கை

தென்னாபிரிக்காவிற்கான இலங்கை தூதுவர் சிறிசேன அமரசேகர, தென்னாபிரிக்க அதிகாரிகளுடனும் நமீபியா, சிம்பாப்வே, மலாவி உள்ளிட்ட நாடுகளின் அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைகளின் போது, வெளிதரப்பினரால் திணிக்கப்படும் பொறிமுறைகளை விட உள்நாட்டு மோதல்களிற்கு தீர்வை காண்பதற்கு உள்நாட்டு பொறிமுறைகளின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

மோதலின் பின்னர் இலங்கை அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நிவாரணத்தை வழங்குவதற்காக அனைத்தையும் செய்துள்ளது என தெரிவித்துள்ள தூதுவர், தேவையற்ற சர்வதேச அழுத்தங்கள் காரணமாக அரசாங்கம் தன்னிடம் உள்ள சிறியஅளவு வளங்களை தியாகம் செய்வதற்கும் தற்பாதுகாப்பு நிலையில் செயற்படுவதற்கும் தள்ளப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சர்வதேச தரப்பினர் தமிழர் விவகாரங்களில் நேர்மையான அக்கறை கொண்டிருந்தால் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நிவாரணத்தை வழங்கும் அரசாங்கத்தின் முயற்சிகளிற்கு உதவவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

சம்மந்தப்பட்ட தரப்பினர் தங்களின் தவறுகளை திருத்திக்கொள்ளாவிட்டால் பொறுப்புக்கூறல் என்பது அர்த்தமற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆதாரமற்ற இட்டுக்கட்டப்பட்ட கதைகளில் தங்கியிருக்காமல் பரந்த கண்ணோட்டத்தில் இந்த பிரச்சினையை பார்க்குமாறு அவர்அழைப்பு விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

அம்பிகா சற்குணநாதன் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

பயங்கரவாத தடை சட்டத்தை திருத்தும் சட்டமூலம் இலங்கையின் அரசியலமைப்பின் 3, 4, 11, 12(1), 13(1), 13(3), 13(4), 13(5), 138 அல்லது 141 ஆகிய சட்டங்களுக்கு முரணானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பயங்கரவாத தடை சட்டத்தை திருத்தும் சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தி பாக்கியசோதி சரவணமுத்தூவினாலும் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அம்பிகா சற்குணநாதன் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அல்லது பொதுசன வாக்கெடுப்பு இன்றி இதை சட்டமாக இயற்ற முடியாது என சுட்டிக்காட்டி அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

Posted in Uncategorized

சர்வதேச உதவியை நாடினால் விளைவுகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் – கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை

சர்வதேச உதவியை நாடினால், இலங்கை அனுபவிக்க வேண்டிய விளைவுகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை எச்சரிக்கை விடுத்துள்ளார்.வத்திக்கானுடன் இணைந்து ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நீதியை பெற்றுக்கொள்ள இலங்கை கத்தோலிக்க திருச்சபை நடவடிக்கை எடுத்துவருகின்றது.குறித்த நடவடிக்கை மூடிய கதவுகளுக்குப் பின்னால் இடம்பெறுவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் கடமைகள் அரசியல்வாதிகளை திருப்திப்படுத்துவது அல்ல என்றும் ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு அவர் கண்டனம் வெளியிட்டார்.

அரசியல் குறிக்கோள்களில் வித்தியாசமில்லை: அவற்றை அடையும் மார்க்கம் பற்றியே தமிழ் கட்சிகளுக்குள் முரண்பாடு – சி.வி.

அரசியல் குறிக்கோள்களில் வித்தியாசமில்லை என்றும் அவற்றை அடையும் மார்க்கம் பற்றியே தமிழ் கட்சிகளுக்குள் முரண்பாடு உள்ளதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சென்ற வாரம் இந்தியப் பத்திரிகையொன்றின் இலத்திரனியல் ஊடகத்திற்கு ஒரு பேட்டி அளித்தேன். அங்கு நான் கூறிய ஒரு விடயம் பத்திரிகைகளில் வெளிவரவில்லை. அதனை இப்பொழுது
உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

இதுகாறும் பிரிந்து நின்ற ஆறு கட்சிகளும் எவ்வாறு ஒருமித்து அந்தக் கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுத முடிந்தது என்று செவ்விகண்டவர் என்னிடம் கேட்டார்.

அதற்கு நான், எமது அரசியல் குறிக்கோள்களைப் பொறுத்தவரையில் எமக்குள் அதிகம் வித்தியாசம் இல்லை என்றேன். அவற்றை அடையும் மார்க்கம் பற்றியே எமக்குள் முரண்பாடுகள் உண்டு என்றேன். அதை விளக்குமாறு கோரப்பட்ட போது, நான், எமது தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்துமே ‘ஒற்றையாட்சி வேண்டாம் சமஷ்டி ஆட்சி முறையே வேண்டும்’ என்று தான் கோரி வருகின்றோம் என்றேன்.

எமது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஒருபடி மேலே போய் கூட்டு சமஷ்டியை எமது குறிக்கோளாகக் குறிப்பிட்டுள்ளோம் என்றேன். ஆகவே எமது குறிக்கோள் ஒன்றே அதனை அடையும் விதத்தில் எமக்குள் வேற்றுமைகள், வித்தியாசங்கள், முரண்பாடுகள் உண்டு என்றேன். நான் அங்கு கூறியதை இங்குள்ள அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகின்றேன். ஏதோ காரணத்திற்காக செவ்வி கண்டவர் இக்கேள்வியையும் பதிலையும் தணிக்கை செய்துவிட்டார்.

ஆகவே முக்கியமான ஒரே குறிக்கோளை வைத்திருக்கும் எமது ஆறு கட்சிகளும் இன்று இந்த கருத்தரங்கத்தை ஒருமித்து நடத்துவதில் வியப்பொன்றுமில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பில் மாகாண சபை முறைமைகள் இருக்காது – சுரேஸ்

புதிய அரசியலமைப்பில் மாகாண சபை முறைமைகள் இருக்காது எனவே தாம் எதிர்பார்ப்பதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற அனைத்து தமிழ் கட்சிக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எம்மிடம் இருக்கின்ற சிலவற்றை காப்பாற்ற நினைக்கும்போது அரசாங்கம் தமிழ் மக்களிடம் உள்ள எல்லாவற்றையும் பறிக்க முயற்சி செய்கின்றது என குற்றம் சாட்டினார்.

இதன் காரணமாகவே 13 ஆவது திருத்தம் வேண்டும் என இந்தியாவிடம் தமிழ் கட்சிகள் ஒன்றாக இணைந்து கோரிக்கை விடுத்தன என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

ஆகவே, இருப்பை தக்க வைப்பதற்கு 13வது திருத்தம் அவசியமே அன்றி அது ஒருபோதும் தீர்வாகாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

மாபெரும் போராட்டத்திற்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் அழைப்பு!

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் எதிர்வரும் 20ஆம் திகதி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

கிளிநொச்சியில் இன்று (புதன்கிழமை) காலை 11.30 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “வடக்கு – கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டத்தினை ஆரம்பித்து எதிர்வரும் 20ஆம் திகதி ஐந்து ஆண்டுகள் ஆகின்றது. இலங்கை அரசிடம் தீர்வு கோரி கிடைக்காத நிலையில் சர்வதேசத்திடம் நீதி கேட்டு நாங்கள் போராடி வருகின்றோம்.

இந்த நிலையில் குறித்த நாளன்று மாபெரும் பேரணி ஒன்றினை மேற்கொள்வதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அன்றைய தினம் கடந்த காலங்களில் நாங்கள் போராட்டங்களை மேற்கொள்கின்றபோது இருந்த ஒத்துழைப்புக்களை போன்று கிராம மட்ட அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம், தமிழ் தேசியத்தை நேசிக்கனிறவர்கள், அரசியல்வாதிகள், அரசியலிற்கு அப்பால் நின்று செயற்படுகின்றவர்கள் என அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த ஊடகங்கள் வாயிலாக முன்வைக்கின்றோம்.

வடக்கு கிழக்கில் இருக்கின்ற அனைத்து தரப்பினரும் இந்த அழைப்பினை ஏற்று குறித்த தினத்தில் இடம்பெறும் மாபெரும் பேரணியில் கலந்துகொண்டு ஆதரவினை வழங்க வேண்டும்” என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.