கந்தளாய் சீனித் தொழிற்சாலையின் இயந்திர உபகரணங்களை பெற்றுத் தர சிபாரிசு செய்வதற்காக 10 கோடி ரூபா இலஞ்சம் கோரி அதில் முற்பணமாக 2 கோடி ரூபாவை இலஞ்சமாக பெற்ற விவகாரத்தில் குற்றவாளியாக காணப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவின் அலுவலக பிரதானியாக செயற்பட்ட ஐ.கே. மஹநாம மற்றும் மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி. திஸாநாயக்க ஆகியோரின் தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று (11) உறுதி செய்தது.
குறித்த இருவரினதும் மேன் முறையீட்டு மனுக்களை கடந்த 2021 மார்ச் 16 ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம் இன்று அது குறித்த தீர்ப்பை அறிவித்து, விஷேட நிரந்தர மேல் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது.
நீதியரசர் விஜித் மலல்கொட தலைமையிலான , எல்.ரி.பி. தெஹிதெனிய, ப்ரீத்தி பத்மன் சுரசேன, எஸ். துரைராஜா மற்றும் யசந்த கோதாகொட ஆகிய நீதியரசர்களைக் கொண்ட குழாம் இதற்கான தீர்ப்பை நேற்று அறிவித்தது.
இந்த இலஞ்ச விவகாரம் தொடர்பில் கடந்த 2018 மே 3 ஆம் திகதி மேற்படி இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு எதிரான விஷேட நிரந்தர மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ததை அடுத்து கடந்த 2019 செப்டம்பர் 5 ஆம் திகதி முதல் விசாரணைகள் இடம்பெற்றன. இருவருக்கும் எதிராக 24 குற்றச்சாட்டுக்கள் சட்ட மா அதிபரால் சுமத்தப்பட்டிருந்தன.
இதன்போது சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட அரச சட்டவாதி (தற்போதைய பிரதி சொலிசிட்டர் ஜெனரால்) ஜனக பண்டார மன்றில் ஆஜரானதுடன் முதல் பிரதிவாதியாக பெயரிடப்பட்ட ஜனாதிபதியின் முன்னாள் செயலணி பிரதானி ஐ.கே. மஹநாம சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா ஆஜராகினார். 2 ஆம் பிரதிவாதியான மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி. திஸாநாயக்க சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அரசகுலரத்ன ஆஜராகி வாதிட்டிருந்தார்.
இந்நிலையில் விசாரணைகள் நிறைவு பெற்ற நிலையில் கடந்த 2019 டிசம்பர் 19 ஆம் திகதி தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. இதன்போது சட்ட மா அதிபர் முன்வைத்த 24 குற்றச்சாட்டுக்களில், முதல் பிரதிவாதியாக பெயரிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் செயலணி பிரதானி ஐ.கே. மஹநாம 13 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்டார். அத்துடன் 2 ஆம் பிரதிவாதியான மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பி. திஸாநாயக்க 11 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்டார்.
இதனையடுத்தே தண்டனை விபரத்தை அறிவித்திருந்த, விஷேட நிரந்தர மேல் நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதியின் முன்னாள் செயலணி பிரதானி ஐ.கே. மஹநாமவிற்கு 20 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்தது. அத்துடன் 65 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்தது. அத்துடன் அவர் பெற்ற 2 கோடி ரூபா இலஞ்சத்தையும் மீள செலுத்தவும் அவருக்கு இதன்போது உத்தரவிடப்பட்டது. அத்துடன் மரக் கூட்டுத்தாபணத்தின் முன்னாள் தலைவர் பி. திஸாநாயக்கவுக்கு 12 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்த நீதிபதிகள் 55 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தனர்.
இந்த தண்டனைக்கு எதிராக உயர் நீதிமன்றில் விஷேட மேன் முறையீடு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தண்டனை விதிக்கப்பட்ட முறைமை முற்றிலும் தவறானது எனவும், அதனால் அத்தண்டனையை ரத்து செய்து தம்மை விடுவித்து விடுதலை செய்யுமாறும் மேன் முறையீட்டில் கோரப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த உயர் நீதிமன்ற ஐவர் கொண்ட நீதிபதிகள் குழாம் விஷேட மேல் நீதிமன்ற தீர்ப்பை சரியானது என ஏகமனதாக அறிவித்து மேன் முறையீட்டை நிராகரித்து தீர்ப்பளித்தது.