இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக, இலங்கை அரசாங்கத்துக்கு ஒத்தாசை வழங்கி போர்க்குற்றத்துக்கு உடந்தையாக இருந்தமை தொடர்பில் இஸ்ரேலுக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை இஸ்ரேலின் மனித உரிமைகள் அமைப்புகளைச் சேர்ந்த யெஸ் ஜிவல் (Yesh gvul), மற்றும் டொரட் செடெக் (terat zedec), மனித உரிமைகள் சட்டத்தரணி ஈடேய் மெக் ஆகியோரே முன்வைத்துள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனமான அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் இஸ்ரேலிய ஆயுதங்களும் குறிப்பிடத்தக்க பங்கை கொண்டிருந்தன என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 14 வருடங்கள் ஆகின்ற போதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரின் போது நடந்த போர்க்குற்றங்களை ஐக்கிய நாடுகள் சபையும், மனித உரிமை அமைப்புகள் ஆவணப்படுத்தியுள்ளன.
போரின்போது, பொதுமக்களுக்கு எதிராக இழைத்த போர்க்குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச ஆதரவு நாடுகளில் இஸ்ரேலும் ஒன்றென கண்டறியப்பட்டுள்ளது.
2000 ஆம் ஆண்டுகளில், இஸ்ரேலின் இராணுவ தொழில்நுட்பத்தை கணிசமான அளவில் கொள்வனவு செய்து, ஆசியாவில் இஸ்ரேலின் மிக முக்கியமான வாடிக்கையாளர்களில் ஒருவராக இலங்கையும் மாறியது.
அத்துடன், போரில் ஈடுபட்ட இலங்கைப் படையினருக்கும் இஸ்ரேல் பயிற்சியும் அளித்துள்ளது. இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட கபிர் விமானங்கள் உள்நாட்டுப் போரில் முக்கிய பங்கு வகித்துள்ளன.
இலங்ககையின் உள்நாட்டு போரில் இஸ்ரேலிய ஆயுதங்களும் இராணுவ உபகரணங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என குறித்த ஆதாரங்கள் வெளிப்படுத்துகின்றன.
இந்தநிலையில், போர்க் குற்றங்களில் இஸ்ரேலின் தொடர்பை வெளிப்படுத்தவும், வழக்குத் தொடரவும் தாம் விரும்புவதாக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இலங்கைக்கு எதிராக போர்குற்ற விசாரணைகள் கோரப்படுகின்ற போதிலும் இஸ்ரேல் மற்றும் பிற நாடுகளில் இருந்து அவர்களுக்கு மறைமுகமாக உதவியவர்கள் மீது வழக்குத் தொடரப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
போருக்குப் பின்னர் இஸ்ரேலுக்கான தூதுவராக நியமிக்கப்பட்ட இலங்கையின் முன்னாள் தலைமை அதிகாரி டொனால்ட் பெரேராவும் போரில் இஸ்ரேல் உதவியதை உறுதிப்படுத்தியுள்ளதாக கடந்த 2010 இல் இஸ்ரேலிய ஊடகமொன்று அளித்த செவ்வியில் அவர் இதனை பதிவிட்டார் என குறித்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது