உள்வீட்டு மோதலால் மொட்டுக் கட்சி உடையுமா? – இலங்கை விடயத்தில் உலக நாடுகளின் வியூகம் என்ன?

மணிவண்ணன் கைது செய்யப்பட்டதும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானவர்கள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்கள். அதைவிட கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் தனது ருவிற்றர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டிருந்தார். நாட்டுக்கு வெளியே தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் உள்ள தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களும் வெள்ளைக்கார அரசியல் பிரமுகர்களும் அது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருந்தார்கள்.

இவ்வாறு தமிழ்ப்பகுதிகளில் நிகழும் ஒரு சம்பவத்துக்கு வெளித்தரப்புகள் எதிர்வினை காட்டுவது என்பது இதுதான் முதற்தடவை அல்ல. இதற்கு முன்னரும் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் உடைக்கப்பட்டபோது இவ்வாறான ஓர் எதிர்வினை ஏற்பட்டது.

கடந்த கிழமை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ஹிட்லர் குறித்து தெரிவித்த கருத்துக்களுக்கு கொழும்பில் உள்ள ஜேர்மானியத் தூதரகம் எதிர்க்கருத்தைத் தெரிவித்தது. திலும் அமுனுகம ஜனாதிபதி கோட்டாபயவுக்கு நெருக்கமான விசுவாசமான ஒருவர்.

இவ்வாறு நாட்டுக்குள் நடக்கும் விவகாரங்களுக்கு வெளிச்சக்திகள் கருத்துக்கூறும் ஒரு நிலைமை என்பது எதைக் காட்டுகிறது? குறிப்பாக தமிழ் அரசியலில் நிகழும் முக்கியமான விவகாரங்களுக்கு இவ்வாறு வெளித்தரப்புகள் குரல் எழுப்புவது என்பது எதைக் காட்டுகிறது?

அதாவது தமிழ் மக்கள் சம்பந்தப்பட்ட விடயங்களை முன்வைத்து வெளித்தரப்புகள் இலங்கை விவகாரங்களில் கருத்துக் கூறுகின்றன என்பதுதான். அதாவது, தமிழ் மக்களை ஒரு கருவியாகக் கையாண்டு வெளித்தரப்புக்கள் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தத்தைப் பிரயோகிக்க முற்படுகின்றன என்பதுதான்.

கடைசியாக நிறைவேற்றப்பட்ட 46/1 ஜெனிவா தீர்மானமும் அத்தகையதுதான். இவ்வாறு, தமிழ் மக்களை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக கருத்துத் தெரிவிக்கும் ஒரு போக்கு எனப்படுவது ஒருவிதத்தில் தமிழ் மக்களுக்கு உற்சாகம் ஊட்டக்கூடியது. இன்னொரு விதத்தில் சிங்கள அரசியல்வாதிகளுக்கும் குறிப்பாக அரசாங்கத்திற்கும் வெறுப்பூட்டக் கூடியது.

இலங்கை அரசாங்கத்தின்மீது வெளித்தரப்புக்கள் இவ்வாறு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதை இது காட்டுகிறது. ஜெனிவா தீர்மானம் தொடர்பாக ஒரு தமிழ் ஊடகத்துக்கு வழங்கிய பேட்டியில் ஐ.நா.வின் முன்னாள் வதிவிடப் பிரதிநிதி தமரா குணநாயகம் அதைத்தான் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.

ஜெனிவா தீர்மானத்தின் பின்னணியில் அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் தீவில் மற்றொரு ஆட்சி மாற்றத்துக்கான நிலைமைகளை நொதிக்கச் செய்ய முயற்சிக்கின்றன என்ற ஊகம் பரவலாக மேலெழுந்துவரும் ஒரு பின்னணியில் மேற்கண்டவற்றை தொகுத்துப் பார்க்க வேண்டும்.

இது அரசாங்கம் வெளித்தரப்புகளின் அழுத்தத்திற்குள் இருக்கிறது என்ற ஒரு உணர்வை ஏற்படுத்தும். அதாவது, அரசாங்கம் வெளி அரங்கில் அதிகம் பலமாக இல்லை என்பதை இது காட்டும். உள்ளரங்கிலுங்கூட அதாவது நாட்டுக்கு உள்ளேயும் அரசாங்கம் ஸ்திரமாக இல்லை என்ற ஒரு கருத்து நாட்டில் ஒரு பகுதியினர் மத்தியில் உண்டு. எதிர்வரும் 19ஆம் திகதி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்த நடவடிக்கைக்குப் போகலாம் என்று ஓர் எதிர்பார்ப்பு ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரிக்கப்படுகிறது.

இந்த அரசாங்கத்தைக் கட்டியெழுப்பிய அபயராம விகாரையின் அதிபதி கலாநிதி ஆனந்த முருத்தெட்டுவ தேரர், விமல் வீரவன்ச, உதயகம்மன்பில போன்றோர் அரசாங்கத்துக்கு எதிராகக் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். இதைப்போலவே, இந்த அரசாங்கத்தைக் கட்டியெழுப்புவதில் முக்கிய பங்கை வகிக்கும் வியத்மக அமைப்புகுள்ளும் சில முரண்பாடுகள் ஏற்பட்டிருப்பதாக எனது நண்பர் ஒருவர் சுட்டிக் காட்டினார்.

சிங்கள ஊடகங்கள் மற்றும் சிங்கள நண்பர்களோடு தொழில்சார் ரீதியாக அதிகம் பழகிவரும் அரசு ஊழியரான மேற்படி நண்பர், அரசாங்கத்தின் மூளை என்று வர்ணிக்கப்படும் வியத்மக அமைப்புக்குள் தற்பொழுது கருத்து வேறுபாடுகள் காணப்படுவதாகத் தெரிவித்தார்.

வியத்மக அமைப்பு என்பது 2009இற்குப் பின்னரான சிங்கள-பௌத்த பெருந் தேசியவாதத்தை துறைசார் நிபுணத்துவத்துக்கூடாகப் புதுப்பிக்கும் நோக்கிலானது. அந்த அடிப்படையில்தான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தந்திரோபாயங்களை அந்த அமைப்பு வகுத்துக் கொடுத்து வருகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அந்த அமைப்பைச் சேர்ந்த பலர் நாடாளுமன்றத்துக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பொறுப்புகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு ஒரு சிந்தனை குழாத்தின் உறுப்பினர்கள் நேரடியாக அரசியலில் ஈடுபடுவது பொருத்தமானது அல்ல என்று வியத்மக அமைப்புக்குள்ளேயே ஒரு பகுதியினர் கருதுவதாகத் தெரிகிறது.

தேர்தல் அபிலாசைகள் அற்ற அரசியல் அதிகாரத்தை அனுபவிக்கும் ஆசைகளற்ற ஆகக்கூடியபட்சம் சுயாதீனமான சிந்தனைக் குழாம்தான் அரசாங்கத்துக்கு நாட்டை முன்னோக்கி செலுத்தும் ஆலோசனைகளை வழங்க முடியும் என்று வியத்மகவிற்குள் இருக்கும் ஒரு பகுதியினர் நம்புவதாகத் தெரிகிறது. சிந்தனைக் குழாத்தின் உறுப்பினர்கள் தேர்தல்மைய அரசியல்வாதிகளாக மாறுவதோ அமைச்சரவையில் பொறுப்புகளை வகிப்பதோ பொருத்தமானதும் சரியானதும் அல்ல என்று மேற்படி தரப்பினர் நம்புகிறார்களாம்.

ஒரு சிந்தனைக் குழாத்தைச் சேர்ந்த அறிஞர்கள் அல்லது துறைசார் நிபுணர்கள் ஓர் அரசாங்கத்தில் நேரடியாக அங்கம் வகிப்பது அந்த சிந்தனைக் குழாத்தின் சுயாதீனத்தைப் பாதிக்கும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். இவ்வாறு அரசாங்கத்தோடு இணைந்திருக்கும் வியத்மக அமைப்பின் ஒரு பகுதியினர் வியத்மக அமைப்பின் நீண்டகால இலக்குகளை அடைவதற்குப் பொருத்தமான விதங்களில் செயற்படவில்லை என்றும் அவர்கள் நம்புவதாகத் தெரிகிறது. அரசாங்கத்துக்குள் இயங்கும் ஓர் அரசாங்கம் என்று நம்பப்பட்ட வியத்மக அமைப்புக்குள் இவ்வாறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருப்பதும் அரசாங்கம் பலவீனம் அடைவதைக் காட்டுவதாக ஒரு பகுதி தென்னிலங்கை அவதானிகள் தெரிவிக்கிறார்கள்.

அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளால் பொருட்களின் விலை அதிகரித்து வருவதாகவும் சாதாரண சிங்களச் சனங்கள் மிகவும் கஷ்டப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஒரு கொட்டைப் பாக்கின் விலை 15 ரூபாய் வரை உயர்ந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கம் சதொச ஊடாக ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொதிகளை வழங்கி வருகிறது. ஆனால், அந்தப் பொதி எல்லாருக்கும் கிடைப்பதில்லை என்று முறைப்பாடுகள் வருகின்றன.

புத்தாண்டு தினத்தையொட்டி வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு அரசாங்கம் வழங்குவதாகக் கூறிய ஐயாயிரம் ரூபாயின் விடயத்திலும் இதுதான் நடந்திருக்கிறது. பெருந்தொற்று நோய் சூழலை அரசாங்கம் அது நினைத்தபடி கையாள முடியவில்லை. அதன் பொருளாதார விளைவுகளை அரசாங்கத்தால் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. அதனால், அரசாங்கத்துக்கு எதிரான அதிருப்திகள் அதிகரித்து வருகின்றன. ஒரு மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அதில் அரசாங்கம் எல்லா மாகாணங்களிலும் வெல்லும் என்று கூறமுடியாத ஒரு நிலைமை உண்டு என்று கூறப்படுகிறது.

இதனாலேயே, அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்கக்கூடும் என்ற ஊகங்களும் உண்டு. அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் சிலரும் அரசாங்கத்தைக் கட்டியெழுப்பும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் மாகாண சபைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக கருத்துத் தெரிவித்து வருவது இந்த அடிப்படையில்தான் என்று ஊகிக்கப்படுகிறது. அரசாங்கமே இவ்வாறு அமைச்சர்களையும் பங்காளிக் கட்சிகளையும் தூண்டிவிட்டு மாகாண சபைகளுக்கு எதிராகப் பேசவிடுகிறதா என்ற ஒரு சந்தேகமும் உண்டு. அதன்மூலம், மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்துக்குள் எதிர்ப்பு உண்டு என்பதை ஒரு காரணமாகக் காட்டி மாகாணசபைத் தேர்தலை ஒத்திவைக்கலாம் என்று நம்பப்படுகிறது

எனினும், இது விடயத்தில் மற்றொரு வியாக்கியானமும் உண்டு. ஜெனிவா தீர்மானத்தை முன்வைத்து அரசாங்கம் சிங்கள-பௌத்த பெருந்தேசியவாத உணர்வுகளைத் தூண்டிவிட முடியும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. குறிப்பாக புதிய தீர்மானத்தின் பிரகாரம் உருவாக்கப்படவிருக்கும் சான்றுகளையும் சாட்சியங்களையும் சேகரிப்பதற்கான பொறிமுறை எனப்படுவது வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்தே இயங்கத் தொடங்கும். செப்டம்பர் மாதமளவில்தான் ஐ.நா.வின் நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கும். எனவே, அப்பொறிமுறை அதிலிருந்துதான் இயங்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்பொறிமுறை இயங்கத் தொடங்கும்பொழுது அது, நாட்டில் மேற்கு நாடுகளுக்கு எதிரான உணர்வலைகளைத் தூண்டிவிடும். மறுவளமாகச் சொன்னால் சிங்கள-பௌத்த பெருந் தேசியவாத உணர்வுகளைத் தூண்டிவிடும். அரசாங்கம் அப்பொறிமுறையை நாட்டுக்குள் இயங்க அனுமதிக்காது. எனவே, நவீன தொழில்நுட்பங்களின்மூலம் இரகசிய வழிகளினூடாகவும் அப்பொறிமுறையின் கீழ் தகவல்களைத் திரட்ட வேண்டியிருக்கும்.

இதுவிடயத்தில் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளும் செயற்பாட்டாளர்களுமே ஐ.நா.வுக்கு அதிகம் உதவ முடியும் என்று அரசாங்கம் நம்புகிறது. அதில் உண்மையும் உண்டு. இதற்கு முன்பு தயாரிக்கப்பட்ட இதுபோன்ற அறிக்கைகள் விடயத்திலும் அதுதான் நடந்தது. இந்தக் காரணத்தினாலேயே அரசாங்கம் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்களில் ஒரு தொகுதியையும் தனிநபர்களையும் தடை செய்திருக்கிறது.

ஐ.நா.வின் மேற்படி பொறிமுறையானது வரும் செப்டம்பரில் இருந்துதான் இயங்கப்போகிறது. அரசாங்கம் அது இயங்குவதைத் தடுக்க முடியாது. வேண்டுமானால் அது நாட்டுக்குள் இறங்குவதைத் தடுக்கலாம். எனவே, தனக்கு எதிரான சான்றுகளையும் தகவல்களையும் திரட்டும் ஓர் அனைத்துலக பொறிமுறைக்கு எதிராக நாட்டில் சிங்கள-பௌத்த இனவாத உணர்வுகளைக் கிளப்புவது இலகுவானது. அதை அரசாங்கம் செய்ய முடியும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் பெருந்தொற்று நோயின் பொருளாதார விளைவுகளால் சரிந்த வாக்குவங்கியைச் சரிசெய்ய அது உதவக்கூடும்.

எனவே, பெருந்தொற்று நோயின் பொருளாதார எதிர்விளைவுகளால் அரசாங்கம் ஆடிப்போகும் என்றோ அல்லது தாமரை மொட்டுக் கட்சி உடைந்துவிடும் என்றோ எதிர்பார்ப்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. ஏனெனில், தாமரை மொட்டுக் கட்சி என்பது யுத்த வெற்றிவாதத்தை ஒரு குடும்பத்துக்கும் ஒரு கட்சிக்கும் உரியதாக நிறுவனமயப்படுத்தும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட ஒரு கட்சியாகும். யுத்த வெற்றிவாதம் என்பது 2009இற்குப் பின்னரான சிங்கள-பௌத்த பெருந்தேசியவாதத்தின் பிந்திய வளர்ச்சிதான்.

எனவே, பெருந்தொற்று நோயின் தாக்கத்தால் யுத்த வெற்றிவாதம் பலவீனமடைந்துவிடும் என்று எதிர்பார்க்கத் தேவையில்லை. கூட்டணிக் கட்சிகள் மத்தியில் தோன்றும் அதிருப்தி மற்றும் ஒத்துழைப்பின்மை போன்ற எல்லாவற்றையும் அரசாங்கம் சிங்கள-பௌத்த பெருந்தேசியவாத உணர்வுகளைத் தூண்டக் கடந்துபோய்விடும் என்பதே உண்மை நிலையாகும். அதுதான் இலங்கை தீவின் அரசியல் பாரம்பரியமும்.

அதுமட்டுமல்லாது, அரசாங்கத்துக்கு இப்பொழுது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து அரசாங்கத்தைக் காப்பாற்ற சீனா இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு சீன அபிவிருத்தி வங்கி ஊடாக 500 மில்லியன் அமெரிக்க டொலரை அரசாங்கம் கடனாகப் பெற்றது. இதற்கான உடன்படிக்கை அண்மையில் கைச்சாத்திடப்பட்டது. சீனாவுக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் பாலித கோஹன்ன இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருக்கிருக்கிறார்.

பெருந்தொற்று நோயின் பொருளாதார எதிர்விளைவுகளின் மத்தியில் அந்நியச் செலவாணியை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு குறித்த கடன்தொகை பெற்றுக் கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இலங்கையின் பொருளாதாரத்தை புத்தாக்கம் செய்யும் நோக்கத்தோடு சீன அரசு கடன் வழங்குவதாக பாலித கோஹன்ன கூறியுள்ளார். இதன்மூலம், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளும் அனைத்துலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தலாம்.

அதோடு, அமெரிக்க டொலரோடு ஒப்பிடுகையில் இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைவதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம் என்றும் இலங்கை அரசாங்கம் நம்புகிறது. இந்த 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடந்த ஆண்டு சீனா வழங்கச் சம்மதித்த கடன்தொகையின் இரண்டாவது பகுதியாகும். எனவே, இலங்கை தீவை பொருளாதார நெருக்கடிகளில் இருந்து பாதுகாக்க சீனா இருக்கிறது என்ற நம்பிக்கை அரசாங்கத்துக்கு உண்டு.

அதேசமயம், இம்மாத இறுதியில் ஜனாதிபதி கோட்டாபய இந்தியாவுக்கு விஜயம் செய்கிறார். அங்கே அவர் இந்திய பிரதமரைச் சந்திப்பார். இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிராகவும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராகவும் அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளில் இந்தியாவின் ஒத்துழைப்பைக் கோருவதே இந்த விஜயத்தின் நோக்கம் என்று கூறப்படுகிறது.

எதுவாயினும், அரசாங்கத்தின் ராஜிய நகர்வு மிகவும் சாதுரியமானது. சீனாவிடமிருந்து கடன் பெறும் அதேசமயம் இந்தியாவுடனும் நெருக்கத்தைப் பேணும் ஒரு தந்திரம். எனவே, பெருந்தொற்று நோயின் பொருளாதார எதிர் விளைவுகளால் அரசாங்கம் நிலைகுலையும் என்றோ அல்லது தாமரை மொட்டுக் கட்சி உடனடியாகச் சிதையும் என்றோ நம்புவது காலத்துக்கு முந்திய, எதிர்பார்ப்புக்களின் அடிப்படியிலான ஓர் ஊகம் ஆகும். ஆட்சி மாற்றத்தைக் குறித்த ஊகங்களும் அப்படித்தானா?

கட்டுரை ஆசிரியர்: நிலாந்தன்

Posted in Uncategorized

இலங்கை பொலிஸிலும் உள் நுழைகிறது சீனா!

இலங்கையில் பொலிஸ் நிலையங்களின் தொடர்பாடல் வசதியை நவீன முறையில் மேம்படுத்த சீன அரசினால் புதிய தொடர்பாடல் சாதனம் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெண்க் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இவரது விஜயத்தை முன்நிலைப்படுத்தியே சீனா இந்த அதிரடி நடவடிக்கையை செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இவ்வாறு வழங்கப்பட்ட தொடர்பாடல் சாதனம் ஊடாக பொலிஸ் நிலையங்கள், பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு சிறந்த முறையில் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Posted in Uncategorized

சீன பாதுகாப்பு அமைச்சர் ஏப்ரல் 27 இல் இலங்கை வருகிறார் – விஜயத்தின் நோக்கம் இது தான் !

இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கை வருகின்றார்.

இரு தரப்பு இராஜதந்திர நிரலுக்கமைவாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பாதுகாப்பு துறைசார் முக்கியஸ்தர்களையும் சந்திது சீன பாதுகாப்பு அமைச்சர் கலந்துரையாடவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் துறைமுகர் நகர் உட்பட முக்கிய சீன திட்டங்களையும் ஜெனரல் வெய் ஃபெங் பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இருதரப்பு வர்த்தகம், முதலீடு, நிதியுதவி மற்றும் மூலோபாய ஒத்துழைப்பு போன்றவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை போன்று இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகளை அடுத்த கட்டத்திற்கு விரிவுப்படுத்துவது சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்கின் இலங்கை விஜயத்தின் முக்கிய நோக்கமாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.

இலங்கை விஜயத்திற்கு முன்பதாக கடந்த மார்ச் மாதம் ஐரோப்பாவிற்கு விஜயம் செய்திருந்த ஜெனரல் வெய் ஃபெங் அங்கு இரு தரப்பு இராணுவ ஒத்துழைப்பு விரிவாக்கம் குறித்து கலந்துரையாடியிருந்தார்.

தென் சீனக்கட்லில் ஏற்பட்ட பதற்ற நிலையில் போது குறிப்பிட்ட சில ஐரோப்பிய நாடுகள் தென் சீன கடலுக்கு தமது கடற்படைகளை அனுப்பியும் சீன எதிர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே ஐரோப்பா விஜயத்தின் போது அந்த நாடுகளுடன் இராணுவ ஒத்துழைப்புகள் குறித்து ஜெனரல் வெய் ஃபெங் கவனம் செலுத்தியிருந்தார்.

குறிப்பாக ஹங்கேரி, செர்பியா , கிரீஸ் மற்றும் வட மாசிடோனியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடனான ஜெனரல் வெய் ஃபெங்கின் சந்திப்புகளின் போது இரு தரப்பு இராணுவ ஒத்துழைப்பு விரிவாக்கத்தின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது தொடர்பில் மிக ஆர்வமாக பேச்சப்பட்டுள்ளது.

மறுபுறம் தென் சீன கடலுக்கு தமது கடற்படைகளை அனுப்பிய நாடுகள் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு என்று அழைக்கப்படுகின்ற நேட்டோ படைகளையும் குறித்த கடற்பகுதிக்கு அனுப்புவது தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தது. தென் சீன கடலில் இவ்வாறானதொரு பாரிய எதிர்ப்பை எதிர்பாராத சீன பின்வாங்கியது.

ஆனால் தென் சீன கடலில் தமது திட்டங்களை முன்னெடுக்கும் போது இவ்வாறானதொரு எதிர்பலை மீண்டும் வந்து விட கூடாது என்பதில் எச்சரிக்கையுடன் செயற்படும் வகையிலேயே சீன பாதுகாப்பு அமைச்சரின் ஐரோப்பிய விஜயம் அமைந்திருந்தது.

ஜெனரல் வெய் ஃபெங்கின் கொழும்பு விஜயமும் இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்துவதுடன் பிராந்தியத்தில் ஏற்பட கூடிய சவால்களை எதிர்கொள்ள கூடிய வகையிலான மூலோபாயத்தை வகுப்பதாகவே அமையும் என பாதுகாப்பு துறைசார் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

குறிப்பாக இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களை சீனாவின் மேலாதிக்கத்தின் கீழ் வராமல் பாதுகாக்கும் வகையில் அமெரிக்கா தலைமையிலான அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை உள்ளடக்கிய ‘குவாட்’ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கடற் பிராந்தியத்தில் சீனாவின் தந்திரோபாயம் வெற்றிப்பெற்று விட கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட ஒன்றாகவே குவாட் காணப்படுகிறது.

குவாட் காரணமாக இந்து மா சமுத்திரம் மெதுவாக இராணுவமயமாக்கலுக்கு உட்படுவதோடு இங்கு ஏற்பட கூடிய சவால்களை எதிர்கொள் இலங்கை மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகளுடன் இராணுவ உறவுகளை சீனா வளர்த்துக்கொள்கிறது.

பாகிஸ்தானுடனம் மிக பலமான இராணுவ உறவை சீனா கொண்டுள்ளது. இவ்வாறனதொரு பின்னணியில் இலங்கை வரும் ஜெனரல் வெய் ஃபெங்க் இலங்கையின் முன்னெடுக்கவுள்ள பேச்சுவார்த்தைகள் முக்கியம் பெறுகின்றது

இன்று 07 COVID மரணங்கள் – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 615 ஆக அதிகரித்துள்ளது

இன்று 07 COVID மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 615 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, COVID தொற்றுக்குள்ளானோரில் 303 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 92,611 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 95,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனக்கு ஒருபோதும் அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் இல்லை – வேலன் சுவாமிகள்

அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் ஒருபோதும் என்னிடம் கிடையாது என வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

வேலன் சுவாமிகளை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்குவதற்கு முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட சிலரினால் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையிலேயே வேலன் சுவாமிகள், அரசியலுக்கு வரமாட்டேன் என அறிவிப்பு விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் எவரும் அரசியலில் பிரவேசிக்கமாட்டார்கள்.

நாங்கள் அனைவரும், சமூகங்கள் மற்றும் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை ஒழுங்குப்படுத்தும் விடயத்திலேயே எங்களது பணியை தொடருவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

ஆறு அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவால், ஆறு அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.இக்கட்சிகளுக்கிடையேயான உட்கட்சி முரண்பாடுகள் காரணமாக நீதி நடைமுறைகளின் கீழ் குறித்த கட்சிகள் இருக்கின்ற நிலையிலேயே கட்சிகளின் செயற்பாடுகளை இடைநிறுத்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிகேவா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த கட்சிகளுக்கு தேர்தலொன்றில் பின்னடைவு ஏற்படுமென்பதால் குறித்த கட்சிகளின் பெயர்கள் வெளிப்படுத்தப்படாதென ஆணைக்குழு கூறியுள்ளது.

Posted in Uncategorized

மீறல்களுக்கு வழிவகுக்கும் ஜனாதிபதியின் பயங்கரவாதத்தடை விதிமுறைகள் – சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டிருக்கும் பயங்கரவாதத்தடை தொடர்பான விதிமுறைகள் ஏற்கனவே மிகவும் ஆழமான குறைபாடுகளைக் கொண்டிருந்த பயங்கரவாத்தடைச்சட்டத்தின் மூலம் மேலும் வன்முறைகளும் மீறல்களும் இடம்பெறுவதற்கு வழிவகுக்கும் என்று சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சர்வதேச யூரர்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

பயங்கரவாதத்தடை தொடர்பான விதிமுறைகள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் கடந்த செவ்வாய்கிழமை வெளியிடப்பட்டது.

அதில் 11 அமைப்புக்கள் ‘தீவிரவாத அமைப்புக்களாக’ இனங்காணப்பட்டிருப்பதுடன் இதுபோன்ற அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு மாறாக செயற்படுபவர்களை 20 வருடங்களுக்கும் அதிகமான காலம் சிறைப்படுத்தவும், அத்தகைய செயற்பாடுகள் அல்லது அவற்றை முன்னெடுப்போருடன் தொடர்புகளைப் பேணியவர்களை 10 வருடங்களுக்கும் அதிகமான காலம் சிறைப்படுத்தவும் முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுதல் என்ற பெயரில் மோசமான விதிமுறைகளை நடைமுறைப்படுத்துகின்ற இலங்கையின் நிறைவேற்றதிகாரப்போக்கின் தன்மையே தற்போதும் பின்பற்றப்பட்டுள்ளது.

எவ்வித விசாரணைகளுமின்றி ஒருவரை இருவருடகாலம் வரை தடுத்துவைப்பதற்கு அனுமதியளிக்கும் தீவிரமயமாக்கலை ஒழித்தல் தொடர்பான விதிமுறைகள் வெளியிடப்பட்டு ஒரு மாதகாலத்தின் பின்னர் இந்த விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தன்னிச்சையான கைது நடவடிக்கைகள் தொடர்பான அடிப்படைத் தராதரங்களை மீறுவதற்கான நியாயமாக தேசிய பாதுகாப்பு என்ற விடயத்தைக் குறிப்பிடுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அனைத்து அடிப்படைவாத சக்திகளையும் தடை செய்யுங்கள் – ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ் வலியுறுத்து

இலங்கையில் உள்ள அனைத்து இன, மத அடிப்படைவாத அமைப்புக்களையும் தடைசெய்யவதே உண்மையான ஐனநாயகம் ஆகும் என ரெலோ இளைஞர் அணி தலைவரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்தார்.

இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவா் இவ்வாறு கூறியுள்ளார். அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

ஆட்சியாளர்கள் ஒரு தலைப் பட்சமாக சில இனங்களை குறிவைத்து தடை செய்தல் மற்றும் அவா்களுக்கு எதிரான அடக்குமுறைகளை ஏற்படுத்தல் என்பது ஒரு நாடு ஒரு சட்டம் என்ற கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

தற்போதைய ஆட்சியாளர்கள் இந்த நாட்டில் உள்ள அனைத்து இன மக்களின் வாக்குகளையும் பெற்று ஆட்சி அமைத்தார்கள். அத்துடன் இலங்கை ஐனநாயக சோஷலிச குடியரசு அரசியலமைப்பின் கீழ் ஆட்சி புரிந்து கொண்டு பல இனமக்கள் வாழும் இந்த நாட்டில் சிறுபாண்மைச் சமூகங்களை குறிவைத்து அடக்குமுறைச் சட்டங்களை நடைமுறைப் படுத்தல் நிலையான ஐனநாயகத்திற்கு ஆரோக்கியமாக அமைய சாத்தியமில்லை.

பெரும்பான்மை இனத்தின் அடிப்படைவாத அமைப்புக்களை ஆட்சியாளர் தங்களின் தேவைக்காக மறைமுகமாக ஆதரித்தல் நாட்டின் அமைதிக்கும் சீரான ஆட்சிக்கும் ஊறு விளைவிப்பதாகவே அமையும்.

இலங்கைத் தீவில் வாழும் ஈழத் தமிழர்கள் குறிப்பாக வடக்கு கிழக்கை பூர்வீக தாயகமாக கொண்டு அதி உச்ச அதிகாரப் பகிர்வை வேண்டி போராடும் மக்கள் மிக அவதானம். தற்போது சில சக்திகள் அடிப்படைவாத அமைப்புக்களை உருவாக்க முயற்சிக்கின்றனர்.

ஆனால் தொடர்ந்து தமிழர்கள் தமிழ் மொழியை அடிப்படையாக கொண்டு தமிழர் தேசமாக ஓரணியில் ஒற்றுமையாக பிரதேச வேறுபாடுகளை களைந்து வலுப் பெறுவதே எதிர்காலத்திற்கு ஆரோக்கியமாகும்.

ஜனாதிபதி சீனா விஜயம் ? : சீன பாதுகாப்பு அமைச்சரும் இலங்கை வருகிறார் – பின்னணி என்ன ?

வருடப்பிறப்பின் பின்னர் ஜனாதிபதியின் முதலாவது உத்தியோகப்பூர்வ வெளிநாட்டு பயணமாக சீன விஜயம் அமையப்பெறவுள்ளது. இந்த விஜயம் எதிர்வரும் மே மாதம் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. மறுப்புறம் இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் கொழும்பு வருகின்றார். இம் மாதம் இறுதி வாரத்தில் குறித்த விஜயம் இடம்பெறவுள்ளதுடன் , இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் மூன்றாவது உயர் நிலை விஜயமாக இது கருப்படுகிறது.

அதாவது கடந்த வருடம் ஜனவரியில் சீன வெளிவிவகார அமைச்சர் வோங் யூ உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்து இருதரப்பு சந்திப்புகளை முன்னெடுத்திருந்ததார். இதேவேளை சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழுவின் அரசியல் விவகார உறுப்பினரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு வெளிவிவகார அலுவலகத்தின் பணிப்பாளருமான யாங் ஜீச்சி தலைமையிலான 26 உறுப்பினர்களை கொண்ட குழு கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தது.

இந்த இரு விஜயங்களுக்கு பின்னர் இடம்பெறும் மிக முக்கியமானதும் உயர் மட்ட விஜயமாகவும் சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்கின் கொழும்பு வருகை கணிக்கப்படுகிறது. இந்த விஜயத்தின் போது ஹம்பாந்தோட்டை துறைமுகம் , தாமரை கோபுரம் மற்றும் துறைமுகர் நகர் ஆகிய முக்கிய சீன திட்டங்களையும் ஜெனரல் வெய் ஃபெங் பார்வையிடவுள்ளார். இதே வேளை இரு தரப்பு இராஜதந்திர முறைகளுக்கு அமைவாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் பாதுகாப்பு துறைசார் முக்கியஸ்தர்களையும் ஜெனரல் வெய் ஃபெங் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முன்னைய ஆட்சிக் காலத்தில் இலங்கை – சீன உறவு வலுப் பெற்றிருந்ததுடன், நல்லாட்சியில் சற்று வலுவிழந்திருந்தது. ஆனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சி பீடமேறிய பின்னர் வலுவிழந்த நிலை மாறி இருதரப்பு உறவுகள் பிராந்திய அரசியலிலும் தாக்கம் செலுத்தும் வகையில் விருத்தியடைந்து வருகின்றது. கடந்த ஆண்டு ஜனவரியில் கோத்தாபய ராஜபக்ஷ சீனாவிற்கான விஜயத்தை திட்டமிட்டிருந்த நிலையில். , கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக பிற்போடப்பட்டது. ஆனால் இந்த விஜயம் பெரும்பாலும் எதிர்வரும் மே மாதம் 2 ஆம் வாரத்தில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

2014 ஆம் ஆண்டில் இடம்பெற்ற சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இலங்கை விஜயமானது அனைத்துலகின் கவனத்தை ஈர்த்திருந்தது. குறிப்பாக பிராந்திய சக்தியான இந்தியாவின் பார்வையில் பல்வேறு நெருக்கடிகளையும் தோற்றுவித்தது. இலங்கை – சீன நவீன உறவிற்கு சுமார் 68 ஆண்டுகால வரலாறு காணப்படுகின்ற நிலையில், 1986ஆம் ஆண்டு அப்போதைய சீன ஜனாதிபதி லி ஸியன்னியான் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அதன் பின்னர் சுமார் மூன்று தசாப்தங்களுக்கு பின்னரே ஒரு சீன ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்திருப்பது அதுவே முதல் தடவையாக காணப்பட்ட நிலையிலேயே குறித்த விஜயமானது அனைத்துலக பார்வையிலும் முக்கியத்துவம் பெற்றிருந்தது.

அதே போன்றதொரு முக்கியத்துவம் மற்றும் அனைத்துலக பார்வைக்குள் இலங்கை – சீன உறவு மீண்டும் செல்கின்றது. இலங்கையை மையப்படுத்தி சீனா முக்கியத்துவம் கொடுத்து முன்னெடுத்துள்ள திட்டங்களான ஹம்பந்தொட்டை துறைமுகம், தாமரை கோபுரம் , துறைமுக நகர் மற்றும் கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியென அனைத்திலுமே சீனாவின் கடல்சார் இராஜதந்திர நோக்கங்களே பிரதிபளிக்கின்றன.

இருதரப்பு வர்த்தகம், முதலீடு, நிதியுதவி மற்றும் மூலோபாய ஒத்துழைப்பு ஆகியவை மேலும் வலுவடைய செய்வதனூடாக உத்தேச திருகோணமலை துறைமுகத்திற்கு அருகாமையில் உள்ள சீனக்குடாவில் 1,200 ஏக்கர் நிலப்பகுதியை நீண்டகால குத்தகை அடிப்படையில் சீனாவிற்கு பெற்றுக்கொள்ளுதல் போன்ற நீண்டகால எதிர்பார்ப்புகளை ஈடு செய்வதற்கும் இலங்கையுடனான உறவிற்கு பன்மடங்கில் முக்கியத்துவம் கொடுக்க சீனா எப்போதும் தயாராகவே உள்ளது. குறிப்பாக சீனக் குடா திட்டம் 2012 – 2014 ஆம் ஆண்டு காலப்பகுதிகளிலிருந்தே மிக ஆர்வமாக சீனாவால் முன்னெடுக்கப்படுகின்ற ஒரு விடயமாகும்.

இவ்வாறான திட்டங்கள் ஊடாக பொருளாதார இலக்குகளை விட பாதுகாப்பு நோக்கங்களுக்காக இருதரப்பு பாதுகாப்பு தொடர்பான அபிவிருத்தி (Defense-related development) உறுதிப்படுத்திக்கொள்வது மிக முக்கியமான விடயமாகின்றது.

அதேபோன்று சீனாவின் முதலீட்டுத் திட்டமான கொழும்புத் துறைமுக நகரின் நிர்வாக கட்டமைப்பிற்காக நியமிக்கப்படும் தனி ஆணைக்குழுவின் கீழுள்ள சட்ட யோசனைகள் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளன.

கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில் காலி முகத்திடல் பகுதியின் 446.6 ஹெக்டயரிலுள்ள கொழும்புத் துறைமுக நகர் விசேட பொருளாதார வலயமாகப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் 269 ஹெக்டயர், கடல் நிரப்பப்பட்டு உருவாக்கப்பட்ட நிலப்பகுதியாகவே காணப்படுகின்றது. பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு அமைய, இந்த வலயத்தின் நிருவாகப் பொறுப்பு, ஐவருக்கு மேற்பட்ட, எழுவருக்குக் குறைந்த கொழும்பு துறைமுக நகரின் பொருளாதார ஆணைக்குழுவிற்கு வழங்கப்படவுள்ளது.

மேலும் நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள ஏழு சட்டங்கள், இந்த விசேட பொருளாதார வலயத்திற்குப் பொருந்தாது எனவும் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறனதொரு தனி அலகில் உள்நாட்டிற்குள் நிலப்பரப்பு ஒன்ற நிர்வகிக்கப்படுவது தேசிய பாதுகாப்பு மற்றும் உள்ளக சட்ட ஒழுங்கு விவகாரங்களுக்கு பாரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. துறைமுக நகர் திட்டத்தில் சீனாவின் பெரும் பங்கும் இரு தரப்பு ஒப்பந்தங்களும் காணப்படுவதால் குறித்த நிலப்பரப்பை நீண்ட காலத்திற்கு சீனா பயன்படுத்தலாம். இந்த நிலைமையானது பிராந்திய சக்திகளுக்கு நெருக்கடியாக அமையலாம்.

மறுப்புறம் சீனாவிற்கு அச்சுறுத்தலாகும் வகையில் இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்க ஆகிய நாடுகளின் குவாட் திட்டம் இந்து – பசுபிக் கடற்பரப்பின் செயற்பாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு வருகின்றது. இதில் ஏதோவொரு வகையில் இலங்கை உள்வாங்கப்பட்டலோ அல்லது வரையறைக்குள் இருந்து ஒத்துழைப்புகளை வழங்கினாலோ அது சீனாவிற்கு நெருக்கடியை கொடுப்பதாகவே அமையும்.

அதனால் தான் குவாட் திட்டம் குறித்து வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய சிறப்பு செவ்வியில் , இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் அதிக அமைதி, சுபீட்சம், மற்றும் பாதுகாப்பை அடைவதற்கான ஒத்துழைப்பு பற்றி கலந்துரையாடும் ஜப்பான், அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளின் குழுவொன்றாக குவாட் இருக்கும் என அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டிருந்தார்.

திறந்த மற்றும் மீளெழுச்சிதிறனுடைய இந்தோ-பசுபிக் பிராந்தியமொன்றுக்கான அமெரிக்காவின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை முன்னெடுப்பதற்கான தளமொன்றாகவும் குவாட் காணப்படுவதோடு , கடற் பிரயாண சுதந்திரம் மற்றும் பிணக்குகளுக்கு தீர்வு போன்ற அடிப்படைக் கொள்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. இதனடிப்படையில் குவாட்டில் இணைவதற்கு இலங்கைக்கு எந்த தடையும் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

எனவே, எதிர்காலத்தில் ஏற்பட கூடிய இவ்வாறான சவால்களுக்கு ஏற்றதுப்போல் இலங்கையில் சில திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்ற தூரநோக்கு பார்வையில் சீனா தொடர்ந்தும் ஆர்வத்துடன் செயற்படுகிறது. இதன் பிரகாரம் ஏற்கனவே திட்டமிட்டுள்ளப்படி ஒரு வரைபிற்குள் நின்று சீனா தற்சார்பு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இதற்கு ஏற்றவகையிலேயே அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் அமையப்போகின்றது. இந்த விஜயத்தின் மிக முக்கிய விடயமாக இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுப்படுத்துவதாகவே அமையும் எனலாம்.

Posted in Uncategorized

சிறீலங்காவில் முதலீடுகளை மேற்கொள்ள அமெரிக்கா ஆர்வம்

சிறீலங்காவில் முதலீடுகளை மேற்கொண்டு அதன் கடன் சுமைகளை குறைப்பதற்கு அமெரிக்கா ஆர்வமாக இருப்பதாக சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா தெப்லிற்ஸ் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

மிகவும் சிறந்த வழிகளில் பொருளாதாரத்தை மேம்படுத்த அமெரிக்கா உதவும். கடனை சிறீலங்கா அரசு சுமப்பதைவிட அதனை மீளச் செலுத்த வேண்டும். அதனுடன் சமூக மேம்பாட்டையும் சிறீலங்கா அரசு மேம்படுத்த வேண்டும்.

சிறீலங்காவில் நாம் சிறிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். ஆனால் அதனை பெருமளவில் மேற்கொள்ள ஆவலாக இருக்கிறோம். சிறீலங்காவில் முதலீடுகளை மேற்கொள்ள அமெரிக்காவின் இரு பெரிய எரிசக்தி நிறுவனங்கள் தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.