மத்தியரசின் தொல்லியல் திணைக்களம், வீதி அதிகார சபை ரெலோ தவிசாளர் நிரோஷிற்கு எதிராக வழக்கு தாக்கல்

நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஷிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப்பலகையினை அகற்றினார் எனக் குற்றச்சாட்டப்பட்ட ஏற்கனவேயுள்ள வழக்குகளுமாக மத்திய அரசின் தாபனங்களால் தாக்கல் செய்யப்பட்ட இருவேறு வழக்குகள் மல்லாகம் நீதிமன்றில் புதன்கிழமை எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

இவ் வழக்குகளுக்கான அழைப்பாணைகள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளார் தியாகராஜா நிரோஷிடம் அச்சுவேலி பொலிசாரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

நிலாவரை கிணற்றுப் பகுதியில் தொல்லியல் திணைக்களமும் இராணுவமும் இணைந்து இரண்டு தடவைகள் சந்தேகத்திற்கிடமான முறையில் அகழ்வுப் பணிகளை முன்னெடுத்திருந்தனர். இவ் அகழ்வுப் பணிகள் மக்களின் கடும் எதிர்ப்பினால் கைவிடப்பட்டன. மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு தவிசாளரே காலரணம். பலரை அழைத்து தொல்லியல் திணைக்களத்தின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தொல்லியல் திணைக்களத்தினர் முறையிட்டனர்.

அதனடிப்படையில், தவிசாளர் தியாகராஜா நிரோஷ்க்கும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நளின் வீரரத்தினவுக்கும் இடையில் மல்லாகம் சிரோஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், அச்சுவேலி பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளடங்கியோர் சமரசத்திற்கு முயற்சித்தனர். தவிசாளரை நிலாவரை விடயத்தில் தலையிடக்கூடாது எனக் கூறி சுமார் மூன்று மணிநேரம் விசாரணைகளும் இடம்பெற்றன. இதற்கு தவிசாளர் உடன்படவில்லை.

தவிசாளர், தொல்லியல் திணைக்களம் மேற்கொள்ளவுள்ள முயற்சிகள் தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்குமுகமாக தமக்கு உத்தியோகபூர்வமாக தெரியப்படுத்துவதுடன் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் அனுமதி பெறப்படவேண்டும் என விட்டுக்கொடுப்பின்றி வலியுறுத்திய நிலையில் தொடர்ந்து தவிசாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

பின்னர் தொல்லியல் திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் அமைச்சர், தொல்லியல் திணைக்கள அதிகாரிகளுக்கு பிரதேச சபை , பிரதேச செயலகம் போன்றவற்றிற்கு அறிவித்து மாவட்ட அபிவிருத்திக்குழுக்களின் அனுமதி பெற்றே நிலாவரை மற்றும் உருத்திரபுரம் பகுதியில் செயற்படும் என அறிவித்திருந்தார். எனினும் தற்போதைய நிலையில் மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் மற்றும் தமக்கு உத்தியோக பூர்வ அறிவிப்புக்களை செய்து தொல்லியல் திணைக்களம் செயற்பட கோரிய தவிசாளருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளமை அரசாங்கத்தின் அறிவிப்பிற்கும் நடைமுறைக்குமிடையில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அன்றைய தினத்திலேயே வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் தவிசாளருக்கு எதிராக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கும் மீள மன்றில் எடுத்துக்கொள்ளப்படுகின்றது. அனுமதியின்றி அச்செழு அம்மன் வீதியை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து பிரதேச சபையின் அனுமதியின்றி வீதி அதிகாரசபை நாட்டிய பெயர்ப்பலகையினை தவிசாளர் அகற்றிய வழக்கே மீள எடுத்துக்கொள்ளப்படுகின்றது.

குறித்த விளம்பரப்பதாகை அகற்றப்பட்டதைத் தொடர்ந்து தவிசாளரைக் கைதுசெய்வதற்கு பொலிசார் தீவீரமுயற்சி எடுத்தனர். தவிசாளர் மல்லாம் நீதிமன்றில் தோன்றி சட்டத்தரணி வி. திருக்குமரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழாம் ஊடாக உள்ளூராட்சிக்குப் பகிரப்பட்ட அதிகாரத்தை தான் நடைமுறைப்படுத்தும்போது எழுந்த பிரச்சினை எனத் தெரிவித்து அரசியல் பழிவாங்கல் கைதில் இருந்து முன் பிணையில் தற்போது உள்ளார். இந்நிலையில், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் சட்டத்திணைக்களம் உள்ளுராட்சித் திணைக்களத்தின் சட்டவிதிகள் மீது கவனத்தினைச் செலுத்தாது தாம் பிரதேச சபையின் அனுமதிபெறவேண்டிய அவசியமில்லை என ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தது.

இந் நிலையில் நாளை மறுதினம் புதன் கிழமை மத்திய அரசாங்கத்தின் தாபனங்களான தொல்லியல் திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகார சபை போன்ற மத்திய அரசின் தாபனங்கள் உள்ளுராட்சி மன்ற அதிகாரத்தை தவிசாளர் பிரயோகித்தமைக்காக அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளரே உமது ஆணவத்தை ஏழைமக்கள் மீது காட்டாதே ‘ போன்ற வாசகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம்

ஜி.கே. அறக்கட்டளையின் இலவச அமரர் ஊர்தி சேவை வாகனத்தை மட்டக்களப்பு மாநகரசபை வளாகத்திலேயே தரிப்பதற்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு சமூகப் பற்றாளர்களினால் இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபை முன்றலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஏழை மக்களின் இறுதிக் கட்டத்தில் இலவச சேவையனை வழங்கி வருகின்ற இவ்அமரர் ஊர்தி சேவையில் தங்களது அதிகார மோதலை வெளிப்படுத்துவதை ஆணையாளர் உடன் நிறுத்த வேண்டும் எனவும், அரசியல் பின்புலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது தடுக்கப்பட்டு மக்களின் சேவைக்காக இயங்கும் இவ்அமரர் ஊர்தி சேவை வாகனத்தினை மாநகர வளாகத்திலேயே தரிப்பதற்கு எவ்வித இடையூறும் வழங்காது அனுமதியளித்து மக்களுக்கான சேவைகளைத் தொடருவதற்கு ஆவன செய்ய வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

அமரர் ஊர்தியில் அரசியல் வேண்டாம், அதிகார மோதலில் மக்கள் சேவையைத் தடுக்காதே போன்ற கேசங்களை எழுப்பியவாறும், ஆணையாளரே ஊழியரை மிரட்டாதே, ஜி.கே அறக்கட்டளை மட்டக்களப்பிற்குத் தேவையான ஒரு சேவை, ஆணையாளரே ஏழை மக்களின் இலவச சேவையை முடக்காதே, ஆணையாளரே ஏழை மக்களின் கண்ணீருக்குப் பதில் சொல், ஆணையாளரே உமது ஆணவத்தை ஏழைமக்கள் மீது காட்டாதே, கிழக்கின் ஆளுநரே நீதியினை நிலைநாட்டு போன்ற வாசகங்களை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த விடயம் தெடர்பில் மாநகர முதல்வர் உட்பட உரியவர்கள் வருகை தந்து தங்களுக்குரிய உகந்த பதிலை வழங்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கையினை முன்வைத்தனர்.

இது எவ்வித அரசியல் பிரச்சினையும் இல்லை. இது மக்களின் பிரச்சினை, மக்களுக்கான இலவச சேவையை முடக்குவதற்கு எவருக்கும் அனுமதிக்க முடியாது, அரசிலைத் தாண்டி மக்கள் பற்றி சிந்தித்து அனைவரும் செயற்பட வேண்டும். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நன்மை பெற்ற இவ்அமரர் ஊர்தி சேவைக்கு தடையினை எற்படுத்தவதென்பது பாவப்பட்ட ஏழை மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் செயற்பாடாகும் என்று தெரிவித்தனர்.

இதன் போது அவ்விடம் மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட உறுப்பினர்கள் சிலர் வருகை தந்து ஆர்ப்பாட்டக் காரர்களுடன் கலந்துரையாடினர். 2019ம் ஆண்டு ஜி.கே அறக்கட்டளையின் வேண்டுகோளுகிணங்க மாநகரசபை அமர்வில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு 38 உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இவ்அமரர் ஊர்தி மாநகர வளாகத்தில் தரிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. இரண்டரை வருடங்களுக்கு மேல் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் இயங்கி வந்த சேவை தற்போது புதிய ஆணையாளர் வருகை தந்ததன் பின்னர் இவ்வாகனம் வெளியில் போடப்பட்டது. பின்னர் இன்னுமொரு சபைத் தீர்மாதனத்தைக் கொண்டு வந்து வாகனம் மீண்டும் தரிப்பிடத்தில் கொண்டு செல்லப்பட்ட வேளை அவ்வானத்தைச் சேதப்படுத்தி, வாகனத்தைச் சூழ கற்களைக் குவித்து, ஜி.கே. அறக்கட்டளை இலவச அமரர் ஊர்தி என வாகனத்தில் பதிக்கப்பட்டிருந்த பெயரையும் வெள்ளைப் பூச்சினால் அழித்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. இறுதியில் உரியவர்களிடம் வாகன சாவி இருக்கையில் எவருக்கும் தெரியாமல் திருப்பெருந்துறைக்கு வாகனம் மாற்றப்பட்டுள்ளதாகவும் அறிகின்றோம். இது முற்றுமுழுதாக ஆணையாளரின் செயற்பாடுகள். சபையின் தீர்மானங்களை மீறிச் செயற்படுகிறார் என்று கூறி ஆணையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து நீதிமன்றத் தடையுத்தரவு பெற்றிருந்தும் நீதிமன்றத்தினையும் அவமதிக்கும் முகமாக மேலும் மேலும் ஆணையாளர் செயற்பட்டு வருகின்றார் என பிரதி முதல்வர் இதன் போது சுட்டிக் காட்டினார்.

இதேவேளை மாநகர ஆணையளரின் தலைமையில் ஊழியர்களை ஒன்று திரட்டி மாநகர வாயிலில் இவ்வார்ப்பாட்டத்திற்கு எதிராகவும், ஜி.கேஅறக்கட்டளையின் அமரர் ஊர்தி சேiவையினை மாநகர வளாகத்திற்குள் இடுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவும் கவனயிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது அவ்விடம் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களிடம் ஊடகவியலாளர்கள் பக்கச் சார்பாகச் செயற்படுகின்றார்கள் என ஆணையாளர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார். இதனால் ஊடகவியலாளர்கள் மற்றும் ஆணையாளருக்கிடையில் கருத்து மோதல்கள் இடம்பெற்றன. இவ்வாறு ஊடகவியலாளர்களுக்குத் தெரிவிக்காமல் ஒரு விடயத்தை ஏற்பாடு செய்து விட்டு ஊடகவியலாளர்கள் பக்கச் சார்பாகச் செயற்படுகின்றார்கள் என்று சொல்வது பொருத்தமற்ற விடயம் என ஊடகவியலாளர்களினால் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

பின்னர் அமரர் ஊர்தியினை மாநகர எல்லைக்குள் இடுவதற்கு மாநகர ஊழியர்களுக்கு விருப்பமில்லாத நிலை காணப்படுவதாகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு ஒரு தனிநபரின் அரசியல் செயற்பாடுகளுக்காக இவ்ஊர்தி சேவை செயற்படுவதாகவும், அவருக்கு மாவட்டத்தில் பல இடங்களில் காணிகள் உள்ளதாகவும், அவற்றில் இவ்வாகனத்தைத் தரித்து தங்கள் சேவையைச் செய்ய முடியும் என்றும் மாநகர ஆணையாளர் தெரிவித்தார். மாநகரசபை அனுமதியளிப்பதற்கு அதற்கு ஒரு வரைமுறை உள்ளது. எந்த அதிகார வரம்பிற்குள் மாநகரசபை இவ் ஊர்திக்கு அனுமதியளித்தது என்று தெரியாது. ஊழியர்களின் அச்சமும் நியாயமானது. எனவே தான் இதனை திருப்பெருந்துமுறைக்கு மாற்றினோம். அங்கிருந்தும் இச்சேவையைத் தொடர முடியும் எனறும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது ஊர்தி சேவைக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள். ஊழியர்கள் கடமை நேரத்தில் இவ்வாறு கவனயிர்ப்பில் எவ்வித நடைமுறைகளின் ஊடாக ஈடுபடுகின்றார்கள், ஆணையாளர் தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்கின்றாரா? என்ற கேள்விகளையும் முன்வைத்திருந்தனர். அதன் அடிபப்படையில் மாநகர முதல்வர் ஊழியர்களிடம் கடமை நேரத்தில் இவ்வாறு செயற்படுவது உகந்ததல்ல என்று தெரிவிக்கையில் மாநகர உத்தியோகத்தர்கள் பலர் கலைந்து சென்றனர்.

இதன் பிற்பாடு ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்கும் முயற்சியில் மாநகர ஊழியர்கள் சிலர் முற்பட்டனர். இதன் போது பிரதான வாயிற் கதவு ஊழியர்களால் மூடப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேற்றும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது. பொலிஸாரின் தலையீட்டிற்கமைவாக நுழைவாயில் மீளத்திறக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்ளுமாறும். மாநகரசபைக்குள் நுழையாமல் ஆர்ப்பாட்த்தில் ஈடுபடுமாறும் தெரிவித்தமைக்கமைவாக வீதியில் இருந்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்ம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீண்டும் திறக்க முடிவு

நாட்டின் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீண்டும் திறக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி முதல் அனைத்து ஆண்டுகளுக்குமான பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பல்கலைகழகங்களை ஆரம்பிப்பதாகவும், விடுதிகளை ஆரம்பிப்பதில் சிக்கல் இருக்கும் காரணத்தினால் முதலில் 3 மற்றும் 4 ஆம் ஆண்டு மாணவர்களை மாத்திரம் விடுதிகளுக்குள் உள்வாங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை ஆரம்பிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மஹிந்தவின் கூட்டத்திலிருந்து எழுந்து சென்ற விமல் குழு

பெரமுனவில் வலுத்து வரும் உட்கட்சிப்பூசலை முடிவுக்குக் கொண்டு வரும் நிமித்தம் மஹிந்த ராஜபக்சவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கட்சித் தலைவர்கள் சந்திப்பிலிருந்து விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நானாயக்கார எழுந்து சென்றுள்ளனர்.

கட்சித் தலைவர்கள் சந்திப்பென்று கூறிவிட்டு, அங்கு கட்சித் தலைவர்கள் அல்லாதவர்களும் அழைக்கப்பட்டிருந்ததாகவும் அதனால் கருத்து முரண்பாடுகள் வலுப்பதைத் தவிர்ப்பதற்காகவுமே தாம் எழுந்து சென்றதாக விமல் கூட்டணி விளக்கமளித்துள்ளது.

பசில் ராஜபக்ச – வியத்மக கூட்டணிக்கும் விமல் – கம்மன்பில குழுவுக்கும் இடையில் முரண்பாடுகள் வலுத்துள்ளதாக பெரமுன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Posted in Uncategorized

ஒருபோதும் அடிபணியப்போவதில்லை : அரசாங்கம் 69 இலட்சம் மக்களுக்கு துரோகமிழைத்துள்ளது – விஜயதாஸ சூளுரை

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய 69 இலட்ச மக்களுக்கு அரசாங்கம் துரோகமிழைத்துள்ளது.

எனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் உரிமை கட்சிக்கு உண்டு நாட்டில் சட்டம் உள்ளது அனைத்து சவால்களையும் சட்டத்தின் ஊடாக வெற்றிக் கொள்ள முடியும். அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் அடிபணியபோவதில்லை என ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷவிற்கு மகாசங்கத்தினர் நேற்று ஆசிர்வாதமளித்தனர். கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் விசேட மத வழிபாடுகள் இடம்பெற்றன. இவ்வழிபாட்டை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், சட்டம் தொடர்பில் தெளிவில்லாதவர்களே கொழும்பு துறைமுக பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் குறித்து கருத்துரைக்கிறார்கள். அனைத்து சட்ட மூலங்களும் அரசியலமைப்பிற்கு முரணற்றது என சட்டமாதிபர் குறிப்பிடுவார். இவரது கருத்தை நீதிமன்றில் சவாலுக்குட்படுத்துவோம். கடந்த காலங்களில் பாராளுமன்றில் கொண்டு வரப்பட்ட காணி சட்டமூலம் அரசியலமைப்பிற்குட்பட்டது என சட்டமாதிபர் குறிப்பிட்டார்.

காணி சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரண் என உயர்நீதிமன்றில் வாதிட்டேன். இச்சட்டம் அபாயகரமானது என குறிப்பிட்டேன். அனைத்துவாத பிரதிவாதங்களையும் ஆராய்ந்த உயர் நீதிமன்றம் காணி சட்டமூலத்திற்கு அனுமதி வழங்கவில்லை. காணி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டிருந்தால் இன்று நடுத்தர விவசாயிகள் பல நெருக்கடிகளை எதிர் நோக்கியிருப்பார்கள்.

எனக்கு எதிராக கட்சி மட்டத்தில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இதற்கு கட்சிக்கு முழு உரிமை உண்டு. நாட்டில் சட்டம் உள்ளது. அனைத்து சவால்களையும் சட்டத்தின் ஊடாக வெற்றிக் கொள்ள முடியும்.

கொழும்பு துறைமுக நகரத்தை ஒப்பந்த அடிப்படையில் பிற தரப்பினருக்கு வழங்க வேண்டிய அவசியம் கிடையாது என்றார்.

அத்தோடு, கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய சட்டமூலத்தை இரசகியமான முறையில் நிறைவேற்றவே அரசாங்கம் முயற்சித்தது. அதற்காகவே கடந்த 12 ஆம் திகதி திங்கட்கிழமை அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. நீதிமன்ற நடவடிக்கைகள் ஏதுமின்றி சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் வகுத்த திட்டம் தோல்வியடைந்துள்ளது.

அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு என்மீது பல குற்றச்சாட்டுக்கள் தற்போது முன்வைக்கப்படுகின்றன. இவற்றை ஒருபோதும் பொருட்படுத்த போவதில்லை. நாட்டின் தேசிய வளங்களை பிற நாட்டவர்களுக்கு வழங்க நாட்டு மக்கள் இடமளிக்க வேண்டாம்.தேசிய வளங்கள் அந்நிய நாட்டவர் வசமானால் இலங்கை மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படும் என்றார்.

Posted in Uncategorized

நாட்டில் புதிய மாநிலம் உருவாக்கப் போகின்றமை தெளிவாக தெரிகின்றது- சோபித தேரர்

நாட்டில் புதிய மாநிலம் உருவாக்கப் போகின்றமை தெளிவாக தெரிகின்றது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டியவிலுள்ள போதிராஜா தர்ம நிறுவனத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் ஓமல்பே சோபித தேரர் மேலும் கூறியுள்ளதாவது,“நாங்கள் அனைவரும் முப்பது வருடங்களாக கடுமையான சோகத்தில் இருந்தோம்.

புலிகளுடனான போராட்டம் முப்பது வருடத்துடன் நிறைவடைந்தது. உண்மையில், இலங்கை மக்களாகிய நாங்கள் வெற்றியடைந்துள்ளோம்.

ஆனால் தற்போது எமது வளங்கள் ஏனைய மூலோபாய வழிமுறைகள் ஊடாக கைப்பற்ற முயற்சிகள் இடம்பெற்று வருகின்றது.

நாங்கள் அதை ஒரு துறைமுக நகரமாகப் பார்க்கிறோம். மேலும் நவீன சீன காலனி துறைமுக நகரம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதையும் அதைத் தொடர முன்வைக்கப்பட்ட திட்டங்களையும் நாங்கள் பார்த்தோம்.

மேலும் புதிய சட்டத்தின் கீழ் போர்ட் சிட்டி இலங்கைக்கு சொந்தமானது அல்ல என்பதுடன் இதனை ஒரு சீன மாகாணமாகவே பார்க்கின்றோம்

இந்த நாட்டில் மற்றொரு மாநிலமொன்று உருவாக்கப் போகிறது என்பது மிகத் தெளிவாக தெரிகிறது. இந்த துறைமுக நகர திட்டத்தின் கீழ் புதிய சீன காலனித்துவ காலனி நிறுவப்பட உள்ளது.

மேலும் புதிய சீன காலனியாக அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த துறைமுக நகரம், நாட்டின் கட்டுப்பாட்டில் இல்லை. அதற்கு முகவர்கள் யாரும் இல்லை.

அந்த நிலத்திற்கு இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான பிரதிநிதித்துவமோ கட்டுப்பாடோ இல்லை.

ஆகவே உருவாக்கப்படவுள்ள புதிய சீன காலனி நிராகரிக்கப்பட வேண்டும். இது இந்த நாட்டில் நிறுவப்படக்கூடாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

அன்னை பூபதியை அவரது நினைவிடத்தில் அனுஷ்டித்தால் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைதாம்

அன்னை பூபதியின் நினைவு தினத்தை அவரது சமாதிக்குச் சென்று அனுஷ்டித்தால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என காத்தான்குடி பொலிஸார் தம்மிடம் தெரிவித்துள்ளதாக அன்னை பூபதியின் மூத்த மகள் லோகேஸ்வரன் சாந்தி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள மட்டு. ஊடக அமையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “நாவலடியில் உள்ள நினைவிடத்தில் எங்களது அன்னையின் நினைவு தினத்தினை நாங்கள் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக அனுஷ்டித்து வருகின்றோம்.

இந்நிலையில், அன்னையின் நினைவிடத்துக்குச் சென்று அனுஷ்டித்தால் கைது செய்யப்படுவீர்கள் என காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

நாங்கள் எங்களது தாயின் இறப்பினை அவரைப் புதைத்துள்ள இடத்தில் அனுஸ்டிப்பதற்கு அனுமதி மறுக்கப்படுவது கவலைக்குரியதாகும். இது அரசியல் சார்ந்த செயற்பாடு அல்ல. அன்னை பூபதி எனது தாயார் என்பதுடன் அவரது இறப்பினை நாங்கள் நினைவுகூருகின்றோம். அதில் எவ்வித பயங்கரவாத செயற்பாடும் இல்லை.

எனது தாயார் அன்னையர் முன்னணி என்ற அமைப்பின் ஊடாக இந்திய இராணுவத்திற்கு எதிராகவே போராடி உயிர் துறந்தார். அவர் ஆயுதம் ஏந்தி எந்தப் போராட்டத்தினையும் நடத்தவில்லை. இந்த நாட்டிலிருந்து இந்தியப் படையினரை வெளியேற்றவே போராட்டினார். அவ்வாறான வரை யாரும் பயங்கரவாதியாக சித்திரிக்க வேண்டாம்.

நாங்கள் எந்த அரசியல் கட்சியுடனும் இணைந்து எமது தாயாரை நினைவுகூரவில்லை. நாங்களும் எங்களது குடும்பமுமே அவரை நினைவுகூருகின்றோம்.

உலகம் எங்கும் இன்று அன்னைக்கு நினைவு தினம் நடத்தப்பட்டு வரும் நிலையில் அவரது சமாதியில் எங்களுக்கு நினைவு தினம் நடத்த முடியாமல் இருப்பது வேதனையளிக்கின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளமையை அடுத்து கொழும்பு விரையும் பிரதமர் மகிந்த

அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளமையை அடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்ச கொழும்புக்குத் திரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தனது சொந்த ஊரான தங்காலையிலும் மற்றும் நுவரெலியாவில் புதுவருட நிகழ்வுகளில் பங்கேற்றிருந்த நிலையிலேயே கொழும்புக்கு திரும்புகிறார்.

முருத்தட்டுவே ஆனந்த தேரர், மகிந்த ராஜபக்சவுடன் தொலைபேசி கலந்துரையாடல் நடத்திய பின்னரே பிரதமர் கொழும்பு திரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்சவை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே முருத்தட்டுவே ஆனந்த தேரர், மகிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடியுள்ளார்.

கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு யோசனை நிறைவேற்றப்பட்டால் துறைமுக நகரம் ‘சீன குடியிருப்பாக மாறும் என்று விஜயதாச ராஜபக்ச வெளியிட்ட கருத்து தொடர்பிலேயே கோட்டாபய ராஜபக்ச அவருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக முறையிடப்பட்டுள்ளது.

இதேவேளை கட்சியின் யாப்பை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் விஜயதாச ராஜபக்சவின் மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவே ஈஸ்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது – ரஞ்சித் ஆண்டகை

உயிர்த்த ஞாயிறுதின தற்கொலை குண்டு தாக்குதலானது , மதத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதல்ல, சிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நியாயத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறுதின குண்டுதாக்குதல்களின் போது உயிரிழந்தவர்களை நினைவுக் கூறுவதற்காக , பொரளை மற்றும் மாதம்பிட்டி பொது மயானத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியை இன்று ஞாயிற்றுக்கிழமை பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை திறந்து வைத்திருந்தார்.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

மனித வாழ்க்கை என்பது மிகவும் பெறுமதி மிக்கதாகும். அதனை எந்தவொரு பொருளுடனும் ஒப்பிட்டு தாழ்த்தி பேச முடியாது. சுயநல எண்ணங்கள் நிறைந்த உலகத்தில் மனித உயிர்கள் மிகவும் தாழ்த்தப்பட்டு மதிப்பிடப்படுகின்றன.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறுதின தற்கொலை குண்டு தாக்குதலானது , மதத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதல்ல, சிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவதற்காக முன்னெடுக்கப்பட்டதாகும். அதனால் மதத்தின் மீது கொண்ட பற்றின் காரணமாக இந்த தாக்குதல் இடம்பெறவில்லை.

இது தொடர்பில் இலங்கையர் என்ற வகையில் நாம் வெட்கமடைய வேண்டும். எமது சுயநலத்திற்காக இன்னுமொரு மதம் , இனம் மற்றும் மொழியைச் சார்ந்தவரை நாம் துன்புறுத்தியுள்ளோம்.

இந்நிலையில் தனது பலத்தை காண்பிப்பதற்காக இன்னெமொருவரை கொலைச் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதேவேளை ஒரு மதம் , இனம் அல்லது மொழியைச் சார்ந்தவர்களுக்கு இடையூறு செய்வதையும் தவிர்த்ததுக் கொள்ள வேண்டும்.

இத்தகைய செயற்பாடுகள் காரணமாக முழு உலகமே அசுந்தமானதாகவே விளங்கும். அதனால் , அனைவரும் தங்களது வாழ்க்கையில் மற்றுமொருவரின் வாழ்வுக்கு உதவிகளை செய்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.

இதேவேளை உயிர்த்தஞாயிறுதின குண்டு தாக்குதலின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தையும் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

முல்லை ஸ்டார் கலைஞர்கள் கௌரவிப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு குரவில் பகுதயில் அமைந்துள்ள முல்லை ஸ்டார் இசைக்கலைஞர்களின் ஒராண்டு பூர்த்தி நிகழ்வும் கலைஞர்கள் கௌரவிப்பும் இன்னிசை நிகழ்வும் குரவில் தமிழ் வித்தயாலயத்தில் நடைபெற்றுள்ளது.(17.04.21)

இசைக்குழுவின் இயக்குனர் ந.நவச்செல்வன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமவிருந்தினர்களாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விநோனோகராதலிங்கம் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சி.குகநேசன் ஸ்ரீசபாரத்தினம் அறக்கட்டளை நிதியத்தின் செயலாளர் க.கணேசகுமாரன்,தமிழர்குடில் இலங்கைக்கான ஊடகவியலாளர் இ.உதயகுமார்,கலைஞர் யோ.புரட்சி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

இதன் போது பிரமவிருந்தினர்கள்,சிறப்பு விருந்தினர்களால் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளதுடன் இன்னிசை நிகழ்வும் நடைபெற்றுள்ளது.

Posted in Uncategorized