முன்னறிவித்தலின்றி சென்ற பொலிஸார்; வாக்குமூலம் வழங்க மறுத்த வேலன் சுவாமிகள்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் முன்னெடுக்கப்பட்ட பேரணி தொடர்பில் தவத்திரு வேலன் சுவாமிகளிடம் வாக்குமூலம் பெறுவதற்காக கிளிநொச்சி பொலிஸார் இன்று யாழ். நல்லூரில் அமைந்துள்ள சிவகுரு ஆதீனத்திற்கு சென்றிருந்தனர்.

எனினும், முன்கூட்டியே அறிவிக்கப்படாமையால், இன்று வாக்குமூலம் வழங்க முடியாதென பொலிஸாருக்கு அறிவித்ததாக வேலன் சுவாமிகள் குறிப்பிட்டார்.

இலங்கை அரசாங்கம் இவ்வாறு பல்வேறு மட்டங்களில் வாக்குமூலங்களை பதிவு செய்து வருவதாக வேலன் சுவாமிகள் கூறினார்.

சட்டத்தை தாம் மதிக்கும் அதேவேளை, வாக்குமூலம் போன்ற தொடர்ச்சியான உள ரீதியான பாதிப்புகள் ஏற்படுத்தப்படுவதை வன்மையாகக் கண்டிப்பதாக அவர் தெரிவித்தார்.

1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு – வர்த்தமானி அறிவிப்பு வௌியானது!

தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 05 ஆம் திகதியில் இருந்து இந்த தீர்மானம் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபா வரை அதிகரிக்க வேண்டும் என்ற யோசனை நிதி அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது.

குறித்த யோசனையை செயற்படுத்துவதற்காக கடந்த சில மாதங்களாக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதும உடன்பாட்டுக்கு வராத காரணத்தால் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதனை சம்பள நிர்ணய சபைக்கு மாற்றினார்.

அதன்படி, தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளம் 900 ரூபாவும் மற்றும் பாதீட்டு நிவாரண கொடுப்பனவாக 100 ரூபாவுமாக 1000 ரூபாய் நாளாந்த சம்பளத்தை வழங்க கடந்த பெப்ரவரி 8 ஆம் திகதி சம்பள நிர்ணய சபையால் தீர்மானிக்கப்பட்டது.

பின்னர், அதனுடன் தொடர்புடைய ஆட்சேபனைகளை தெரிவிக்க பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், கடந்த முதலாம் திகதி சம்பள நிர்ணய சபை மீண்டும் கூடியது.

அதன்படி, தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க மேற்கொண்ட தீர்மானம் குறித்த கூட்டத்தின் போது அங்கீகரிக்கப்பட்ட நிலையில், அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தலை வௌியிடுவதாக தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்திருந்தார்.

இதற்கமைய, மார்ச் மாதம் 05 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

விமல் வீரவன்சவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை – ரிஷாட்

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி சஹரானையும் தன்னையும் தொடர்புபடுத்தி, அமைச்சர் விமல் வீரவன்ச வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாக ரிஷாட் பதியுதீன் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் குறித்த விடயம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கூறினார்.

அதன்படி அவரிடம் விசாரணை செய்து, உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு சி.ஐ.டியினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அண்மையில் வெளிவந்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலும், தனக்கும் இந்த தாக்குதல் சம்பவத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதையும் ரிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் தனது அரசியல் இருப்புக்காக இவ்வாறு அப்பட்டமான பொய்யை கூறும் விமலுக்கு எதிராக சட்டத்தரணி ஊடாக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தயாராகி வருவதாகவும் ரிஷாட் பதியுதீன் கூறினார்.

சுதந்திர சதுக்கத்தில் நாளை சத்தியாக்கிரக போராட்டம்: ஞானசார தேரரின் அதிரடி அறிவிப்பு

இஸ்லாமிய அடிப்படைவாதத்தினாலும், கிறிஸ்தவ சபைகளின் அடிப்படைவாதத்தினாலும் பௌத்த சமூதாயத்தின் இருப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. சிங்கள பௌத்தர்கள் உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு மகாநாயக்கதேரர்களுக்கு உண்டு.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்கும், பொதுபல சேனா அமைப்பினை தடை செய்ய வேண்டும் என்ற பரிந்துரைக்கும் எதிர்ப்பு தெரிவித்து நாளை வியாழக்கிழமை சுதந்திர சதுக்கத்தில் பௌத்த துறவிகளை ஒன்றிணைத்து சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுப்படவுள்ளோம். இதற்கு மகாநாயக்க தேரர்கள் ஆதரவு வழங்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் அஸ்கிரிய பீடத்திடம் கோரிக்கை விடுத்தார்.

பௌத்த நாட்டில் பௌத்த அமைப்புக்கள் அடிப்படைவாத முரண்பாடுகளை தோற்றுவிக்கின்றன. என்ற தவறான நிலைப்பாட்டை ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான விசாரணை அறிக்கை தோற்றுவித்துள்ளது. இது தவறான செயற்பாடு என்பதை அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளோம்.பௌத்த உரிமைகளை பாதுகாக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும் என அஸ்கிரிய பீட அனுநாயக்கர் நாரம்பனாவே ஆனந்த தேரர் ஞானசார தேரரிடம் தெரிவித்தார்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் நேற்று முன்தினம் கண்டி – அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் நாரம்பனாவே ஆனந்த தேரருடன் பொதுபல சேனா அமைப்பினர் பேச்சுவார்த்தையினை முன்னெடுத்தார்கள்.

இச்சந்திப்பில் போது ஞானசார தேரர் குறிப்பிட்டதாவது, ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் நாட்டில் வலுப் பெற்றுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் தன்மையை வெளிப்படுத்தியது. இஸ்லாமிய அடிப்படைவாதம் குண்டுத்தாக்குதலுக்கு பின்னர் முற்றாக அழியவடையவில்லை. என்பதை குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு வெளிப்படுத்தியது. முழுமையற்ற அறிக்கை தற்போது அரசியல் மற்றும் சமூக களத்தின் பிரதான பேசு பொருளாக காணப்படுகிறது.

நாட்டில் வலுப்பெற்று வந்த இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து பல முறை அரசாங்கத்திற்கு எடுத்துரைத்தோம். இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து பேசும் தருணத்தில் நாங்கள் இனவாதிகளாக அரசியல் தலைவர்களினால் சித்தரிக்கப்பட்டு துரதிஷ்ட வசமாக ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம் பெற்றது. குண்டுத்தாக்குதலின் உண்மை காரணிகளை கண்டறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமித்தார்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை வெளியாகியுள்ளது. குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் எவ்வித புதிய காரணிகளும், இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்கும் பொறிமுறைகளும் குறிப்பிடப்படவில்லை. மாறாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நானும்(ஞானசார தேரர்)பொதுபல சேனா அமைப்பினரும், ஒரு சில பாதுகாப்பு அதிகாரிகளும் குண்டுத்தாக்குதலின் பொறுப்புதாரிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளோம்.

இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்பட வேண்டிய தேவை பொதுபல சேனா அமைப்பிற்கு கிடையாது. பௌத்த மதத்திற்கும், பௌத்த சமூகத்திற்கும் பாதிப்பு ஏற்படும் போது அதற்கு எதிராக செயற்பட்டுள்ளோம். இதனை இனவாதம் என்று குறிப்பிட முடியாது. பௌத்த மதத்தின் உரிமைகளை பாதுகாப்பது காவி உடை தரித்த தேரர்களின் தலையாய கடமையாகும்.

இஸ்லாமிய அடிப்படைவாதமும், கிறிஸ்தவ சபைகளின் அடிப்படைவாதமும் பௌத்த மதத்திற்கும், பௌத்த சமூகத்திற்கும் பாரிய நெருக்கடியாகவே காணப்படுகிறது. இவ்விடயம் குறித்து அரசியல்வாதிகள் எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை.பௌத்த சமூகத்தின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படும் போது மகாநாயக்க தேரர்கள் குரல் கொடுத்துள்ளார்கள். விசாரணை அறிக்கையினால் பௌத்த அமைப்புகளுக்கு பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. ஆகவே இவ்விடயம் குறித்து மகாநாயக்க தேரர்கள் ஒன்றிணைந்து ஆதரவு வழங்க வேண்டும்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் பௌத்த அமைப்புக்கள் தடை செய்யப்பட வேண்டும் என்ற பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை சுதந்திர சதுக்கத்தில் பௌத்த மத தலைவர்களை ஒன்றிணைத்து சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுப்படவுள்ளோம். இதற்கு மகாநாயக்க தேரர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.என்றார.

அஸ்கிரிய பீட அனுநாயக்கர் நாரம்பனாவே ஆனந்த தேரர்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையற்றது என்பதை அரசாங்கத்திற்கு உத்தியோகப்பூர்வமாக செயற்பட வேண்டும். பௌத்த மத உரிமைகளையும், பௌத்த அமைப்புக்களையும் பாதுகாக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைத்து செயற்படுவது அவசியமாகும்.

பௌத்த நாட்டில் பௌத்த அமைப்புக்கள் அடிப்படைவாத முரண்பாடுகளை தோற்றுவிக்கிறது என்ற தவறான நிலைப்பாட்டை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இது முற்றிலும் தவறானது. தவறை திருத்திக்கொண்டு குண்டுத்தாக்குதலின் உண்மை காரணியை வெளிப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.

Posted in Uncategorized

இறுதிப் போரில் வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களை கொன்றது போர் விதியா? ரெலோ இளைஞர் அணி தலைவர் சபாகுகதாஸ்

இறுதிப் போரில், சுதந்திரபுரம் தொடங்கி வெள்ளைக் கொடி வரை நடந்தது போர் விதியா? என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், ரெலோவின் இளைஞர் அணி தலைவருமான சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றையதினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே சபா குகதாஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா நேற்றைய தினம் வெளியிட்ட செய்தியில் இறுதிப்போரில் தாங்கள் போர் விதி முறைகளை பின்பற்றியதாகவும் மனிதாவிமான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் இறுதி நடவடிக்கைகளை பார்க்காதவர்கள் போலியான போர்க்குற்றச் சாட்டுக்களை முன் வைப்பதாகவும் கூறியுள்ளார்.

உண்மையில் சுதந்திரபுரம் தொடங்கி வெள்ளைக் கொடி படுகொலை வரை நடைபெற்றது சிறிலங்கா படைகளின் போர் விதி முறையா? அல்லது சர்வதேச போர் விதி முறையா? இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண்டு இருந்த போது விசுவமடு நோக்கி சிறிலங்கா படைகள் வந்த பின்னர் பொது மக்களை சுதந்திரபுரம் பகுதியில் தங்குமாறு இப் பகுதி சூட்டுத் தவிர்ப்பு வலயம் என பிரகடனப் படுத்தி உலங்கு வானூர்தி மூலம் துண்டுப் பிரசுரங்களை வீசினார்கள் இதனை நம்பி மக்கள் ஒன்று திரண்ட பின்னர் இராணுவம் நடாத்திய தாக்குதலில் எத்தனை ஆயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

உலகில் தடை செய்யப்பட்ட வெடி குண்டான கிளஸ்டர் குண்டை(கொத்துக் குண்டு) பயன்படுத்தி ஆனந்தபுரம், இரணைப்பாலை, புதுமாத்தளன், பொக்கணை, வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால் போன்ற இடங்களில் எத்தனை ஆயிரம் மக்களை கொன்றீர்கள் இன்றும் எத்தனை பேர் ஊனமுற்றும் அதன் பகுதித் துண்டுகளை உடலில் சுமந்தவாறும் நடைப்பிணங்களாக வாழ்கின்றனர்.

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த அப்பாவிப் பொது மக்கள் மன்றாடிக் கொண்டு அபயக்குரல் எழுப்ப உங்கள் கட்டுப்பாட்டில் வைத்து சுட்டுப் படுகொலை செய்தீர்கள் இவை எல்லாம் உங்கள் அகராதியில் போர் விதிமுறையா?

இசைப்பிரியா உங்களிடம் சரணடைந்த பின்னர் உங்கள் படைகளிடம் மன்றாடி வெம்பி வெம்பி கண்ணீர் மல்க ஈவிரக்கம் இன்றி வன் கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்தமை இவை எல்லாம் மனிதாபிமான நடவடிக்கையா?

இவை தொடர்பான ஆதாரங்கள் சனல் நான்கு மூலம் வெளியிடப்பட்டும் இலங்கை அரசாங்கத்தால் ஏன் இன்றுவரை சட்ட ரீதியான தொழில் நுட்பத்தால் உண்மை இல்லை என்பதை நிரூபிக்க முடியவில்லை .சனல் நான்கு காட்சிகள் போர் விதிமுறைகளை வெளிப்படுத்துகின்றதா?

இல்லை போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தியுள்ளதா? தொடர்ந்து நீதியின் கதவுகள் நிரந்தரமாக மூடியிருக்கமாட்டாது. நிச்சயம் திறக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

வடக்கு, கிழக்கில் தொடர்ந்தும் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டங்கள் முன்னெடுப்பு

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் 10ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு அருட்தந்தை சக்திவேல் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நீதி வேண்டிய இந்த போராட்டம், நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

குறித்த போராட்டத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர், மத தலைவர்கள் என பலரும் தனது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.

குறித்த போராட்டத்தின் கோரிக்கைகளாவன, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதினூடாக இலங்கை அரசாங்கத்தினால் புரியப்பட்டுள்ள போர்க் குற்றங்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் இனத்திற்கு எதிராக இனவழிப்பு என்பவற்றிக்கு சர்வதேச நீதி வேண்டும்.

தமிழ் இனத்தின் மீதானா இனவழிப்பு தொடராது இருப்பதற்கு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளான மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த் தேசியம் என்பன அங்கிகரிக்கப்பட வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

கொரோனா மரணங்கள் 511 ஆக அதிகரித்துள்ளது

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 511 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, உடுவில் பிரதேசத்தை சேர்ந்த 81 வயதுடைய பெண் ஒருவரும், ஹொரபே பிரதேசத்தை சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவரும், அகுரணை பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் ராகமை பிரதேசத்தை சேர்ந்த 62 ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Posted in Uncategorized

ஐ.நாவில் இலங்கை விவகாரம்- மக்கள் பேரெழுச்சி இயக்கம் பிரதமர் மோடிக்கு அவசர கடிதம்

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டியமையை உள்ளடக்குவதற்கு உதவுமாறு, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம், பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரியுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம், பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ‘இந்தியாவானது உலகின் பிரதான அதிகாரத் தரப்பாகவும் மிகவும் அதிகாரம்மிக்க அயல்நாடாகவும் இருப்பதுடன் இலங்கையிலுள்ள தமிழர்கள் பற்றி மிகச் சிறந்ததொரு புரிந்துணர்வையும் கொண்டிருப்பதால் ஐக்கிய இராச்சியம், கனடா, ஜேர்மனி, மொன்ரினேக்றோ மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகளால் இணைந்து சமர்ப்பிக்கப்பட்ட 2021ம் ஆண்டு மாசி மாதம் 19ம் திகதியிடப்பட்ட ‘பூச்சிய வரைவு’ என அழைக்கப்படுகின்ற ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டியமையை உள்ளடக்குவதற்கு உதவுமாறு கோருகின்ற மேன்முறையீட்டின் பொருட்டு இதனை நாம் வரைகிறோம்.

இந்நாடுகள் இத்தீர்மானத்தை வரைந்தபோது பாதிக்கப்பட்டோரை கலந்தாலோசிக்கக் கூடவில்லை என்பதுடன், அவை தன்னிச்சையாக வரையப்பட்ட இப் ‘பூச்சிய வரைவு’ தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்க முன்னர் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட இணைந்த மேன்முறையீகளையும் புறக்கணித்துள்ளன.

இந்தியா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஓர் உறுப்பினராக இருப்பதால் ‘பூச்சிய வரைவு’ தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டியமையை உள்ளடக்குவதற்குப் பரிந்துரை செய்வதற்கான சகல உரிமைகளையும் தாங்கள் கொண்டுள்ளீர்கள்.

பாதிக்கப்பட்டோராகவும் பாதிக்கப்பட்டோரின் பிரதிநிகளாகவும் ‘பூச்சிய வரைவு’ தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டியமையை உள்ளடக்குவதற்கு உதவுமாறு தங்களிடம் நாம் மேன்முறையீடு செய்கிறோம்.

இப் ‘பூச்சிய வரைவு’ தீர்மானமானது இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் புரியப்பட்ட தமிழ் மக்களை கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்தமை மற்றும் தமிழ்ப் பெண்களைப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியமை அடங்கலான கொடூரமான குற்றங்களினால் பாதிக்கப்பட்டோரின் அடிப்படை எதிர்பார்ப்புக்களையேனும் பூர்த்தி செய்யவில்லை.

இந்நிலவரத்தின் தீவிரத் தன்மையின் காரணமாக தமிழர்கள் ஒன்றிணைந்து ஒரு மாதத்திற்கு முன்னர் 2021ம் ஆண்டு தை மாதம் 15ம் திகதியன்று, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டியமையை வலியுறுத்தி, கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர்.

இவ்வழைப்பானது வடக்கு- கிழக்கு சிவில் சமூகத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை என்றழைக்கப்பட்ட அண்மைய பேரணியில் பங்குபற்றிய பல்லாயிரக் கணக்காக தமிழர்களினால் மேலும் வலுச்சேர்க்கப்பட்டிருந்தது.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தாமல் விடுதலானது கொடூரமான குற்றங்களைப் புரிந்தோர் நீதியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு வழிகோலுவதுடன் மாத்திரமல்லாது, அது இலங்கையின் அரசியற் தலைவர்களும் பாதுகாப்புப் படைப் பிரதானிகளும் தாம் நீதிக்கு முகங்கொடுக்கத் தேவையில்லை என்பதை நன்கறிந்து கொண்டு, எதுவிதத் தயக்கமும் இல்லாமல் தமிழ் மக்களிற்கு எதிரான சர்வதேசக் குற்றங்களைப் புரிவதற்கான துணிச்சலையும் ஏற்படுத்திவிடும்.

எனவே இலங்கையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தாமல் விடப்படின், தமிழ் மக்கள் எதிர்கொள்ளவல்ல இந்த அபாயத்தைத் தீவிரமாகக் கவனத்திற் கொள்ளுமாறு நாம் தங்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் தற்போதைய உயர் ஆணையாளராகிய மிச்சேல் பச்சலெட் , 2021ம் ஆண்டு தை மாதம் 27ம் திகதியிடப்பட்ட தனது அறிக்கையில், இலங்கையிலுள்ள நிலவரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டியமையை நோக்காகக் கொண்டு நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையிடம் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், ஐ.நா. மனித உரிமைகளுக்கான நான்கு முன்னாள் உயர் ஆணையாளர்கள், ஒன்பது சுயாதீன ஐ.நா.நிபுணர்கள் மற்றும் இலங்கை சம்பந்தமான ஐ.நா.செயலாளர் நாயகத்தின் வல்லுநர்கள் குழுவின் சகல உறுப்பினர்களும் அடங்கலாக இருபது முன்னாள் ஐ.நா.அதிகாரிகள் ‘யுத்த விதைகளை விதைத்தல்’ எனத் தலைப்பிடப்பட்டு, 2021ம் ஆண்டு மாசி மாதம் 18ம் திகதி வழங்கிய தமது அறிக்கையில் இலங்கையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையானது தனது நீதித்துறை நிறுவனங்களை அதனுடைய பாதிப்புற்றோரிற்காகச் செயற்பட முடியாதவையாக ஆக்கியுள்ளது என்பதே கருத்திற் கொளள்ளப்பட வேண்டிய விடயமாகும்.

எனவே, சர்வதேச அல்லது வெளிப்புற நியாயாதிக்கத்தினூடாக நீதியை நிலைநாட்டுவதன் பொருட்டு பாதிப்புற்றோருக்கும் அவர்களுடைய பிரதிநிதிகளுக்குமாகப் பணியாற்றுவதற்காக உயர் ஆணையாளரின் பரிந்துரைகளை நாம் மீள வலியுறுத்துகிறோம். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போன்ற பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச வழிவகைகள் கருத்திற் கொள்ளப்படுதல் வேண்டும்’ எனக் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வலுவான தீர்மானத்திற்கு ஆரவு வழங்க ஸ்கன்டநேவியன் நாடுகள் இணக்கம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்கப்படும் சிறீலங்கா தொடர்பான தீர்மானம் வலுவான சரத்துக்களை கொண்டதாக இருந்தால் ஸ்கன்டநேவியன் பிராந்திய நாடுகளான நோர்வே, டென்மார்க் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் ஆதரவு வழங்கும் என அந்த நாடுகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் 24 ஆம் நாள் வாக்கெடுப்புக்கு வரவுள்ள சிறீலங்கா தொடர்பான தீர்மானத்தின் இறுதி வரைபு நாளை புதன்கிழமையே (10) தயாராகும் எனவும் அது தொடர்பான கலந்துரையாடல்கள் பல நாடுகளின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்று வருவதாகவும் பிரித்தானியா நேற்று (8) தெரிவித்துள்ளது.

தீர்மானத்தின் இறுதி வரைபு தொடர்பில் பிரித்தானியா பல நாடுகளின் பிரதிநிதிகளுடன் சுழற்சி முறையிலான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றது.

எனினும் தீர்மானம் வலுவற்றதாக உள்ளதாகவும், அதில் வலுவாக சொற்கள் சேர்க்கப்பட்டால், மேற்குலக நாடுகள் குறிப்பாக ஸ்கன்டநேவியன் நாடுகள் தமது ஆதரவுகளை வழங்கும் என அந்த நாடுகளின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ரஸ்யா, சீனா, கியூபா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் சிறீலங்காவுக்கு ஆதரவை வழங்கி வருகின்றன. இந்தியாவின் ஆதரவை பெறுவதற்கு சிறீலங்கா முயன்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பல ஆண்டுகளாக தனது விடுதலைக்கு போராடிய கியூபா தற்போது ஒரு இனஅழிப்பு நாட்டுக்கு ஆதரவாக செயற்படுவது தமிழ் மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

சுவிஸ் தூதரக ஊழியருக்கு எதிராக குற்றப் பத்திரம் தாக்கல்

2019 நவம்பர் மாதம் தான் கடத்தப்பட்டதாக கூறி, பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததாக சிறீலங்காவில் உள்ள சுவிஸ் துாதரக ஊழியர் ஊழியர் கனியா பெனிஸ்டர் பிரான்ஸிஸஸிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள சுவிஸ் துாதரகம் 2019 நவம்பர் மாதம் தங்கள் ஊழியர் கனியா பெனிஸ்டர் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாகவும் துாதரகம் தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு அச்சுறுத்தியாதாகவும் அரசாங்கத்திடம் முறைப்பாடு அளித்தது.

இது தொடர்பான விசாரணைகளின் பின்னர் சுவிஸ் துாதரக ஊழியர்களின் குற்றச்சாட்டுக்களானது ஆதாரமற்றது என கண்டறியப்பட்டதாகவும் கனியா பெனிஸ்டர் 2019 டிசம்பர் 16ம் திகதி கைது செய்யப்பட்டு பின்னர் டிசம்பர் 30ம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized