11 இளைஞர்கள் கடத்தல் : வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு!

கொட்டாஞ்சேனை மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளில் கப்பம் பெறும் நோக்கத்தில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கியமை  தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரணாகொட மற்றும் 14 கடற்படை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கை அடுத்த வருடம் மார்ச் மாதம் 28ஆம் திகதி அழைக்குமாறு உயர் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் பிரதிவாதியான முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரணாகொட, தன்னை பிரதிவாதியாக பெயரிடுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் வரை விசாரணையை ஒத்திவைக்குமாறு அவர் முன்வைத்த கோரிக்கையையும்  மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு ஏற்றுக்கொண்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான அமல் ரணராஜா (தலைவர்) நவரத்ன மாரசிங்க மற்றும் மஞ்சுள திலகரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நிதி தேவையில்லை; நீதியே தேவை – காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் கடும் கண்டனம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பாதீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விடயத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் கண்டணம் வெளியிட்டுள்ளனர்.

சர்வதேச விசாரணையே எமக்கு தேவை எனவும் நிதி கோரி நாம் போராடவில்லை எனவும் நிதி எமக்கு தேவையில்லை எனவும் நீதியே வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று(14) மாலை நிகழ்த்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்

இங்கு கருத்து தெரிவித்த அவர்,

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளை தேடி சுமார் 14 ஆண்டுகளுக்கு மேலாக தாம் தொடர்ச்சியாக போராடி வருவதாகவும் இலங்கை அரசின் மீது நம்பிக்கை இல்லை எனவும் சர்வதேச விசாரணை ஒன்றே தேவை எனவும் கூறியே தாங்கள் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் சர்வதேச சமூகத்தின் பார்வையில் எங்களுடைய போராட்டம் பேசு பொருளாக மாறி உள்ள நிலையில் சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் விதமாக நேற்றைய தினம் வெளியிடப்பட்ட பாதீட்டிலே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக நிதி ஒதுக்கப்பட்ட விடயத்துக்கு கண்டணம் தெரிவித்துள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளாகிய நாம் தொடர்ச்சியாக எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்காகவே போராடி வருகின்றோம்.இருப்பினும் எங்களுடைய கோரிக்கைகளை செவி சாய்க்காது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற ஓ எம் பியின் செயற்ப்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு தாங்கள் எதிர்ப்பை தெரிவித்திருந்த போதும் தங்களுடைய எதிர்ப்பை மீறியும் அதற்காக பாரிய நிதிகளை ஒதுக்கி வீணாக செலவழித்துள்ளது.

இவ்வாறான பின்னணியில் தற்போது சர்வதேச நீதியை கோரி போராடுகின்ற எங்களுடைய போராட்டத்தை சர்வதேச சமூகம் உற்று நோக்கியுள்ள வேளையிலே எங்களுடைய போராட்டத்தை சிதைப்பதற்காக அதற்கு இழப்பீட்டை வழங்குவதாக கூறி சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக இந்த இழப்பீட்டுக்கான நிதி ஒதுக்கப்பட்டதற்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்ததோடு.

இந்த இழப்பீட்டுக்கான நிதி ஒதுக்கலின் ஊடாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இருக்கிறார்கள் என்ற விடயத்தை ஒத்துக் கொண்டமை நல்ல விடயம் எனவும் எமக்கு சர்வதேச நீதிப் பொறிமுறை ஊடாக எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதற்கான நீதியே தேவை எனவும் நிதி தேவையில்லை எனவும் தெரிவித்தார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கக் கூட்டத்தில் கைகலப்பு : வவுனியாவில் 7 பேர் கைது!

வவுனியாவில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க கூட்டத்தில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பாக 7 பேர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அண்மையில் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றிருந்ததுடன் அதில் இருந்த ஒரு பகுதியினர் அதில் இருந்து வெளியேறியிருந்தனர்.

இந்நிலையில் வெளியேறிய அணியினரை வைத்து வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் வவுனியா மாவட்டத்திற்கான புதிய நிர்வாகத் தெரிவு ஒன்றை மேற்கொள்வதற்காக கூட்டத்தினை ஒழுங்கு செய்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கூட்டத்திற்கு வருகை தந்த வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க உறுப்பினர்கள் மற்றும் வவுனியாவில் அண்மையில் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதனையடுத்து பொலிசாரின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்தி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக முறையிடப்பட்டது.

இதன்போது வடக்கு – கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி செயலாளர் ஆனந்தன் நடராஜா லீலாதேவி முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சபிதா ராஸ்திரி வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான சண்முகராசா சறோஜினிதேவி சிவாநந்தன் ஜெனிற்றா செல்லத்துரை கமலா பேரின்பராசா பாலேஸ்வரி ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்

ஜ.நா விசாரணைக்குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டும்! – சந்தியா எக்னெலிகொட

இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாக 2022 இல் ஜ.நாவில் நியமிக்கப்பட்ட விசாரணைக்கான குழுவின் விசாவுக்கான அனுமதியை வரத்தமானி மூலம் தடைசெய்தமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொடவின் துனைவியார் சந்தியா எக்னெலிகொட கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தையிட்டு முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்தத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“காணாமல்போனவர்கள் வெளிநாட்டில் இருப்பதாக ஜனாதிபதி தெரிவிக்கும் நகைச்சுவையினை நிறுத்தும் வரையில் இந்த நாட்டில் என்றுமே நீதியை பெற்றுக் கொள்ள முடியாது.

இந்த நாட்டில் காணாமல் போனவர்கள் என்று ஒன்று இல்லை எனவும் அவர்கள் வெளிநாடுகளில் இருப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

எனவே நீங்கள் ஜனாதிபதி தானே அவர்களை வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரமுடியும் தானே எனவே இவ்வாறான நகைச்சுவையினை நிறுத்துங்கள்.

வடக்கு கிழக்கில் பலாத்தகாரமாக காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்கள் கண்ணீரில் மூச்சுவிட்ட பூமி ஆகும்.

ஏன் என்றால் கொழும்பு கொஸ்வத்தை பிரதேசத்தில் பலவந்தமாக எனது கணவரான ஊடகவியலாளர் பிரதீப் எக்கினா கொட கடத்தி செல்லப்பட்டார்.

அவர் அங்கு எரிக்கப்பட்டாரா அல்லது எங்காவது புதைக்கப்பட்டாரா? அல்லது கடலில் கொண்டு சென்று போட்டார்களா? தெரியவில்லை இருந்தபோதும் இந்த சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் பல காரணங்கள் தெரிவிக்க வேண்டியுள்ளது.

ஒ.எம்.பி காரியாலயம் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக அதிகளவான பணத்தை வீண் செலவு செய்து நடாத்தி வருகின்றது.

இந்த ஓ.எம்.பி. கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களை உண்மையாக நீதியாக தேடி கொடுத்துள்ளதா?குறைந்தது உண்மையையாவது அமைப்புகளுக்கு முன்வைத்தா? இல்லை.

இந்த தாய்மாருக்கு தேவையானது உண்மையும் நீதியும் அது இந்த நாட்டில் நடைபெறாது என்பதால் தான் சர்வதேச அமைப்புக்களிடம் செல்லவேண்டியுள்ளது.

2022 ஜ.நாவில் இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான விசாரணைக்கான குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

இந்த விசாரணைக்குழு இறுதிவரை இலங்கைக்கு வரவில்லை. அவர்களுக்கான விசா அனுமதியை வர்த்தமானி மூலம் தடைசெய்து அதனை ஜனாதிபதியின் வீட்டு காப்பற்றின் கீழ் போடப்பட்டுள்ளது.

எனவே சட்டத்தின் கீழ் அவர்கள் இலங்கைக்கு வர அனுமதிக்கவும் அதற்கான நீதியை வேண்டி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்படும்” என அரசாங்கத்துக்கு தெரிவிக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி மட்டக்களப்பில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பான தினமான இன்று புதன்கிழமை (30) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்துக்கான பிரதான நிகழ்வு இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றது.

இன்று காலை 10 மணியளவில் மட்டக்களப்பு, கல்லடி பாலத்தில் இருந்து ஆரம்பமான இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்ட பேரணியானது நகரின் பிரதான வீதிகள் ஊடாக சென்று, மட்டக்களப்பு காந்தி பூங்காவை அடைந்தது.

இந்நிகழ்வில் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து பெருந்தொகையான காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் காணாமல் போனவர்களின் புகைப்படங்கள் மற்றும் பதாகைகளை ஏந்தியவாறு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் தமக்குரிய தீர்வுகளை விரைவில் தர வேண்டும் எனக் கூறியும், காலம் கடந்தும் எமக்குரிய தீர்வுகள் கிடைக்கவில்லை என தெரிவித்தும் ‘எங்கே எங்கே… காணாமல் போன உறவுகள் எங்கே’ என கோஷங்களை எழுப்பியவாறும் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

‘எமது உறவுகள் எமக்கு வேண்டும்’, ‘மதவாதம் வேண்டாம்’ என கோஷங்களை எழுப்பியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்தொகையான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இன்றைய இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொடவின் மனைவி, பொதுமக்கள், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்றாகும். சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கின் பல்வேறு இடங்களில் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் இலங்கை அரசாங்கத்தின் முப்படைகளால் யுத்ததிற்கு முன்பும் யுத்ததிற்கு பின்பும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி இன்றைய தினம் புதன் கிழமை மன்னார் சதோச மனித புதைகுழியில் இருந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி இடம் பெற்றது.

வடமாகாணம் முழுவதும் உள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், சட்டத்தரணிகள், அருட்தந்தையர்கள் உட்பட பலர்  குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மன்னார் சதோச மனித புதைகுழியில் ஆரம்பமான குறித்த போராட்டம் மன்னார் சுற்று வட்ட பாதை ஊடாக தபாலகம் வைத்திய சாலை ஊடாக மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இறுதி நிகழ்வுடன் நிறைவடைந்தது

குறித்த போராட்டதில் ஈடுபட்டவர்கள் கறுப்பு கொடிகளை ஏந்தி காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் புகைப்படங்களை சுமந்து பல்வேறு கோஷங்களை எழுப்புயவாரு போராட்டத்தில் ஈடுப்ட்டனர்

வெளிநாட்டு ராஜதந்திரிகளை சந்தித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கொழும்பில் தூதரக அதிகாரிகள் சிலரை சந்தித்து கலந்துரையாடினர்.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாக தங்களுடைய உறவுகளை தேடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற அதே வேளையிலே சர்வதேச விசாரணையை கோரியே தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.

இவ்வாறான பின்னணியில் இலங்கை அரசானது தொடர்ச்சியாக தங்களுக்கு தீர்வை வழங்காத நிலையில் தமக்கு சர்வதேச விசாரணை கோரி போராடும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமக்கான நீதியினை பெற்றுத்தர ஆவண செய்ய வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரால் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குக்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி வடக்கு – கிழக்கு தழுவிய வகையில் கடையடைப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், பெருந்தொகையான மக்களின் பங்களிப்புடன் பேரணி ஒன்று முல்லைத்தீவில் ஆரம்பமாகி மாவட்ட செயலகத்தின் ஊடாக பயணித்தனர். இந்த போராட்டத்தில் வட கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பெருந்தொகையான மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இதற்கு அமைவாக வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு கடையடைப்பு அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்நிலையில் , வடக்கு – கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்திய ஹர்த்தால் மற்றும் பேரணி ஆகியன நிறைவுக்கு வந்துள்ள நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினர் கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

சர்வதேசத்தின் கண்காணிப்பில் மனிதப் புதைகுழிகளை அகழ்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று குறித்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காலாகாலமாக மனிதப் புதைகுழிகளே தமிழ் பேசும் மக்களுக்கு கிடைத்த பெரும் பரிசாக உள்ளது. செம்மணி முதல் கொக்குத்தொடுவாய் வரை இந்த விவகாரம் நீண்டுள்ளது. 1984 ஆம் ஆண்டு முதல் கொக்குதொடுவாய் மற்றும் அதனை அண்டிய முல்லைத்தீவின் எல்லைக்கிராமங்களில் பலர் படுகொலை செய்யப்பட்டனர்.

அத்துடன், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். குறித்த காலப்பகுதியில் போர் உச்சமாக நடைபெற்றுகொண்டிருந்தது. எனவே போர்க்காலப் பகுதியில் தான் இந்த புதைகுழிகள் தோன்றியிருக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்மொழிவுகளை மறுபரிசீலனை செய்ய சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை

நிலைமாறுகால நீதியை முன்னிறுத்தி அரசாங்கத்தினால் முன்மொழியப்படும் எந்தவொரு பொறிமுறையும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் நேரடித் தலையீடின்றி பயனுடைய மற்றும் செயற்திறனான பொறிமுறையாக அமையாது என்று வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தோடு, வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களை கருத்திற்கொண்டு அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான யோசனையை மறுபரிசீலனை செய்யுமாறு இக்குழு சர்வதேச சமூகத்திடம் வலியுறுத்தியுள்ளது.

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இயங்கும் 16 சிவில் சமூக அமைப்புக்களை உள்ளடக்கிய வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

சுதந்திரத்தின் பின்னரான இலங்கையில் ஆட்சிபீடம் ஏறிய பெரும்பான்மையின சிங்கள பெளத்த சமூகத்தின் அரசியல் பிரதிநிதிகள் சிறுபான்மையின சமூகங்களுக்கு எதிராக தொடர்ந்தும் இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.

வடக்கு,-கிழக்கு மாகாணங்களில் சிங்கள குடியேற்றங்கள், மொழியுரிமை மீறல், தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள், நிர்வாக மற்றும் அரசியல் ரீதியிலான ஒடுக்குமுறைகள், அரசியல் அதிகாரம் மற்றும் ஆட்சி நிர்வாகம் என்பவற்றில் தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டமை என்பன தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கென சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை கோருவதற்கு வழிவகுத்தன.

அதன் நீட்சியாக இடம்பெற்ற முப்பது வருடகாலப் போரில் பலர் வலிந்து காணாமலாக்கப்பட்டதுடன் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

இறுதிக்கட்ட போரின்போது யுத்த சூனிய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகளில் இலங்கை அரசாங்கம் கொத்தணிக் குண்டுகளையும் போசுபராஸ் குண்டுகளையும் பயன்படுத்தியதுடன் தமிழ் மக்களுக்கு எதிராக யுத்த குற்றங்களிலும் ஈடுபட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான உண்மை மற்றும் நீதி, ஐக்கிய நாடுகள் சபையின் பங்களிப்புடனான நியாயமான உண்மையை கண்டறியும் பொறிமுறை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவமயமாக்கலை முடிவுக்கு கொண்டுவரல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வு ஆகியவற்றை தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் தவறியுள்ளது.

குறிப்பாக, கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்தும் நோக்கில் ஸ்தாபித்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான அதிகாரங்களை மாத்திரமே கொண்டிருந்ததுடன் அதனூடாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை.

அதேபோன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, பெளத்தமயமாக்கல், கலாசார உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் என்பன இன்னமும் தொடர்கின்றன. இம்மீறல்களுக்கு எதிராக குரல் எழுப்புவோர் கைதுசெய்யப்படுவதுடன் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.

எனவே, நல்லிணக்கத்தை அடைந்துகொள்வதற்கான முயற்சிகளில் அரசாங்கம் எவ்வித முன்னேற்றத்தையும் காண்பிக்கவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் நிலைமாறுகால நீதியை முன்னிறுத்தி அரசாங்கத்தினால் முன்மொழியப்படும் எந்தவொரு பொறிமுறையும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் நேரடித் தலையீடின்றி பயனுடைய மற்றும் செயற்திறனான பொறிமுறையாக அமையாது என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

ஆகவே, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான யோசனையை மறுபரிசீலனை செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையின் இணை அனுசரணை நாடுகள், ஜப்பான், தென்னாபிரிக்கா மற்றும் சுவிற்ஸர்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர் ஆகிய தரப்பினரிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

OMP அலுவலக பதிவுகளுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்ப்பு

காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தால் மேற்கொள்ளப்படும் பதிவுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகத்தால் அழைக்கப்பட்டவர்களிற்கான பதிவுகள் இன்று மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது காணாமல் போனோர் அலுவலக ஆணையாளர் ஜோகராஜா, கிளிநொச்சி பிராந்திய இணைப்பாளர் நிசாந்தன் ஜீட் பீரிஸ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினர்.

இதன்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது ஆதங்கத்தினை வெளியிட்டுள்ளனர்.

இருப்பினும் போராடுவதற்கான உரிமை இருந்தாலும் பதிவுக்காக வருகை தருபவர்களிற்கு இடையூறு இல்லாமல் செயற்படுமாறும் ஆணையாளர் தெரிவித்தார்.