இன்று 1530 பேருக்கு தொற்று ; நேற்று 84 கொவிட் மரணங்கள்

கொவிட் தொற்றுக்கு உள்ளான மேலும் 84 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதே நேரரம் கடந்த 24 மணித்தியாலங்களில்நாட்டில் மேலும் 1,530 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,022 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 501,302 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 431,036 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவைக் காரணம் காட்டி  மீண்டும் ஒரு தடையுத்தரவு –  ரெலோ பிரசன்னா இந்திரகுமார்

மீண்டும் மீண்டும் இந்த அரசு கொரோனாவைக் காரணம் காட்டி எம் நினைவுகளைத் தடுக்க எண்ணுகின்றது. அடக்க அடக்க அதிகரிக்குமே தவிர எம் நினைவுகள் என்றும் அடங்காது. இவ்வாறானா செயற்பாடுகள் மூலம் மேலும் தமிழ் மக்களின் மனங்களைப் புண்படுத்தும் செயற்பாடுகளையே அரசு மேற்கொள்கின்றது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளருமான பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

திலீபன் நினைவேந்தலை நினைவு கூருவது தொடர்பில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவினை இன்றைய தினம் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய அதிகாரியினால் கையளிக்கப்பட்டதன் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழினத்திற்கான போராட்ட வரலாற்றின் நினைவேந்தல்களை அனுஸ்டிப்பதற்கு எதிரானவர்கள் என்று மட்டக்களப்பில் யாரும் இருக்கமாட்டார்கள். அப்படி இருக்க நினைவேந்தல்களுக்கு எதிரானவர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்பது பொய்யான அறிக்கையாகவே தோணுகின்றது. பொலிசாரினால் நீதிமன்றத்திற்கு பொய்யான தகவல்களைச் சொல்லி தடையுத்தரவுகள் பெறப்படுகின்றனவோ எனச் சந்தேகிக்கத் தோணுகின்றது.

அடுத்து கொரோனா, தமிழ் மக்களின் நினைவேந்தல்களுக்கு மாத்திரம் எவ்வாறுதான் கொரோனா பரவுகின்றதோ தெரியவில்லை. ஆளுங்கட்சி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எத்தனையோ விழாக்கள் செய்கின்றார்கள். திறக்கப்பட்ட களஞ்சியசாலைகளுக்கு இன்னுமொரு பெயர் வைத்து அதனை மீண்டும் திறக்கின்றார்கள். இந்த நிகழ்வுகளில் எல்லாம் அவர்களின் ஆதரவாளர்கள், அதிகாரிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்தும் கொள்கின்றார்கள். அப்போதெல்லாம் இல்லாத கெரோனா எமது நினைவேந்தல்களுக்கு மாத்திரம் எவ்வாறு வருமோ தெரியவில்லை.

மீண்டும் மீண்டும் இந்த அரசு கொரோனாவைக் காரணம் காட்டி எம் நினைவுகளைத் தடுக்க எண்ணுகின்றது. அடக்க அடக்க அதிகரிக்குமே தவிர எம் நினைவுகள் என்றும் அடங்காது. அரசு மக்களின் மனங்களை வெல்வதை விடுத்து மீண்டும் மீண்டும் இவ்வாறானா செயற்பாடுகள் மூலம் தமிழ் மக்களின் மனங்களைப் புண்படுத்துகின்றது என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

ரிஷாட்க்கு முதலாம் திகதி வரை விளக்கமறியலில்; மனைவி, மாமனாருக்கு பிணை

16 வயது சிறுமியை துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் முதலாம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனாருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

ரிஷாத்தின் வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த நிலையில் சிறுமி ஹிஷாலினி தீக்காயங்களுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தது.

இதன்போதே ரிஷாத் பதியுதீனுடைய மனைவி மற்றும் மாமனாரை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய இன்றைய தினம் பிறப்பித்துள்ளார்.

 

மக்களுக்கு எப்போது நீதி கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது – பேராசிரியர் போல் நியூமன்

ஆணையாளருடைய அறிக்கையை வருடாவருடம் வரவேற்றுக்கொண்டு தான் இருக்கிறோம். வரவேற்பைத் தாண்டி அந்த அறிக்கைகள் எங்கே போகிறது என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. மக்களுக்கு எப்போது நீதி கிடைக்கும் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது என பெங்களூர் பல்கலைக்கழகத்தினுடைய மனித உரிமைகள் தொடர்பிலான பேராசிரியர் போல் நியூமன் தெரிவித்துள்ளார்.

48வது கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும் தீர்மானம் மிக்கதாக இல்லாத சூழ்நிலையிலும் இந்த கூட்டத்தொடரில் ஆணையாளரினுடைய அறிக்கையினை நீங்கள் எப்படி அவதானிக்கிறீர்கள் என ஊடறுப்பு நிகழ்ச்சியில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அறிக்கை வெளிவந்த அடுத்த நாளே வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ், வெளியிலிருந்து எந்த ஒரு அழுத்தமும் எமது நாட்டுக்கு வர முடியாது, வரவும் கூடாது. மனித உரிமை ஆணையகத்துக்கு அழுத்தம் கொடுக்க எந்த உரிமையும் இல்ல என தெளிவாகச் சொல்லியிருக்கின்றார்.

ஆணையாளருடைய அறிக்கையை வருடாவருடம் வரவேற்றுக்கொண்டு தான் இருக்கிறோம். வரவேற்பைத் தாண்டி அந்த அறிக்கைகள் எங்கே போகின்றது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.

மக்களுக்கு எப்போது நீதி கிடைக்கும் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. இவ்வாறு இன்னும் எத்தனை வருடங்களுக்கு இருக்கப்போகின்றது என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது என தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்துவது வீரம் கிடையாது- சரத் பொன்சேகா

தமிழீழ விடுதலைப் புலிகளைக் கண்டு அஞ்சிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்துவது வீரம் கிடையாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளதாவது, “இந்த நாட்டை முன்னேற்ற வேண்டுமெனில், அதற்கு தகுதியானவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், துப்பாக்கிகளை வைத்து அச்சுறுத்தல்களை மேற்கொள்வோருக்கும் அமைச்சுப் பதவிகளைக் கொடுத்து, இந்த நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது.

லொஹான் ரத்வத்தவின் நடவடிக்கைகள் இன்று அனைவராலும் விமர்சிக்கப்படுகிறது. இவர் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் விடுதலைப் புலி உறுப்பினரின் பெயரைக் கேட்டாலோ அல்லது அவர்களைக் கண்டால்கூட ஒழிந்துக் கொள்வாராக இருக்கும்.

ஆனால், இன்று 15 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடும் அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்துகிறார். அந்தக் கைதிகள் இன்று அனைத்தையும் கைவிட்டுள்ளார்கள். அப்படியாவர்களை மண்டியிட வைத்து அவர்களின் தலையில் துப்பாக்கியை வைக்கிறார்.

இது எவ்வளவு கீழ்த்தரமான செயற்பாடு. இவ்வாறான செயற்பாடுகளை வீரன் ஒருவன் ஒருபோதும் செய்ய மாட்டான். குடிபோதையில் ஒருவன் துப்பாக்கித் தூக்கினால், அவன் வீரன் கிடையாது.

நானும் சிறைக்கைதியாக இருந்துள்ளேன். அவர்கள் அனுபவிக்கும் துன்பம் எனக்கும் தெரியும். இந்த நிலையில், நான் கைதிகளிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். இவ்வாறான சண்டியர்கள் இனிமேல் சிறைச்சாலைக்குள் நுழைந்து அச்சுறுத்தினால், அவர்களுக்கு தகுந்த பாடத்தை கற்பியுங்கள்.

அரசாங்கம் லொஹான் ரத்வத்தவை, சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து மட்டும்தான் நீக்கியுள்ளதே தவிர, அவருக்கு ஏனைய அமைச்சுப் பதவிகள் அப்படியே தான் உள்ளன.

இவருக்கு எதிராக இன்னும் பல முறைப்பாடுகளும் உள்ளன. பாராளுமன்றிலும் நான் இதுதொடர்பாக ஏற்கனவே கூறியுள்ளேன்.

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது” என அவர் குறிப்பிட்டள்ளார்.

Posted in Uncategorized

நாங்கள் இறந்து விட்டால் சாட்சியங்கள் அழிந்து விடும் அதனையே அரசாங்கம் எதிர்பார்க்கின்றது- உறவுகள்

நாங்கள் இறந்து விட்டோம் என்றால் சாட்சியங்கள் அழிந்து விடும். அதனையே அரசாங்கம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தின் இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

https://youtu.be/Ssht2US5QhM

ஆகவே இலங்கை இராணுவத்தையோ அல்லது அரசாங்கத்தையோ நாங்கள் நம்பவில்லை. இதனால் எங்களுக்கு சர்வதேசம் ஒரு நல்ல பதிலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் விடுக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மனுவல் உதயச்சந்திரா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஜெனிவா 48 ஆவது அமர்வு இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் நாங்கள் ஜெனிவாவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு ஒரு தீர்வு தேவை. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக அம்மாக்கள் இன்று சுமார் 1500 நாட்களாக வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.

நாங்கள் வீதியில் இறங்கி எமது உறவுகளை மீட்க போராடுவது  உலக நாடுகளுக்கே தெரியும். நாங்கள் நீதிக்காக போராடி வருகிறோம் தவிர நிதிக்காக போராடவில்லை.

மன்னார் மாவட்டத்தில் முப்படையை நம்பியே நாங்கள் இருந்தோம். ஒன்றும் நடக்காது எமது பிள்ளைகள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்பி இருந்ததோம்.

இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்று இதுவரை எந்ததொரு தகவலும் இல்லை.

ஆகவே, நாங்கள் இறப்பதற்கு முன் எமது பிள்ளைகளின் நிலை என்ன என்று எமக்கு தெரிய வேண்டும். எமது பிள்ளைகளின் நிலை என்ன? அவர்களை எங்கே வைத்துள்ளீர்கள்? அவர்கள் இருந்தால் அவர்களை விடுதலை செய்ய உதவுங்கள் என்றுதான் நாங்கள் இன்று உலக நாடுகளிடம் கேட்கின்றோம்.

எமது பிள்ளைகளை வீதியில் நின்று தேடுகின்ற அம்மாக்களாக நாங்கள் இருக்கின்றோம். அவர்களின் கண்ணீரை உலக நாடுகள் பார்த்துக் கொண்டு இருக்கின்றது.

ஜெனிவா பேச்சுவார்த்தையில் எமக்கு ஒரு நல்ல முடிவு கிடைக்க வேண்டும். இலங்கை இராணுவத்தையோ அல்லது அரசாங்கத்தையோ நாங்கள் நம்பவில்லை.

எங்களுக்கு சர்வதேசம் ஒரு நல்ல பதிலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜெனிவா 48 ஆவது அமர்வில் கோரிக்கை விடுக்கின்றோம்.

எங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும். எங்களின் காலங்கள் இன்னும் அதிகம் இல்லை. நாங்கள் இறந்து விட்டோம் என்றால் சாட்சியங்கள் அழிந்து விடும். அதனையே அரசாங்கம் பார்த்துக் கொண்டு இருக்கின்றது.

ஒரு அம்மா உயிருடன் இருக்கும் வரை  பிள்ளைகளுக்கான போராட்டம் நடந்து கொண்டு இருக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஒக்ரோபர் 01 வரை நீடிப்பு

நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் செப்ரம்பர் 21ஆம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில் எதிர்வரும் ஒக்ரோபர் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் இன்று (17) முற்பகல் கூடிய கொவிட் ஒழிப்பு விசேட குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

செப் 21- 22ல் பாராளுமன்றம் கூடும்

பாராளுமன்றத்தை செப்ரம்பர் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று (17) நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இந்தியா – இலங்கை பயணிகள் கப்பல் சேவை விரைவில் தொடக்கம்: இலங்கை அமைச்சர் வியாழேந்திரன் பேச்சு

இந்தியா – இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாக இலங்கை அமைச்சர் சிவகங்கையில் தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டைமான் மற்றும் இலங்கை கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஆகியோர் சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு பின் ராமேஸ்வரம், நாகை, புதுக்கோட்டை மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகள் இலங்கை அமைச்சர்களை சந்தித்து, ‘இந்திய இலங்கை மக்கள் வேற்றுமை இல்லாமல் உறவாக பழகி வருகிறோம். ஆனால், சமீப காலமாக தமிழக மீனவர்களை எதிரியாக நினைத்து இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதுடன், அந்நாட்டு கடற்படையால் பல மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காணாமல் போயிருக்கிறார்கள்.
200-க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்படாமல் உள்ளன. அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கிடப்பில் போடப்பட்டுள்ள இந்திய இலங்கை இரு நாட்டு மீனவ பேச்சுவார்த்தையை மீண்டும் நடத்தி இரு நாட்டு மீனவர்களும் பாரம்பரிய இடத்தில் மீன்பிடித் தொழில் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை பிரதம மந்திரியின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டைமான், இலங்கையில் உள்ள இந்திய படகுகளை விடுவிக்க வேண்டும், எதிர்காலத்தில் கடலில் நட்பு பயணம் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இலங்கையில் அமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி இரு நாட்டு மீனவர்களின் உறவுகளை மேம்படுத்தி அமைதியான முறையில் மீன்பிடி தொழில் நடத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

ராமேஸ்வரம் மீனவர்கள் குறுகிய கடல் எல்லைக்குள் மீன் பிடிப்பதால் எல்லை தாண்ட நேரிடுகிறது, இதனால் இரு நாட்டு கடற்படையினரும் நடவடிக்கை எடுக்கிறார்கள். எனவே இரு நாட்டு கடற்படையினர் பேசி சுமூக தீர்வு ஏற்பட இலங்கை அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக தெரிவித்தார்.

இலங்கையில் துறைமுகப் பணிகளை சீனா ஏற்று நடத்துவதில் எந்த பாதிப்பும் இல்லை. சீனா துறைமுகம் கட்டவில்லை துறைமுக விரிவாக்கப் பணிகளை சீனர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் உள்ள உறவு எந்தவிதத்திலும் பாதிக்காது என்றார் செந்தில் தொண்டைமான்.

அதன் பின்னர் பேசிய இலங்கை கிராம அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், இலங்கை இந்தியா இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிப்பது தொடர்பாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து உரையாடினோம். இது குறித்து புதுச்சேரி முதல்வர் சாதகமான பதிலை தெரிவித்துள்ளார். அதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பித்துள்ள நிலையில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது என்றார்.

“காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கும்போது நிச்சயமாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கும், இலங்கையில் இருந்து இந்தியாவுக்கும் சுற்றுலாத்துறை, சமய நிகழ்வுகள், மருத்துவத்துறை உள்ளிட்ட உறவுகள் மேம்படும். இரு நாட்டுக்கும் இடையே கப்பல் போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம்,” என்றார்.

இலங்கை அமைச்சருடனான சந்திப்பு குறித்து ராமேஸ்வரம் அனைத்து மீனவ சங்க தலைவர் ஜேசுராஜா பிபிசி தமிழிடம் பேசுகையில், கடந்த சில மாதங்களாக இலங்கை கடற்படையின் கடுமையான கெடுபிடியால் தமிழ்நாட்டு மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடிக்க முடியவில்லை எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள இரு நாட்டு மீனவர்கள் தொடர்பான பேச்சுவார்த்தையை விரைவில் நடத்திட வேண்டும்.

இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்வதாக இலங்கை அமைச்சர் உத்தரவாதம் தந்துள்ளார். இதனை தமிழக மீனவர்கள் முழுமையாக நம்புகிறோம்.

ஒவ்வொரு முறையும் மத்திய, மாநில அரசுகளிடம் மீனவ பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு பெற்று தரவும் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

தொடர்ந்து உயர்ந்து வரும் டீசல் விலையால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு மீனவர்களின் பாரம்பரிய தொழிலான மீன்பிடி தொழில் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது என ஜேசு ராஜா தெரிவித்தார்.

Thanks :- BBC Tamil

இலங்கை நால்வரை விடுவிக்கவேண்டும்; ‘ஹெக்கர்ஸ்’ ன் மிரட்டல்

எதிர்வரும் 20 ஆம் திகதி தாக்குதல் ஒன்று நடத்தப்படலாம் என கிடைக்கப்பெற்றதாக கூறப்படும் தகவல் ஒன்றுக்கு அமைய, கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தளை, மஹிந்த ராஜபக்க்ஷ சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த தகவல் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேசிய உளவுச் சேவை விசேட அவதானம் செலுத்தி இரகசிய விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அறிய தெரிய வருகிறது.

அதன்படி தாக்குதல் குறித்த எச்சரிக்கை மின்னஞ்சலானது, பங்களாதேஷின் இராணுவத்துடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றின் இணையத் தளத்தை ‘ஹெக்’ செய்து, அதன் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கடந்த செவ்வாயன்று (14) இரவு விமான நிலையத்துக்கு கிடைக்கப்பெற்றதாக கூறப்படும் மின்னஞ்சலில், எதிர்வரும் 20 ஆம் திக்தி விமான நிலையங்கள் மற்றும் அரச கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தப் போவதாகவும், தாம் பெயரிடும் நால்வரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிய வருகிறது.

எவ்வாறயினும் உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்றாக குறித்த தகவல் கிடைக்கப்பெற்றிருப்பினும் முன்கூட்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளின் நிமித்தம் இவ்வாறு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில், விமானப்படையினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர், பொலிஸ் குழுக்கள் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.

இந்த மின்னஞ்சலானது, ‘ஹெக்கர்ஸ்’ என அறியப்படும் இணையங்களை முடக்கும் திட்டமிட்ட குழு ஒன்றின் வேலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், உளவுத் துறை சிறப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன.

Posted in Uncategorized