குருந்தூர் மலை அகழ்வாராய்ச்சியில் திடீர் திருப்பம்: தாரா லிங்கம் கண்டுபிடிப்பு!

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர்மலையில் தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் பகுதியில் சிவலிங்கத்தை ஒத்த தொல்லியல் சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பில் இன்று புதன்கிழமை(10) சிங்கள நாளிதழான தினமின செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம்-18 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவால் குருந்தூர் மலையில் குருந்தாவசோக புராதன விகாரையின் சிதைவுகள் இருப்பதாகத் தெரிவித்து தொல்லியல் ஆய்வுப்பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தன.

இதேவேளை, இவ்வாறு மீட்கப்பட்ட தொல்லியல் சிதைவுகளில் காணப்படும் சிவலிங்கத்தை ஒத்த உருவம் பல்லவர்கால எட்டுப்படை தாரா லிங்கம் எனப் பலராலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஒத்த பல தாராலிங்கங்கள் (எட்டுப் பட்டை லிங்கம்) தமிழகத்தில் காணப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

சீன வங்கியிடமிருந்து 180 மில்லியன் கடன்

சீனாவின் ஆசிய உட்கட்டமைப்பு வசதிகளுக்கான முதலீட்டு வங்கியிடமிருந்து 180 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்காக அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளது.

இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஊடாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறையினருக்கு ஒத்துழைக்கும் வகையிலான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க இக்கடனுதவி பயன்படவுள்ளது.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியின் நோக்கம் மளுங்கடிக்கப்பட்டுள்ளது – கஜேந்திரகுமார்

இலட்சக்கணக்கான தமிழ் மக்களை ஒன்றிணைத்து பொத்துவில் முதல் பொலிகண்டி வரை முன்னெடுக்கப்பட்ட எழுச்சி பேரணியின் உண்மை நோக்கத்தை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மறைத்து 10 அம்ச கோரிக்கைகளை மாத்திரம் பாராளுமன்றிரல் ஏதோ அரசாங்கத்திடம் முன்வைக்கும் கோரிக்கையாக முன்வைத்துள்ளார்.

இச்செயற்பாடு பேரணியில் ஈடுபட்ட மக்களுக்கு இழைக்கும் துரோகமாகவே கருதப்படும்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி வெறும் 10 அம்ச கோரிக்கைகளை மாத்திரம் உள்ளடக்கியுள்ளதா என்பது குறித்து வடக்கிழக்கு தமிழ் சமூக சம்மேளனம் விசாரணை நடத்தி தகுந்த பதிலை கூற வேண்டும்.

நேரத்திற்கேற்றாற் போல் செயற்படும் கூட்டமைப்பினருடன் இணைந்து தமிழர் உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுக்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழ் பிரச்சினைக்கான தீர்வு, தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை நிறுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த வாரம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் எழுச்சி பேரணி முன்னெடுக்கப்பட்டது

பேரணியை தடுக்க அரசாங்கம் முன்னெடுத்த முயற்சிகள் அனைத்தும் தோற்கடிக்கப்பட்டு போராட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது. போராட்டத்தில் தமிழ்- முஸ்லிம் என இலட்சக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டார்கள்.

எழுச்சி பேரணியின் அடிப்படை கொள்கையினை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மூடி மறைத்து வெறும் 10 அம்ச கோரிக்கைகளை ஏதோ அரசாங்கத்திடம் முன்வைக்கும் வகையில் முன்வைத்துள்ளார்.

பேரணியின் முக்கியமான கொள்கை குறித்து அவர் குறிப்பிடவில்லை. இலங்கை அரசாங்கத்திடம் தீர்வை பெறுவதற்கான குறித்த பேரணி ஏற்பாடு செய்யப்படவில்லை. சர்வதேச நாடுகளின் பார்வை ஈர்க்கப்பட வேண்டும் என்பதேபிரதான நோக்கமாக காணப்பட்டது.

இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் மாத்திரமே தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்ற விடயம் முன்வைக்கப்படவில்லை.

அரசாங்கத்தை பகைத்துக் கொள்ள கூடாது என்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பேரணியில் கலந்துக் கொண்டவர்களுக்கு துரோமிழைத்துள்ளார்.

பொத்துவில்- பொலிகண்டி எழுச்சி பேரணி வெறும் 10 அம்ச கோரிக்கைகளை மாத்திரம் உள்ளடக்கியதா , பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இப்பேரணி குறித்து பாராளுமன்றில் ஆற்றிய உரை ஆகியவை தொடர்பில் வடக்கிழக்கு தமிழ் சிவில் சமூக சம்மேளனம் விசாரணை நடத்தி தகுந்த பதிலை வழங்க வேண்டும்.

தேவைக்கேற்ப செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் இணைந்து தமிழர் விவகாரத்தில் தீர்வை பெறும் போராட்டத்தில் இனி ஒன்றினைய முடியாது.

இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம் பெற்றமனித உரிமை மீறல் குற்றங்களுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் ஒருபோதும் தீர்வை பெற்றுக் கொள்ள முடியாது.

சர்வதேச நீதிமன்றின் ஊடாகவே தீர்வை பெற முடியும்.அந்த இலக்கை நோக்கி நகர்வதே எமது முயற்சியாகும்.இனப்பிரச்சினைக்கு தீர்வை காண இலங்கையில் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களுடன் இணக்கமாக செயற்பட தயார் என்றார்.

Posted in Uncategorized

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் அங்குரார்ப்பணம்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் இன்று யாழில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த இயக்கத்தை அங்குரார்ப்பணம் செய்து வைப்பதாக தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் எழுச்சிப் பேரணி எழுச்சியுடன் வெற்றிகரமாக நிறைவடைந்து இருக்கின்ற நிலையில் தற்போது அது பேரெழுச்சி இயக்கமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

ஏற்பாட்டாளர்கள் தரப்பில் வேலன் சுவாமிகள், லியோ பாதிரியார், மட்டக்களப்பு சிவில் அமைப்பின் சிவயோகநாதன் ஆகியோர் யாழ் ஊடக அமையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தனர்.

அந்த அமைப்பின் ஊடக அறிக்கை வருமாறு-

Posted in Uncategorized

இலங்கை விவகாரத்தை ஜெனிவாவில் விரிவாக ஆராய வேண்டும்: சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போது இலங்கையில் இடம்பெற்ற திட்டமிட்ட குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், வலிந்து காணாமலாக்கப்படல், வலுவிழந்துள்ள சட்டத்தின் ஆட்சி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட வேண்டும் என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வலியுறுத்தியிருக்கிறது.

எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் விவாதிக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பான அறிக்கையினை இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்புடன் இணைந்து சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வெளியிட்டிருக்கிறது.

திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் அவை தொடர்பில் விசாரணை செய்வதில் தோல்வியடைந்த கட்டமைப்புக்கள், தற்போது இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் (வன்முறைகள், தன்னிச்சையான கைது நடவடிக்கைகள், தடுத்துவைக்கப்பட்டுள்ள போது இடம்பெறும் இறப்புக்கள்), வலிந்து காணாமலாக்கப்படல், கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சி, முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் ஆகிய விடயங்கள் தொடர்பில் மேற்படி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பாரிய மனித உரிமை மீறல் குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதற்கான 30/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் கடப்பாட்டிலிருந்து இலங்கை அரசாங்கம் தவறியுள்ளமை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச சட்டங்களுக்கு முரணான குற்றங்கள் தொடர்பில் நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்யாமை மாத்திரமன்றி, சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்றமை குறித்தும் கூறப்பட்டுள்ளது என்று மேற்படி இரு அமைப்புக்களும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

மியான்மர் தமிழர்களின் கதை: ராணுவத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் 10 லட்சம் தமிழர்களின் குமுறல்கள் – பிபிசி தமிழ்

பிப்ரவரி 1, திங்கட்கிழமை காலை 7 மணி, எப்போதும் போல விழித்து, கையில் அலைபேசியை எடுத்த மியான்மர் மக்களுக்கு தூக்கிவாரிப்போட்டது. தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டதால் யாரையும் அழைக்க முடியவில்லை, ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களை பயன்படுத்த இணையமும் இல்லை.

போலிச் செய்திகள் வாட்சாப், ஃபேஸ்புக் உள்ளிட்ட செயலிகள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாகவும் மட்டுந்தான் பரவுமா என்ன? மக்கள் பலரும் தங்களின் அச்சத்துடன் போலிச் செய்திகளையும் பகிர தொடங்கியதால், நாட்டில் என்ன நடக்கிறது? 2015ஆம் ஆண்டு முதல் மீண்டு வந்த நமது வாழ்க்கை ஒரே இரவில் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டதா? என்று மியான்மர் மக்கள் பரிதவிக்க தொடங்கினர்.

அதே நாள் மதியம் 12 மணி முதல், தொலைத்தொடர்பு சேவை படிப்படியாக பயன்பாட்டுக்கு வந்தது. மியான்மர் மக்கள் எது நடந்திருக்கக் கூடாது என்று நினைத்தார்களோ அது நடந்துவிட்டது. ஆம், 1962ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை ராணுவத்தின் ஆட்சியில் உரிமைகளை இழந்து, இயல்பு வாழ்க்கைக்கே அல்லல் பட்ட மக்கள், 2015ஆம் ஆண்டு முதல் சுவாசிக்க தொடங்கிய சுதந்திர காற்று அடைக்கப்பட்டது என்று தெரியவந்ததாக பதறுகிறார் மியான்மரின் யாங்கோன் (ரங்கூன் என்றும் அழைக்கப்படுகிறது) நகரை சேர்ந்த பர்மிய திரைப்பட இயக்குநரும், தமிழருமான சுந்தர்ராஜ்.

மியான்மரில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்வதாக கருதப்படுகிறது. குறிப்பாக, யாங்கோன் என்ற நகரத்தில் மட்டும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களும், பக்கோ, மூன், கரீன், ஏராவடி உள்ளிட்ட மாநிலங்களிலும் தமிழர்கள் பெருமளவில் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு இன்றளவும் தமிழ் மொழி பேசப்பட்டு, கலாசாரமும், பாரம்பரியமும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக அங்கு நிலவி வரும் அசாதாரணமான சூழ்நிலை குறித்து தமிழர்களின் பார்வையில் அறிவதற்காக மியான்மரில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் சில தமிழர்களுடன் பிபிசி தமிழ் பேசியது.

ராணுவ ஆட்சி Vs மக்களாட்சி – ஒரு ஒப்பீடு

1962 முதல் 2011 வரை என சுமார் 49 ஆண்டுகளுக்கு மியான்மரை ராணுவம்தான் ஆட்சி செய்தது என்பதால், அது அந்த நாட்டு மக்களுக்கு புதிதல்ல. எனினும், கடந்த ஆறு ஆண்டுகளாக சுவாசித்து வந்த சுதந்திர காற்று ஒரே இரவில் முடிவுக்கு வந்தது என்பது, கண் தெரியாத, வாய் பேச முடியாத, காது கேட்காத ஒருவரை அடர்ந்த காட்டுக்குள் தனியாக அடைத்தது போன்றுள்ளதாக மக்கள் கருதுகிறார்கள்.

ராணுவ ஆட்சியின்போது, ‘உங்களுடன் பேச வேண்டும்’ என்று கூறி அழைத்து செல்லப்பட்ட பெரும்பாலானோரை பத்து அல்லது இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு மீண்டும் பார்க்க முடியாத சூழல் 2011ஆம் ஆண்டுக்கு முன்புவரை நிலவி வந்ததாகவும், அது மீண்டும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் இயல்பு வாழ்க்கையை முடக்குவதாகவும் கூறுகின்றனர்.

மேலும், நீதித்துறை, கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் ராணுவத்தின் ஆட்சியில் பாரபட்சம் காட்டப்பட்டதாகவும், அந்த நிலைமை படிப்படியாக மாறி வந்த வேளையில் அவை மீண்டும் கனவுபோல் மாறிவிட்டதாகவும் வேதனைப்படுகிறார் சுந்தர்ராஜ்.

“எங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கடந்த ஒரு வாரமாக தினமும் இரவு எட்டு மணிக்கு வீட்டிலுள்ள பாத்திரங்களை கொண்டு ஒலியெழுப்பி வந்தோம். மக்களாட்சிக்கு ஆதரவான இந்த ஒற்றுமை ஒலி, உணர்ச்சிவசப்பட்டு எங்களது கண்களில் கண்ணீரை வரவைக்கிறது. ஆனால் ராணுவமோ, இதுபோன்று ஒலியை எழுப்புவதாக யாராவது ஒருவர் புகாரளித்தாலும், ஊரிலுள்ள அனைவரையும் சிறையில் தள்ளிவிடுவோம் என்று எச்சரிக்கை விடுக்கிறது. நாங்கள் எங்களது விருப்பு, வெறுப்பை அமைதியான வழியில் வெளிப்படுத்துவதற்கு உரிமை கிடையாதா?” என்று கேள்வியெழுப்பும் அவர், எனினும் மக்கள் ராணுவத்துக்கு அஞ்சாமல் தொடர்ந்து பாத்திரங்களை கொண்டு ஒலியெழுப்புவதை தொடர்வதாக கூறுகிறார்.

கொரோனா காலத்தில் இணையத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதன் வழியே வர்த்தகம் மேற்கொள்ளவும், சந்தைப்படுத்தவும், கல்வி கற்கவும் என எண்ணற்ற புதுமைகளை வாழ்க்கையில் புகுத்திக்கொள்ள மக்கள் முயற்சித்து வந்த காலகட்டத்தில் தங்களது ஜனநாயக உரிமைகள் மீண்டும் பறிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

மியான்மரில் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்த முதல் நாளன்று சில மணிநேரங்களுக்கு அமலில் இருந்த தொலைத்தொடர்பு கட்டுப்பாடுகள், நாட்கள் செல்ல செல்ல விரிவடைந்து, ஒரு கட்டத்தில் நாடுமுழுவதும் இணைய சேவை முடக்கப்பட்டது. ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களும் தடை செய்யப்பட்டன.

49 ஆண்டுகால ராணுவ ஆட்சியில் உரிமைகள் பறிக்கப்பட்டு, சொத்துகள் முடக்கப்பட்டு, கல்வி – வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு, அநீதி இழைக்கப்பட்டு வாழ்ந்த நாட்கள் இனி ஒருபோதும் திரும்ப கூடாது என்று ஒவ்வொரு நாளும் மியான்மர் மக்கள் வேண்டிக்கொள்வதாக கூறுகிறார் சுந்தர்ராஜ்.

தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்

மியான்மரில் முந்தைய ராணுவ ஆட்சியின்போதும், இப்போதும் மியான்மரில் வாழும் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து அறிய முற்பட்டோம். அப்போது, மியான்மர் வாழ் தமிழர்களான இயக்குநர் சுந்தர்ராஜ் மற்றும் வழக்குரைஞரான அகத்தியன் ஆகிய இருவரும் வித்தியாசமான ஒருமித்த பார்வையை வெளிப்படுத்தினர்.

அதாவது, தமிழர்கள் பல்வேறு காரணங்களுக்காக பல நூறாண்டுகளுக்கு முன்னதாக மியான்மருக்கு வந்ததாகவும், இப்போது அங்கு வசிக்கும் தமிழர்கள் அனைவரும் தங்களை ‘தமிழர்கள்’ என்று அழைத்துகொள்வதில் எந்தளவுக்கு பெருமிதம் கொள்கிறார்களோ, அதே அளவுக்கு தாங்கள் ‘மியான்மர் குடிமகன்’ என்றும் ‘மியான்மர் தமிழர்’ என்றும் கூறிக்கொள்வதிலும் பெருமிதமடைவதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும், மியான்மர் நீண்டகாலமாக சந்தித்து வரும் அனைத்து பிரச்சனைகளிலும் தமிழர்கள் தனித்திருக்காது, நாட்டின் உரிமைக்காக மற்றனைத்து சமுதாயத்தினருடன் ஒன்றிணைந்து போராடுவதையே நோக்கமாக கொண்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

“1962ஆம் ஆண்டு மியான்மரில் ஏற்பட்ட மிகப் பெரிய கலவரம் மற்றும் அதைத்தொடர்ந்த அச்சத்தின் காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கப்பல்களில் தமிழகத்துக்கு திரும்பினர். அப்போது மியான்மரையே தங்களது தாய்நாடாக கருதியவர்கள் இன்று வரை அந்த கருத்தில் உறுதியாக உள்ளனர்” என்று சுந்தர்ராஜ் கூறுகிறார்.

“மற்ற இனத்தை சேர்ந்தவர்களை போலவே, தமிழர்களும் மியான்மரில் எண்ணற்ற துன்பங்களுக்கு உள்ளாகி உள்ளனர். குறிப்பாக, தமிழர்கள் வசித்து வந்த நிலங்கள் காரணம் ஏதுமின்றி பறிக்கப்பட்டு உள்ளது. ராணுவ ஆட்சியில், வேலைவாய்ப்பு, கல்வி என எங்கு சென்றாலும் தமிழர்களுக்கு சமஉரிமை என்ற பேச்சுக்கே இடமில்லை.”

இதில் மிகவும் மோசமான விடயம் என்னவென்றால், மியான்மரின் மீது மிகுந்த தேசப்பற்றை வெளிப்படுத்தும் அங்கு வாழும் தமிழர்கள், அந்த நாட்டின் குடிமகனாகவே பெரும்பாலான நேரங்களில், இடங்களில் அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதுதான். அதாவது, மியான்மரின் குடிமகனுக்கு உரிய சலுகைகளை பெற தேவையான தேசிய அடையாள அட்டை, 90 சதவீதத்துக்கும் அதிகமான தமிழர்களுக்கு இன்னமும் கூட கொடுக்கப்படவே இல்லை என்று கூறுகிறார் சுந்தர்ராஜ்.

இதன் காரணமாக, மியான்மர் தமிழர்கள் சிறந்து கல்வியை பெற்று, நல்ல பணியில் இருப்பது என்பது அரிதான ஒன்றாக உள்ளதாகவும் அவர் கூறுகிறார். “மியான்மரில் தமிழர்களை மருத்துவராக, பொறியாளராக, அரசு ஊழியராக பார்ப்பதென்பது மிகவும் அரிது. தமிழர்கள் பெரும்பாலும் தூய்மை பணியாளர்கள், உதவியாளர்கள் என கடைநிலை ஊழியர்களாகவே இன்னமும் நீடிக்கின்றனர். இதற்கு தேசிய அடையாள இல்லாததால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை மறுக்கப்படுவது மிக முக்கிய காரணமாகும்.”

எனினும், 2015ஆம் ஆண்டு ஆங் சாங் சூச்சி ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழர்கள் உள்ளிட்ட மற்ற நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்தவர்களுக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கும் பணிகள் தொடங்கியதாக கூறப்படுகிறது.

மியான்மரின் ‘அம்மா’

2015ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, எங்கு சென்றாலும், எதை செய்தாலும் “எங்களை வேற்றுமைப்படுத்துகிறார்களே” என்ற எண்ணம் மியான்மர் தமிழர்களிடத்தில் நிலவி வந்ததாகவும், அந்த உணர்வு ஆங் சாங் சூச்சி ஆட்சிக்கு வந்ததும் முற்றிலும் மாறியுள்ளதாகவும் கூறும் சுந்தர்ராஜ், சூச்சியை மியான்மரின் ‘அம்மா’ என்று குறிப்பிடுகிறார்.

“வலுவான குடும்ப பின்னணி, வெளிநாட்டு கல்வி என்று வாழ்ந்து கொண்டிருந்த ஆங் சான் சூச்சி, மியான்மர் மக்கள் படும் துன்பத்தை பார்த்து நாட்டுக்கு திரும்பி வந்தார். ‘ராணுவ ஆட்சியே நமது வாழ்க்கை, இதுவே இயல்புநிலை’ என்று இருந்த மக்களுக்கு சுதந்திரம் என்பதன் அர்த்தத்தை கற்பித்தது மட்டுமின்றி, அதை அடைவதற்கு காந்தியின் அகிம்சை வழியிலேயே போராட வேண்டுமென்று சொல்லிக் கொடுத்து, எங்களுக்கும் நல்ல காலம் பிறகும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினார்.”

“எங்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்திய ஆங் சாங் சூச்சியை 20 ஆண்டுகளுக்கு மேல் வீட்டுக் காவலில் வைத்தது ராணுவம். மக்களுக்காகவே தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை கழித்த அவர் மியான்மருக்கே ‘அம்மா’ ஆவார். அவர் வழங்கிய அறிவுரை, ஏற்படுத்தி கொடுத்த திட்டங்களை கொண்டே நாங்கள் கடந்த ஆறாண்டுகளாக, கொரோனா உள்ளிட்ட பிரச்சனைகளையும் தாண்டி நம்பிக்கையுடன் வாழ்க்கையை நடத்தி வந்தோம்” என்று சுந்தர்ராஜ் கூறுகிறார்.

மியான்மரில் பல மொழிகள் பேசப்பட்டாலும், பர்மிய மொழியே அனைத்து மட்டங்களிலும் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. குறிப்பாக, பர்மிய மொழியை மட்டுமே மையமாக கொண்ட மியான்மரின் திரைத்துறை, மிகுந்த கட்டுப்பாடுகளுடன் இயங்குவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பர்மிய திரைத்துறையில் 35 ஆண்டுகளுக்கு முன்பு கடைநிலை ஊழியராக தொடங்கி, இன்று 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவராக சுந்தர்ராஜ் விளங்குகிறார்.

“மியான்மர் வரலாற்றில் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு பிறகு அரசியல் சார்ந்த திரைப்படத்தை எடுத்தது நான்தான். 2019ஆம் ஆண்டு ‘சிட்டிசன்’ என்ற பெயரில் வெளியான அந்த திரைப்படத்தில் ராணுவ ஆட்சியின் கோர முகத்தை வெளிப்படுத்தி இருந்தேன். இதுகுறித்து கேள்விப்பட்ட ஆங் சாங் சூச்சி என்னையும், படக்குழுவினரையும் அழைத்து பாராட்டு தெரிவித்து, தானும் திரைப்படத்தை பார்ப்பதற்கு ஆவலாக இருப்பதாக கூறினார்” என்று ஆங் சாங் சூச்சியின் பாராட்டை பெற்ற தருணத்தை விவரிக்கிறார் சுந்தர்ராஜ்.

ஆங் சாங் சூச்சியும் ரோஹிஞ்சா முஸ்லிம்களும்

ஆங் சாங் சூச்சியால் மட்டுமே மியான்மரில் மக்களாட்சியை சிறப்பாக நடத்திட முடியும் என்பது போன்ற கருத்தை அங்கு வாழும் தமிழர்கள் முன்வைத்தாலும், ரோஹிஞ்சா முஸ்லிம்கள் விவகாரத்தில் அதே ஆங் சாங் சூச்சி மீதுதான் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு சர்வதேச விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில், இந்த விவகாரத்தை புரிந்துகொள்ள வேறுபட்ட கண்ணோட்டம் தேவைப்படுவதாக கூறுகிறார் அங்கு வாழும் வழக்கறிஞரான அகத்தியன். “மியான்மரில் 2015ஆம் ஆண்டு மக்களாட்சி அரசாங்கம் ஆட்சியை அமைத்தாலும், ராணுவத்தின் கட்டுப்பாட்டு பெரும்பாலான இடங்களில் எப்போதும் இருந்துகொண்டே இருந்தது. குறிப்பாக, உள்துறை, பாதுகாப்புத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் அனைத்தும் ராணுவத்தின் நேரடி கட்டுப்பாட்டிலேயே இருந்தன. எனவே, அந்த துறை சார்ந்த நடவடிக்கைகளில் சூச்சி தலைமையிலான அரசால் தலையிடவோ அல்லது தாக்கம் செலுத்தவோ இயலவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், ரக்கைன் மாநிலத்தில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது இனஅழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும், இங்குள்ள சூச்சி தலைமையிலான அரசு செய்ததை போன்று சர்வதேச சமூகத்தின் கண்களுக்கு தெரிந்தன” என்று கூறுகிறார்.

மேலும், இந்த விவகாரத்தில் உள்ளூர் ஊடகங்கள் ஒருவிதமான செய்தியையும், சர்வதேச ஊடகங்கள் வேறுவிதமான செய்தியையும் வெளியிட்டதாக கூறும் அகத்தியன், ஊடகங்கள் தங்களுக்குள் செய்திகளை பரிமாறிக்கொள்வதில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாகவே இந்த விவகாரத்தில் வெளியுலகத்துக்கு தவறான புரிதல் ஏற்பட்டதற்கு காரணம் என்று தான் கருதுவதாக கூறுகிறார்.

அதுமட்டுமின்றி, தன்னைப் பொறுத்தவரை, ரோஹிஞ்சா முஸ்லிம்கள் இன அழிப்பு குற்றச்சாட்டில், ஆங் சாங் சூச்சிக்கோ அல்லது அவரது அரசுக்கோ தொடர்பில்லை என்றும், அவர் இனஅழிப்பை ஆதரிக்கவில்லை என்றும் நம்புவதாக கூறுகிறார்.

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த நாடுமுழுவதும் கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் போராட்டங்களில் தானும் ஈடுபட்டு வருவதாக அகத்தியன் கூறுகிறார்.

 

என்னதான் தீர்வு?

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்தபோது உலகமே அதை உற்றுநோக்கிக் கொண்டிருந்தது. அதே காலகட்டத்தில், அதாவது நவம்பர் 8ஆம் தேதிதான் மியான்மரில் பொதுத்தேர்தல் நடைபெற்று, அதில் பெரும்பான்மையான வாக்குகளை பெற்று, ஆங் சாங் சூச்சி தலைமையிலான ஜனநாயக தேசிய லீக் கட்சி ஆட்சியை தக்க வைத்தது.

ஆனால். எப்படி அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது, அதில் முறைகேடுகள் நடந்ததாக அப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தாரோ, அதேபோன்று மியான்மரில் சூச்சியின் கட்சி மீது ராணுவம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஆதாரம் ஏதுமின்றி முன்வைத்தது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த சுந்தர்ராஜ், “முன்னெப்போதுமில்லாத வகையில், முன்கூட்டியே திட்டமிட்டு, சிறப்பான முறையிலேயே தேர்தல் நடத்தப்பட்டது. பெருமளவிலான மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தார்கள். ஆனால், ராணுவமோ கொரோனா வைரஸை காரணம் காட்டி, தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணத்துடனே தொடக்கத்தில் இருந்தே செயல்பட்டது. ஒரு கட்டத்தில், தேர்தல் தேதி உறுதியானவுடன், பெருந்தொற்று பிரச்சனையை கருத்திற்கொண்டு, பொது கூட்டங்களுக்கு மாறாக வானொலி, காணொளி வாயிலாக பிரசாரம் மேற்கொண்டே சூச்சி மக்களின் ஆதரவை பெற்றுவிட்டார். இந்த தோல்வியை ஏற்க விரும்பாத ராணுவம், கடந்த சில மாதங்களாக திட்டமிட்டு ஆட்சியை கவிழ்த்துள்ளது” என்று கூறுகிறார்.

மியான்மரில் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் தலைவர்களையும் அதிகாரிகளையும் உடனடியாக விடுவிக்கவிட்டால், கடும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், பல்வேறு உலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் மியான்மர் ராணுவத்துக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளன.

இந்த விவகாரத்தில் தீர்வு எப்படி எட்டப்படக்கூடும் என்ற கேள்விக்கு பதிலளித்த சுந்தர்ராஜ், “மக்கள் அமைதியான முறைகளில் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். ஆனால், ராணுவத்தின் ஆட்சியை அகற்றுவதற்கு இதெல்லாம் போதாது. மியான்மரின் அண்டை நாடுகள் மற்றும் உலக நாடுகள் அனைத்தும் தலையிட்டே இந்த பிரச்சனையை தீர்க்க முடியும். மற்றபடி, தமிழர்கள், பௌத்த மதத்தினர், முஸ்லிகள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தை சேர்ந்த மக்களும் தொடர்ந்து ஒருமித்த குரலில் போராடுவோம்” என்று கூறுகிறார்.

“உலகம் முழுவதும் மியான்மரில் தயார் செய்யப்படும் மரப்பொருட்கள் மற்றும் உணவு தானியங்களுக்கு சிறந்த பெயர் உள்ளது. இதைத்தவிர்த்து தங்கம் உள்ளிட்ட பல்வேறு வளங்களும் இந்த நாட்டில் உள்ளன. ஆனால், இத்தனை இருந்தும் எங்களது வாழ்க்கை வாழ்வா – சாவா என்ற நிலையிலேயே தினமும் நகர்கிறது.”

சுதந்திரமும், ராணுவ ஆட்சியின் பிடியும்

பர்மா என்றும் அழைக்கப்படும் மியான்மர் தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ளது. தாய்லாந்து, லாவோஸ், வங்கதேசம், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் இது எல்லையை பகிர்ந்து கொள்கிறது.

இங்கு வாழும் சுமார் 5.4 கோடி மக்களில் பெரும்பாலானோர் பர்மிய மொழி பேசுபவர்களாக உள்ளனர். நாட்டின் மிகப் பெரிய நகரமாக யங்கோன் இருந்தாலும், நேபியேட்டோ தலைநகரமாக விளங்குகிறது.

1948ஆம் ஆண்டு மியான்மர் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றது. எனினும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு வெகுகாலம் நீடிக்கவில்லை. 1962 முதல் 2011 வரை ராணுவத்தின் ஆட்சியில் மியான்மர் இருந்தது. 2015ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் ஜனநாயக தேசிய லீக் கட்சி வெற்றிபெற்று ஆங் சாங் சூச்சி ஆட்சியமைத்தார்.

‘மாந்தை வடக்குக்கு’ எனும் புதிய பிரதேசச் செயலகம் உருவாக்குவது தொடர்பான முன் மொழிவு கலந்துரையாடல்

மன்னார் மாவட்டத்தில் ‘மாந்தை வடக்குக்கு’ எனும் புதிய பிரதேச செயலகப் பிரிவொன்றை அமைப்பது சம்பந்தமாக எடுக்கும் தீர்மானத்தின் முன்மொழிவை தேசிய பாதுகாப்பு உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சுக்கு அனுப்பி வைக்கும் நோக்கில் உயர் மட்ட கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை மாலை மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரான்லி டி மெல் தலைமையில் இடம் பெற்ற குறித்த கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான் , வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான குலசிங்கம் திலீபன், மற்றும் பிரதேச செயலாளர்கள் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் பதவி நிலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது மன்னார் மாவட்டத்தில் ‘மாந்தை வடக்குக்கு’ எனும் புதிய பிரதேச செயலகப் பிரிவை அமைப்பது தீர்மானத்தின் முன்மொழிவை பெற்றுக்கொள்ளப்பட்டு தேசிய பாதுகாப்பு உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

Posted in Uncategorized

கனேடிய தூதுவருக்கும் வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் பேச்சுவார்த்தை

இலங்கைக்கான கனேடிய தூதுவர் டேவிட் மெகினோனுக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் கனேடிய தூதுவருடன் ஜெனிவா மனித உரிமை பேரவையின் 46 வது கூட்டத் தொடரில் இலங்கை எதிராக முன்வைக்கப்பட உள்ளதாக கூறப்படும் யோசனை சம்பந்தமாகவும், இலங்கை தற்போது மேற்கொண்டு வரும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது சம்பந்தமாக இரண்டு தரப்பினருக்கும் இடையில் சாதகமான பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக தூதரக தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

இதனிடையே மனித உரிமை பேரவையின் 46 வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் யோசனைக்கு எதிர்ப்பை வெளியிட பாகிஸ்தான் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகர்- ஹக்கீம் சந்திப்பு!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், இன்று (09) பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமட் பெட்டியை கொழும்பிலுள்ள அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இங்கு சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை பாகிஸ்தான் நாட்டின் பிரதி உயர்ஸ்தானிகரின் கவனத்திற்கு அவர் கொண்டுவந்தார்.

அத்துடன், விரைவில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பிலும் இதன்போது உரையாடப்பட்டது.

கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 370 ஆக அதிகரித்துள்ளது

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 370 ஆக அதிகரித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 3 பேர் கிளிநொச்சி கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 665 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. 6 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் தொற்று அறியப்பட்டவர்களுடன்,

நேரடித் தொடர்புடைய இருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சுயதனிமைப்பட்டு இருந்தனர்.

அத்துடன், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக தொழில்நுட்ப பீடத்தில் பயிலும் புத்தளத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவருக்கும் கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியாவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவருக்கும் கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கூறினார்.