அரசியல் கைதிகள் விடுதலைக்கான அனைத்து ஆதாரங்களையும் ஐ.நாவிடம் நிச்சயமாக கொடுப்போம்! – ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்

அரசியல் கைதிகளின் விடுதலை சம்பந்தமான அனைத்து ஆதாரங்களையும் ஐ.நாவிடம் நிச்சயமாக கொடுப்போம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் ‘இலக்கு’ மின்னிதழிற்கு வழங்கிய விசேட நேர்காணலில் தெரிவித்துள்ளார். அவரின் நேர்காணலின் முழுமையான வடிவம்.

கேள்வி : தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக தமிழ்க் கட்சிகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் முயற்சிகள் எந்த நிலையில் உள்ளன?

பதில்: கடைசியாக நடைபெற்ற பாராளுமன்றக் கூட்டத் தொடரிலே வெளிவிவகார அமைச்சரை தமிழ்க் கட்சியினர் எல்லோரும் சந்தித்து, எங்களுடைய அரசியல் கைதிகள் விடுதலை சம்பந்தமாக கலந்துரையாடினோம். இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றிய அனைவரும் ஏற்கனவே ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், இது சம்பந்தமாக பேசுவதற்கான வாய்ப்பை வழங்குமாறு கையொப்பமிட்டு கடிதம் மூலம் கேட்டிருந்தோம். அந்த வகையிலேயே, எங்களிடம் என்னென்ன பிரச்சினை இருக்கிறது என்று கேட்டறிந்து தனக்குத் தெரிவிப்பதற்காக ஜனாதிபதியின் பிரதிநிதியான வெளிவிவகாரத்துறை அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவை எம்முடன் கலந்துரையாட ஜனாதிபதி அனுப்பியிருந்ததாக தினேஸ் குணவர்த்தன எமக்குக் கூறினார்.

தினேஸ் குணவர்த்தனவின் உரையாடலின் போது எங்களுடைய அரசியல் கைதிகள் சம்பந்தமான முழு விபரங்களையும் நாங்கள் கையளித்திருக்கிறோம். அவரிடம் உரையாடி இருக்கிறோம். எமது விபரங்களை ஜனாதிபதியிடம் எடுத்துக்கூறி, ஜனாதிபதி எம்மை சந்திப்பதற்கான ஒழுங்குகளை ஏற்படுத்தித் தருவதாக தினேஸ் குணவர்த்தன எம்மிடம் கூறியிருக்கின்றார்.

சிறையிலே வாடிக் கொண்டிருக்கின்ற அரசியல் கைதிகள் சம்பந்தமாகவும், வெளியிலே அவர்களுடைய குடும்பங்கள் படுமோசமான ஒரு துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாங்கள் எடுத்துக் கூறியிருக்கின்றோம். முக்கியமாக இந்த கொரோனா தொற்று என்பது சிறைக் கூடங்களையும் விட்டு வைக்கவில்லை. இதனால் கைதிகளின் விடுதலை பற்றி எடுத்துக் கூறினோம். அவர்களை பிணையில் விடுவது அல்லது அவர்களுக்கு பொது மன்னிப்பளித்து விடுவது என்பது பற்றியும் வெளியுறவுத்துறை அமைச்சருடன் பேசியிருந்தோம்.

இருந்தாலும் அனைவரையும் விடுதலை செய்வது நன்றாக இருக்கும் என்பதுதான் எங்களுடைய பொதுவான விடயமாக இருந்தது. இந்த கலந்துரையாடல் மிக நேர்த்தியான முறையிலே நடைபெற்றது. இதற்கு அரசியல் கைதிகளுடைய குடும்பங்கள் வரவேற்பு அளித்திருக்கிறார்கள். அந்த வகையிலே நாங்கள் அவர்களுடைய விடுதலை சம்பந்தமாக அடுத்த ஜனாதிபதி சந்திப்பிலே ஒற்றுமையாக சென்றுகுறித்த விடயம் தொடர்பாக பேச இருக்கிறோம்.

கேள்வி: இலங்கை அரசுடன் மேற்கொள்ளப்படும் பேச்சுக்கள் தவிர வேறு தரப்புக்களுடனும் பேசப்படுகின்றதா?

பதில்: இது தொடர்பாக இங்கே இருக்கின்ற, எங்களோடு செயற்படுகின்ற உயர் ஸ்தானிகர்களுடன் நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம். அதே போல வெளி நாடுகளில் இருந்து வந்து சந்திப்புகளை மேற்கொள்பவர்களுக்கும் இது தொடர்பான விடயங்களை சுட்டிக்காட்டி வருகிறோம். அவர்களுடைய அழுத்தங்களும், அவர்களுடைய செயற்பாடுகளும் இதிலே இருக்க வேண்டும் என்று கேட்டிருக்கின்றோம். அந்த வகையிலே உலக நாடுகளிலே இருக்கின்ற, இங்கே இருக்கின்ற உயர் ஸ்தானிகர்களுக்கும் அரசியல் கைதிகளினுடைய உடல்நிலை சம்பந்தமாக எடுத்துக்கூறி அவர்களும் இதற்கும் ஒத்துழைப்புத்தர வேண்டும் என்று கேட்டுள்ளோம்.

கேள்வி: தமிழ்க் கட்சிகளில் அதிகளவு சட்டவாளர்கள் இருக்கும் போது இதனை நீதிமன்றங்கள் ஊடாக நகர்த்துவது ஏன் கடினமாக உள்ளது?

பதில்: ஏற்கனவே நீதிமன்றத்திலே இவர்களின் பிரச்சினை இருக்கின்றபடியால் அதாவது, இலங்கையை பொறுத்தமட்டிலே உங்கள் அனைவருக்கும் தெரியும் இந்த வழக்குகள் நிலுவையிலே இருக்கின்றன. அந்த நிலுவையிலே இருக்கின்ற வழக்குகளை துரிதமாக்குகின்ற சூழல் இங்கே மிக கால தாமதமாக்கப்படுகின்றது. அதைவிட எங்களுடைய அரசியல் கைதிகள் சம்பந்தமான விளக்கம் கொடுக்கின்ற, அதாவது கைது செய்யப்பட்ட அல்லது கைது செய்த பொலிசாரோ அல்லது புலனாய்வுத் துறையினரோ அல்லது அதற்கான ஆதாரங்களை செயற்படுத்துகின்றவர்களின் வருகை என்பது குறைவாக இருக்கின்றபடியால் அவர்களுடைய வழக்குகள் மிகவும் தாமதமடைகின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது.

இதனால் எங்களுடைய தமிழ்க் கட்சிகளில் இருக்கின்ற வழக்கறிஞர்கள் நிச்சயமாக அதிலே வாதாடுகிறார்கள். அல்லது அந்த கட்சியினுடைய வழக்கறிஞர்கள் அதிலே தொடர்போடு வாதாடுகின்ற ஒரு பொறுப்பிலே இருந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே, அது இல்லாமல் இருக்கவில்லை என்பதை நான் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். இந்த விடயத்திலே ஒரு கால தாமதமாவது இந்த வழக்குகள் எல்லாம், சாட்சிகள் வராத ஒரு சூழல், மற்றும் வழக்கு எடுக்காத ஒரு நிலை என்பனவே காரணமாகக் காணப்படுகிறன. அதனாலே இந்த வழக்குகள் மோசமான ஒரு பின்னடைவை சந்திக்க கூடியதாக இருக்கிறது. அதனால், எங்களுடைய வழக்கறிஞர்கள், அதை கட்சி சார்ந்த வழக்கறிஞர்களோ, அல்லது எல்லோரும் சேர்ந்து தங்களுடைய வழக்கறிஞர்களை அதற்கு பயன்படுத்துகின்ற ஒரு நிலை இப்பொழுது தொடர்ந்தும் இருந்து கொண்டிருக்கின்றது.

கேள்வி: எதிர்வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்படவுள்ள வாய்வழி அறிக்கையில் இடம்பெறுமாறு அரசியல் கைதிகள் தொடர்பான இலங்கை அரசின் பாரபட்ச நடவடிக்கைகளை ஆவணப்படுத்த முடியுமா?

பதில்: நிச்சயமாக, ஐ.நா சபையினுடைய தீர்மானத்திலே இந்த அரசியல் கைதிகளுடைய விடுதலை சம்பந்தமாக கூறப்பட்டிருக்கிறது. நாங்கள் ஏற்கனவே இந்த மகஜர்களை உயர் ஸ்தானிகராலயங்களுக்கு கொடுத்திருக்கிறோம். இப்பொழுது அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவிடமும் கொடுத்திருக்கிறோம். ஐ.நா சபையிலே இந்த வழக்கினுடைய பின்னணி என்ன? அல்லது வழக்குகளில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? என்னென்ன கட்டங்களில் அவர்கள் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்? என்பதை நாங்கள் நிச்சயமாக சாட்சிகளோடு, அங்கே சொல்ல வேண்டும். இந்த விடுதலை சம்பந்தமான ஒரு நிலைப்பாடு அதிலே இருக்கின்றபடியால் நாங்களும் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நாங்கள் எல்லோரும் சேர்ந்து அவர்களுக்கான விடுதலை சம்பந்தமான அனைத்து ஆதாரங்களையும் நிச்சயமாக கொடுக்க வேண்டும், கொடுப்போம்.

பலாலி சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய இந்தியாவிடமிருந்து 300 மில்லியன் ரூபாய்

பலாலி சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியாவிடமிருந்து 300 மில்லியன் ரூபாய் நிவாரணத்தைப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவையின் முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பில இதனை தெரிவித்தார்.

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாகவும் அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

Posted in Uncategorized

யாழ் பொது நூலக வளாகத்தில் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கை

யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைகின்றது.

இந்நிலையில், நூலகம் எரிக்கப்பட்ட நினைவு நாள் நிகழ்வுகள் இன்று (01.06.2021) யாழ் மாநகர சபையினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பொது நூலகத்தில் இடம்பெற இருந்த நிலையில் தற்போது உள்ள பயணத்தடை காலத்தில் நினைவேந்தல் நிகழ்வினை தடுக்கும் முகமாக யாழ்ப்பாண பொலிஸாரால் யாழ் நூலக பகுதி கண்காணிக்கப்படுகிறது.

யாழ்ப்பாண மாநகர முதல்வர் இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் சுடரேற்றி குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற இருந்த நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் யாழ் நூலகத்திற்குள் உள் நுழைய விடாது கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

‘யாழில் தடுப்பூசி என்ற பெயரில் மலின அரசியல்’: ரெலோ தவிசாளர் நிரோஷ் குற்றச்சாட்டு

சுகாதார அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு கொண்டிருக்கையில் அரசாங்கம், சுகாதாரப் பொறுப்புணர்வுடன் செயற்படவில்லை என்பதற்கான சிறிய எடுத்துக்காட்டே நேற்றைய தினம் அரசாங்கப் பிரமுகர்கள் யாழில் தடுப்பூசி ஏற்றும் நிலையங்களில் செயற்பட்ட நடைமுறைகள் எடுத்துகாட்டுகின்றன. இவ்வாறான மலின அரசியலை யாரும் செய்யக்கூடாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

நேற்றைய தினம் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச பெரும் அதிகாரிகள் கட்சிப் பிரமுகர்களுடன் வருகைதந்து விளையாட்டு மைதானத்தில் செயற்படுவது போன்று செயற்பட்டுள்ளனர். தொற்றுக் காலத்தில் சுகாதார விழுமியங்களில் சமூக இடைவெளி என்பது பிரதானமானது. சமூக இடைவெளிகள் பேணப்படாது, செல்பிகள் கூட எடுக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி நிலையத்தில் பாதுகாப்பாக மக்களுக்கு தடுப்பூசிகளை ஏற்ற வேண்டும் என சுகாதாரத்துறையினர் அர்ப்பணிப்புடன் போராடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், அரசாங்கம் சார் அரசியல்வாதிகள் தடுப்பூசியை நான் கொண்டுவந்தேன். நீ கொண்டுவந்தாய் என மோதிக்கொள்கின்றனர். அர்ப்பணிப்புடன் செயற்படும் அதிகாரிகள் வாய் திறக்க முடியாதிருக்கின்றனர்.

இவ்வாறு மோதுபவர்கள் இலட்சக்கணக்கான மக்களுக்கு மாவட்டத்தில் இன்னும் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. மாகாணத்தில் பி.சி.ஆர் இயந்திரங்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது. அவற்றுக்கு சரியான உயர்மட்டத் தீர்மானத்தினை எடுத்து நடைமுறைப்படுத்த முடியவில்லை. இலட்சக்கணக்கான மக்களுக்கு மாவட்டத்தினுள் தடுப்பூசி செலுத்தவேண்டியுள்ள நிலையில் அதுபற்றி சுகாதார அதிகாரிகளின் வழிநடத்தலில் அரசாங்கத்தின் பிரமுகர்கள் நடவடிக்கை எடுப்பர் ஆயின் வரவேற்கத்தக்கது.

நாளாந்தம் உழைத்து உண்ணும் மக்கள் வயிற்றைக்கட்டிக்கொண்டு வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இவ்வாறு நாளாந்தம் உழைத்து வாழும் மக்கள் வயிற்றைக்கட்டிக்கொண்டு சுகாதார நடைமுறைகளுக்காகவே வீட்டில் இருக்கின்றனர். நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டு எத்தனை நாட்கள்? இது வரையில் வசதியற்ற மக்களுக்கு உணவுப்பொருட்கள் சென்றடையவில்லை என்றார்.

Posted in Uncategorized

சிறீலங்காவின் யாழ் நூலக எரிப்பு நாள்: உலக பண்பாட்டு இனஅழிப்பின் நாள் – சூ.யோ. பற்றிமாகரன்

நாற்பது ஆண்டுகளாக நீதிக்காகக் காத்திருக்கும் ஈழத்தமிழர்களுக்கு உலகு நீதி வழங்க வேண்டுமென்பதை வலியுறுத்தும் நாள்:

1931ஆம் ஆண்டு காலனித்துவ பிரித்தானிய அரசாங்கம் டொனமூர் அரசியலமைப்பின் மூலம் இலங்கைக்குப் பொறுப்பாட்சியை வழங்கிய பொழுது, வாக்குரிமையைச் சரிவரப் பயன்படுத்துவதற்கு, ‘மக்களுக்கு அறிவூட்டல்’ என்னும் சனநாயகத்தை மக்கள் மயப்படுத்தும் உயர் நோக்கில் மதிப்புக்குரிய செல்லப்பா என்பவரால் 1934இல் உருவாக்கப்பட்டது யாழ்ப்பாண பொது நூலகம். இதனால் யாழ்ப்பாண நூலக எரிப்பு என்பது ஈழத் தமிழர்களின் சனநாயகப் பங்களிப்பை மாற்றுவதற்கான 50 ஆண்டுகால சிங்களத் தலைமைகளின் இனஒடுக்கல் அரசியல் செயற் திட்டத்தின் உச்சச் செயல் முறையாக, பண்பாட்டின அழிப்பாக, 01.06.1981 அன்று சிறீலங்காவால் முன்னெடுக்கப்பட்டது என்பது வரலாறு.

1959 முதல் யாழ் மாநகரசபையின் பொறுப்பில் 47 ஆண்டு காலமாகத் தெற்காசியாவில் ஈழத் தமிழின நாகரிகத்தின் அறிவு வங்கியாக, கல்விக்குப் பல வழிகளில் அளப்பரிய சேவை புரிந்து வந்த வரலாற்றுப் பெருமை யாழ்ப்பாணப் பொது நூலகத்திற்கு உலக வரலாற்றில் உண்டு. எகிப்திய நாகரிகத்தின் அறிவு வங்கியாக விளங்கிய அலெக்சாந்திரியா நூலகம் எரிக்கப்பட்டதை எண்ணி இன்று வரை எகிப்தியர்கள் கண்ணீர் சிந்துவது போல, யாழ்ப்பாண நூலகம் சிறீலங்காவால் எரிக்கப்பட்டதை ஈழத் தமிழின நாகரிகத்தின் எரிப்பாக எண்ணி கடந்த 40 ஆண்டுகளாக ஈழத் தமிழர்கள் கண்ணீர் சிந்தி வருகின்றனர்.

அதுவும் 22.05. 1972 முதல் தங்களை ஆளும் தகுதியை இழந்து படைபலம் கொண்டு தங்களின் அரசியல் பணிவைப் பெற்று வரும் சிறீலங்கா என்னும் அனைத்துலக சட்டங்களை மீறிய அரசின், அமைச்சர்களின் தலைமையிலான சிங்களப் படையினரால், கதவுகள் உடைக்கப்பட்டு, தளபாடங்கள் நொறுக்கப்பட்டு, நூல்கள் கிழித்து வீசப்பட்டு, 1981ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் நாள் நள்ளிரவில் எரியூட்டப் பெற்று, யூன் மாதம் 01ஆம் திகதி அதிகாலையில் சாம்பல் மேடாக காட்சியளித்த யாழ். நூலகத்தின் கோலம் தந்த இதய வேதனையை, ஈழத்தமிழினம் என்றுமே மறக்காது.

1948ஆம் ஆண்டின் மனித உரிமைகள் சாசனத்தின் 27ஆவது பிரிவு “ஒவ்வொருவருக்கும் சுதந்திரமான முறையில், தனது சமூகத்தின் பண்பாட்டு வாழ்வில் பங்கேற்கவும், கலைகளில் மகிழவும், அறிவியலைப் பகிர்ந்து கொள்ளவும், அதன் பயன்களை அனுபவிக்கவும் உரிமை உண்டு” என மிகத்தெளிவாக வலியுறுத்துகிறது. 01.06.1981ஆம் ஆண்டின் சிறீலங்காவின் யாழ்ப்பாண பொது நூலக எரிப்பு என்பது மனித உரிமைகள் சாசனத்தின் 27ஆவது பிரிவுக்கு எதிராக ஈழத் தமிழினத்தின் மேல் சிறீலங்காவின் அமைச்சர்களாலேயே கட்டமைக்கப்பட்ட மனித உரிமைகளின் வன்முறையாக அமைந்து, உலகின் பண்பாட்டு இனஅழிப்பாக உலக வரலாற்றில் நிலைபெற்றுள்ளது.

இந்த பண்பாட்டு இன அழிப்பை சிறீலங்காவே செய்தது என்பதை உறதிப்படுத்தும் வகையில் சிறீலங்காவின் அன்றைய அமைச்சர்களான காமினி திசநாயக்கா, அத்துலத்முதலி, ஆகியோரே இதனைத் திட்டமிட்டு நடாத்தினர். இதனைச் சிறீலங்காவின் முன்னாள் அரச அதிபர் பிரேமதாசா 1991ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் புத்தளத்தில் உள்ள முஸ்லீம் கல்லூரியில், அத்துலத்முதலியும் காமினி திசநாயக்காவும் அரச அதிபர் பிரேமதாசாவினை பதவிநீக்கம் செய்ய வேண்டுமெனப் பாராளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்திருந்த நேரத்தில், உரையாற்றுகையில் உறுதி செய்தார்.

“1981ஆம் ஆண்டு மாவட்ட சபைத் தேர்தல் நேரத்தில் எங்கள் கட்சியைச் சேர்ந்த சிலர் நாட்டின் மற்றைய பகுதிகளில் இருந்தும் ஆட்களைத் திரட்டிக் கொண்டு வடக்கே சென்று வடக்கில் தேர்தலைக் குழப்பக் கூடிய செயல்களைத் திட்டமிட்ட வகையில் செய்தார்கள். அவர்களே இன்றும் குழப்பங்களைச் செய்கிறார்கள். நீங்கள் விலை மதிப்பற்ற யாழ்ப்பாண நூலகத்தை யார் எதிர்த்தார்களென அறிய விரும்பின் எங்களை எதிர்க்கும் இவர்களுடைய முகங்களையே நீங்கள் காண்பீர்கள்” என்பது அன்றைய சிறீலங்காவின் அரச அதிபர் ரணதுங்க பிரேமதாசா அவர்களின் யாழ்ப்பாண நூலக எரிப்புக் குறித்த பகிரங்க ஒப்புதலாக அமைந்தது.

அதே வேளை சிறீலங்காவின் மற்றொரு அமைச்சராக அன்று இருந்து, சிங்கள பௌத்த பேரின வாதத்தின் குரலாக, தமிழர்களின் தோலில் செருப்புத் தைத்துப் போடுவேன் எனக் கர்ச்சித்து, சிங்கள இனவெறியையே தனது அரசியல் கோட்பாடாகவே கொண்டு விளங்கிய சிறில் மத்தியூ, அவர்களுடன் காமினி திசநாயக்கா அவர்களும் யாழ்ப்பாணத்தில் அன்று தங்கியிருந்தார். இவர்களின் கூட்டுச் சதியாகவே, யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் தரையிறக்கப்பட்டிருந்த சிங்களப் படைகள், சிவில் உடையில், யாழ்ப்பாண பொது நூலகத்தை எரித்தனர்.

யாழ்ப்பாண நூலக எரிப்பு

  • தமிழரின் கல்வி வளர்ச்சியைத் தடுத்துத் தமிழரிடை வேலை வாய்ப்பின்மையையும், அறியாமையையும் உச்சப்படுத்தி அவர்களை சிறீலங்காவில் தங்கி வாழச் செய்வது
  • யாழ்ப்பாண நகரத்தில் தமிழரின் கடைகளை எரித்து, தமிழரின் சொத்துடைமையின் பாதுகாப்பு தங்களின் கையில் தங்கியுள்ளதென எச்சரித்து மக்களின் போராட்ட உணர்வை நசுக்குவது
  • அக்கால யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினரான வெற்றிவேல் யோகேஸ்வரன் அவர்களின் வீட்டை எரித்து, அவரைக் கொலை செய்ய முயற்சித்ததின் வழி தமிழர்களின் பாராளுமன்றப் பிரதிநிதிகள் சுதந்திரமாகச் செயற்பட இயலாதென உணர்த்தி சிங்களக் கட்சிகளைச் சார்ந்து வாழத் தூண்டுவது

என்ற மூன்று செய்திகளைப் பகிரங்கப்படுத்தியது. சுருக்கமாகச் சொன்னால் சிங்கள பௌத்த அடக்குமுறை ஒடுக்கு முறைகளுக்கு எதிராக தங்களின் தாயக, தேசிய, தன்னாட்சி உரிமைகளைப் பாதுகாக்க, இயல்பாகவே ஈழத் தமிழர்கள் வெளிப்படுத்தக் கூடிய எதிர்ப்பை ஒடுக்குவதற்காக ஈழத் தமிழர்களை இனங்காணக் கூடிய அச்சத்துள் தனது படைவலிமை கொண்டு வாழவைக்கும் சிறீலங்கா அரச செயற்திட்டத்தின் அரச பயங்கரவாதச் செயலாகவே யாழ்ப்பாண நூலக எரிப்பும் நடாத்தப்பட்டது என்பதே வரலாறு வெளிப்படுத்தும் உண்மை.

அதனாலேயே சிறீலங்காவின் சிங்களத் தலைமைகள், யாழ்ப்பாணத்துள் ஊடுருவித் தாக்கும் சிங்கள பௌத்த பேரினவாத படை நடவடிக்கை ஒன்றாகவே இதனை மேற்கொண்டன. யாழ்.துரையப்பா அரங்கத்தில் தரையிறக்கப்பட்டிருந்த சிங்களப் படையினர், தங்களை நெறிப்படுத்தி வழிநடத்திய அமைச்சர்களுடைய கட்டளைகளுக்கும், வழிகாட்டலுக்கும் அமையவே இந்த இனஅழிப்புச் செயல்களை செய்தனர். அது மட்டுமல்ல தீயைக் கண்டு அதனை அணைக்க ஓடிய தமிழர்களை சீருடை அணிந்த பொலிசாரரே தாக்கித் தடுத்தனர். இதனைச் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் வெற்றியாகவே சிங்கள பௌத்த மக்கள் முன் பரப்புரை செய்து மகிழ்ந்தனர். இதன்வழி இனங்களுக்கிடையிலான பகைமையையும், வெறுப்பையும் தூண்டிவிட்டனர். ஈழத் தமிழர்களை பகை நாடொன்றின் மக்களாகச் சிங்களவர்களால் துரத்தியடிக்கப்பட வேண்டியவர்களாக சிங்களத் தலைமைகள் சிங்கள மக்கள் முன் நிறுத்தினர்.

இதனை 1981ஆம் ஆண்டு ஆடி மாதத்தில் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார என்னும் சிறீலங்காப் பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரை உறுதி செய்தது. “அவர்களுடைய தாயகம் இல்லாத இந்த நாட்டில் அவர்களுக்கு ஒதுக்கல்கள் நடைபெற்றால் ஏன் இங்கு வந்து சொல்ல வேண்டும். அவர்கள் இந்தியாவுக்குத் திரும்பிப் போனால் ஒதுக்கல்கள் இருக்காதே. அங்குதான் உங்களுடைய கோவில்கள் உண்டு. உங்களின் கடவுள்கள் உண்டு. உங்களுடைய பண்பாடு, கல்வி, பல்கலைகழகங்கள் எல்லாமே உண்டு. அவர்களே உங்களுடைய விதியைத் தீர்மானிக்கும் உங்களுடைய எசமானர்கள். உறங்கிக் கொண்டிருக்கும் சிங்களவர்கள் விழித்தெழுந்து தமிழீழம் அமைப்பதைக் காண்பார்களானால் அமைதியாக இருக்க மாட்டார்கள். தமிழர்களுக்கு நான் கூறும் அறிவுரை உங்களின் சிங்களச் சகோதர்களைக் குழப்பி விழித்தெழ வைக்காதீர்கள். ஒவ்வொருவருக்கும் தெரியும் சிங்கத்தைக் குழப்பினால் அது அமைதியாக இராது என” என்று பகிரங்கமாக இன வெறியுரையினை நிகழ்த்தினார்.

பாராளுமன்றத்தின் வழி இனவெறி ஊட்டும் திட்டத்தின் வளர்ச்சியாகவே இரு ஆண்டுகளின் பின்னர் 1983ஆம் ஆண்டு ஆடி இனஅழிப்பை அதே சிறில்மத்தியூ தயாரித்துக் கொடுத்த திட்டங்களின் அடிப்படையில் அரச படைகளின் பாதுகாப்புடன் சிங்கள இனவெறியாளர்கள் வெற்றிகரமாக நடாத்தி ஈழத் தமிழர்களின் தாயக எல்லைகளை சுட்டிக்காட்டி அங்கு செல்லுமாறு வடக்கு கிழக்குக்கு வெளியே இருந்த ஈழத் தமிழர்களை கொன்றழித்தும் சொத்துக்களை நாசமாக்கியும் விரட்டியடித்தனர்.

அகதிகளாக ஈழத் தமிழர்கள் தங்கள் தாயகங்களுக்கு வந்த வரலாற்றுக்கு ஊடாகத் தமிழீழத் தாயகம் என்னும் ஈழமக்களின் வரலாற்றுத் தாயகம் மீளவும் தனி அரசியல் அலகாக இயல்பாகவே மாறி, தங்களின் தன்னாட்சியிலேயே பாதுகாப்பான அமைதியினை ஈழமக்கள் பெறமுடியும் என்கிற எதார்த்த அரசியல் ஈழத்தமிழ் மக்களின் வாழ்வில் அவர்களின் வாழ்வின் அனுபவத்தால் தவிர்க்க முடியாத அரசியற் கோட்பாடாக உருவானது.

தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் தோன்றியதற்கான காரணிகளில் யாழ். நூலக எரிப்பும் முக்கியமான ஒன்று. ஆயினும் இன்று நாற்பது ஆண்டுகளாகியும் ஈழத்தமிழ் மக்களின் வெளியக தன்னாட்சி உரிமையினை உலகு ஏற்பதில் காட்டும் காலதாமதம் சிறீலங்காவுக்கு மேலும் மேலும் உற்சாகத்தை அளித்து வருகிறது.

கிட்லர் 2ஆவது உலகப் போரின் பொழுது ஒக்ஸ்வேர்ட் இலண்டனில் உள்ள நூலகங்கள் மேல் குண்டு வீசக் கூடாதென விடுத்த கட்டளையை நினைந்து, கிட்லர் கொடுங்கோன்மை சர்வாதிகாரத்தை விட மோசமான முறையில், தாங்கள் சிறீலங்காவின் இனத்துவச் சர்வாதிகார ஆட்சிக்குள் சிக்குண்டுள்ளதன் சான்றாகவே, ஈழத் தமிழர்களால் யாழ்ப்பாண நூலக எரிப்பு உலகின் முன்வைக்கப்படுகிறது. ஆனால் கிட்லரிசத்தை எதிர்க்கும் உலகு, யாழ்ப்பாண நூலக எரிப்பு என்னும் இனஅழிப்புக்கு உரிய நீதியை வழங்குவதில் காட்டிய – காட்டும் அலட்சியமே, ஈழத் தமிழின அழிப்புத் தினமான முள்ளிவாய்க்கால் உலகப் படுகொலை தினம் 18.05.2009 இல் வரலாற்றில் தோன்றவும், அன்று முதல் இன்று வரை அனைத்துலக சட்டங்களுக்கு மதிப்பளிக்காத மூர்க்கத் தனமான ஆட்சியாகச், சிறீலங்காவின் கொடுங் கோன்மைப் பாராளுமன்ற இராணுவ நிர்வாகச் சர்வாதிகார ஆட்சி, ஈழத் தமிழினத்தை இனஅழிப்பு செய்யவும், அனுமதிக்கிறது என எண்ணி எண்ணி ஈழத்’தமிழர்கள் வேதனைப்படுகின்றனர்.

உலகின் இந்த அலட்சியப் போக்கை, யாழ்ப்பாண நூலக எரிப்பு என்னும் உலக பண்பாட்டு இனஅழிப்பு நாளான இன்று, உலகெங்கும் உள்ள தமிழர்கள், தாங்கள் வாழும் நாட்டின் மக்களுக்கும், அரசியல் தலைமைகளுக்கும், எடுத்துரைக்க வேண்டும். ஈழத் தமிழர்களின் வெளியகத் தன்னாட்சி உரிமையின் உலக அங்கீகரிப்பே சிறீலங்காவின் ஈழத் தமிழின அழிப்பை தடுப்பதற்கான ஒரே வழி, என்பதையும் இயலுமான வகைகளில் எல்லாம் எடுத்து விளக்கி, யாழ்ப்பாண நூலக எரிப்புக்கான நீதியை உலகு வழங்கச் செய்ய முயற்சிக்க உறுதி எடுத்தல் அவசியம்.

Posted in Uncategorized

7 ஆம் திகதிக்கு பின்னரும் பயணக் கட்டுப்பாடுகள் தொடருமா? இராணுவ தளபதி

நாட்டில் தற்சமயம் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளை எதிர்வரும் 07 ஆம் திகதிக்கு பின்னர் நீடிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

கொரோனா நிலைமையினை கருத்திற்கொண்டு சுகாதார அதிகாரிகள் உள்ளிட்டோருடனான கலந்துரையாடலை அடுத்து அது தொடர்பான இறுதி முடிவு எட்டப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், தற்போது அமுலில் உள்ள பயணத்தடை எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி வரை நீடிக்கப்படும் என வெளியாகிவரும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்றும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

அவ்வாறானதொரு முடிவு எட்டப்பட்டால் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்து அறிவிப்போம் என்றும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ள தாதியர்கள்

கொவிட் சிகிச்சைகளில் ஈடுபட்டுவரும் தாதியர்களுக்கு உள்ள பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு வழங்காததன் காரணமான இன்று (31) காலை முதல் வேலைநிறுதத்தில் ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

தமது பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவித்த போதிலும் அதற்காக தீர்வை தராதமையினால் இந்த தீர்மானத்தை எடுத்ததாக குறித்த சங்கத்தின் தலைவர் எச்.எம்.எஸ். பி மெதிவத்த தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இன்று காலை முதல் நாளை (01) காலை வரையில் சுகயீன விடுமுறை பெற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

சீனா இலங்கைக்கு அதிக விலைக்கு தடுப்பூசியை வழங்குகின்றதா?

15 மில்லியன் Sinopharm தடுப்பூசியை கொள்வனவு செய்வதற்காக 150 மில்லியன் டொலர் ஒதுக்கீட்டிற்கு தமது நாட்டின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக, பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனாவின் விசேட உதவியாளர் ஷாஹ் அலி ஃபர்ஹத் கடந்த 27 ஆம் திகதி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

பங்களாதேஷுக்கு 10 டொலர்களுக்கு வழங்கும் தடுப்பூசியை இலங்கைக்கு 15 டொலர்களுக்கு வழங்கும் சீனாவின் செயற்பாடு வியப்பளிப்பதாக பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களைப் பகிர்ந்திருந்தனர்.

இந்நிலையில், பங்களாதேஷை விட கூடுதல் விலைக்கு Sinopharm தடுப்பூசி இலங்கைக்கு வழங்கப்படுவதாக வெளியான தகவல் தொடர்பில் இலங்கைக்கான சீன தூதரகம் நேற்று பிற்பகல் ட்விட்டரில் பதிவொன்றை இட்டது.

பங்களாதேஷ் மற்றும் Sinopharm குழுமத்திற்கு இடையிலான பெறுகை உடன்படிக்கை இன்னமும் இறுதியாகவில்லை என அதில் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இத்தகைய பொய் பிரசாரங்கள் விலை தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு தடையாக அமையலாம் எனவும் அந்த பதிவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதற்கு இலங்கை பிரஜை ஒருவர், சீனா ஒ​ரே தடுப்பூசியை வெவ்வேறு நாடுகளுக்கு மாறுபட்ட விலையில் விற்பனை செய்வதற்கான காரணம் என்னவென வினவியுள்ளார்.

இது அனைத்து ஔடத உற்பத்தி நிறுவனத்திற்கும் பொதுவான காரணியாகும் என சீன தூதரகம், இலங்கை பிரஜைக்கு பதிலளித்துள்ளது.

தோட்ட தொழிலார்களுக்கு உடன் தடுப்பூசியை வழங்குங்கள்

அந்நிய செலவாணியை பெற்றுத் தருகின்ற பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கும் உடனடியாக தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுங்கள் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், தற்பொழுது நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவிவருகின்றது. குறிப்பாக பெருந்தோட்ட பகுதிகளிலும் ஆடைத் தொழிற்சாலைகளிலுமே தொற்றாளர்கள் அதிகமாக இனம் காணப்படுகின்றார்கள்.

தொற்றாளர்கள் பலர் தங்களுடைய வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதற்கு காரணம் தொற்றாளர்களை அனுமதிப்பதற்கான வசதிகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றது.

இவ்வாறான ஒரு நிலையில் ஆடைத் தொழிற்சாலைகளை மூட வேண்டிய ஒரு நிலைக்கு சுகாதார அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். பல பெருந்தோட்ட பகுதிகள் முழுமையான முடக்கத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தோட்ட தொழிலாளர்களும் ஆடைத் தொழிற்சாலைகளில் தொழில் புரிகின்ற தொழிலார்களும் தங்களுடைய வேலை வாய்ப்பை இழந்துள்ளதுடன் தங்களுடைய வருமானத்தையும் முழுமையாக இழந்துள்ளனர்.

தற்பொழுது எமது நாட்டில் பாரிய அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் தோட்ட தொழிலாளர்களும் ஆடைத் தொழிற்சாலையில் தொழில் புரிகின்றவர்களும் தொடர்ந்து தங்களுடைய கடமைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

எனவே இவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது. ஏனெனில் இவர்கள் தொடர்ச்சியாக தொழில் செய்வதன் மூலமே அவர்களுடைய பொருளாதாரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாக்க முடியும்.

ஆங்கிலேயரின் கண்டி ஒப்பந்தத்தை விட மிக மோசமானதொரு ஒப்பந்தமே துறைமுக நகர ஒப்பந்தம்!-ரெலோ செயலாளர் நாயகம் கருணாகரம்

அன்று ஆங்கிலேயருடன் கண்டியில் போடப்பட்ட ஒப்பந்தத்தை விட மிகவும் மோசமானதொரு ஒப்பந்தமே துறைமுக நகர ஒப்பந்தம் என்ற பெயரில் இலங்கை அரசினால் சீனாவுடன் செய்யப்பட்டிருக்கின்றது.

இந்தத் துறைமுக நகரம் எதிர்காலத்தில் சீனாவின் ஆதிக்கத்தில் இருக்கும் ஒரு குட்டித் தீவாக மிளிரப் போகின்றது. தமிழர்கள் தமது உரிமைக்காக எவ்வாறு போராடுகின்றோமோ அதே போன்று எதிர்காலத்தில் சிங்கள மக்களும் சீன ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடும் நிலை உருவாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் தெரிவித்தார்.

துறைமுக நகர சட்டமூல விடயம் தொடர்பில் நேற்றைய தினம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசு தனக்கு நட்பு நாடாக சீனா மட்டும் போதும் என்ற நிலையில் இருப்பதாகவே தெரிகின்றது. இந்தியா இந்த நாட்டின் அயல்நாடு கடந்த காலத்தில் பல வழிகளிலே இலங்கைக்கு உதவி செய்திருக்கின்றது. குறிப்பாக 1971ம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியால் ஏற்படுத்தப்பட்ட ஆயுதக் கிளர்ச்சியை அடக்குவதற்கும். அதே நேரத்தில் 2009 ம் ஆண்டு எங்களது ஆயுதப் போராட்டத்தை மௌனிக்கச் செய்வதற்கும் என பலவாறான உதவிகளை இந்தியா செய்திருக்கின்றது. இவற்றையெல்லாம் மறந்து இலங்கை அரசு செயற்படுகின்றது. நாட்டிற்குப் பணம் தேவைதான் பணம் ஒன்றை முக்கிய கருதுகோளாகக் கருதி இந்தியா உட்பட ஏனைய நாடுகளைத் தூரத்தில் வைத்திருப்பதென்பது நல்ல விடயமாக இல்லை.

ஏனெனில் இந்த அரசாங்கத்தின் கடந்த ஆட்சியின் போது அம்பாந்தோட்டை துறைமுகத்தினை சீனாவிற்கு 99 வருட குத்தகைக்குக் கொடுத்திருக்கின்றது. 99 வருடம் என்பது மூன்று சந்ததிகளின் காலம். அதேபோன்று வடக்கில் இந்தியாவிற்கு மிக அண்மையில் இருக்கும் மூன்று தீவுகளை சீனாவின் நிறுவனங்களுக்குக் கொடுத்திருக்கின்றார்கள். தற்போது இலங்கையில் ஒரு தீவை உருவாக்கி அந்தத் தீவுக்குள்ளே சீனாவினால் எதுவும் செய்யலாம் என்கின்ற அடிப்படையில் கொழும்புத் துறைமுக நககரத்தைத் தாரைவார்த்திருக்கின்றார்கள். ஆனால் இந்தியாவிற்குத் ஆதரவதாக ஒப்பந்தம் செய்த கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைய ஒப்பந்தத்தை இல்லாமல் செய்து. இந்தியாவை வெறுப்பெற்றியிருக்கின்றது.

தூரத்துத் தண்ணீர் ஆபத்திற்குதவாது என்கின்ற முதுமொழிக்கேற்ப எமக்கு அண்டையில் இருக்கும் நாடுதான் ஆபத்திற்கு எமக்கு உதவ வரும் என்பதை கொழும்பு கடற்பரப்பில் தற்போது எரிந்துகொண்டிருக்கும் கப்பலின் தீயை அணைப்பதற்கு இந்தியா மேற்கொள்ளும் உதவியில் இருந்து இலங்கை உணர்ந்து கொள்ள வேண்டும். எதிர்காலத்திலாவது இலங்கைக அரசு இவற்றை உணர்ந்து செயற்பட வேண்டும்.

சீனாவைப் பொருத்தவரையில் தனது ஆதிக்கத்தை இந்த நாட்டிற்குள் கொண்டு வர வேண்டும். இந்தியாவிற்கு மிக அண்மையில் இருக்கும் எமது நாட்டில் தனது காலைப் பதித்து இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக இருக்க வேண்டும் என்பதற்கும் மேலாக தங்களது கலை, கலாச்சாரங்களை இங்கு கொண்டு வருவதில் உன்னிப்பாக இருக்கின்றார்கள். இலங்கைக்கு சீனாவால் முதன் முதலாக அன்பளிப்பு செய்யப்பட்ட பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சீன மொழி பொறிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இன்று கொழும்பு மற்றும் நாட்டின் பல பிரதேசங்களிலே அவர்களால் மேற்கொள்ளப்படும் பல செயற்பாடுகளில் சீன மொழியில் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

இந்த நாட்டில் தமிழ் மக்கள் கடந்த காலங்களிலே அடக்கி ஒடுக்கப்படடு அவர்களது கலை, கலாசாரம் மழுங்கடிக்கப்பட்டது என்பதற்காக தனி நாடு கேட்டு தமிழர்கள் நாங்கள் போராடினோம். இந்த ஒரு நிலை எதிர்காலத்தில் சிங்கள மக்களினால் சீன ஆதிக்கத்திற்கு எதிராகப் பேராடக் கூடிய ஒரு சூழ்நிலை உருவாகும் என்பதையே எமது அனுபவம் சொல்லுகின்றது. ஒரு காலத்தில் ஆங்கிலேயரின் வருகையும் இவ்வாறுதான் இருந்தது. அதன் பின்னர் அவர்களின் ஆதிக்கம் அதிகரித்த பின் நாங்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடினோம்.

அன்று ஆங்கிலேயருடன் கண்டியில் போடப்பட்ட ஒப்பந்தத்தை விட மிகவும் மோசமானதொரு ஒப்பந்தமே துறைமுக நகர ஒப்பந்தம் என்ற பெயரில் இலங்கை அரசினால் சீனாவுடன் செய்யப்பட்டிருக்கின்றது. இந்தத் துறைமுக நகரம் எதிர்காலத்தில் சீனாவின் ஆதிக்கத்தில் இருக்கும் ஒரு குட்டித் தீவாக மிளிரப் போகின்றது. அங்கிருந்து சீனா இந்த நாட்டைத் தனது காலணித்துவ நாடாக மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளும். அந்த நேரம் இந்த நாட்டின் பெரும்பான்மை இன மக்கள் அதற்கெதிராகக் கிளர்ந்தெழுந்து போராடுவார்கள் என்பதே திண்ணம் என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized