சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு

கடற்படையின் முன்னாள் தளபதி Admiral of the fleet வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரத்தை நீக்கிக்கொள்வதற்கு சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று நிராகரித்துள்ளது.

பிரதிவாதிக்கு எதிரான குற்றப்பத்திரத்தை தொடர்ந்தும் விசாரணை செய்யவோ அல்லது அதனை முன்னெடுத்துச் செல்வதற்கோ முடியாது என சட்ட மா அதிபர் தீர்மானித்துள்ளமையால் , குற்றப்பத்திரத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லாதிருப்பதற்கான அனுமதியை வழங்குமாறு சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய அரச சிரேஷ்ட சட்டத்தரணி லொஹான் அபேவிக்ரம கோரிக்கை விடுத்துள்ளார்.

விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குடன் தொடர்புடைய பிரதிவாதி ஒருவருக்கு எதிரான குற்றப்பத்திரத்தை நீக்கிக்கொள்வதாயின், சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி அவரின் கையொப்பத்துடன் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்க வேண்டும் என நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது.

வாய்மொழி மூல கோரிக்கைக்கு தமது நீதிமன்றத்தால் அனுமதி வழங்க முடியாது என அறிவித்த நீதிபதிகள் , சட்டமா அதிபரின் கோரிக்கையை நிராகரித்துள்ளனர்.

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் 14 ஆவது பிரதிவாதியாக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

குற்றப்பத்திரத்தை திருத்தி, வழக்கின் ஏனைய 13 பிரதிவாதிகளுக்கும் எதிராக தொடர்ந்தும் வழக்கு விசாரணையை முன்னெடுக்க சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளதாகவும் இன்றைய தினம் அரச சிரேஷ்ட சட்டத்தரணி மன்றுக்கு அறிவித்துள்ளார்.

இந்த வழக்கை டிசம்பர் 03 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சம்பா ஜானகி ராஜரத்ன, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

Posted in Uncategorized

ஒன்றிணைந்து செயற்படுவதன் அவசியம் உணரப்பட்டுள்ளது – நா.உ. ரவூப் ஹக்கீம்

தமிழ் தரப்புக்களும் முஸ்லீம் தரப்புகளும் தேர்தல் உட்பட அனைத்து நடவடிக்கையிலும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அவசியம் மிக வேகமாக உணரப்பட்டு இருக்கின்றதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இன்று தனியார் விடுதி ஒன்றில் தமிழ் பேசும் கட்சிகளின் கலந்துரையாடலுக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய சந்திப்பு ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் என்னிடமும் மனோ கணேசனிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த சந்திப்பை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழரசுக் கட்சி இந்த கலந்துரையாடலில் பங்கேற்காமை தொடர்பாக ஊடகங்கள் கேள்வியெழுப்பிய போது, குறித்த கலந்துரையாடல் தொடர்பாக ஏற்கனவே தமிழரசு கட்சியுடனும் ஏனைய கட்சிகளுடன் நடந்திருக்கின்றது.

அடையாள ரீதியாக நாம் இன்று சந்தித்தாலும் எதிர்வரும் காலங்களில் நாங்கள் சந்தித்து இதனை முன்கொண்டு செல்வதற்கு தீர்மானித்துள்ளோம்.

தமிழ் தரப்புக்களும் முஸ்லீம் தரப்புகளும் தேர்தல் உட்பட அனைத்து நடவடிக்கையிலும் ஒன்றிணைந்து செயற்பட சாத்தியப்பாடுகள் இருக்கின்றது. அனைத்திலும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அவசியம் மிக வேகமாக உணரப்பட்டு இருக்கின்றது என்றார்.

 

‘தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் ஒரு தாய் மக்கள் தான்’ – மு.க.ஸ்டாலின்

இலங்கை தமிழர்களுக்கு 3,510 வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் ஒரு தாய் மக்கள் தான்,’ எனப் பேசியுள்ளார்.

வேலூர் மாவட்டம் மேல் மொணவூரில் இலங்கை தமிழர்களுக்காக ரூ.142 கோடி செலவில் 3,510 வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்று அடிக்கல் நாட்டி முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:

ஒவ்வொரு முறையும் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி பொறுப்பேற்றதும் இலங்கை தமிழர்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் கட்சி தி.மு.க., தான். கடந்த 10 ஆண்டுகளாக அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசாங்கம் இலங்கை தமிழர்களுக்காக எந்த திட்டங்களையும் செய ற்படுத்தவில்லை.

இலங்கை தமிழர் நல வாழ்வு திட்டங்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள அகதி முகாம்களில் உள்ள இலங்கை தமிழ் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசாங்கமே ஏற்கும்.

தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் ஒரு தாய் மக்கள் தான்; நாம் அனைவரும் தமிழினத்தை சேர்ந்தவர்கள், கடல் தான் நம்மை பிரிக்கிறது. இலங்கைj; தமிழர்களுக்கான நலத்திட்டங்கள் மேலும் தொடரும். இலங்கைj; தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல.

தி.மு.க., அரசாங்கம் இலங்கை தமிழர்களுக்கு என்றைக்கும் துணை நிற்கும். என்னை உங்களின் உடன்பிறப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

ஜனாதிபதி நாடு திரும்பியதும் கூட்டமைப்புடன் பேசுவார்: அமைச்சர் பீரிஸ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தயாராகி வருகிறார் என்று இராஜதந்திர வட்டாரங்களிடம் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கிளாஸ்கோ நகரில் நடக்கும் காலநிலை மாநட்டில் பங்கேற்க சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியதும் இந்தப் பேச்சு நடவடிக்கைகள் இடம்பெறும் என்றும் வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார். இந்தப் பேச்சு தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகரிடமும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பேச்சு குறித்து அண்மையில் சந்தித்த உயர்ஸ்தானிகர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரிடம் வினவியபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அவ்வாறு ஓர் அழைப்பு இதுவரை கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். முன்னதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதி சந்திப்பு ஜூன் 16இற்கு திகதியிடப்பட்டிருந்தது.

ஆனால், சந்திப்பு நடைபெறவில்லை. இதைத் தொடர்ந்து பஸில் ராஜபக்ஷ அமைச்சு பொறுப்பேற்ற பின்னர் பேச்சு நடக்கும் என்று உறுதியளித்தபோதும் பேச்சுக்கள் எவையும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Posted in Uncategorized

தமிழ் பேசும் மக்களின் கட்சிகளின் தலைவர்களின் கலந்துரையாடல்

13ஆம் திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக, அது ஆரம்ப கட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட நிலையிலேயே, நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்தை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கான கலந்துரையாடல் 2ம் திகதி நவம்பர் மாதம் காலை பத்து மணி தொடக்கம் யாழ்ப்பாணம் திண்ணை ஹோட்டலில் ஏற்கனவே தீர்மானிக்க பட்டதன் பிரகாரம் நடைபெற்றது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாய மக்கள் விடுதலை முன்னணியின்( புளட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம்
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் சி வி விக்னேஸ்வரன் சார்பில் பேராசிரியர் சிவநாதன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான குருசுவாமி சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

4 பேர், நபர்கள் நின்றுக்கொண்டிருக்கின்றனர், நபர்கள் அமர்ந்துள்ளனர் மற்றும் உட்புறம் இன் படமாக இருக்கக்கூடும்

1 நபர், மேசை மற்றும் உட்புறம் இன் படமாக இருக்கக்கூடும்

3 பேர், நபர்கள் அமர்ந்துள்ளனர், மேசை மற்றும் உட்புறம் இன் படமாக இருக்கக்கூடும்
Posted in Uncategorized

பிரித்தானியா: ஸ்கொட்லாந்தில் தொடரும் கோட்டாபயவிற்கு எதிரான போராட்டம்

ஸ்கொட்லாந்தில் நடைபெறும் காலநிலைமாற்ற மாநாட்டில் கலந்துகொள்ள பலநாட்டு அரச தலைவர்களும் வருகைதந்திருக்கிறார்கள்.

பிரித்தானியா: ஸ்கொட்லாந்தில் தொடரும் கோட்டாபயவிற்கு எதிரான போராட்டம் அவர்களில் ஒருவராக சிறீலங்கா அரச தலைவரான கோத்தபாய ராஜபக்சாவும் வருகை தந்ததை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழ் மக்கள் பல நாடுகளிலும் இருந்து ஸ்கொட்லாந்துக்கு வருகை தந்து, போர்க் குற்றவாளி கோத்தபாய ராஜபக்ச வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள்.

பிரித்தானியா: ஸ்கொட்லாந்தில் தொடரும் கோட்டாபயவிற்கு எதிரான போராட்டம் இந்நிலையில், ‘மிக கண்ணியமான போராட்டக்காரர்களை கடந்து செல்ல நேர்ந்தது. இலங்கை ஜனாதிபதி Dunblane Hydro ஹோட்டலில் இருக்கிறார், அவரது மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் விதமாக போராட்டக்காரர்கள் கூடியிருக்கின்றனர்.

அவர்கள் கோஷமிடுவதைக் கண்டு நாய் அஞ்சியதால், கோஷமிடுவதை நிறுத்திய அவர்கள் அந்நாய் நடந்து செல்ல இடமளித்தனர்’. என குறித்த போராட்டம் தொடர்பாக அந்நாட்டு பொது மகன் ஒருவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஒரு நாடு ஒரு சட்டம் தமிழ் தேசியத்திற்கு சொல்வது என்ன? – ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன்

ஒரு நாடு ஒரு சட்டம் தமிழ் தேசியத்திற்கு சொல்வது என்ன ? என்று கேள்வி எழுப்பியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் வேறு சட்டவாக்க அலகுகள் நாட்டுக்குள் இருக்க முடியாது என்பதே அது என்றும் தெரிவித்துள்ளார்.

ஒரு நாடு ஒரு சட்டம் என்ற செயலணி தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரவந அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்ட ஒரு நாடு ஒரு சட்டம் என்ற செயலணிக்கு ஞானசார தேரர் தலைமையில் 13 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படை நோக்கம் ஒரு நாட்டுக்குள்ளே ஒரு சட்டவாக்க முறைமை மாத்திரமே இருக்க முடியும். வேறு சட்டவாக்க அதிகாரங்கள் கொண்ட அலகுகள் இருக்க முடியாது என்பதை உறுதிப்படுத்துவது. இதன் விளைவாக தமிழ் தேசிய கட்சிகள் தமிழ் மக்களுக்கு கூறி வருகின்ற சுயாட்சி, தன்னாட்சி, கூட்டாட்சி, கூட்டு சுயாட்சி, ஒரு நாடு இரு தேசம் அல்லது மாகாண சபைகள் எவையும் இருக்க முடியாது என்ற செய்தியை தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் தமிழ் தேசியம் பேசும் சில கட்சிகள் அரசு முன்வைக்க இருக்கும் புதிய அரசியல் யாப்பில் அரசியல் தீர்வு கிடைத்துவிடும் என்று தமிழ் மக்களுக்கு எதிர்வு கூறுகிறார்கள். இதை தடுப்பதற்கான அல்லது குறைந்தபட்சம் எதிர்ப்பதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுப்பது அவசியம்.

அரசியல் தீர்வுக்கான பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பித்து விட்டாயிற்று. அரசோ மரியாதைக்கு தன்னும் அழைத்து பேசுவதாக இல்லை. பல கடிதங்கள், கோரிக்கைகள் அனுப்பியும் அரசாங்கம் செவி கொடுக்கவில்லை. மாறாக புலம்பெயர் அமைப்புகளோடு பேச்சுக்கு தயார் என்று அறிவித்திருக்கிறது.

சர்வதேச ஆதரவு மூலம் அல்லது பூகோள நகர்வுகளின் மூலம் அரசியல் தீர்வு வந்து தமிழ் மக்கள் மடியில் விழுந்துவிடும் என்று கனவில் மிதப்பதாக இருக்கிறது. பூகோள அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதாகவும் இல்லை.
எந்த சர்வதேச நகர்வுகளும் இந்தியாவை தாண்டி இலங்கையில் நடைபெற முடியாது என்பது பட்டறிந்த யதார்த்தம். எல்லா சர்வதேச நாடுகளும் தமிழ் தரப்பை அழைத்து மதிப்பளித்து எமது பிரச்சனைகளை செவிமடுத்தாலும் இறுதியில் இந்தியாவையே கருத்து கேட்பார்கள்.

இந்தியா தமிழர் தரப்பின் அரசியல் தீர்வு விடயங்கள் சார்பாக இலங்கை அரசை வலியுறுத்துவதாக இருந்தால் 13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக மாத்திரமே தலையீடு செய்ய முடியும் என கடந்த 30 வருடங்களுக்கு மேலாக உறுதியாக தெரிவித்து வருகிறார்கள். அண்மையில் வருகை தந்த வெளி விவகார அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் அதைத் தெளிவுபட கூறிவிட்டார்கள்.

இந்த நிலையில் இலங்கை அரசு மிகத் தந்திரமாக தன்னுடைய காய்களை நகர்த்தி வருகிறது. மாகாணசபை தேர்தல்களை நடத்துவதாக அறிவித்துள்ளது. அதிகாரங்கள் பறிக்கப்பட்ட நிலையில் எலும்பு கூடாக இருக்கும் மாகாணசபை தேர்தலை வெற்றி கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய அரசியல் தரப்புக்கள் முனைப்பு காட்டுகிறார்களே தவிர அதில் காத்திரமான அதிகாரங்களை பெற்றுக் கொள்வதற்கான எந்த நடைமுறையையும் செயல்படுத்தவில்லை.

இதேநேரம் அரசு ஒரே நாடு ஒரே சட்டம் கொள்கை வகுப்பு என்பது நாட்டில் வேறு எங்கும் சட்டவாக்க அதிகாரம் உள்ள அலகுகள் நிர்வாக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இருக்க கூடாது என்று உறுதி பூண்டுள்ளது. இதனடிப்படையில் சிங்களப் பேரினவாதம் தவிர்ந்த மற்ற இனங்கள் எல்லாம் இந்த நாட்டுக்கு சொந்தமானவர்கள் அல்ல, பௌத்த பேரினவாதம் சொல்வதைக் கேட்டு அடங்கி வாழ வேண்டும் என்ற கொள்கையோடு செயற்படுகின்ற ஞானசார தேரரை இந்த குழுவிற்கு தலைமையாக நியமித்திருக்கிறது. புதிய அரசியல் சாசனத்தை ஜனவரி 2022 இற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசு தயாராகி உள்ளது. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு இந்த சாசனம் நிறைவேற்றப்படும். அதேநேரம் பொதுசன வாக்கெடுப்புக்கு விட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் பரிந்துரைகள் வரும் வேளையில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற பிரச்சாரத்தை சிங்கள மக்களிடம் வைத்து இனவாதத்தைக் கக்கி வாக்கெடுப்பை வெற்றிகொள்ள அரசு முயற்சி செய்கிறது. அதில் வெற்றியும் அடையும்.

அந்த நிலையில் தமிழர் தரப்பால் முன்வைத்த அரசியல் தீர்வை உள்வாங்க வைப்பதற்கு சர்வதேச அழுத்தம் அவசியம். புதிய அரசியல் யாப்பு வெற்றிகரமாக நிறைவேற்றப்படும்போது 13வது திருத்தச் சட்டமும் இந்திய இலங்கை ஒப்பந்தமும் ஒட்டுமொத்தமாக காலாவதியாகிவிடும். அதற்குப்பின் இந்தியா இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட முடியாத சூழ்நிலை ஏற்படும். தமிழினமும் புதிய தேர்தல் முறை, திட்டமிட்ட காணி அபகரிப்பு, குடியேற்றங்களின் மூலம் அரசியல் பலத்தை இழக்க நேரிடும். இந்த அபாய கட்டத்தில் இன்று நாங்கள் உள்ளதை புரிந்து கொள்ளாத பலர் தாங்கள் கொள்கைவாதிகள் என மக்கள் முன்பு நின்று வீராப்பு பேசுவதை அறிக்கைகள் மூலம் காணக்கிடைக்கிறது.

அரசின் தமிழினத்திற்கு எதிரான பெளத்த பேரினவாத புதிய அரசியல் யாப்பு, திட்டமிட்ட காணி அபகரிப்பு, சிங்கள குடியேற்றத்தின் மூலம் இனக் குடிப் பரம்பலை சிதைப்பது, புதிய தேர்தல் முறைமையின் ஊடாக பிரதிநிதித்துவத்தை குறைப்பது, எல்லை மீள் நிர்ணயத்தின் மூலம் எல்லைகளை மாற்றுவது, ஒரே நாடு ஒரே சட்டம் என்ற திட்டத்தினை நடைமுறைப்படுத்தி எதிர்கால அரசியல் கோரிக்கைகளை ஒட்டு மொத்தமாக தடுத்து நிறுத்துவது போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. இதை தடுத்து நிறுத்த இந்தியாவின் ஆதரவை கோரும் எமது அரசியல் நகர்வினை விமர்சிக்க முற்படுபவர்கள் தெரிந்தோ தெரியாமலோ அரசின் நிகழ்ச்சி நிரலை அங்கீகரிப்பதாக அமையும்.

இதை விடுத்து அரசியல் பலமும் ஒற்றுமையும் இல்லாத சூழ்நிலையில் எமது இனத்திற்கு சர்வதேச ஆதரவு தான் ஒரே வழியாக உள்ளது. ஒற்றை ஆட்சிக்கு உட்படாத கூட்டாட்சி முறையான அரசியல் தீர்வே எமது நிலைப்பாடு. அது சாத்தியமாகும் வரையில் தமிழரின் நிலை என்ன என்பதை சிந்திக்க வேண்டும். இந்தியாவின் ஆதரவை கோருவதன் மூலமே ஒரே நாடு ஒரே சட்டம் என்ற திட்டத்தின் கீழ் தமிழினம் ஒட்டுமொத்த அரசியல் உரிமையையும் இழப்பதில் இருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும்.

ஆகவே தமிழர் தரப்பு வீணான கொள்கை வீராப்புக்களை முன்வைத்து கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களைத் தவற விட்டது போல இப்பொழுது எதிர்கொள்ளும் இக்கட்டான சூழ்நிலையில், இருப்பதையும் இழந்து விடாது இருக்க ஒன்றுபட்டு ஒருமித்த நிலையில் 13ஐ நடைமுறைப்படுத்த இந்தியாவை கோருவதன் மூலம் தான் அரசின் போக்கை கட்டுப்படுத்தவும் எதிர்கால அரசியல் தீர்வை எட்டவும் வழிவகுக்கும். மேலும் தமிழர் தரப்பு ஒருமித்த நிலைப்பாட்டில் இந்தியாவை 13 இன் அடிப்படையில் கோருவதன் மூலம் இந்தியாவின் தமிழ் மக்கள் சார்பான நிலைப்பாட்டையும் பங்களிப்பை உறுதிப்படுத்தும் சந்தர்ப்பமாக அமையும்.

Posted in Uncategorized

எந்தவொரு குடிமகனும் பாகுபாடுகளுக்கு உள்ளாகக் கூடாது – ஞானசார தேரர்

“இலங்கைக்குள் ஒரே நாடு; ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவைச் செயற்படுத்தல்” நடவடிக்கைக்காக நிறுவப்பட்டுள்ள ஜனாதிபதிச் செயலணி எதிர்பார்க்கும் இலக்குகளை அடைய, அதன் உறுப்பினர்களுடன் இணைந்து அயராது உழைக்க உறுதிபூண்டுள்ளதாக, அச்செயலணியின் தலைவர் வணக்கத்துக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

ஓர் அடிப்படைக் கொள்கைக் கட்டமைப்புக்குள் இருந்து அந்தப் பாத்திரத்தை நிறைவேற்றுவதோடு, எந்தவொரு குடிமகனும், இனம், மதம், சாதி அல்லது வேறு ஏதேனும் காரணிகளின் அடிப்படையில் சட்ட வேறுபாடுகளுக்கோ அல்லது வேறு விடயங்களிலோ பாகுபாடுகளுக்கு உள்ளாகக் கூடாது என்றும் தேரர் குறிப்பிட்டார்.

“ஒரே நாடு; ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதிச் செயலணி”இன் செயற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு முதன்முறையாகத் தெளிவுபடுத்தும் வீடியோ தொழில்நுட்பத்திலான ஊடகச் சந்திப்பொன்று, ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (01) முற்பகல் இடம்பெற்றது.

இதன்போது தொடர்ந்துரையாற்றிய கலகொடஅத்தே ஞானசார தேரர், எந்த இனம், மதம் அல்லது அரசியல் கட்சியாக இருந்தாலும் சரி, அவை எல்லாவற்றுக்கும் மேலாக முதலிடத்தில் நாட்டை முதன்மைப்படுத்திச் செயற்படுத்துவதாயின், அத்தகைய ஒரு நாட்டின் சட்டக் கட்டமைப்புக்கான அனைத்துக் கருத்துகளையும் செவிமடுக்க இந்தச் செயலணி தயாராக இருக்கின்றது என்றார்.

அத்துடன், இந்தப் பிரச்சினைகள் தொடர்பான பரந்துபட்ட தெளிவும் ஆழ்ந்த ஆய்வும், இந்த ஜனாதிபதிச் செயலணிக்கு உள்ளதென்றும், தேரர் குறிப்பிட்டார்.

நாட்டுக்கு ஏற்ற ஒரு சட்டத்தையும் நாட்டின் எதிர்காலச் சந்ததியை அடுத்த நூற்றாண்டிலும் அதற்கு அப்பாலும், ஒரு கொடியின் கீழ் பொருத்தக்கூடிய ஒரு தேசத்தை உருவாக்குவதே நமது பொறுப்பாகவுள்ளது என்றும் அவர் எடுத்துரைத்தார்.

“குறுகிய பிளவுகள் இல்லாத ஒன்றுபட்ட தேசமாக, பரஸ்பரம் கலாசாரம், சமய மரபுகளை மதித்து இணக்கமாக வாழும் தேசமே எமக்குத் தேவையாகவுள்ளது. சிங்களம், தமிழ், முஸ்லிம் என்றோ அல்லது பௌத்தம், இந்து, கத்தோலிக்கம், இஸ்லாம் என்ற அடிப்படையிலோ பிளவுபடாது, அனைத்து இனத்தவர்களையும் ஒன்றிணைக்கக் கூடிய ஒரு சட்டத்தை இந்நாட்டுக்குள் கட்டியெழுப்புவதற்கான சூழலை உருவாக்குவதே எமது பொறுப்பாகவுள்ளது.

இனம், மதம், மாகாண அடிப்படையிலான பிளவுகள் காரணமாக, இந்நாட்டின் இளையோர் சமுதாயமே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்தச் செயற்பாடுகளின் போது இளைஞர் சமுதாயத்துக்கு விசேட இடமொன்று வழங்கப்படும் என்று தெரிவித்த தேரர், பல்கலைக்கழகம், உயர்க்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து இளைஞர், யுவதிகளும், தங்கள் யோசனைகள் மற்றும் ஆலோசனைகளை இந்தச் செயலணிக்கு வழங்க வேண்டுமென்று அழைப்பு விடுத்தார்.

அதேவேளை, இது தொடர்பில் இந்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், மத மற்றும் சிவில் அமைப்புகள் மற்றும் குழுக்களுடனும் தங்களுடைய கருத்துகளைப் பரிமாற்றிக்கொள்ள தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்த ஞானசார தேரர், மறைமுக நிகழ்ச்சி நிரல் இல்லாமல் வரும் அனைவருக்கும் கலந்துரையாடலுக்கான கதவுகள் திறந்திருக்கும் என்றார்.

இந்த அனைத்துக் கருத்துக் கணிப்புகளுக்குப் பின்னர், செயலணியின் கருத்துக்களும் பரிந்துரைகளும், உரிய காலத்துக்குள் ஜனாதிபதி அவர்களிடம் முன்வைக்க எதிர்பார்த்திருப்பதாகவும், தேரர் தெரிவித்தார்.

இலங்கைக்குள் ‘ஒரே நாடு; ஒரே சட்டம்” என்பதைச் செயற்படுத்துவதற்கான ஆய்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கான பொறுப்பு, “ஒரே நாடு; ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதிச் செயலணி”க்கு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அதன் உறுப்பினர் பேராசிரியர் சுமேத சிறிவர்தன, தவிர சட்டத்தை இயற்றுவதற்கான அதிகாரம் இந்தச் செயலணிக்கு வழங்கப்படவில்லை என்றும் அது, அரசியலமைப்புச் சபையினால் முன்னெடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.

தேடப்படும் குற்றவாளி கோட்டாபய!! கிளாஸ்கோவை சுற்றிவரும் மர்ம வாகனம்!

காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கெடுப்பதற்ககாக ஐக்கிய ராஜ்யத்தின் கிளாஸ்கோ சென்றுள்ள ‘சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ ஒரு தேடப்படும் குற்றவாளி’ என்று ஒளி விளக்குகளால் பொறிக்கப்பட்ட மர்ம வாகனங்கள் கிளாஸ்கோ நகரம் முழுவதும் நடமாடித்திரிவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அரச தலைவருக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் மேற்கொண்டு வருகின்ற பல்வேறு போராட்டங்களின் அங்கமாக இந்த ஒளியூர்தி வழியான போராட்டமும் இருக்கலாம் என்று கிளாஸ்கோ வாழ் தமிழ் மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றார்கள்.

கோட்டாபயவிற்கு எதிரான புலம்பெயர் தமிழரின் போராட்டங்கள் வலுப்பெற்றுவரும் நிலையில் அவர் தங்கியிருக்கும் பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஈழத்தமிழினத்தின் மீது இனப்படுகொலையை செய்த கோட்டாபய ராஜபக்ச ஒரு போர்க்குற்றவாளி என்பதால் இந்த மாநாட்டில் அவர் பங்கெடுக்க கூடாதென்ற நிலைப்பாட்டை வலியுறுத்தியும் போர்க்குற்றங்களுக்கு அவரை பொறுப்புக்கூற வைக்குமாறு அனைத்துலக சமூகத்திடம் கோரும் அழுத்தம் வகையிலும் நாளை மாநாடு இடம்பெறும் நிகழ்வு வளாகத்திற்கு எதிரே ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளும் தமிழ் மக்கள் இன்று லண்டனில் இருந்து சிறப்பு பேருந்துகள் மற்றும் வாகனங்களில் மாலை புறப்பட்டனர். பிரான்ஸ் உட்பட்ட ஏனைய நாடுகளில் இருந்தும் மக்கள் கிளாஸ்கோவுக்கு வரவுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை கிளாஸ்கோவில் தங்கியுள்ள சிறிலங்கா அரச தலைவருக்கு எதிராக ஸ்கொட்லாந்து தமிழர்கள் சமூகவலைத்தள பதிவுகள் ஊடாக கடுமையான எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஏற்கனவே ஸ்கொட்லாந்தின் தலைநகரான எடின்பரோ மற்றும் ஐ.நா மாநாடு இடம்பெறவுள்ள கிளாஸ்கோ ஆகிய நகரங்களில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களில் கோட்டாபயவுக்கு எதிராக பிரமாண்ட அளவில் சீரொளி பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு மேலும் 2 மில்லியன் யூரோ நிதியை வழங்கியது ஐரோப்பிய ஒன்றியம்

தொற்றுநோயை நிர்வகிப்பதற்கான அதன் முயற்சிகளில் இலங்கைக்கு உதவ ஐரோப்பிய ஒன்றியம் (EU) மேலும் 2 மில்லியன் யூரோ நிதியை வழங்கியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான அலுவலகமான ECHO வழங்கும் இந்த மானியம், உலக சுகாதார அமைப்பு மற்றும் இலங்கையில் உள்ள World Vision மூலம் வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த வளங்கள் Covid-19 மற்றும் இலங்கையில் அதன் சமூகப் பொருளாதார விளைவுகளை எதிர்த்துப் போராடுவதற்கான தற்போதைய ஐரோப்பிய ஒன்றிய ஆதரவை நிறைவு செய்கின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த புதிய உதவித்தொகையானது கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உலகளாவிய பிரதிபலிப்பின் ஒரு பகுதியாகும் என்றும் இது இலங்கையில் உலக சுகாதார அமைப்புடனான தற்போதைய பங்காளித்துவத்தை நிறைவு செய்கிறது என்றும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் தூதுவர் டெனிஸ் சாய்பி கூறியுள்ளார்.