கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டு குழு தொடர்பான மனு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதிகள்

கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டுக் குழுவின் செயற்பாடுகளை இடைநிறுத்தி இடைக்காலத் தடை விவகாரம் தொடர்பான விசாரணையில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல, கருணாரத்ன, நீதிபதி தம்மிக கணேபொல ஆகியோர் இன்று (14) விலகியுள்ளனர்

இந்த வழக்கு தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சரினால் தாக்கல் செய்யப்பட்ட பிரேரணை, நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் விக்கும் களுஆராச்சி ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று (14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் இந்த வழக்கை விசாரிப்பதற்கு தமது கட்சிக்காரர் ஆட்சேபனை தெரிவித்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சர், சில அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்மை நியாயமற்ற முறையில் விமர்சித்ததன் காரணமாகவே இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலக தீர்மானித்ததாக தலைமை நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன தெரிவித்தார்.

இதேவேளை தனிப்பட்ட காரணங்களுக்காக நீதிபதி தம்மிக கணேபொல இந்த வழக்கில் பங்கேற்க விருப்பம் தெரிவிக்காததால், உரிய பீடத்தை நியமிப்பதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஜனாதிபதிக்கு உரிய மனுவை அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த மனு விசாரணை வேறு நீதிபதிகள் குழாமிற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.

புத்தூரில் குமரகுருபரன் விளையாட்டரங்கு திறந்துவைக்கப்பட்டது

புத்தூர் ஸ்ரீ குமரகுருபரன் சனசமூக நிலையத்தின் விளையாட்டரங்க திறப்புவிழா நேற்று புதன்கிழமை (09.08.2023) மலை குமரகுருபரன் மைதானத்தில் வெகு சிறப்புற நடைபெற்றது.

ஸ்ரீ குமரகுருபரன் சனசமூக நிலையத்தின் கனடா கிளையின் நிதிப் பங்களிப்பு முயற்சியின் வாயிலாகக் காணி கொள்வனவு செய்யப்பட்டு அக்காணியில் கந்தர் ஐயாத்துரை மற்றும் ஐயாத்துரை அன்னப்பிள்ளை ஆகியோரின் ஞாபகார்த்தமாக இவ் விளையாட்டு அரங்கு அமைக்கப்பட்டு அவை உத்தியோகபூர்வமாக சன சமூகநிலையம் மற்றும் விளையாட்டுக் கழகத்திடம் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வுகளில் விருந்தினர் வரிசையில் – பிரதம விருந்தினராக ஓய்வுநிலை வைத்திய அதிகாரி திருமதி இரவீந்திர வசந்தமாலா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியின் அதிபர் சின்னத்தம்பி திரிகரன் மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட தலைவரும்,வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ், யாழ் போதனா வைத்தியசலையின் வைத்திய கலாநிதி இராசரத்தினம் துஷிந்தன், பொது சுகாதார பரிசோதகர் அனுதர்சன் ஆகியோரும் புலம்பெயர் உறவுகளில் இருந்து புத்தூர் குமரகுருபரன் சனசமூக நிலையத்தின் கனடா கிளை சார்பாக அதன் தலைவர் செல்லப்பா சிவராஜா மற்றும் நிர்வாகக் குழுசார்பாக செல்லையா சோதிநாதன், இராதுரை சிவாசம்பு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சனசமூக நிலையத்தின் புதிய விளையாட்டரங்கில் கலை நிகழ்வுகள் மைதான விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றதுடன் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எதிராக சர்வதேச கால்பந்து தடை: 197 நாடுகள் ஆதரவு

இலங்கைக்கு எதிரான சர்வதேச கால்பந்து தடைக்கு ஆதரவாக 197 நாடுகள் வாக்களித்துள்ளன.

ருவாண்டாவின் கிகாலி நகரில் நடைபெற்ற உலக கால்பந்து சம்மேளனத்தின் பொதுச் சபையில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

208 நாடுகள் கலந்து கொண்ட இந்த பொதுச் சபையில் இலங்கைக்கு சர்வதேச கால்பந்து தடை விதிக்க 197 நாடுகள் ஆதரவாக வாக்களித்திருந்தன.

விளையாட்டு அமைச்சின் முறையற்ற செல்வாக்கு, விளையாட்டு சுதந்திரத்தை மீறுதல், தன்னிச்சையாக புதிய விதிமுறைகளை விதித்தல் போன்ற காரணங்களால் பல நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களித்துள்ளன.