2024 பட்ஜெட்டில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – ஜனாதிபதி ரணில்

2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள் அனைவருக்கும் சம்பள உயர்வு வழங்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (30) மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

அத்துடன், தனியார் துறை ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்படவுள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வரவு – செலவுத் திட்டத்தில் 20 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரி அரச ஊழியர்கள் நேற்று நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டம் செய்த நிலையில் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேட்புமனுவைச் சமர்ப்பித்த அரச ஊழியர்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் கடமையில் இணைப்பு

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவைச் சமர்ப்பித்த அரச ஊழியர்கள் எதிர்வரும் செவ்வாய்கிழமை முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்படவுள்ளனர்.

அவர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்த தொகுதியில் இல்லாமல் வேறு தொகுதியில் பணியாற்ற முடியும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சுற்றறிக்கையை தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்காக அனுப்ப இராஜாங்க அமைச்சரின் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த அரச ஊழியர்களுக்கு அவர்களின் அடிப்படை சம்பளத்துடன் சேர்த்து சகல கொடுப்பனவுகளும் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

இலஞ்சம் வாங்கிய முன்னாள் ஜனாதிபதி செயலக அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது

கந்தளாய் சீனித் தொழிற்சாலையின் இயந்திர உபகரணங்களை பெற்றுத் தர சிபாரிசு செய்வதற்காக 10 கோடி ரூபா இலஞ்சம் கோரி அதில் முற்பணமாக 2 கோடி ரூபாவை இலஞ்சமாக பெற்ற விவகாரத்தில் குற்றவாளியாக காணப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவின் அலுவலக பிரதானியாக செயற்பட்ட ஐ.கே. மஹநாம மற்றும் மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி. திஸாநாயக்க ஆகியோரின் தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று (11) உறுதி செய்தது.

குறித்த இருவரினதும் மேன் முறையீட்டு மனுக்களை கடந்த 2021 மார்ச் 16 ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம் இன்று அது குறித்த தீர்ப்பை அறிவித்து, விஷேட நிரந்தர மேல் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது.

நீதியரசர் விஜித் மலல்கொட தலைமையிலான , எல்.ரி.பி. தெஹிதெனிய, ப்ரீத்தி பத்மன் சுரசேன, எஸ். துரைராஜா மற்றும் யசந்த கோதாகொட ஆகிய நீதியரசர்களைக் கொண்ட குழாம் இதற்கான தீர்ப்பை நேற்று அறிவித்தது.

இந்த இலஞ்ச விவகாரம் தொடர்பில் கடந்த 2018 மே 3 ஆம் திகதி மேற்படி இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு எதிரான விஷேட நிரந்தர மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ததை அடுத்து கடந்த 2019 செப்டம்பர் 5 ஆம் திகதி முதல் விசாரணைகள் இடம்பெற்றன. இருவருக்கும் எதிராக 24 குற்றச்சாட்டுக்கள் சட்ட மா அதிபரால் சுமத்தப்பட்டிருந்தன.

இதன்போது சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட அரச சட்டவாதி (தற்போதைய பிரதி சொலிசிட்டர் ஜெனரால்) ஜனக பண்டார மன்றில் ஆஜரானதுடன் முதல் பிரதிவாதியாக பெயரிடப்பட்ட ஜனாதிபதியின் முன்னாள் செயலணி பிரதானி ஐ.கே. மஹநாம சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா ஆஜராகினார். 2 ஆம் பிரதிவாதியான மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி. திஸாநாயக்க சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அரசகுலரத்ன ஆஜராகி வாதிட்டிருந்தார்.

இந்நிலையில் விசாரணைகள் நிறைவு பெற்ற நிலையில் கடந்த 2019 டிசம்பர் 19 ஆம் திகதி தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. இதன்போது சட்ட மா அதிபர் முன்வைத்த 24 குற்றச்சாட்டுக்களில், முதல் பிரதிவாதியாக பெயரிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் செயலணி பிரதானி ஐ.கே. மஹநாம 13 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்டார். அத்துடன் 2 ஆம் பிரதிவாதியான மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி. திஸாநாயக்க 11 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்டார்.

இதனையடுத்தே தண்டனை விபரத்தை அறிவித்திருந்த, விஷேட நிரந்தர மேல் நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதியின் முன்னாள் செயலணி பிரதானி ஐ.கே. மஹநாமவிற்கு 20 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்தது. அத்துடன் 65 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்தது. அத்துடன் அவர் பெற்ற 2 கோடி ரூபா இலஞ்சத்தையும் மீள செலுத்தவும் அவருக்கு இதன்போது உத்தரவிடப்பட்டது. அத்துடன் மரக் கூட்டுத்தாபணத்தின் முன்னாள் தலைவர் பி. திஸாநாயக்கவுக்கு 12 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்த நீதிபதிகள் 55 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தனர்.

இந்த தண்டனைக்கு எதிராக உயர் நீதிமன்றில் விஷேட மேன் முறையீடு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தண்டனை விதிக்கப்பட்ட முறைமை முற்றிலும் தவறானது எனவும், அதனால் அத்தண்டனையை ரத்து செய்து தம்மை விடுவித்து விடுதலை செய்யுமாறும் மேன் முறையீட்டில் கோரப்பட்டிருந்தது.

இதனை விசாரித்த உயர் நீதிமன்ற ஐவர் கொண்ட நீதிபதிகள் குழாம் விஷேட மேல் நீதிமன்ற தீர்ப்பை சரியானது என ஏகமனதாக அறிவித்து மேன் முறையீட்டை நிராகரித்து தீர்ப்பளித்தது.

ஊழியர்களுக்கு அருகில் உள்ள அலுவலகம் : அரசாங்கம் திட்டம்

போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளதால், அரசதுறை ஊழியர்களுக்கு வீட்டுக்கு அருகாமையில் உள்ள அலுவலகங்களை பணிக்கு ஒதுக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதன்படி, வீட்டுக்கு அண்மித்த பிரதேசங்களில் உள்ள அரச அலுவலகங்களுக்கு அரச ஊழியர்களை இடமாற்றம் செய்யும் முறைமை ஏற்படுத்தப்படவுள்ளது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் டாக்டர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் இது தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

போக்குவரத்துக் கட்டணங்கள் உயர்வால் பஸ்களில் கடமைக்குச் செல்ல முடியாமல் அரச ஊழியர்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாக அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.