தமிழகத்தின் புதிய ஆளுநராக பீகாரைச் சேர்ந்த ஆர்.என்.ரவி நியமனம்

நாகலாந்து ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவியை தமிழகத்தின் புதிய ஆளுநராக இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்துள்ளார்.

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்டதையடுத்து தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, நாகலாந்து ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி, தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

நாகலாந்து ஆளுநர் பதவி அசாம் மாநில ஆளுநர் ஜெகதீஷ் முக்திக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளது. உத்தரகாண்ட் ஆளுநர் பதவி வகித்த பேபி ராணி மவுரியாவின் இராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தின் புதிய ஆளுநராக குர்மித் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார்.

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி (வயது 69) பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள உளவுத்துறை முன்னாள் உயரதிகாரியான ஆர்.என். ரவி, காவல் பணியிலும் நிர்வாகப் பணியிலும் தேர்ந்த அனுபவம் பெற்றவராக அறியப்படுகிறார். தற்போது அவர் நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்து வருகிறார்.

பிகாரில் உள்ள பாட்னாவில் பிறந்த ஸ்ரீ ரவீந்திர நாராயண் ரவி, 1974 இல் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். கல்லூரி படிப்பை முடித்ததும், சில காலம் பத்திரிகைத் துறையில் பணியாற்றிய இவர், 1976இல் இந்திய காவல் பணியில் சேர்ந்தார். அவருக்கு கேரளா பிரிவு ஒதுக்கப்பட்டது.

அங்கு அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட கண்காணிப்பாளர், காவல் துணைத் தலைவர் உட்பட பல்வேறு பதவிகளில் பணியாற்றினார், பின்னர் மத்திய அரசுப் பணிக்கு மாற்றலாகி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார்.

மத்திய புலனாய்வுத்துறை பணியின்போது, நாட்டில் சுரங்க மாஃபியாக்கள் உட்பட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு எதிராக பல ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொண்டார். இந்தியாவின் உளவுத்துறையான இன்டலிஜென்ஸ் பியூரோவிலும் இவர் பணியாற்றியுள்ளார்.

அந்த பணியில் இருந்தபோது, இவர் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இயங்கி வந்த குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் மூளையாக செயல்பட்டார். உளவுத்துறையில் சிறப்பு இயக்குநராக இருந்தபோது, ஐ.பி இயக்குநராக இருந்தவர் அஜித் தோவால். அவர்தான் தற்போது பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கிறார். அந்த வகையில் தோவாலுக்கும் ஆர்.என். ரவிக்கும் நெருக்கமான புரிந்துணர்வு உள்ளது.

அந்த பணியின்போது தெற்காசியாவில் மனிதர்களின் பூர்விக குடியேற்றத்தின் இயக்கவியலில் நிபுணத்துவம் பெற்றார். எல்லையோர மக்களின் அரசியல், சமூகவியலில் ஏற்படும் தாக்கங்களை அவர் காவல் நோக்கில் ஆராய்ந்து அரசு பல திட்டங்களை வகுக்க காரணமாக இருந்தார்.

இனக் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மோதல் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வரும் பணியில் அவர் முக்கியப்பங்காற்றினார்.

2012இல் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் தேசிய நாளிதழ்களில் தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்புடைய நிகழ்வுகளை தமது அனுபவங்களுடன் ஒப்பிட்டுக் கட்டுரைகளை எழுதி வந்தார்.

பின்னர் அவர் பிரதமர் அலுவலகத்தில் மத்திய உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு உளவு அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணிக்காக நியமிக்கப்பட்ட கூட்டு புலனாய்வு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்,
அங்கு புலனாய்வு சமூகத்தின் தலைவராகவும், நாட்டின் உளவுத்துறை தேவைகளை பூர்த்தி செய்யும் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து வழிகாட்டியாக செயல்பட்டார்.

2014ஆம் ஆண்டில் மத்தியில் நரேந்திர மோதி தலைமையில் புதிய அரசு அமைந்த சில மாதங்களில், அதே ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி, நாகாலாந்தில் நாகா சமாதான பேச்சுவார்த்தைக்கான மையத்தின் மத்தியஸ்தராக ரவி நியமிக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து, 2018ஆம் ஆண்டு அக்டோபரில் அவர் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அவர் நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்து வருகிறார். பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் அவர் தமிழக ஆளுநராக தற்போது இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

Posted in Uncategorized

ஐ. நா. உண்மையான முன்னேற்றங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை இலங்கையின் மோசமான மனித உரிமைகள் நிலைமையை கடுமையாக ஆய்வு செய்து உண்மையான முன்னேற்றங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கேட்டுக்கொண்டுள்ளது.

எதிர்வரும் கூட்டத்தொடரில் அரசாங்கத்தின் தொடர்ச்சியான துஷ்பிரயோகங்கள் மற்றும், மக்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சி பலவீனமடைவது குறித்து தங்கள் எச்சரிக்கையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச மனித உரிமை கடமைகளை நிறைவேற்றுவதற்கான அழுத்தத்தை கொடுக்க தங்கள் விருப்பத்தை மற்ற நாடுகள் வெளிப்படுத்த வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் தொடர்ச்சியான சர்வதேச கவனமும் அழுத்தமும் சிறுபான்மை சமூகங்கள், ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர் எதிர்கொள்ளும் அபாயங்களைக் குறைக்க உதவும் என்றும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி கூறியுள்ளார்.

அத்தோடு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கில் சிறுபான்மையினரை கைது செய்து அவர்களை அச்சுறுத்தும் செயற்பாட்டை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized

ராஜபக்சக்களின் ஆட்சி இத்துடன் நிறைவு பெறும் – முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

கொவிட் தாக்கத்தினாலும் பொருளாதார பாதிப்பினாலும் நடுத்தர மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

திறமையானவர்களுக்கு உரிய பதவிகள் வழங்கவில்லை. இதுவே அனைத்து பிரச்சினைகளுக்கும் மூல காரணமாகும். அத்துடன் நாட்டுக்கு சேவையாற்றிய ராஜபக்சக்களின் ஆட்சி இத்துடன் நிறைவு பெறும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

அண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்தால் கொரோனாவை ஒழித்தால் அது
பெரிய விடயமாகும்  இந்த நாட்டில் ஆட்சியிலிருந்த சகல அரசாங்கங்களும் தத்தமது அதிகாரங்களை உறுதிப்படுத்துவதற்காக அவசரகாலச்சட்டத்தை ஒருபுறமும் அத்தியாவசிய உணவ தொடர்பான சட்டமூலத்தை மறுபுறம் பயன்படுத்துகின்றனர் என்றார்.

உண்மையில் அவசலரகாலச்சட்டத்தை கொண்டு வரும் ஒவ்வோர் அரசாங்கத்தையும் நாம் எதிர்த்தோம். நாம் மாத்திரமல்ல. இதற்காக இன்று கைகைளை உயர்த்திய அனைத்து உறுப்பினர்கள், அமைச்சர்களும் ஐக்கிய தேசியக் கட்சி அவசரகால சட்டத்தை கொண்டு வரும் போது எதிர்த்தனர்.

அதேபோல் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கொண்டு வரும் போது, ஐக்கிய தேசியக் கட்சியினர் எதிர்த்தனர். எனவே இன்று அமைச்சர்கள், உறுப்பினர்களைப் பார்க்கும் போது கபரகொய்யா உடும்பாக மாறியதைப் போன்று உள்ளனர்.

உண்மையில் அவசரகால சட்டத்தை கொண்டு வந்து கொரோனாவை ஒழித்தால் அது சிறப்பு. இன்று மக்களுக்கு தேவை அவசரகால சட்டம் இல்லை. இன்று மக்கள் வயிறு நிறைய உண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைத் தேடுவதாகத் தெரிவித்த அவர், உண்மையில் கூறப்போனால் நாட்டுக்காக வேலைசெய்த ராஜபக்‌ஷர்கள் இல்லாமற் போய்விட்டனர் என்றார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு செப்.21 வரை நீடிப்பு

நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 04  மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதியாகும் நோயாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே ஆபத்து இல்லாமல் மீண்டும் நாட்டை திறக்க முடியும் என நம்புவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

தற்போதைய ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு நீக்க தீர்மானிக்கப்பட்ட நிலையில் எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் 3 ஆவது தடவையாக நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

அவசரகால சட்டத்தால் மக்களுக்கு நெருக்கடியென்றால் நீதிமன்றத்தை நாடுவோம் – ரணில்

மக்களை நெருக்கடிக்குள் தள்ளவும் அடக்கு முறைகளை பயன்படுத்தவும் அவசரகால சட்டம் பயன்படுத்தப்படுமாயின் நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கு பின்னிற்கப்போவதில்லை என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், உணவுப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு அவசரகால சட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்திய போதிலும் மக்கள் பயன்பெற வில்லை எனவும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுடன் வியாழக்கிழமை (09) உரையாடிய போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்துவதாக கூறியே அரசாங்கம் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி சில சேவைகளை அத்தியாவசிய வரையறைக்குள் கொண்டு வந்துள்ளது.

ஆனால் அந்த நோக்கம் இதுவரையில் நடைபெறவில்லை.அரிசியை தவிர ஏனைய அனைத்து உணவு பொருட்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன.இந்நிலையில் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வர்த்தகர்களிடம் நிதி இல்லை.அவசரகால சட்டத்தின் கீழ் உணவு பொருட்களை அத்தியாவசிய சேவையாக்கியமையில் சிக்கல் இல்லை. ஆனால் குறைந்த விலையில் மக்களுக்கு உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய கூடிய சூழல் காணப்பட வேண்டும்.

அவ்வாறானதொரு நிலைமை இல்லை. நாளுக்கு நாள் நாட்டின் பொருளாதார நெருக்கடி பெரும் சிக்கல் நிலைக்கு செல்கின்றது.நாட்டு மக்களை நெருக்கடி நிலைக்கு தள்ளுவதற்கும் அடக்குமுறைக்கும் அவசரகால சட்டத்தை பயன்படுத்தி விதிமுறைகள் கொண்டுவரும் பட்சத்தில் நீதிமன்றம் செல்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

பயங்கரவாதத் தடைச் சட்டம் மீளாய்வு செய்யப்பட வேண்டும் – ஐ.நா. விசேட அறிக்கையாளர்கள்

சர்வதேச மனித உரிமைகள் தரத்திற்கு ஏற்ப இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மீளாய்வு செய்ய வேண்டுமென ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

மேலும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை தடுத்து வைத்திருப்பது குறித்தும் விசேட அறிக்கையாளர் மேரி லாலர் உட்பட ஏழு ஐ.நா. அறிக்கையாளர்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதிகரித்து வரும் வெறுப்பு பேச்சு, வன்முறை மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக மனித உரிமை வழக்குகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் ஒரு முயற்சியாக இந்த கைது இருக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டதின் கீழ் கைது செய்யப்பட்டமையானது விசாரணை இன்றி நீண்ட நாள் தடுத்து வைத்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளமை குறித்தும் விசேட அறிக்கையாளர்கள் மேலும் கவலை தெரிவித்துள்ளனர்.

நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் குறித்த விசேட அறிக்கையாளர், கருத்து மற்றும் கருத்து சுதந்திரம் மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பது குறித்த விசேட அறிக்கையாளர், சிறுபான்மையினர் பிரச்சினைகள் குறித்த விசேட அறிக்கையாளர் உட்பட ஏழு ஐ.நா. விசேட அறிக்கையாளர்கள் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

Posted in Uncategorized

இலங்கையில் சித்திரவதைகள் தொடர்கின்றன – சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்திற்கான அமைப்பு

தமிழ் இளைஞரர் யுவதிகளை இலங்கை பொலிஸாரும் இராணுவமும் கடத்தி சித்திரவதை செய்து வருவதாக சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்திற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்தது சர்வதேச விசாரணையாளர்கள் தற்போது இங்கிலாந்தில் உள்ள 15 தமிழர்களிடம் அறிக்கைகளை பதிவு செய்ததாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

2019 நவம்பரில் கோட்டாபாய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின்னர் அவர்கள் கடத்தப்பட்டு சட்டவிரோதமாக தடுத்துவைத்து சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் அதிகமானோர் இந்த ஆண்டு நடைபெற்ற பொத்துவில் முதல் பொலிகண்டி வரை போராட்டத்தில் பங்கேற்றவர்கள் என்றும் சிலர் இறந்தவர்களுக்கான நினைவேநந்தல்கள் மற்றும் காணாமல் போனோருக்கான போராட்டங்களில் பங்கேற்றவர்கள் என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஜெனீவாவில் இலங்கையை பற்றி விவாதிக்கும் போது பாதுகாப்பு படையினரின் தொடர்ச்சியான சித்திரவதைகள் சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலில் முதன்மை பெறல் வேண்டும் என அந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க முயற்சிகளுக்கு அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்பு – அலைனா டெப்லிட்ஸ்

இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை அமெரிக்கா வழங்கும் என பதவியில் இருந்து விலகவுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் கூறியுள்ளார்.

மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது மிகவும் அவசியமானது என குறிப்பிட்ட அவர், அனைவரும் மனித உரிமைகளை மதித்து செயற்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

ஜனநாயக அரசாங்கமொன்று அந்நாட்டின் அனைத்து மக்களுக்கும் பொறுப்பு கூற வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு என்பதனால் கடந்த கால மற்றும் நிகழ்காலத்தில் உள்ள மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு அதற்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நல்லிணக்க முயற்சிகள், நிலைபேறுகால நீதிப் பொறிமுறையையும் சமாதானத்தையும் நிலைநாட்டுவதில் அமெரிக்கா தொடர்ந்தும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அலைனா டெப்லிட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு பொருளாதார ரீதியில் வெற்றியளிக்கக்கூடிய கொள்கைகளை வகுப்பது குறித்து இலங்கை அரசாங்கம் முனைப்பு காட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

இந்தியா குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம்

இந்தியாவில் நடைமுறைக்கு வரவுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ​நேற்று (08) நிறைவேற்றப்பட்டது.

நேற்றைய தமிழ்நாடு சட்டமன்ற விவாதத்தின் போது உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,

இது இலங்கைத் தமிழர்களை காயப்படுத்துகிறது. இந்த சட்டம் அகதிகளை தழுவுவதற்குப் பதிலாக மதம் மற்றும் பிறப்பிட அடிப்படையில் பிரிப்பதாக உள்ளது. இது நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரானது.

“குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க மனமில்லாமல் அ.தி.மு.க.வினர் வெளியேறினர் என்பதே உண்மை. இந்த தீர்மானத்தை ஆதரிக்க.. எதிர்க்கட்சிகளுக்கு தைரியம் இல்லை.

அதனால் வெளிநடப்பு செய்துள்ளார்கள். எங்கள் வாக்குறுதியில் நாங்கள் கூறியது போலவே தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம். குடியுரிமை பெற மதம் அடிப்படை கிடையாது” என்றார்.

இதன்போது, அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினர் (அ.தி.மு.க)சபையில் இருந்து வெளி நடப்பு செய்திருந்தனர். “ஆதரிக்க மனமில்லாமல் அ.தி.மு.க.வினர் வெளியேறினர் என்பதே உண்மை என்று முதல்வர் மு. க.ஸ்டாலின் தெரிவித்தார்.

முன்னதாக எழுந்த கே.பி.முனுசாமி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை தமிழக அரசு முடக்குகிறது என்று சில கருத்துகளை கூறினார். (கே.பி.முனுசாமி பேச்சு அவைக் குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கினார்) பூஜ்ய நேரத்தில் கேள்வி தான் கேட்க முடியும். விவாதம் பண்ண முடியாது. அரசியல் மேடை போன்று பேச முடியாது. பூஜ்ய நேரத்தில் பேசவேண்டும் என்றால் சபாநாயகரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்றார் சபாநாயகர்.

இதன்போது எழுந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கே.பி.முனுசாமி பேச அனுமதிக்க வேண்டும் என கோரிநின்றார். என்னிடம் முன் அனுமதி பெறாமல் எப்படி பேச முடியும் என வினவிய சபாநாயகர் அப்படி பேசினால் அமைச்சரிடம் எப்படி பதில் கிடைக்கும். முடிந்த ஒரு பிரச்சனை பற்றி ஏன் பேச முயற்சிக்கிறீர்கள். இந்த பிரச்சனை குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெளிவாக பதில்கூறியுள்ளார். அதனால் பேச அனுமதிக்க முடியாது.

அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இதை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறி அவர் தலைமையில் அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளியில் சென்றனர்.

 

Posted in Uncategorized

நாட்டை திறப்பதால் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படும் – பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளநிலையில், 13ஆம் திகதி நாட்டை திறப்பதால் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படும். எனவே அதற்குத் தயாரானால் திறக்கலாம் என பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (8) இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், கொரோனா பரவலைக் கட்டப்படுத்துவதற்காக ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது இந் நிலையில், ஊரடங்கை நீக்கி நாட்டை இந்த மாதம் 13ஆம் திகதி தொடக்கம் திறப்பதாயின் அன்றைய தினம் சமூக, பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய முறை குறித்து, அந்தந்த பிரிவுக்கு பொறுப்பான அதிகாரிகள் திட்டமிட்டு அதனை பகிரங்கப்படுத்த வேண்டும்.

அவ்வாறு பகிரங்கப்படுத்தினால் நாட்டைத் திறப்பதற்கு தகுந்த சூழ்நிலை உள்ளதாக திருப்தியடையலாம். நாடு திறக்கப்பட்டதும் பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்கள், அதனை எவ்வாறு சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய, முன்னெடுப்பதென திட்டமிட்டு, அதனை செயற்படுத்துவதற்கு தயாராக இருந்தார்கள் என்றால், நாட்டை திறப்பதில் பிரச்சினை இல்லை என்றார்.

அவ்வாறில்லை என்றால் நாட்டை திறப்பதால் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய ஏற்படும். நாட்டை திறப்பதனுடாக முன்னெடுக்கப்படும் சமூகப் பொருளாதார செயற்பாடுகளால் கொரோனா வைரஸ் நாட்டில் மீண்டும் பரவாதிருப்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.