இலங்கையில் புர்காவை தடை செய்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை தென்னாபிரிக்கா தடுத்து நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவிலுள்ள இஸ்லாமிய அமைப்புக்களே குறித்த கோரிக்கையை அந்நாட்டு அரசாங்கத்திடம் விடுத்துள்ளது.
தென்னாபிரிக்கா ஐக்கிய உலமா சபை மற்றும் தென்னாபிரிக்கா சர்வதேச விவகாரங்களிற்கான அமைச்சர் ஆகியோர், குறித்த விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென இஸ்லாமிய அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.
இதேவேளை உலமா பேரவை இவ்விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளதாவது, ‘இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான குரோத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும் தற்போது, புர்கா தடை மற்றும் மத்ரசாக்கள் மூடப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
இவை அனைத்தும் பெரும்பான்மையின மக்களை திருப்திப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும்’ என அப்பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதம் ஒன்று (Back bench Debate) நேற்றைய தினம் நடைபெற்றது(18-03-2021.
இந்த விவாதத்திற்கான முன்னெடுப்புக்களை பிரித்தானியத் தமிழர் பேரவையினர், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவினூடாக (APPG forTamils) முன்னெடுத்திருந்தது.
கடந்த 11ஆம் திகதி பெப்ரவரி மாதம் நடைபெறவிருந்த இந்த விவாதமானது நாடாளுமன்றத்தில் வேறு ஒரு அவசர நிகழ்வால் மாற்றப்பட்டு நேற்றைய தினம் நடைபெற்றது(18-03-2021).
இந்த விவாதமானது தொழில் கட்சியைச் சேர்ந்த தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவின் உபதலைவர் சிவோன் மாக்டோனாவின் (Siobhain McDonagh MP) முன்னேற்பாட்டில் பிரித்தானியத் தமிழர் பேரவையின் வேண்டுகோளின் பிரகாரம் நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கொன் செர்வ்டிவ் கட்சியைச் சேர்ந்த தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுத் தலைவர் எலியட் கோல்பேர்ண் (ElliotColburn MP) மற்றும் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழு உபதலைவர் சேர் எட் டேவி (Sir Ed Davy MP) ஆகியோரால் அனுசரணை வழங்கப்பட்டு மேலும் பல அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதம் (Backbench Debate) நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விவாதத்தில் கலந்து கொள்கின்ற அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பிரித்தானிய அரசாங்கத்தால் இலங்கை மீது மேற்கொள்ளப்பட வேண்டிய அழுத்தங்கள் மற்றும் இலங்கை மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளடங்கிய ஆவணங்கள் பிரித்தானியத் தமிழர் பேரவை சார்பாக ஏற்கனவே கையளிக்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலையே என்பதனையும், தமிழர்களுக்கான ஒரு வலிமையான அரசியல் தீர்வினை பிரித்தானியா ஏனைய நாடுகளுடன் இணைந்து முன்னெடுக்க வேண்டும் எனவும், இலங்கை மீது பொருளாதாரத் தடை, இன அழிப்பு போன்ற மோசமான குற்றமிழைத்தவர்கள் மீது பயணத் தடை, சொத்து முடக்கம் ஆகியவை உள்ளடங்கலாகப் பல விடயங்கள் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2009 ஆம் ஆண்டில், இலங்கையின் உள்நாட்டுப் போரின் கடைசி சில மாதங்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் உயிர்களை இழந்தனர் என பிரித்தானிய நாடாளுமன்ற தொழிற்கட்சியின் உறுப்பினர் சியோபைன் மெக்டோனாக் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதம் ஒன்று (Back bench Debate) நேற்று(18) நடைபெற்றது.
இந்த விவாதத்திற்கான முன்னெடுப்புக்களை பிரித்தானியத் தமிழர் பேரவையினர், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவினூடாக (APPG forTamils) முன்னெடுத்திருந்தது. கடந்த 11ஆம் திகதி பெப்ரவரி மாதம் ந டைபெறவிருந்த இந்த விவாதமானது நாடாளுமன்றத்தில் வேறு ஒரு அவசர நிகழ்வால் மாற்றப்பட்டு நேற்றைய தினம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில் ,
“இலங்கை அரசால் தமிழ்மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளின் மிக உச்சகட்டமான முள்ளிவாய்க்கால் படுகொலையின் கொடூரத்தை நாம் அனைவரும் அறிவோம்.
இலங்கையின் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும், அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்தனர்.
1980 களில் இருந்து தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பான்மையினரான இலங்கையில் குறைந்தது 60,000 மற்றும் 100,000 மக்கள் காணாமல் போயுள்ளதாக சர்வதேச பொது மன்னிப்பு சபை மதிப்பிடுகிறது. இந்த புள்ளிவிவரங்கள் துன்பத்தின் அளவு, உண்மைகளைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை மற்றும் தீர்வுக்கான அவசரத் தேவையை வலியுறுத்துகின்றன.
உள்நாட்டுப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட கற்பழிப்பு, சித்திரவதை மற்றும் கொலை ஆகியவற்றின் கொடுமை, பெண்களின் உரிமைகளை பெருமளவில் மீறிய கதைகள், அவை நாம் ஒருபோதும் மறக்க முடியாத கதைகளாகும். எனினும், இன்று வரை சர்வதேச குற்றங்களுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.
இதேவேளை, இலங்கையில் மனித உரிமைகள் மீண்டும் மீறப்படுகின்றன. கடுமையான போர்க்கால துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பலர் அரசாங்கத்தின் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் ஏழு அமைச்சரவை பதவிகள் உட்பட ஒன்பது அமைச்சர் பாத்திரங்களை வகிக்கின்றனர். மேலும் பாதீட்டில் கால் பகுதியை நிர்வகிக்கின்றனர்.
மனித உரிமை மீறல் குற்றவாளிகளாக கருதப்படும் பாதுகாப்புப் படையின் உறுப்பினர்களில் ஒருவரான சார்ஜென்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மன்னிப்பு வழங்கியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இடிக்கப்பட்டதன் மூலம் தமிழ் மக்களுக்கு எதிரான மிரட்டல் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு வலுவான நடவடிக்கை எடுக்க ஐ.நா மனித உரிமைகள் பேரவை அழைப்பு விடுத்தது.
இது தமிழர்களின் மனித உரிமைகள் பற்றியது மட்டுமல்ல. கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களை கட்டாயமாக தகனம் செய்ய வேண்டும் என்று இலங்கை அரசு வலியுறுத்தியது. இதன் மூலம் நாட்டில் உள்ள கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமூகங்களின் மத நம்பிக்கைகளை புறக்கணித்தது.
இதனிடையே, பிரித்தானியா முழுவதும் அரை மில்லியன் தமிழர்கள் உள்ளனர். அவர்கள் ஒரு கடின உழைப்பாளி, மரியாதைக்குரிய மற்றும் அர்ப்பணிப்புள்ள சமூகம், அவர்கள் எனக்கு மிகுந்த மரியாதை செலுத்துகிறார்கள்.
அயராது உழைக்கும் ஏராளமான தமிழர்களுக்கு நாங்கள் கடன்பட்டிருக்கிறோம். நான் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி செலுத்துகிறேன்.
நல்லிணக்கத்திற்கான பாதை நீண்ட காலமாக இருந்தாலும் அவை அடையப்படும் வரை நாங்கள் நீதி மற்றும் மனித உரிமைகளுக்காக போராடுவோம் என்று சத்தமாகவும் தெளிவாகவும் கூறுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
கச்சதீவை மீண்டும் இலங்கையிடமிருந்து மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “கச்சதீவை மீண்டும் இலங்கையிடமிருந்து மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன், இராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்விடயத்தில் தமிழகத்துக்கு சாதகமான நிலையே ஏற்படும்.
“இலங்கை அரசுடன் நமது வெளியுறவுத் துறை, வேளாண்மைத் துறை மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
“ஆழ்கடல் மீன்பிடி திட்டமும், தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையிலேயே செயல்படுத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
சுயாதீன ஊடகவியலாளரான சுஜீவ கமகே கடத்தப்பட்ட துடன் சித்திரவதை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டமை ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத் தல் விடுக்கும் சம்பவம் என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.
மேலும் இது தொடர்பில் அரசாங்கம் உடனடி விசாரணை நடத்தி நாட்டு மக்களுக்கு உண்மைத் தகவலை வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அரசிடம் சுதந்திர ஊடக இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் சுதந்திர ஊடக இயக்கத்தின் அழைப்பா ளர் சீதா ரஞ்சனி,செயலாளர் லசந்த டி சில்வா ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சுஜீவ கமகே கூறிய விடயங்கள் மற்றும் அறிக்கையிடப் பட்டுள்ளமைக்கு அமைய அவர் மீரிகம நகரத்தில் வைத்தே கடத்தப்பட்டுள்ளார். ஒரு கறுப்பு நிற ஜீப்பில் அவரை ஏற்றிக்கொண்டு ,முகத்தை கறுப்பு நிறப் பையால் மூடி, வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளதுடன் அடித்து விசாரித்ததாகவும் சூடேற்றப்பட்ட இரும்புக் கம்பியால் சூடு வைக்கப்பட்டும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
அவரிடம் உள்ள சர்ச்சைக்குரிய தகவல்களைக்கொண்ட தரவு அட்டையைக் கோரி சித்திரவதை செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.அவரது வீட்டிலிருந்த இரு பென் டிரைவ்கள் மற்றும் குறித்த தரவு அட்டையைப்பெற்றுக்கொண்ட பின்னர் அவரை வெல்லம்பிட்டி பகுதியில் விடுவித்ததாகக் கூறப்படுகின்றது.
தற்போது தனக்குச் சொந்தமான வார இதழ் பதிப்பகத்தில் கடமை புரியும் சுஜீவ கமகே என்பவர் மேலும் வேறு சில வெளியீடுகள் தொடர்பில் சுயாதீன ஊடகவியலாளராக கடமையாற்றியுள்ளார். அவரிடம் காணப்பட்ட சர்ச்சைக் குரிய தரவு அட்டையை விசாரிப்பதற்கு நாடியிருந்தால் சட்டரீதியான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்.
ஆனால் அவ்வாறு ஈடுபடாமையானது குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.
இந்தக் கடத்தல் சம்பவமானது மார்ச் 10 ஆம் திகதி நடைபெற்றுள்ளது.சுஜீவ கமகே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விடயம் அறியக் கிடைத்தது மார்ச் 15 ஆம் திகதி ஆகும். குறித்த சம்பவம் தொடர்பில் தெமட்டகொட பொலிஸார் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொள்வ தாக அறிக்கையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உடனடியாக இது தொடர்பில் விசாரணை நடத்தி, எந்தக் காரணத்துக்காக இக்கடத்தல் சம்பவம் நடைபெற்றது? யாரால் கடத்தப்பட்டார்? போன்ற தகவல்களை வெளியிடுமாறு பொலிஸ்மா அதிபரிடம் ,சுதந்திர ஊடக இயக்கம் கேட்டுக்கொள்ளுவதுடன் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் தொடர்பில் தகுந்த கவனம் செலுத்துமாறும் வலியுறுத் துகின்றது
அயோத்தி ராமர் கோவில் நிர்மாண பணிகளுக்காக இலங்கையின் சீதையம்மன் ஆலையத்திலிருந்து புனித சின்னம் இந்தியாவிற்கு வழங்கும் நிகழ்விற்காக எனக்கு அழைப்புவிடுக்கப்பட்ட போது, இருநாடுகளுக்கும் இடையில் தொடர்புகளை விரிவுபடுத்துவதற்கு எவ்வளவு வழிகள் உள்ளமையை உணர்ந்து வியந்தேன்.
இதனூடாக இரு தரப்பு நீண்டகால நல்லுறவுடனான வரலாற்றில் மற்றொரு அத்தியாயம் எழுதப்படுவதை காணக்கூடியதாக இருந்தமையையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்தார்.
வெள்ளவத்தை மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விசேட நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரின் முயற்சியின் ஊடாக இந்த புனித சின்னத்தை இந்தியாவிற்கு வழங்கும் நிகழ்விற்காக எனக்கு அழைப்புவிடுக்கப்பட்ட போது, இருநாடுகளுக்கும் இடையில் தொடர்புகளை விரிவுபடுத்துவதற்கு எவ்வளவு வழிகள் இருக்கின்றன என்று வியந்தேன்.
இராமாயணத்தின் பல்வேறு கூறுகள் மற்றும் பிரிவுகள் தொடர்பில் பி.பி.தேவராஜ் அவரது உரையின் போது குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இலங்கை மற்றும் இந்தியாவின் நீண்டகால நல்லுறவுடனான வரலாற்றில் மற்றொரு அத்தியாயம் எழுதப்படுவதை காணக்கூடியதாக இருந்தமையையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
அதுமாத்திரமன்றி இதனூடாக இருநாடுகளினதும் மக்களுக்கு இடையிலான உறவிற்கும் புதிய அடித்தளமொன்று இடப்பட்டுள்ளது. இந்த நிகழ்விற்கு பின்னதாக இந்தியர்கள் பலர் சீதா-எலியவிற்கு வருகைதருவார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.
அதேவேளை அயோத்தியில் நிர்மாணிக்கப்படும் புதிய கோயிலைப் பார்வையிடுவதற்கு இலங்கையர்களும் இந்தியாவிற்குச் செல்வார்கள்.
எனவே இருநாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தக்கூடிய இந்த முயற்சிக்காக முன்நின்று செயற்பட்ட அனைவருக்கும் நன்றிகூற விரும்புகின்றேன் என்று குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஷ்ணன்
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஷ்ணன் கூறியதாவது ,
இன்றைய தினம் ஒரு முக்கியமான நிகழ்வு நடைபெறுகின்றது. இலங்கையில் உள்ள புனித சின்னமொன்று அயோத்தியில் நிர்மானிக்கப்படும் ராமர் கோயிலுக்காக அனுப்பிவைக்கப்படும் நிகழ்வாகும். இந்த வைபவம் ஆடம்பரமற்ற முறையில் நடைபெற்றாலும் கூட, இதன் பெருமை மிகவும் உயர்வானதாகும். எனவே இதற்கான முழு முயற்சிகளை எடுத்த தொழிலதிபர் முத்துக்கிருஷ்ணன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் பி.பி.தேவராஜ் மற்றும் ஆலயத்தின் அறக்காவலர் சுந்தரலிங்கம் ஆகியோருக்கு நன்றிகூற விரும்புகின்றேன்.
சுமார் 2000 வருடங்களுக்கு முன்னர் இந்தக் கோவில் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், நாங்கள் சீதா-எலிய கோவிலைப் மேம்படுத்திய போது 1908 ஆம் ஆண்டில் குறித்த புனிதக்கல் அங்கிருந்தமைக்கான சான்றுகள் உள்ளன.
அதனைத்தொடர்ந்து கோவிலின் அறங்காவலர்கள் இந்த புனித சின்னத்தை இந்தியாவிற்கு அனுப்பிவைப்பது குறித்துப் பேசியபோது, நாங்கள் அதனை ஸ்ரீ மயூராபதி ஆலயத்திற்கு நன்கொடையாக வழங்கினோம். தற்போது அவர்கள் இந்த புனித சின்னத்தை அயோத்திக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கிறார்கள்.
அதேவேளை இராமாயண கதையின் ஊடாக தற்போது மாத்திரமன்றி வரலாற்று ரீதியாகவே இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்பட்டமை உறுதியாகின்றது. சீதை இலங்கையில் சிறைவைக்கப்பட்டிருந்ததோடு, அனுமான் அவர் இருந்த இடத்தைக் கண்டறிந்ததுடன் இராமனும் இலங்கைக்கு வந்ததாக இராமாயணக்கதையில் கூறப்படுகின்றது. அனுமான் வந்ததாகக் கூறப்படும் சீதா-எலியவை அண்மித்த நிலப்பகுதியில் உள்ள மண் தற்போதும் கருநிறத்திலேயே காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது என்று கூறினார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பி.பி தேவராஜ்
இதன்போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் பி.பி தேவராஜ் கூறுகையில்,
இந்தியாவின் பாரம்பரிய சிறப்பிற்குரிய விடயமாக இராமாயணம் காணப்படுகின்றது. இது இந்தியாவிற்கு மாத்திரமன்றி ஒட்டுமொத்த உலகிற்கும், மானிட சமுதாயத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
தென்கிழக்காசிய நாடுகளான கம்போடியா, வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து, பாலி, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகியவற்றிலும் இராமாயணத்தின் வௌ;வேறு கூறுகள் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேபோன்று உலகின் பல நாடுகளிலும் வருடாந்தம் இராமாயணம் தொடர்பில் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன.
இதேவேளை, வடஇந்தியாவில் வெகுவாகப் பேசப்படுவது வால்மீகி இராமாயணம் தொடர்பிலேயே ஆகும். அதுவே இராமாயணத்தின் மூலப்பிரதியாகும்.
அதேவேளை தென்னிந்தியாவில் கம்பராமாயணம் அதிகளவில் வாசிக்கப்படுகின்றது. ஆகையிலேயே மகாகவி பாரதியார் ‘உயர் கம்பன் பிறந்த தமிழ்நாடு’ என்று பாடினார். அதேபோன்று ‘காலமெனும் ஆழியிலும் காற்று, மழை, ஊழியிலும் அழியாது கம்பனவன் பாட்டு, அது தலைமுறைக்கு எழுதிவைத்த சீட்டு’ என்று கண்ணதாசன் என்ற மற்றுமொரு கவிஞர் பாடினார். கம்பரால் எழுத்தப்பட்டவற்றை எக்காலத்திலும் எதனாலும் அழிக்கமுடியாது என்றே தமது கவிவரிகள் மூலம் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
இராமாயணத்தில் கோசல, கிஷ்கிந்தை மற்றும் இலங்கை ஆகிய மூன்று தேசங்கள் பற்றிப் பேசப்படுகின்றது. எனவே இந்தக் கதையுடன் இலங்கை மிகநெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்திக்கொள்ள வேண்டும். அதனடிப்படையில் இந்நிகழ்வு வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக அமையும் என்று நம்புகின்றேன் என்று குறிப்பிட்டார்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்தல் கண்துடைப்பு நாடகம், குறித்த விடையம் தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணி தலைவருமான சபா.குகதாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை அரசாங்கம் சந்தித்து கலந்துரையாட எடுக்கும் முயற்சி வெறும் கண்துடைப்பு ஏமாற்று நாடகமே தவிர பாதிக்கப்பட்ட தரப்புக்கு உண்மையான நீதிக்கான கதவு திறப்பாக இல்லை காரணம் ஆளும் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகப்போகின்றது தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட உறவுகள் தொடர் போராட்டங்களை தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் முன்னெடுத்து வருகின்றனர் அவர்களின் போராட்டங்களை கொச்சைப் படுத்தி இந்த அரசாங்கத்தின் முதன்மையான அமைச்சர்கள் விமர்சித்து வருகின்றனர் அவ்வாறான நிலையில் தற்போது ஐ நா மனிதவுரிமைப் பேரவையின் அறிக்கைகளை திசை திருப்பும் வகையில் இப்படியான கலந்துரையாடல்களுக்கு அரசாங்கம் தயாராகின்றது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அண்மையில் கூறினார் காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் புலிகள் அவர்கள் நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவித்தவர்கள் என பொறுப்பற்ற வகையில் தெரிவித்தார் அத்துடன் விமல் வீரவன்ச காணாமல் ஆக்கப்பட்டோர் மண்ணில் புதைக்கப்பட்டுள்ளனர் தோண்டி எடுங்கள் என கூறினார் சில மாதங்களுக்கு முன்னர். அமைச்சர் உதய கம்பன்பில கூறினார் காணாமல் ஆக்கப்பட்டோர் பலர் வெளிநாட்டில் வாழ்கின்றார்கள் என்று ஐனாதிபதி ,பிரதமர் போன்றோர் காணாமல் ஆக்கப்பட்டோர்,அரசியல் கைதிகள் என யாரும் இல்லை என கூறியுள்ளனர்.
இவ்வாறான நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் உள்நாட்டில் எங்களுக்கு நீதி கிடைக்க வாய்ப்புக்கள் இல்லை என்பதை தெளிவாக கூறி சர்வதேச விசாரணை மூலமே எங்களுக்கு நீதி வேண்டும் என்று போராடி வருகின்ற போது அரசாங்கத்தின் இவ்வாறான முயற்சிகள் பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றுகின்ற கபட நாடகம் என்பதே உண்மை.
ஐனாதிபதி உண்மையாக பாதிக்கப்பட்ட தரப்பின் கோரிக்கைகளை அறிய விரும்பினால் நேரடியாக சென்று தானே கேட்டறியலாம் ஆனால் மூன்றாம் நபரை வைத்து கையாள்வது உளப்பூர்வமான செயற்பாடாக அமைய மாட்டாது.
பாதிக்கப்பட்ட மக்களின் சாட்சியங்கள் நாளுக்கு நாள் சாவடையும் போது இன்றுவரை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் 84 பேர் நடைப்பிணங்களாக அலைந்து சாவடைந்துள்ளனர். தமிழ்த் தலைமைகள் ஒற்றுமையாக அவர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சர்வதேச நீதி கோரி திருகோணமலை மாவட்டத்தில் சிவன் கோயிலுக்கு முன்பாக முன்னெடுத்திருக்கும் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்துக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது.
குறித்த விடையம் தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் நிர்வாகச் செயலாளர் நித்தி மாஸ்டர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், ”போரின் இறுதியில் நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றுக்கு ஐ நா மனிதவுரிமைப் பேரவையில் பரிகார நீதி கிடைப்பதற்கு வாய்ப்புக்கள் இல்லை என்பதை ஐ நா மனிதவுரிமைப் பேரவையின் ஆணையாளரின் 12/02/2021 அறிக்கை தெட்டத் தெளிவாக கூறியுள்ளது.
அத்துடன் சர்வதேச நீதிப் பொறிமுறைகளின் ஊடாகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதையும் ஆணையாளர் உறுதிபடக் கூறியுள்ளார்.
இதன் பிற்பாடு பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பு உறுதியாக ஒரே நிலைப்பாட்டில் உள்ளது என்பதை தெளிவு படுத்த இப்படியான ஐனநாயகப் போராட்டங்கள் அவசியமானதுடன் அதனை அனைத்து தரப்பினரும் ஆதரித்து நீதி வேண்டிய குரலை ஓங்கி ஒலிக்கச் செய்ய வேண்டும். இந்த நிலைப்பாட்டில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் உறுதியாக பல முனைகளிலும் பணியாற்றி வருவதுடன் இனத்துக்கான நீதி பலவீனமடைவதை எந்த வகையிலும் அனுமதிக்கப் போவதில்லை.
அந்தவகையில் நடைபெறும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு எமது முழுமையான ஆதரவை வழங்குவதுடன் தமிழ்த் தேசிய சக்திகள் அனைவரையும் ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் ஏனவும் நித்தி மாஸ்டர் தெரிவித்தார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பிரித்தானியா தலைமையிலான இணைக்குழு நாடுகள் முன்வைக்கும் தீர்மானத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் கால எல்லை கடந்த செவ்வாய்கிழமையுடன் (16-03-2021) நிறைவுபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 22 ஆம் நாள் இடம்பெறவுள்ளது. பெருமளவான மேற்குலக நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவுகளை வழங்கியுள்ளன. எனினும் பாகிஸ்தான் நேரிடையாக தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, அமெரிக்கா, இந்தியா, யப்பான மற்றும் அவுஸ்திரேலியா தலைமையிலான கூட்டணி நாடுகள் சிறீலங்கா மீது கடுமையான அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. சுதந்திரமான இந்து-பசுபிக் பிராந்திய நடவடிக்கை தொடர்பில் இந்த அழுத்தங்கள் அமைந்துள்ளன.
இந்த நாடுகள் கடந்த 12 ஆம் நாள் முதல் தடவையாக கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தன.
சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் பாரப்படுத்துவதன் மூலமே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொள்ள முடியுமெனத் தெரிவித்துள்ள பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் தற்போது மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படும் 46.1 என்ற உத்தேச தீர்மானம் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுத்தராது என்றும் குற்றஞ்சாடியுள்ளார்.
தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுத்தராத இது போன்ற தீர்மானங்களை இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கும் தமது சுய நலன்களை அடிப்படையாகவும் கொண்டே வல்லரசு நாடுகள் கொண்டு வருவதாகவும் கடுமையாக சாடியுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது..
வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து தமிழினப் படுகொலைகளுக்கு நீதி கோரி தொடர் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். அதில் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் பாரப்படுத்த வேண்டுமென பிரதான கோரிக்கையாகும் முன்வைத்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கமைய மேற்படி கோரிக்கையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் மாபெரும் மக்கள் எழுச்சி பேரணி மொன்று நடாத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பிலுமொரு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ஆகையினால் அனைத்து தரப்பினரும் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனக் கோருகின்றோம்.
இலங்கையில் இடம்பெற்ற இனப் படுகொலைக்கு சர்வதேசத்திடமே தமிழ் மக்கள் நீதியை கோருகின்றனர். அதனடிப்படையிலையே இலங்கையை சர்வதேச நீதிமன்றின் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.
இவ்வாறு சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்துவதன் மூலமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகார நீதியை பெற்றுக் கொள்ள முடியும். இதனைத் தவிர்த்து தற்போது கொண்டு வரப்படும் 46.1 என்ற தீர்மானத்தால் தமிழ் மக்களுக்கான நீதி கிடைத்து விடாது. குறிப்பாக கடந்த முறை நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை விடவும் வலு குறைந்ததாகவே இந்த தீர்மானம் அமைந்துள்ளது.
ஆகையினாலே தான் சர்வதேச குற்றவியல் நீதி மன்றிற்கு பாரப்படுத்த வேண்டுமெனக் கோருகின்றோம். இதனையே ஜ.நா.வின் இன்னாள் முன்னாள் ஆணையாளர்கள் கூட சொல்லியிருக்கின்றனர்.
எனவே தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக் கொள்வதற்கு ஒட்டுமொத்த தமிழர் தரப்பும் ஒருமித்த நிலைப்பாட்டில் இந்தக் கோரிக்கையை வலுப்படுத்த வேண்டும். அவ்வாறு நாம் அனைவரும் ஒருமித்த குரலில் அல்லது நிலைப்பாட்டில் இருப்போமேயானால் அதுவே நீதிக்கான எமது கோரிக்கையை வலுப்படுத்தும் என்றார்.
ம.தி.மு.க தேர்தல் அறிக்கையை கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார்.திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது, தமிழகத்தின் வாழ்வு உரிமைகளைப் பாதுகாக்க, பல்வேறு களங்களில், போராடி வரும் ம.தி.மு.க., தொடர்ந்து மக்கள் முன்னேற்றத்துக்கு தொண்டு ஆற்ற உறுதி மேற்கொண்டுள்ளது. 2021 -ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான அறிக்கையை மக்கள் முன் வைக்கிறது.
ம.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 55 வாக்குறுதிகளை அளித்துள்ளது.
1. மாநில உரிமையை பாதுகாக்க குரல் கொடுப்போம், 2. மதசார்பின்மையை பேணுவோம், 3. சமூக நீதியை பாதுகாப்போம், 4. இந்தி, சமஸ்கிருதம் மொழி திணிப்பை எதிர்ப்போம், 5.வேளாண்மையை பாதுகாப்போம், 6. விளைநிலங்களை பாதிக்கும் திட்டங்கள் தடுத்து நிறுத்தப்படும்,7. நில அளவை சீரமைக்கப்படும்,
8. பாசனம், நீர் மேலாண்மை உறுதிப்படுத்தப்படும், 9. நதிநீர் இணைப்பு திட்டங்கள் நிறைவேற்றப்படும், 10. ஆற்றுநீர் பங்கீட்டு சிக்கல்கள் நீக்கப்படும், 11. தொழில்துறை பாதுகாக்கப்படும், 12. பொதுத்துறை காக்கப்படும், 13. மின்சார விநியோகம் சீரமைக்கப்படும். 14. தொழிலாளர் நலன் பாதுகாக்கப்படும்,
15. ஆசிரியர், அரசு ஊழியர்கள் நலன் காக்கப்படும். 16. போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும், 17. தொழிலாளர் ஈட்டுறுதிக்கழகம் அமைக்கப்படும், 18. ஊழல் ஒழிக்கப்படும், 19. ஊராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் வழங்கப்படும், 20. முழு மதுவிலக்கு கொண்டு வரப்படும்,
21. மக்கள் நல்வாழ்வுக்கு உறுதி அளிக்கப்படும். 22. மகளிர், குழந்தைகள் நலன் காக்கப்படும், 23. பிற்படுத்தப்பட்டோர் நலன் காக்கப்படும், 24. பட்டியலின பழங்குடியினர் நலன் உறுதிப்படுத்தப்படும், 25. சிறுபான்மையினர் நலன் பேணப்படும், 26. இளைஞர் மாணவர் நலன் பாதுகாக்கப்படும், 27. மீனவர் நலன் காக்கப்படும்.
28. மாற்றுத்திறனாளிகள் நலன், 29. வணிகர் நலன், 30. ஊடகத்துறை நலன், 31. மனித உரிமைகள் காக்கப்படும்.
32. கொடுங்கோன்மை சட்டங்களை எதிர்ப்போம், 33. ஈழத்தமிழர் இனப்படு கொலைக்கு நீதி பெறுவோம், 34. தமிழ் ஈழம் மலர பொது வாக்கெடுப்பு நடத்த வற்புறுத்துவோம், 35. தமிழை ஆட்சி மொழியாக்க வற்புறுத்துவோம், 36. கல்வி, 37. தமிழக ரெயில்திட்டங்கள், 38. விமான நிலையங்கள் மேம்பாடு ஆகியவை வற்புறுத்தப்படும். 39. மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
40. ஸ்டெர்லைட் ஆலை திறக்க எதிர்ப்பு தெரிவிக்கப்படும். 41. நியூட்ரினோ திட்டத்தை தொடர்ந்து எதிர்ப்போம், 42. சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும், 43. சீமைக் கருவேல மரங்கள் அழிக்கப்படும், 44. கால நிலை சட்டம் இயற்ற வலியுறுத்துவோம், 45. மணல் கொள்ளையை தடுப்போம், 46. கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு தொடரும், 47. காட்டுப்பள்ளி துறைமுகம், 48. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் காக்கப்படும், 49. தொல்லியல் ஆய்வு நடைபெறும், 50. தேர்தல் சீர்திருத்தம் கொண்டு வரப்படும், 51. சுற்றுலா வளர்ச்சி மேம்படுத்தப்படும், 52. சட்டம் நீதித்துறை சீரமைக்கப்படும், 53. வெளிநாட்டு தமிழர் பிரச்சினைகள் தீர்க்கப்படும், 54. ஏழு தமிழர்கள் விடுதலைக்காக பாடுபடுவோம், 55. அடக்குமுறை எதிர்க்க அணி திரள்வோம்.