ஈழப் பிரச்சினைக்கு, இந்திய நடைமுறைகள் ஊடாகவே தீர்வு வழங்கப்பட வேண்டும் – வே.இராதகிருஷ்ணன்

ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு, இந்திய சட்டத்தின் கீழான நடைமுறைகள் ஊடாகவே தீர்வு வழங்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணி தலைவருமான வே.இராதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொஹைய்தீனின் அழைப்பை ஏற்று, தமிழ் நாட்டிற்கு விஜயம் செய்திருந்த அவர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தமிழகத்தில் அகதிகள் முகாமில் வாழும் இலங்கை மலையக தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கி இந்திய வம்சாவளி மக்களாக ஏற்றுக் கொள்ள மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையில் கொரோனா காரணமாக உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் புதிய அரசு தேர்வு செய்யப்பட்டு ஒராண்டு காலமான நிலையில் பல புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள் நாட்டு மக்கள் பாதுகாப்புக்கு எந்த இடையூறும் இல்லை.

அதேநேரம் மக்கள் எதிர்பார்த்த விருப்பங்கள் நிறைவேறவில்லை. தமிழக மக்கள் வசிக்கும் பகுதியில் மக்களின் உரிமைகள், விருப்பங்கள் மற்றும் தாமாக சுதந்திரமாக நடமாடும் உரிமைகள் நிறைவேறவில்லை.

புதிதாக வந்துள்ள தமிழக முதல்வர் இலங்கை மறுவாழ்வு இல்லம் என்று, இலங்கை அகதிகள் முகாமை பெயர் மாற்றம் செய்து அடிப்படை வசதிகள் செய்துள்ளது வரவேற்கத்தக்கது.

புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் மீண்டும் இலங்கையில் குடியேற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி.

இலங்கை அகதிகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுப்பது பாராட்டுக்குரிய விஷயம்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் தங்கியுள்ளவர்கள் மற்றும் இலங்கையில் ஏற்பட்ட வன்செயல் காரணமாக பாதிக்கப்பட்ட மலையக தமிழர்கள் அகதிகள் முகாமில் உள்ளனர்.

இலங்கையில் 10வருடமாக போர் பிரச்சனைகள் இல்லை, மறுவாழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரும்பிய வடகிழக்கு தமிழர்கள் இலங்கையில் மீண்டும் குடியேறுவதற்கு இலங்கை அரசு நடவடிக்கைகள் ஏற்படுத்தி வருகிறது.

30 வருடங்களாக தமிழகத்தில் வந்து தங்கியுள்ள மலையக தமிழர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. மலையக பகுதிக்கு மீண்டும் வேலை செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை, தோட்டத்தில் மட்டுமே அவர்கள் வேலை செய்ய முடியும், சொந்த காணி கிடையாது.

எனவே தமிழக முதல்வர் அவர்கள் இதனை கருத்தில் கொண்டு மலையக தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கி இந்திய வம்சாவளி மக்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடர் நாளை ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடர் நாளை 13 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ளது.

ஜெனிவாவில் ஆரம்பமாகும் இந்த கூட்டத்தொடர் ஒக்டோபர் 8 ஆம் திகதி வரை நடைப்பெறும். அனைத்துலக நாடுகளின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட உள்ளது.

முதல் நாளான நாளை இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான நிலவரம் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் வாய்மூல அறிக்கையை வெளியிடுவார்.

மேலும் அன்றைய தினமே ஆப்கானிஸ்தான் , வெனிசூலா , மத்திய அமெரிக்க நாடான நிகரகுவா மற்றும் மியன்மார் ஆகிய நாடுகள் குறித்தும் கவனத்தில் கொள்ளப்பட உள்ளது.

கனடா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்ற உள்ளன.

இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விடயங்கள் குறித்து இந்த நாடுகள் கேள்விகளை எழுப்பலாம்.

மறுப்புறம் ஏற்கனவே வலியுறுத்தப்பட்ட சர்வதேச பொறிமுறைக்கான அழுத்தங்களும் காணப்படும் என கணிக்கப்படுகின்றது.

அதே போன்று வெளிவிவகார அமைச்சர் பேரசிரியர் ஜீ.எல். பீரிஸ் இணைய வழியாக கலந்துக்கொண்டு உரையாற்றவுள்ளார்.

இதன் போது தேசிய நல்லிணக்கம், காணாமல் போனோர் விவகாரம் மற்றும் நட்டஈடு வழங்குதல், பயங்கரவாத தடைச்சட்டம், மனித உரிமை நிலவரம் மற்றும் அரசியல் தீர்வு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்தும் விளக்கமளிக்கவுள்ளார்.

இந்த நிலைப்பாட்டை கொழும்பில் உள்ள அனைத்துலக இராஜதந்திர மையங்களுக்கும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியப்பரப்பில் தற்போதுள்ள அரசியல் குழப்பங்கள் குறித்து  தலைமைக்குழுவில் ஆராய்வு – செயலாளர் நாயகம் ஜனா

தமிழ்த் தேசியப்பரப்பில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிளவு ஏற்படவுள்ளதாக வெளியாகின்ற கருத்துக்கள் தொடர்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டதுடன், எதிர்வரும் 18ஆம்திகதி மத்தியகுழு கூடி ஆராயவிருக்கிறது என்று இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்தார்.

தமிழ் மக்கள் மத்தியிலும் அரசியல் பரப்பிலும் ஏற்பட்டுள்ள தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே  பாராளுமன்ற உறுப்பினர்  கோவிந்தன் கருணாகரம் (ஜனா)இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் குறிப்பிடுகையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் தமிழ்த் தேசியப் பரப்பிலும் தற்போது பேசுபொருளாக இருக்கும் நாளை (13) நடைபெறவிருக்கும் ஐ;கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் 48வது கூட்டத்தொடருக்கு முன்னதாக ஆணையாளருக்கு தமிழ்த் தேசியப் பரப்பிலிருந்து பல முனைகளிலும் கடிதங்கள் எழுப்பட்டுள்ளன. இருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளினாலும் எழுதப்பட்ட கடிதங்களில்  பல குழப்பங்பள் மக்கள் மத்தியில் இருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவடைந்துவிட்டது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவடையாது என்றும் கருத்துக்கள் பரிமாறப்பட்டுக் கொண்டிருக்கையில் ஒரு கட்சியினரை ஒரு கட்சியினர் வசைபாடிக் கொண்டும் இருக்கின்றன.

இந்த வேளையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழுக் கூட்டம்  மெய்நிகர் வழியாக நேற்றைய தினம் (11) நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் இக் கருத்துக்கள் சம்பந்தமாக நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டு இந்தக் குழப்பத்திற்கு முடிவுகாண்பது தொடர்பில் ஆராயப்பட்டது.

இருந்தும் இது சம்பந்தமாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்தியகுழு எதிர்வரும் 18ஆம் திகதி மெய்நிகர் வழியாகக் கூடி தீர்க்கமான முடிவொன்றை எடுக்க இருக்கிறது.

கட்சிகளின் அமைப்பு ரீதியிலான கட்டமைப்பில் கருத்து வேறுபாடுகள் காணப்படுவதும் கலந்துரையாடப்படுவதும் வழமையானதே. தமிழ்த் தேசியம் சார்ந்தும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும் போராடிக்கொண்டிருக்கும் ஒரு கட்சி என்ற வகையில் தொடர்ச்சியான முயற்சிகளை எமது கட்சி எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

மூடப்பட்ட யாழ். சுவிட்சர்லாந்து தூதரக அலுவலகத்தை மீண்டும் திறக்கவும் –  வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம்

யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்து,பின்னர் தற்காலிகமாக மூடப்பட்ட சுவிட்சர்லாந்து தூதரக அலுவலகத்தை மீண்டும் திறக்க ஆவன செய்யுமாறு இலங்கையிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரிடம் வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் மன்னார் மறை மாவட்டங்களின் ஆயர்கள் கையொப்பமிட்டு அனுப்பிய கடிதத்தில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவுக்கு வந்து பன்னிரண்டு ஆண்டுகள் நிறைவுற்றபோதும் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ள வடக்கு-கிழக்கு பிரதேசத்தில் சர்வதேச நிறுவனங்கள்,மனித உரிமை கண்காணிப்பாளர்கள்,இராஜதந்திர அதிகாரிகளின் பிரசன்னம் மிகவும் அவசியமாக இருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் சுவிட்சர்லாந்து தூதரகத்தினுடைய அலுவலகத்தின் பிரசன்னம் மிகவும் முக்கியமானது என்பதை ஆயர் மன்றம் குறித்த கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளது.

அதேவேளை, கடந்த காலங்களில் சுவிட்சர்லாந்து அலுவலத்தின் பன்முகப்படுத்தப்பட்ட பணிகளினால் வடக்கு-கிழக்கு மக்கள் அடைந்த நன்மைகளுக்காக நன்றி தெரிவிக்கின்றோம்.

அத்துடன் இலங்கையை தமது பூர்வீகமாகக் கொண்டு தற்போது சுவிஸ் பிரஜைகளாக இருக்கின்றவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் பலர் வடக்கு-கிழக்கு பிரதேசங்களில் வாழுகின்ற நிலையில் அவர்களது சமூக, கலாசார,பொருளாதார தேவைகளை கண்காணிக்க யாழ்ப்பாணத்தில் திறக்கப்படும் சுவிஸ் தூதரக அலுவலகம் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்துள்ள வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம்,இவற்றை கருத்தில் கொண்டு அலுவலகத்தை யாழ்ப்பாணத்தில் விரைவில் மீளத் திறக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது

Posted in Uncategorized

பதுக்கப்படும் பொருட்களை மக்களுக்கு விநியோகிக்கவே அவசரகாலச்சட்டம் – நீதி அமைச்சர்

பதுக்கப்பட்ட பொருட்களை அதாவது சீனி, மா போன்றவற்றை அரசுடமையாக்கி பொது மக்களுக்கு விநியோகிக்கும் அதிகாரம் நுகர்வோர் பாகாப்புச் சட்டத்தில் கிடையாது. அதனாலேயே இந்த அவசரகாலச்சட்டம் ஜனாதிபதியால் அமுல்படுத்தப்பட்டது.
என்று நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். யூ. எம். அலி சப்ரி தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (10) இடம்பெற்ற நிகழ்வில் நுகர்வோரை பாதுகாப்பதற்காக அவசரகால விதிகள் அமுல்படுத்தப்பட்டது ஏன் என்பது தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அலர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

கொரோனா வைரஸ் தற்போது மாற்றங்களுடன் இலங்கையை மாத்திரமின்றி உலக நாடுகளையும் பாதித்து வருகிறது. விசேடமாக டெல்டா என்ற திரிபு தற்போது இலங்கையில் தொற்றாளர்கள் மத்தியில் 195.8 வீதமாக காணப்படுகிறது. இந்தியா, வியட்நாம், இந்தோனேசியா, பிரிட்டன், நேபாளம், அமெரிக்கா போன்ற நாடுகளில் இது தற்போது வேகமாக பரவிவருவதை நாம் காணக்கூடியதாகவுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் நமது நாடு நெருக்கடியான நிலையை எதிர்கொண்டுள்ளது.நாட்டின் வருமானத்திலும் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சிலர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரிசி, சீனி, மா போன்ற பொருட்களுக்கு இயற்கையாக தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பொது மக்களை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்குகின்றனர்.

இதனால் பொருட்கள் பதுக்கப்படுவதை தடுப்பதற்காக பொது மக்கள் பாதுகாப்பு விதிகளை நடைமுறைப்படுத்துவதற்காக அவசரகால விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

பொது மக்களுக்கான பொருட்கள் விநியோகத்தை உறுதி செய்வதற்காவும் மக்களின் நலனைக்கருத்திற்கொண்டு ஜனாதிபதியினால் அவசர கால விதிகள் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

பொருட்களுக்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் மற்றும் பதுக்கலை தடுப்பதற்கு நுகவோர் பாதுகாப்புச் சட்டம் நாட்டில் உண்டு. இந்நிலையில் அவசரகால விதிமுறைகளை அமுலாக்கும் தேவை ஏன் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொருட்களை பதுக்குவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை அதாவது இவ்வாறு பதுக்கலில் ஈடுபடுவோரை நீதி மன்றத்தில் ஆஜார்படுத்துவதன் மூலம் நீதி மன்றம் தண்டனையாக தண்டப்பணம் விதிக்க முடியும். ஆனால் பதுக்கப்பட்ட பொருட்களை அதாவது சீனி, மா போன்றவற்றை அரசுடமையாக்கி பொது மக்களுக்கு விநியோகிக்கும் அதிகாரம் நுகர்வோர் பாகாப்புச் சட்டத்தில் கிடையாது. அதனாலேயே இந்த அவசரகாலச்சட்டம் ஜனாதிபதியால் அமுல்படுத்தப்பட்டது.

ஊரடங்குச்சட்டம் ஆங்கிலேயரது ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. 1977 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி இதனை அமுல்படுத்தினார். ஆனால் நாம் இதனை செய்யவில்லை. தனிமைப்படுத்தல் ஊரடங்கு என்பது தொற்று பரவுவதை தடுப்பதற்காக குறிப்பிட்ட பகுதியை தனிமைப்படுத்தும் அதிகாரம் சுகாதார பணப்பாளர் நாயகத்திற்கு வழங்கப்படுகிறது. நோய் பரவுவதை தடுப்பதற்கு இது பெரு உதவியாக அமைகிறது என்றும் என்றும் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். யூ. எம். அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

தீர்வுக்காக கடந்த காலத்தில் முன்வைத்துதையே மீளவும் முன் வைப்பதில் பயனில்லை – ரெலோ உப தலைவர் ஹென்றி மகேந்திரன்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேசுவதில் தவறில்லை. ஆனால் கூட்டமைப்பு கடந்த கால த்தில் தீர்வுக்காக முன்வைத்துள்ள அதே விடயங்களையே மீளவும் முன் வைப்பதில் எவ்வித பயனுமில்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உப தலைவரும் கல்முனை மாநகர சபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஹென்றி மகேந்திரன் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆட்சியிலும் அரசியல் தீர்வு பேச்சுவார்த்தை நடக்கிறதே தவிர எதுவும் இடம்பெற்றதாக தெரியவில்லையே என வினவியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் ஊடாக மக்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் அதே வேளை அதிகாரப் பகிர்வு குறித்த அடுத்த நகர்வுக்கு செல்லவும் வேண்டும். போராடிக் கிடைத்த உரிமைகளைப் பொருட்படுத்தாமல் மத்தியரசின் கீழ் செல்ல வேண்டுமென சிந்திப்பது 13 ஆவது சட்ட திருத்தத்திற்கு புறம்பான செயற்பாடாகும்.

தேசிய பாடசாலைகள் என்ற பெயரிலும் வைத்தியசாலைகளைத் தரமுயர்த்துதல் என்ற பெயரிலும் மாகாண சபைகளின் அதிகாரங்கள் பறிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படுவதுடன் நகர அபிவிருத்தி அதிகார சபை நகர விரிவாக்கம் என்ற பெயரில் உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதும் நிறுத்தப்படல் வேண்டும்.

தேசிய அரசாங்கத்துக்குரிய மாகாணத்துக்குரிய பாடசாலைகள்இ வைத்தியசாலைகள் வீதிகள் நீர்ப்பாசனத் திட்டங்கள் மீன்பிடி கடல் சார் என இலங்கையிலுள்ள ஒவ்வொரு துறையும் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வடக்கு கிழக்கில் சிறுபான்மைக்குள் சிறுபான்மையாக இருக்கின்ற ஒரு பிரிவினர் மாகாண சபை துறைகளிலுள்ள அபிவிருத்தி வளங்கள் பற்றாக்குறையாக இருக்கின்றன என்றடிப்படையில் தேசிய அரசாங்கத்துக்குரிய துறைகள் கூடிய வள அபிவிருத்தியை கொண்டுள்ளதாக கருதுகின்றனர்.

மத்திய அரசாங்கத் துறைகள் கூடிய வள அபிவிருத்தியை பெற்றுள்ளதனால் மாகாண சபைத் துறைகளுக்கு மாகாண சபையினால் வளங்களை பகிரமுடியாத நிலையில் மாகாண சபை வளத்தைக் கொண்டு உச்ச நிலைக்கு முயற்சிக்கிறபோது இரு துறைகளுக்குமான ஏற்றத்தாழ்வு வரும்போதுதான் பாடசாலை வைத்தியசாலை உட்பட பல்வேறு துறைகள் மத்தியரசின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் இருந்து எழுகின்றன. ஆகவே மத்திய அரசாங்கத்தின் வளங்களுக்கேற்ப மாகாண சபையின் வளங்களும் உயர்த்தப்பட வேண்டும்.

ஒரு சமூகம் கல்வி அறிவு ரீதியாக வளர்ச்சியடையும்போது பொருளாதார அபிவிருத்தியும் அறிவும் வளர்ச்சியடையும். அறிவு வளர்ச்சியடையும் போது தன்னுடைய இனத்தை பாதுகாக்கும் நோக்கில் வளர்ச்சியடைய முடியும். அதுவும் படித்த சமூகமாக வரும்போது ஏனைய நன்மைகளும் கிடைக்கப்பெற்று வளங்களை காப்பாற்றிக் கொள்வார்கள். வெளியில் இருந்து வருகின்ற ஆபத்தையும் தடுத்து நிறுத்தக்கூடிய கல்வியறிவுள்ள சமூகமாகவும் மாற்றமடையும்.

13 ஆவது திருத்தச்சட்டம் ஒற்றையாட்சிக்குட்பட்ட அரசியல் தீர்வை முன் வைப்பதால் அதனைத் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. இருப்பினும் அரசியலமைப்பில் இருக்கக்கூடிய 13 ஆம் திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். அந்தச் செயற்பாடு இலங்கையரசாங்கத்தின் நல்லிணக்க நடவடிக்கையை மேலும் வலுப்படுத்தும்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நடைமுறைச் சாத்தியமான 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முறையாக முழுமையாக நடைமுறைப்படுத்தும்படியும் மாகாண சபைகளுக்கான தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டுமென்றும் அரசாங்கத்தை வலியுறுத்துவதுடன் இனப்பிரச்சினைக்குரிய நிரந்தர தீர்வான சமஷ்டி அடிப்படையிலான ஒரு தீர்வினை ஏற்படுத்த வேண்டும் என அரசாங்கத்தைக் கோர வேண்டும் என்றார்.

இலங்கையில் நேற்று கொரோனாத் தொற்றினால் 131 பேர் உயிரிழப்பு

இலங்கையில் ஒரே நாளில் கொரோனாத் தொற்றினால் 131 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மரணங்கள் நேற்று (09) இடம்பெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன் அடிப்படையில்,

10 ஆயிரத்து 995 பேர் இதுவரையில் கொரோனாத் தொற்றினால் இலங்கையில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாட்டில் மேலும்   2,882 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 477,636 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 409,628 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்த் தேசிய கட்சிகள் கூட்டிணைந்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பிய கடிதம்

இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 பிரேரணைக்குப் பின்னரும் அரசாங்கம் தமிழர் தாயகப் பரப்பில் கட்டவிழ்த்துவிட்ட தமிழ் இனத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து விளக்கி தமிழ்த் தேசிய கட்சிகள் கூட்டிணைந்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன.

அந்தக் கடிதம் வருமாறு,

2021ம் ஆண்டு ஆவணி மாதம் 31ம் திகதி,

கௌரவ மிச்செல் பச்லெற்,

மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர் ஆணையாளர்,

ஜெனீவா.

 

அன்பார்ந்த உயர் ஆணையாளர் அம்மையாருக்கு,

இலங்கை தொடர்பான வாய்மொழி அறிக்கை ஒன்றினை ஐ.நா மனித உரிமைகள் மன்றத்திற்கு வழங்குவதற்கு தாங்கள் தயாராகிக் கொண்டிருக்கையில், தமிழ் அரசியற் கட்சிகளைச் சேர்ந்த நாங்கள், ஐக்கிய நாடுகள் சபையினால் 6 மாதங்களுக்கு முன்னர், 46ஃ1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து தமிழர்களின் நிலைமை தொடர்பான எமது மதிப்பீட்டை தங்களுடைய கவனத்திற்கு சமர்ப்பிக்க விரும்புகின்றோம்.

12 வருடங்களுக்கு முன்னர் முடிவடைந்த போரின் போது புரியப்பட்ட அத்துமீறல்களுக்கு, கடந்த 6 மாதங்களில் தொடர்ந்தும் சட்டப் பாதுகாப்பு இருந்து வந்துள்ளதோடு, நீதியையும் பொறுப்புக் கூறலையும் மீண்டும் மீண்டும் கோரிய ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தின் தீர்மானங்களையும் அரசாங்கம் புறக்கணித்து வந்துள்ளது. இந் நிலையில் நீதி தடுக்கப்பட்டதோடு, சட்டப் பாதுகாப்பும் நீடித்தது. பாதிக்கப்பட்ட தமிழர் அமைப்புக்கள், மனித உரிமைப் பாதுகாப்பாளர்கள், பொது சமூகத் தலைவர்கள், ஊடகவியளாழர்கள் மற்றும் பலர், இலங்கை ஆட்சியாளர்களால் மென்மேலும் பயமுறுத்தப்பட்டும் தொல்லைப்படுத்தப்பட்டும் வந்துள்ளனர்.

இலங்கையின் சட்ட அமூலாக்கல் அதிகாரிகளினால் அதிகரிக்கப்பட்ட அளவில் பிரயோகிக்கப்படும் கொவிட்-19 கட்டுப்பாடுகளும், பயங்கரவாத தடுப்புச் சட்டங்களும் அமைதியான எதிர்ப்புக்களுக்கான பரப்பினை மட்டுப்படுத்திக் கொண்டிருக்கையில், தமிழ் மக்களுக்கு எதிரான பாரபட்சங்களும் ஒதுக்கல்களும் தொடர்கின்றன. இன விகிதாசாரத்தை மாற்றி அமைக்கும் நோக்கத்துடனும், தமிழ் மக்கள் தங்கள் நிலங்களை ஆண்டனுபவிப்பதை தடுக்கவும், அபிவிருத்தித் திட்டங்கள் என்ற போர்வையில்;; பாரம்பரிய தமிழ்ப் பிரதேசங்களில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள பௌத்த குடியேற்றங்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன. மகாவலி அதிகார சபை, தொல்பொருள் திணைக்களம், வனத் திணைக்களம், மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் உட்பட பல அரசாங்க திணைக்களங்கள் இந்த செயற்திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தமிழ் மக்கள் மீது பரந்துபட்ட இராணுவ மயமாக்கல் திணிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க நிபுணர் குழாமான ஓக்லன்ட் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. கிட்டத்தட்ட ஆறு பொதுமக்களுக்கு ஓர் இராணுவ உறுப்பினர் என்ற ரீதியில் இராணுவ ஆதிக்கம் கடுமையானதாக உள்ளது. இதற்கிடையில், யுத்தம் முடிந்து 12 வருடங்களுக்கு பின்னரும் கூட, யாழ்ப்பாணத்தில் 23,000க்கு அதிகமான மக்கள் உட்பட, பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் இடம் பெயர்ந்து நிற்கும் நிலையில் முடிவு ஏதுவும் தென்படாமல் மீள் குடியேற்றத்திற்காக காந்திருக்கின்றார்கள்.

போர் முடிவடைந்ததிலிருந்து தமது வாழ்வில் பல்வேறு சவால்களுக்கு, துன்பப்படும் தமிழ்ப் பெண்கள் தொடர்ந்து முகம் கொடுத்து வருகின்றனர். இலங்கை இராணுவத்தால் ‘பாலியல் அடிமைகளாக’ தமிழ்ப் பெண்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ‘வல்லுறவு முகாம்கள்’ பற்றிய விபரங்களை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயலணி 2017 மாசி மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளித்திருக்கின்றது. மேலும், 2013 சித்திரையில் ஐக்கிய ராச்சியத்தின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் 90,000க்கு மேற்பட்ட தமிழ் யுத்த விதவைகள் உள்ளனர்.

குழந்தைகள், சிறுவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் காணாமல் போய் உள்ளனர். காணாமல் போகச் செய்தல்கள் பற்றிய ஐ.நா செயலணி, உலகிலேயே இலங்கையில் தான் 2வது மிகப்பெரிய எண்ணிக்கையில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் இருப்பதாக 2020ல் தெரிவித்துள்ளது. காணாமல் போன தமது அன்புக்குரியவர்களை தேடி நிற்கும் அவர்களின் குடும்பங்கள், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (ரி.ஐ.டி), குற்றவியல் புலனாய்வுப் பிரிவு (சி.ஐ.டி) மற்றும் ஏனைய அரசாங்க உளவுப் பிரிவுகளால் தொல்லைப்படுத்தப்பட்டும், மிரட்டப்பட்டும், பயமுறுத்தப்பட்டும் வருகின்றனர். இந்தக் குடும்பங்களின் அமைதிவழி எதிர்ப்புக்கள் பல்வேறு சவால்களை எதிர்நோக்குகின்றன.

ஐ.நா மனித உரிமை மன்றத்தின் பல வேண்டுகோள்கள் மற்றும் தீர்மானங்களுக்கு மத்தியிலும் கொடுமையான பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இலங்கை தொடர்ந்து பிரயோகித்து வருகின்றது.

எவ்வித குற்றச்சாட்டோ அல்லது விசாரணையோ இல்லாமல் அல்லது பாரபட்சமான வழக்கு விசாரணைகளின் பின்னர் குற்றத்தீர்ப்பு வழங்கப்பட்டு பல தமிழ் அரசியல் கைதிகள் வருடக்கணக்கில் தடுத்து வைக்கப்பட்டிருக்கையில், தமிழர்களுக்கு எதிராக கொடுமைக் குற்றங்கள் புரிந்ததற்காக, இலங்கைப் பாதுகாப்பு படைகளின் தனி ஒரு உறுப்பினர் கூட கைது செய்யப்படவுமில்லை, குற்றம் சாட்டப்படவுமில்லை. பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் குற்றங்களுக்கான தண்டனைத் தீர்ப்புக்களில் இருந்து அல்லது குற்றச்சாட்டுக்களில் இருந்து இப்போதுள்ள அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை குறிப்பிடுவது பொருத்தமானதாகும்.

பாரம்பரிய தமிழ்ப் பிரதேசங்களில் நிகழும் காணி அபகரிப்புக்கள் தொடர்பில் சில உதாரணங்கள்:-

1. வட்டுவாகல், முள்ளிவாய்க்கால் கிழக்கு, முல்லைத் தீவில் அமைந்துள்ளதும் தமிழ் மக்களுக்கு சொந்தமானதுமான 617 ஏக்கர் காணி கோட்டபாய கடற்படைத் தளத்தை விஸ்தரிப்பதற்காக சுவிகரிக்கப்பட உள்ளது. இது தொடர்பான கடிதங்கள் நில அளவைத் திணைக்களத்தினால் 29.7.2021ல் பொது மக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

2. 2017/2018ல் இத்தகைய முயற்சிகள் பொதுமக்களின் எதிர்ப்புக்களால் நிறுத்தி வைக்கப்பட்டன. எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டோருக்கு எதிராக நீதி மன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

3. கொக்கிளாய் கிழக்கு, முல்லைத்தீவில் அமைந்துள்ளதும், பொதுமக்களுக்கு சொந்தமானதுமான 44 ஏக்கர் காணி ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அங்கமான ஸ்ரீலங்கா கனிமமண் நிறுவனத்தினால் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி சுவிகரிக்கப்பட்டுள்ளது.

4. யாழ்ப்பாணம், காரைநகர், கற்கோவளத்தில் அமைந்துள்ளதும் பொது மக்களுக்கு சொந்தமானதுமான 50 ஏக்கர் காணி ஸ்ரீலங்கா கடற்படையால் சுவீகரிக்கப்படுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் பொது மக்களால் முறியடிக்கப்பட்டுள்ளன.

5. விமான நிலையத்திற்காக பலாலியில் சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களின் விபரங்களைக் கோரும் அறிவித்தல் ஒன்று யாழப்;பாண மாவட்டச் செயலாளரால் 26.8.2021ல் வெளியிடப்பட்டுள்ளது.

6. மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரிவில் உள்ள சன்னாரில் 4000 ஏக்கர் காணி இராணுவப் படைகளால் சுவீகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் தமிழ் மக்கள் வாழ்வதற்கோ அல்லது விவசாயம் செய்வதற்கோ சொந்தமாக காணிகள் இன்றி உள்ளனர். 7. மட்டக்களப்பு மாவட்டத்தில், செங்கலடிப் பிரிவில், மயிலத்தை மடுவில் உள்ள மாதவனையில் தமது கால் நடைகளின், குறிப்பாக மாடுகளின் மேய்ச்சலுக்காக தமிழ் விவசாயிகள் பயன்படுத்தி வந்த காணிகள், அவற்றின் எல்லைப்புற மாவட்டங்களான பொலனறுவை மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த சிங்கள மக்களுக்கு சேனைப் பயிர்ச் செய்கை என்ற போர்வையில தலா 3 முதல் 4 ஏக்கர் வீதம்; வழங்கப்பட்டு, குடியேற்றங்கள் மேற் கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த நடவடிக்கை தமிழ் விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பறிப்பதோடு, அரசாங்கத்தின் இனச் சுத்திகரிப்புத் திட்டத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட நடைமுறைப்படுத்தலின் ஊடாக தமிழ் மக்களின் இன ரீதியான பலத்தையும் பாரதூரமாக குறைக்கின்றது.

8. இதே அடிப்படையிலான இன்னொரு நடவடிக்கையில், தமிழ்ப் பிரதேசத்தில் உள்ள பட்டிப்பளை – கொக்கட்டிச் சோலை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கெவுளியாமடு, கந்தர் மல்லிச் சேனையில் உள்ள 1500 ஏக்கர் வனப்பிரதேசம் 2 ஏக்கர் துண்டுகளாக பிரிக்கப்பட்டு பாதுகாப்புப் படைகளின் துணை இராணுவ அங்கமான ஊர்காவல் படையைச் சேர்ந்த 750 உறுப்பினர்களுக்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ சரத் வீரசேகரவினால் கையளிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் மரபுவழித் தாயகப் பிரதேசங்களில் எதிர்காலத்திலும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டுள்ளது.

தொல்லியல் திணைக்களம்:

1. கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, சில இராணுவ அதிகாரிகள் உட்பட, மொத்தம் 13 சிங்களவர்களைக் கொண்ட ஓர் விசேட ஆணைக்குழு ஸ்ரீலங்கா ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எங்களுடைய பகுதிகளுக்கு வந்து, தொல்லியல் இடம் ஒன்றைக் கண்டுபிடித்து, ஒன்று அல்லது இரண்டு ஏக்கர்களுக்கு பதிலாக நூற்றுக் கணக்கான ஏக்கர் காணிகளுக்கு அவை தொல்லியல் இடங்கள் என்ற பெயரில் வேலியிடுவதை, எதிர்காலத்தில் அங்கு சிங்களக் குடியேற்றங்கள் இடம் பெறுவதையும் இராணுவம் நிலை கொள்வதையும்;, உறுதிப்படுத்தும் நோக்குடன் செய்து வருகின்றார்கள்.

2. தமிழர்களின் தொல்லியல் இடங்களை கையகப்படுத்துவதும், அவற்றை சிங்கள பௌத்த வரலாற்று இடங்கள் என்று உரிமை கோருவதற்காக பௌத்த சின்னங்களை நிறுவுவதும், கலாச்சார – இனப்படுகொலையே! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தத் தீவின் ஆதிக்குடிகளாக தமிழ் பேசுவோரே இருந்தனர். கி.பி 6ம் அல்லது 7ம் நூற்றாண்டு வரையில் சிங்கள மொழி என்பதே இருந்திருக்கவில்லை. இந்தத் தீவுக்குள் பௌத்தத்தை வரவேற்றவர்கள் தமிழ் பேசிய மக்களே. ஆயினும், நிலங்கள் எல்லாம் சிங்கள பௌத்தர்களுக்கு சொத்தமானவை என்றே உரிமை கோரப்படுகின்றன.

3. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் நிர்வாகப் பரப்புக்குள் அமைந்துள்ளதும், ‘நிலாவரைக் கிணறு’ என அழைக்கப்படுவதுமான தமிழரின் வரலாற்று இடமொன்றைக் கைப்பற்றி, அங்கு சில பௌத்த சின்னங்களை நாட்டுவதற்கு ஸ்ரீலங்கா இராணுவத்தினரும், தொல்லியல் திணைக்களத்தின் அதிகாரிகளும் 2021 பங்குனி மாதம் 21ம் திகதி கூட்டாக முயற்சித்தனர். அப்பிரதேச மக்களும், பிரதேச சபையின் தலைவர் திரு. நிரோஸ் தியாகராஜாவும் காட்டிய எதிர்ப்பினால் அந்த நடவடிக்கை முறியடிக்கப்பட்டது. அந்த சர்ச்சை தொடர்பில் அச்சுவேலி பொலீஸ் நிலையத்தில் விசாரணை நடாத்தப்பட்டு, குறித்த பிரதேசசபைத் தலைவர் 4 மணித்தியாலயங்களுக்கு மேலாக துளைத்தெடுக்கப்பட்ட பின்னர், அரச ஊழியர்கள் தங்கள் கடமைகளை மேற்கொள்வதற்கு அவர் தடை ஏற்படுத்தினார் என்ற குற்றப்புகாரின் பேரில் அரச அதிகாரிகளால் நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டார், பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

யுத்தத்தில் இறந்தவர்களையும் மற்றும் அரசினால் கொல்லப்பட்டவர்களையும் அமைதியாக நினைவு கூரல் அரசாங்கத்தினால் தடுக்கப்பட்டமை: 1. உயிரிழந்த தமது உறவினர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்துவதை அடக்குமுறையை பிரயோகித்து அரசாங்கம் தடுத்துள்ளது. 2009 வைகாசி மாதம் 18ம் திகதி முடிவடைந்த போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையை நினைவு கூரும் நாளே வைகாசி 18 முள்ளிவாய்க்கால் நினைவு நாளாகும். போரில் நிகழ்த்தப்பட்ட பல்லாயிரக் கணக்கான அப்பாவிப் பொது மக்களின் இனப்படுகொலையின் ஞாபகார்த்தமாக நிறுவப்பட்டிருந்த நினைவுச் சின்னமொன்று சேதப்படுத்தப்பட்டதோடு, தீபங்கள் ஏற்றியும் மலர்கள் தூவியும் இறந்தவர்களுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த முடியாதவாறு, பொலீஸாரால் பெறப்பட்ட நீதிமன்ற கட்டளைகளின் மூலம் தடுக்கப்பட்டார்கள். நினைவிடத்துக்கு செல்லும் வீதிகளில் பாதுகாப்புப் படைகளும் பொலீஸாரும் தடைகளை அமைத்து காவலில் ஈடுபட்டனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுவதிலும் மக்களால் முன்னெடுக்கப்பட்ட இத்தகைய முயற்சிகள் தடுக்கப்பட்டதோடு, அரசியற் தலைவர்களையும், சமூக செயற்பாட்டாளர்களையும் கட்டுப்படுத்துவதற்காக எச்சரிக்கை அறிவித்தல்களும் நீதிமன்ற கட்டளைகளும் அவர்களிடம் வழங்கப்பட்டன.

2. போரில் கொல்லப்பட்ட தமது உறவினர்களுக்கு அமைதியான முறையில் அஞ்சலி செலுத்தியதற்காக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டார்கள். இத்தகைய சம்பவம் ஒன்றில் மட்டக்களப்பில் உள்ள கிரானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

1983 ஆடி மாத தமிழர் படுகொலைகளை நினைவுகூருதல்:

1. ஆடி 23ம் திகதி ஆரம்பித்து ஆடி 30ம் திகதி வரையில், கறுப்பு யூலை என்று அழைக்கப்படும், ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஒழுங்கமைக்கப்பட்டதும் நன்கு திட்டமிடப்பட்டதுமான தமிழினப்படுகொலை மற்றும் இனச்சுத்திகரிப்பின் வருடாந்த நினைவுகூரல், எச்சரிக்கைகள் மற்றும் பயமுறுத்தல்களாலும் பொலீஸாரால் பெறப்பட்ட நீதிமன்றக் கட்டளைகளாலும் பலவந்தமாக தடுக்கப்பட்டது.

2. 1983ல் இதே காலப் பகுதியிலேயே, முன்னெப்பொழுதும் நிகழ்ந்திராத அளவில் தமிழ் மக்கள் மீது அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டதோடு பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு, அவர்களின் சொத்துக்கள் எரித்து நாசமாக்கப்பட்டன. கொள்ளை, வல்லுறவு மற்றும் தீவைப்பு என்பனவே பயங்கரம் நிறைந்த அந்த இருண்ட நாட்களின் ஒழுங்குமுறையாக இருந்தது.

3. தலைநகர் கொழும்பில் உள்ள வெலிக்கடைச் சிறைச்சாலையில் அரசாங்கத்தின் காவலில் வைக்கப்பட்டிருந்த 53 தமிழ் அரசியல் கைதிகள் சிதைத்துக் கொல்லப்பட்டனர். இந்த அரச காட்டுமிராண்டித்தனம் வெலிக்கடை ‘கொடூரக் கோரம்’ என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. இதுவரையில் இந்தக் கொலைகளுக்காக ஒருவரும் கைது செய்யப்படவுமில்லை, குற்றம் சாட்டப்படவுமில்லை. இந்த அரசியல் கைதிகளை நினைவு கூர்வதும் தடுக்கப்பட்டது. அரசின் சகிப்பின்மை மற்றும் தலையீட்டின் மத்தியில் கறுப்பு யூலையில் மரணித்த தம் உறவுகளை இந்த வருடமும் தமிழர்களால் நினைவுகூர முடியவில்லை. தமது சமூக வலைத்தளங்களில் நினைவு மற்றும் அஞ்சலிக் குறுந்தகவல்களை பதிவேற்றம் செய்த பல இளைஞர்களும், அத்தகைய நினைவுப் பதிவேற்றங்களை வேறு எவரிடமிருந்து கிடைக்கப் பெற்றவர்களும் பயங்கரவாத புலனாய்வுப் பரிவு மற்றும் பொலீஸ் உளவுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்கள் அல்லது விசாரணைக்கு அழைக்கப்பட்டார்கள்.

அரசாங்க நிர்வாக நியமனங்களில் பாரபட்சம்:

1. தகைமை வாய்ந்த தமிழ் அதிகாரிகள் பலர் இருந்தும், தமிழ் அரசியற் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சிங்களம் பேசும் பிரதம செயலாளர் ஒருவர் தமிழ் பேசப்படும் வடமாகாணத்தை நிர்வகிப்பதற்கென ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். நிர்வாக சேவையில் உள்ள தகுதி வாய்ந்த தமிழ் அதிகாரிகளுக்கு, அவர்களுக்குரிய பதவி உயர்வுகளையும் நல்வாய்ப்புக்களையும் மறுப்பதாகவே இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

2. இயக்குனர் நாயகம், திட்டமிடல் தரத்திற்கென 10 திட்டமிடல் அதிகாரிகளுக்கு 2021 வைகாசி 11ம் திகதி பதவி உயர்வு வழங்கிய பொதுச் சேவை ஆணைக்குழு, பொது நிர்வாக திணைக்களத்திற்கு அறிவித்ததை அடுத்து அத்திணைக்களம், 7.8.2021 அல்லது அதற்கு முன்னராக அமைச்சுக்களில் அவர்களுக்கு கடமைகளை ஒதுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதங்களை அனுப்பியது. பதவி உயர்வு வழங்கப்பட்ட 10 அதிகாரிகளில் 5 சிங்களவர்களும்; , 4 தமிழர்களும் ஒரு தமிழ் பேசும் முஸ்லிமும் இருந்தனர். சிங்கள அதிகாரிகள் கடமைகளை பொறுப்பேற்க அனுமதிக்கப்பட்ட அதே வேளையில், சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்களால் தமிழ், முஸ்லிம் அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதோடு சிங்கள அதிகாரிகள் மாத்திரமே அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அரச நிர்வாக சேவையில் உள்ள தமிழ் அதிகாரிகளுக்கு இப்போது இழைக்கப்படும் பாரபட்சங்களும், நெருக்கடிகளும் இவ்விதமே அமைந்துள்ளன.

காணாமல் போனோரின் அலுவலகத்திற்கு நியமிக்கப்படும் இராணுவ அதிகாரிகள்:

காணாமல் போன தமிழர்களுக்கு இராணுவமே பொறுப்பு என்ற போதிலும் காணாமல் போனோர் அலுவலகத்திற்கான நியமனங்கள் இராணுவத்தினரின் அணிவரிசைகளில் இருந்தே மேற்கொள்ளப்படுகின்றன. இந்த அலுவலகத்தில் இராணுவத்தினர் நியமிக்கப்பட்டிருப்பதால் தாங்கள் அங்கு செல்வதற்கும், சாட்சியம் அளிப்பதற்கும் அஞ்சுவதாக, தமது அன்புக்குரியவர்கள் காணாமல் போய்விட்ட நிலையில் உள்ள தமிழ்ப் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

‘காணாமல் போன நபர்களையோ அல்லது காணாமல் போனமைக்கான காரணங்களையோ அல்லது இவ்விடயத்தில் குற்றம் இழைக்கப்பட்டதா? என்பது பற்றியோ தேடிப் பார்ப்பதற்கு தேவை எதுவும் கிடையாது நட்டஈடு பற்றித் தீர்மானிப்பதுதான் இப்போதுள்ள கேள்வி’ என்று 2021 ஆவணி 30ம் திகதி நீதி அமைச்சர் ஊடாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது என்ற விடயத்தை தெரிவிப்பது மிகவும் பொருத்தமானது என நாம் கருதுகின்றோம். 2009ம் ஆண்டு வைகாசி மாதத்தில் போர் முடிவடைந்ததிலிருந்து தமிழ் மக்களின் உணர்வு பூர்வமான விவகாரமாக இருந்து வரும் இந்த விடயத்தில், அரசாங்கத்தின் உணர்வுகெட்ட மனப்பாங்கினையே இது பிரதிபலிக்கின்றது என்பதை நாம் தெரிவித்தே தீரவேண்டி உள்ளது.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான அமைதிவழி எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர்களும், காணாமல் போனோரின் குடும்பங்களும் தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டு பயமுறுத்தப்படுகின்றார்கள்:

1. பி2பி (பொத்துவில் முதல் பொலிகண்டி வரை) பேரணி என்று அழைக்கப்பட்ட தமிழர் அமைதிவழி எதிர்ப்பு யாத்திரையின் தலைவர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு மற்றும் குற்றவியல் புலனாய்வுப் பிரிவு உட்பட ஸ்ரீலங்கா புலனாய்வு அமைப்புக்களால் மீண்டும் மீண்டும் தொல்லைப்படுத்தப்படுகின்றனர். விசாரணை என்ற பெயரில் இத்தலைவர்கள் இந்த உளவுப் பிரிவுகளால் அழைக்கப்பட்டு அவர்களை பணிய வைப்பதற்காக மனோரீதியான தொல்லைகளுக்கும் உளவியல் அழுத்தங்களுக்கும் ஆளாக்கப்படுகின்றனர். பொலீஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரின் பாரிய எதிர்ப்புக்கு நடுவிலும் பல்லாயிரக் கணக்கில் தமிழர்களும், தமிழ் பேசும் முஸ்லிம்களும் கலந்து கொண்ட இந்த அமைதி யாத்திரையை மரபுவழித் தமிழர் தாயகத்தின் ஊடாக பி2பி ஒரு வாரம் நடாத்தியதோடு, ஸ்ரீலங்கா அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக புரியப்பட்ட போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை என்பனவற்றுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஸ்ரீலங்காவை நிறுத்துமாறும், 1948ல் ஸ்ரீலங்கா சுதந்திரமடைந்ததிலிருந்து நீடித்து நிற்கும் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை காண்பதற்கு ஏதுவாக, சர்வதேசத்தால் நடாத்தப்பட்டு கண்காணிக்கப்படக் கூடிய பொது வாக்கெடுப்பொன்றை ஏற்படுத்துமாறும் கோரிக்கை விடுத்திருந்தது.

2. கடந்த பல வருடங்களாக தமது அன்புக்குரியவர்களுக்கு நீதியும், குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனையும் கோரி, தொடர்ச்சியானதும் விடாப்பிடியானதுமான போராட்டம் ஒன்றினை நடாத்தி வரும் காணாமல் போனவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த அமைதியான செயற்பாட்டாளர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவாலும், குற்றவியல் புலனாய்வப் பிரிவாலும் அடிக்கடி தொல்லைகளுக்கு ஆளாக்கப்படுகின்றார்கள். இந்த அரச நிறுவனங்களைச் சேர்ந்த புலனாய்வு அலுவலர்கள் விசாரணை என்ற போர்வையில் இரவு வேளைகளில் ஏற்கத்தகாத நேரங்களில் அவர்களின் வீடுகளுக்கு வருகை தந்து தொல்லை தருகின்றனர். இந்த நடவடிக்கையாளர்களில் மிகப் பெரும்பாலானோர் தமது வாழக்;கைத் துணைவர்களை அல்லது பிள்ளைகளை அல்லது இருசாராரையும் பறிகொடுத்த நிலையில் தமது குடும்பப் பொறுப்புக்களை சுமந்து நிற்கும் பெண்கள் ஆவர்.

3. உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் மற்றும் பங்கீடு என்பனவற்றை கையாழ்வதற்கு தேவைப்படுகின்றது என்ற தோற்றப்பாட்டோடு, பொதுஜன பாதுகாப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ், ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் அவசரகால நிலைமை, கடந்த காலத்தில் பல தடவைகள் இந்த நாடு அனுபவித்திருப்பதைப் போலவே ஓர் இராணுவ ஆட்சிக்கு வழியமைக்கக் கூடியது. ஒரு மாதகால முடிவில், அது மேலும் நீடிக்கப்படுவதற்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைக் கோராமல், தானாகவே வலுவிழந்து போகுமாறு இந்த அவசரகால நிலைமை அனுமதிக்கப்பட்டால் அன்றி, பேச்சு மற்றும் ஒன்றுகூடல் சுதந்திரங்கள் உட்பட, மனித உரிமைகள் என்பன சட்டப் பாதுகாப்புடன் மீறப்படுவதிலேயே இது இலகுவில் போய் முடியக் கூடியது ஆகும்.

இந்த விடயங்களை தங்களின் பரிவுடன் கூடிய கவனத்திற்கும், பரிசீலனைக்கும் அவசியமான நடவடிக்கைக்கும், அத்துடன் இலங்கைத் தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிப்படுத்துவதில் தங்களுக்குள்ள பற்றுறுதிக்கும், தங்களின் சளைக்காத முயற்சிகளுக்கும் ஆதரவாகவும் நாம் சமர்ப்பிக்கின்றோம்.

நன்றியுடன், விசுவாசம் உள்ள

நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் பா.உ செயலாளர் நாயகம் தமிழ் மக்கள் கூட்டணி

செல்வம் அடைக்கலநாதன் பா.உ தலைவர் – தமிழ் ஈழ விடுதலை இயக்கம்

தர்மலிங்கம் சித்தார்த்தன் பா.உ தலைவர் – ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி

க. பிறேமச்சந்திரன் – முன்னாள் பா.உ தலைவர் – ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

ந. ஸ்ரீகாந்தா – முன்னாள் பா.உ தலைவர் – தமிழ்த் தேசியக் கட்சி

கோ. கருணாகரம் பா.உ செயலாளர் நாயகம் தமிழ் ஈழ விடுதலை இயக்கம். எஸ். நோகராதலிங்கம் பா.உ தமிழ் ஈழ விடுதலை இயக்கம்

Posted in Uncategorized

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் டபிள்யு.டி லக்ஷ்மன் பதவி விலகல்

இலங்கை மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் டபிள்யு.டி லக்ஷ்மன் எதிர்வரும் 14ஆம் திகதி ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அது தொடர்பிலான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சரும் முன்னைநாள் மத்திய வங்கியின் ஆளுநருமான அஜித் நிவாட் கப்ரால் மீண்டும் மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார்.

எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்கவுள்ளதாகவும் அது தொடர்பிலான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகும் என்றும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே பதவி விலகும் தற்போதைய ஆளுநர் டபிள்யு.டி. லக்ஷ்மனுக்கு சர்வதேச நாணய நிதியத்தில் உயர் பதவி ஒன்று வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது பதவி விலகலை அறிவிக்கும் நோக்கில் இன்று வெள்ளிக்கிழமை சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷ்மன்,

நான் அடுத்த மாதம் எனது 80 ஆவது வயதுப் பூர்த்தியுடன் ஓய்வுபெறுவதற்குத் தீர்மானித்திருந்தேன். இருப்பினும் கடந்த 10 நாட்ககளில் நடந்த மனதிற்குவேதனையளிக்கக்கூடிய சம்பவங்களின் காரணமாக எதிர்வரும் 14 ஆம் திகதி செவ்வாய்கிழமை எனது பதவியிலிருந்து ஓய்வுபெறுவதற்குத்தீர்மானித்திருக்கின்றேன்.

இலங்கையின் மிகவும் உயர் கௌரவத்திற்குரிய பதவியை வகித்த காலப்பகுதியில் எனக்கு வழங்கப்பட்டிருந்த பொறுப்புக்களை உரியவாறுநிறைவேற்றுவதற்காக இரவு, பகல் பாராமல் மிகுந்த அர்ப்பணிப்புடன் சேவையாற்றியிருக்கின்றேன். இருப்பினும் எமது கட்டுப்பாட்டையும் மீறிய அக மற்றும்புறக்காரணிகளின் தாக்கத்தின் விளைவாக அனைத்து சந்தர்ப்பங்களிலும் எம்மால் எதிர்பார்த்த பெறுபேறைப் பெற்றுக்கொள்ளமுடியாமல்போனது.

இலங்கை மத்தியவங்கியின் ஆளுநராக நான் பதவியேற்றுக்கொண்டதன் பின்னர் சுமார் 3 மாதங்களில் நாடு கொவிட் – 19 வைரஸ் பரவலால் ஏற்பட்டநெருக்கடிக்கு முகங்கொடுக்கவேண்டியேற்பட்டமையை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

அதற்கு மத்தியில் உளரீதியான மற்றும் கட்டமைப்பு ரீதியான பல சவால்களும் காணப்பட்டன. அவ்வாறிருப்பினும் எதிர்பார்த்த பெறுபேறைஅடைந்துகொள்வதற்காகக் கொள்கை மற்றும் கட்டமைப்பு ரீதியில் அவசியமான மாற்றங்களை மேற்கொண்டேன்.

எனவே உளரீதியான அழுத்தங்களுக்கு இடையில் மத்தியவங்கியின் ஆளுநர் பொறுப்பிலிருந்து தற்போது விலகநேர்ந்திருப்பதை நானும் எனக்குமிகநெருக்கமானவர்களும் ஓர் அதிஷ்டமாகவே கருதுகின்றோம்.

மேலும் அதிக ஊதியம் மற்றும் ஏனைய பல்வேறு சலுகைகளுடன் எதிர்வரும் வருடத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் பதில் நிறைவேற்று அதிகாரியாகப்பதவியேற்றுக்கொள்ளுமாறும் அதற்காக மத்தியவங்கியின் ஆளுநர் பொறுப்பிலிருந்து விலகுமாறும் என்னிடம் கோரப்பட்டமையை இங்கு குறிப்பிடவிரும்புகின்றேன்.

நான் சர்வதேச நாணய நிதியத்தில் பதவியொன்றைப் பொறுப்பேற்கவிருப்பதாகக் கடந்த வாரங்களில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

அவை மேற்படி கோரிக்கையை மையப்படுத்தியே வெளியிடப்பட்டிருக்கக்கூடும் என்று நான் அனுமானிக்கின்றேன். இதற்கு முன்னரும் மத்திய வங்கியின்ஆளுநர் இவ்வாறு சர்வதேச நாணய நிதியத்தில் பதவி வகித்திருப்பதாக என்னிடம் கூறப்பட்டது. அது மிகவும் விரும்பப்படக்கூடிய பதவி என்றாலும், எனதுகொள்கைகள் மற்றும் நிலைப்பாடுகளை அடிப்படையாகக்கொண்டு நான் அந்தப் பதவியை நிராகரித்திருக்கின்றேன். எனவே இப்பதவியிலிருந்துஓய்வுபெற்றதன் பின்னர் எனது உடல்நலத்தில் கவனம் செலுத்தக்கூடியவகையிலான ஓய்வுகாலம் கிடைக்கும் என்று நம்புகின்றேன், எனக் குறிப்பிட்டார்.

முதல் கட்டத்தில் 3000 பாடசாலைகள் திறப்பு

கிராமப்புறங்களில் உள்ள 100க்கும் குறைந்தளவான மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட 3,000 பாடசாலைகளை முதல் கட்டமாக திறப்பது கோவிட் தடுப்புச் செயலணிக் கூட்டத்தின் போது ஆராயப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் தொலைகாணொளி தொழில்நுடபம் ஊடாக கொவிட் தடுப்பு செயலணி கூட்டம் இன்று நடைபெற்றது.

இதன்போதே பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, கிராமப்புறங்களில் உள்ள 100க்கும் குறைந்தளவான மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட 3,000 பாடசாலைகளை முதல் கட்டமாக திறப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்கான பொறுப்பை சுகாதார மற்றும் கல்விதுறைசார் அதிகாரிகளைக் கொண்ட தொழிநுட்ப குழு ஒன்றிடம் ஒப்படைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

2020 மற்றும் 2021 ஆகிய வருடங்களில் பாடசாலைகள் மூடப்பட்டதால், சுமார் 7 இலட்சம் மாணவர்களுக்கு ஆரம்பக் கல்வியும், அவ்வாறே மேலும் பல மாணவர்களுக்கு முன்பிள்ளை பருவ கல்வியும் கிடைக்காமல் போனதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.