பேரணி இலக்கைச் சென்றடைந்தது- பொலிகண்டியில் இறுதிப் பேரெழுச்சிப் போராட்டம்!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி பல்லாயிரக் கணக்கானோரின் ஆதரவுடன் பொலிகண்டியைச் சென்றடைந்ததுடன் ஐந்து நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பேரணி நிறைவுக்கு வருகிறது.

பல தடைகளை உடைத்து ஐந்தாம் நாளான இன்று தனது இலக்கை அடைந்தது பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழிப் பேரணி.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணியைத் தடுக்க யாழ். மந்திகை மடத்தடியில் வீதி மறியல் செய்து பொலிஸார் தடை ஏற்படுத்திய போதும் மக்கள் எழுச்சி பேரணி அதனை உடைத்து முன்னேறி இன்று மாலை தனது இலக்கான பொலிகண்டியை அடைந்தது.

பேரணியில் கலந்துகொண்டோரை பதிவு செய்தே அனுமதிக்க முடியும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். எனினும் பெரும் திரளான மக்கள் எதிர்ப்பை வெளியிட்டதால் பொலிஸார் குறித்த இடத்தில் இருந்து விலகிச்சென்றனர்.

இந்நிலையில், அங்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு பேரெழுச்சிப் போராட்டம் இடம்பெறுவதுடன், பேரணியின் நினைவாக குறித்த பகுதியில் மரக்கன்றும் நடப்பட்டுள்ளது.

வாழ விடு வாழ விடு தமிழினத்தை, அழிக்காதே அழிக்காதே வாழ்விடங்களை அழிக்காதே என்ற வாசகங்கள் விண்ணதிரச் சிங்களத்தின் செவிப்பறை கிழிய ஐந்து நாள் பேரணி இன்று மாலை மணியளவில் வந்தடைந்துள்ளது.

பொத்துவிலில் கடந்த 3 ம் திகதி கொட்டும் மழையில் பல விசேட அதிரடிப்படையினர், பொலிஸாரின் பல்வேறுபட்ட தடைகளை உடைத்து , அரசியல் சமூக ஆர்வலர்களின் நீதிமன்ற தடையுத்தரவுகளை வழங்கப்பட்டு மக்கள் உணர்வெழுர்சி பாரிய போராட்டமாக வடக்கு, கிழக்கு தாயகங்களில் உணர்வோடு அனைவரும் தங்களை ஈடுபடுத்தினர்.

அம்பாறை பொத்துவில் ஆரம்பித்த நீதிக்கான பேரணி மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஊடாக இன்று 7 ம் திகதி யாழ் பொலிகண்டி முற்றத்தை வந்தடைந்துள்ளது.

தமிழர்களுக்கு அநீதி இழைத்து சிங்களத்திற்கும், தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், உள்ளிட்ட தமிழருக்கு இந்த தேசத்தில் இழைக்கப்பட்ட அநீதிக்குச் சர்வதேச விசாரணையை வலியுறுத்திய போராட்டம் உலகைச் சற்று இலங்கை தீவை உற்றுப் பார்க்க வைத்துள்ளது.

சிங்கள – பௌத்த மக்களைச் சீற்றமடையச் செய்யாதீர்!-எச்சரித்த கோட்டா அரசு

“சிங்கள – பௌத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களால் பேரணியில் கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இது சிங்கள மக்களை சீற்றமடையச் செய்யும் செயலாகும்.”

இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது

“ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையுடன் செயற்படும் அரசு நாட்டு மக்களை சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று வேறுபடுத்திப் பார்க்கவில்லை.

ஆனால், தமிழ், முஸ்லிம் சமூகம் தான் நாட்டின் சட்ட திட்டங்களை மீறி, நீதிமன்ற உத்தரவுகளை மீறி போராட்டங்களை நடத்தி இன்று இரண்டு இனங்களுக்கிடையில் பிளவுகள் இருக்கின்றன என்று சர்வதேசத்துக்குப் பொய்ப்பித்தலாட்டம் ஆடுகின்றன.

இந்த நாட்டில் பிரச்சினை இருந்தால் அதனை அரசுதான் தீர்க்க வேண்டுமே தவிர சர்வதேசத்தால் அதனைத் தீர்க்க முடியாது. பேரணி ஏற்பாட்டாளர்கள் இதனைக் கவனத்தில்கொள்ள வேண்டும்” – என்றார்.

யாழ். நல்லூரைச் சென்றடைந்தது பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணியை யாழ்ப்பாணம் மாநகருக்குள் செம்மணி நல்லூர் அலங்கார வளைவில் வைத்து மக்கள் அணிதிரண்டு வரவேற்றனர். இந்த வரவேற்பில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் பங்கேற்றார்.

ஐந்தாம் நாளான இன்று காலை கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.

முகமாலையை வந்தடைந்த போது மக்கள் அணிதிரண்டு குறித்த பேரணியை யாழ்ப்பாணத்துக்கு வரவேற்றனர். இதேவேளை, சாவகச்சேரி நகரிலும் வரவேற்பளிக்கப்பட்டு தீப்பந்தங்கள் ஏந்தி போராட்டம் இடம்பெற்றது.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் மாநகருக்குள் வரவேற்கும் வகையில் செம்மணி நல்லூர் அலங்கார வளைவில் வைத்து மக்கள் பேரணிக்கு வரவேற்பளித்தனர்.

வடக்கு – கிழக்கு மாகாண, சமயத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து மக்களை அணி திரட்டி இந்த போராட்டத்தை நடத்துகின்றனர்.

தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உட்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடாத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வடகிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், பல்சமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறை படுத்த கோரியும், மலையக தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தக் கோரியும் முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கைகளை மதிக்கக் கோரியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

Posted in Uncategorized

பொத்துவில் – பொலிகண்டி வரையிலான இறுதிநாள் போராட்டத்திற்கு அணிதிரளுங்கள் – யாழ் மாநகர துணை மேயர் ஈசன் அழைப்பு

நீதிக்கான போராட்டத்திற்கு அணிதிரள யாழ் மக்களுக்கு யாழ் மாநகர துணை முதல்வர் ஈசன் அழைப்பு விடுத்துள்ளார் அவர் மேலும் தெரிவித்ததாவது

தமிழ் பேசும் மக்களின் வாழும் உரிமையை உறுதி செய்யும் வகையில் நீதிகோரி பொத்துவிலில் ஆரம்பித்து வடக்கு கிழக்கு சிவில் அமைப்பினரால் முன்னெடுத்துவரும் மக்கள் எழுச்சிப் பேரணி நாளை யாழ்ப்பாண எல்லையை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது

வடக்கு-கிழக்கு தமிழர் தாயகத்தின் உயிர்நாடி வழியே உரிமைக்கு வழிசமைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் குறித்த பேரணியை வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணத்தில் வரவேற்க அணி திரண்டு வாருங்கள்.

இது கட்சி, அரசியல் கடந்த இனத்திற்கான அழைப்பு.

எமது உணர்வு! எமது உரிமை! என்ற பொதுமை அடையாளத்தில் தமிழர்களாய் அணிதிரள்வோம்

யாழ்ப்பாணத்தில் உள்ள விளையாட்டுக் கழகங்கள், இளையோர் அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் நாளை ஞாயிற்றுக் கிழமைஒன்றிணைய ஆயத்தமாகுங்கள்.

குறித்த வழித்தடத்தில் உள்ள ஆர்வலர்களும் நீதிக்கான பேரணியை வரவேற்கவும், அணி சேர்ந்து பலம் சேர்க்கவும் முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன்

எமது உணர்வு! எமது உரிமை!
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை இணைவோம் தமிழர்களாய்! என யாழ் மாநகர துணை முதல்வர் ஈசன் தெரிவித்துள்ளார்

Posted in Uncategorized

இலங்கையில் கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 350ஐத் தாண்டியது

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 351 ஆக அதிகரித்துள்ளது.

Posted in Uncategorized

கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிப்பதற்கான கல்வி அமைச்சின் அனுமதி ஆளுநரிடம் கையளிப்பு

கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிப்பதற்கான கல்வி அமைச்சின் எழுத்து மூலமான அனுமதியினை வட மாகாண ஆளுநரிடம் கல்வி அமைச்சலர் ஜி.எல். பீரிஸ் அவர்கள் நேற்று (05) கையளித்துள்ளார்.

யாழ் பல்கலைழக கிளிநொச்சி விவசாய பீடத்தின் ஆய்வு பயிற்சி கட்டடத் தொகுதியினை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் வட மாகாண ஆளுநரிடம் இதற்கான அனுமதி கடிதத்தையும் கையளித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டம் கிளிநொச்சி கல்வி வலயம் என இதுவரை காலமும் கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பளை என நான்கு கோட்டக் கல்வி பிரிவுகளாக 104 பாடசாலைகளுடன் 32,028 மாணவர்கள் 2,035 ஆசிரியர்கள் 28 உயர்தர வகுப்புகளைக் கொண்ட பாடசாலைகள், என இயங்கி வருகிறது.

எனவே கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் மாவட்டம் மற்றும் மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், தற்போது மத்திய கல்வி அமைச்சின் அனுமதியும் கிடைத்துள்ளது.

இனி குறித்த அனுமதியுடன் அமைச்சரவைக்கு விடயம் கொண்டு செல்லப்பட்டு, அங்கும் அனுமதி பெறப்பட்ட பின்னர் வலயப் பிரிப்புக்கான பணிகள் உத்தியோகப் பூர்வமாக முன்னெடுக்கப்படும் எனவும் கிளிநொச்சி கல்வி வலயம் தெரிவித்துள்ளது.

அத்தோடு கரைச்சி பூநகரி ஒரு வலயமாகவும், பளை, கண்டாவளை ஒரு வலயமாகவும் இரண்டு வலயங்கள் பிரிக்கப்படவுள்ளன.

Posted in Uncategorized

பொத்துவில் – பொலிகண்டி பேரெழுச்சிப் பேரணி கிளிநொச்சி நகரை அடைந்தது!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி மன்னாரில் இருந்து கிளிநொச்சி நகரை அடைந்துள்ளது.

பேரெழுச்சிப் பேரணியின் நான்காம் நாளான இன்று வவுனியாவில் இருந்து காலையில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி, கொறவப் பொத்தான வீதி ஊடாக மன்னார் மாவட்டத்துக்குச் சென்றிருந்தது.

அங்கு ஆயிரக்காணக்கானோரின் ஆதரவுடன் தொடர்ந்த பேரணி வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவி நகருக்குச் சென்று அங்கிருந்து தற்போது கிளிநொச்சி நகரை அடைந்துள்ளது.

இதன்போது குறித்த பேரணியை ஆதரிக்கும் வகையில் கிளிநொச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியின் இரு மருங்கிலும் திரண்டு நிற்பதாக கூறப்படுகிறது.

இந்தப் போராட்டத்திற்கு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள் எனப் பெரும் திரளான மக்கள் தமது ஆதரவினை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Posted in Uncategorized

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டம் மன்னாரைச் சென்றடைந்தது

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி இன்று சனிக்கிழமை காலை 7.45 ம‌ணி‌க்கு வவுனியா புதிய பேருந்து நிலையத்தின் முன்பு ஆரம்பமாகிய நடைபவனியானது வவுனியா நகரின் ஊடாக மன்னாரை நோக்கி சென்றடைந்துள்ளது.

காலை 9.00 மணிக்கு பண்டார வன்னியின் சிலை அருகே வாகன பேரணியாக புறப்பட்டு பட்டாணிச்சூர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் முன்பாக நடைபவனியாகச்சென்று நெளுக்குளம், புவரசக்குளம் ஆகிய பகுதிகளை கடந்து மன்னார் பரையநாளன் குளம் வீதியைச் சென்றடைந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து 12 மணியளவில் மடுவீதியை சென்றடைந்து குறித்த ஊர்வலம் மடுவ சந்தியிலிருந்து முருங்கன் ஊடாக மன்னரை சென்றது.

குறித்த ஊர்வலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சர்வமதத் தலைவர்கள் உள்ளடங்கலாக இளைஞர்களும், முஸ்லீம் மக்களும் ஊர்வலத்தில் கைகோர்த்துள்ளனர்.

பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டபோதும் சோதனைச் சாவடிகளை தகர்த்தெரிந்து குறித்த ஊர்வலம் மன்னார் நோக்கிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

 

Posted in Uncategorized

போராட்டம் வவுனியாவில் இருந்து புறப்பட்டது!பேராதரவை வழங்கிய தமிழ் முஸ்லீம் மக்கள்!!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை வடக்கு கிழக்கு சிவில் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிக்கான கவனயீர்ப்பு பேரணியின் 4 ஆம் நாளான இன்று வவுனியாவில் இருந்து ஆரம்பித்து மன்னாரை நோக்கி பயணித்தது. குறித்த போராட்டத்திற்கு வவுனியாவில் வசிக்கும் தமிழ் முஸ்லீம் மக்கள் தமது முழுமையான ஆதரவை வழங்கியிருந்தனர்.

வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெறும் பௌத்த மயமாக்கல் நிலங்கள் அபகரிப்பு, கொரோனாவினால் மரணமடையும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்வதற்கு எதிர்ப்பு, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளப் பிரச்சினை அடங்கலாக அரச அடக்குமுறைகள் போன்ற விடயங்களை முன்னிறுத்தி அவற்றை கண்டித்தும் நீதி கோரியும் தீர்வு கேட்டும் இந்த போராட்டம் திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகின்றது

நேற்று காலை திருகோணமலையில் ஆரம்பித்த பேரணி தென்னமரவடி கொக்கிளாய் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தினை அடைந்திருந்தது. அங்கிருந்து நெடுங்கேணியை அடைந்து புளியங்குளம் ஊடாக வவுனியா மாவட்டத்தை அடைந்திருந்தது.

இந்நிலையில் இன்று காலை வவுனியா புதிய பேருந்து நிலையத்தின் முன்பாக ஆரம்பித்த போராட்டம் மணிக்கூட்டுகோபுர சந்தியை அடைந்து அங்கிருந்து பசார்வீதி வழியாக கொறவப்பொத்தானை வீதியை அடைந்து பண்டாரவன்னியன் சிலையடியில் முற்றுப்பெற்றது.

ஆர்பாட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்ததுடன், இஸ்லாமிய மக்களும் தமது பேராதவரை வழங்கியிருந்தனர். வவுனியா பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக ஒன்றிணைந்திருந்த இஸ்லாமிய மக்கள் மற்றும் அரசியல் வாதிகள் பேரணியுடன் ஒன்றிணைந்து பண்டாரவன்னியன் சிலை வரை இணைந்து சென்றிருந்தனர்.
பின்னர் மதகுருக்களால் பண்டாரவன்னியன் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அத்துடன் போராட்டம் நிறைவிற்கு வந்ததுடன், அங்கிருந்து புறப்பட்டு நெளுக்குளம் சந்தியிலும் பேரணி இடம்பெற்றது அதனையடுத்து மன்னார் நோக்கி குறித்த பேரணி பயணித்தது.

இதேவேளை வவுனியாவில் கடந்த நான்கு வருடங்களாக தொடர் போராட்டம் மேற்கொண்டுவரும் காணாமல் போனோரின் பந்தல் அடிக்கும் குறித்த பேரணி சென்றிருந்தது.

பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரெலோ தலைவர் கெளரவ செல்வம் அடைக்கலநாதன் , ரெலோ வினோநோகராதலிங்கம் ,தமிழ் அரசு கட்சி சி. சிறிதரன்,தமிழ் அரசு கட்சி சாள்ஸ் நிர்மலநாதன், தமிழ் அரசு கட்சி இரா.சாணக்கியன்,தமிழ் தேசிய மக்கள் முன்னணி செ.கயேந்திரன்,தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கயேந்திரகுமார் பொன்னம்பலம்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஈழமக்கள் புரட்சிகர முன்னணி சிவசக்தி ஆனந்தன்,தமிழ் அரசு கட்சி சீனிதம்பி யோகேஸ்வரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான றிப்கான் பதியூதீன்,ரெலோ செ.மயூரன்,தமிழ் அரசு கட்சி ப.சத்தியலிங்கம்,மற்றும் உள்ளூராட்சிமன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

சந்தையை திறக்க அனுமதிக்காமையால் வீதியை மறித்து போராட்டம்!

வவுனியா மொத்த மரக்கறி வியாபார சந்தையை பொலிசார் திறக்க விடாமையினால் வீதியை வழிமறித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வாக்குறுதி வழங்கப்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

கொரோனோ தாக்கம் காரணமாக கொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள வவுனியா தினசந்தை கடந்த சிலநாட்களாக மூடப்பட்டிருந்ததுடன், காமினி மகாவித்தியாலயம் மற்றும் கண்டி வீதியில் அமைந்துள்ள பொருளாதார மத்தியநிலையத்தில் தற்காலிகமாக செயற்பட்டு வந்தது.

இதேவேளை சந்தையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களிற்கு பிசிஆர் பரிசோதனைகள் மற்றும் அன்ரியன் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் அவர்களில் எவருக்கும் தொற்று அடையாளம் காணப்படவில்லை.

இதேவேளை மீண்டும் சந்தையை திறப்பதற்கு சுகாதார பிரிவினர் அனுமதி வழங்கியிருந்ததுடன் நகரசபையின் ஏற்பாட்டில் நேற்றயதினம் தினச்சந்தை தொற்றுநீக்கமும் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று அதிகாலை சந்தையை திறப்பதற்காக வர்த்தகர்கள் வந்தநிலையில் பொலிசார் அவர்களை சந்தையை திறப்பதற்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் பொலிசாருக்கும் அவர்களிற்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தது.

நீண்டநேரமாகியும் தீர்வு கிடைக்காமையால் கொறவபொத்தானை பிரதான வீதியை வழிமறித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குறித்த வீதியுடனான போக்குவரத்து 6 மணி நேரமாக இடைநிறுத்தப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் ரெலோ வினோநோகராதலிங்கம் மற்றும் பிரதிபொலிஸ்மா அதிபர் லால்செனவிரத்தின ஆகியோர் அவர்களுடன் கலந்துரையாடினர். ஏனைய சில ஊழியருக்கும் பிசிஆர் பரிசோதனைகளை விரைவாக செய்துவிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சந்தையை திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளிற்கமைய போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் திறக்க விடு திறக்க விடு சந்தையினை திறக்க விடு , வாழ விடு வாழ விடு விவசாயிகளை வாழ விடு , விவசாயத்தினை வைத்து சுயலாபம் காணதே , சந்தையினை மட்டும் திறக்க விடாதது ஏன்? சுகாதார பிரிவினர் பரிசோதனை செய்தும் திறக்க விடாதது ஏன்?போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை தாங்கியிருந்தனர்.

போராட்ட இடத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான் ,ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் , குலசிங்கம் திலீபன்,ரெலோ முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் ஆகியோர் வருகைதந்து போராட்டத்திலிருந்தவர்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.