இலங்கையும் தென்னாபிரிக்காவும் சட்ட சீர்திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடல்

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர்  S.E.Schalk உடன் ஒரு சுற்று கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.

இலங்கைக்கும் தென்னாபிரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச ஆதரவைப் பெறுவது மற்றும் நாட்டின் சட்ட அமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

இலங்கையில் அடிப்படை உரிமைகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவை வலுப்படுத்துவதற்கும், சட்ட அமைப்பில் சீர்திருத்தங்களுக்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கும் தென்னாபிரிக்கா ஆதரவளிக்கும் என உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

மோதலைத் தொடர்ந்து சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்த இலங்கை மேற்கொண்ட நல்லிணக்கத் திட்டத்தைப் பாராட்டிய உயர் ஸ்தானிகர் தென்னாபிரிக்காவின் அனுபவத்தின் ஊடாக இலங்கைக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளனர், இலங்கையில் சட்ட அமைப்பை வலுப்படுத்தும்  சட்ட சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்படும் என நீதி அமைச்சர் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்தார்.

ஐந்து நாடுகளின் இராஜ தந்திரிகளுடன் பேச்சு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரித்தானிய உயர்ஸ்தானிகர், ஜப்பானிய தூதுவர், அமெரிக்க தூதுவர், இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஆகியோரை கொழும்பில் சந்தித்து இருதரப்பு அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான கருத்துக்களை பரிமாறிக்கொண்டார்.