வெளிநாடுகளில் இருந்து அனுப்பபடும் அந்நியச் செலாவணிக்கு வரி அறவிடப்பட மாட்டாது: மத்திய வங்கி விளக்கம்

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணிக்கு வரி அறவிடப்பட மாட்டாது என்று இலங்கை மத்திய வங்கி விளக்கம் அளித்துள்ளது.

இலங்கையர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணிக்கு வரி அறவிடப்படபோவதாக, பரவி வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என மத்திய வங்கி கூறியுள்ளது.

இதேபோன்று இந்த பணத்தை பலவந்தமாக இலங்கை நாணயத்திற்கு மாற்றப்பட மாட்டாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாடுகளில் உள்ள இலங்கை ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்படும் பல்வேறு சலுகைகளை எவ்வித மாற்றமும் இன்றி அதே முறையில் தொடர்ந்து அனுபவிக்க முடியும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காணக்கூடியவர் மத்திய வங்கி ஆளுநரே – கருத்துக்கணிப்பில் மக்கள்

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காணக்கூடியவர் மத்திய வங்கி ஆளுநரே என மக்கள் கருதுவது கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையத்தின் சமூகக் குறிகாட்டி அமைப்பு நடத்திய பொருளாதார சீர்திருத்த குறியீடு ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது.

தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை அவசியமான பொருளாதார சீர்திருத்தத்தை முன்னெடுக்க கூடியவர் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவே என அதிகளவான இலங்கையர்கள் நம்புவது இந்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்களில் 56.6 வீதமானவர்கள் பொருளாதார சீர்திருத்தத்தை முன்னெடுக்க கூடியவர் மத்திய வங்கி ஆளுநரே என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை 31.4 வீதமானவர்கள் தாங்கள் அவரை நம்பவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுக்க முடியும் நாட்டின் பொருளாதார நிலையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட 45 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர். 50 வீதமானவர்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையின்மை வெளியிட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா மீது 42 வீதமானவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ள அதேவேளை சம்பிக்க ரணவக்க மீது 23 வீதமானவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

புதிய நாணய சட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தால் கோட்டா அரசாங்கத்தின் வரிச்சலுகைகளை தவிர்த்திருக்கலாம் – முன்னாள் ஆளுநர் இந்திரஜித்

2019 இல் திட்டமிடப்பட்ட புதியநாணய கொள்கையை நடைமுறைப்படுத்தியிருந்தால் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் பாரிய வரிச்சலுகைகள் மற்றும் பெருமளவு நாணயம் அச்சிடுதல் ஆகியவற்றை தடுத்திருக்கலாம் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கிக்கான சட்டமூலம் 2019லேயே தயாராகயிருந்தது எனினும் அப்போதைய அரசாங்கத்திற்கு அதனை நடைமுறைப்படுத்துவதற்கான நேரமிருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்ட பொருளாதார நிபுணர்கள் வரிகளை பெறுமளவிற்கு குறைத்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி தொடர்பான புதிய சட்டம் நடைமுறைக்கு வந்திருந்தால் திறைசேரியில் உள்ளவர்கள் வரிவிலக்கு போன்றவற்றை நடைமுறைப்படுத்தியிருப்பார்களா என நான் நினைப்பதுண்டு இதற்கு எங்களால் சரியான பதிலை தெரிவிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

IMF – இலங்கை உடன்படிக்கை : மத்திய வங்கியின் ஆளுநர் விளக்கம்

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளவுள்ள உடன்படிக்கை அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை பிற்போடப்படும் என சில தரப்பினர் முன்வைக்கும் கூற்று அடிப்படையற்றது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நீட்டிக்கப்பட்ட நிதி வசதியை பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கைக்காக சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபைக்கு உரிய முன்மொழிவை சமர்ப்பிப்பதே மத்திய வங்கியின் இலக்கு என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் அந்த இலக்கை இழந்தால், 2023 ஜனவரியில் அதை அடைய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இருதரப்பு கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

அஜித் நிவாட் கப்ராலின் பயணத் தடையை நீடிப்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபரான அஜித் நிவாட் கப்ரால் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இன்று (24)  ஆஜராகியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அஜித் நிவாட் கப்ரால் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த வழக்கை தொடர முடியாது என முதற்கட்ட ஆட்சேபனைகளை தெரிவித்தனர்.

இந்நிலையில் முதற்கட்ட ஆட்சேபனைகள் தொடர்பாக எழுத்துமூலம்   டிசம்பர் 15 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெகுனுவல மனுதாரரின் சட்டத்தரணிக்கு உத்தரவிட்டார்.

2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிய அஜித் நிவாட் கப்ரால் பொது நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தி  இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Posted in Uncategorized

மத்திய வங்கியில் ஏனையோரின் தலையீடுகளை நான் விரும்பவில்லை – மத்திய வங்கி ஆளுநர்

அரசியலமைப்பின் பிரகாரம் பொது நிதி தொடர்பான இறுதி அதிகாரம் பாராளுமன்றத்திடம் காணப்படுகின்ற போதிலும், நாட்டின் நிதிக்கொள்கை தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் மத்திய வங்கிக்கே காணப்படுகிறது.

அதன் சுயாதீன தன்மையில் எவரும் தலையிடுவதை நாம் விரும்பவில்லை என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் 22 ஆம் திகதி செவ்வாய்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வரவு செலவு திட்ட விவாதத்தின் போது மத்திய வங்கி மீது குற்றம் சுமத்தப்படுகிறது. பொருளதார நெருடிக்களுக்கு மத்திய வங்கியே காரணமென்றும் அதன் விளைவாகவே மக்கள் துன்பத்தினால் அவதிப்படுகிறார்கள் என்றும் கூறுகிறார்கள்.

நாட்டு மக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் நிவாரணங்கள் சலுகைகளை மத்திய வங்கி வழங்க வேண்டும் என்கிறார்கள்.

இன்று நிதிக்கொள்கை என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொள்கையின் பிரகாரம் வேறொருவரின் விவனாரத்தில் நான் தலையிட விரும்பவில்லை.

அதேபோன்று சுதந்திரமாகவும், சுயாதீனமாகவும் மத்திய வங்கி செயல்பட வேண்டும். அதன் நிதி தொடர்பான முடிவுகளை பிறர் எடுப்பதை நான் விரும்பவில்லை.

ஆனால் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பாராளுமன்றம் மற்றும் மத்திய வங்கி இரண்டினதும் கொள்கைகளின் ஒருங்கிணைப்பு நிச்சயம் இருக்க வேண்டும்.

வரிகளை விதிக்கவும் செலவினை கட்டுப்படுத்தவும் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. அதனால் தான் மக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்ஜெட்டை நிறைவேற்றுவதைப் பார்க்கிறீர்கள். வரவு – செலவு திட்டத்தை நிறைவேற்றுகின்றனர்.

அரசியலமைப்பிற்கமைய பொருளாதாரம் பாராளுமன்றத்திற்கு உரித்துடையது. எனினும் அனைத்து பலமும் காணப்படுவதாக பலரும் கருதுகிறார்கள். ஆனால் பாராளுமன்றத்திற்கு பொது நிதி தொடர்பில் மாத்திரமே அதிகாரம் உள்ளது. மத்திய வங்கி தொடர்பில் சிலருக்கு புரிதல் குறைவாகவே உள்ளது என்றார்.

அறிவுள்ளவர்கள் நிர்வகித்திருந்தால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது – மத்திய வங்கி ஆளுநர்

நாட்டின் பொருளாதாரத்தை அறிவுள்ளவர்கள் நிர்வகித்திருந்தால் நாடு இவ்வாறான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்காது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (19) மாத்தறை ராகுல கல்லூரியின் 100வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் கலந்து கொண்டபோதே இந்த கருத்தினை முன்வைத்திருந்தார்.

மேலும் அவர் “தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு எடுக்கப்படும் கடினமான தீர்மானங்களை மக்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் கூட, முடிவெடுப்பவர்களும், கொள்கை வகுப்பாளர்களும் சரியான திறன்களைக் கொண்ட சரியான நபர் நீண்ட காலமாக அந்த பதவிகளில் பணியாற்றியிருந்தால், நாம் இந்த நிலையை அடைந்திருக்க மாட்டோம்.

தகுதியானவர்களுக்கு சரியான இடம் கிடைத்தால்தான் வளர்ந்த நாடுகள் வளரும்.

இல்லாவிட்டால், தனக்கு உரிய இடம் கிடைக்காத திறமைசாலி, தன் திறமைக்கேற்ப போட்டி போட்டு முன்னேற முடியாத சமூகத்தில் இருந்தால் அது வெற்றியாக கருதமுடியாது.

மத்திய வங்கியின் ஆளுநர் என்ற வகையில் நான் ஒன்றைக் கூற விரும்புகின்றேன். நாங்கள் மிகவும் கடினமான காலங்களில் இருக்கிறோம். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வது எளிதல்ல. இதற்கு கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும்”என தெரிவித்திருந்தார்.

வரவு செலவுத்திட்டம் பொருளாதார மீட்சி ஸ்திரதன்மையை அடிப்படையாக கொண்டது

2023 வரவு செலவுதிட்டம் பொருளாதார மீட்சி அதனை ஸ்திரப்படுத்தியவாறு எவ்வாறு முன்னோக்கி நகர்த்துவது என்பது குறித்தே கவனம் செலுத்துகின்றது என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிகள் ஆரம்பித்ததில் இருந்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு உதவக்கூடிய நடுத்தர நீண்டகால பொறுளாதார வளர்ச்சிக்கு உதவக்கூடிய குறுகிய கால நடவடிக்கைகள் குறித்தே கவனம் செலுத்தப்பட்டுவந்ததாகஅவர்  தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பின்பற்ற சில தவறான கொள்கைகள் காரணமாக பொருளாதாரம் மேலும் மோசமாக பாதிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது என தெரிவித்துள்ள மத்திய வங்கி ஆளுநர் தாமதங்கள் மீட்பு நடவடிக்கையை பாதிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதிகரிக்கும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தவேண்டும் குறைக்கவேண்டும் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியின் ஆரம்ப நாட்களில் நீண்டவரிசைகள்  பலமணிநேர மின்வெட்டு போன்றன காணப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள மத்திய வங்கி ஆளுநர் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதை தடுப்பதற்காக சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய நிலையேற்பட்டது வேறு தெரிவுகள் இருக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாணயக்கொள்கையை இறுக்கமாக்கியிருக்காவிட்டால் வட்டி வரிகள் போன்றவற்றை அதிகரித்திருக்காவிட்டால் பணவீக்கம் 100 வீதத்திற்கும் அதிகமானதாக காணப்பட்டிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வௌிநாட்டு பணம் அனுப்பல்களுக்கு ஊக்குவிப்புத் தொகை

தனியொரு பணப்பரிமாற்றத்தில் 20,000 ரூபாய்க்கு சமமான அல்லது அதற்கு மேற்பட்ட வௌிநாட்டு நாயணங்களை அனுப்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

உரிமம் பெற்ற வங்கிகள் அல்லது வௌிநாட்டுப் பணத்தை பெற்றுக் கொள்ளும் முகவர்களிடமிருந்து குறித்த பணத்தை பெற்றுக் கொள்ள முடியும் என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

பயனாளர்களின் பரிமாற்றல் செலவு மீளளிப்பாக இந்த ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கையின் திரவ கையிருப்பு வீழ்ச்சியில் : மத்திய வங்கி அறிவிப்பு

22 செப்டெம்பர் மாத இறுதியில் இலங்கையின் திரவ கையிருப்பு தொடர்ந்து கணிசமான அளவில் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி இன்று தெரிவித்துள்ளது.

வங்கித் துறையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு மற்றும் மொத்த வெளிநாட்டு சொத்துக்கள் அடங்கிய மொத்த வெளிநாட்டு சொத்துக்கள் செப்டம்பர் 2022 இன் இறுதியில் 6.0 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தன.

2022 செப்டெம்பர் இறுதியில் இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதில் சீன மக்கள் வங்கியின் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்குச் சமமான இடமாற்று வசதியும் அடங்கும், அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நிதியளிப்பதற்காக மத்திய வங்கி அந்நிய செலாவணியை தொடர்ந்தும் வழங்கி வந்தது.

இதன் விளைவாக, திரவ இருப்பு அளவு செப்டம்பர் 2022 இறுதிக்குள் குறிப்பிடத்தக்க குறைந்த மட்டத்தில் இருந்ததாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு நவம்பர் 04 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி 44.9 வீத வீழ்ச்சியைப் பதிவு செய்திருந்தது.

இதற்கிடையில், 2022 நவம்பர் 04 வரையிலான காலப்பகுதியில் யூரோ, பவுண்ட் ஸ்டெர்லிங், ஜப்பானிய யென், அவுஸ்திரேலிய டொலர் மற்றும் இந்திய ரூபா ஆகியவற்றிற்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்திருந்தது.