அரசியல் கட்சிகளின் யாப்பினை பரிசீலிப்பதற்காக குழு நியமிக்கப்படவுள்ளது

தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் யாப்பினை பரிசீலிப்பதற்காக குழுவொன்றை நியமிக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இனம் மற்றும் மத அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பதற்கு ஆணைக்குழு எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் உத்தியோக பெயர்கள், அவ்வாறான இனம் மற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்டவையா என்பதை ஆராய்வதற்காகவே குழு நியமிக்கப்படவுள்ளது.

கட்சிகளின் யாப்பின் அவ்வாறான சரத்துகள் காணப்படின், அவை அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு முரணானதா, இல்லையா என்பது தொடர்பில் ஆராய்வதற்கு குழு நியமிக்கப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

குறித்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், கட்சிகளைத் தௌிவூட்டி, அவ்வாறான கட்சிகளின் பெயர்கள் மற்றும் கட்சிகளின் யாப்பில் திருத்தம் மேற்கொள்வதற்கு கால அவகாசம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

புலம்பெயர் தமிழர் அமைப்புகளை தடை செய்தது அசாதாரணமான பிற்போக்கு நடவடிக்கை

சிறிலங்கா அரசாங்கம் புலம்பெயர் தமிழர் அமைப்புகளையும் பல தனிநபர்களையும் தடை செய்துள்ளதை அசாதாரணமான பிற்போக்கு நடவடிக்கை என சர்வதேச நெருக்கடி குழுவின் இலங்கைக்கான ஆய்வாளர் அலன் கீனன் விமர்சித்துள்ளார்.

டுவிட்டரில் இதனை பதிவு செய்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

அசாதாரணமான பிற்போக்கு நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ள இலங்கை அரசாங்கம் பயங்கரவாதிகள் என அறிவிக்கும் சட்டத்தை பயன்படுத்தி கடந்த மாதம் அரசியல்ரீதியில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற புலம்பெயர் அமைப்புகளை தடை செய்துள்ளது.

இதன் காரணமாக இலங்கையில் உள்ள எவரும் அந்த அமைப்புகளுடன் தொடர்புகொள்வதை கூட ஆபத்தானதாக மாற்றியுள்ளது.

அரசாங்கத்தின் இந்த பட்டியலில் 300க்கும் அதிகமானவர்களின் பெயர்கள் விபரங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் இந்த பட்டியலில் ஐம்பது முஸ்லீம்களின் பெயர்கள் காணப்படுவதுடன் இவர்கள் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இலங்கையில் வசிக்கும் 35 தமிழர்களின் பெயர்களும் அடங்கியுள்ளன இவர்கள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இதேசட்டத்தை பயன்படுத்தி மகிந்த ராஜபக்ச அரசாங்கம் 2014 இல் இதே தமிழ் அமைப்புகளையும் தனிநபர்களையும் தடை செய்திருந்தது.

அந்த பட்டியலில் காணப்பட்ட சில பெயர்களும் விபரங்களும் தவறானவையாக காணப்பட்டன.உரிய ஆதாரங்களும் முன்வைக்கப்படவில்லை.

உலகின் ஏனைய அரசாங்கங்களை போல இலங்கை அரசாங்கத்திற்கும் பயங்கரவாதத்தை தடுப்பதற்கான பயங்கரவாதத்தில் ஈடுபட்ட எவரையும் தடுத்து வைத்து தண்டிப்பதற்கான உரிமையுள்ளது.

எனினும் எந்த குழுவிற்கும் தனிநபருக்கும் எதிரான தடைகளும் உரிய ஆதாரங்களினை அடிப்படையாக கொண்டதாக காணப்படவேண்டும்.

துரதிஸ்டவசமாக இலங்கை அரசாங்கம் தனது எதிராளிகளை தன்னை விமர்சிப்பவர்களை உரிய ஆதாரங்கள் இன்றி பயங்கரவாதிகள் என விமர்சிக்கும் வரலாற்றை கொண்டது.

அரசாங்கத்தின் சட்டத்தின் ஆட்சி மீதான சமீபத்தைய தாக்குதல்களும் பொலிஸ் நீதித்துறை அரசியல்மயப்படுத்தப்பட்டமையும் சந்தேகம் மற்றும் எச்சரிக்கைக்கான காரணங்களாக காணப்படுகின்றன.

ஜெனிவா தீர்மானத்தால் உருவாக்கப்படுகிறது உலகளாவிய சட்டவலை – கலாநிதி. தயான் ஜயதிலக்க சுட்டிக்காட்டு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பில் பிரத்தானிய தலைமையிலான ஆறு நாடுகளால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமையால் உலகளாவி ரீதியிலான சட்டவலையொன்று உருவாக்கப்படவுள்ளது என்று கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

ஐ.நா.தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் சாட்சியங்களை திரட்டுவதற்கும் பாதுகாப்பதற்குமான 12பேர் கொண்ட குழுவானது ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தினுள் ஒரு நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கான குணாம்சங்களுடனான பத்திரத்தினை வகிக்கவுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலைமையானது, இலங்கையில் மனித உரிமைகள் மனிதாபிமானக் குற்றச்சாட்டுக்கு இலக்கான தனிநபர்களை இலக்கு வைத்து வெளிநாடுகளில் வழக்கு தொடுப்பதற்கு வழிசமைப்பதாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் கடந்த 23ஆம் திகதி நிறைவுக்கு வந்திருந்தது. இதன்போது இலங்கை தொடர்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. எனினும், இலங்கை அரசாங்கம் அத்தீர்மானத்தினை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று பகிரங்கமாக அறிவித்து விட்டது.

இவ்வாறான நிலையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் அடுத்தகட்டச் செயற்பாடுகள் எவ்வாறிருக்கப்போகின்ற என்பதுதொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலிருந்து வேறுப்பட்டதாக உள்ளது.

தீர்மானத்தின் தலைப்பு, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனிதஉரிமைகள் ஆகியவற்றை முன்னேற்றுதல் என்றவாறு அமைந்திருக்கின்றது. இதில் ஆறாவது செயற்பாட்டுப்பந்தியில், பொறுப்புக்கூறலை முன்னேற்றும் நோக்கத்துடன் இலங்கையில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் அத்துமீறல்கள் அதனுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பாக சான்றுகளை சேகரித்தல், பகுப்பாய்வு செய்து பாதுகாத்தல், செய்து பாதுகாப்பதற்கும், பாரிய மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் மோசமான மீறல்கள் என்பவற்றின் பொறுப்புக்கூறலுக்கான எதிர்காலத் திட்டங்களுக்கான சாத்தியமான மூலோபாயங்களைத் தயாரிப்பதற்கும் பரிந்துரைத்துள்ளது. இந்தப் பொறிமுறையானது 12 பேர் கொண்ட உலகின் தலைசிறந்த நிபுணர்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது.

சட்டமா அதிபரின் பாத்திரம்

இலங்கை தொடர்பான கண்காணிப்பு மீளாய்வுக்காலம் ஆறுமாதங்களாக சுருக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தினுள் இந்தப் பொறிமுறையின் செயற்பாடானது ஏறக்குறைய நாடொன்றில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் குணாம்சங்களைக் கொண்ட பாத்திரத்திரமாகவே இருக்கப்போகின்றது.

அதாவது வடக்கிலும் சரி, தெற்கிலும் சரி மனித உரிமைகள், மனிதாபிமானச்சட்ட மீறல்கள் தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் உள்ள விடயங்களை சீர்தூக்கிப் பார்த்து மேலதிக சாட்சியங்கள், விசாரணைகள் ஆகியவற்றை அக்குழு மேற்கொள்ளவுள்ளது.

அத்துடன், ஐ.நா உயர்ஸ்தானிகரின் அலுவலகத்திற்கு இதுவரையில் உள்ளீர்க்கப்படாத குற்றச்சாட்டுக்கள் உடைய சம்பவங்கள் பற்றியும் இந்தக்குழுவானது சாட்சியங்களை திரட்டுவதற்கு முயற்சிக்கும். மேலதிக ஆய்வுகளையும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் வெளிநாட்டு நீதிமன்ற வழக்குகளுக்கு உதவல் ஐ.நா. தீர்மனத்திற்கு அமைவாக, சாட்சியங்களை திரட்டும் இந்தக்குழுவானது வெளிநாடுகளில் குற்றச்சாட்டுக்களை உடையவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பின், அந்த வழக்கினை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கா மேம்பட்ட ரீதியிலான சாட்சியங்களை அளிப்பதற்கான ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளது.

குறிப்பாக தமது சாட்சியங்கள், ஆய்வறிக்கைகளை கையளிக்கும். இவ்விதமான செயற்பாடானது குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டவர்கள் வெவ்வேறு நாடுகளில் சிக்குவதற்கான சந்தர்ப்பதினையே ஏற்படுத்துகின்றது.

உதாரணமாக கொள்வதாயின் ஊடகவியலாளர் லசந்தவின் படுகொலை விவகாரத்தில் அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கிற்கான சாட்சியங்கள் மற்றும் மேம்பட்ட ஆதாரங்களை வழங்குதோடு நீதிக்காக தொடர்ந்து பணியாற்றவும் உள்ளது.

ஆகவே, நிபுணர்கள் குழுவைக்கொண்ட பொறிமுறையானது, சட்ட வலுவானதாக காணப்படுவதோடு அடுத்து வரும் காலத்தில், இலங்கை தொடர்பில் உலகளாவி ரீதியில் உருவாக்கப்பட்டிருக்கும் ‘சட்டவலையாகவே’ பார்க்கப்பட வேண்டியுள்ளது.

இலங்கையினுள் பிரவேசிக்க வேண்டிய அவசியமில்லை

இந்த சாட்சியங்களை திரட்டும் நிபுணர்கள் வடக்கு கிழக்கிற்கோ அல்லது தென்னிலங்கைப் பகுதிகளுக்கோ நேரடியாக வந்து சாட்சியங்களைப் பதிவு செய்யவேண்டியதில்லை. நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக காணொளி காட்டசிகள் உள்ளிட்ட இதர வழிகளைப் பயன் இலங்கைக்கு வெளியில் இருந்தே முன்னெடுக்கவுள்ளனர்.

மேலும் ஐ.நா.தீர்மானத்தினை இலங்கை அரசாங்கம் முழுமையான நிராகரித்துள்ள நிலையில் சாட்சியங்களை திரட்டும் நிபுணர்கள் உள்நாட்டிற்குள் வருகை தருவதற்கு இடமளிக்கப்போதவதில்லை என்பது திடமாக வெளிப்படுத்தப்பட்டு விட்டது. எனவே சாட்சியங்களை திரட்டும் குழுவும் இலங்கை அரசாங்கம் நிச்சயமாக ஒத்துழைப்புக்களை வழங்காது என்று கூறுமளவிற்கு நிலைமைகள் உள்ளன.

ஆகவே ஆட்சியாளர்களிடத்தில் தம்மை உள்நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு இடமளிப்பார்கள் என்றும் அந்த நிபுணர்கள் குழு நம்பவில்லை. ஆகவே அவற்றின் செயற்பாடுகள் இலங்கைக்கு வெளியில் தான் அதிகளவில் ஈடுபடவுள்ளது.

பொதுச்சபை அனுமதி நிதிப்பயன்பாடும்

ஐ.நா.தீர்மானத்திற்கு அமைவாக சாட்சியங்களை திரட்டுதல் உள்ளிட்ட விடயங்களுக்காக 2.8மில்லியன் தொடர்கள் செலவழிக்கப்படவுள்ளது. இந்த நிதியானது பொதுச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட வேண்டியுள்ளது. அதன், பின்னரே மேற்படி குழுவானது தனது செயற்றிட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளது.

உள்ளக பரிந்துரைகள்

போர் நிறைவடைந்ததன் பின்னர் அதில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் பரணகம ஆணைக்குழு ஆகியவற்றின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களில் ஐந்து மாணவர்கள் உட்பட 11பேரின் கடத்தல் தொண்டு நிறுவன தொழிலாளர்கள் படுகொலை இறுதிப்போரில் பஸ்வண்டிகளில் ஏற்றிச் சென்றவர்கள் இன்மும் காணமலாக்கப்பட்டவர்களாக இருக்கும் நிலைமைகள் இவ்வாறு பல விடயங்கள் கூறப்பட்டுள்ளன. அதேபோன்று தான் மக்ஸ்வெல் பரணகமவின் அறிக்கையிலும் இவ்விதமான விடயங்களை கொண்டிருக்கின்றன.

ஆகவே அந்தப்பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாததன் காரணத்தாலேயே தற்போதைய தீர்மானம் வலுவாக மாறியுள்ளது. இந்நிலையில் சாட்சியங்களை திரட்டும் குழு இந்த விடயங்கள் தொடர்பில் மேலதிக ஆய்வுகளையும் செய்யும் என்று எதிர்பார்க்க முடியும். அவ்விதமான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றபோது அடுத்த அமர்வுகளில் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் மீளாய்வு சமர்ப்பணங்களும் வலுவடையலாம். மேலும் ஆட்சியளர்களுக்கே மேலதிக நெருக்கடிகள் ஏற்படலாம்.

13ஆவது திருத்தம்

மேலும் இந்த தீர்மானத்தில் 13ஆவது திருத்தச்சட்டமும் மாகாண சபைகளுக்கான அதிகாரப்பகிர்வு தொடர்பிலும் வெளிப்படுத்தப்பட்டு விட்டது. சமகாலத்தில் சாத்தியப்படக்கூடிய விடயமொன்றாக இருப்பது 13ஆவது திருத்தச்சட்டமாகும்.ஆகவே முதற்கட்டமாக 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக அமுலாக்கி அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வது பற்றி தமிழ் அரசியல் கட்சிகள் தீர்க்கமான முடிவொன்றை எடுக்க வேண்டும் என்றார்.

 

Posted in Uncategorized

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் -காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள் விடத்திற்கு தீர்வு காண அமெரிக்கா தலையிட வேண்டும் எனத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் கனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா, ஏ9 வீதியில், வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்பாக 1500 நாட்களாக சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தின் 1500 ஆவது நாளை முன்னிட்டு வவுனியா கந்தசாமி ஆலயத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் நினைவாக வழிபட்டு தேங்காய் அடித்து வணங்கி விட்டு அங்கிருந்து மணிக்கூட்டு கோபுர வீதி ஊடாக ஊர்வலமாக வந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது போராட்ட கொட்டகை முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றின் கொடிகளை ஏந்தியிருந்ததுடன், எங்களுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா தேவை என்ற பதாதைகளை ஏந்தியிருந்தனர். இதன்போது தாய்மார் கண்ணீர் மல்க கதறி அழுத்து தமது பிள்ளைகள் தமக்கு வேண்டும் எனக் கோரியிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கருத்து தெரிவிக்கையில்,

“இன்று நாம் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளோம். எங்கள் ஒரு நாளைக்கு ஒரு நேர உணவுத்தவிர்ப்பு தொடர் போராட்டம் 1500 வது நாளை எட்டியது. தமிழர்கள் விரும்பும் தீர்வுகள் இல்லாவிட்டால், நம்முடைய மற்றும் பிற தமிழர்களின் போராட்டங்கள் தொடரும். ஒரு புதிய தலைமுறையினரும் தங்கள் போராட்டத்தைத் தொடங்குவதற்கான நல்ல வாய்ப்பு உள்ளது. அவர்களின் போராட்ட வடிவம் நாம் கற்பனை செய்ய முடியாத ஒரு நவீனமானதாக இருக்கலாம்.

காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளைக் கண்டுபிடிக்க இப் போராட்டத்தின் முதல் நாள் முதல் அமெரிக்காவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் அழைத்தோம். தமிழர்களைக் கொல்வது, நமது பொருளாதாரத்தை அழிப்பது, சிங்கள இராணுவத்தால் தமிழ் பெண்களின் பாதிப்பு, நமது நிலத்தை கையகப்படுத்த புத்த மதகுருவின் ஆக்கிரமிப்பு, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் மட்டுமே தடுக்க முடியும்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மிகவும் வலுவான நேட்டோ வைக் கொண்டுள்ளன. அவை உலகில் பல சிக்கல்களைத் தீர்த்தன. இந்தியா எங்களுக்கு உதவ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால் யு.என்.எச்.ஆர்.சி அமர்வில் அவர்களின் போலி நடுநிலைமை தமிழர்களுக்கு உதவ இந்தியா தயாராக இல்லை என்பதைக் காட்டுகிறது. இந்தியா ஸ்ரீலங்காவுடன் நட்பாக இருக்க விரும்புகிறது. அதாவது அவர்கள் தமிழர்களை ஆதரிக்கவில்லை என்பதாகும்.

7கோடி தமிழர்களைக் கொண்ட நாடு. தமிழர்களுக்கு உதவ இந்தியாவை அழைப்பது எங்கள் கடமை. 13 ஆவது திருத்தம் 5 வீத பிரச்சினையை மடடும் தீர்க்க முடியும். ஆனால் 13 வது திருத்தம் தமிழர்களை சிங்களவர்களால் மேலும் பாதிக்கச் செய்யும்.

எங்களைப் பொறுத்தவரை, இரண்டு மொழிகள் இருக்கும்போது, சமஷ்டி ஒரு நிரந்திர தீர்வாக இருக்க முடியாது. தமிழ் இனப்படுகொலையைத் தவிர்க்க, சமஷ்டிசிக்கு அப்பாற்பட்ட ஒரு தீர்வு நமக்குத் தேவை. இது கனேடிய மாதிரியான பாதுகாக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான தமிழ் தாயகம் மாதிரியாக இருக்கலாம்.

யு.என்.எச்.ஆர்.சி தீர்மானம் பற்றியது என்னவெனில், ஐ.நா எந்த இனப் பிரச்சினையையும் அமெரிக்க தலையீடு இல்லாமல் தீர்க்கும் வரலாறு இல்லை. எனவே எங்களுக்கு உதவுமாறு அமெரிக்காவை அழைக்கிறோம். பல தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் சிந்தனையாளர்கள் அமெரிக்காவை அழைக்கும் எங்கள் கருத்தை எப்போதும் நிராகரித்தனர். பெரும்பாலான அரசியல்வாதிகள் எங்கள் பந்தலுக்கு வர விரும்பவில்லை. ஏனெனில் அமெரிக்கக் கொடியுடன் படம் எடுப்பது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பிடியாது என்பதால்.

இப்போது அவர்களில் பெரும்பாலானோர் நமது அரசியல் பிரச்சினையை அமெரிக்காவால் மட்டுமே தீர்க்க முடியும் என்ற உண்மையை ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த உரையை விட்டுச் செல்வதற்கு முன், மாகாணத் தேர்தல்களில் வாக்குகளைப் பெற சுமந்திரனும் சாணக்கியனும் செயல்படுகிறார்கள் என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். சுமந்திரன் ஐக்கியதேசியக் கட்சி உறுப்பினர் என்றும் சாணக்கியன் ஒரு முன்னால் ராஜபக்ச கட்ச்சி உறுப்பினர் என்றும் நாம் அனைவரும் அறிவோம். சிங்கள சூழலில் ஆடம்பர வாழ்க்கை வாழ வாழ இருவருக்கும் ஒரே குறிக்கோள் உள்ளது.

சுமந்திரன் ஆட்சி மாற்றத்தைப் பெற முயற்சிக்கிறார். தமிழர்கள் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும். ஆட்சி மாற்றம் தமிழர்களுக்கு பேரழிவு தரும். 1000 விகாரைகள், நெடுங்கேணியில் 4000 சிங்கள குடியேற்றங்கள் மற்றும் புத்த மதத்திற்கு முதன்மையான இடம், வட கிழக்கு பிரிவினை, ஏக்கியா ராஜ்ஜிய இவை யாவும் முன்னைய ஆட்சி மாற்றத்தின் விளைவு. இதை தான் ரணில்
புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்படவில்லை என்றாலும், பௌத்த நாடு என்பதை கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டது பெரு வெற்றி” என்றனர்.

Posted in Uncategorized

7 அமைப்புக்களை தடை செய்தது இலங்கை!

வெளிநாடுகளில் இயங்கும் 7 தமிழ் அமைப்புகளையும், தனிப்பட்ட முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் உள்ளிட்ட 300ற்கும் அதிகமானவர்களையும் இலங்கை அரசாங்கம் கறுப்பு பட்டியலில் சேர்ந்துள்ளது.

இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாதம் 25ம் திகதியிடப்பட்ட வர்த்தமானியின் ஊடாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1968ம் ஆண்டின் 45ம் இலக்க ஐக்கிய நாடுகள் சபைச் சட்டம் 2012ம் ஆண்டின் 1ம் இலக்க ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்கு விதியின் பிரகாரம், பெயர் குறிப்பிட்ட ஆட்களின் நிரலுக்கான திருத்தம் என தெரிவிக்கப்பட்டுள்ளது,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னணியிலேயே, இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழர் பேரவை , அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், உலக தமிழர் பேரவை, கனேடிய தமிழர் தேசிய அவை , தமிழ் தேசிய அவை, தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் உலக தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஆகிய அமைப்புக்களே மீண்டும் தடை செய்யப்பட்டு கறுப்பு பட்டியில் சேர்க்கப்பட்டுள்ளன.

Posted in Uncategorized

சீனாவுடனான தொடர்பு : இலங்கை இழைத்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளோம் – பங்களாதேஷ்

சீனாவுடனான தொடர்புகளைப் பேணும்போது இலங்கை இழைத்த தவறுகளிலிருந்து தமது நாடு பாடம் கற்றுக்கொண்டுள்ளதாக பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் வெளிவிவகார ஆலோசகர் கௌஹர் ரிஸ்வி தெரிவித்துள்ளார்.

அதுமாத்திமன்றி சீனாவுடனான தொடர்புகளின் போது மிகவும் சீரானதும் சரிவர அளவீடு செய்யப்பட்டதுமான முதலீட்டுக்கொள்கையையே தாம் பின்பற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனா தனது ‘கடன்பொறி’ மூலோபாயத்தைப் பயன்படுத்தி அபிவிருத்தியடைந்துவருகின்ற மற்றும் அபிவிருத்தியடையாத நாடுகளைக் கவர்ந்திழுக்கும் வேளையில், இவ்வாறானதொரு கருத்து வெளியாகியிருப்பதாக சர்வதேச ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை மற்றும் கிழக்கு ஆபிரிக்க நாடான ஜிபோட்ரி போன்ற நாடுகள் சீனாவிடம் பெற்ற கடனை மீளச்செலுத்துவதற்கான ஆற்றலை இழந்துள்ளமையால் அவற்றின் சொத்துக்கள் மீதான கட்டுப்பாட்டை சீனாவிற்கு வழங்குவதற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளமையில் இருந்து தமது நாடு பாடம் கற்றுக்கொண்டுள்ளதாக ரிஸ்வி தெரிவித்துள்ளார்.

சீனாவிடம் ஜிபோட்ரி பெற்ற கடனின் பெறுமதி, அந்நாட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 70 சதவீதமானவற்றையும் விட அதிகமாகும் என்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

மேலும் ‘எமது நாட்டின் இறையாண்மையை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதை நாம் நன்கு அறிந்துள்ளோம்.

விடுதலையை இலக்காகக்கொண்ட போராட்டத்தின் ஊடாக நாம் தற்போது சுதந்திர நாடாக மாற்றமைந்துள்ளோம்.

ஆகவே எமது பெறுவனவுகளைச் சரிவரக் கண்காணிக்கும் அதேவேளை, வெளிநாடுகளிடமிருந்து பெறும் கடன்களை மீளச்செலுத்தக்கூடிய எமது ஆற்றல் தொடர்பிலும் மிகுந்த அவதானத்துடன் இருக்கின்றோம்’ என்றும் பங்களாதேஷ் பிரதமரின் வெளிவிவகார ஆலோசகர் ரிஸ்வி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜெனீவா தீர்மானத்தை அச்சமின்றி எதிர்கொள்வோம்

நாட்டின் இறையாண்மையை பாதுகாத்துக் கொண்டு ஜெனீவா மனித உரிமை பேரவையின் தீர்மானங்களுக்கு அச்சமின்றி முகங்கொடுக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பங்கேற்கும் கிராமத்துடன் கலந்துரையாடலின் 16ஆவது நிகழ்ச்சித் திட்டம் மாத்தறை மாவட்டத்தின் பிட்டபத்த பிரதேச செயலக பிரிவிலுள்ள கிரிவெல்கெல வடக்கு மூன்றாம் பியவர கிராம உத்தியோகத்தர் பிரிவில் இன்று (27) நடைபெற்றது.

இதன்போது உரையாற்றி ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார்.

´உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும், தேசிய பாதுகாப்பு குறித்து கடந்த அரசாங்கம் அக்கறை காட்டாததால் தான் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் பேரில் இராணுவ வீரர்கள் சிறையில் அடைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டன. அந்த வழக்குகளில் இருந்து அவர்களை வெளியேற்றுவதில் இப்போது எனக்கு ஒரு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. சர்வதேசத்திற்கு சென்று ஜெனீவாவில் தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்கி எமது இறையாண்மையை எமது சுதந்திரத்தை முழுமையாக அழித்து விட்டார்கள்.

அந்த இணை அனுசரணையில் இருந்து நாம் விலகியுள்ளோம். அவர்கள் எங்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள்.அது ஒரு பொருட்டல்ல. நாம் அதை எதிர்கொள்ள முடியும்.நாங்கள் ஒரு சுதந்திர நாடு. நாம் எங்கள் வேலையைச் செய்யலாம்.நாம் அவர்களை அச்சமின்றி எதிர்கொள்கிறோம். அதுதான் தேவை. இந்தியப் பெருங்கடலில் இருக்கும் சக்திகளின் அதிகார போராட்டதில் நாம் தலையிடத் தேவையில்லை. அதிகாரப் பகிர்வு என்ற பெயரில் பிரிவினைவாதத்தை மீண்டும் கொண்டுவருவதற்கும் அவர்களின் புவிசார் அரசியல் நலன்களை நிறைவேற்ற நமது இறையாண்மையைக் காட்டிக் கொடுப்பதற்கும் நாங்கள் தயாராக இல்லை´ என்றார்.

Posted in Uncategorized

முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பே தொடர் தாக்குதல்களை தடுக்க காரணம் – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு எதிராக முஸ்லிம் மக்கள் நின்றதனால் தான் இந்த தொடர் தாக்குதலை முறியடிக்க முடிந்தது எனத் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வருகின்ற மாதம் 4ம் திகதி மீண்டும் உயிர்த்த ஞாயிறு வரவிருக்கின்றது. அந்த சமயம் இந்த தேவாலயங்களில் படுகொலை செய்யப்பட்டவர்களுடைய குடும்பங்களுக்கு ஒரு சோகநாளாக அமையவிருக்கிறது.

அன்றைய தினம் புத்தாடையணித்து இறைவனைப் பிரார்த்திப்பதற்காகச் சென்ற மக்கள், என்ன நடக்கப்போகிறது எனத் தெரியாத ஒரு சூழ்நிலையிலேயே அந்த தாக்குதல் இடம்பெற்றது. தேவாலயங்கள் அந்த தாக்குதலுக்குத் தெரிவு செய்யப்பட்டதற்கு என்ன காரணம் என்று இன்றுவரை கண்டுபிடிக்கமுடியவில்லை.

அதேபோல உல்லாச விடுதிகள் தாக்கப்பட்டது, வெளிநாட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டது கூட இந்த நாட்டுக்கு வெளிநாட்டவர்கள் வரக்கூடாது என்பதா அல்லது வேறு திட்டங்களை வைத்துச் செய்தார்களா என்பது தொடர்பில் எந்த செய்தியும் வெளிவரவில்லை.

ஆனால் முஸ்லிம் மக்கள் இந்த தாக்குதலுக்கு எதிராக நின்றதனால் தான் இந்த தொடர் தாக்குதலை முறியடிக்க முடிந்தது, தாக்குதல்தாரர்களை கைது செய்ய முஸ்லிம் மக்கள் ஒத்துழைத்தமையால் தொடர் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

 

ஜேர்மன்: தமிழ் அகதிகளை நாடு கடத்த முயற்சி- தமிழ் அமைப்புக்கள் போராட்டத்திற்கு அழைப்பு

ஜேர்மனியில் தஞ்சம்கோரித் தங்கியிருந்த தமிழ் அகதிகள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஜேர்மனியின் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா (North Rhine-Westphalia) பகுதியில் 30இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கடந்த சில நாட்களில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள், பெரனில் உள்ள நாடு கடத்தல் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வரும் மார்ச் 30ஆம் திகதி அவர்கள், டுசெல்டோர்ஃப் (Düsseldorf Airport) விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு கூட்டு விமானத்தில் நாடு கடத்தப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு தமிழ் அமைப்புகள் நாளை ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

சகல முயற்சிகளுக்கும் இலங்கைக்கு ஆதரவளிக்கத் தயார் – ஐ.நா.விற்கான பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர்

இலங்கையில் அர்த்தமுள்ள வகையிலான நீதிப்பொறிமுறையை வலுப்படுத்துவதற்கும் பொறுப்புக்கூறலையும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதற்கும் முன்னெடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவு வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக பொதுநலவாய நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கான பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் தாரிக் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :

‘இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய பிரேரணையை வரவேற்கின்றேன்.

இது இலங்கையில் போரின் பின்னரான காலப்பகுதியில் நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துவதில் சர்வதேச சமூகம் தொடர்ந்தும் அக்கறை கொண்டிருப்பதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

அதுமாத்திரமன்றி இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறுவதற்கான அச்சம் இருப்பதாகக் குறிப்பிட்டு மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரதிபலிப்பாகவும் இந்தப் புதிய பிரேரணை அமைந்துள்ளது.

அதேவேளை பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்காக எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவிருக்கும் நடவடிக்கைகளுக்கு அவசியமான ஆதாரங்களைத் திரட்டுவதையும் கண்காணிப்புக்களை மேற்கொள்வதையும் ஐக்கிய நாடுகள் சபை தொடரவேண்டும்.